Monday, 31 March 2014

அந்நிய மேலாதிக்கத்துக்கான அரசியல் ஆயுதமே மனித உரிமை.

புதிய பாதை! புதிய ஈழம்! 

நவீன காலனிய, உலக மறு பங்கீட்டு, அந்நிய மேலாதிக்கத்துக்கான அரசியல் ஆயுதமே `மனித உரிமை`.

ஐக்கிய நாடுகள் சபை தனது பணிகளை விரிவாக்க பல்வேறு கிளை அமைப்புக்களைக் கொண்டுள்ளது.இவற்றில் ஒன்று தான் மனித உரிமைக்
கவுன்சில்.இது வருடா வருடம் கூடி உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன, என்பதை ஆராய்ந்து, தனது
மனித உரிமைப் பிரகடனத்தின் அளவு கோலில்  மதிப்பீடு செய்து அந்நாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டு ஒரு
சடங்கு போல் செய்து வருகின்றது.இந்த மனித உரிமை முழக்கத்தை ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியும்
வருகின்றது.இதனால் ``மனித உரிமை`` என்கிற கருத்தாக்கம் இன்று ஒரு கவர்ச்சிச் சொல் ஆகிவிட்டது.இந்த கவர்ச்சி நடனம் பல்கிப் பெருகிய
அளவுக்கு  `மனித உரிமையைப்` பேணுவதில் உண்மையான  முன்னேற்றம் ஒரு துளியும் அடையப்படவில்லை.மாறாக மேலும் மேலும் மோசமடைந்தே
வருகின்றது.இந்த ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தை  மிக மோசமாக அசட்டை செய்யும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா ஆகும்.

இதற்குக் காரணம் அமெரிக்கா ஏதோ மனித உரிமையையை பேண விரும்பாத நாடு என்பதல்ல.அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடாக இருப்பதனால்,
அதன் உள்நாட்டு சமூக முரண்பாடுகள், அது சர்வதேச அளவில் கொண்டிருக்கும் முரண்பாடுகள்  மனித உரிமையை பேண இயலாததாய் ஆக்குகின்றன என்பதே உண்மையாகும்.

பொதுவாக மனித உரிமை என்று, சூக்குமமான மொழியில் அழைக்கப்படுவதை ஆழ்ந்து நோக்கினால் இது இரு அடிப்படைகளைக் கொண்டதாக அமையும்.

ஒன்று மனிதனை ஒரு -இனிமேலும் பிரிக்கமுடியாத- தனி அலகாக எடுத்து, அவன் ஒரு மனிதப் பிறவி என்ற வகையில் அவனுக்குள்ள அடிப்படையான
உரிமைகள் எனக் கொள்ளமுடியும்.மற்றையது, அவனை ஒரு சமூகப் பிராணியாகக் கொள்ளும் போது அவனுக்குள்ள சமூக ரீதியான உரிமைகள் ஆகும்.

இவை பிரதானமாக தேசிய, ஜனநாயக, அரசியல் உரிமைகளாகும்.

தனிமனித உரிமை உத்தரவாதப் படுத்தப்படுகின்ற அளவுக்கு சமூகம், ஜனநாயகப்படுத்தப்படுகின்றது.சமூகம் ஜனநாயகப்படுத்தப்படுகின்ற அளவுக்கு தனிமனித உரிமை உத்தரவாதப் படுத்தப்படுகின்றது.இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை.ஆனால் எவ்வாறு சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டாக வேண்டுமோ,அவ்வாறே தனிமனிதனும் சமுதாயத்துக்கு கட்டுப்பட்டவன், கீழ்ப்பட்டவன்.தனிமனித நலனும் சமுதாய நலனுக்கு கீழ்ப்பட்டது.

தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த வர்க்க சமுதாயத்திலும், அரைக்காலனிய அடிமைத்தனத்தை எதிர்த்த புதிய ஜனநாயக சமுதாயத்திலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழுள்ள சோசலிச சமுதாயத்திலும், வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயத்திலும், மனித உரிமை என்பது ஒரே மாதிரியாக இருக்க இயலாது. இருக்க முடியாது, இருக்காது.

வர்க்கப்பகமையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயங்கள் தவிர்க்க இயலாதவாறு தமது அங்கமாகக் கொண்டுள்ள சொத்து,கணம்,
குலம்,பால்,சாதி,சமயம்,இனம்,வயது,நிறம்,தேசம்,நாடு,கண்டம் எனப் பிளவுண்டு ஒடுக்குவோராகவும், ஒடுக்கப்படுவோராகவும்,
அடக்குவோராகவும்,அடக்கப்படுவோராகவும் அணிதிரண்டு மோதிக்கொண்டிருக்கும் சூழலில் இருதரப்புக்கும் பொதுவான மனித உரிமை
என்று ஒன்று இருக்க முடியாது.

