தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,
(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர்விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)
பகுதி5.
தரகுமுதலாளிய வர்க்கத்தின் யுத்த தந்திர செயல்தந்திர ஸ்தாபனக் கோட்பாடுகளின் எதிர்ப் புரட்சித் தன்மை
உலக ஏகாதிபத்திய பொருளியல் அமைப்பை பாதுகாப்பது தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு தவிர்க்க இயலாத அவசியமாகும். இதன் பொருட்டு உலக ஏகாதிபத்தியச் சுரண்டலின் பிரதான உறுஞ்சு குழலாக இருக்கும் இலங்கையின் அரைக்காலனிய அமைப்பு முறையை பாதுகாப்பது தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் கடமையாகிறது. இது இலங்கையின் முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்திமுறையையும், அதன் மேல்கட்டுமானங்களைப் பாதுகாப்பதுமாகும். இதுவே தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் குறிக்கோள் ஆகும்.
இக்குறிக்கோளுக்கு சேவகம் செய்யும் வகையில் சமூக வளர்ச்ச்சிப் போக்கின் திருப்பங்களுக்கேற்ப தனது செயல்தந்திர வழியைத் தீர்மானித்துள்ளது. காலனியாதிக்கக் காலத்தில் ‘அதிகாரப் பங்கிற்கு’ முயன்றது. அதிகாரக்கைமாற்றத்தின் பின் தமிழ்மக்களைத் தன் சமுக அடிப்படையாக மாற்றிக்கொள்ளும் அவசியம் எழுகிறது. இதனையும் தனது குறிக்கோளுக்கு இசைவாக மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகளின்
(1) குறுமினவாதம்
(2) சமரசவாதம்,
(3) பாராளுமன்ற – சட்டவாதம்,
அடிப்படையில் சாதிக்கிறது. 70 களின் பின்னால் தேசியப் போராட்டம் முன்னுக்கு வருகிறபோது, அதனைத் திசைதிருப்ப தனிநாட்டுக்கோரிக்கையை தானே ஏற்றுக்கொள்வதாக நடிக்கிறது.1981 இல் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச்சபை இதன் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. 1983 ஜீலை இன அழித்தொழிப்பைத் தொடர்ந்து தேசியவிடுதலைப் போராட்டம் பேரெழுச்சி அடைந்ததும் இந்திய தரகுப்பெருமுதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு குழிபறித்து சமரசத்தீர்வு ஒன்றின்மூலம் தனது அதிகாரப் பங்கை அடைய முயல்கிறது. இணைப்பு ‘ C ‘; இலிருந்து, இந்திய – இலங்கை ஒப்பந்தம் 13 வது திருத்தச் சட்டம் வரை இதற்கான முயற்சிகளால் நிறைந்துள்ளன. ஒப்பந்தத்திற்குப் பின்னால் .இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை ஒடுக்கும் பாத்திரத்தை ஏற்கிறது. “சட்டவிரோத துப்பாக்கிகளிற்கு” எதிராக சட்டபூர்வ துப்பாக்கிகளை அணைத்துக் கொள்கிறது. சூழ்நிலை மாற்றங்கள் திருப்பங்களை ஒட்டி செயல்தந்திர வழிகள் மாற்றப்பட்ட போதும் அடிப்படை முழக்கம் ‘அதிகாரப்பங்காகவே’ இருந்துள்ளது. சமஸ்டிக்கோரிக்கையும், 81இல் மாவட்ட அபிவிருத்திச் சபையும், 13 வது திருத்தச்சட்டமும் இதனையே காட்டுகின்றன. இப் பொதுப்போக்கிலிருந்து விலகி நிற்பது தனி நாட்டுக் கோரிக்கை ஆகும். 77 இற்குப் பிந்திய முயற்சிகள் ‘தமிழீழம்’ அவர்களது ஏமாற்று மோசடி என்பதை நிரூபிக்கின்றன. இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தனது குறிகோளில் மிகவும் தெளிவாக இருந்துள்ளதைக் காட்டுகின்றன.
