Thursday 24 April 2014

முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் ஐந்தாம் ஆண்டு : புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பாதையின் பிரகடனம்.



புதிய ஈழப் புரட்சியாளர்கள் 
ENB

மே 1 - மே18 புரட்சித் திருநாட்கள் நீடூழி வாழ்க!


ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச தமிழ்த் தரகு அணிகளின் ஐ.நா.நீதிப்பாதை
அரசியல் விடுதலைப் பாதை அல்ல என அம்பலப்படுத்துவோம்!

உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

தமிழகத்தில் மக்கள் ஜனநாயக இயக்கத்தை ஆதரிப்போம்!
ஈழ வியாபாரிகளை தண்டிப்போம்!

உலகமறுபங்கீட்டு சமரசத்தில் பலிக்கடாவாக்கப்பட்ட `ஈழ விடுதலையை`, 
சோசலிச,புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் மீண்டும் வென்றெடுப்போம்!

சர்வதேச போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம்!

பொது ஜன ஈழப்பிரிவினை வாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

ஆனந்தபுரத்துக்கு பழி தீர்ப்போம்! அடுத்தகட்ட  தலைமையைக் கட்டியமைப்போம்!

மாவீரர் தாகம் தமிழீத் தாயகம்!

தனித்தமிழ் ஈழ மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சி செய்வோம்!
உழைக்கும் தொழிலாள விவசாய மக்களைச் சார்ந்திருப்போம்!

மலையக , முஸ்லிம் இன மத சிறுபான்மையினரை ஒன்று சேர்ப்போம்!

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வழி நடப்போம்! 

புதிய ஈழப் புரட்சி படைப்போம்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள் ENB
தமிழீழம்                                                                                                                                               மே 1-18 - 2014
=============================
முள்ளிவாய்க்கால் பிரளயம் ஐந்தாம் ஆண்டு.

 புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பாதையின்  பிரகடனம்.

இவ்வாண்டு (2014) மே 18 ம் நாள் முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் 5ம் ஆண்டு நினைவு நாளாகும். ஈழதேசம் வீரகாவியம் படைத்த இந்நாளில் மாண்டு மடிந்து போன இலட்சோப லட்சம் மக்களுக்கும் விடுதலைப்புலி போராளிகளுக்கும் எம் வீரவணக்கத்தையும் சிவப்புஅஞ்சலியையும் தலை தாழ்த்தி தாழ்மையுடன் செலுத்தி நிற்கிறோம்.

மாண்ட நம் மக்களே! மாவீரத் தோழர்களே! சிவப்பு வணக்கம்.

மே மாதம் முதல் தேதி உலகத் தொழிலாளர் தினமாகும். தொழில்மூலதன, நிதிமுலதன, நிலவுடைமை வர்க்கங்களுக்கும், தொழிலாள விவசாய சிறுமுதலாளித்துவ உழைக்கும் வெகுஜனங்களுக்கும், ஒடுக்கும் தேசங்களுக்கும், ஒடுக்குப்படும் தேசங்களுக்கும்,ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சி முகாமுக்கும், சோசலிச ஜனநாய புரட்சிகர முகாமுக்கும், இடையேயான முரண்பாடு என்றுமில்லாதவாறு சர்வதேசம் எங்கும், ஏக காலத்தில் கூர்மையடைந்துள்ள ஒரு புரட்சிகர சூழலில் இவ்வாண்டு மேநாளை நாம் எதிர்கொள்கிறோம்.

இம் மேநாளை வாழ்த்தி சர்வதேசத் தொழிலாளர் ஒற்றுமையினதும் சகோதரத்துவத்தினதும் பேரால்,

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேர்வோம் என முழங்குவோம் ! 

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஈழத் தமிழர்களுக்கு இரட்டிப்பு முக்கியத்துவம் மிக்கதாகவும். இம்மாதத்தின் முதல் நாள் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடிய தொழிலாளர்களின் வீர நினைவாக உலகத் தொழிலாளர்கள் தமது சமகால வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற சபதம் பூணும்  நாளாகும்.

தமிழீழ மக்கள் தமது தேசிய விடுதலைப் புரட்சியில் வீரகாவியம் படைத்த தமிழீழ விடுதலைப் புரட்சி தினம்-முள்ளிவாய்க்கால் மே 18 ஆகும்.

மே மாதத்தில் நிகழ்ந்த இந்த தற்செயலான இருவேறு வரலாற்று நிகழ்வுகளுக்கு ஒரு தத்துவார்த்த ஒருமைப்பாடு உண்டு.

தத்துவார்த்த நோக்கில் தழிழீழப் போராட்ட வரலாற்றை முள்ளிவாய்க்காலுக்கு முந்திய காலம், முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய காலம் என தெளிவாக வேறு பிரிக்கலாம். முள்ளிவாய்க்காலுக்கு முந்திய காலம் முதலாளித்துவ – குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களால் தலைமை தாங்கப் பட்டதாகும். இதனால் இயல்பாகவே முதலாளித்துவச் சித்தாந்தத்தால் தலைமை தாங்கப்பட்டதாகும். தழிழீழ விடுதலைப் புரட்சிக்கான அரசியல் வேலைத்திட்டமும், யுத்த தந்திர செயல்தந்திர கோட்பாடுகளும், இராணுவ மார்க்கமும், ஸ்தாபன கோட்பாடுகளும், பிரச்சார மற்றும் போராட்ட வடிவங்களும் இந்தச் சித்தாந்தத்தினாலேயே வழிகாட்டப்பட்டு வார்த்து வரையறுக்கப்பட்டு இருந்தன.

அரசியல் திசைவழியில் தமிழ் வலது பிரிவு அடிமைத்தனமான அதிகாரப்பகிர்வுத் திட்டத்தைக் கொண்டிருந்ததுஎன்றால், இடது பிரிவு போர்க்குணம் மிக்க நிபந்தனை அற்ற பிரிவினையை தனது திட்டமாகக் கொண்டிருந்தது.

எனினும் மேற்கூறியவாறு இரண்டு அணியுமே முதலாளித்துவ சித்தாந்தத்தால் தலைமை தாங்கப்பட்டது என்பது குறிப்பான முக்கியத்துவம்
உடையதாகும்.

தழிழீழ விடுதலைப் புரட்சி அதன் உள்ளடக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சியாகும். இதனால் இது உலக சோஸலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகும்.  இந்த தவிர்க்க இயலாத நியதியின் காரணமாக இப் புரட்சி முதலாளித்துவசித்தாந்தத்தால் வழிநடாத்தப்பட இயலாததாகும்.

முதலாளித்துவ சித்தாந்தத்தின் கடைக்கோடி வலது பிரிவான தமிழ் தரகுமுதலாளிய வர்க்கத்தின் சமஸ்டி இயக்கம் 1977 இல் தமிழீழப் பிரகடனத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இதுதான் அதன் உச்ச நிலையாகும். இதற்குப் பிந்திய அதன் வரலாறு முழுவதும் கடைந்தெடுத்த காட்டிக் கொடுப்புக்களினதும், துரோகங்களினதும், அந்திய ஆக்கிரமிப்பு விசுவாத்தினதும் அருவருக்கத்தக்க அடிமை வரலாறே ஆகும்.

குட்டி முதலாளித்துவத்தின் தேசியவாதப் பிரிவு, முதலாளித்துவச் சித்தாந்தத்தின், மிக முன்னேறிய பிரிவின் ஆங்காங்கே தலைதூக்கிய  சமரச, சந்தர்ப்பவாத, ஊசலாட்டங்களுக்கு அப்பால் அந்த மூன்று தசாப்தங்களும் தமிழர் வரலாற்றில் ஒரு வீர சகாப்தம்ஆகும். புராணம்,இதிகாசம் அல்லாத நிஜமான மாவீரர்களின் மாபெரும் வீர காவியமும் ஆகும்.

ஓயாத அலை தாய் நில ஆக்கிரமிப்பு தடுப்பு யுத்தம்,ஆனையிறவு பெரும்படைத் தளத் தகர்ப்பு, இந்திய ஆக்கிரமிப்புப் படை விரட்டியடிப்பு, ஆனந்தபுரச் சமர் என்பவை இவற்றின் உச்சங்களும் சிகரங்களும் இமயங்களும் ஆகும்.

இதற்கு மேல் செய்வதற்கென்று எதுவும் இருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புரட்சிக்கான திட்டம் முதலாளித்துவச் சித்தாந்தத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மட்டுப்பாடுகள் இட்டுச் சென்ற இடம்தான் முள்ளிவாய்க்கால்.

எனவே முள்ளிவாய்க்கால்த் தோல்வியும் பின்னடைவும், புரட்சிக்கும் அமைப்புக்கும் ஏற்பட்ட தோல்வி என்பதைக் காட்டிலும், புரட்சியையும் அமைப்பையும் வழிநடத்திய சித்தாந்தத்தின் தோல்வி என்பதே மிகச் சரியான உண்மையாகும்.

இதனால் ஈழவிடுதலைப் புரட்சியின் மூன்றாவது காலகட்டம் இரண்டாவது கட்டத்தின் நேரடியான, நேர்வரிசையான தொடர்ச்சியாக இருக்க முடியாது, மற்றும் இருக்க இயலாது. இதனுடைய முறிவின் தொடர்ச்சியாகத்தான் வர முடியும்.

இந்த முறிவு என்பது இதுவரையும் வழிகாட்டப்பட்ட முதலாளித்துவ சித்தாந்தத்தில் இருந்து முறித்துக் கொண்டு பாட்டாளிவர்க்கச் சித்தாந்தத்தில் – மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழிகாட்டுதலில் முன்னேறுவதாகும்.

இந்த மாற்றம் கடந்த முப்பதாண்டுகாலம், தலையால் நடந்த தமிழீழ விடுதலைப் புரட்சியை காலால் நடக்கவைக்கும் இயக்கமாகும். இதுவரையும் பேரூந்தில்  (கடுகதி உட்பட) நடந்த விண்வெளிப் பயணம் இனிமேல் விமானத்தில் பயணிக்கும்.

இப்படியொரு அடிப்படையான , மறுப்பும், முறிப்பும் இல்லாமல் தமிழீழவிடுதலைப் புரட்சியை இனிமேல் ஒரு எள்முனையளவும் நகர்த்த முடியாது.

அல்லாமல்  இன்று நடக்கும் களியாட்ட போராட்டங்கள் எல்லாம். வெற்றிடங்கள் விட்டுவைக்கப்படமாட்டா என்ற வரலாற்று நியதியில் நடக்கும் வெற்று ஆரவாரங்கள் ஆகும். உண்மையான மாற்றீடு உருவாகி வளர்கிறபோது இந்த ஆரவாரங்கள் மங்கிமறைந்து போய்விடும்.

தனிநபர் தலைமையை ஜனநாய மத்தியத்துவக் கோட்பாட்டில் இயங்கும் கட்சியால் மாற்றீடு செய்வது, தன்னியல்பைத் திட்டத்தால் மாற்றீடு செய்வது, செயல்தந்திர வழியை – முடிவுகளை முன்னாலுள்ள சந்தர்ப்பங்களுக்கு உகந்த அடிப்படையில் அல்லாமல் திட்டத்தாலும் யுத்த தந்திரத்தாலும் வழிகாட்டப்பட்டு தீர்மானிப்பது, கெரில்லா போர்முறை – நிரந்தர இராணுவம் என்கிற இராணுவ மார்க்கத்தை, மக்கள் யுத்தத்தால் மாற்றீடு செய்வது, புரட்சிகரமான ஊழியர் கொள்கைகளையும், நிதிக் கொள்கையையும் கடைப்
பிடிப்பது, அயலுறவுக் கொள்கையை சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைத்துக் கொள்வது என ஒரு புதிய மறுவார்ப்புச் செய்தாக வேண்டியுள்ளது. இந்த மறுவார்ப்பு இட்டுக் கட்டுதலோ அல்லது செப்பனிடுதலோ அல்ல. இது  ஒரு புதிய வார்ப்பாகும். ஒரு புதிய பொருளை,ஒரு புதிய புரட்சியை, ஒரு புதிய பாதையை, அதன் பழைய கருப்பையில் இருந்து வேரறுத்துப் புதிய கருப்பைக்குள் புகுத்துவதாகும்.தேசியத்தைக் கருத்தாங்க உழைக்கும் மக்களின் தாய் மடியை உருவாக்குவதாகும்.

இந்த சத்திர சிகிச்சை நான்கு பாகங்களைக் கொண்டது.

பாகம் ஒன்று


இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம், லண்டன் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு, ஜெனீவா நீதிப்பயணம்- ஒரு ஊடறுப்புச் சமர்!

1) 66வது சுதந்திர தினம்

 இலங்கையின் 66 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் பெப்ரவரி 4 2014 வெகு விமரிசையாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது. நாட்டுமக்களுக்கு
வழங்கிய செய்தியில் மாட்சிமை தங்கிய அரிச்சந்திர மகாராசன் ராஜபக்ச,அந்நியர்களுக்கு அடிபணியாமல்  இலங்கையை ஒரு கொடியின்
கீழ் அபிவிருத்திப்பாதையில் நடத்திச் செல்லப் போவதாகப் பிரகடனம் செய்துள்ளார்.

