Monday 20 May 2013

சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்


இப்பெரு நூல் விரைவில் வெளிவரவுள்ளது என்பதை நமது வாசகர்களுக்கு  அறியத் தருகின்றோம் ENB
 =====================================================================
ஈழம் நூல் அறிமுக  ஆய்வுரை
சமரன் வெளியீட்டகத்தின் இவ் ஈழம் நூல்
 ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்

1983 இற்கும் 2000 இற்கும் இடைப்பட்ட 17 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 17 அரசியல் பிரச்சாரப் பிரசுரங்களின் தொகுப்பாகும். இவையனைத்தும் பொதுவாக தேசிய இனப்பிரச்சனை குறித்தும், குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சனை குறித்தும் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் ஆகும்.
=================================== 1=================================
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் காலனி நாடுகளின் விடுதலை குறித்தும், தேசிய இனங்களின் சுய நிர்ணயம் குறித்தும் ஆரம்பித்த விவாதம் இன்றுவரையும் தொடர்கின்றது.இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் முன்மொழிந்த, சோவியத் சமூக ஏகாதிபத்திய திருத்தல்வாதிகள் வழிமொழிந்த நிலையை நவீன திருத்தல்வாதிகள் பயபக்தியுடன் பின்பற்றி வருகின்றனர்.சோவியத் திருத்தல்வாதிகளை எதிர்த்து நடந்த மாபெரும் விவாதத்தில் கம்யூனிஸ்டுக்கள் எடுத்துரைத்தவாறு,

"தற்கால உலக அரசியலின் மிகக் கூர்மையான இந்தத் தேசிய விடுதலை இயங்கங்கள் குறித்த அணுகுமுறை இப்பிரச்சனையின் பால் மேற்கொள்ளப்படுகின்ற நிலை என்ன என்பதுதான், மார்க்சிய லெனினியவாதிகளையும் நவீன திரிபுவாதிகளையும் பிரித்துக்காட்டுகின்ற ஒரு முக்கியமான எல்லைக்கோடாகும்.மார்க்சிய லெனினிய வாதிகள் ஒடுக்கப்படும் நாடுகளின் பக்கம் உறுதியாக நின்று தேசிய விடுதலை இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கின்றார்கள். உண்மையில் நவீன திருத்தல்வாதிகள், ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் காலனியாதிக்கவாதிகளின் பக்கம் நின்று அவர்களால் முடிந்த வழிகளிலெல்லாம் தேசிய இயக்கத்தை எதிர்க்கின்றார்கள். தேசிய இயக்கங்களுக்குள் சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். தேசிய இயக்கங்களை அழித்தொழிக்க திரைமறைவில் ஆதரவு வழங்குகின்றனர்.''

இத்தொகுப்பில் இருக்கும் தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும் என்கிற பிரசுரம், தேசிய இனப்பிரச்சனையை ஒரு வரலாற்று வகையினம் என்கிற வகையில் அதன் தோற்றம் முதல் சமகாலம் வரை ஆராய்கிறது.தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்சிய கருத்தாங்கங்களை, குறிப்பாக ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் லெனின் வளர்த்தெடுத்த கருத்தாக்கங்களை ஆய்வு செய்கின்றது.தேசிய இனப்பிரச்சனை வரலாற்றில் தீர்க்கப்பட்ட மூன்றுகாலகட்டங்களை தனித்தனியாக எடுத்து ஆராய்ந்து அவற்றின் தொகுப்பாக பின்வரும் முடிவுகளை முன்வைக்கின்றது.


முதலாவதாக, மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்தக் காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவத்துவ உற்பத்தி உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதைத் தடுகின்றன. தேசிய இன ஐக்கியத்தைத் தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளைத் தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப் போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சினை பழைய வகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போது கூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் சேர்ந்து வாழமுடியும் அல்லது அமைதியாகப் பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உதாரணம்: சுவிட்சர்லாந்து, நார்வே).

இரண்டாவதாக, முதலாளித்துவம் தாமதமாக வளரத் தொடங்கிய நாடுகளில் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டவிதம் அதாவது முதலாளிதுவப் புரட்சிகள் நிறைவு பெறாது இருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்து வந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது. (உதாரணம்: ஜாரிய இரசியாவில் போலந்து, உக்ரைன்). இம்முரண்பாடுகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மூலம் தீர்க்கப்பட்டது. தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது.

எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் எதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்குக்கூட முன்நிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்பும் சோசலிசத்தின் கீழும் கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். இனச்சமத்துவத்தை நிலைநாட்டவேண்டும்.
மூன்றாவதாக, ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சினை வேறு வடிவத்தில் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமது காலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அத்தகைய காலனி, அரைக்காலனிய நாடுகளின் சுயேட்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும் பொருளாதார சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலகம் முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும் ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இனப் பிரச்சனையானது காலனிய அரைக்காலனிய நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையிலான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேச விடுதலை இயக்கங்கள் தோன்றின.

எனவே, ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்துள்ளன.

ஒன்று, முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் என்று வளர்ச்சிக் கட்டத்தை அடைந்தபின் முதலில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளே பிற நாடுகளை ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் பிரிந்துவிட்டன. ஆகவே காலனி, அரைக்காலனி நாடுகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடையும் பிரச்சனையும் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையே.

இரண்டு, தேசிய விடுதலை யுத்தங்கள் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தை மட்டுமின்றி ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது.

மூன்று, எந்த ஒரு காலனி, அரைக்காலனி நாடுகளிலும் நடக்கும் புரட்சிகளும் பழைய வகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியல்ல, புதியஜனநாயக வகைப்பட்ட ஜனநாயகப்புரட்சியே. பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் உலக சோசலிசப் புரட்சியின் பகுதியே. எனவே காலனி, அரைக்காலனி நாட்டு தேசிய இனப்பிரச்சனைகள் புதியஜனநாயகப் புரட்சியின் பிரச்சனையாக அதன்பகுதியாக மாறியிருக்கின்றன.


நான்கு, காலனி-அரைகாலனி நாடுகளின் தேசிய இனப் பிரச்சனைகள் இரு அம்சங்களை கொண்டுள்ளன. ஒன்று அந்தக் குறிப்பிட்ட நாடு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவது. மற்றொன்று அந்நாட்டுக்குள் இருக்கின்ற தேசிய இனங்கள் சுயநிர்ணய .உரிமை இரு அம்சங்கள் கொண்டதாக மாறியுள்ளது.

அத்துடன் இது ஏகாதிபத்திய சகாப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகாலம் தொடங்கிவிட்டபடியால் தேசிய இனப்பிரச்சனை உலகப் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாகிவிட்டது. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி சகாப்தமாகியிருப்பதால் அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலகப் பாட்டாளிவர்க்கச் சோசலிசப் புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறிவிட்டன. இப்புரட்சி முற்றுப்பெற்ற இடங்களில் இத்தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டன. (உதாரணம்: மக்கள் சீனம்). இந்த மூன்றாவது காலகட்டம் இன்றும் முற்றுப்பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.
  • இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் - மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்திலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை,மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டும்.

  • சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரு அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை,முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல.புரட்சிக்குப் பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனச் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். அத்துடன் இது ஏகாதிபத்திய சகாப்தமாயிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்து உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டன.
  • இதன் மூலம் தேசிய இனப்பிரச்சனையை முதலாளித்துவ தேசியவாதத்தில் இருந்து வேறு பிரித்து பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதத்தின் இணக்கக் கூறாக விளக்கி மார்க்சிய கோட்பாட்டு அடித்தளம் இடுகின்றது. நவீன திருத்தல்வாதிகள் தேசிய இயக்கங்களுக்குள் நடத்தும் சீர்குலைவு வேலைகளையும், திரைமறைவில் தேசிய இயக்கங்களை அழித்தொழிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களது நவீன காலனிகளின் காவலர்களுக்கும் சேவகம் செய்வதை அம்பலமாக்குகின்றது. இதனால் இப்பிரசுரம் தேசிய இனப்பிரச்சனையில் லெனினியப் பதாகையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அரிய படைப்பாகும்.

====================================2=================================

அரைக்காலனி இருதேச தரகுமுதலாளித்துவப் போக்கு?

இலங்கையில் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கான விதைகள் காலனியாதிக்கக் காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளால் இடப்பட்டன. நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டு அதிகாரக் கைமாற்றம் நடைபெற்ற போது அமைந்த இலங்கை அரசு இரு தேசங்களினதும் சமத்துவத்தை அங்கீகரித்த, தமிழ்மக்களின் சுய விருப்பத்தை அறிந்த, ஜனநாயகக் கூட்டாட்சியாக அமையவில்லை. மாறாக தமிழர்களுடைய தேசத்தை - தமிழீழத்தை- சிறீலங்காவுடன் கட்டாயமாக இணைத்துக்கொண்ட ஒற்றையாட்சி அரசாக அமைந்தது. இதை இரு தேசத்து தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆளும் கும்பல்கள், ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்ட சமரசத்தின் பேரில் உருவாக்கினார்கள்.