தன்முழு வரலாற்றுக் காலப்பகுதியிலும் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் நிலவுடைமை வர்க்கங்களுடன் இறுக்கமான கூட்டை வைத்திருந்துள்ளது. பொதுவாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கங்களுடன் ‘போராட்டத்துடனோடு ஐக்கியப்பட்டுக்கொண்ட போதும்’ சிங்கள வணிகத் தரகுமுதலாளிய வர்க்கத்துடனான அதன் ஐக்கியம் மிக நெருக்கமானதாகும். 70 கள் வரை இந்திய தமிழ்மாநில தரகு முதலாளிகளுடன் (பிரதானமாக திராவிட முன்னேற்றக் கழகம்) இருந்த கூட்டுக்கு மாறாக ’83 இற்குப் பின்னால் மத்தியிலுள்ள இந்திய தரகுப்பெருமுதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. சிங்கள தேசத்தின் பிற வர்க்கக் கட்சிகளுடனோ அல்லது தமிழ்த்தேசத்தின் குட்டிபூர்சுவா, தேசிய பூர்சுவா வர்க்கங்களுடனோ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் கூட்டுக்குச் சென்றதில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தனது நண்பர்களையும் எதிரிகளையும் பற்றித் தெளிவான மதிப்பீட்டையும் ஐக்கிய முன்னனிக்கொள்கையையும் வைத்திருந்தது. (போராட்டசக்திகளுக்கு இது ஒருகசப்பான உண்மையாக இருக்குமாக்கும்!)
போராட்ட வடிவங்களாக, ஆளும்வர்க்கத்தின் சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்காத, மக்களுக்குப் போர்க்குணத்தை உண்டுபண்ணாத, அரைக்காலனிய அமைப்புமுறைக்கு உட்பட்டு நிற்கிற மென்மையான வடிவங்கள் கையாளப்பட்டதை முன்னர் விரிவாகப் பார்த்தோம்.
ஸ்தாபன வடிவத்தைப் பார்போம், நிலவுடைமை வர்க்கம், சொத்துடைய வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அப்புகாத்துக்கள், உயர்சாதியினர், ஏகாதிபத்திய நவீன கல்விமுறையின் அசல்வாரிசுகளான கல்விமான்கள் இவர்களுள் இருந்துதான் கட்சியின் மூலஸ்தானத்துக்குச் செல்லும் பாக்கியம் பெற்ற நபர்கள் வருகிறார்கள். இதில் தேறாதவர்கள் ‘நந்திப்பீடத்தோடு’ நின்று கொள்ள வேண்டும். அரசியல் நெருக்கடிகள், தேர்தல் காலத்தையொட்டி ‘வசந்த மண்டபம்’ திறக்கப்படும். மாநாடுகள் கூடும். இது மூலஸ்தானத்துத் ‘தலைமைக்குழுவின்’ தீர்மானங்களுக்கு சம்பிரதாய ஒப்புதல் பெறுவதை நோக்காகக் கொண்டு கூட்டப்படும். ஆதரவாளர்கள், அனுதாபிகள், பார்வையாளர்களாக கலந்து கொள்வர். முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதுமே தலைமைக்குழுவிடமே உள்ளது. அதாவது தலைமைக்குழுவுக்குப் புறம்பாக கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்கவோ. திருத்தங்கள் விமர்சனங்கள் செய்யவோ எந்த இடைநிலை ஸ்தாபன வடிவமும் இல்லை. கட்சிக்கிளைகள் என்று சொல்லப்படுபவை ‘தேர்தல் திருவிழா’வுக்குத் திறக்கப்படுகிற கடைகள் மட்டுமே. திருவிழா முடிந்ததும் கடை மூடப்பட்டுவிடும். தமிழ் இளைஞர் பேரவை, தமிழ்மகளீர் பேரவை போன்ற விளம்பரப்பலகைகளுக்குப் பின்னால் தேர்தல் பணியாட்கள் கூடுவர். இவையும் தேர்தல் முடிவதோடு செயலிழந்து போய்விடும். கட்சிக்கென்று சொந்தமாக பிரச்சாரப் பத்திரிகை இருந்ததில்லை. (திரு. செல்வநாயகத்தின் சொந்தப்பத்திரிகையான ‘சுதந்திரன்’ கட்சிப் பத்திரிகையாக இருந்து வந்தது. பின்னர் அது மகனுக்குச் சொந்தமாகி விட கட்சி ஆரம்பித்த ‘உதய சூரியன்’ பத்திரிகை சில இதழ்களோடு நின்று போய்விட்டது.) இவை மக்களின் ”உரிமை”க்காக போராடுகிற ஒரு கட்சியின் இலட்சணங்களாக இல்லையென்பதுமட்டுமல்ல ஒரு பிழைப்புவாதக் கட்சிக்குரிய இலட்சணங்களாகவும் கூட இல்லை. மேலும் அடிப்படையில் இது ஜனநாயக விரோத எதேச்சாதிகார தலைமை முறையுமாகும்.