இதனால்தான் மேற்குலகமும், ஐ.நா.சபையும்,இவர்களுக்கு தொண்டூழியம் புரியும் மனித உரிமை நிறுவனங்களும், NGO க்களும், சிவில்சொசைட்டிகளும், எவ்வளவு தான் வாய் கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அது சாத்தியமற்றதாக இருக்கின்றது. இந்த சர்வதேச  மனித உரிமைப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட நாடுகள்,அவை கையொப்பமிட்ட இதர `பிரகடனங்களை எப்படிக் கிடப்பில் போட்டார்களோ, அவ்வாறே இந்த மனித உரிமையையும் கிடப்பில்போட்டுவிட்டார்கள்.இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளின் பட்டியலைப் பார்த்தாலே போதும் மனித உரிமைக்கு என்ன மரியாதை இருக்கின்றது என்று!  சிறீலங்காவும் இதில் ஒரு நாடு!

ஒரு வேளை ஒரு வாதத்துக்காக அனைத்து மனித குலத்துக்கும் பொதுவான நலன்களின் அடிப்படையில் `பொதுவான மனித உரிமை` பற்றிப்
பேசுவதாக இருந்தால், பூமிப்பந்தைப் பராமரிப்பது அனைத்து மனிதர்களதும் உரிமையாகும்.உணவு, உடை,உறையுள்,கல்வி,சுகாதாரம் பெற்று வாழ்வது
அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமையாகும்.குழந்தைகள் தமதுகுழந்தைப் பருவத்தில் குழந்தைகளாக வாழ்வது,வளர்வது, அடிப்படை
உரிமையாகும்.ஆனால் இவற்றை இன்றைய சமுதாய முறைமையில் அடைய முடியுமா?

ஏகாதிபத்திய அபரிமித அராஜக உலகமயமாக்கல் உற்பத்தியின் கீழ் பூமி வெப்பமாவதைத் தவிர்க்க முடியுமா? அரைக்காலனிய அடிமைத்தனத்தின்
கீழ், `உணவு, உடை, உறையுள்` பெற முடியுமா? உழுபவனுக்கு நிலம் இல்லாமல் கோடான கோடி உழைக்கும் விவசாய வெகுஜனங்களை பசியிலும் பஞ்சத்திலும், பட்டினிச்சாவிலுமிருந்து மீட்க முடியுமா?அமெரிக்காவில் மருத்துவம் பெற முடியுமா? இந்தியாவில் 65% மக்கள் அடிப்படை மருத்துவ வசதி பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள் என இதே ஐ.நா.சபையின் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.பிரித்தானியாவில் கல்வி பயில முடியுமா?பாதிரிகள் கைகளில் `குழந்தைகள் தமது குழந்தைப்பருவத்தில் குழந்தைகளாக வாழ்ந்து, வளர்வது சாத்தியமா?
ஈழத்திலும்,ஈராக்கிலும்,பாலஸ்தீனத்திலும்,சிரியாவிலும், குழந்தைகள் இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொடுக்க இயலுமா?ஐ.நா வால் முடியுமா? சர்வதேசம் சமூகம் செய்யுமா?

ஏகாதிபத்தியத்தினதும் சோசலிசப் புரட்சியினதும், சகாப்த்தத்தில் ஏகாதிபத்தியத்துக்குமுடிவு கட்டாமல், இத்தகைய மனித உரிமைகளை உத்தரவாதம் செய்ய இயலும் என நம்புவது, குட்டி முதலாளிய மடைமைத்தனம், நம்ப வைப்பது ஏகாதிபத்திய ஏமாற்று.NGO பித்தலாட்டம்!

எனவே `மனித உரிமை`, என்பது அந்தச் சொல் உணர்த்தும் தூய பொருளை நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளால் பிரயோகிக்கப் படுவதில்லை.மாறாக அவை வேறு இரு நோக்கங்களச் சாதிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.அவையாவன,

1) உலகில் உள்ள எல்லா முரண்பாடுகளையும், அவற்றின் விளைவான பிரச்சனைகளையும், `மனித உரிமை மீறல்` என்ற, பொது வடிவில் சித்தரிப்பதன் மூலம்,அந்தப் பிரச்சனைகளின் தார்ப்பரியத்தைக் குறைத்து,திரித்து, திசை திருப்புவது.

2) அடிமைப்படுத்த வேண்டியுள்ள நாடுகளை மட்டும் மனித உரிமையை அளவு கோலாக வைத்து `முரட்டு அரசுகள்` எனப்பிரகடனம் செய்து, ஆட்சிக்
கவிழ்ப்புகள், கலவரங்கள், யுத்தங்கள் மூலம் பொம்மை அரசுகளை உருவாக்குவது.வர்த்தக ஒப்பந்தத் திணிப்புகளும்,அரபு வசந்தங்களும், வர்ணப்புரட்சிகளும்,இந்த மனித உரிமை முகமூடி தரித்து நடத்தப் -பட்டவையே ஆகும்.