அதிகாரக் கைமாற்றம் நடந்தகையோடு சிங்கள ஆளும் கும்பல் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொள்ள முயன்றது. இதன் பொருட்டு சிங்களப் பேரினவாத பெளத்த மதவாத கருத்தியலை ஆயுதமாகக் கொண்டு இதர தேசிய, இன, மதப் பிரிவினர் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது.ஏகாதிபத்திய வாதிகளோடு ஏற்படுத்திக் கொண்ட சமரசத்தின் பெயரால் அரசதிகாரத்தில் தமக்கு உறுதியளிக்கப்பட்ட பங்கு பறிபோவதை உணர்ந்த, அடக்கப்பட்ட ஆளும்கும்பல்கள், இந்த அதிகாரப் பங்கீட்டுச் சண்டைக்கு பலம் சேர்க்க, ஒரு சமூக அடிப்படையைத் திரட்டிக் கொள்ள குறுமினவாதத்தை தமது கருத்தியல் ஆயுதமாக ஏந்தி தமது '' சொந்த மக்களை'' நாடினர். இதன் மூலம் மைய அரசின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்த்து சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்கான வாய்ப்பைத் திட்டமிட்டு தடைசெய்தனர். இந்த சமூக பலத்தின் பின்னணியில் ''சமஸ்டி'' என்கிற அதிகாரப் பங்கீட்டைப் பாராளமன்ற சட்டவாதப் பாதையில் அடைவது அவர்கள் குறிக்கோளாக இருந்தது. அதிகாரக் கைமாற்றத்திலிருந்து ஏறத்தாழ முதல் 30 ஆண்டுகளின் அரசியல் போக்கின் திசைவழியாக இருந்தது இதுதான்.

சிங்களப் பேரினவாத, பெளத்தமதவாத, ஜனநாயகவிரோத பாதையில் எழுந்து வந்த சிங்கள ஆளும் கும்பலை எதிர்த்து யாரும் தீர்மானகரமாகப் போராடவில்லை. இதனால் திடங்கொண்ட சிங்கள ஆளும் கும்பல் தனது தேசிய அடக்குமுறையை மிக இழிவான வழிகளில் அரங்கேற்றத் தலைப்பட்டது. அதற்காக மிக இழிவான, மிகக் கேவலமான, மிகக் கொடுமையான அடக்குமுறை வடிவத்தைத் தேர்தெடுத்தது. அது தான் ''இனக்கலவரம்'' எனப்படுவது. அரசதிகாரத்தின் முழுப் பின்பலத்தோடும் ஒடுக்கும் தேசத்தின் மக்களை (சிங்களவர்) ஒடுக்கப்படும் தேசத்தின் மக்களுக்கு (தமிழ்பேசும் மக்கள்)- எதிராக ஏவிவிட்டு மோதவிடுவது இந்த இழிவான வடிவமாகும். இந்த ''இனக்கலவரம்'' என்கிற தமிழ் வெகுஜனங்களுக்கெதிரான - அனைத்து தமிழ் சமூக வர்க்கங்களுக்கும் எதிரான, சிங்கள அரசதிகாரத்தின் வன்முறைத்தாக்குதல், ஒரு சமூகப் பயங்கரவாதமாகும். தமிழர்களை பகிரங்கமாகப் படுகொலை செய்வது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது, தமிழர்களின் தனியுரிமைச் சொத்துக்களை அபகரிப்பது, தமிழ் தரகு மற்றும் சிறு முதலாளித்துவ வர்த்தக ஆதாரங்களை அழித்தொழிப்பது, தமிழ் விவசாயிகளை தங்கள் சொந்த பயிர் செய்யும் நிலத்தில் இருந்து பிடுங்கி எறிந்து நிலப்பறி செய்வது, உற்பத்தி சாதனங்களைக் களவாடுவது, தமிழ் அதிகாரவர்க்கத்தை முற்றாக விரட்டியடித்து சிங்கள மயப்படுத்துவது, “போராடுகிறாயா இந்தாபார்; போராடாதே அடிமையாய் இருஎன அச்சுறுத்துவது, இவைதான் 'இனக்கலவரம்' என்கிற சமூக பயங்கரவாதத் தாக்குதலின் குறிக்கோளாய் இருந்தன. 1948 அரசியல் கைமாற்றத்தைத் தொடர்ந்து 1958, 1961, 1977 என இந்த இழிசெயல் மலையக மக்களுக்கும். முஸ்லிம் மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிராக ஏவப்பட்டது.

வெறுமனே அதிகாரப்போட்டிக்கான வாக்குவேட்டைக்காக குறுமினவாதத்தை விதைத்துப் பிழைத்து வந்த தமிழ் ஆளும்கும்பலால் இதனைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யமுடியவில்லை. இவர்களது வர்க்க சமரசம், சந்தர்ப்பவாதம், பாராளமன்ற சட்டவாதம் இன ஒடுக்குமுறையின் தீவிரத்தால் செல்வாக்கு இழந்து போயிற்று.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் குட்டி முதலாளித்துவ சமூகத் திரளில் இருந்து தமிழ் இளைஞர் விடுதலை அமைப்புக்கள் தன்னியல்பாகத் தோன்றின. பாராளமன்றப் பாதைக்கு மாற்றாக அவை வரித்துக்கொண்ட ஆயுதப் போராட்டப் பாதை அரச வன்முறைக்கு எதிரான வெஞ்சினத்தை வெளியிடும் தன்னியல்பான பதில் வன்முறையாகவே வெளிப்பட்டது. அன்றைய நிலையில் இது அவ்வாறல்லாமல் வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது.

1983 ஜூலை 24ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்-திண்ணைவேலியில் ரோந்துவந்த சிறீலங்கா வாகன அணியை வழிமறித்து நடத்திய கெரில்லா கண்ணிவெடித்தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர். இதற்குப் பழிதீர்க்கும் பொருட்டு நாடு தழுவிய இனக்கலவரத்தை சிறீலங்கா அரசு மீண்டும் ஏவிவிட்டது. இது சிங்கள அரசை எதிர்த்த தமிழ்பேசும் மக்களின் நாடு தழுவிய தன்னியல்பான எழுச்சிக்கு வித்திட்டது. இந்த தன்னியல்பான எழுச்சி கடந்த 35 வருடகால குறுமினவாத அரசியல் அடித்தளத்தில் இருந்து எழுந்ததாகும். இதனால் இதனைப் புனரமைப்புச் செய்யாமல், இந்த எழுச்சிக்கு ஒரு புதிய உள்ளடக்கத்தைக் கொடுக்காமல் இதை அப்படியே, ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புரட்சிக்கு பயன்படுத்திக்கொண்டிருக்க முடியாது.

1983 ஜூலை கலவரத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதப்போராட்ட வழியில் போராடிவருகின்றனர். ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகள் பெரும் தடைகளை ஏற்படுத்திவருகின்றன.

அமெரிக்க, ரஷ்ய இரு ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையிலான முரண்பாடுகளுடன், இந்திய அரசின் இலங்கை மீதான துணை மேலாதிக்கத்திற்கான முரண்பாடுகளும் ஈழத்தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் கடும் சவாலாக உள்ளன. அதுவே ஈழப் போராட்டத்தின் தனி குணாம்சமாக உள்ளது. ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் இந்திய அரசின் துணை மேலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடித்தான் ஈழத்தமிழினம் தமது விடுதலையை வென்றெடுக்க வேண்டியுள்ளது.

1983-87 காலக்கட்டத்தில் இலங்கை மீதானத் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் இலங்கையின் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசமைப்பைப் பாதுகாக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடி நாடுகளும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்துவந்தன. இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு உதவிவந்தன. இதனை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை அரசின் அமெரிக்கச் சார்பை எதிர்ப்பதாகக் கூறியும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆதரிப்பதாகவும் சதித்தனமாக ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்துக்குள் இலங்கையைக் கொண்டுவர முயற்சித்தது. தமது நட்பு நாடான இந்தியாவுடன் சேர்த்துகொண்டு போராளிகளுக்கு உதவியது. இந்திய அரசு இலங்கை மீதானத் தமது துணை மேலாதிக்கத்தைத் திணிக்கவே இந்திராகாந்தியின் காலத்தில் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது.

