ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டின்
2017 மே1-மே 18 நாள் சூளுரை
2017 மே1-மே 18 நாள் சூளுரை
அன்பார்ந்த தமிழீழ மக்களே, மாணவர்களே,இளைஞர்களே,உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்பட்ட தேசங்களே;
இவ்வாண்டு மே நாளும், எட்டாவது ஈழ முள்ளிவாய்க்கால் நினைவு தினமும் பின்வரும் பிரத்தியேகமான சர்வதேசிய,பிராந்திய,உள் நாட்டு, புலம் பெயர் சூழலில் முகை அவிழ்க்கின்றது.
அவையாவன;
அ) சர்வதேசியச் சூழ்நிலை:
1) உலக ஏகபோக முதலாளித்துவத்தின்-ஏகாதிபத்தியத்தின் அபரிமித உற்பத்தி நெருக்கடி பொருளாதார நிதித் துறைகளில் ஆரம்பித்து, அரசியல் பிராந்திய யுத்தங்களாக வளர்ந்து, இன்று மூன்றாம் உலகப் போராக வெடிக்கும் தருணத்தை எட்டியுள்ளது.
2) இதன் விளைவாக விரல் விட்டு எண்ணத்தக்க உலகை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்துவிட்ட, நாடு கடந்த `நிதியாதிக்கக் கும்பல்களும், அவர்கள் நலன் பேணும் தேச பக்த (!) ஆளும் கும்பல்களும்` அடங்கிய எதிரி முகாமுக்கும், உலகின் கோடான கோடி பரந்துபட்ட `உழைக்கும் வெகுஜன, ஒடுக்கப்படும் தேச` மக்கள் முகாமுக்கும், இடையேயான முரண்பாடு என்றுமில்லாத அளவுக்கு கூர்மையடைந்துள்ளது.
3)இப் பரந்துபட்ட `உழைக்கும் வெகுஜன, ஒடுக்கப்படும் தேச` மக்கள் முகாமிடமிருந்து,`நிதியாதிக்கக் கும்பல்களின், நலன் பேணும் ஆளும் கும்பல்களும்,வர்க்கங்களும்,அவர்களது கட்சிகளும், அரசாங்கங்களும், ஆட்சியும், அரசும் என்றுமில்லாத அளவுக்குத் தனிமைப்பட்டுவிட்டன.
4)இவ்வாறு தனிமைப்பட்டு தகர்ந்து பொறிந்து விழும் நிலையில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே, தம்மை வெகுஜனங்களின் நண்பர்களாகக் காட்டிக் கொண்டு, அதேவளையில் உழைக்கும் மக்களை பிளவு படுத்தி மோதவிடும் பச்சைப் பாசிச முழக்களின் பின் மக்களைத் திரட்டுவது,அத்திலாந்திக் சமுத்திரத்தின் இரு புறமும் இன்று ஒரு பொதுப் போக்காகிவிட்டது.
5) உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளால் ஒட்டச் சுரண்டப்பட்டுவிட்ட உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்படும் தேசங்களையும் திசை திருப்ப, திடீரென `தாய் நாட்டைக் காக்க`. திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, மூடிய பொருளாதார கொள்கைகளுக்கு முன்னுரிமை என்கிற போர்வாளை ஏந்துகின்றனர்.உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வாழ்வளிக்கப் போவதாக வாக்களிக்கின்றனர்!
6) இந்தத் தாய் நாட்டைக் காக்கும் முழக்கம் மூன்றாம் உலகப்போருக்கு, மக்கள் ஆதரவைத் திரட்டுவது தவிர வேறெதுவுமில்லை.
7) ஆட்சிக் கவிழ்ப்புகளும் அதற்காகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், இந்தப் போருக்கான தயாரிப்புகளே!
8) ``ஏகாதிபத்திய நெருக்கடிக்கு உலகை மறுபங்கீடு செய்யும், உலகப் போர் மூலம் அன்றி வேறெந்த வழியிலும், மூலதனத்தின் ஆதரவாளர்களால் தீர்வுகாண முடியாது`` என்கிற மாமேதை லெனினின் வரையறை மீண்டும் ஒரு முறை நிதர்சனமாகி, இந்த ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டில் லெனினியம் வெற்றி வாகை சூடி நிற்கின்றது.
ஆ) பிராந்தியச் சூழ்நிலை:
1) இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இப் போர்க்களத்தின் துணைக் களங்களாக்கப்பட்டுவிட்டன. முள்ளிவாய்க்காலே இதற்கு உட்பட்ட பலிக்களம் தான்!