2) கரிநாள்

இந்தச் சுதந்திர நாளை  கரி நாள் எனப்பிரகடனப்படுத்தி புறக்கணித்த ஈழத்தமிழர்கள், எமது தாயக தேசம் தமிழீழம் என்று முழங்கினர்.
கூடவே இலங்கைச் சுதந்திரம் சிங்களவர்களுக்கு கிடைத்த சுதந்திரம்  என்றும் கூறினர்.இது சமஸ்டி இயக்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு
 வாரிசு உரிமையாகக் கிடைத்து இன்றும் வாழ்கின்ற  கருத்து நிலையாகும்.

3) நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு

புலம் பெயர் நாடு இங்கிலாந்து பாராளமன்ற வளாகத்தில்  `நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு` நடைபெற்றது.

4)ஜெனீவா நீதி

 புலம் பெயர் தமிழர்கள், தமிழ்த் தரகு அணியினரால்  ஜெனீவா நீதிக்கு அணிதிரட்டப்படுகின்றனர்.ஐ.நா.சபையின் மனித உரிமை மாநாட்டில்
அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து முன்வைக்கவுள்ள இலங்கை குறித்த தீர்மானம் தமக்கு நீதி வழங்க வேண்டுமெனக் கோருகின்றது
 இந்தக்கூட்டம்.

இந்த முக்கிய நான்கு நிகழ்வுகளின் பின்னணியில், தமிழீழ விடுதலைக்கான இரத்தம் சிந்தா போர் முன்னேறிவரும் இன்றைய கட்டத்தில், இவ் இயக்கத்தின் மேற்பரப்பில் நின்றுலாவும்  சமூக சக்திகள்- (தரகுத் தமிழ் அணி), இவ்வியக்கத்தை வழி நடத்தி செல்லும் அரசியல் திசைவழி குறித்தும், அதன் வர்க்க வேர் குறித்தும் ஆய்ந்தறிந்து, தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக இயக்கத்தை புரட்சிப் பாதையில் நிறுத்துவது எவ்வாறு என்பதை பாகம் ஒன்று ஆராய்கிறது.

1) இலங்கைச் சுதந்திரம் குறித்து.

பிரித்தானிய நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து மகாராணியின் நேரடி காலனித்துவ நிர்வாகி மகா தேசாதிபதியின் கண்காணிப்பின் கீழ்
உள் நாட்டு ஆளும் தமிழ்-சிங்கள நிலப்பிரத்துவ, காலனியாதிக்க அறிவுத்துறைப் பிரிவினர் அடங்கிய விதேசிய வர்க்கங்களின் கைக்கு,
ஏகாதிபத்திய காலனியாதிக்க அதிகாரம், பாதுகாப்பாக , பக்குவமாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட,என்றும் கண்டிக்காத, ஒருபோதும் குரைக்காத, மிக விசுவாசமான உள்நாட்டு தரகர்களுக்கு கையளிக்கப்பட்டு, இலங்கை அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாகவும்,கட்டாய இணைப்புக்கு உட்பட்டு தமிழீழம் அடிமைத் தேசமாகவும்,  மாற்றப்பட்ட  நாளே இலங்கையின் சுதந்திர தினமாகும்.!

இந்த சுதந்திர நாளை தமிழர்கள் கரி நாள் என்கையில் அதன் அரசியல் உள்ளடக்கம் எதுவாக உள்ளது?

a) நேரடி காலனியாதிக்கம் நீங்கினாலும், மறைமுகமாக அரைக் காலனியாதிக்கம் நிலைத்திருக்கின்றது என்பதா? இல்லை!

 b) பிரித்தானிய காலனியாதிக்கத்தின் அரைக்காலனிய சோல்பரி அரசியல் யாப்பு தமிழீழ தேசத்தை கட்டாயமாக-சுயவிருப்பு அறியாமல்-
சிங்களத்துடன் கட்டிப்போட்டது என்பதலா? இல்லை அதனாலும் இல்லை!
அப்போ எதனால்தான் இது கரி நாள்?

c) வரலாற்று விளக்கம் வருமாறு:

அ) 1947 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது.
ஆ) சுதந்திர சோல்பரி அரசியல் யாப்பு சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது!
இ) சிங்களத் தலைவர்கள் இதை மீறினர்.
ஈ) தமிழர்கள் ஏமாற்றப் பட்டனர்!.
இதுதான் சமஸ்டி இயக்கத்தின் வரலாற்று விளக்கம்.!

இந்தக்கணம் வரைக்கும் இதுதான் ஈழத்தமிழர் சிந்தனையின் இலங்கைச் சுதந்திரம் குறித்த கருத்தாக்கமாக இருந்து வருகின்றது.

2) தமிழர்கள் ``ஏமாற்றப்பட்ட`` கதை அல்லது காதை!

1) சுதந்திரத்துக்குப் பின்னால் தமிழ்த் தலைவர்கள், சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்!
2) 1981 இல் முப்பது ஆண்டுகள் நம்பிக்கை கொண்டிருந்த சமஸ்டி இயக்கத்தால் ஏமாற்றப்பட்டார்கள்
3)``இந்திரா காந்திக்குப் பின்னால்`` காங்கிரசால் ஏமாற்றப்பட்டார்கள்!
4)ராஜீவ் காந்தி ஜெ.ஆரால் ஏமாற்றப்பட்டார்!
5) தத்துவ ஆசிரியர் அன்ரன்பாலசிங்கம்  ஒற்றையாட்சி-அகசுயநிர்ணய உரிமைத்- தீர்வுக்கு உடன்பட்டு ஒஸ்லோவில் கையொப்பமிட்டதால்
 ``யுத்தப்பிரபு`` பிரபாகரன் ஏமாற்றப்பட்டார்!
6) மடுத்திருப்பதி போர்முனையானபோது கத்தோலிக்க பாதிரி சபையால் தமிழீழப் போர்க்களம் ஏமாற்றப்பட்டது!
7) முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் ஒபாமா வாலும்,வை.கோ, நெடுமாறன்,சீமான் கும்பலாலும் ஏமாற்றப்பட்டார்கள்!
8)தமிழ்மக்கள் ஐ.நா.வாலும் கைவிடப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள்!
9)லண்டனில் போர்நிறுத்த உண்ணாவிரதி பரமேஸ்வரன், பிரித்தானிய தொழில்கட்சியால் ஏமாற்றப்பட்டார்!
10) வடக்கு மாகாணசபைக்கு வாக்களித்த மக்கள், சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் மூவர் கும்பலால் ஏமாற்றப்படார்கள்!

66ஆண்டுகள் தொடரும் இந்த `ஏமாற்றக் காதை` என்று முடிவுக்கு வரும்? எப்படி முடிவுக்கு வரும்?

(புதிய பிந்திய செய்தி: அமெரிக்கத் தீர்மானத்தாலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டார்களாம்!)

இந்த ஏமாற்றங்கள் அத்தனைக்கும் ஒரு பொதுக் காரணம் உண்டு.அதைத் தகர்த்தால் தான் இது முடிவுக்கு வரும்.

அதாவது ஈழ தேசியப் பிரச்சனையின் வர்க்க சார்பு நிலையும், அணிசேர்க்கையும் ஆகும். இதுதான் உயிராதாரமான பிரச்சனை.

ஈழதேசியப் பிரச்சனையின் உள்ளடக்கமும் உருவகமும் முற்றிலும் யதார்த்தக்கு முரண்பட்டுள்ளது.

உள்ளடக்கம்:அரைக்காலனிய  இலங்கைச் சமூகத்தை ஜனநாயக சமூகம் ஆக்கும் பொருட்டு ஈழ தேசம் சுயநிர்ணய உரிமை பெறுவதாகும்.

உருவகம்:சிங்களவர்களால் இனப்படுகொலைக்குள்ளாக்கப்படும் தமிழர்கள் தமிழீழத் தனிநாடு பெறுவதாகும்.

இது இரு வேறு உலகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது.

1) இனப்படுகொலையின் வேரை சிங்கள-தமிழ் விரோத வரலாற்றில் மட்டும் காண்பது.
2) இனப்படுகொலையின் வேரை அரைக்காலனிய அரசுமுறையிலும், சிங்கள-தமிழ் விரோத வரலாற்றிலும் இணைத்துக் காண்பது.

மேல்த் தோற்றத்தில் இது மிக நுண்ணிய வேறுபாடாகத் தெரிந்தாலும், ஆழ்ந்த ஆராய்வில் இது அடிப்படையில் முரண்பட்ட இருவேறு உலகக் கண்ணோட்டத்தின் வழிப்பட்ட உள் நாட்டுப் பிரச்சனை குறித்த விளக்கமும் வெளியீடுமாகும்.

இனப்படுகொலையின் வேரை சிங்கள-தமிழ் விரோத வரலாற்றில் மட்டும் காண்கிற முதலாளித்துவ வகைப்பட்ட கண்ணோட்டம் ,
இலங்கையின் தேசிய விடுதலை,ஈழத்தமிழரின் பிரிவினைச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையில் ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தை முற்றாக மூடி
மறைத்துவிடுகின்றது.கடந்த 66 ஆண்டு காலமும் ஈழ தேசியப்பிரச்சனை இவ்வாறு தான் உருவகப்படுத்தி வியாக்கியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

3. இந்த ஏகாதிபத்தியதாச காலனியாதிக்க சிந்தனைக் கட்டமைப்புத்தான் - இதன் சமூக வேர் தரகுமுதலாளிய குட்டிமுதலாளிய அரைக் காலனித்துவ
வர்க்கங்களின் - தமிழ்த் தரகு அணி-  இதுவே சிங்களவர்களுக்குக் கிடைத்த சுதந்திரம் என்று கூறுகின்றது. இந்தச் சிந்தனைப் போக்குத்தான்
இலண்டனில் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்துகின்றது. ஐ நா விடம் நீதி கோரி வீதிப் பயணம் நடத்துகின்றது.

4. லண்டன் மாநாடு

1. பிரித்தானிய காலனியாதிக்கம் இலங்கையில் அதிகாரக் கைமாற்றத்தை ஏற்படுத்தியபோது தமிழீழ தேசத்தை ஸ்ரீலங்காவுடன் கட்டாயமாக
இணைத்து சோல்பெரி அரசு யாப்பு மூலம் அதைச் சட்டபூர்வமாக்கியது.

2. உள்நாட்டில் அயர்லாந்து, வேல்ஷ், ஸ்கொட்லாந்து ஆகிய மூன்று தேசங்களை ஆண்டாண்டு காலமாக ஆக்கிரமித்துத்தான் இங்கிலாந்து நாடு
பெரியபித்தானியாவாக ஆகியிருக்கிறது.

3. காலனியாதிக்க நேரடி அதிகாரம் கைமாற்றப்பட்டு அனைத்துத் தேசங்களும் இன்றும் அரைக் காலனிகளாகவே உள்ளன. அந்த மண்ணின்
 மக்களுக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் கிடையாது. பாலஸ்தீனம் இன்றும் தன் மண்ணுக்காகப் போராடுகின்றது!ஆபிரிக்கக் கண்ட மக்கள் பஞ்சத்தில்
பரிதவித்து மடிகிறார்கள்!

4. ஆப்கானிஷ்தான் ஆக்கிரமிப்பில் ஒரு புராதன பூமியை அழித்தார்கள்!, ஈராக் ஆக்கிரமிப்பில் ஒரு நவீன முதலாளித்துவ நாட்டையே அழித்தார்கள்!

5. லிபிய, சிரிய ஆக்கிரமிப்பில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து ஆட்சிக் கவிழ்ப்பு வன்முறை யுத்தங்கள்
நடத்தி அந்நாடுகளை அடிமைப்படுத்தினார்கள்.

6. அரபுவசந்தம் என்ற பெயரில் நவீன காலனியாதிக்க பொம்மை அரசுகளை உருவாக்கினார்கள்.

7) உக்ரெயின் ஆட்சிக்கவிழ்ப்பில் நாஜிப் பாசிஸ்டுக்களை  ஆட்சியில் அமர்த்தினார்கள்.

எனவே எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகம் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து சர்வதேச மாநாடு கூட்ட வளமான
நிலம்தான்!

இலங்கையில் நில அபகரிப்பின்  தன்மைகள் வடிவங்கள் வருமாறு:

அ. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பறித்து சிங்கள ஏழை விவசாயிகளுக்கு வழங்கி அதை அடிப்படையாகக் கொண்ட சிங்களக் கிராமக்
குடியேற்றங்களை உருவாக்குவது,

ஆ. இத்தகைய குடியேற்றங்களை ஈழதேசத்தின் பூகோளத் தொடர்ச்சியை துண்டாடும் நோக்கில் நிறைவேற்றுவது,

இ. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் – ஒபாமா தமிழ்மக்களை நிராயுதபாணியாக்கியதின் பின்னால் இது இராணுவ குடியேற்றம் என்ற வடிவத்தை எடுத்துள்ளன.