திம்புப் பேச்சுவார்த்தையின்போது இலங்கை அரசு பணிந்தவுடன், இந்திய அரசு தனது சந்தை நலன்களுக்காக முழு இலங்கையின் சந்தையையும் பெறவேண்டி ஈழப் போராளிகளைப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தித்து, இறுதியில் இந்தியாவில் மாநிலங்கள் பெற்றிருப்பதைப் போன்ற அதிகாரம் ஈழத்தமிழினமும் சுயநிர்ணய உரிமை அல்ல சுயாட்சி என்றத் திட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தியது. ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் போட்டு இலங்கைக்கு 1987ல் இந்தியப் படை அனுப்பப்பட்டு ஈழத்தமிழரின் விடுதலைப் போரை நசுக்கியது. புலிகள் அமைப்பைத்தவிர அனைத்து போராளிக் குழுக்களும் இந்தியாவின் சதிவலையில் வீழ்ந்து துரோகக் குழுக்களாக மாறின. விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்ந்து இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி இந்திய இராணுவத்துக்கு கசப்பான படிப்பினை அளித்தது. இலங்கை அரசுடன் உடன்பாடு கண்டு இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவதில் மிகப்பெரும் வெற்றியை ஈட்டினர். 1990களுக்குப் பின் இலங்கையை ஆண்ட பிரமேதாசா அரசாங்கம் மீண்டும் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போராத்தொடங்கியது. விடுதலைப் புலிகள் இயக்கம் வன்னிப் பகுதிக்கு பின்வாங்கியது.

1996ஆம் ஆண்டு ஜூலையில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்குடா நாட்டை மீட்பதற்காகப் புலிகள் அமைப்பு ஓயாத அலைகள் போரைத் தொடங்கியது. ஓயாத அலைகள் 1 மூலம் முல்லைத் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். ஓயாத அலைகள் 2ன் மூலம் தெற்கு வவுனியாவைக் கைப்பற்றினர். ஓயாத அலைகள் 3ன் மூலம் ஏப்ரல் 23ல் யாழ்ப்பாண ஆனையிறவு முகாம் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைக் குறிவைத்து புலிகளின் படை நகர்ந்தது. 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளின் முற்றுகைக்கு ஆளானார்கள். அதை எதிர்த்து இந்தியாவின் உதவியை அன்றைய சந்திரிகா தலைமையிலான இலங்கை அரசு கோரியது.

இலங்கை இனச்சிக்கலின் விளைவாக ஏற்படும் இராணுவ அரசியல் நெருக்கடிகளை இந்திய அரசும் அமெரிக்க வல்லரசும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தன. 90களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா நெருங்கியுள்ளது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் உறவுகளில் பெருமாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கை இனச்சிக்கலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்திய அரசும் அமெரிக்க அரசும் கூடி விவாதித்தன. இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனும் தொலைநோக்குப் பார்வைஎன்ற பேரில் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். “இந்தப் புதிய நூற்றாண்டில், பிரதேச, சர்வதேசிய பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்கு ஒரு பொது நலன் மற்றும் ஒரு கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் அமைதியைப் பாதுகாப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் பங்காளிகளாகச் செயல்படும்என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசு இந்திய அரசிடம் உதவி கோரிய மறுநாள் வாஷிங்டனில் இந்திய அரசின் அதிகாரிகளும் அமெரிக்க அரசின் அதிகாரிகளும் கூடி விவாதித்தனர். அதன் பிறகு வாஷிங்டனிலிருந்து பின்வரும் செய்து வெளியிடப்படது: “இலங்கையின் ஒற்றுமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது, அங்குள்ள தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு முழுமரியாதை அளிப்பது என்பது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் பொது நோக்கமாகும்என்று அச்செய்தி கூறுகிறது. மேலும், இலங்கைபற்றிய இந்தியாவுடைய உணர்வுகளையும் இந்தியாவின் கொள்கையை வழிநடத்தும் பலச்சிக்கலான நலன்களையும் கிளிண்டன் நிர்வாகம் முழுமையாக உணர்ந்துள்ளதுஎன்றும் அச்செய்தி கூறுகிறது.

ஆக, இந்திய ஆளும் வர்க்கங்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை இனசிக்கலைத் தீர்ப்பதற்காக அதாவது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்கி இலங்கையில் நிலவும் புதியகாலனிய வடிவிலான அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ அரசைக் கட்டிக் காப்பதற்கும் ஒரு பொதுவானக் கொள்கையை வகுத்துக்கொண்டு அதைப் பின்வருமாறு முன்வைத்தனர்.

  1. எக்காரணம் கொண்டும் தமிழ் ஈழத் தனிநாட்டை ஏற்பது இல்லை.
  2. இலங்கையினுடைய இனச் சிக்கல், இலங்கையின் இறையாண்மை, ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.
  3. இலங்கையின் அரசியல் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் தருவது, அதாவது அதிகாரப்பகிர்வு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்வுகாணப்பட வேண்டும்.
  4. 1987ல் செய்த தவறை - அதாவது இராணுவத் தலையீடு செய்வது இல்லை. அதற்கு மாறாக மனிதநேய உதவி (இலங்கை அரசுக்கும், படைகளுக்கும்) செய்வது.
  5. இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பும் கோரினால் மத்தியசம் செய்யத் தயார். மேற்கூறிய கொள்கையின் அடிப்படையில் அவர்களது திட்டம் பின்வருமாறு அமைகிறது.

புலிகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது; அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்ப்பந்திப்பது; இலங்கையின் இறையாண்மை, ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிபாதுகாப்பதுதான் அடிப்படையில், இலங்கையின் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு என்றத் திட்டத்தைப் பேச்சுவார்த்தை மூலம் திணிப்பது; அத்துடன் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவி செய்வது; இத்திட்டத்திற்கு ஆதரவாக அரசியல் ரீதியிலும், சர்வதேச அளவிலும், இலங்கையிலும் சக்திகளைத் திரட்டுவது; இராணுவ ரீதியில் சோர்வடைந்து தன்னம்பிக்கை இழந்துள்ள இலங்கை இராணுவத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துவது; இராணுவ வலிமையைக் கூட்டுவது; மேலும் பலப்படுத்துவது; இத்தகைய அரசியல், இராணுவத் தயாரிப்புகளுக்குப் பிறகு அவர்கள் முன்வைக்கும் சமரசத் திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் பணியாவிட்டால் மீண்டும் பெரும்பலம் கொண்டு அவர்களைத் தாக்கி நசுக்குவது.

மேற்கண்டத் திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்ட 40 ஆயிரம் வீரர்களை பாதுகாப்பதற்காக மனிதாபிமான உதவி என்று கொழும்புவோடு இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியமோ சர்வதேச சமுதாயம்தான் தமிழ் ஈழ நாடு உதயம் ஆவதை தீர்மானிக்க முடியும்; அதை மீறி புலிகள் தனிநாடு அமைக்க வேண்டும் என்று கருதினால் அது சுடுகாடாகத்தான் இருக்கும் என்று புலிகளை மிரட்டியது. இத்தகைய ஒரு சூழலில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னொருமுறை அந்நியப் படை ஈழ மண்ணில் வருவது என்பது தமக்கு எதிராக மாறிவிடும் என்று கருதிதான் யாழ் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்கினர். அதற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் நார்வே தலைமையில் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டது.

2005ஆம் ஆண்டு தொடங்கிய ஓஸ்லோ பேச்சுவார்த்தை அமெரிக்க-இந்திய திட்டத்தின்படிதான் நடந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியமும், பிரிட்டனும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பா முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தடைசெய்ய நிர்ப்பதம் கொடுத்தன. இலங்கைக்கு கடன் உதவியும், ஆயுதங்களும் கொடுத்து போருக்குத் தயார்செய்தன. இந்திய அரசு தன்பங்கிற்கு புலிகளுக்கு ஆயுதம் வருவதை தடுத்து நிறுத்தியதோடு விடுதலைப் புலிகளின் கப்பற்படையை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்தது. இரசிய, சீன அரசுகளும், பாகிஸ்தானும் இலங்கை அரசுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்தன. இந்த அளவுக்குத் தங்களை வலுப்படுத்திக்கொண்டுதான் இராஜபட்சே கும்பல் இறுதி யுத்தத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடுத்தது.

இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையில் சுயநிர்ணய உரிமைபற்றி ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள்; விடுதலைப் புலிகள் தலைமையில் ஏற்பட்ட பிளவுகள்; அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி புலிகள் மத்தியில் இருந்த மாயைகள், இந்திய அரசாங்கத்தைத் தமக்கு சாதகமாக மாற்றமுடியும் என்ற எதிர்பார்ப்பு போன்ற புலிகளின் நிலைபாடு விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கலை உருவாக்கியது. அத்துடன் எதிரி பெரும்படையுடன் சுற்றிவளைத்து அழிப்பது என்ற திட்டத்தை செயல்படுத்தும்போது அதிலிருந்து புரட்சி இயக்கத்தையும் மக்களையும் பாதுகாக்க முறையாக பின்வாங்குவது எப்படி என்பதில் ஏற்பட்ட தவறுகள் இவை அனைத்தும் சேர்ந்து புலிகள் அமைப்பு படுதோல்வி அடைவதில் கொண்டுபோய் நிறுத்தியது.