புரட்சியின் விஞ்ஞானம் பற்றிய பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து விளக்கினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யுத்ததந்திரம், செயல்தந்திரம், அடிப்படை முழக்கம், போராட்டவடிவங்கள், ஸ்தாபனவடிவங்கள், ஊழியர் ‘கொள்கை’ என்பன இவ்வாறுதான் இருந்து வந்துள்ளன. இவற்றின் சாரமாக இருப்பதும், தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்துள்ள நோய்களாக இருப்பதும் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகள் ஆகும். இவை தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனையில் இன்றளவிலும் கூட மிக ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ்ச்சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற வர்க்கங்கள் கூட இச்சிந்தனைப் போக்கில் இருந்து தம்மை கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்திடமிருந்து தமிழ்த்தேசிய இனம் மரபுரிமையாகப் பெற்றுக்கொண்டிருக்கும் இம்மூன்று கோட்பாடுகளுக்கு அவற்றின் எதிர்ப்புரட்சித் தன்மை காரணமாக புதைகுழி தோண்டும் காலம் வந்துவிட்டது. இல்லையென்றால் இவை விடுதலைக்கு புதைகுழி தோண்டிக் கொண்டே இருக்கும். எனவே இவற்றைத் தெளிவாக ஆராய்வோம்.
1) குறுமினவாதம்
தேசியம் என்றால் என்ன? தேசிய இனப்பிரச்சனை ஏன் தோன்றுகிறது? என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் குறுமின வாதத்தின் வேரையும், அதன் தீங்கையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும். தேசங்கள் (NATIONS) மனித குலத்தின் வரலாறு முழுமையிலும் இருந்துவந்தவையல்ல. அதுபோல் என்றென்றைக்குமாக நிலைத்து இருக்கப் போறவையும் அல்ல. வரலாற்று வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தான் தேசங்கள் தோன்றின. உலக சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தேசங்களின் தோற்றமும் முந்தி அல்லது பிந்தி நடந்துள்ளன. ஸ்ராலின் ”தேசம் என்பது முதலாளித்துவ உதயகாலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ரீதியான வகையினம்” என்பார். (அழுத்தம் நமது). இங்கே தேசம் என்பது முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியோடு இணைத்துக் காணப்படுகிறது.
மனிதர்களை ஒரு சமுதாயமாக இணைப்பது உற்பத்தி முறையாகும். எனவே வரலாற்று வளர்ச்சியில் நிலவிவந்த வெவ்வேறு வகையான உற்பத்தி முறைகளுக்கேற்ப மனிதர்கள் சமுதாயமயமாகும் பாங்கும், அச்சமுதாயத்தின் வரம்பும், பண்புகளும் தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளன.
நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ‘கிராம சமுதாயங்களாக’ மக்களை ஒன்று திரட்டியது. இது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் தன்னிறைவுப் பொருளாதாரத்தில் இருந்து (பற்றாக் குறையில் தன்னிறைவு) தோன்றிய சமுதாய அலகாகும். சுய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிலேயே – அல்லது அதற்கு குறைவாகவே – உற்பத்தி இருக்கிற போது சமுதாயத்தின் பரப்பளவும் குறுகியதாகவே இருக்கிறது. உற்பத்தியின் பின்தங்கிய தன்மைக் கொப்ப அந்த சமுதாயத்தின் சிந்தனையும் குறுகியதாக இருக்கும். ’இராமன் ஆண்டால் என்ன? இராவணான் ஆண்டால் என்ன?’ என்பது இக்கிராம சமுதாய உணர்வின் வெளிப்பாடாகும். இந்நிலவுடமைக்காலத்தைய சுயதேவை உற்பத்தி முறைக்கான வேலைப்பிரிவினை வடிவமாகவே ‘சாதி’ தோன்றியது. பின்னர் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப்பிரிவுகளும் தோன்றின. இந்தளவிலான அல்லது இதிலும் வளர்ந்ததான ‘மக்கட் சமுதாயப் பிரிவுகள்’ எல்லாம் அடிப்படையில் முதலாளித்து வத்துக்கு முந்திய உற்பத்திமுறையைச் சார்ந்த வகையினங்கள் ஆகும். இவையல்ல தேசங்கள். ஸ்ராலின் ’தேசம் என்பது இன அடிப்படையிலோ அல்லது குல அடிப்படையிலோ அமைந்ததல்ல” என்கிறார். இவ்வாறு தன் சமுதாயப்பரப்பை விரிவாக்கி மென்மேலும் ஒன்று திரளும் போக்கு அதிகரிப்பது ஏனெனில் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையினுள்ளேயே – மனித அறிவு, தொழில்நுட்பம், உற்பத்திக் கருவிகள் போன்ற – உற்பத்திச் சக்திகள் இடையறாது வளர்ந்து வருவதனாலாகும்.
