Thursday 10 May 2012

முள்ளிவாய்க்கால்ப் பிரகடனம்


முள்ளிவாய்க்கால்ப் பிரகடனம்

1) இலங்கையின் ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலம் முதல், மனித சமூகத்தினர்- ``பழைய கற்கால மக்கள்`` வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்களின்
வரலாற்று வழித்தோன்றல்களாகவே பிற்கால தமிழ் சிங்கள இனக் குழுக்கள் உருவாகி, தற்கால தேசிய இனங்கள் தோன்றின.

2) இந்நீண்ட ( ``இற்றைக்கு முன் 25000 ஆண்டுகால`` ) வரலாற்றில்,  தமிழகத்திலிருந்து பிரிந்த 7000 ஆண்டுகளில் ஆக இறுதி அறுபத்தைந்து  ஆண்டுகளே இன மதப்பூசல்கள் ஓங்கி வளர்ந்த காலமாகும்.

3) இன மதப் பகைமைக்கான விதைகள், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகளால் ஊன்றப்பட்டு அதிகாரக் கைமாற்றத்தின் பின்னர் சிங்கள ஆளும் கும்பல்களால் அரசதிகாரத்தை ஏகபோகமாக்கவும், தொடர்ந்த நவீனகாலனியாதிக்கச் சுரண்டலை மூடிமறைக்கவும் ஊட்டி வளர்க்கப்பட்டது.

4) தமிழர்களின் நிலப்பரப்பு- ஆட்சிப் பரப்பு, சிங்களவர்களுடன் தமிழ் மக்களின் சுயவிருப்பு அறியப்படாமல் கட்டாயமாக ஆங்கிலேய
காலனியாதிக்கவாதிகளால் இணைக்கப்பட்டது.

5) தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை ஒருபுறம், தனிச் சிங்களச்சட்டம் மூலம் அதிகார எந்திரத்திலிருந்து தமிழர்களை வெளியேற்றுதல், திட்டமிட்ட
குடியேற்றத்தின் மூலம் வாழ்நிலத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுதல், ஒற்றையாட்சி மூலம் அரசதிகாரத்தில் இருந்து வெளியேற்றுதல் எனவும், மறுபுறம் இடையறாத ``கலவரங்கள்`` மூலம் இனப்படுகொலை செய்வது என்பதாகவும் தொடர்ந்தது.இவ்வாறு இலங்கையில் சிங்களம், இன ஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்டது.
இன ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாக்கிக் கொண்டது.

6) தனிச் சிங்களச் சட்ட எதிர்ப்பு , 1972 அரசியல் யாப்பு புறக்கணீப்பு, 1978 ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு, 1981 மாவட்ட அபிவிருத்தி சபை எதிர்ப்பு,
1987 இந்திய இலங்கை ஒப்பந்த எதிர்ப்பு, 13வது திருத்த மாகாணசபை எதிர்ப்பு என இன ஒடுக்கலின் அரசியல் ஏற்பாடுகள் எதிர்க்கப்பட்டன. மாறாக
ஆரம்பகால சமஸ்டி இயக்கம்,1977 வட்டுக்கோட்டைத்தீர்மானம்,1985 திம்புக் கோரிக்கைகள், 2001 இடைக்கால அதிகாரசபை- அக சுய நிர்ணய உரிமை-
போன்ற தீர்வுகள் மூலம் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட தமிழர் பிரதிநிதிகள் முயன்றனர்.

7) எந்தத்தீர்வுகளுக்கும் தயாரின்றி சிங்களம் இன ஒடுக்குமுறையைத் தொடர்வதில் குறியாகவுள்ளது.குறிப்பாக தமிழீழ தேசத்தின் காப்பரணான
விடுதலைப் புலிகளை நயவஞ்சகமாகக் கொன்றொழித்த பின் தமிழீழ தேசத்தை சூறையாட வெறிகொண்டு அலைகின்றது.

8) விடுதலைப்புலிகளை நயவஞ்சகமாகப் பலியெடுத்தது, சிங்களம் மட்டுமல்ல; அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், இலங்கையை தமது செல்வாக்கு மண்டலத்தின் கீழ்க் கொண்டுவரமுயலும் சீன, ரசிய வல்லரசுகளுமேயாகும்.

9) உலகமயமாக்கலினதும், உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியினதும், உலக மறுபங்கீட்டினதும் நலன்களே, விடுதலைப் புலிகளை வேட்டையாட இவர்களை ஒன்று சேர்த்தன. இன்று அதே நலன்கள் முழு இலங்கை நாட்டு மக்களுக்கும் எதிராக திரும்பிவிட்டன. இதன் மையமாக பக்ச பாசிஸ்டுக்களின் சிங்களம் திகழ்கிறது.

10) எனவே தமிழீழ தேசம் தனது பிரிந்து செல்லும் உரிமையை வென்றெடுக்க, சிங்கள-மலையக-முஸ்லிம் மக்களை ஐக்கியப்படுத்த, உலகத்
தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும்.

 மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!

 மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தமிழீழம் மே 11  2012