இந்தக் கட்டுரைத் தொகுப்பு முழுவதும் விடுதலைப் புலிகளின் தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கும் அதேவேளையில் ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய அரசியின் துணைமேலாதிக்கத்தை எதிர்த்து விடாப்பிடியாக போராட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயம் விடுதலைப் புலிகளின் குட்டி முதலாளித்துவ வர்க்க உலகக் கண்ணோட்டம் ஊசலாட்டத்திற்கும் சமரசத்திற்கும் இடம் கொடுக்கக்கூடியதுதான். அதை தவிர்ப்பது எப்படி என்ற எச்சரிக்கைகளும் செய்யப்பட்டே வந்துள்ளது.

எனவே ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் கடைசி 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் அது சந்தித்துள்ள திருப்புமுனைகளும் அதன் படிப்பினைகளையும் கற்று முன்னேறுவதற்கும்; புலிகளின் அமைப்பின் சாதக, பாதக அம்சங்களைக் கணக்கில்கொண்டு எதிர்காலத்தில் தமிழ் ஈழத்தின் விடியலுக்காக ஒரு சரியானப் பாதையை அடைவதற்கு இந்தக் கட்டுரைகள் பயனுள்ள வகையில் அமையும் என்பது திண்ணம்.

அன்றிருந்த விடுதலை அமைப்புகள் இவ்வெழுச்சியைக் கையாள சற்றும் திறனற்று இருந்தன. இதன் விளைவாக தாம் எடுத்துக்கொண்ட கடமையின் - ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புரட்சி - நோக்கு நிலையில் இருந்து அவ்வெழுச்சியை வழிநடத்துவதற்குப் பதில் அவ்வெழுச்சி வழி நடந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்தன, பட்டறிவு சுட்டபோது அடுப்படிகளை நாட மறந்தன; பட்டறியாத சக்திகளை சந்திக்க நேர்ந்தபோது தீக்குளித்து மடிந்தன.

1983இல் இது தன்னியல்பான எழுச்சிக்கு வால்பிடிப்பதாக அமைந்ததை ஒரு குற்றமாகச் சொல்லமுடியாது. ஆனால் 2002 ஒஸ்லோவரை இவ் வழி நடந்தது ஒரு மாபெரும் தவறாகும்.

ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வரலாற்றுப் பின்னணி குறித்தும், அதன் குறிப்பான தன்மை குறித்தும், இதுபால் சமூக வர்க்கங்கள் எடுக்கும் நிலை குறித்தும் ஒரு பருண்மையான ஆய்வில் இருந்து, அதன் நண்பர்களையும், எதிரிகளையும், ஊசலாடும் சமரச சக்திகளையும் (உள் நாட்டிலும், உலகு தழுவியும்) மதிப்பீடு செய்து, விடுதலைப் புரட்சிக்கான தத்துவம், அரசியல், ஸ்தாபனம் மற்றும் இராணுவ மார்க்கங்களை வரையறை செய்து, மக்களைப் புரட்சியில் ஊன்றி நிற்கச் செய்யும் யுத்ததந்திர, செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்த ஒரு அரசியல் தீர்மானம் ஈழத்தில் எந்த ஒரு கட்சியாலும் முன்வைக்கப்படவில்லை.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, அப்படி ஒரு தீர்மானம் இருக்கின்றதென்றால் அது மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (சமரன்) 1983 இல் முன்வைத்த

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரிப்போம் இந்திய

இராணுவத்தலையீட்டை எதிர்ப்போம் !

என்கிற தீர்மானமே ஆகும். இதற்காக இத்தலைமைப் பாத்திரத்துக்காக புதிய ஈழப்புரட்சியாளர்கள் தமிழக கம்யூனிச இயக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டவர்கள்.

====================================3=================================

1983 முதல் 2000 வரையில் பிரசுரிக்கப்பட்ட இவ் 20 பிரசுரங்களும் நாட்காட்டி ஒழுங்கில் நடந்தேறிய நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசினாலும் இவை வெறுமனே நிகழ்ச்சிப்போக்குகளைப் பின் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட பிரசுரங்கள் அல்ல. மார்க்சியம் மக்கள் திரளுக்கு அரசியல் தலைமை அளிப்பதற்கு ஒரு விஞ்ஞான முறைமையை வகுத்தளித்துள்ளது.

நாட்டிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள் அனைத்துக்கும் பாட்டாளிவர்க்கம் தனது கட்சியின் மூலம் அரசியல் தலைமையை எப்படி அளிக்கின்றது? முதலாவதாக, வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் உடன்படுகின்ற அடிப்படை அரசியல் முழக்கங்களை முன்வைப்பதும், இந்த அரசியல் முழக்கங்களை மெய்மையாக மாற்றுவதற்கு ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டத்துக்கும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு திருப்பத்துக்குமான செயல் முழக்கங்களை முன்வைப்பதும்….. இரண்டாவதாக, தனிக்குறிக்கோளுக்காக நாடு முழுவதுமே செயலில் இறங்கும்போது அவற்றை நிறைவேற்றுவதில் எல்லையற்ற ஆர்வமும் பற்றுறுதியும் காட்டுவதன் மூலம் பாட்டாளிவர்க்கமும் குறிப்பாக அதன் முன்னணிப்படையாகிய பொதுவுடமைக் கட்சியும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்….. மூன்றாவதாக, பொதுவுடமைக்கட்சி அதன் நேச அணிகளுடன் முறையான உறவுகளை நிறுவிக் கொள்ளவேண்டும். மேலும் அவர்களுடனான கூட்டணியை வளர்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், அதேவேளையில் அது தனது வரையறுக்கப்பட்ட அரசியல் குறிக்கோள்களை ஒருபோதும் கைவிடாத நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் நான்காவதாக, அது பொதுவுடைமைக் கட்சியின் அணிகளை விரிவாக்க வேண்டும்; அதன் சித்தாந்த ஒற்றுமையையும், கடுமையான கட்டுப்பாட்டையும், கட்டிக்காக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்வதன் மூலம் பொதுவுடமைக்கட்சி சீனா முழுவதுமுள்ள மக்களுக்கு அரசியல் தலைமை வழங்குகின்றது. நமது அரசியல் தலைமைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், புரட்சி முழு வெற்றி அடைவதை உறுதி செய்வதற்கும், நமது நேச அணிகளின் ஊசலாட்டங்களால் சீர்குலைவு ஏற்படாதிருக்கவுமான அடித்தளமாக அமைகின்றன. புரட்சிகர நிலைமை மாறுகிற பொழுது புரட்சிகர செயல்தந்திரமும், தலைமையின் வழிமுறைகளும் அதற்கேற்ப மாறவேண்டும்.’’

(மா.தே.நூ.தொகுதி1, பக்கம் 162)

இப்பிரசுரங்கள் இக்கோட்பாட்டு நிலை நின்று வெளியிடப்பட்டவையாகும்.

விடுதலைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டம், இதற்கு முன்கட்டமான இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்த போரிலிருந்து மாறுபட்டது. இன்று நடைபெறும் உள்நாட்டுப் போர் 1983லிருந்து 1987ல் இந்தியப்படை இலங்கையில் தலையிடும் வரையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலிருந்தும் வேறுபட்டது. இந்த விடுதலைப் போரின் ஒவ்வொரு காலகட்டமும் அதன் அரசியல் சக்திகளின் அணி சேர்க்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும், அதன் இராணுவ நடவடிக்கையில் உள்ள வேறுபாட்டின் காரணமாகவும் வேறுபட்டன. எனவே இப்போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் குறிக்கோளும் முழக்கங்களும் வேறுபட்டவையாக இருந்தன.

இதனைப் பிரதிபலிக்கும் பொருட்டு கட்சி எவ்வாறு புதிய சூழ்நிலைக்கு பொருத்தமாக தனது செயல்தந்திரக் குறிக்கோளையும் முழக்கங்களையும் மாற்றிக்கொண்டது என்பதை வாசகர்கள் ஒப்புநோக்கிக் காண வேண்டும்.