ஒவ்வொரு பழைய சமுதாயமும் புதிய சமுதாயத்தைத் தன்னுள்ளேயே கருத்தரித்துக் கொள்கிறது. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே பூர்சுவா உற்பத்திச் சக்திகளை உருவாக்கிக் கொள்கிறது. “ஒரு புதிய சமுதாயத்தைக் கருத்தரித்துள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் வன்முறையே மருத்துவச்சி. இதுவே ஒரு பொருளாதாரச் சக்தியுமாகும்.” (மார்க்ஸ்). பூர்சுவா ஜனநாயக (வன்முறைப்) புரட்சிகள் நடந்தேறுகின்றன. (நவீன வரலாற்றின் இப்புதிய கதாநாயகர்கள் வேறு யாருமல்ல. இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கு வன்முறையின் தீங்கைப் பற்றி போதனை செய்யும் ஏகாதிபத்திய முதலாளிய வர்க்கங்களின் மூதாதையர்களே!) நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் சிதைவில் ‘கிராம சமுதாயம்’ சிதைக்கின்றது. தற்போது ஆளும் வர்க்கமாய் உயர்ந்துவிட்ட பூர்சுவா வர்க்கம் சமுதாயத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியான அரசின் அதிகாரத்தை” பயன்படுத்தி முதலாளித்துவப் பொருளுற்பத்தி வளர்ச்சிக்கு வழிதிறந்து விடுகின்றது.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையானது தனது வளர்ச்சிக்கும் வீச்சுக்கும் ஏற்ப மக்களை மென்மேலும் சமுதாய மயப்படுத்துவதில் தனது பாத்திரத்தை ஆற்றுகிறது. பழைய உற்பத்தி முறையின் குறுகிய சமுதாயவட்டம் தகர்க்கப்பட்டு பொதுமொழி, பண்பாடு, பிரதேசம், உணர்வு என்பவற்றால் ஒன்றிணைகின்ற தேசிய சமூகங்களை – தேசங்களை – தோற்று விக்கிறது. இவ்வாறு “முதலாளித்துவ உதயகாலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்று வகையினமாக” (ஐரோப்பிய) தேசங்கள் உருவாகின.
நமது நிலைமை வேறு, நமது நாட்டில் முதலாளித்துவம் உதயமாகவில்லை.ஏகாதிபத்தியம் அதனை அஸ்தமிக்கச் செய்து விட்டது. நிலப்பிரபுத்துவத்தில் சிதைவு நடந்துள்ளது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படவில்லை. (ஜனநாயகப் புரட்சி நடந்தேறவில்லை) ஏகாதிபத்திய சுரண்டல் காரணமாக இவ்விடை நிலையில் சிற்றுடைமைப் பொருளாதாரமே தக்கவைக்கப் படுகிறது. இவ்வாறு இலங்கையில் சமூகப் பொருளாதார அமைப்பு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவமாக இருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய உற்பத்திப் பொருட்களினதும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்துடன் கூட்டுச்சேர்ந்துள்ள தரகுமுதலாளிய உற்பத்திகளினதும் பண்ட வாணிகம் வளர்ந்துள்ளது. ஏகாதிபத்திய சுரண்டல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ரெயில்வே பாதைகள், பிற போக்குவரத்து வசதிகள் உள்ளன. தொலைத்தொடர்பு சாதனங்கள் வளர்ந்துள்ளன. துறைமுகங்களை அண்டிய வணிக நகரங்கள் தோன்றியுள்ளன. இவையெல்லாமும் சேர்ந்து பழைய சமூக கட்டுக்கோப்புக்களை தகர்த்துள்ளன. இந்தளவில் அரைக் காலனிய அரைநிலபிரபுத்துவ அமைப்புக்குள்ளேயே தேசிய உருவாக்கம் நடந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிப்போக்கு பூர்த்தியாகவில்லை. இந்த அமைப்பு முறைக்குள் பூர்தியாகவும் முடியாது. மேற்கண்ட அதனது வளர்ச்சிக்கு தேசிய அரசு – அரசியல் அதிகாரம் – முன்நிபந்தனையாக உள்ளது. இவ்வரசதிகாரத்தைக் கொண்டு சுதந்திர முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சிக்கு வழியமைப்பதன் மூலமே சுதந்திரமானதும் பூரணமானதுமான தேசங்கள் தோன்ற முடியும். இதனால் ஏகாதிபத்தியத்தின் காவல்நாயான இலங்கையின் அரைக்காலனிய அரசும், தமிழர்தேசமும் ஒன்றுக்கொன்று பகைமையான முரண்பாடு கொண்டவையாகும். இனிமேல் ஒரு சுதந்திர தேசத்தைப் பிரசவிக்க வன்முறையே மருத்துவச்சி.