ஈ. மேலும் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் மீள்குடியுரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்விடங்களில் இராணுவ மற்றும் சிங்கள
குடியமர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவையே நில ஆக்கிரமிப்பின் தன்மைகளும் வடிவங்களுமாகும்.

இவை அனைத்திற்கும் தமிழர் நோக்கில் முன்வைக்கப்படுகின்ற வாதம் இலங்கை அரசு சிங்களவர்களின் அரசு என்பதால் அவர்களுக்குச் சாதகமாக
நடந்து கொள்கிறது என்பதாகும். ஆனால் உண்மை இதுவல்ல.
தமிழர்களுடையதோ சிங்களவர்களுடையதோ இலங்கை மண்ணை சிங்கள ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய அந்நிய கொம்பனிகளுக்கும் நாடுகளுக்கும்
தாரைவார்த்த வண்ணமே உள்ளனர். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் இது மடைதிறந்த வெள்ளமாக பாய்கின்றது. இதில் அமெரிக்க  ஐரோப்பிய
 ஏகாதிபத்தியவாதிகள் இந்தியா, ரஷ்யா, சீனா, மத்தியகிழக்கு நாடுகளுடன் போட்டிபோட்டு பங்கிட்டு தின்றவண்ணம் உள்ளனர்.Regaining Sri Lanka என்கிற ரணில் திட்டத்திற்கும் மகிந்த சிந்தனைக்கும் கிஞ்சிற்றும் மாற்று இல்லை,இதனால் தான் இலங்கையில் `எதிர்க்கட்சி` என்று ஒரு கட்சி தற்போது இல்லை!

தமிழர் நிலங்களை சிங்களவர்களுக்கு பறித்துக் கொடுப்பதற்கு காரணம் சிங்களமக்கள் மேல் உள்ள பாசத்தால் அல்ல.தமிழர்களையும் சிங்களவர்களையும் இடையறாது ஒரு மோதல் நிலையில் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் ஒன்றுபடுவதைத் தடுக்கவே இதனைச் செய்து வருகின்றனர்.ஏனெனில் அவர்கள் ஒன்றுபட்டால் இலங்கையின் அரைக்காலனிய அரசு தகர்ந்து விடும். இதைத் தடுப்பதற்காகவே செய்கின்றனர்.
`` இன மதப் பூசல்களை இடையறாது தூண்டி வருவது இலங்கையின் அரைக்காலனிய அரசின் இருப்புக்கு இன்றியமையாதது`` 
என்ற சமரனின் 1983 ஈழத்தீர்மான வரையறை மார்க்சிய நிலை நின்ற விஞ்ஞான வரையறுப்பாகும்.
1983-2009 இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிந்திய கடந்த ஐந்தாண்டின் 2009-2014 வரலாறு, யுத்தம் ஓய்ந்த காலத்திலும் இந்த வரையறுப்பே சிங்களத்தின் இயக்க விதியாக இருப்பதை நிரூபித்துள்ளது.

இதனால் ஏகாதிபத்தியவாதிகளாலும், இலங்கையின் அரைக்காலனிய அரசைப் பாதுகாக்க தொடர்ந்து முண்டு கொடுத்து வரும் வர்க்கங்களாலும் எவ்வாறு தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பை தடுக்கமுடியும்?

இம் மாநாட்டில் கூட்டமைப்புக் கும்பலும் கலந்து கொண்டு நில ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது! சம்பந்தன் மூவர் கும்பல் வடக்கு மாகாண சபைத் தேரதல் வெற்றியை ``ஒன்று பட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சிக்குள் ` அதிகாரங்களைப் பகிர்ந்து ஒன்றுபட்டு வாழ்வதற்கு மக்கள் அளித்த தீர்ப்பு எனக்கூறியது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு நன்றி கூறியது.சிங்க-சிங்கள கொடியேற்றி  மேதினம் கொண்டாடியது.

புலிகளின் வாலைக்கூட நாம் தொட்டதில்லை,தூரத்தில் இருந்து வரிகளை மட்டுமே எண்ணிக்கொண்டோம்  எனத் தன் ``பாவங்களை`` கழுவிக்கொண்டது!

இதையே தான் ராஜபக்சவும் கூறுகின்றான், `இலங்கை ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு கொடி,ஒரு அரசு.இலங்கையர் யாவரும் இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்.

இலங்கையின் ஏனைய மாகாணங்களைப் போன்றவையே வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும்.வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேறக் கோருவது போல இதர மாகாணத்தவரும் கோரினால் நான் என்னுடைய  இராணுவத்தை எங்கே கொண்டு
போய்வைப்பது`. ஒரு பொறுப்புமிக்க நாட்டின் ஜனாதிபதியின் எவ்வளவு  ஜனநாயகபூர்வமான வாதங்கள் இவை.தமிழ் மக்களே கூட வடக்கு கிழக்கு மாகாணத்தைத்தான் தமது தாயகம் என்கிறார்கள்.ஆனால் அதி உத்தம ஜனாதிபதியோ முழு இலங்கையிலும் வாழலாம் என்கிறார்! எவ்வளவு பெரிய மனது இந்த மனிதருக்கு!!

இலங்கை ஒரு நாடு, ஒரு தேசம் ஒற்றையாட்சி என்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டால் பக்ச பாசிஸ்டுக்களின் மேற்கண்ட வாதங்களை நிராகரிக்க முடியாது என்பது மட்டுமல்ல அவை முற்றிலும் நியாயமானவையாகவும் மாறி விடும்.

அல்லாமல் பக்ச பாசிஸ்டுக்களின் மற்றும் அவர்களது எஜமானர்களான ஏகாதிபத்தியவாதிகளதும், இந்திய விரிவாதிக்க விச வாயு அரசினதும் வாதங்களை நிராகரிப்பதாக இருந்தால் இலங்கை ஒரு நாடு இரு தேசம் என்ற முரணற்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இலங்கை ஒரு நாடு, இரு தேசம்.

சிங்களவர்களுடைய சிறீலங்கா தேசம் ஒடுக்கும் தேசம்.தமிழர்களுடைய தமிழீழ தேசம் ஒடுக்கப்படும் தேசம்.வரலாற்று ரீதீயான இவ் ஒடுக்குமுறையின் தொடர் விளைவாக இலங்கை மைய அரசு இன ஒடுக்குமுறையின் மீது கட்டமைக்கப்பட்டுவிட்டது,இலங்கையில் இன சமத்துவம் அடையப்பட வேண்டுமானால் இன ஒடுக்குமுறை அரசின் தகர்வில் மட்டுமே அடையப்பட முடியும்.இன ஒடுக்கு முறை அரசின் தகர்வு என்பது ஈழத்தமிழினம் சுய நிர்ணய உரிமை பெறுவதிலேயே அடங்கியுள்ளது.அல்லாத அனைத்து அதிகாரப் பகிர்வுத்திட்டங்களும்
இன ஒடுக்குமுறையை வேறு வழிகளில் தொடரும், இன ஒடுக்குமுறை அரசைப் பாதுகாக்கும்,சீர்திருத்த,சமரச ஜனநாயகவிரோத திட்டங்களும் பாதைகளுமே ஆகும்.

மேலும் இலங்கையின் தனிக்குறிப்பான வரலாற்று நிலமை ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை பிரிவினைக் கோரிக்கையாக மாற்றிவிட்டது. 1977 இலேயே  தமிழ் மக்கள்
ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் இதனைத் தீர்மானித்துவிட்டனர்.

இந்த அரசியல் அடித்தளத்தில் நடந்தேறிய 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைக்கான தற்காப்பு யுத்தம் இறுதிக்கட்டத்தில் மட்டும்
( முள்ளிவாய்க்கால் முற்றுகை இனப்படுகொலை) ,
ஒன்றரை இலட்சம் மக்களைப் பலிகொண்ட இனப்படுகொலையின் மூலம் முறியடிக்கப்பட்டது.தமிழீழ இராணுவத்தலைமை விச வாயு அடித்து ஆனந்தபுரத்தில் அழித்தொழிக்கப்பட்டது. இதற்குப்பிந்திய ஐந்து ஆண்டுகளில் தமிழீழ ஆக்கிரமிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது.தமிழ்த் தாய்க்குலம் மீது கட்டாயக் கருக்கலைப்பு பாசிசத் திட்டம் பலாத்காரமாகப்
பிரயோகிக்கப்படுகின்றது.இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தமிழீழத்தனி நாடே தீர்வு என்பது திருத்தி எழுத முடியாத தீர்ப்பாகிவிட்டது.

இவ்வாறுதான் ஈழத்தமிழ் தேசிய இனப்பிரச்சனையை ஐனநாயகரீதியில் முன்வைக்க வேண்டும், முன்வைக்க முடியும்.

இதன் மூலம் மட்டுமே பக்க்ஷ பாசிஸ்டுக்களினதும், பௌத்த பிக்கு பிசாசுகளினதும், சிங்கள பேரின வெறியூட்டப்பட்ட அறிவுஜீவிகளினதும், பெரும் தேசிய வெறிபிடித்த  ஊடகங்களினதும்,திருச் சிங்களச் சபைகளதும், அழுக்கு மூட்டைகளைக் கழுவ முடியும்.கூடவே அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாக்க அரசினதும் அவர்களினது கட்டப் பஞ்சாயத்து ஐ.நா வினதும், பக்ச பாசிஸ்டுக்களின் இனப்படுகொலைக்குத் தொடர்ந்து துணை நிற்கும் பச்சைத் துரோக்கத்தையும்,வர்க்கச் சார்பையும் அம்பலப்படுத்த முடியும்.

இத்தகைய ஒரு முரணற்ற ஐனநாயகப் பாதையில் அல்லாமல் இனிமேல் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது விடுதலைப் பயணத்தில் ஒரு அங்குலமும் நகர முடியாது.

இன்று தமிழீழ விடுதலைக்கான போராட்ட இயக்கத்தின் மேற்பரப்பில் நின்று கரகாட்டம் ஆடுவோர் அனைவரும் அடிப்படையில் ஒரு முகாமைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் ஏகாதிபத்திய முகாமைச் சார்ந்தவர்கள்.

``ஸ்ராலினை சர்வாதிகாரி என்று பிரகடனம் செய்தது போல் ராஐ பக்ஷவையும் சர்வாதிகாரி எனப் பிரகடனம் செய்.சதாமைத் தூக்கிலிட்டது போல் ராஐ பக்ஷவையும் தூக்கிலிடு.கொசோவையும் தென் சூடானையும் பிரித்ததுபோல் தமிழீழத்தையும் துண்டாடி எமதுகையில் கொடு.`` எனக் கூக்குரல் இடுகின்ற கும்பலிது. எவ்வளவு தன்மானமிக்க  தமிழ் முழக்கங்களை இவை!

ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விஸ்தரிப்புவாத விஷவாயு அரசும், கட்டைப்பஞ்சாயத்து ஐநாவும் மீண்டும் மீண்டும் முதுகில் குத்துகின்றபோது இவர்கள் இவ்வாறு பிடிவாதம் சாதிப்பதற்கு ஒருவேளை  இவர்கள் கவரிமான் சாதியென்பது காரணமாக இருக்குமோ?!

தமிழீழ விடுதலைப் புரட்சிக்கு எதிரான இந்த தமிழ்த் தரகு முகாம் மூன்று அணிகளைக் கொண்டது. ஒன்று இலங்கை அணி. இரண்டு புலம் பெயர் அணி
மூன்று தமிழ் நாட்டு அணி.

ரொட்க்ஸ்கிய திரிவுவாதத்தினதும் சந்தர்ப்பவாதத்தினதும் தர்க்கரீதியான விளைவாக, இலங்கை இடதுசாரி இயக்கத்தின் கடைசிவாரிசு வாசுதேவ நாணயக்கார எவ்வாறு பக்ச பாசிஸ்டுகளின் கைக்கூலி அரசு அதிகாரியானாரோ, ராஐ பக்ஷ தனது அரசாங்கம் ஐனநாயக அரசாங்கம் என எடுத்துக் காட்டுவதற்கு ஒரு ஆதாரமானாரோ, அதேபோலவே குறுமினவாத சந்தர்ப்பவாத சமஷ்டிஇயக்கத்தின் கடைசிவாரிசு சம்பந்தனும் பக்ச பாசிஸ்டுகளின் கைக்கூலியாக நிற்பதைக் காண்கிறோம்.``சம்பந்தன் சுமந்திரன் விக்னேஸ்வரன்` மூவர் கும்பல் பக்ச பாசிஸ்டுக்களின் அடியாட்களே!`கோட் சூட் அணிந்த `டக்ளஸ்`கருணா,பிள்ளையான்` கும்பலே இம்மூவர் கும்பலாகும்.இவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் இருக்கும் எதிரியின் கையாட்கள் ஆவர்.போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கத்துக்குள் ஊடுருவிய ``கருணாவின் ஆட்கள்`` என்கிற எட்டப்பர் கும்பல் போரின் முன்னேற்றத்துக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி தோல்வியைத் தழுவ துணை நின்றதோ,அதே பாத்திரத்தைத்தான் யுத்தம் ஓய்ந்த பின்னான இரத்தம் சிந்தா அரசியல் போர்க்களத்தில் இம் மூவர் கும்பல் ஆற்றுகின்றது. இது பிரதானமாக பக்ச பாசிஸ்டுக்களைச் சார்ந்து, ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நலன்களுக்கு சேவை செய்ய  தமிழ்மக்களை பகடைக் காய்களாய்ப் பயயன்படுத்துகின்றது.
இதனால் இதன் முழக்கம் ஒற்றையாட்சி, நியாயமான அதிகாரப்பகிர்வு என்பதாக இருக்கின்றது.