இந்த அரசியல் போர்த்தந்திர பிரச்சாரக் கண்ணோட்டம் அடுத்தடுத்து வந்த அரசியல் திருப்பங்கள் ஒவ்வொன்றிலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இத் தொகுப்பில் எழுதப்படாத செய்தியாக இருக்கும் தலைமையளிக்கும் விஞ்ஞானம் - அரசியல் போர்த்தந்திரப் பாதை - இழையோடி இருக்கின்றது. இதனால் இந்நூலை 20 பிரசுரங்களின் தனித்தனியான கட்டுரைத் தொகுப்பாக அல்லாமல், ஈழவிடுதலைப் போராட்டத்தை கடந்த 17 ஆண்டுகளில், அதன் இயக்க நிலையின் தொடர் இணைப்பில் காட்டும் இயங்கியல் பொருள்முதல்வாத வரலாற்று ஆய்வாக ஒரு வாசகன் கண்டுகொள்ள முயலவேண்டும். எழுதப்பட்டு வெளிப்படையாகத் தெரிகின்ற அரசியல் நிலைப்பாடுகளை மட்டுமல்லாமல், எழுதப்படாமல் மறைமுகமாக இருக்கின்ற இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வுமுறையையும், மக்களுக்கு தலைமை தாங்கும் அரசியல் போர்த்தந்திர விஞ்ஞானம் எவ்வாறு நடைமுறையில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது என்கிற கல்வியையும் கற்றுக் கொள்ளவேண்டும். அவையே முற்றிலும் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையை (2013), ஆய்வு செய்வதற்கான கருவிகளாக விளங்கும்.

====================================4=================================

இந்நூல் நெடுகிலும் இந்திய விஸ்தரிப்புவாத எதிர்ப்பும் ஈழவிடுதலை ஆதரவும் செறிந்து இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் இதர இன உணர்வாளார்களுடைய அமைப்புக்களின் நிலையில் இருந்து இது வேறுபட்டு தனித்துவமாக இருக்கின்றது.

  • தமிழகத்தின் இன உணர்வாளர்கள் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் இருந்தவரையில் இந்தியமைய அரசு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததாக ஒரு கட்டுக்கதையை இன்றுவரைபரப்பி வருகின்றார்கள். ஈழவிடுதலைப்போரை நசுக்குவதில் இந்தியாவுக்கும்சிறீலங்காவுக்கும் இடையிலான கூட்டுறவுக்கு அவர்கள், மத்தியிலும் மாநிலத்திலும் ஒருகட்சியையோ, ஒரு தலைவரையோ காலத்துக்கு காலம் காரணம் காட்டுகின்றார்கள். அல்லது  இந்திய அரசுத் தலைவர்கள் கவனயீனமாக இருந்த நேரத்தில் சிறீலங்காஅரசுத்தலைவர்களால் கற்பழிக்கப்பட்டதாக சமூகம் மன்னிக்க முடியாத காரணத்தைசாட்டாக வைக்கின்றார்கள். மாறாக மக்கள் ஜனநாயக வாதிகளோ இந்தியத்தரகுப்பெருமுதலாளிய, நிலப்பிரபுத்துவ வர்க்க அரசின் விரிவாதிக்க நலனுக்கும், தமிழீழதேசிய ஜனநாயக இயக்கத்துக்கும் உள்ள பகமையான முரண்பாட்டைக் காரணம் காட்டிவந்தனர்.
  • ஈழத்தமிழர்களின் தனித்தமிழீழ நாட்டுக்கோரிக்கையை ஆதரிக்கும் இன உணர்வாளர்கள்’ ‘உலக நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வாழுகின்றார்கள் ஆனால் தமிழர்கள்வாழ்வதற்கென்று ஒரு நாடு இல்லை என்ற நிலையில் இருந்து ஆதரிக்கின்றார்கள். ஆனால்  மக்கள் ஜனநாயக வாதிகளோ இலங்கையில் ஈழத்தமிழின ஒடுக்குமுறையின் ஸ்தூலமானஆய்விலிருந்து அதன் தனித்தன்மையைக் கண்டறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துசெல்லும் உரிமை பிரிவினைக் கோரிக்கையாக வடிவம் பெற்றிருப்பதை வரலாற்று ரீதியான  ஒடுக்குமுறை நியாயப்படுத்துவதால் தனித் தமிழீழக்கோரிக்கையை நிபந்தனையுடன்ஆதரிக்கின்றனர்.
  • பாசிச பா..க நாடாளுமன்றத்தில் முதற்பெரும் கட்சியாகவும், பாசிச ராவ் கும்பல் இரண்டாவது பெரும் கட்சியாகவும், பாசிச கும்பலின் பாதம் தாங்கியாக ஐ.மு.அரசாங்கமும் அதற்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் இன ஒடுக்குமுறைக்கு பரிந்துபேசுவோரான "மார்க்சிஸ்டு"களும் இருக்கும் இந்த நாடாளுமன்றத்தில் இதைத்தவிர வேறு எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதுதான். பாசிசக் கும்பல்களின் பிடிக்குள் இருக்கிற இந்த பதினோராவது நாடாளுமன்றம் இந்தியாவின் அவமானச்சின்னமே.
  • தி.மு..வோ எதிர்க்கட்சியாக இருக்கும்போது புலிகள் மீது தடைவிதிப்பதை எதிர்க்கும்;ஆனால் அது ஆட்சிக்கு வந்துவிட்டால் மத்திய அரசின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் - இதுவே இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது - .மு. அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கும் துணைபோகிறது.

இன உணர்வாளர்கள்’ ‘கொல்லாதே கொல்லாதே தமிழனைக் கொல்லாதே என்ற நிலையில் சிறீலங்கா அரசின் இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்தனர். யுத்தத்தை சிங்கள யுத்தம், தமிழ் யுத்தம் எனப் பாகுபடுத்தினர்.இதன் மூலம் யுத்தத்தின் வர்க்க நலன் சுதந்திர தமிழீழ தேசத்தின் இருப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதை வெறும் இன அழிப்பாக சிறுமைப்படுத்தினர். ஆனால் மக்கள் ஜனநாயக வாதிகளோ யுத்தத்தைப் போரிடும் வர்க்கங்களின் குறிக்கோளின் அடிப்படையில் ஆராய்ந்து, நீதியான யுத்தம், அநீதியான யுத்தம் எனப் பாகுபடுத்தி நீதியான தமிழீழ விடுதலை யுத்தத்தை ஆதரித்தனர். அநீதியான யுத்தத்தை நிறுத்தக் கோரி விடாப்பிடியாகப் போராடினர். எப்போதும் நீதியான யுத்தங்களை ஆதரிக்க வேண்டும் என்ற கம்யூனிச கடப்பாட்டை ஈழ நிலைமையில் நிதர்சனமாக நிறைவேற்றினர்.

ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வித அடக்குமுறைகளையும் தொடர்ந்து கண்டித்து வந்தவர்கள் நாம்தான். ஈழப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை உறுதியுடன் ஆதரித்து வந்தவர்கள் நாம்தான். அப்படிப்பட்ட நாம் இன்று முன்பை விட அதிகமாக, அதுவும் நமது படையால் தமிழ் ஈழ மக்கள் ஒடுக்கப்படும்போது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பதா? அனைத்து ஜனநாயகவாதிகளும் கட்சி பேதமின்றி இந்த ராஜீவ் அரசின் ஆக்ரமிப்பை எதிர்த்து குரல் கொடுத்து ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டிய நேரமல்லவா இது!

வியட்நாமை அமெரிக்கப் படை ஆக்கிரமித்தபோது அமைதியாக இருக்கவில்லை அமெரிக்க மக்கள்! அமெரிக்க அரசு தனது ஆக்கிரமிப்பை ஆதரித்து ஆயிரமாயிரம் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டபோதும் ஏமாறவில்லை அமெரிக்க மக்கள்! வெகுண்டெழுந்தார்கள் அமெரிக்க அரசின் ஆக்ரமிப்புத்தன்மையை எதிர்த்து! போராடினார்கள் அமெரிக்கப்படை வியத்நாமை விட்டு வெளியேற! அதில் வெற்றியும் பெற்றார்கள்!

நாம் இந்தச் சீரிய உதாரணத்தைப் பின்பற்றி ராஜீவ் அரசின் ஆக்ரமிப்பை எதிர்த்துப் போராடப் போகிறோமா? அல்லது தேசிய வெறிக்கு ஆளாகி ஈழத்தமிழினம் பூண்டற்றுப் போக ஆதரவு தரப் போகிறோமா? என்பது நமது போராட்டத்தில் உள்ளது. ஜனநாயக ரீதியிலான போராட்டம் இங்கு பலவீனமாக உள்ளதால்தான், குடியரசு தினவிழாவுக்கு முக்கிய விருந்தினராக சிங்களப் பேரினவாத பாசிஸ்ட் ஜெயவர்த்தனாவை அழைக்கும் அளவுக்கு துணிச்சல் பெற்றுள்ளது பாசிச ராஜீவ் அரசு! ஆகவே 'இலங்கையிலிருந்து இந்தியப்படையைத் திரும்பப்பெறு' என்று ராஜீவ் அரசை எதிர்த்து நாம் கிளர்ந்தெழ வேண்டும். மேலும், பாசிஸ்ட் ஜெயவர்த்தனாவை அழைப்பதைக் கண்டித்து, 'இந்தியாவிற்குள் அனுமதிக்காதே' என்றும் எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! இதுதான் இந்திய மக்களாகிய நமது உடனடிக் கடமையாகும்!