இலங்கையின் தரகுமுதலாளிய ஆளும் கும்பல்களாலும், அவர்களின் சகபாடியான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தாலும் இதனைத் தாமதப்படுத்தத்தான் முடிந்தது. தடுத்துவிட முடியவில்லை..’70 களின் பின்னால் இது தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாக வெடிக்கிறது. ஏகாதிபத்தியமும் அதன் தரகு முதலாளிய வர்க்க அரைக்காலனிய அரசும் நிலவுடமை வர்க்கங்களுடன் கூட்டணி சேர்ந்து இவ்வளர்ச்சிப்போக்கை தடுத்து நிறுத்தி அரைக்காலனிய அமைப்பு முறையை கட்டிக்காக்க விடாப்பிடியாக முயல்கின்றனர். இவர்கள் சமுதாய வளர்ச்சியை தடுத்து நிறுத்த முயல்கிற பிற்போக்கு வர்க்கங்கள் ஆவர்.
முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியையும், சுதந்திர தேசங்களையும் வேண்டிநிற்கின்ற தேசிய முதலாளியவர்க்கம் (இடது பிரிவு), குட்டிபூர்சுவா வர்க்கம் (இடது பிரிவு), தொழிலாள வர்க்கம், விவசாயிகள் மேற்கண்ட பிற்போக்கு வர்க்கங்களை எதிர்த்துப் போரிடுகின்றனர்.இவ் வர்க்கங்களுக்கிடையான போராட்டமாக நமது நாட்டின் ‘தேசியப் போராட்டம்’ நடக்கிறது.
இந்த திருப்புமுனையில் நிற்கிற ஒரு சமுதாயத்தில் (”தமிழினத்தில்”) “பற்று” கொண்டுள்ள ஒருவர் உண்மையில் செய்ய வேண்டியது முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சிக்குத் தடையாக உள்ள ஏகாதிபத்திய சுரண்டலையும், முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையையும் ஒழிப்பதற்காக போராடுவதுதான். அதுதான் தமிழ்மக்களின் பிரதேசத்தை பொருளாதார ரீதியில் ஒன்றிணைக்கவும், அப்பிரதேசத்தின் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்கவும், அதன் மூலம் சமுதாயத்தை முன்னேற்றவும் வரலாற்று வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்குள் உந்தித்தள்ளவும் அவசியமானதாகும்.
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் புதைகுழியைத் தோண்டி பழைய ‘இனசமுகத்தின்’ ஊனத்தை எடுத்து தமிழ்மக்களின் கண்களை மறைத்து விட்டது. ‘தமிழனைத் தலைநிமிர்ந்து நிற்கச் சொல்லுகிற போதும்’ – ஏகாதிபத்தியங்களுக்கு கூழைக்கும்பிடு போடுகிற இந்தத் தரகு முதலாளியத் தமிழர்கள்! – ‘ஆண்டபரம்பரைக்கதை’ பேசுகிறபோதும் ‘தமிழனுக்கு ஒரு நாடு’ என்கிற போதும் நிலவுடமைச் சிந்தனையின் முடைநாற்றத்தைத்தான் காண்கிறோம். ஆனால் இது வரலாற்றுச் சக்கரத்தை பின்நோக்கி இழுக்கிற தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் எதிப்புரட்சி இயல்பில் இருந்து வருவதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
இந்த குறுமினவாதக் கோட்பாடு தமிழ்த்தேசிய (இன) பிரச்சனையின் புரட்சிகர உள்ளடக்கத்தை காணவிடாததன் மூலம், போராட்டப் பாதையில் முன்னேற முடியாமல் இழுத்துப் பிடிக்கிறது. மக்களுக்கு ஊட்டப்பட்ட இப்போலி இனப்பெருமையில் தமிழ்த்தரகுமுதலாளியத்துக்கு (அரைக்காலனிய அரசுக்கு) கிடைத்த அடுத்த வெற்றி சிங்களப் பெருந்தேசிய இனத்தோடும், இன, மத சிறுபான்மையினரோடும் ஐக்கியப்படுவதற்கு விரோத மான மனஉணர்வை தமிழ்மக்களிடையே உருவாக்கியதாகும்.
‘மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்த சிங்களவன்’ ‘தொப்பி பிரட்டிச் சோனகன்’, ’வயிற்றுக்குத்தை நம்பினாலும் நம்ப முடியாத வடக்கத்தேயன்’. . . இந்த வாய்மொழிக் கூற்றுக்கள் தமிழ்த்தரகுமுதலாளிய குறுமினவாதத்தின் சாதனை ஆகும். இதனால் தமிழ்த்தேசிய (இன) த்துக்கு கிடைத்ததெல்லாம் தனது போராட்ட அணியைத் தானே பலவீனப்படுத்தி பொது எதிரிக்கு முன்னால் பலமிழந்து நின்றதுதான். தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் இதற்கான கைக்கூலியைப் பாராளுமன்றத்தில் நாகரீக மாகப் பெற்றுக்கொண்டது. இதற்கு மேல் தமிழ் மக்களிடத்தில் வலியுறுத்தப்பட்ட “இனப்பற்றை” “மொழிப்பற்றை” தமிழ்க் கலாச் சாரத்தை” இவர்களிடத்தில் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் காண முடியாது. அனைத்திலும் ஐரோப்பிய நெடி.