2) இந்திய விரிவாதிக்க ஆளும் கும்பலும்- தரகு முதலாளிய பெரு நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும், இன்றைய மோடி அரசும், இப்போர் அணி சேர்க்கையில் அமெரிக்க முகாமின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்டது. அமெரிக்க நலன் காக்கும் ஏவல் நாயாக இருந்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. மே மாதம் இலங்கை வந்த மோடி, `இலங்கையின் நிலப்பரப்போ, கடற் பரப்போ இந்தியாவின் பாதுகாப்பில் இருந்து இணைபிரிக்க முடியாதவை` என எச்சரித்துச் சென்றுள்ளான்.
3)இந்திய விரிவாதிக்க அரசு காஸ்மீர் தேசம் மீது ஒரு கொடிய உள் நாட்டு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
4) எஜமான நாடுகள் `தாய் நாடு முதல்` என திசை திரும்புவதால், இந்தியாவை பேய் நாடாக்க முயன்ற மோடியின் Make In India திட்டம் தவிடு பொடியாகிவிட்டது. இந்தச் சீத்துவத்தில் இந்தியாவின் வளர்ச்சியால் இலங்கை வாழும் என்று வாக்குறுதி அளிக்கின்றான் உலுத்தன் மோடி! பல்லிளித்து கை கூப்புகிறது `நல்லாட்சி`!
5) இவ்வாறு தனிமைப்பட்டுப் போய்விட்ட மோடி ஆட்சியினதும், அதன் கொள்கைகளுக்கு துணை நின்று வரும் மாநில ஆட்சிகளுக்கும் எதிராக இந்தியாவில் மாபெரும் விவசாய,தேசிய,ஜனநாயக இயக்கம் எழுந்து வருகின்றது.
6) இதை மத்திய மாநில அரசுகள் பாசிசக் கரம் கொண்டு நசுக்கி வருகின்றன.
7)இத்தகைய புறச்சூழலில் தான் திருத்தல்வாதிகளையும்,சமரசவாதிகளையும், ஏகாதிபத்திய NGO ஊடுருவலாளர்களையும், புறந்தள்ளி மக்கள் தேசிய புரட்சிகர இயக்கங்களின் பின்னால்,தமிழகத்தில்- மக்கள் ஜனநாயக இயக்கம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.
8)இப்புரட்சிகர வெகுஜன இயக்கத்துக்கு மார்க்சிய தத்துவ வெளிச்சம் ஊட்ட புதுமைப் பதிப்பகம் தமிழகத்தில் உருவாகிவிட்டது!
இ) உள்நாட்டுச் சூழ்நிலை:
1) மூன்றாம் உலகப்போர் மறுபங்கீட்டுச் சூழலில், பக்ச பாசிஸ்டுக்களுக்கு சீனாவுடன் அணிசேரும் ``சுதந்திரம்`` அனுமதிக்கப்படாததின் விளைவாக, அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் மைத்திரி-ரணில்-சந்திரிக்கா-பொன்சேகா போர்க்குற்றக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமது ஆட்சியை நல்லாட்சி எனப் பிரகடனம் செய்தது.ஆனால் இந்த நல்லாட்சி நாடகம் வெகுஜன உணர்வில் நாடு தழுவி இன்று அம்பலமாகிவிட்டது.
2) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் முழு மூச்சுடன் நாசகார -Regaining Sri Lanka- நவீன காலனிய திட்டத்தை அமூலாக்கிய சிங்களம் மற்றும் `நல்லாட்சி` , ஒட்டு மொத்த நாட்டையும் மீள இயலாத கடன் பொறிக்குள் வீழ்த்திவிட்டு விட்டது. அதாவது அந்நிய மூலதனத்துக்கு நாடு விலை போய்விட்டது.
3) இதனால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க, கடந்த 65ஆண்டுகளாக சிங்களம் கடைப்பிடித்து வந்த அதே தந்திரத்தைத்தான் இந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நல்லாட்சியும் கடைப்பிடித்து வருகின்றது.ஒரு புறம் இராணுவ சர்வாதிகார பாசிசத்தைக் கட்டவிழ்ப்பது, மறுபுறம் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபடாது தடுக்க, ஈழ தேசத்தை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்து இனப்பகைமையை தக்கவைப்பது.நடைமுறையில் இக்கொள்கையை அமூலாக்கிய வண்ணமே சிங்களம் நல்லிணக்க நாடகமாடுகின்றது.
4) ஏகாதிபத்தியவாதிகள் இந்த நல்லிணக்கத்தின் முன்னேற்றத்துக்கு, `மாணாக்கன் இலங்கைக்கு` மாதா மாதம் மார்க்குகள் வழங்கி, தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கி- அந்நிய நிதி மூலதன முதலீடு செய்து வருகின்றனர்.
5) ஏகாதிபத்திய அடிவருடிகளின் `போர்க்குற்ற நீதிமன்றம்` ஐ.நா.சபை, வெசாக் கொண்டாடுகின்றது!
6) ஏகாதிபத்திய தாச சமரசவாத சத்திராதிகளின் ஐ.நா.மோசடிப் பாதை அம்பலமாகி முழு நிர்வாணமாகிவிட்டது.