புலம்பெயர்  தளத்தின் தரகுத் தமிழணி, ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அந்நிய சக்திகளைச் சார்ந்துநின்று ராஐ பக்ஷவை தனிமைப்படுத்தி நாடுபிடிக்கலாமென  கனவு காண்கின்றது.

ஒரு வேளை இலங்கையில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏகாதிபத்தியவாதிகள் திட்டமிட்டால் புலம் பெயர் பேரவைகள் ஒபாமாவுக்கான தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கம் என ஈழத்தமிழர்களை ஆள்வதற்கு (புலிகளைக் கொன்ற) ,ஒரு ஆண்ட பரம்பரை ஐரோப்பாவில் தயாராகி வருகிறது.

இந்த இரு அணிகளினதும் ஆட்சிக் கனவுகளை யதார்த்தநிலைமை அனுமதிப்பதாக இல்லை. உள்நாட்டில் ஒரு அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு சிங்களம் ஒருபோதும் தயாராக இல்லை.
ஏகாதிபத்தியவாதிகள் இன்றைய சூழ்நிலையில் ஒரு உடனடியான ஆட்சிக் கவிழ்ப்புக்கு தயாராக இல்லை. ஆனால் அதைநோக்கி நகர்ந்து வருகின்றனர். சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் இதன் சாத்தியப்பாட்டைத் தீர்மானிக்கும்.
ஆங்காங்கே வீரம் கொப்புளிக்க “இனியும் பொறுக்கமாட்டோம்”, “பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” போன்ற உப்புச் சப்பற்ற உளறல்களுக்கப்பால் இவர்களது ஏகாதிபத்திய நலன் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றி நிற்க இவர்களை அனுமதிக்காது. யனரஞ்சகமான மக்கள் முழக்கங்களைத் தமது கைகளில் எடுத்து மக்களைத் தம்பின்னால் திரட்டி சமரசப் பாதையில் விடுதலை எழுச்சிக்கு வடிகால் அமைப்பதே ஒரு சமூக வர்க்கம் என்கிற முறையில் இவர்களது வரலாற்றுப் பாத்திரமாகும்.

தமிழ் நாட்டு அணி.


கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகம், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வை.கோபாலசாமியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,சீமானின் நாம் தமிழர் கட்சி,ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி,மற்றும் நெடுமாறன், திருமாவளவன், மணியருவி என இது ஒரு பெரும் அணியாகும்.ஆழத்தில் இந்து சமுத்திரத்தை விடவும், நீளத்தில் பாக்கு நீரிணையை விடவும் பரந்து விரிந்த ``திடலாகும்`` இது!

எனினும் ஈழப்போராட்டத்தை தமிழ் நாட்டில் ஆட்டிப்படைத்த  இந்த அணியின் பொது நலன் இந்திய விரிவாதிக்கம் ஆகும்.

இந்த அணியில் விடுதலைப்புலி கால கட்ட- ஈழத்தமிழ்தேசியப் பிரச்சனையையும்-  , தமிழ் நாட்டையும் இணைக்கும் கோட்டின் மூன்று முக்கிய புள்ளிகள் கருணாநிதி, கோபாலாசாமி, நெடுமாறன் ஆகும்.

இந்திய விரிவாதிக்க நலனில் பேரால் இவர்கள், விடுதலைப்புலிகளுக்கு சமாதி கட்டினார்கள்.

ஈழதேசத்தின் பேரால் இவர்கள் மீதான எமது குற்றப்பத்திரிகை வருமாறு:

நெடுமாறன்- அரசியல் குற்றம்.

1)  இந்திய விரிவாதிக்கத்துக்கும் ஈழதேசியத்துக்கும் இடையான முரண்பாட்டை, `இந்திராகாந்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிந்திய `அதாவது காங்கிரஸ் இயக்கம் சாராத சக்திகளின் வஞ்சனை என நியாயம் செய்து வருகின்றார்.இவர் தான் ``இந்திய விரிவாதிக்க நலனுக்கு உட்பட்ட வரம்புகளுக்குள்ளேயே ஈழதேசியத்துக்கு ஆதரவு`` என்கிற நிலைபாட்டின், கோட்பாட்டின் தமிழக காங்கிரஸ்-காந்திய பிதா மகன் ஆவர்.

கருணாநிதி- அதிகாரக் குற்றம்

2) ஒன்றைரை இலட்சம் ஈழத் தமிழ்த் தேசிய மக்கள் கொன்று குவிக்கப் பட்டுக்கொண்டிருந்தபோது, அதற்கெதிராக அண்டைத் தமிழ்த் தேசம் குமுறி எழுந்த போது அந்த `சங்காரம்`` நிகழாமல் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார்.இதன் மூலம் ஈழதேசிய இனப்படுகொலைக்கு துணைபோனார்.

வை.கோபாலசாமி- கொலைக்குற்றம் / போர்க்குற்றம்



3) 2014 தேர்தல் முடிவில் அமையப்போகும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்கும், அரசாங்கத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் விடுதலைப் புலிகள் தடையாக இருந்து விடாதுவாறு அவர்கள் கதையை முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு முடித்து வைத்தார்.அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் முகவராகச் செயல்பட்டு புறமுதுகில் குத்தி புலிகள் அமைப்பைப் படுகொலை செய்தார்.

ஈழப்படுகொலைக் கெதிராக எழுந்த தமிழகத் தீயை அணைத்த குற்றத்தின் பிரதான பொறுப்பாளிகள் இவர்களே ஆவர்.இதர இன மானம் பேசும் இந்திய விரிவாதிக்கவாதிகள் அனைவரும் இவர்களுக்கு துணை நின்றனர். முத்துக்குமார், செங்கொடிமற்றும்  இனப்பற்றாளப் பிஞ்சுகளை, அவர்களின் உயிர்த்தியாகங்களை ஒரு இயக்கமாக உருப்பெற விடாமல் அணைத்தார்கள்.

இந்தக்கும்பல் புலம் பெயர் தமிழ்த் தரகு அணியை இந்திய விரிவாதிக்க நலனின் பேரால் பாலூட்டி வளர்க்கிறது.

ஜெனிவாக் காவடி

முட்டுச் சந்தியில் சிக்குண்ட நிலையில் இருந்து முன்னேற எங்காவது ஒரு இடத்தில் முறையிட வேண்டும். ஒரு ஆராட்சி மணி வேண்டும். அது ஆளும் வர்க்க அதிகாரபூர்வ மணியாகவும் இருக்க வேண்டும்.ஆக அடைக்கலம் ஐநா சபையிடம்.

இந்த ஜெனிவாக் காவடியின் அடிப்படைக் கோரிக்கை ”இறுதியுத்தப் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை” என்பதுதான். இதரவற்றையெல்லாம் தலைவர்கள் அலங்காரத்துக்காக பேசுகிறார்கள்.
மக்கள் தம் சொந்த முழக்கங்களை முழங்க உரிமை பெற்றிருக்கிறார்கள். இதனால் இந்த இயக்கம் மக்கள் முழக்கத்தைச் சார்ந்ததுபோல ஒரு போலித் தோற்றப்பாட்டை அளிக்கிறது. எல்லா ஊர்வலங்களிலும்
பிரபாகரனின் இராணுவச் சீருடையணிந்த ஒரு பெரிய உருவப் பதாகை கம்பீரமாக நடந்து செல்கிறது. அதை மக்கள் காவிச் செல்கின்றனர். அதன் பின்னால்  ”நமது தலைவன் பிரபாகரன்” என்ற முழக்கம்
விண்ணதிர ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.தலைமை காதுகளை பொத்திக்கொள்ளாத குறையாக சகித்துத் தீரவேண்டியிருக்கின்றது!
இம்முழக்கம்  தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு இந்த சமரசவாதத் தலைமை பிரபாகரனிடமிருந்தோ அல்லது தமிழீழத்திடமிருந்தோ தன்னை கராராக துண்டித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால்
அது தமிழீழ பொதுமக்களிடம் இருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ஈழவிடுதலைப் போரின் சாயங்கள் சிலவற்றை தன்மேல் பூசிக் கொண்டு இந்த அணி பயணம் செய்கிறது..

ஈழத்தமிழர் சார்பில் ஐ.நா.விடம் இறுதிக்கட்டப் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை தேவை என முறையிட்டு நீதி கோருகின்றது. இதுதான் வழக்கு!

இந்த வழக்கின் பல்வேறு பிரச்சனைகளை இன்னும் இவ்வழக்கில் தமிழர் சார்பில் வாதிடும் அரசியல் வக்கீல்கள் முறைப்படுத்தி முரணற்ற வகையில் முன்வைக்கவில்லை. அவையாவன:

1) சிங்களம் நடத்திய குற்றப் போர், மனித உரிமை மீறலா? இனப்படுகொலையா? தமிழீழப் படுகொலையா?

2) போர்க்குற்றத்தை எங்கிருந்து தொடங்குவது? காலனியாதிக்க காலத்தில் இருந்தா? அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின்னாலா? அல்லது யுத்தத்தின் இறுதி ஆறு மாதங்களிலா?

3) 1972 ஏப்ரல் ஜே.வி.பி கிளர்ச்சியில் இந்திய-இலங்கை அரசுகளின் குற்றங்களை எவ்வாறு வகைப்படுத்துவது?

3) 1987 இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழருக்கு எதிராக இழைத்த  போர்க்குற்றங்களுக்கு என்ன கணக்கு? பிரேமதாசா அரசு சிங்களப் போராளிகள் மீது ஏவிய நரபலி வேட்டைக்கு என்ன கணக்கு எங்கே விசாரணை?
இவை இவ்விசாரணையில் அடங்குமா? இல்லையா? இல்லையென்றால் ஏன்?

4) ஈழதேசிய  இனப் படுகொலையின் பொறுப்பாளி இலங்கை அரசு மட்டுமா? அமெரிக்க இந்திய அரசுகளின் பாத்திரத்தின் மீது விசாரணை அவசியமா இல்லையா?

5) ஈழதேசிய இனப் படுகொலையை இலங்கை அரசு ``விடுதலைப் புலிப் பயங்கர வாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்த மனிதாபிமான நடவடிக்கை`` என்று கூறி வருகின்றது. தரகுத் தமிழணி நீதி கோரும்
அரசுகளும் மன்றங்களும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்து செய்த தடையை இன்னும் நீக்கவில்லை.இது குறித்து கருத்து என்ன?

6) தமிழீழ விடுதலைப்புலிகள் தேசிய சுதந்திர விடுதலைப் போராளிகளா? பயங்கரவாதிகளா? தரகுத் தமிழ் அணியின் நிலையென்ன?

7) போர்க்குற்றத்தில் இருந்து ஈழ தேசத்துக்கு நீதி என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு தண்டனையா? அல்லது தேசிய இனப் படுகொலையில் இருந்து தப்பித்து வாழ பிரிந்து செல்வதற்கான உத்தரவாதமா?

8) போர்க்குற்றம் இழைத்த அரசுத் தலைவர் மீது அவர் ஆட்சிக்காலத்தில் விசாரணை செய்ய இயலாது என்கிற சர்வதேச சட்ட சிறப்புச் சலுகை சரியானதா? அநுமதிக்கத்தக்கதா?

9) அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள நாடுகளில் அமெரிக்க அரச படையினர் இழைக்கும் குற்றங்களை அந்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் விசாரணை செய்ய முடியாது, என்கிற சுதந்திர தேவியின் நீதி சரியானதா?
அவ்வாறெனில், இலங்கைப் படைகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இயலாது என்கிற பக்ச தேவதையின் கேள்விக்குப் பதில் என்ன?

10) பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து,இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, அமெரிக்காவுக்கு ஒரு நிரந்தர இராணுவத்தளத்தை உருவாக்கியது முதல்,இன்று உலகெங்கும் நடக்கும் உலக மறுபங்கீட்டு அநீதி யுத்தங்களிலும்,ஆட்சிக்கவிழுப்புகளிலும் ஐ.நா.வின் பாத்திரம்,யுத்தத்தின் இறுதி நாட்களில் ஒரு கரம் கூப்பி தொழுத மக்களை சாட்சியம் இன்றி திட்டமிட்டு கைகழுவிட்ட ஐ.நா.சபை, ஒரு இலட்சத்து 44ஆயிரம் மக்களின் படுகொலைக்கு வழிசமைத்துக்கொடுத்த ஐ.நா.சபை, இன்னும் கொல்லப்பட்டவர்கள் ஆக நாற்பதினாயிரம் பேரென்றே,அதிகாரபூர்வமாக கூறிவருவது,நிரூபணமான போர்க்குற்றவாளிகளை இன்னும் தனது அதிகாரிகளாக பணியில் அமர்த்தியிருப்பது,ஹேக் நீதிமன்றம்  குறிப்பாக ஆபிரிக்க `முரட்டு அரசுகளின்` ஆட்சித்தலைவர்களையே குறிவைத்து உலக நீதி வழங்குவதாக உள்ள ஆதாரபூர்வ பலமான குற்றச்சாட்டு,இந்த கீர்த்திகளின் பின்னணியில்’ ஐ.நா.சபையை ஒரு சர்வதேசப் பிரச்சனையில் நடுவர் மன்றமாகக் கொள்ளமுடியுமா?