மக்கள் தமது வாழ்நிலையின் தேவையாக தேசியம் இருப்பதை உணர்ந்து கொள்ள முன்பே, பழைய உறவுகளின் பின்தங்கிய, தன்னியல்பான உணர்வுகட்கு கொள்கை வடிவம் கொடுத்ததன் மூலம் அவர்களது வாழ்நிலையின் கடமைகளை புரிந்து கொள்ளவிடாது தடுத்துவிட்டதே இவர்களது சாதனையாகும். ஆனால் தேசியம் சமுதாயத் தேவையாகி விட்ட நிலையில் அதன் உயிர் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடங்கியிருப்பதை உணர்த்தவும், இலங்கையின் ஆளும் கும்பல்களால் ஒடுக்கப்படும் பிற மக்கள் பிரிவினருடன் ஐக்கியப்படவும் குறுமின வாத சிந்தனைப்போக்கை துடைத்தொழிப்பது இன்றியமையாததாகும். இதற்கு, தேசியத்துக்கும் குறுமினவாதத்துக்குமிடையில் தெளிவான எல்லைக்கோட்டை வரைந்து கொள்வது அவசியம். அப்போதுதான் தேசியத்தை வளர்த்தெடுக்கவும், தேசியத்துள் ஒழிந்து நிற்கும் குறுமினவாதத்தை ஒழித்துக் கட்டவும் நம்மால் முடியும். மாறாக தேசியப்போராட்டத்தில் ஒதுங்கி நின்று “சோசலிஸம்” பேசுவதோ, குறுமினவாதத்தின் பக்கம் சாய்ந்து சமரசம் செய்து கொள்வதோ புரட்சிப்பாதையில் இருந்து தடம் புரள்வதே ஆகும்.
2) சமரசவாதம்
இது ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு இவ் அரைக்காலனிய அமைப்பு முறைக்குள் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. பொருளாதாரத் துறையில் ‘முதலாளியத்துக்கு முந்திய உற்பத்திமுறையையும், அரசியலில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கான அரசியல் கொள்கைகளும் சட்டங்களும், அரச முறையில் பாராளுமன்ற திரைக்குப் பின்னால் நிலவும் பாசிஸமும். சமுகப் பண்பாட்டுத்துறையில் ஏகாதிபத்திய அடிவருடிச் சிந்தனையும், நிலவுடமையின் எச்சசொச்சங்களும் ஒன்றுதிரண்ட இவ் அரைக்காலனிய அமைப்புமுறை ஏகாதிபத்திய தரகுமுதலாளிய, நிலவுடமை வர்க்கங்களின் நலன்களைக் காப்பதற்கானதாகும். அடிப்படையில் இது தேசியத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானதாகும்.
மக்களிடம் இருந்து இவ் அமைப்புமுறையைப் பாதுகாப்ப தற்காக ஆளும் கும்பல்கள் படை, நீதிமன்றம், சிறைச்சாலை போன்றவற்றைக் கொண்டுள்ளன. மக்கள் தமது அடிமை நிலைமையையும், ஜனநாயகம் மறுக்கப்பட்ட வாழ்வையும் உணர்ந்து கொள்ளாதவாறு தடுப்பதற்காக பாராளுமன்றம் உள்ளது. இந்நிலையில் இப்பாராளுமன்ற ஏமாற்றை அம்பலப்படுத்தி, இது பாசிஸத்துக்கு மூடுதிரையாக இருப்பதை மக்களுக்குப் புரியவைத்து, இவ் அமைப்பைப் பாதுகாக்கும் சட்டபூர்வ வன்முறை ஏற்பாடுகளை, மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டத்தால் முறியடிப்பதன் மூலமே மக்கள் தமது விடுதலையை அடையத் தக்க அமைப்பை உருவாக்கலாம். இதனால் ஆயுதப் போராட்டம் இன்றியமையாத் தேவையாகிறது.
தேசியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இவ் அரைக்காலனிய அமைப்பு முறையைத் தூக்கியெறியும் தேசிய விடுதலைப் புரட்சியே நமது நாட்டின் இன்றைய உடனடித் தேவையாகும். இவ்வரைக்காலனிய அமைப்பு முறையால் ஒடுக்கப்படும் அனைத்து மக்கட் பிரிவுகளையும் தேசிய விடுதலைப் புரட்சியில் ஐக்கியப்படுவதற்கு, ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்துக்கு பாட்டாளிவர்க்கம் முன்வைக்கும் திட்டமே சுயநிர்ணய உரிமையாகும்.