  • இன உணர்வாளர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின்பாத்திரத்தை தனிமனித துதி பாடல்களாகவும், தெய்வீக தரிசனமாகவும் பொய்யுரைத்துப்புகழ்ந்தனர். ஆனால் மக்கள் ஜனநாயக வாதிகளோ கோட்பாட்டு நிலை நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளித்து வந்த அதே நேரத்தில் ஆக்க பூர்வமான விமர்சனமும் செய்து வந்தனர். ஈழப்போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுச் செல்லக்கூடிய, சிலவேளைகளில் தோல்வியில் முடிக்கக் கூடிய பாரிய தவறுகள் குறித்து எச்சரித்தும் வந்தனர். இந்த நூல் நெடுகிலும் இத்தகைய விமர்சனங்களும், எச்சரிக்கைகளும் நிறைந்துள்ளன.

ஈழத்தில் (1983இல்) பல்வேறு விடுதலை அமைப்புக்கள் இருந்தன. இவர்கள் எல்லோருமே விடுதலைப் புலிகள் என்ற பொதுப் பெயரால் தமிழகத்தில் அழைக்கப்பட்டார்கள். அந்தப் பின்னணியில் ஈழத்தில் ஆயுதமேந்திப் போராடிய அனைத்து அமைப்புக்களையும் விடுதலைப் புலிகள் என விழித்து 1983 தீர்மானம் ஒரு பொது விமர்சனத்தை முன் வைத்திருந்தது. அது வருமாறு:

விடுதலைப் புலிகளின் தவறான பார்வை

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையில் அமைப்பு ரீதியான பலம்பெற்றிருக்கவில்லை.இக்குழுக்கள்பாட்டாளிவர்க்கத் தலைமையையும், சோசலிசத்தையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும் இவை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அந்நாட்டு ஜனநாயகப்புரட்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கவில்லை. விடுதலைப் புரட்சிக்கான ஒரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. ஒரு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டின் விடுதலைப்புரட்சி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாகும் என்பதைப் பார்க்கத் தவறுகின்றனர். இதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் இந்திய ஆளும்வர்க்க விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்துதான் சுயநிர்ணய உரிமையை அடைய முடியும் என்பதை உணரவில்லை. எனவேதான் ரஷ்ய ஏகாதிபத்தியத்தையும் இந்திய அரசின் விஸ்தரிப்புப் போக்கையும் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அத்துடன் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினை, தமிழ் விவசாயிகளின் நிலப்பிரச்சனையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இது ஜனநாயகப் புரட்சி என்பதையும் இவர்களால் உணர முடியவில்லை.

தமிழ் தலைமைகளின் சமரச சரணடைவு போக்கிற்கான வர்க்க அடிப்படையையும் இவர்கள் உணரவில்லை. இதன் விளைவாக சுயநிர்ணய உரிமைக்காகப் போராட்டத்திற்கு இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள் எனப்படும் அமிர்தலிங்கம், தொண்டமான் வகையறாவும் தலைமை தாங்க இயலாது என்பது மட்டுமல்ல; அவை சீர்குலைப்பதுவுமாகும் என்பதை உணர வேண்டும்.

இவர்கள் பாட்டாளிவர்க்கத் தலைமையை ஏற்பது உண்மையானால் இலங்கை நாட்டிலுள்ள வர்க்க முரண்பாடுகளைச் சரியாகக் கையாள முன்வர வேண்டும். இதன் பொருள் மலையகத் தமிழ் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கான அணுகுமுறையையும் சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுப்பதற்கானக் கண்ணோட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கி பின்வரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

* விடுதலைப் புலிகளின் இன்றைய பணி சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பதே

ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத சீர்திருத்தவாத செயல்தந்திரத்திற்கு எதிராக, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பின் தவிர்க்க முடியாத உடனடிப் பணியாக இருக்கிறது.

ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் சுதந்திரம் மற்றும் தேசிய நலன்களின் அடிப்படையில் அமைந்த அரசியல், பொருளாதார இராணுவக் கொள்கைகளை உள்ளடக்கமாகக்கொண்ட ஒரு குறிப்பான திட்டத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு முன்வைக்க வேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகளாகச் செயல்படும் சிறுகும்பலைத் தவிர, பரந்துப்பட்ட ஈழத்தமிழர்கள் அனைவரையும் மேற்கூறப்பட்ட குறிப்பான திட்டத்திற்கு ஆதரவாகத் திரட்டுவதே இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பு தனது குறிக்கோளை அடைவதற்கும், விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் கொண்டிருப்போர் கூட, ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களானால், விடுதலைப் போரை ஆதரித்தால், அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் புலிகள் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு, அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கும், ஆயுதம் ஏந்துவதற்கும் உரிமை அளிக்கவேண்டும்.

தங்களது அரசியல் அதிகாரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட பகுதிகளில் மக்கள் கமிட்டிகளை அமைத்து, அவற்றிற்கு அதிகாரம் வழங்குவதின் மூலமாக ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழினத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்காகப் போராட வேண்டியது அவசியம்தான். என்றாலும், ஈழத்தமிழ் இனத்தின் தற்சார்புப் பொருளாதாரத்திற்குத் திட்டமிட வேண்டும். அப்போதுதான், நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்க முடியும். மக்களின் வாழ்நிலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்து, அவற்றை அமல்படுத்த வேண்டும்.

பாரம்பரியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் மத உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில், அவர்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டும்.

இலங்கைப் பொருளாதாரத்தை, ஏகாதிபத்தியவாதிகளுக்கு அகலத் திறந்துவிடும் இலங்கை அரசின் பொருளாதாரக் கொள்கைக்கும், அதன் பாசிச ஒடுக்குமுறைக்கும் எதிராக, சிங்களத் தேசிய இன மக்கள் நடத்தும் போராட்டத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரிக்க வேண்டும். சந்திரிகா அரசாங்கத்தின் அமைதிவாத, சீர்திருத்தவாத மோசடிகளைச் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் இன ஒடுக்குமுறை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், இரு இனங்களும் ஒரே அரசமைப்புக்குள் வாழவேண்டுமானால், ஈழத்தமிழ் இனத்தின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் ஒரே வழி என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் புலிகள் அமைப்பு எடுத்துரைக்க வேண்டும். இதற்கு ஆதரவாகச் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்த, ஜனநாயகவாதிகளின் ஆதரவைத் திரட்ட முற்படவேண்டும்.

போர் ஓய்வுக் கண்காணிப்புக் குழு, செஞ்சிலுவைச் சங்கம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்தல் என்ற பேரிலும் இன்னும் பிற வடிவங்களிலும், ஏகாதிபத்திய நாடுகளின் இராஜதந்திரிகள் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் வலம் வருகிறார்கள். இலங்கைப் பேரினவாத அரசுடன் ஒத்துப்போகச் சொல்லி, நயமாகவும், மிரட்டியும் விடுதலை புலிகள் அமைப்பை நிர்ப்பந்தம் செய்யும் இராஜதந்திரங்களைத் திரைமறைவில் செய்ய முனைந்துள்ளனர். இந்த நிர்ப்பந்தங்களை எதிர்த்து உறுதியாக நிற்பதுடன், அவற்றிற்கு எதிராகப் பரந்துப்பட்ட மக்களைப் புலிகள் அமைப்பு திரட்டவேண்டும்.

மேற்கூறப்பட்டவற்றைச் சாதிப்பதன் மூலமே, ஈழத்தமிழின விடுதலைப் போராட்டத்தின் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதும் நீண்ட யுத்தத்தில் ஊன்றி நிற்பதும் உறுதிப்படுத்தப்படும்.

மேலாதிக்க நாட்டம் கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சுவார்த்தையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு, இப்பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்துவருகிறது. இந்திய அரசின் இந்த இழிவான இராஜதந்திரத்தை முறியடிப்பது, ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகளின் பணி மட்டும் அல்ல. இது இந்திய ஜனநாயகவாதிகள், குறிப்பாகத் தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டிய பணியும் ஆகும்.