`மனித உரிமை` என்ற ஒன்று யதார்த்த உலகத்தில் உயிர்ப்புடன் வாழுகின்றதென்றால், அது மேற்கண்ட இந்த இரண்டு நடவடிக்கைகளிலுமே வாழ்கின்றது.வேறெங்கும் வாழவுமில்லை, வாழவும் முடியாது.ஏனெனில் அவையெதுவும் ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமல்ல.ஏகாதிபத்திய முறைமையின் கீழ் சாத்தியமுமல்ல.

 இந்த அடிப்படையில் தான் இலங்கையிலும் மனித உரிமை மீறல் குறித்து பேசப்படுகின்றது.

1) தேசிய இன ஒடுக்குமுறையையும், இனப்படுகொலையும் மனித உரிமை மீறல்களாக திரிபுபடுத்தி சித்தரிக்கப்படுகின்றது.

இதன் மூலம் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட, ஏகாதிபத்தியச் சுரண்டலின் உறிஞ்சுகுழலாக, இருக்கும் அரைக்காலனிய அரசுமுறை (சிங்களம்), பாதுகாக்கப்படுகின்றது.

2) உலக மறு பங்கீட்டுச் சந்தைப் போட்டியில் ரசிய, சீன அணியினதும்; அமெரிக்க ,ஐரோப்பிய, இந்திய அணியினதும் போட்டிக்களமாக இலங்கை மாறியுள்ளது.

இதில் இலங்கையைத் தட்டி அடக்கிப் பணிய வைக்க அமெரிக்கா இந்த மனித உரிமை ஆயுதத்தை ஏந்துகின்றது.இந்த அடிப்படையில் தான் இந்தியா திருத்தங்கள் செய்து தனது மேலாதிக்க நலனை உறுதி செய்துள்ளது.

இந்த இரு அடிப்படைகளும் ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டவையல்ல. இந்த அடிப்படைகள் மீதமைந்த அந்நியத் தலையீட்டால் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி பெற முடியாது.இன ஒடுக்குமுறையில் இருந்து தற்காக்க முடியாது. சிங்களத்தின் தமிழீழ தேசிய ஆக்கிரமிப்பையும், அழிப்பையும் தடுத்த நிறுத்த முடியாது.

இதனால்த்தான் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்குப் பிந்திய கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தரகுத் தமிழ் அணியால், தமிழீழத்தின் வாழ்விற்கு எந்த
பாதுகாப்பையும், எவரைக் கொண்டும் உருவாக்க முடியவில்லை.

வருடா வருடம்,தரகுத் தமிழ் அணியின் ` நீதி கோரும்` இயக்கம் அதன் தலைமையை அம்பலப்படுத்தி வருகின்றது.

`சர்வதேச சமூக நிர்ப்பந்தம், இந்திய ஆதரவு, ஐ.நா.அங்கீகாரம், ஒற்றையாட்சி சிங்களத்தில் மாகாண நிர்வாக  `ஆட்சி`  ` என்கிற ஏகாதிபத்திய திட்டத்தில்
இனப்படுகொலைச் சிங்களத்திடமிருந்து, பிரிந்து செல்ல தமிழீழம் நடத்தும் இரத்தம் சிந்தாத போரை சீரழித்து, சிதைக்கும்  தரகுத் தமிழ் அணியின் சமரசப் பாத்திரத்தை மக்கள் மென் மேலும் உணர்ந்து வருகின்றார்கள்.

இந்த எதிர்ப்புரட்சி அந்நியத்தலையீட்டு முயற்சி `மனித உரிமை` முகமூடி தரித்து நிற்பதையும் மக்கள் அறிவார்கள்.

இந்த `மார்ச் மாத விடாய்` அடுத்த ஆண்டு வருகின்றபோது மக்கள் இவர்களுக்கு நல்ல சூடு போடும் பொருட்டு, புதிய ஜனநாயக- தமிழீழப் பிரிவினைப் பிரசார இயக்கத்தை முன்னெடுக்க பின்வரும் முழக்கங்கள் மீது அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

* நவீன காலனிய, உலக மறு பங்கீட்டு, அந்நிய மேலாதிக்கத்துக்கான அரசியல் ஆயுதமே மனித உரிமை.

* தேசிய இன விடுதலைக்கான ஜனநாயக முழக்கம் பிரிந்து செல்லும் உரிமையே!

* சிங்களமும், இந்திய விரிவாதிக்க அரசும், சர்வதேச சமூகமும்,ஐ.நா சபையும் இணைந்து நடத்திய பிரளயமே ஈழதேசிய இனப்படுகொலை!

*தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தனித்தமிழீழமே!

*இனப்படுகொலைப் போர்க்குற்றத்துக்கு தண்டனை அளிக்கவும், ஈழப்பிரிவினைக்கு பொதுவாக்கெடுப்புக் கோரியும்,உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!



புதிய ஈழப்புரட்சியாளர்கள்.
தமிழீழம்                                                                                                                    ஏப்பிரல் 1 - 2014