7) அந்நிய தேசத்துரோக ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஈழமக்களை தேர்தல் பலிக்கடாக்கள் ஆக்கி, நல்லாட்சியுடன் அரச சுகத்தை பகிர்ந்து தின்ற வண்ணம், அதிகாரப் பகிர்வு-சமஸ்டி நாடகம் ஆடும் கூட்டமைப்புக் கும்பலை ஈழ மக்கள் இனம் கண்டு தீ மூட்டி எரித்து விட்டனர்.
8) அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மறுபங்கீட்டு மேலாதிக்கத்தை நிலை நிறுத்த, `ஜனநாயக ரீதியில்` தெரிவு செய்யப்பட்ட ஆட்சிகளை தன் நலனுக்கேற்ப கவிழ்த்து கலைத்து வருகின்றது.இதற்கு அதன் கூலிப் போர்ப்படையான NGO க்களை ஏவி வர்ணப் புரட்சிகள் நடத்தி வருகின்றது. போலந்திலிருந்து வெனிசுவேலா வரை இது தொடரும் கதையாகும்.
9) மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன், காமுகச் சாமியார் பிரேமானந்த பக்தன் விக்னேஸ்வரன், பொன்னனின் இரு தேசப் புத்திரன் கஜேந்திரன் அடங்கிய தமிழ்நெற், மற்றும் கத்தோலிக்க பாதிரிகளின் பின் புலத்தில் இயங்கும், `எழுக தமிழ்` முழக்கம் மேற்கண்ட NGO க்களின் வகைப்பட்ட ஒன்று தான்.இதன் கோரிக்கை சம்பந்தன் சுமந்திரனின் அதிகாரப் பகிர்வு தான்! இந்தத் தேசத்துரோகக் கும்பலோடு இந்து சமுத்திர பிராந்திய இந்தியக் காவலர்களான இடது சாரி சமுத்திரர்களும் இணைந்து விட்டார்கள்.
10) இதன் காரணத்தால் தான் இக் கும்பல், போர் மீண்ட மக்களின் போராட்டங்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.!
11) போர் மீண்ட மக்களின்-வாழ்வாதார போராட்டக் கோரிக்கைகளில் எவையும் கூட எட்டு ஆண்டுகளாக தீர்த்து வைக்கப்படவில்லை.
12) நம்பிக்கை நட்சத்திரமாக நல்லாட்சி அமைந்து, அருமை ஐயா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்னரும் எதுவும் மாறவில்லை!
13) மாறாக அரசியல் அமைப்புத் திருத்தம், முழு நாடு தழுவிய வாக்கெடுப்பு என, ஈழதேசம் மீது ஒரு அடிமைத் தீர்வை திணிக்க சிங்களம் தினவெடுத்து நிற்கின்றது.
ஈ) புலம் பெயர் நாட்டுச் சூழல்
1) நாட்டுக்கு நாடு அமைந்திருந்த புலம் பெயர் பேரவைகள், நாடுகடந்த அரசாங்கம், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெறக் காட்டிய ஐ.நா பாதை அம்பலமாகிவிட்டது.
2) புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின புலி வாரிசுகள் வெறும் சொத்துச் சேர்க்கும் பணந்தின்னிகளாக ஆகி விட்டனர். `புலிச் சொத்து பணக்காரர்` என்கிற ஒரு புல்லுரிவிக் கும்பல் உருவாகிவிட்டது.
3)இவர்களின் பின் புலத்தில் , சிறு மதி கொண்ட ஒரு சிறு கும்பல் சிங்களத்தோடு சமரசம் செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றது.
4) தொகுப்பில் இது புலம் பெயர் ஈழ விரோத,தெசத்துரோக ஏகாதிபத்திய தாச கும்பல் ஆகும்.
5) இதன் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
இத்தகைய ஒரு புறச்சூழலில் தான் எட்டுத்திக்கும் முரசு கொட்டும் உழைக்கும் மக்கள் மேதினமும், எட்டாவாது ஈழதேசிய முள்ளிவாய்க்கால் நினைவு தினமும், ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டில் புதிய முகை அவிழ்த்து நிற்கின்றன!
மேற்கண்ட புறச்சூழல் பற்றிய ஆய்விலிருந்து ஈழ விடுதலைக்கு, புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்ப பின்வரும் முழக்கங்களின் பின்னால் அணி திரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்!
* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் நாடு கடந்த நிதியாதிக்க புல்லுருவிக் கும்பல்கள், ஏகாதிபத்திய உச்ச இலாப,சமூகவிரோத,அபரிமித அராஜக உற்பத்தி முறையின் நெருக்கடிக்கு தீர்வாக, உலகை மறு பங்கீடு செய்யும் நோக்கில் திட்டமிடும் மூன்றாம் உலகப் போரை தடுக்க குரல் எழுப்புவோம்!