11) போர்க்குற்றம் உலகப் பொது நிகழ்வாகிவிட்ட சூழலில் பாதிக்கப்பட்ட  அனைத்து தேசங்களுடனும் ஒன்றுபட்டு தமிழர்கள் போராடுவதா?  அல்லது அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டணி
சேர்வதா? எது சரியான செயல் தந்திரம்?

12)  தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமை-பிரிவினைப் போரை நசுக்கிய இராணுவ வழிமுறையே இனப்படுகொலை. இனப்படுகொலைப் பிரச்சனையை, சுயநிர்ணய உரிமைப் பிரச்சனைக்கு மேலாக வைப்பது சரியா?
இது சந்தர்ப்பவாதம் ஆகாதா?

13) விசாரணையா? தண்டனையா?
No Fire Zone என்கிற முள்ளிவாய்க்கால் முற்றுகை, ஒரு வெகுஜனப் படுகொலை மூலம் புலிகள் இயக்கத்தைப் பூண்டோடு அழிக்கும் திட்டமே.ஆனந்தபுர விசவாயுத்தாக்குதல் நயவஞ்சகமான,கோழைத்தனமான முறையில் புலிகள் தலைமையை அழிக்கப் போடப்பட்ட திட்டமே.உயிர் பிழைத்த ஒவ்வோரு தமிழனுக்கும் இது இனப்படுகொலை என்பது தெரியும்.உலக அரங்கில் இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. நிரூபணமான குற்றத்தை எத்தனை தடவை விசாரிப்பது? அதுவும் குற்றவாளியே விசாரிப்பது? தண்டனை வழங்குவது யார்? எப்போது??

இவற்றில் எவற்றுக்கும் இந்த ஐந்து ஆண்டுகளில்   இந்தத் தரகுத் தமிழ் அணி தீர்வுகாணவில்லை.எல்லா மாறுபட்ட கருத்துக்களும்,அடிப்படையில் முரண்பட்ட நிலைப்பாடுகளும் அக்கம் பக்கமாக நடக்கின்றன.சமாதான
சக வாழ்வு நடத்துகின்றன!

வடக்கு மாகாணசபையும்,தமிழீழமும்;
மனித உரிமை மீறலும்,இனப்படுகொலையும்;
40 ஆயிரமும் ,ஒன்றரை இலட்சமும்;
பிரபாகரனும்,ஒபாமாவும் ஒரு சேரக் கை கோர்த்து களி நடனம் புரிகின்றன.

இதனால் இந்த தமிழ்த் தரகு அணியின் தலைமை ஏகாதிபத்திய தாசர்களாகவும், இந்திய விரிவாதிக்கப் பாசகர்களாகவும்,சந்தர்ப்பவாத,சமரசத் தலைமையாகவும் இருக்கின்றது.இதனால் இது ஏகாதிபத்திய வாதிகளால்
ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இந்தத்தலைமையில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி பெறவும் முடியாது, தொடரும் ஈழதேசிய அழிப்பை நிறுத்தி விடுதலை பெறவும் முடியாது.

இனப்படுகொலைக்கு நீதி கோரும் இயக்கம் ஈழத்தமிழர்களின் ஒரு ஜனநாயக இயக்கமாகும்.எந்த இயக்கத்தையும் போலவே இந்த இயக்கமும் ஒரு ஜனநாயகத்திட்டம் இல்லாமல் வெற்றி பெற முடியாது. இந்த
ஜனநாயகத்திட்டம், தமிழீழ விடுதலைக்கான ஜனநாயகத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் வாக்களித்த இலங்கைச் சுதந்திரத்தின் தத்துவார்த்த  அடிப்படைகளை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம்.ஈழதேசியப் பிரச்சனையில் ஜனநாயக நோக்கு நிலையை உருவாக்க இது மிக அவசியம்
ஆகும்.

இலங்கைச் சுதந்திரம் குறித்து:

பிரித்தானிய நேரடிக்காலனியாதிக்கத்தில் இருந்து இலங்கை அரைக்காலனிய அதிகாரக் கைமாற்றம் பெற்ற நிகழ்வு ஒரு காலகட்டத்தின் பொது நிகழ்வுப்போக்கை அநுசரித்து நடந்தேறிய ஒரு நாட்டு நிகழ்வாகும்.

அந்தக் கால கட்டம் என்ன? அந்த பொது நிகழ்வுப் போக்கு என்பது என்ன?

1) முதலாளித்துவ மிகை உற்பத்தியின் முதல் உலகப் பொது நெருக்கடி,சமாதான உலக மறுபங்கீடு முற்றுப்பெற்றுவிட்ட வேளையில் பலாத்காரச் சந்தைப் பறிப்புக்காக முதல் உலகப்போர் 1914 இல் வெடித்தது.

2) இந்தப்போர் இரு சந்தைப் பறிப்பு அணிகளுக்கு இடையில் மூண்ட போது, ``தாய் நாட்டைக் காப்போம்`` என்று கூறி ஒரு ஆதிக்க அணிக்கெதிராக மற்றொரு ஆதிக்க அணியை சாரும்  சந்தர்ப்பவாத செயல் தந்திரத்தை
திருத்தல் வாதிகள் முன் வைத்தனர். கம்யூனிஸ்டுக்களோ ``உலகப்போரை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம்`` என முழங்கினர்.

3)இதற்கமைய ரசியாவில் முதல் உலக சோசலிச புரட்சி வெற்றி பெற்று மனித குல வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பாட்டாளிவர்க்க சோசலிச அரசு நிறுவப்பட்டது.

4) 1914 உலகப்போர், 1917 ரசிய சோசலிசப்புரட்சி உலகின் இயக்கப்போக்கை முழுதாக மாற்றியது.

5) இதில் முதன்மையானது நேரடிக் காலனியாதிக்கத்தின் தகர்வாகும்.இந்த நிகழ்ச்சிப்போக்கின்,தொடர் விளைவுகளின், ஒரு பகுதியாகத்தான் இலங்கையும் நேரடிக் காலனியாக இருந்ததில் இருந்து அரைக்காலனியாக மாறியது.

6) எனினும் இந்த மாற்றம், தொடரும் அரைக்காலனிய அடிமைத்தனத்திற்கும்,ஆக்கிரமிப்புக்கும்,சேவகம் செய்யும் அணியை, ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மையில் இருந்தும் தான் தெரிவு செய்துகொண்டது.

7) பிரித்தானிய நேரடிக்காலனியாதிக்கத்தை எதிர்த்து  பூரண விடுதலைக்காக இலங்கை மக்கள் - குறிப்பாக சிங்கள மக்கள்- நடத்திய போராட்டத்துக்கு எதிராக அரைக்காலனிய அடிமைத்தனம் தொடர சமரசம் செய்து கொண்டவர்கள் எந்த சிங்களத் தலைவர்களும் அல்ல! தமிழ்த் தலைவர்களே ஆவர். நேரடிக்காலனியாதிக்கத்துக்கும் அரைக்காலனிய அதிகாரக் கைமாற்றத்துக்கும் இடைப்பட்ட காலத்தின் கதாநாயகர்கள் இராமநாதனர்களே ஆவர்.

ஆக 1947 சுதந்திரம் சிங்களவருக்கு கிடைத்தது என்கிற தமிழ்த் தரகு அணியின் வாதம்; தோல்வி வாதமும் வரலாற்று இருட்டடிப்பும்,நமது இளம் சந்ததியினரை முட்டாள்களாக்கும் முயற்சியுமுமாகும்.

இலங்கைச் சுதந்திரமும் தமிழீழ விடுதலையும்:

முதல் உலகப் போருக்கும்(1914), முதல் உலக சோசலிசப் புரட்சிக்கும்(1917) பிற்பட்ட ஏகாதிபத்திய ஒழிப்பு சோசலிச புரட்சி சகாப்த்தத்தின் தமிழீழ விடுதலைப்புரட்சி  பழைய  முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் வகைப்பட்டது அல்ல. இது புதிய ஜனநாயக தேசிய விடுதலைப் புரட்சியின் வகைப்பட்டதாகும்.

ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டணி சேர்ந்து சிங்கள அதிகாரத்தை தனிமைப் படுத்தி தமிழீழ பொம்மை அரசர்களாகி கோட்டை கொத்தளங்களோடு, கொடிகட்டி,  ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளும் கனவை துரதிஸ்ரவசமாக புறவய நிலைமைகள் அநுமதிக்காது.

மாறாக உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்ந்து  சிங்களத்தையும் அதற்கு முண்டு கொடுக்கும் ஏகாதிபத்தியவாதிகளையும் இந்திய விரிவாதிக்க அரசையும் எதிர்த்து தமிழீழப் பிரிவினைக்குப் போராடுவதே தமிழீழ விடுதலைக்கான ஒரே பாதையும் வழியும் ஆகும்.

இந்த விடுதலைப் பிரவாகத்தை உருவாக்கும் பிரச்சார இயக்கத்தில் பின்வரும் முழக்கங்களை கையேந்தி பங்கேற்குமாறு அறை கூவி அழைக்கின்றோம்.

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை தொடர்ந்து பாதுகாக்கும் ஏகாதிபத்திய ஐ.நா.அமைப்பின் துரோகத்தை எதிர்ப்போம்!

* தமிழ்த் தரகு அணியின் சமரச சந்தர்ப்வாத ஏகாதிபத்திய தாச ஐ.நா.நீதிப்பாதையை நிராகரிப்போம்!

* போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்போம்!

* புதிய ஈழம் அமைக்க புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!!

http://bcove.me/wvjlsx2c

பாகம் 2

நவீன காலனிய, உலக மறு பங்கீட்டு, அந்நிய மேலாதிக்கத்துக்கான அரசியல் ஆயுதமே `மனித உரிமை`.

ஐக்கிய நாடுகள் சபை தனது பணிகளை விரிவாக்க பல்வேறு கிளை அமைப்புக்களைக் கொண்டுள்ளது.இவற்றில் ஒன்று தான் மனித உரிமைக்
கவுன்சில்.இது வருடா வருடம் கூடி உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் எவ்வாறு பேணப்படுகின்றன, என்பதை ஆராய்ந்து, தனது
மனித உரிமைப் பிரகடனத்தின் அளவு கோலில்  மதிப்பீடு செய்து அந்நாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டு ஒரு
சடங்கு போல் செய்து வருகின்றது.இந்த மனித உரிமை முழக்கத்தை ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியும்
வருகின்றது.இதனால் ``மனித உரிமை`` என்கிற கருத்தாக்கம் இன்று ஒரு கவர்ச்சிச் சொல் ஆகிவிட்டது.இந்த கவர்ச்சி நடனம் பல்கிப் பெருகிய
அளவுக்கு  `மனித உரிமையைப்` பேணுவதில் உண்மையான  முன்னேற்றம் ஒரு துளியும் அடையப்படவில்லை.மாறாக மேலும் மேலும் மோசமடைந்தே
வருகின்றது.இந்த ஐ.நா. மனித உரிமைப் பிரகடனத்தை  மிக மோசமாக அசட்டை செய்யும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா ஆகும்.

இதற்குக் காரணம் அமெரிக்கா ஏதோ மனித உரிமையையை பேண விரும்பாத நாடு என்பதல்ல.அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடாக இருப்பதனால்,
அதன் உள்நாட்டு சமூக முரண்பாடுகள், அது சர்வதேச அளவில் கொண்டிருக்கும் முரண்பாடுகள்  மனித உரிமையை பேண இயலாததாய் ஆக்குகின்றன என்பதே உண்மையாகும்.

பொதுவாக மனித உரிமை என்று, சூக்குமமான மொழியில் அழைக்கப்படுவதை ஆழ்ந்து நோக்கினால் இது இரு அடிப்படைகளைக் கொண்டதாக அமையும்.

ஒன்று மனிதனை ஒரு -இனிமேலும் பிரிக்கமுடியாத- தனி அலகாக எடுத்து, அவன் ஒரு மனிதப் பிறவி என்ற வகையில் அவனுக்குள்ள அடிப்படையான
உரிமைகள் எனக் கொள்ளமுடியும்.மற்றையது, அவனை ஒரு சமூகப் பிராணியாகக் கொள்ளும் போது அவனுக்குள்ள சமூக ரீதியான உரிமைகள் ஆகும்.

இவை பிரதானமாக தேசிய, ஜனநாயக, அரசியல் உரிமைகளாகும்.