நமது நாட்டில் ஏகாதிபத்திய, தரகுமுதலாளிய சுரண்டலை மூடிமறைக்கும் திரையாக ‘சிங்கள பேரினவாதமும் பெளத்த மதவாதமும்’ பயன்பட்டு வந்தது. அதற்குச் சிங்களப் பெருந்தேசிய இனம் பலியாகிப் போனதுமான நிலைமை இரு தேசிய இனங்களதும் ஐக்கியப்பட்ட புரட்சியைச் சாத்தியமற்றதாக்கியுள்ளது. இந்நிலைமை ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை சிங்கள பெரும்தேசிய இனம் – அதன் புரட்சிகர வர்க்கங்கள் – அங்கீகரிப்பதைப் பொறுத்தே மாற்றியமைக்க முடியும். (இதற்காக சிங்கள பெருந்தேசிய இனத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கான பிரச்சாரத்தைக் கொண்டு செல்வது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் புரட்சியாளர்களின் கடமையாகும்) அந்நிலைமை ஏற்படுகிற வரை ‘தமிழ்த்தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசமைத்தல்’ என்பது மார்க்சிய – லெனினிய வழியில் முழு நியாயமுடையதாகும்.
இவற்றில் எந்த வழியில் தேசிய விடுதலைப் புரட்சி சாத்தியமாகும் என்பது வருங்காலத்துக்குரிய விடயமாகும். ஆனால் தேசிய விடுதலைப் புரட்சிதான் நமது நாடு இன்று எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது வரலாற்றில் முடிவு செய்யப்பட்டுள்ள விடயமாகும். இப்புரட்சியானது அரைக் காலனிய அமைப்பு முறைக்கு உட்பட்டதாக அன்றி அதனைத் தூக்கியெறிகிற வரலாற்றுக் கடமையைச் சாதிக்கும்.
புறவய யதார்த்த நிலைமைகளின்படி இதுவே தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையாக உள்ள போது இந்த அரைக்காலனிய அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகண்டு விடலாம் எனக்கூறுவது இரண்டு நோக்கங்களில் இருந்து மட்டுமே வரமுடியும். ஒன்று, தமிழ்ச்சமுகத்தை அதன் விடுதலைப் பாதையில் இருந்து திசைதிருப்பி தம் சொந்த வர்க்க நலனை அடைவது. இரண்டு; அரைக்காலனிய அமைப்பு முறை யைப் பாதுகாப்பது தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் சமரசவாதக் கோரிக்கைகளின் நோக்கம் இவை இரண்டுமே ஆகும். இது தமிழ்மக்களின் நலனுக்கு விரோதமானது. தமிழ் மக்களின் முழக்கம் ‘சுயநிர்ணய உரிமை வழங்கு இல்லையேல் பிரிந்து சென்று தனிநாடமைக்கப் போராடுவோம்” என்பதாகும்.
3) பாராளுமன்ற – சட்டவாதம்
இது பிரச்சனைக்குத் தீர்வுகாணும் இடமாக பாராளுமன்ற த்தைக் காட்டுகிறது. தேர்தல் பாதையை முன்மொழிகிறது. மக்களின் போராட்டங்களை சட்டவாத வரம்புகளுக்குள் கட்டிப் போடுகிறது. உண்மை இதுவா?
இந்தப் பாராளுமன்றம் பத்துலட்சம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்தது. தனிச்சிங்களச்சட்டம் அரசநிர்வாகத் துறையில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடித்தது. தரப்படுத்தல் சட்டம் தமிழ்மாணவர்களின் கல்வி வாய்ப்புக்குக் குழிபறித்தது. சிங்களக் குடியேற்றச் சட்டம் பிரதேசத்தைப் பறித்தது. அரசியல் அமைப்புச்சட்டங்களும் திருத்தங்களும் அவசரகாலச் சட்டம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாதச்சட்டம் போன்ற பிணந்தின்னிச் சட்டங்கள் போராடும் மக்களைக் கொன்று பழிதீர்த்தன. பொருளாதாரச் சட்டங்கள் நாட்டை ஏகாதிபத்தியங்கள் சூறையாட அனுமதித்தன. இந்திய – இலங்கை ஒப்பந்தம் நாட்டை இந்தியாவுக்கு அடகு வைத்தது.. . . இத்தியாதி.... . . இத்தியாதி. . . .