* அமெரிக்க,பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் வடகொரியா மீதும்,சிரியா மீதும் ஏவும் உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு அநீதி யுத்தங்களை எதிர்ப்போம்!
* அகண்ட ஐரோப்பியக் கனவின் நிமித்தம் கிரேக்கம் உள்ளிட்ட சிறிய ஐரோப்பிய ஜூனியன் நாடுகளை,ஜேர்மானிய ஆளும் கும்பல் ஒட்டச் சுரண்டி சுடுகாடாக மாற்றுவதை எதிர்ப்போம்!
*ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியாவில் இருந்து அனைத்து அந்நியத் துருப்புகளையும் வெளியேறக் கோருவோம்! விரட்டியடிக்கும் நீதியான போராட்டங்களை ஆதரிப்போம்!
* மூன்றாம் உலகப் போரில் அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியான இந்திய விரிவாதிக்க அரசு, சிறீலங்காவினதும்,தமிழீழத்தினதும்,உள்விவகாரங்களில் தொடர்ந்து அத்துமீறி தலையிடுவதை நிறுத்த 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்!
* ஈழத்தில் இந்தியா இழைத்த போர்க்குற்றங்களுக்கு தண்டனை அளிப்போம்! மோடி வருகையை எதிர்ப்போம்!
* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போர்க்குற்ற, ரணில் மைத்திரி,பொன்சேகா கும்பலுக்கு தண்டனை வழங்க ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு
கோருவோம்!
* அரசியல் அமைப்புத் திருத்தம் என்கிற போர்வையில்,நாடு தழுவிய வாக்கெடுப்பு மூலம்,சிங்கள ஆதிக்கத்தை ஈழம் மீது திணிக்கும் சதியை முறியடிப்போம்!
* இச்சதிக்கு துணை நிற்கும் கூட்டமைப்பு (TNA) துரோகிகளுக்கு தேர்தலைப் புறக்கணித்து பாடம் புகட்டுவோம்!
* `அகிம்சை,சமஸ்டி,அதிகாரப்பகிர்வு` பேசும் சமரசவாத ஏகாதிபத்திய `வர்ணப் புரட்சி`
NGO க்களைத் தனிமைப்படுத்துவோம்!
* முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் நிராயுதபாணியாக்கப்பட்ட ஈழ தேசம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் தேசிய அபகரிப்பை,ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழர்ந்தெழுந்து தன்னியல்பாகப் போராடும், ஈழமக்களுக்கு, _ பிரிவினைப் பொது வாக்கெடுப்பை உயர்த்திப் பிடித்து _ புரட்சிகர தலைமை அளிப்போம்!
* ஈழப்பிரிவினை அரசியல் பிரச்சாரத்தை சட்டவிரோதமாக்கியுள்ள சிறிலங்கா அரசியல் யாப்ப்பின் ஆறாவது திருத்தத்தை நீக்கப் போராடுவோம்!
*ஈழப் புரட்சியின் ஆதார அடித்தளமான,மலையக,இஸ்லாமிய,வட கிழக்கு தமிழர் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அயராது பாடுபடுவோம்!
*சிங்களம், சிங்கள மாணவர்கள், உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் பாசிச உலக மய நல அடக்குமுறைகளை முன்னின்று கண்டிப்போம்!
* புலம்பெயர் ஏகாதிபத்திய தாச சமரசவாதிகளைத் தனிமைப்படுத்துவோம்!
*அரசியல் கைதிகள்- யுத்தக்கைதிகள் விடுதலை, களவாடி காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நிலமீட்பு விவசாயப் பிரச்சனை, உள்ளிட்ட போர் மீண்ட தேசத்தின் மறுவாழ்வு உரிமைக்குப் போராடுவோம்!
*நாசகார,அராஜக, ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் காவலர்கள், கோடான கோடி ஆண்டுகளாக மானுடம் வாழப் பண்படுத்திய பூமிக் கிரகத்தின் இருப்பை நூறே ஆண்டுகள் என்றாக்கி விட்டார்கள், சந்திரன் கிரகத்தில் தங்கம் தேடுகிறார்கள், பூமிக் கிரகம் காப்போம்!
* அணு ஆயுத உரிமையை அனைவருக்கும் இல்லாதாக்குவோம்!
* தற்கால கருத்துச் சுதந்திரம், தகவல் சுதந்திரம்,பிரச்சார சுதந்திரம் காப்போம்!* ஜூலியன் அசான், டேவிட் சுனோடன் சுதந்திரத்துக்குப் போராடுவோம்!
ரசிய ஒக்ரோபர் புரட்சி நூற்றாண்டு மே நாள் வாழ்க!
மே 18 ஈழ நாள் வாழ்க!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்