போலிச் சுதந்திரம் பொசுங்கியே தீரும்! ஈழப்புரட்சி வெடித்தே தீரும்!
(பாகம் 1)
அமெரிக்க இந்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில் - மைத்திரி பாசிசம் 68வது சுதந்திர விழாவை காலி முகத்திடலில் இன்று கொண்டாடி வருகின்றது.
காலனியாதிக்க அரசியல் அதிகாரக் கைமாற்றத்தை `சுதந்திர தினமாக` விளக்கி விழா எடுப்பது இலங்கையில் மட்டுமல்ல, இலங்கை போன்ற அனைத்து அரைக்காலனிய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்கள் நடத்தும் பொதுத் திருவிழாவாகும். இதன் இலங்கை வெளியீடே பெப்ரவரி 4 ஆகும்.
மேலும் இது முதல் உலகப் போரையும் ரசிய சோசலிசப் புரட்சியையும், இரண்டாம் உலகபோரையும் மக்கள் சீனப் புரட்சியையும், சார்ந்து காலனி நாடுகளில் நேரடிக் காலனியாதிக்கம் நீங்கி அரைக்காலனியாதிக்கம் நிறுவப்பட்டதை, காலனியநீக்கம் என விளக்கிய திருத்தல்வாதத்தின் தொடர்ச்சியுமாகும்.
இது குறித்து ருசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் விவாதத்தில் காலனிய நீக்கம் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது விமர்சனம் புதிய காலனியாதிக்கத்தின் தாசர்கள் என்று தலைப்பிட்டு ஐப்பசி 22 1963 வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;
``இரண்டாம் உலக போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள் காலனியாதிக்கத்தை கைவிடவில்லை. புதிய காலனியம் என்கின்ற வடிவத்தை மட்டுமே புதிதாக மேற் கொண்டிருக்கின்றார்கள். ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில் தங்களது பழைய முறையான நேரடி காலனியாட்சி வடிவத்தை கைவிடுமாறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் ஒரு புதிய வகை காலனியாட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது புதிய காலனியாதிக்கத்தின் முக்கிய குணாம்சமாகும்``.(மாபெரும் விவாதம் கேடயம் வெளீயீடு முதற்பதிப்பு 1988 பக்கம் 390)
இந்த முக்கிய குணாம்சத்தின் அடிப்படையில் அமைந்தது தான் அரைக்காலனிய இலங்கை.
இரட்டைத் துருவ உலக ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் அணிசேரா நாடுகள் என தம்மை அழைத்துக் கொண்ட நாடுகளும் அவற்றின் அடிமைத் தரகு ஆளும் வர்க்கங்களும் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களில் ஏதோ ஒரு முகாமை சார்ந்து இயங்கியவர்களேயாவர்.
எழுபதுகள் வரை உள்ளுர் சிறு தொழிற் துறையை ஊக்குவித்தும் பெருவீத தொழிற் துறையை ஏகாதிபத்தியவாதிகளிடம் விட்டு வைத்து விடுவதுமான பொருளாதாரக் கொள்கையை SLFP கடைப்பிடித்தது.
இந்த அளவிற்குத் தான் அதனுடைய தேசிய தொழிற்துறை பாசம் இருந்தது.
இந்த மாய மானைக் கண்டு மயங்கித்தான் நமது சீன வீரர்கள் இக் கட்சியை தேசிய முதலாளித்துவக் கட்சி என வரையறை செய்து ஈழப் பிரிவினையை எதிர்த்து எதிரிகளுடன் ஐக்கியப்பட்டனர்.
அதேவேளை ஐதேக UNP- முற்றிலுமாக நாட்டை ஏகாபத்தியத்திடம் அடகு வைக்கும் கொள்கையை கொண்டிருந்தது.
ஆனால் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை ஐதேக ஆட்சியில் ஜேஆர் தலைமையில் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு கட்சிகளுமே ஒரே பாதையில் தான் பயணித்து வருகின்றன.
எந்தளவிற்கு எந்தளவு இந்த அரைக்காலனிய அரசியல் அடிமைத்தனத்திற்கும், உலகமய பொருளாதார அடிமைத்தனத்திற்கும் சிங்களம் உள்ளாக்கப்பட்டு வந்ததோ. அந்தளவிற்கு அந்தளவு உள்நாட்டு அடக்குமுறையும், தேசிய இன ஒடுக்குமுறையும் அரசு பாசிசமயப்படுவதும் வளர்ந்து வந்துள்ளன.