இந்திய ஆளும் கும்பல்களுடன் தமிழக ஆளும் வர்க்கம் கொண்டாடும் கூட்டுறவு குறித்து எச்சரிக்கப்பட்டது. ஒரு அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டின் விடுதலைப்புரட்சி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாகும் என்பதைப் பார்க்கத் தவறுகின்றனர். இதன் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தையும் இந்திய ஆளும் வர்க்க விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்துதான் சுயநிர்ணய உரிமையை அடைய முடியும் என்பதை உணரவில்லை

தமிழகக் கட்சிகள்

தமிழரின் நலன்களைப் பேணிக்காப்பதாகக் கூறிக்கொள்ளும், தி.மு.., .தி.மு.., .தி.மு.. முதலிய கட்சிகள், மேலாதிக்க நோக்கத்துடன், இந்திய அரசு கடைப்பிடிக்கும் இராஜதந்திரத்தைக் கண்டும் காணாதது போல் மௌனம் சாதிக்கின்றன. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில், பேச்சுவார்த்தை நடைபெறாமல் முட்டுக்கட்டை போடும் இந்திய அரசின் இராஜதந்திரத்தை எதிர்த்து இக்கட்சிகள் ஏதும் செய்யவில்லை. பிரபாகரனைப் பிடித்துத் தருமாறு, இந்திய அரசு கோருவதைக் கூட இக்கட்சிகள் கண்டிக்கவில்லை. தமது நாடாளுமன்ற, சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாதகமாக, ஓட்டுப் பொறுக்குவதற்காகத் தமிழக மக்களின் இன உணர்வைப் பயன்படுத்துவது இக்கட்சிகளின் வழக்கமாகிவிட்டது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், பாசிச இராவ் அரசு மேற்கொள்ளும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது, ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.

  • எனினும் நாடாளுமன்ற சந்தர்ப்ப வாதத்திலும் சீர்திருத்தவாதத்திலும் மூழ்கிக் கிடக்கும் இக்கட்சிகள், தனது சொந்த தேசிய இனமான தாய்த் தமிழகத்தின் சுயநிர்ணய உரிமையை அடைவதை நோக்கமாகக் கொள்ளாத இக்கட்சிகள், ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்தும், ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்த்தும் உறுதியாகத் தொடர்ந்து போராடுமென்று சொல்வதற்கில்லை.
  • ஈழத்தமிழின பிரச்சினை குறித்து அண்மையில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை வெளியிட்டுள்ள கருத்துக்கள் அது, தான் எப்போதும் பெரும் தேசிய வெறியின் காவலன் என்பதை உறுதிப்படுத்துகிறது. இலங்கை ஒற்றுமையின் அடிப்படையில்தான் ஈழத் தமிழின பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கூறுகிறார். எத்தகைய சூழ்நிலையிலும் ஒரு தேசிய இனம் தனிநாடு அமைத்துக்கொள்வதற்கு போராடக்கூடாது என மார்க்சியம் கூறுகிறதா? திருமணமான பிறகு கணவன் பெண்பித்தனாக, குடிகேடனாக, துன்புறுத்துபவனாக, ஒடுக்கு முறையாளனாக இருந்தாலும்,எத்தகைய ஒரு நிலைமையிலும் ஒரு பெண் விவாகரத்து கோரக்கூடாது என்று சொல்வதுபோல்தான் அதன்வாதம் இருக்கிறது. நூறு ஆண்டுகளானாலும் ஈழத் தமிழினப்போர் வெல்லாது என்று வாதிடுகிறது. ஆனால் ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் நூறு ஆண்டுகளானாலும் பிரச்சினை தீராது. நூறு ஆண்டுகளானாலும் ஈழ விடுதலைப்போரை ஒடுக்கமுடியாது. இதனால் அந்நாட்டில் வர்க்கப்போராட்டத்திற்கான சிறந்த நிலைமைகள் உருவாகாது என்பது மட்டுமல்ல, அது பின்னுக்குத் தள்ளப்படும். மார்க்சு காலத்தில் எழுந்த அயர்லாந்து விடுதலைப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. "ஈழத்தமிழின பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால்,பிரபாகரன் அழிக்கப்பட்டாலும் வேறு ஒருவர் தோன்றுவார், எனவே இதற்கு அரசியல் ரீதியில் தீர்வு கண்டாகவேண்டும்" என்று கூறும்படி சந்திரிகாவே நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இந்த வரலாற்று உண்மை 'மார்க்சிஸ்ட்' கட்சிக்கு எங்கே புரியப்போகிறது. திருத்தல்வாதிகளுக்கே உரிய 'வரலாற்றுக் கடமையை' ஆற்றி அது மடியவேண்டும் என்பது ஒரு நியதி. இந்த நியதியை 'மார்க்சிஸ்ட் கட்சி'யால் மீற முடியாது.

ஈழவிடுதலை யுத்தத்தின் தன்மை குறித்தும் அதனால் தீர்மானிக்கப்படும் இராணுவ மார்க்கம் குறித்தும் சொல்லப்பட்டது. மலையக முஸ்லிம் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கான அவசியம் உணர்த்தப்பட்டது.

இவர்கள் பாட்டாளிவர்க்கத் தலைமையை ஏற்பது உண்மையானால் இலங்கை நாட்டிலுள்ள வர்க்க முரண்பாடுகளைச் சரியாகக் கையாள முன்வரவேண்டும். இதன் பொருள் மலையகத் தமிழ் மக்களுடன் ஐக்கியப்படுவதற்கான அணுகுமுறையையும் சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுப்பதற்கானக் கண்ணோட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கி பின்வரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

விடுதலைப் புரட்சியை நிறைவேற்ற ஒரு புரட்சிகரத் தத்துவத்தின் ஒளியில் தீட்டப்பட்ட திட்டத்தின் மீது அமைந்த ஒரு கட்சியின் அவசியம் இடித்துரைக்கப்பட்டது.

ஈழத்தமிழ் போராளிகள் தமது நாட்டு தேசிய இன விடுதலைப் புரட்சியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை வகுத்து கொள்ளவில்லை. அத்திட்டத்தை வழிகாட்டியாக கொண்டும், சர்வதேசிய, தேசிய நிலைமைகளைப் பற்றி ஒரு சரியான மதிப்பீட்டின் அடிப்படையிலும், கோட்பாடு ரீதியில் அமைந்த அரசியல், இராணுவப் போர்தந்திரங்களை வகுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவாக தேசிய இன விடுதலைப் புரட்சியின் நேர்முக, மறைமுக சேமிப்பு சக்திகளை தவறாக கையாண்டனர். இதற்கு காரணம், நவீன சமுதாயத்தின் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் தத்துவத்தை - மார்க்சிய - லெனினிய - மாசேதுங் சிந்தனையைத் - தமது சித்தத்திற்கும், செயலுக்கும் வழிகாட்டியாக அவர்கள் கொள்ளவில்லை. அதற்கு மாறாக குட்டிமுதலாளிய சிந்தனையில் தமது திட்டங்களையும், செயல்களையும் வகுத்துக் கொண்டார்கள். சிந்தனைத் துறையில் குட்டி முதலாளியத்திற்கு முதலாளியத்தினின்று தனித்து ஒரு தத்துவம் கிடையாது. ஆகவே ஒரு ஆளும் வர்க்கப் பிரிவை எதிர்த்து மற்றொரு ஆளும் வர்க்கப் பிரிவை, இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்த்து இந்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து நின்றார்கள். மக்களிடையிலும் இலங்கை அரசை எதிர்த்து இந்திய அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். ஆகையால் இந்திய அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து போகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் சமரச சந்தர்ப்பவாத ஊசலாட்டங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டது. இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வாக இந்திய ஆளும்வர்க்கங்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் முன்வைக்கும் இறுதித்தீர்வு குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான திருவாளர் ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் 'தமிழ் கார்டியன்' என்கிற பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு கூறியுள்ளார்.

தமிழ் கார்டியன்:

"உலகத்தின் ஒரே மேல்நிலை வல்லரசான அமெரிக்காவும், பிரதேச மேல்நிலை வல்லரசான இந்தியாவும் தமிழ் இனச்சிக்கலுக்கு (Tamil Conflict) தீர்வு - இலங்கையின், ஒற்றுமை, மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குள்தான் தீர்வு காணப்படவேண்டும் என வலியுறுத்துகின்றன. இவ்வாறு அவர்கள் வலியுறுத்துவது, உங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் மீது ஒரு எதிர்மறையான பாதிப்பை (A Negative Imapact) ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?"