தனிமனித உரிமை உத்தரவாதப் படுத்தப்படுகின்ற அளவுக்கு சமூகம், ஜனநாயகப்படுத்தப்படுகின்றது.சமூகம் ஜனநாயகப்படுத்தப்படுகின்ற அளவுக்கு தனிமனித உரிமை உத்தரவாதப் படுத்தப்படுகின்றது.இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட

முடியாதவை.ஆனால் எவ்வாறு சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டாக வேண்டுமோ,அவ்வாறே தனிமனிதனும் சமுதாயத்துக்கு கட்டுப்பட்டவன், கீழ்ப்பட்டவன்.தனிமனித நலனும் சமுதாய நலனுக்கு கீழ்ப்பட்டது.

தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த வர்க்க சமுதாயத்திலும், அரைக்காலனிய அடிமைத்தனத்தை எதிர்த்த புதிய ஜனநாயக சமுதாயத்திலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழுள்ள சோசலிச சமுதாயத்திலும், வர்க்கமற்ற கம்யூனிச

சமுதாயத்திலும், மனித உரிமை என்பது ஒரே மாதிரியாக இருக்க இயலாது. இருக்க முடியாது, இருக்காது.

வர்க்கப்பகமையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயங்கள் தவிர்க்க இயலாதவாறு தமது அங்கமாகக் கொண்டுள்ள சொத்து,கணம்,
குலம்,பால்,சாதி,சமயம்,இனம்,வயது,நிறம்,தேசம்,நாடு,கண்டம் எனப் பிளவுண்டு ஒடுக்குவோராகவும், ஒடுக்கப்படுவோராகவும்,
அடக்குவோராகவும்,அடக்கப்படுவோராகவும் அணிதிரண்டு மோதிக்கொண்டிருக்கும் சூழலில் இருதரப்புக்கும் பொதுவான மனித உரிமை
என்று ஒன்று இருக்க முடியாது.

இதனால்தான் மேற்குலகமும், ஐ.நா.சபையும்,இவர்களுக்கு தொண்டூழியம் புரியும் மனித உரிமை நிறுவனங்களும், NGO க்களும், சிவில்சொசைட்டிகளும், எவ்வளவு தான் வாய் கிழியக் கத்தினாலும் நடைமுறையில் அது சாத்தியமற்றதாக இருக்கின்றது. இந்த

சர்வதேச  மனித உரிமைப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட நாடுகள்,அவை கையொப்பமிட்ட இதர `பிரகடனங்களை எப்படிக் கிடப்பில் போட்டார்களோ, அவ்வாறே இந்த மனித உரிமையையும் கிடப்பில்போட்டுவிட்டார்கள்.இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளின்

பட்டியலைப் பார்த்தாலே போதும் மனித உரிமைக்கு என்ன மரியாதை இருக்கின்றது என்று!  சிறீலங்காவும் இதில் ஒரு நாடு!

ஒரு வேளை ஒரு வாதத்துக்காக அனைத்து மனித குலத்துக்கும் பொதுவான நலன்களின் அடிப்படையில் `பொதுவான மனித உரிமை` பற்றிப்
பேசுவதாக இருந்தால், பூமிப்பந்தைப் பராமரிப்பது அனைத்து மனிதர்களதும் உரிமையாகும்.உணவு, உடை,உறையுள்,கல்வி,சுகாதாரம் பெற்று வாழ்வது
அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமையாகும்.குழந்தைகள் தமதுகுழந்தைப் பருவத்தில் குழந்தைகளாக வாழ்வது,வளர்வது, அடிப்படை
உரிமையாகும்.ஆனால் இவற்றை இன்றைய சமுதாய முறைமையில் அடைய முடியுமா?

ஏகாதிபத்திய அபரிமித அராஜக உலகமயமாக்கல் உற்பத்தியின் கீழ் பூமி வெப்பமாவதைத் தவிர்க்க முடியுமா? அரைக்காலனிய அடிமைத்தனத்தின்
கீழ், `உணவு, உடை, உறையுள்` பெற முடியுமா? உழுபவனுக்கு நிலம் இல்லாமல் கோடான கோடி உழைக்கும் விவசாய வெகுஜனங்களை பசியிலும் பஞ்சத்திலும், பட்டினிச்சாவிலுமிருந்து மீட்க முடியுமா?அமெரிக்காவில் மருத்துவம் பெற முடியுமா? இந்தியாவில் 65%

மக்கள் அடிப்படை மருத்துவ வசதி பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள் என இதே ஐ.நா.சபையின் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.பிரித்தானியாவில் கல்வி பயில முடியுமா?பாதிரிகள் கைகளில் `குழந்தைகள் தமது குழந்தைப்பருவத்தில்

குழந்தைகளாக வாழ்ந்து, வளர்வது சாத்தியமா?
ஈழத்திலும்,ஈராக்கிலும்,பாலஸ்தீனத்திலும்,சிரியாவிலும், குழந்தைகள் இழந்த வாழ்வை மீளப்பெற்றுக் கொடுக்க இயலுமா?ஐ.நா வால் முடியுமா? சர்வதேசம் சமூகம் செய்யுமா?

ஏகாதிபத்தியத்தினதும் சோசலிசப் புரட்சியினதும், சகாப்த்தத்தில் ஏகாதிபத்தியத்துக்குமுடிவு கட்டாமல், இத்தகைய மனித உரிமைகளை உத்தரவாதம் செய்ய இயலும் என நம்புவது, குட்டி முதலாளிய மடைமைத்தனம், நம்ப வைப்பது ஏகாதிபத்திய ஏமாற்று.NGO பித்தலாட்டம்!

எனவே `மனித உரிமை`, என்பது அந்தச் சொல் உணர்த்தும் தூய பொருளை நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகளால் பிரயோகிக்கப் படுவதில்லை.மாறாக அவை வேறு இரு நோக்கங்களச் சாதிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.அவையாவன,

1) உலகில் உள்ள எல்லா முரண்பாடுகளையும், அவற்றின் விளைவான பிரச்சனைகளையும், `மனித உரிமை மீறல்` என்ற, பொது வடிவில் சித்தரிப்பதன் மூலம்,அந்தப் பிரச்சனைகளின் தார்ப்பரியத்தைக் குறைத்து,திரித்து, திசை திருப்புவது.

2) அடிமைப்படுத்த வேண்டியுள்ள நாடுகளை மட்டும் மனித உரிமையை அளவு கோலாக வைத்து `முரட்டு அரசுகள்` எனப்பிரகடனம் செய்து, ஆட்சிக்
கவிழ்ப்புகள், கலவரங்கள், யுத்தங்கள் மூலம் பொம்மை அரசுகளை உருவாக்குவது.வர்த்தக ஒப்பந்தத் திணிப்புகளும்,அரபு வசந்தங்களும், வர்ணப்புரட்சிகளும்,இந்த மனித உரிமை முகமூடி தரித்து நடத்தப் -பட்டவையே ஆகும்.

`மனித உரிமை` என்ற ஒன்று யதார்த்த உலகத்தில் உயிர்ப்புடன் வாழுகின்றதென்றால், அது மேற்கண்ட இந்த இரண்டு நடவடிக்கைகளிலுமே வாழ்கின்றது.வேறெங்கும் வாழவுமில்லை, வாழவும் முடியாது.ஏனெனில் அவையெதுவும் ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமல்ல.ஏகாதிபத்திய முறைமையின் கீழ் சாத்தியமுமல்ல.

 இந்த அடிப்படையில் தான் இலங்கையிலும் மனித உரிமை மீறல் குறித்து பேசப்படுகின்றது.

1) தேசிய இன ஒடுக்குமுறையையும், இனப்படுகொலையும் மனித உரிமை மீறல்களாக திரிபுபடுத்தி சித்தரிக்கப்படுகின்றது.

இதன் மூலம் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட, ஏகாதிபத்தியச் சுரண்டலின் உறிஞ்சுகுழலாக, இருக்கும் அரைக்காலனிய அரசுமுறை (சிங்களம்), பாதுகாக்கப்படுகின்றது.

2) உலக மறு பங்கீட்டுச் சந்தைப் போட்டியில் ரசிய, சீன அணியினதும்; அமெரிக்க ,ஐரோப்பிய, இந்திய அணியினதும் போட்டிக்களமாக இலங்கை மாறியுள்ளது.

இதில் இலங்கையைத் தட்டி அடக்கிப் பணிய வைக்க அமெரிக்கா இந்த மனித உரிமை ஆயுதத்தை ஏந்துகின்றது.இந்த அடிப்படையில் தான் இந்தியா திருத்தங்கள் செய்து தனது மேலாதிக்க நலனை உறுதி செய்துள்ளது.

இந்த இரு அடிப்படைகளும் ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டவையல்ல. இந்த அடிப்படைகள் மீதமைந்த அந்நியத் தலையீட்டால் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி பெற முடியாது.இன ஒடுக்குமுறையில் இருந்து தற்காக்க முடியாது. சிங்களத்தின்

தமிழீழ தேசிய ஆக்கிரமிப்பையும், அழிப்பையும் தடுத்த நிறுத்த முடியாது.

இதனால்த்தான் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்குப் பிந்திய கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தரகுத் தமிழ் அணியால், தமிழீழத்தின் வாழ்விற்கு எந்த
பாதுகாப்பையும், எவரைக் கொண்டும் உருவாக்க முடியவில்லை.

வருடா வருடம்,தரகுத் தமிழ் அணியின் ` நீதி கோரும்` இயக்கம் அதன் தலைமையை அம்பலப்படுத்தி வருகின்றது.

`சர்வதேச சமூக நிர்ப்பந்தம், இந்திய ஆதரவு, ஐ.நா.அங்கீகாரம், ஒற்றையாட்சி சிங்களத்தில் மாகாண நிர்வாக  `ஆட்சி`  ` என்கிற ஏகாதிபத்திய திட்டத்தில்
இனப்படுகொலைச் சிங்களத்திடமிருந்து, பிரிந்து செல்ல தமிழீழம் நடத்தும் இரத்தம் சிந்தாத போரை சீரழித்து, சிதைக்கும்  தரகுத் தமிழ் அணியின் சமரசப் பாத்திரத்தை மக்கள் மென் மேலும் உணர்ந்து வருகின்றார்கள்.

இந்த எதிர்ப்புரட்சி அந்நியத்தலையீட்டு முயற்சி `மனித உரிமை` முகமூடி தரித்து நிற்பதையும் மக்கள் அறிவார்கள்.

இந்த `மார்ச் மாத விடாய்` அடுத்த ஆண்டு வருகின்றபோது மக்கள் இவர்களுக்கு நல்ல சூடு போடும் பொருட்டு, புதிய ஜனநாயக- தமிழீழப் பிரிவினைப் பிரசார இயக்கத்தை முன்னெடுக்க பின்வரும் முழக்கங்கள் மீது அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

* நவீன காலனிய, உலக மறு பங்கீட்டு, அந்நிய மேலாதிக்கத்துக்கான அரசியல் ஆயுதமே மனித உரிமை.

* தேசிய இன விடுதலைக்கான ஜனநாயக முழக்கம் பிரிந்து செல்லும் உரிமையே!

* சிங்களமும், இந்திய விரிவாதிக்க அரசும், சர்வதேச சமூகமும்,ஐ.நா சபையும் இணைந்து நடத்திய பிரளயமே ஈழதேசிய இனப்படுகொலை!

*தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தனித்தமிழீழமே!

*இனப்படுகொலைப் போர்க்குற்றத்துக்கு தண்டனை அளிக்கவும், ஈழப்பிரிவினைக்கு பொதுவாக்கெடுப்புக் கோரியும்,உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

பாகம் 3

இந்திய அமெரிக்க ஐ.நா.தீர்மானம் (மார்ச் 2014), தமிழீழத்துக்கு எதிரான தீர்மானமே!

வரவேண்டும்,வரவேண்டும்! வரும்,வரும்! வர வைப்போம், வர வைப்போம்! வந்து கொண்டிருக்கின்றது,வந்து கொண்டிருக்கின்றது! என்று
தமிழ்த் தரகு அணி குடு குடுப்பை ஆட்டி வந்த இந்திய அமெரிக்க ஐ.நா.தீர்மானம் (மார்ச் 2014) இறுதியாக வந்தே விட்டது! ஆனால் வந்ததோ
மின்சாரக் கதிரை அல்ல, ராஜ பக்சவுக்கு சிம்மாசனம், ஈழத் தமிழ்த் தரகர் மூவர் குழுவுக்கு அரியாசனம்! இதனால் தமிழ் மக்களுக்கு என்ன விமோசனம்?

``மீண்டும் கவனயீனமாக  இருந்த வேளையில் தமிழ் மக்கள் கற்பழிக்கப்பட்டு விட்டார்கள்``! உலகம் மன்னிக்காத இந்த கவனயீனத்துக்கு
தமிழ்மக்கள் மீண்டும் ஆட்பட்டது ஏன்?