இதனால் இலங்கையின் உள்முரண்பாடுகள் அந்நாடு கடைப்பிடிக்கும் அந்நிய சார்பு அரசியல்- பொருளாதார-வெளிவிவகாரக் கொள்கைகளின் நேரடி விளைவாகும்.
இதனை மூடி மறைப்பதற்கான ஒரு கருத்தியல் ஆயுதமாகத்தான் பௌத்த சிங்கள பேரினவாதம் கையாளப்பட்டு வருகின்றது.
ஈழத்தமிழின முதலாளித்துவ தேசிய இன வாதிகள் தமது வர்க்க இயல்பும்,ஏகாதிபத்திய தாச வசதியும் கருதி இரண்டாம் அம்சத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர்.
முதல் அம்சத்தை மூடி மறைக்கின்றனர்.
ஆனால் முதல் அம்சமே முக்கியமானது ஆகும்.
சிக்களத்தின் இந்த போக்கு, அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கின்றது என்பதால் தீர்மானிக்கப்படுகின்றது..
இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்கள தரகு முதலாளிய அரைநிலவுடமை வர்க்கங்களின் கையில் இருக்கின்றது.இந்த வர்க்க சக்திகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவு தான்
இக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணமாகும்.
இதனால் ஈழ தேசிய இனப்பிரச்சனையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன;
1) ஒன்று ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கின்ற விடுதலைப் பிரச்சனை;
2) ஒடுக்கும் சிங்கள தேசத்திடம் இருந்து ஈழ தேசம் விடுதலை பெறும் தேசியப் பிரச்சனை;
3) அ) பிரிவினை அல்லாத வழியில் இப்பிரச்சனை தீக்கப்படக்கூடிய வாய்ப்பு எழுமானால் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்த புரட்சிகர வர்க்கங்களின் இலங்கை மக்கள் ஜனநாயகக் குடியரசை புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அமைத்தல்,அத்தகைய வாய்ப்பு அற்றுப்போன இன்றைய சூழ்நிலையில் ஈழம் பிரிந்து சென்று ஈழமக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்துக் கொள்ளும் புரட்சிகரப் போராட்டம், பொது வாக்கெடுப்பு தழுவிய ஜனநாயகப் பிரச்சனை.
ஆ) மேற்குறித்த இரு நிலைமைகளிலும் மலையகத் தமிழர்களின் மாநில சுயாட்சி, இஸ்லாமியத் தமிழர்களின் பிரதேச சுயாட்சி, ஜனநாயக வழியில் உத்தரவாதம் செய்வதற்கான போராட்டத்தை தொடரும் இன மத சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைப் பிரச்சனை.
சிங்களத் தரகு வர்க்கங்களும் பொருளாதார உலக மயமும்.
போலி அதிகாரக் கைமாற்றம் நடந்து முடிந்த கையோடேயே இலங்கைப் பொருளாதாரத்தை வழிகாட்டியும் நெறிப்படுத்தியும் வந்தது உலக வங்கி ஆகும்.ஆக தேசத் தந்தை டி.எஸ்.சேனநாயக்கா முதல் ரணில் மைத்திரி பாசிசம் வரை இலங்கையின் ஆட்சி உலக வங்கியின் ஆட்சிதான்.
உலக வங்கியின் வரலாறு:
1916 ஆம் ஆண்டில் லெனின் எழுதி 1917 இல் வெளியிட்ட ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்கிற நூலில் ஏகாதிபத்தியத்தின் தனி விசேசமான இயல்புகளை பின் வரும் 5 அம்சங்களில் வரையறை செய்தார் . அந்த வரையறை வருமாறு:
1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின் ,மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்துவிடுதல்;
2) வங்கி மூலதனம் தொழிற்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ``நிதி மூலதனத்தின் `` அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாகுதலும்;
3) பண்ட ஏற்றுமதியில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியம் பெறுதல்
4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி , உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்;
5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவுறுகிறது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக்கட்டத்தில் ஏகபோகங்கள்,நிதி மூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகின்றதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச ரஸ்டுகளுக்கிடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.
(லெனின் நூல்திரட்டு 2(4) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் முன்னேற்றப் பதிப்பகம்- 1977 பக்கம் 142)
இவ்வியல்பு காரணமாக ஏகாதிபத்திய முரண்பாடானது,நிதி மூலதன ஏற்றுமதிக்கும்,மூல வளத்திருட்டுக்கும்,சந்தைக் கைப்பற்றலுக்குமான கொள்ளைக்கார நாடு பிடிக்கும் போர்களுக்கும்,இறுதியில் உலக மறுபங்கீட்டு உலகப் போருக்கும் இட்டுச் செல்லும் என எச்சரித்தார்.