ஆண்டன் பாலசிங்கம்:

"அமெரிக்காவும் இந்தியாவும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இவ்விதமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அவர்களுடைய புவிசார் அரசியல் அக்கறைகளையும், நலன்களையும் நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். இக்கருத்துக்கள், அரசியல் சுதந்திரத்திற்கான தமிழர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் சொல்லப்பட்டவை அல்ல. அதற்கு மாறாக, இந்த மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு அரசியல்தீர்வு காண்பதற்காக - ஊக்குவிப்பதற்குச் சொல்லப்பட்டவை. தமிழர் பிரச்சனைக்கு இறுதித் தீர்வைப் பொறுத்தமட்டில் அமெரிக்க மேல்நிலை வல்லரசோ, அல்லது இந்திய பிரதேச வல்லரசோ, அல்லது இலங்கை அரசு அதிகாரமோ தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவை அல்ல. எமது மக்கள், தமிழ் ஈழத்து மக்கள்தான் தங்களுடைய சொந்த அரசியல் அந்தஸ்தையும் தலைவிதியையும் இறுதியாகத் தீர்மானிப்பவர்கள் ஆவார்கள்."

மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஒருபுறம், ஈழத்தமிழ் மக்களுடைய தலைவிதியைத் தீர்மானிப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியமோ, இந்திய விஸ்தரிப்புவாதிகளோ அல்லது இலங்கை அரசோ அல்ல, ஈழத்தமிழ் மக்கள்தான் இறுதியாக தீர்மானிப்பவர்கள் என்று கூறுவது, இன்னும் அவர்கள் தங்களுடைய தேசிய இன விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் அக்கறையுடன் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மறுபுறம், ஈழத் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தை, இந்தியாவும் அமெரிக்காவும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவையல்ல என்று கூறுவது, ஏகாதிபத்தியத்தையும், இந்திய விஸ்தரிப்பு வாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் உள்ள அவர்களின் ஊசலாட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள், முதலாளித்துவ பாதையிலேயே அவர்களின் தாகம் என்று சொல்லப்படுகின்ற தமிழீழத்தை கட்டியமைக்க முடியும் என்கிற அவர்களுடைய வர்க்க சிந்தனையே, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுக்கு ஏற்படுகிற ஊசலாட்டத்திற்கான காரணம் ஆகும். ஆனால், ஈழவிடுதலைப் போருக்கு எதிராக இருப்பது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்புவாதிகளும் எதிரிகள்தான். இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடமல் தமிழ் ஈழத் தனிநாடு அமைப்பதோ, ஈழத்தமிழ் இனம் சுயநிர்ணய உரிமை பெறுவதோ இயலாது. திம்புப் பேச்சுவர்த்தையின் போதும், இந்திய அமைதிப்படையின் தலையீட்டின்போதும் எத்தனை ஈழத்தமிழ்ப் போராளி அமைப்புகளை அவர்களை விழுங்கிவிட்டார்கள் என்பதும், ஏன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பையே பிளவுபடுத்தவும், சீர்குலைப்பதற்குமான மிகக் கேவலமான சதிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் அண்மைக்கால வரலாற்று அனுபவங்கள். இந்த வரலாற்று அனுபவங்களை மறந்துவிடுவது அபாயகராமனது. ஈழ விடுதலைப் போருக்கு தோல்வியைக் கூட ஏற்படுத்தக்கூடியது.

====================================5=================================

இந்தப் பிரசுரங்கள் வெளிவந்த 17 ஆண்டுகளில் போராட்டம், பிரதானமாகவும் பின்னடைவுக்கான கூறுகள் துணையாகவும் இருந்த புறவய நிலைமையைப் பிரதிபலித்து போராட்டத்தைப் பிரதானப்படுத்தியும், பின்னடைவுக்கான சாத்தியக் கூறுகளை பின்னிலைப்படுத்தியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது இயல்பானதும் சரியானதுமேயாகும்.

ஆனால் இன்று தமீழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஈழப்போராட்டம் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நிலையில் பின்னடைவுக்கு இட்டுச் செல்லக்கூடிய கூறுகளாக இடித்துரைக்கப்பட்ட அம்சங்களை பிரதானப்படுத்தி கற்றறிந்துகொள்ள வாசகர்கள் முயலவேண்டும். மேலும் குறிப்பாக இவ்விமர்சனங்களும் எச்சரிக்கைகளும் கடந்த 17 ஆண்டுகளின் அனுபவத்தில் வெறும் போதனைகளாக மட்டுமன்றி தேசம் தழுவிய நடைமுறை அனுபவ உண்மைகளாக மாறி விட்டதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

====================================6=================================

இப்பிரசுரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிக்குறிப்பான அரசியல் சூழ்நிலையின் தேவைகளை ஈடுசெய்யும்பொருட்டு பிரசுரிக்கப்பட்டவையாகும். எனினும் இக்காலப்பகுதி முழுமைக்கும் பொதுவாக ஒரு அம்சம் இருந்தது. அது ஈழத்தமிழர்களுக்காக போரிடுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைமையும், படையும் இருந்ததாகும். இன்று அந்த நிலைமை இல்லை.

வேறு விதமாகச் சொன்னால் ஸ்தாபன ரீதியாக மட்டுமல்ல, ஒரு சித்தாந்த அரசியல் போக்கு என்கிறவகையில் குட்டிமுதலாளித்துவ தேசியவாதம் தோல்விகண்டுள்ளது.

மேலும் சர்வதேச சூழ்நிலை மாறிவிட்டது,

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆன உறவு நிலை மாறி விட்டது.

பிராந்தியச் சூழ்நிலை மாறிவிட்டது.

இலங்கை அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாறிவிட்டன.

இக்குறிப்பான சூழ்நிலமையின் பருண்மையான ஆய்விலிருந்தே ஒரு புரட்சிகர இயக்கம் தனது கடமைகளை வகுத்து அடுத்த காலடியை எடுத்து வைக்க முடியும்.

இதை ஈழத்தில் நிறைவேற்றத் தயாராகி, தலை தூக்கியிருக்கும் புதிய ஈழப்புரட்சியாளர்கள், ஈழமக்கள் ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம் கால கட்டத்தின் குட்டி முதலாளித்துவ தேசிய வாதம் அரசோச்சிய காலத்தின் மதிப்பார்ந்த அனுபவங்களை உரிய முக்கியத்துவமளித்து படிப்பினை பெற்றுக் கொள்வார்கள். அதற்கு இத்தொகுப்பு ஒரு ஒளி விளக்காய்த் திகழும்.

====================================7=================================

முடிவாக

தமிழீழ விடுதலைக்கு சமரன் அளித்த தத்துவார்த்த தலைமையை பின்வருமாறு வரையறை செய்யலாம்:

முதலாவதாக; தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சியை அரசியல் போர்த்தந்திர வழியில் நிறுத்தியது

இரண்டாவதாக: தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைத்து, இலங்கையின் ஸ்தூலமான ஆய்விலிருந்து, தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு பிரிவினைக் கோரிக்கையாக அமைந்திருப்பதை அறிந்துணர்ந்து, தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது.

மூன்றாவதாக; தமிழீழ தேசிய விடுதலைக்கு தலைமை அளிக்க புரட்சிகர சித்தாந்தம், புரட்சிகர திட்டம், இதன் மீது அமைந்த புரட்சிகர கட்சி அவசிய நிபந்தனை என்பதை அறிவுறுத்தியது.

நான்காவதாக; புரட்சியின் மிக ஆதாரமான பிரச்சனைகளான உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும், சர்வதேசம் தழுவியும்

) விடுதலைப் புரட்சியின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? இடை நிற்கும் சமரச சக்திகள் யார்?

) நண்பர்கள் மற்றும் சமரச சக்திகள் இடையிலான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி?

) எதிரிகளுக்கிடையான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்கிற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அதை நடைமுறையில் உணர்த்தியது.

ஐந்தாவதாக; விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிறு முதலாளித்துவ தேசியவாத சக்திகளோடு, முரணற்ற ஜனநாயகத்தின், தேசிய விடுதலைப் புரட்சியின் உழைக்கும் மக்களின் முன்னணிப்படை ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை முன்னிறுத்தியது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதத்தின் பேரால் இம் மாபெரும் புரட்சிகரக் கடமையை எமக்கு நிறைவேற்றித் தந்தது சமரன் ஆகும். தத்துவம் மக்களுக்குள் இருந்து வருவதில்லை, அது வெளியில் இருந்து மக்களுக்குள் செல்லவேண்டும். நமக்கு அது சமரனிடமிருந்து கிடைத்தது. அதற்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நன்றியின் பேரால் சமரன் வழியில் தமிழீழ விடுதலைப் புரட்சியை மீண்டும் கட்டியமைக்க உறுதி பூணுவோம்.

எதிர் வரும் காலத்து எமது பணிகளுக்கு இந்நூல் என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

ஈழத்தமிழர்களின் தேவை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!


சுபா - புதிய ஈழப் புரட்சியாளர்கள்.


15-08-2010