ஈழ தேசிய இனப்படுகொலையும் ஐ.நா.சபையும்

1) சிங்களம் ஐ.நா.வை வெளியேறக் கோரிய நாள் வரை(2009 ஜனவரி ) ஐ.நா.சபை ஊழியர்கள் களத்தில் இருந்தனர். ஏப்பிரல் 14 2009 வரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் முள்ளிவாய்க்காலில் இருந்தனர்.இவர்களுக்கு இனப்படுகொலை நடந்தேறிக் கொண்டிருப்பது நன்கு தெரியும்.எத்தகைய அட்டூழியத்தைப் புரிந்தும் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிப்பது என்ற இந்தியாவினதும்,அமெரிக்காவினதும்,இங்கிலாந்தினதும் சிங்களத்தினதும் முடிவின் ஒரு அம்சமாகத்தான்,அதனோடு இணங்கித்தான் ஐ,நா.வும், செஞ்சிலுவைச் சங்கமும் போர்ச் சூழலில் இருந்து வெளியேறியது.இதன் மூலம் இனப்படுகொலை அரங்கேறத் துணை புரிந்தனர்.
( சனல் 4 ஆவணத்தில் ஐ.நா.ஊழியர் இதனைக் கூறியுள்ளார்)

2) எஞ்சி உயிர் பிழைத்து முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப் பிடிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற பாங்கி மூன் அங்கு 5 நிமிடம் கூடச்
செலவிடாது ஒரு நாடகம் ஆடினார்.( தமிழ்வாணி* தன் வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறியுள்ளார் * திருத்தம்)

3) நேரடியாக போர்க்களத்தில் இராணுவ சீருடையுடன் இனப்படுகொலையை நிறைவேற்றிய சிங்கள இராணுவ அதிகாரியை ஐ.நா.இலங்கைத்
தூதுவராக ஏற்றுக்கொண்டது.

இப்போதெல்லாம் ஐ,நா.சபைக்கு மனித உரிமை ஒரு பொருட்டாக இருக்கவில்லை.அதைக்காக்க தான் போராட வேண்டும் என்றும் தோன்றவில்லை.

இந்தப்போக்கு அம்பலப் படுத்தப்பட்டு ஐ.நா.வுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதுதான் `மனித உரிமை` ஐ.நா.வின் கண்களில் தென்பட்டது.

பாங்கி மூன் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பினார் அது ஒரு அறிக்கை சமர்ப்பித்தது.

ஈழதேசிய இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என மாற்று வடிவம் கொடுக்கப்பட்டு ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சிலின் பிரச்சனையானது.

குறிப்பாக அதன் தலைவர் நவிப்பிள்ளையின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது.இவரது தனிப்பட்ட ஈடுபாடும் ஒரு பாத்திரத்தைச் செலுத்தியது.

சனல்4 இன் சிறிலங்கா கொலைக்களம் ஆவணத்திரைப்படம் வெளிவந்தது. டப்ளின் மக்கள் தீர்ப்பாணயத்தின் தீர்ப்பு வெளியானது.

குமுறிக்,கொதித்த மக்களின் உணர்வுக்கு வடிகால் அமைக்க ` போர்க்குற்ற விசாரணை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி` என தமிழ்த் தரகு அணி ஐ.நா.விடம் நீதி கோரும் இயக்கத்தை  முடுக்கிவிட்டது.

2012  மார்ச்சில்  ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாராம்சம்: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை ஒரு சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரியது.

சிங்களம்: நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டதுடன் வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தது.

2013 மார்ச்சில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாராம்சம்: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுதாக அமுல்படுத்தவும் வடக்குத்தேர்தலை முறையாக நடத்தவும் கோரப்பட்டது

சிங்களம்: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுதாக அமுல்படுத்த அவகாசம் தேவையென்று கோரியவாறு, வடக்குத்தேர்தலை நடத்தி,
காணாமல் போனோர் கணக்கெடுப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்தது.

2014 மார்ச்சில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக தனிப்பட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் கடப்பாட்டின் பேரில் நவிப்பிள்ளை நிலைமையைப் பார்வையிட இலங்கை சென்றார்.யாழ்ப்பாணம் செல்ல அநுமதிக்கப்படவில்லை.வன்னிப்பகுதியில் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.அதன் பின்னர் ஒரு விரிவான அறிக்கையும் சமர்ப்பித்தார்.

சாராம்சம்: மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகள் முற்றிலும் தோல்விகண்டுள்ளன,மேலும் மனித உரிமை மீறல்கள் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளன, இதனால் சர்வதேச விசாரணை இரு தரப்பினர் மீதும் அவசியம்.

2014 மார்ச்சில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாராம்சம்:
1) ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை தண்டிக்கும் பொறுப்பு அரசுக்குரியது.
2)  இலங்கை அரசு அதைச் செய்யத்தவறியுள்ளது.
3) மேலும் இன்றுவரை மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன.
4) இதனால் ஐ.நா.தலைமையிலான ஒரு வெளி விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இந்த விசாரணைக் கால எல்லை 2002-2009 அடங்கிய ஏழாண்டுகாலப் பகுதி மட்டுமேயாகும். இதற்காக மேலும் ஓராண்டுக்கு விசாரணைக்காலம் நீடிக்கப்படுகிறது.
5) இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினரின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்.
6) வடக்கு மாகாண சபைக்கு 13ம் திருத்தச் சட்டத்துக்கு அமைய ``அதிகாரங்கள்`` வழங்கப்படவேண்டும்.
7) இலங்கையின் ஒற்றையாட்சி முறை உறுதிசெய்யப்பட வேண்டும்.
8) நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் NGO , Civil Society களின் பங்கு பாத்திரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
9) வடக்கில் இராணுவ நீக்க கோரிக்கை இத்தீர்மானத்தில் நீக்கப்பட்டது.
10) இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

சிங்களம்: எந்தக் காரணம் கொண்டும் ஐ.நா.தீர்மானத்தை ஏற்கமாட்டோம்.தனித்து நின்று போராடுவோம்!

மூன்று தீர்மானங்களின் சாராம்சம்:

1) இலங்கையில் தமிழீழ தேசத்தின்  இருப்பை இல்லாதொழிப்பது.
2) சிங்களத்தின் இருப்பை உத்தரவாதம் செய்வது.
3) சிங்கள அரசாங்கத்தைப் பணிய வைக்க ஈழதேசிய இனப்படுகொலையை, மனித உரிமை மீறலாகச் சித்தரித்து அழுத்தம் பிரயோகிப்பது.
4) இந்த நல்லிணக்கத்துக்கான முயற்சிகளில் NGO , Civil Society களின் பங்கு பாத்திரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி ,அந்நிய அரசியல் மேலாதிக்கத்துக்கு அங்கீகாரம் அளிப்பது.

ஆக தமிழீழ தேசம் மீது சிங்களத்தின் ஆக்கிரமிப்பையும், ஒட்டுமொத்த இலங்கையின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தையும்  உறுதி செய்வதே இந்த தீர்மானங்களின் மற்றும் ஐ.நா.பாதையின் இறுதிக் குறிக்கோளாகும்.

இதைத்தான் தமிழ்த் தரகு அணியின் முப்பிரிவினரும் ஒன்றிணைந்து `இனப்படுகொலைக்கு நீதி` என்ற பெயர்ப்பலகையின் பின்னால் செயல்படுத்தி வருகின்றனர்.

இம்முப்பிரிவு தமிழ்த் தரகு அணியும் தமிழீழ விடுதலைப் புரட்சியின் அபாயகரமான எதிரிகள் ஆவர்.

பாகம் 3
ஈழத் தரகு அணியும் சர்வதேசப் படிப்பினைகளும்.

பாலஸ்தீனம்.

பாலஸ்தீன நாட்டில் பாலஸ்தீன மக்களை தன் தாய் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேல் என்கிற ஒரு ஆக்கிரமிப்பு நாடு அமெரிக்காவின் இராணுவக் கொத்தளமாக அரபு உலகத்தில் நிறுவப்பட்டது.  இவ்வாறு கட்டாய ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்கிற அமெரிக்க இராணுவக் கொத்தளத்தை இறைமையுள்ள நாடாக ஜநா சபை அங்கீகரித்தது(1947). அமெரிக்கா பொருளாதார இராணுவ உதவியாலும் சர்வதேச அரங்கில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அட்டூழியங்களை நியாயம் செய்தும்,அரபு உலகத்தின் மத்தியில் தனது உலக மேலாதிக்கத்திற்கான இராணுவக் கொத்தளமாக கட்டிவளர்த்து. படிப்படியாக  அமெரிக்காவில் குடியேறிய யூதத் தலைமுறையினர் ஏகபோக பெரும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் செல்வாக்குமிக்க சமுக அரசியல் சக்திகள் ஆகினர். இவர்களின் நலன்களும் வெள்ளை மாளிகையின் நலன்களும் இஸ்ரேல் விவகாரத்தில் ஒரே கோட்டில் நகர்ந்தன. இதன் விளைவாக அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இந்த பினாமிகளின் தயவின்றி வாழ முடியாத சூழ்நிலை உருவாகியது.

இஸ்ரேல் என்கின்ற இராணுவக் கொத்தளம் அமைக்கப்பட்ட நாள்முதல் பாலஸ்தீனம் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்னமும்.  மீளக் குடியமர்த்தப்படவில்லை. பாலஸ்தீன தேசிய எல்லைகளை இஸ்ரேல் மதிப்பதே இல்லை. ஜநாவினால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தையும் இஸ்ரேல் மதித்து நடந்தது கிடையாது. இவை அனைத்தையும் அடாத்தாக மீறி ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வருகிறது.இஸ்ரேல் பெரும் சுவரெழுப்பி, பாலஸ்தீனத்தில் விளையும் பயிர் பச்சைகளுக்கு வரிவிதிப்பு செய்து அவர்களின் வாழ்வாதார பொருளாதாரத்தை காவுகொண்டு வருகிறது. தொடர்ந்து திட்டமிட்ட புதிய குடியேற்றங்களை உருவாக்கின்றது. இராணுவ ஊடுருவல்களாலும் யுத்தங்களாலும் தொடர்ந்து நில பறிப்பைத் தொடர்கிறது. இந்த ஒடுக்குமுறையின் வரலாற்று ரீதியான விளைவாக ஜெருசலேம் என்கிற புராதன பாலஸ்தீன நகரத்துக்கு இஸ்ரேல் சொந்தம் கொண்டாட பாலஸ்தீனர்களோ Gaza, West Bank, என்கிற  இரு துண்டுப் பிரதேசங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.



பாலஸ்தீன மக்களினதும் போராளிக் குழுக்களினதும் உறுதி தளராத  விடாப்பிடியான போராட்டத்தாலும், அரபு மக்களின் ஆதரவாலும் சதாம் கடாபி போன்ற மேற்குலக எதிர்ப்புணர்வு கொண்ட முதலாளித்துவ ஆளும் வர்க்க பிரிவினரின் ஆதரவாலும் உலகெங்கிலுமுள்ள மக்களினதும் தேசிய ஜனநாயக புரட்சிகர சக்திகளினதும் பேராதரவைப் பெற்றது.

மேலும் முக்கியமாக அரபுலகத்திலும் சர்வதேசமெங்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்கு உந்துசக்தியாக விளங்கியது.

இந்த வீரியத்தை முனைமழுங்கச் செய்யவும், சமரச வழியில் சீரழிக்கவும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பேச்சசுவார்த்தையை ஆரம்பித்தது அமெரிக்கா. ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் ஒலிவமரக் கிளையும் என இந்தச் சதி ஐ.நாவில் ஆரம்பித்தது. அதன் ஒரு கட்டத்தில் நோர்வே அநுசரனையில் ஒஸ்லோவில்  பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரையும் அப்பேச்சு வார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ’இரண்டு அரசுத் தீர்வு, ஜெருசலேம் பொது நகரம்’ என்ற போலி ஏமாற்று வாக்குறுதியின் கீழ் – பல்லாண்டுகளாகத் தொடரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை.  ஆனால் பலகாத தூரம் பின்தள்ளப்பட்டு பின்னடைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரபாத் அணி சீரழிந்து போய்விட்டது. அரபாத் படுகொலை செய்யப்பட்டு விட்டார். அபாஸ் ஏகாதிபத்திய இஸ்ரேலிய சர்வதேச சமூக கைக்கூலியாகி விட்டான். அபாஸ் அணி போராட்டத்தில் ஊன்றிநிற்கும் சக்திகளை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து தன் அதிகாரப் பரப்பில் அவர்களை வேட்டையாடிக் கொண்டு மறுபுறம் சமரச நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது.

ஆக ஒருபுறம் பேச்சுவார்த்தை நாடகம் ஆடிக்கொண்டும் மறுபுறம் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலை முழு அளவில் அரவணைத்து பாதுகாத்துக் கொண்டு, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திக் கொண்டு உண்மையான போராட்டச் சக்திகளை பயங்கரவாதிகள் என அறிவித்து அவர்களைப் படுகொலை செய்த வண்ணம் மறுபுறம் நடுநிலையாளனாகவும் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தனாகவும் அமெரிக்கா 1967முதல் 2014 வரயாக 47 ஆண்டுகள், அரை நூற்றாண்டு காலமாக (( UN Security Council Resolution 242, 1967, Camp David Accords, 1978, The Madrid Conference, 1991,Oslo Agreement, 1993, Camp David, 2000, Taba, 2001,Roadmap, 2003, Geneva Accord, 2003, Annapolis, 2007,Washington, 2010, John Kerry  Middle East peace deal 2014............) நாடகம் ஆடிவருகின்றது.



