Friday, 14 August 2015

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப் பாதை!

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!


அன்பார்ந்த தமிழீழ மக்களே,புலம்பெயர் உழைக்கும் மக்களே, புலிப் போர்க்கால தேசியப் போராளிகளே,மாணவர்களே, இளைஞர்களே,புதிய தலைமுறைச் சிறுவர்களே,உதிரித் தேசிய ஜனநாயகவாதிகளே புரட்சிகர வணக்கம்!

மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே செவ்வணக்கம் தங்கள் தாழ் பணிந்து;

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி ஒற்றையாட்சி சிங்களப் பாசிசப் பாராளுமன்றத்துக்கு, நாட்டை ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளையும்,அவர்களது கட்சிகளையும்,அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இடம் பெறப் போகின்றது!

இத்தேர்தல் குறித்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தந்திரம் என்ன?

ஒரு புரட்சிகர இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்படும் குறிப்பான திருப்பங்கள் அக்காலப் பகுதியை புரட்சியின் திசையில் நிலை நிறுத்தி போராட்டத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு,  குறிப்பான செயல் தந்திரங்களைக் கோருகின்றன.ஆனால் இக் குறிப்பான செயல் தந்திர திசை வழிகள் யுத்த தந்திர கோட்பாடுகளின் வழி நடத்துதலில் இருந்து வரையறை செய்யப்படவேண்டுமென மார்க்சியம் கட்டளை இடுகின்றது.

எந்தக் குறிப்பான திருப்பத்தில் இத் தேர்தல், அரசியல் அரங்கேறியுள்ளது?

1) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு,ஈழ தேசம் நிராயுதபாணியாக்கப்பட்ட சூழ்நிலையில்;
2) போர்க்குற்றவாளி ராஜபக்ச அரசு உலக மறு பங்கீட்டில் சீன சார்பு வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்த சூழ்நிலையில்;
3) இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பக்ச பாசிஸ்டுக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அரசதிகாரம் இழந்த நிலையில்;

இப்பொதுத்தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி 2015 இல் நிகழவிருக்கின்றது.

மேலும் வழமைக்கு மாறாக இம்முறை நான்கு பிரிவுகள் தமிழ் பேசும் மக்களிடையே வாக்கு வேட்டையாடக் கிழம்பியுள்ளன.

இந்நிலைமையில் தான் இத்தேர்தல் குறித்து என்ன செயல்தந்திர முடிவை எடுப்பது என்கின்ற கேள்வி எழுகின்றது. இதற்கு பதில்காணுவதற்கு நமது யுத்த தந்திரம் தரும் போதனைகள் என்ன?

யுத்த தந்திர கோட்பாட்டு நிலைகள்

1) நாம் வாழும் இன்றைய சமூக வரலாற்றுக் கால கட்டம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச,புதிய ஜனநாயக, விவசாய- தேசிய இன விடுதலைப் புரட்சிகளின் சகாப்தமாகும்.
2) இக்காலகட்டத்தில் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறை வரலாற்று வழியிலும், நடைமுறை வழியிலும் காலாவதி ஆகிவிட்டது.
3) சோசலிச, மக்கள் ஜனநாயக சோவியத் ஆட்சிமுறை அரங்கேறி விட்டது.
4) எந்த ஒரு நாட்டினதும் - தேசத்தினதும், விடுதலைப் புரட்சியும்,உலக சோசலிச மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகிவிட்டது.
5) இப்புரட்சிகளின் மக்கள் யுத்தப் பாதைக்கு தேர்தல் பாதை என்பது நேர் எதிர் முரணானதாகும்.

இவைதான் செயல் தந்திர வழியை வரையறை செய்வதற்கான யுத்ததந்திர கோட்பாட்டு வழிகாட்டுதலாகும்.

இலங்கை அரசும், இலங்கைப் பாராளுமன்றமும்,இரு பெரும் கட்சிகளும்,அரசாங்களும்!

1) இலங்கை அரசு
இலங்கை நாட்டின் அரசு முறை இன ஒடுக்கு முறையின் மீது கட்டப்பட்டதாகும்.
2) இலங்கைப் பாராளுமன்றம் 
இரு பெரும், தமிழ்த் தேச அழிப்பை தமது நிரந்தர யுத்ததந்திரத் திட்ட மாகக் கொண்ட கட்சிகளின் கொலைக்கூடமாகும்.
3) இரு பெரும் கட்சிகள்
இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்களப் பேரின வெறியர்களும்,பெளத்த மத வெறியர்களும் மட்டுமல்ல, இதற்கும் மேலாக, விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களின் இரு அணிகளும் ஆகும்.
4) அரசாங்கம்
இவ்விரு கட்சிகளில் ஒன்று தனித்தோஅல்லது கூட்டமைத்தோ அமைப்பதாகும்.