உலகப் பெருமந்தம் காரணமாக உலக மறுபங்கீட்டிற்காக மூண்ட முதல் உலகப் போரின் அநுபவங்கள் லெனின் ஆய்வால் அரசியல் விஞ்ஞானமாகின.
28 ஜூலை 1914 இல் ஆரம்பித்து, 70 இலட்சம் பொது மக்களின் உயி குடித்து 11 நவம்பர் 1918 இல் முடிவுக்கு வந்தது இக்கொடிய கொள்ளைக்காரப் போர். .
இந்த யுத்தத்தில் போர் புரிந்த நாடுகளின் கம்ஜூனிஸ்ட் கட்சிகளில் தாய் நாட்டைக்காப்போம் என்று முழங்கி ஏகாதிபத்திய யுத்தத்தில் பங்கேற்கும் திருத்தல் வாதப்போக்கு உருவாகியது.லெனினியமோ உலகப்போரை உள் நாட்டு யுத்தமாக மாற்றவேண்டுமென முழங்கியது. இச்சரியான யுத்த தந்திரத்தின் விளைவாக 1917 இல் ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி வாகை சூடியது.
இனிமேல் யுத்தம் வராது என மக்களுக்கு சத்தியம் செய்து எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளையும் மீறி ஜேர்மனியின் கிட்லரின் நாசிச பாசிச ஐரோபிய விரிவாதிக்க தேசிய வெறியை எதிர்த்த இரண்டாம் உலப்போர் 1939 இல் ஆரம்பித்து 1945 இல் முடிவுக்கு வந்தது.இந்தப் போரில் தோழர் மா ஓ சே துங் கடைப்பிடித்த சரியான யுத்த தந்திரம் காரணமாக ஒக்ரோபர்1, 1949 இல் மக்கள் ஜனநாயக சீனக்குடியரசு உதித்தது.
ஹிட்லரின் பாசிசம் சோவியத் செஞ்சேனையின் மாபெரும் தியாகத்தாலும், தோழர் ஸ்ராலினின் தலைமத்துவத்தாலும் தோற்கடிக்கப்பட்டது. உலகம், ஏகாதிபத்திய முகாம் சோசலிச முகாம் என இரு இயல்பான பகைமை முகாம்களாக இறுதியில் பிரிந்தது.
முதல் உலகப் போரில் தாமதமாக பங்கெடுத்துக் கொண்ட அமெரிக்கா யுத்தத்தால் நொடிந்து போன நாடுகளின் நிலைமையைப் பயன்படுத்தி,ரசிய சோசலிசப் புரட்சிக்கு அஞ்சி, உலகை தனது மேலாண்மையின் கீழ் கொண்டு வர முயன்றது.
இந்த புறவயச் சூழலில் தான் முதலாளித்துவத்தின் அந்திமக்காலத்தை நீடிப்பதற்காக `அறிவார்ந்த முயற்சிகள்` அவசியப்பட்டன. இதன் விளை பொருள்தான் கெயின்ஸ் [John Maynard Keynes (1883 - 1946)]
என்கிற ஆங்கிலேய முதலாளித்துவ பொருளாதார கல்விமான்.
இவர் முதலாளித்துவ நெருக்கடிகள் சந்தை நிலைமகளால் தாமாகவே சரி செய்யப்படும் என்கிற `மூலச்சிறப்பு மிக்க ` முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டோடு உடன்பாடு காணவில்லை.``அதற்கிடையில்- அதுவரை காத்திருந்தால்- நாம் இறந்து போவோம்`` என எள்ளி நகையாடி பிரகடனம் செய்தார். இதற்கு இடை நடுவில் முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பாதுகாக்க சமரச சன் மார்க்கம் ஒன்றை கண்டறிந்தார்.
இந்த குறளி வித்தைக்காரனின் அந்த மந்திரக்கோல் என்னவெனில் `சந்தைப் பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் அரச தலையீடு`.
இரு உலக யுத்தங்களையும் அதன் பொருளாதாரக் காரணிகளையும் அதற்கு காரணமான முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடுகளையும் இயல்பாகவே இவர் நிராகரித்தார், அல்லது மூடி
மறைத்தார்.
உள் நாட்டில் அரச தலையீட்டுப் பொருளாதாரம், சமூக நல அரசு, எஞ்சிய உலகின் மீது அந்நிய நிதி மூலதன ஆட்சிக்கு பரிந்துரை செய்தார்.
இவர் தான் உலக வங்கியின் தந்தை.