இந்தப் பாராளுமன்றம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் இடமா? அல்லது இந்தப் பாராளுமன்றமே தீர்வுகாணப்பட வேண்டிய பிரச்சனையா? உண்மையில் இது இரண்டாகவும் இருக்கிறது. ஏகாதிபத்தியத்துக்கும் தரகுமுதலாளிய வர்க்கத்துக்குமிடையே, சிங்களத் தர்குமுதலாளிய வர்க்கத்துக்கும் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்துக்குமிடையே சுருங்கச் சொன்னால் ஆளும் கும்பல்களிடையே எழும் பிரச்சனைகளுக்கு இது தீர்வுகாணும் இடமாகவுள்ளது. ”பரஸ்பரம் மனம் விட்டுப் பேசவும்” ”கலந்துரையாடவும்” இது அவர்களுக்கு வழிசெய்து கொடுக்கிறது. ஆனால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு இதுவே பிரச்சனையாக இருக்கிறது. உண்மையில் எது தீர்வு எனச் சொல்லப்படுகிறதோ அதுதான் பிரச்சனையாக இருக்கிறது.
இந்தப் பாராளுமன்றம் அரைக்காலனிய அமைப்புமுறையின் காவல்நாயாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கான கருவியாக இருப்பதும், கட்டாய இணைப்பின் மூலம் தமிழ்த்தேசத்தின் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தமுனைவதும் இப்பிரச்சனைகளுக்கான அடிப்படையாகும்.
இந்த நிலைமைகளின் அடிப்படையில் தான் பாராளுமன்ற த்தின் பெரும்பான்மையும் சிறுபான்மையும் உருவாகிறது. இந்த நிலைமைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானவை. இதன் அடிப்படையில் அமைகிற பெரும்பான்மை – சிறுபான்மை ஜனநாயகத்தோடு சம்பந்தமில்லாதவை. ஜனநாயகம் என்பது மக்களின் ஜீவாதார நலன்களைக் காத்து நிற்கிற அரசுமுறை பற்றியதாகும். எந்த நிலைமைகளின் கீழும் திரட்டப்பட்டு விடுகிற பெரும்பான்மையினதும் சிறுபான்மையினதும் தலைகளை எண்ணுவதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. அதை நமது நாட்டு தரகுமுதலாளிய வர்க்கங்கள் எண்கணிதம் படிப்பதற்கு விட்டு விடுவோம். ‘அவர்கள் தங்களுடைய வழியில் போராடுகிறார்கள். நாங்கள் எங்களுடைய வழியில் போராடுவோம்.’
இந்தப்பாராளுமன்றம் தனது ஜனநாயக யோக்கியதையை நிரூபிக்க வேண்டுமென்றால் கட்டாய இணைப்பைக் கைவிட்டு தமிழ் மக்களின் சுயவிருப்பத்தின் பேரில் சுயநிர்ணய உரிமையை வழங்குவதன் மூலம் ஐக்கியப்படுத்தட்டும். தமிழ்மக்களை ஒரு தனியான தேசிய (இன)மாக அங்கீகரித்து சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இரு தேசங்களையும் ஒரு கூட்டாட்சி அமைத்து ஜனநாயக பூர்வமாக ஐக்கியப்படுத்தட்டும். இவர்கள் இதற்குத் தயாராக இல்லாதது மட்டுமல்ல, கட்டாய இணைப்பைக் கொண்டு பலவந்தமாக தமிழ்மக்களை ஒடுக்கியும் வருகிறார்கள்.
சனத்தொகை அடிப்படையில் 74% மாக இருக்கும் சிங்கள தேசத்தையும் 13% மாக இருக்கும் தமிழ்த்தேசத்தையும் பலவந்தமாக கட்டிவைத்து ‘ஜனநாயகம்’ பற்றிப் பேசுவது, தமிழ்மக்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆதரவாயிருப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த அயோக்கியத்தனமுமாகும்.
ஏகாதிபத்தியத்தின் சட்டபூர்வ தரகனாகவும், தரகு முதலா ளியவர்க்கங்களின் சட்டபூர்வ ஒடுக்குமுறையாளனாகவும், சட்டபூர்வ கொலைகாரனாகவும், சட்டபூர்வ சுரண்டலாளனாகவும் இருக்கும் இந்தப் பாராளுமன்றத்தை, ஒடுக்கப்படும் மக்களின் – சுதந்திரம் காக்கப்படுகிற – சட்டவிரோத வழிகளில் மட்டுமே தூக்கியெறியமுடியும்.
இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலை, பாராளுமன்ற சட்டவாத வரம்புகளைத்தாண்டி, அரைக்காலனிய அமைப்பு முறையைத் தூக்கிவீசி, தேசிய புரட்சிகர வர்க்கங்கள் தனது கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுத்துக்கொள்ள நீடித்த மக்கள் யுத்தப்பாதையில் நடத்தும் தேசிய விடுதலைப் புரட்சியின் மூலமே அடையப்படமுடியும்.