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(யுத்த தந்திர நோக்கு நிலையில்)

நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச,புதிய ஜனநாயக, விவசாய- தேசிய இன விடுதலைப் புரட்சிகளின் சகாப்தத்தில் வாழ்வதாலும்,இக்காலகட்டத்தில் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறை வரலாற்று வழியிலும், நடைமுறை வழியிலும் காலாவதி ஆகிவிட்டதாலும்,சோசலிச, மக்கள் ஜனநாயக சோவியத் ஆட்சிமுறை அரங்கேறி விட்டதாலும், எந்த ஒரு நாட்டினதும் - தேசத்தினதும், விடுதலைப் புரட்சியும்,உலக சோசலிச மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகி, இப்புரட்சிகளின் மக்கள் யுத்தப் பாதைக்கு தேர்தல் பாதை என்பது நேர் எதிர் முரணானதாக ,எதிர்ப்புரட்சிகரமானதாக, பிற்போக்கானதாக,வரலாற்றுச் சக்கரத்தை பினோக்கி இழுப்பதாக மாறி விட்டதாலும், தேர்தல் பாதை குறித்த எமது யுத்த தந்திர நிலைப்பாடு புறக்கணிப்புப் பாதை ஆகும்.இக் கோட்பாட்டு அடிப்படைகளில் இருந்து,

யுத்த தந்திர நோக்கு நிலையில் தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப் பாதை எனப்பிரகடனம் செய்கின்றோம்.


தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(செயல் தந்திர நோக்கு நிலையில்)

இலங்கை நாட்டின் அரசுமுறை ஒற்றை ஆட்சி அமைப்பில் இன ஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்டு விட்டதாலும், இலங்கை நாட்டின் இரு பெரும் ஆளும் வர்க்க கட்சிகளும்,சிங்களப் பேரின வெறியர்களும்,பெளத்த மத வெறியர்களும் மட்டுமல்ல, இதற்கும் மேலாக, விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களின் இரு அணிகளாக இருப்பதாலும், சிறுபான்மை கட்சிகள் எனச் சொல்லப்படுகின்ற வகையறாக்கள்-அதாவது சிறுபான்மை ஏகாதிபத்திய தாச தரகர்களான சமரச சக்திகள்-எவ்வளவுதான் ``எமது மக்கள்`` குறித்து பேசினாலும் அவர்களது தொப்புள் கொடி உறவு இவர்களும் விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்கள் என்ற உணர்வு மேலோங்கி, ஒடுக்கும் தேசத்தின் விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களுடன் எப்போதும் ஐக்கியப்பட விளைகின்றது.ஒரு வர்க்கம் என்கிற முறையில் தனது நலனை எட்ட அது தமிழீழ தேசத்தை அடகுவைக்கின்றது.இதுதான் சமஸ்டி அரசியல்!

எனவே செயல் தந்திர நோக்கு நிலையிலும் தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை எனப் பிரகடனம் செய்கின்றோம்!

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(நடைமுறை நோக்கு நிலையில்)

1) உலகமெங்கும், நாடுகள் எங்கும் பாராளுமன்றம் என்பது சர்வாதிகாரம் அணிந்துள்ள முகமூடீயே ஆகும்.
இங்கிலாந்தில் தேர்ந்தெடுக்கப்படாத மகாராணிக்குத்தான் இங்கிலாந்து அரசாங்கம் சொந்தம், அவர் எனது அரசாங்கம் என்றுதான் இறுமாப்புடன் கூறுகின்றார், அமெரிக்க ஜனாதிபதிக்கு வீற்றோ அதிகாரம் உண்டு! இலங்கை இதை விடவும் பல அடி முன்னோக்கிப் பாய்ந்த பாசிச வடிவமாகும்! இலங்கையில் ஜனாதிபதி அந்த நாட்டின் கடவுள், (நம்பினோர் கைவிடப்படுவர்!), அரசியல் சட்டம் கூறுகிறவாறு அவர் `சர்வ வல்லமை மிக்கவர்` (இனப்படுகொலை உட்பட!)

2) தமிழீழ விடுதலையின் நோக்கில் பார்த்தால் ஆறாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தேசிய விடுதலை குறித்த விவாதத்தை சட்ட விரோதம் ஆக்கிவிட்டது,ஈழ தேசத்துக்கு சிங்களப் பாராளுமன்றத்தில் குரல் இல்லை என்று ஆக்கிவிட்டது!

3) இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் பெரும்பான்மை ஆசனங்கள் இரு சிங்களப் பேரினவெறிக் கட்சிகளையே சேரும்!

4) ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் எண்கணிதப் பெரும்பான்மையை ஜனநாயகம் என்று ஏற்றுகொண்டு ஒடுக்கப்படும் ஈழ தேசம் பயணிக்குமானால்,பெரும்பான்மை வாக்குகளால் ஈழதேசத்துக்கு மரணதண்டனை கூட வழங்க முடியும். அதுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது!

5) இந்த விதியை மீறியும் ஜனநாயகப் பாதையில் பயணிக்க எண்ணுவோர் பெற்றுக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் படிப்பினை என்ன?

அ) 1972 அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ``ஜனநாயக ரீதியாக`` ஏற்கவில்லை
ஆ) 1978 பாசிச ஜனாதிபதி ஆட்சிமுறை யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை
இ) 13 வது திருத்த மாகாண சபைகளையும் ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை

எனவே நடைமுறை நோக்கு நிலையிலும்  தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை எனப் பிரகடனம் செய்கின்றோம்!
===================
தேர்தல் பங்கேற்பு நாடகத்தில் அரசியல் கட்சிகளின் பங்கு பாத்திரம்  குறித்த ஆய்வு தொடரும்
==================
                                                                                                       புதிய ஈழப் புரட்சியாளர்கள்