இந்த `உலக வங்கி` (WORLD BANK) , அமெரிக்க பிரித்தானிய அந்நிய நிதி மூலதன வங்கியே! இதன் உலக வர்த்தக வங்கியே International Monitery Fund (IMF) ஆகும்.
ஏகாதிபத்தியத்தை யுத்த வீழ்ச்சியில் இருந்து மீட்க கை கொடுத்த தெய்வம் கெயின்ஸ்,
தெய்வம் நின்று கொல்லுமாம்: கெயின்ஸ் 1977 இல் கொல்லப்பட்டார்! இவரது குறளிவித்தைகள் அனைத்தும் மீண்டெழுந்த 1977 உலகப் பொருளாதார நெருக்கடியில் எரிந்து சாம்பராகின.
இவரின் சவக்குழுயில் பிறந்ததுதான் நவ தாராளவாதப் பொருளாதார கோட்பாடு. இக் கோட்பாடு அந்நிய நிதிமூலதனத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கும் அனைத்து தேசியச் சுவர்களையும் தகர்த்தெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.இதனை அமூலாக்க ஏகாதிபத்திய நிதி மூலதன இரட்டை வேட்டை நாய்களான, உலக வங்கியும், ஐ.எம்.எஃப் உம், சுதந்திர தேசங்களை,அரைக்காலனிய நாடுகளை மென்மேலும் குதறி குருதி குடித்து `நிதி மூலதன காட்டு மிராண்டிக் காலனியாதிக்கத்துக்கு` அடிமைப்படுத்த ஏவப்பட்டன.
அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், பிரித்தானியாவில் மார்க்கிரட் தச்சரும் இதை உலகப் பரப்பின் மீது நிலை நிறுத்தினர்.
உலகமயம் என்றால் என்ன?
1) உலகமய பொருளுற்பத்தி முறையானது அடம் ஸ்மித்தின் ஒரு தொழிற்சாலைக்குள் அடங்கிய வேலைப்பிரிவினையை சர்வதேச வேலைப்பிரிவினையாக மாற்றியுள்ளது. ஓரு பண்டம் முடிவுப் பண்டம் ஆகும் தருணத்துக்கு முன்னால் அதன் பாகங்கள், பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வேறொரு நாட்டில் ஒருங்கு சேர்க்கப்படுகின்றன.
ஒரு நூறு உலக ஏக போக நிறுவனங்களின் காலனித் தொழிற்சாலைகளாக முழு உலக நாடுகளும் மாறிவிட்டன.
2) இந்தத் தொழிற்சாலை அந்தஸ்த்துக்காக அரைக்காலனி, மற்றும் சார்பு நாடுகளின் ஆளும் கும்பல்கள் போட்டியிடுகின்றன.தம் நாடுகளை ஏலம் போட்டு விற்கின்றனர். Make in India, Make In Sri Lanka என வாங்குவோர் விதித்த விலைக்கு விலை பேசாமலே விற்கின்றனர்.
3) இந்த உற்பத்திமுறையின் விளைவான பண்டங்களை பரிமாற்றவும், விநியோகிக்கவுமான பொறிமுறைகள்,மற்றும் சர்வதேச நிதிக் கொடுக்கல் வாங்கல் பொறிமுறைகள், பங்குச் சந்தை, Hedges Funds என்பவை
சேவைத்துறைகள் என அழைக்கப்படுகின்றன.
4) முகியமாக இந்த பொறிமுறை அனைத்தும் அந்நிய நிதி மூலத்தின் அசுரப் பற்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றன.
5) ஒரு ஏக போக நாடோ, ஒரு ஏக போக நிறுவனமோ, ஒரு ஏகபோக வங்கியோ இச்சூதாட்டப் பொறிமுறையில் சரிந்து விழுந்தால் முழு உலகமும் அதற்கு விலை கொடுக்கின்றது.
6) உலக மயத்தின் ஆதரவாளர்கள் இதில் வெற்றி அடைவோர் தோல்வி பெறுவோர் (Winners and Loosers) என இதன் விளைவுகளைப் பாகுபடுத்துகின்றனர்.
கேள்வியெல்லாம் ஒரு நூறு ஏக போக நிறுவனங்களின் நலனுக்காகாக, கோடான கோடி மக்கள், நாம் வாழும் ஒரே பூமிக் கிரகம், நாசமடைந்து தோல்வியடைந்து நிர்மூலமாக வேண்டுமா? இதைத்தடுக்க எழாமல் சோர்ந்திருப்போமா?
==============================================================
செழுமை 08 02 2016
பாகம் (2)
இலங்கையில் உலகமயம் (தொடரும்)