இந்தக் கபடநாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளிலும் பாலஸ்தீனம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.இந்த வரலாற்றில் ஈழத் தமிழன் தன்னை இஸ்ரேலுடன் அடையாளப்படுத்திடுத்தி யூதர்கள் என தம்மை உருவகித்து தலையால் நடக்கின்றான். ஆனால் அவன் யூதனல்ல, பாலஸ்தீனியன்!

அயர்லாந்து

அயர்லாந்து தேசத்தின் அடிமை வரலாறு 800 ஆண்டுகள் பழமையானதாகும்.
இந்த நீண்ட வரலாற்றின் ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் பிடியில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதே தமது விடுதலைக்கான ஒரே வழியென அயர்லாந்து மக்கள் தெரிந்து கொண்டனர். இந்த கருத்துப் போக்கின் அரசியல் மற்றும் இராணுவ மாக்கத்தின் அடிப்படையில் அயர்லாந்து குடியரசு இராணுவம் உருவானது.

கூடவே அயர்லாந்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஒரு அயர்லாந்து சமூகமும் உருவானது. இவர்களில் ஒரு தரப்பினர் பிரித்தானிய முதலாளித்துவ சீர்திருத்த தொழிற்கட்சியின் வரிவிதிப்புக்கு அஞ்சி தப்பியோடினோர் ஆவர்.அயர்லாந்து குடியரசு இராணுவத்தின் – அரசியல் அணியென அறியப்பட்ட பிரிவு இறுதியில் இங்கிலாந்து ஆளும் கும்பலோடு சமரசம் செய்து கொண்டு அயர்லாந்து பிரிவினை இயக்கத்தையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தது. இதற்குக் காரணமான பல்வேறு காரணிகளில் முக்கியமான புறவயக் காரணி அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் அயர்லாந்துச் சமூகமாகிய மேட்டுக் குடியினரே ஆவர்.

ஈராக் யுத்தத்திற்குச் சற்று முன்பாக Good Friday agreement மூலம் அயர்லாந்துப் போராட்டம் சமரசப் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது, தற்செயலானதல்ல. உலக மறுபங்கீட்டு யுத்தத்தில் அமெரிக்காவுடன்  தோளோடு தோள் நின்று இங்கிலாந்து ஆளும் கும்பல் முழுத்திறனோடு பணியாற்ற வேண்டுமானால் உள்நாட்டில் அமைதி நிலவ வேண்டும்.

இதற்கு உறுதுணையானவர்கள் தான் அமெரிக்க, புலம்பெயர் அயர்லாந்து மேட்டுக்குடியினர்.!

அமெரிக்க, இங்கிலாந்து, அயர்லாந்து ஆளும் கும்பல்களின் இக்கூட்டுத் திட்டத்தால் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டு பின்தள்ளப்பட்டது. ஆனால் அது ஓயவில்லை. 800 ஆண்டுகளைத் தாண்டியும் மீண்டும் எரிந்து கொண்டே இருக்கிறது.

ஆட்சிக் கவிழ்ப்பு அரசாங்கங்கள்


அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு பொம்மைக் காலனி அரசுகளை உருவாக்கும் திட்டத்தில் அரியணை ஏறியவர்கள் – மிக முக்கியமாக அவர்களின் தலைமை அணிகள், அந்நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்த தரகர்களே ஆவர்.

பாலஸ்தீனமும் அயர்லாந்தும் ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு உள்ளான மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் ஏகாதிபத்திய மேற்குலகச் சக்திகளோடு கூட்டமைத்துக் கொண்ட இந்தத் தரகு அணியால் அந்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

இந்தத் தரகு அணியும், தமிழ்த்தரகு அணியும் ஏகாதிபத்திய விசுவாசமென்கிற கர்ப்பப் பையில் பிறந்த ஏகாதிபத்தியதாச குழந்தைகளேயாகும்.
இந்தத் தரகு அணி முன்மொழியும் `ஐ,நா,நீதி,மற்றும் அமைதி நல்லிணக்க தென்னாபிரிக்க பாதை` என்பது  ` இழுத்தடித்து ஈழத் திரு நாட்டை எதிரிக்குப் பறி கொடுக்கும் திட்டமேயாகும்.

இதனால் இவர்கள் தமிழீழ விடுதலையின் சமரசவாத எதிரிகளேயாவர்.

அமைதியும் நல்லிணக்கமும்

இந்த ’அமைதியும் நல்லிணக்கமும்’ என்பது ஒரு ஏகாதிபத்திய சமரசத் திட்டமாகும்.  தேசிய ஜனநாயக புரசிகர இயக்கங்கள் நசுக்கப்பட்டதற்குப் பின்னால் அல்லது திசைதிருப்பப்பட்டதற்குப் பின்னால்  அல்லது வன்முறைக் கலவரங்கள் கொண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்கள் அரங்கேற்றப்பட்டு விட்டதற்குப் பின்னாலான சூழ்நிலையில் அடுத்த கட்டத்துக்காக அதனது வராற்றுச் சக்கரத்தை பின்நோக்கி இழுத்துச் செல்லும் சமரசத் திட்டமாகும்.

இதில் அமைதி அல்லது சமாதானம் என்பது போராட்டமற்ற சூழலைக் கோருகின்றது. நல்லிணக்கம் என்பது பகைமையான சமூக முரண்பாடுகளை சமரசபடுத்த முயல்கிறது. ஆக சமூக முரண்பாடுகள் சமரசப்படுத்தப்பட்டும் மக்கள் போர்குணம் இழந்தும், போராடமறுத்தும் உள்ள ஒரு மயான தேசத்தால் யாருக்கு நன்மை? என்ன நன்மை?

உள்நாட்டில் சமூகக் கொந்தளிப்பு அரசதிகாரத்தை தகர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அரசு இஸ்திரனமானதாக இருக்கும். அரசு ஸ்திரமானதாக இருந்தால் அந்நிய முதலீடுகளுக்குப் பாதுகாப்பு இருக்கும் அரைகாலனி நாடுகளில் முதலீடு என்பது அந்நிய மூலதனமே ஆகும். நமது பேராசிரியர்கள் சொல்லும் பெருமூலதனம் என்பது அந்நிய மூலதனம் மற்றும்,அதனுடன் அணி சேர்ந்த  தரகுமூலதனமேயாகும் . எனவே இத்தகைய ஒரு மயான பூமி, ``அமைதிப் பூங்கா`` அந்நிய நிதிமூலதனச் சுரண்டலுக்கு உகந்தது மட்டுமல்ல அவசியமானதுமாகும்.இதனால் ஆதாயம் அடையும் வர்க்கம் உள்நாட்டுத் தரகு ஆளும் கும்பல்களாவர். அவர்களுக்கு நாட்டை ஒருபுறம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு விற்றும், மறுபுறம் தாங்கள் சூறையாடிப் பிழைப்பதற்கும் இது அவசியமாகின்றது.ஆக ஏகாதிபத்திய உள்நாட்டு தரகு ஆளும் கும்பல்களின் நலங்களுக்காகவே இந்த அமைதியும் நல்லிணக்கம் என்கிற முழக்கம் சேவகம் செய்கிறது.

ஆனால் உள்நாட்டு ஆளும் கும்பலகள் அடிமைத் தரகர்களாக உள்ளவரையும்தான், அவ்வாறு உள்ளநாடுகளுக்கு மட்டும்தான் இந்த அணுகுமுறை இருக்கும். அவ்வாறு இல்லையென்றால் இந்த `அமைதியும் நல்லிணக்கமும்` என்ற செயல் தந்திரம்,  `கலகமும் காட்டுப் பகைமையும்` என்ற செயல் தந்திரத்தால் மாற்றீடு செய்யப்பட்டுவிடும்.

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எந்த நலன்களுக்காக இலங்கையில் அமைதியும் நல்லிணக்கமும் என்ற பாணம் ஏவப்படுகிறதோ அதே நலன்களுக்காக உக்ரேனில் கலகமும் காட்டுப் பகைமையும் என்கிற பாணம் ஏவப்படுகிறது. ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேற்றப்படுகிறது.

மூன்று பாகம் தொகுப்புரை

மேற்கண்ட 3 பாகங்களில்,

முதலாவது பாகம் தமிழ் தரகு அணியின் பாதையை விளக்கியது.
இரண்டாம் பாகம் இந்திய அமெரிக்க தீர்மானத்திலுள்ள நோக்கங்களை அம்பலமாக்கியது.
மூன்றாம் பாகம் பாலஸ்தீன அயர்லாந்து  தற்காலத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கள் நடத்தப்பட்ட நாடுகளில் புலம் பெயர் தரகு அணிகள் ஆற்றிய பாத்திரத்திற்கும் தமிழ்த் தரகு அணி ஆற்றும் பாத்திரத்திற்கும் உள்ள பொது தொடர்பைக் காட்டியது.










இந்த ஆய்வின் முடிவுகளை பின்வருமாறு  சுருக்கி வரையறுக்கலாம்.


1) நிலத்தில் தமிழ்த்தரகு அணி பக்க்ஷபாசிஸ்டுகளின் கைக்கூலி யாகவுள்ளது.
2) புலத்துத் தமிழ்த்தரகு அணி ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைந்துள்ளது.
3) தமிழகத்தின் தரகுத் தமிழ் அணி இந்திய விரிவாதிக்கத்தின் அடிமைத் தமிழ்த் தொண்டனாக இருந்து, ஈழதேசிய இனப்படுகொலைக்கு துணையும் தூணுமாய் நின்று துரோகத் தொண்டாற்றியுள்ளது. 
இதனால் இவர்களது பாதை அதிகாரப் பரவலாக்கம். ஐநா மூலம் நீதி என்கிற சமரச எதிர்ப்புரட்சிப் பாதையாக உள்ளது.
பாகம் 4 
புதிய ஈழத்துக்கான புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதை

தமிழீழ விடுதலைப் புரட்சி இலங்கையில் இன சமத்துவத்திற்கான ஜனநாயகப் புரட்சியாகும். இதன் மூலம் இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களத்தை தகர்க்கும் புரட்சியாகும்,
ஏகாதிபத்தியத்தினதும், சோசலிசத்துக்குமான இன்றைய சகாப்தத்தில் இப்புரட்சி பழைய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியாக அமையாது. இதுபுதிய ஜனநாயக புரட்சியாகும். இதன் அரசியல் குறிக்கோள் ஏகாதிபத்தியத்தினதும், இந்திய விரிவாதிக்கத்தினதும்,சிங்களத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து தமிழீழத்தை விடுவித்து தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைப்பதாகும். இந்த அரசு பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசாக இருக்காது. மாறாக ஜனநாயக வர்க்கங்களின் கூட்டுச் சர்வாதிகார அரசாக இருக்கும்.
இப்புரட்சியின் தலைமை வர்க்கம் பாடாளிவர்க்கமாகும். தலைமை ஸ்தாபனம் கொமம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைமைச் சித்தாந்தம் மார்க்சிய லெனினிய மாஓ சேதுங் சிந்தனை ஆகும்.இதன் இராணுவ மார்க்கம் மக்கள் யுத்தப் பாதையாகும்.

நிலப்பறிப்பு, படைக்கலைப்பு , சமூகப்பாதுகாப்பு, யுத்த நிவாரணம், ஆகிய உடனடி கடமைகளுக்காவும் ஈழப் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப் படுகொலை போர்க்குற்றவாளிக்களுக்குத் தண்டனை தேசிய ஜனநாயக பொருளாதரப் பணிகளை நிறைவேற்றும் குறிப்பான திட்டத்தை அமுலாக்கப் போராடும் பாதையில், சர்வதேச பிராந்திய சூழல்பற்றிய ஸ்தூலமான மதிப்பீட்டில் இருந்தும், இலங்கையின் சமூகப் பொருளாதர படிவம் குறித்த பருண்மையான ஆய்விலிருந்தும் கட்சித் திட்டமொன்றை வகுத்து ஒரு புரட்சிகர போல்சுவிக் கட்சி ஸ்தாபனத்தை- கருக்குழுவைக்- கட்டியெழுப்புவது  புதிய ஈழப்புரட்சியாளர் முன்னுள்ள இன்றைய முதன்மையான மிகப் பிரதானமான பணியாகும். இதை நோக்கி முன்னேற பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் நடைமுறைப்பணியில் அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.

இழுத்தடிப்புக்கும் ஈழப்பறிப்புக்கும் வழியமைக்கும் ஐ.நா பாதையை முறியடிப்போம்.

ஈழதேசிய இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவோம்.

புதிய ஈழ அரசமைக்க புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

முள்ளிவாய்க்கால் வீர காவிய ஐந்தாம் ஆண்டு நிறைவில் இறுதி வெற்றி ஈழமக்களுக்கே என உரத்து முழங்குவோம்!

மே நாளை வாழ்த்தி, உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்
தமிழீழம்                                                                                                                                                                               மே1-18