Tuesday 3 June 2014

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (2)

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (2)

மோடி ஆட்சி கடைப்பிடிக்கப் போகும் பொருளாதாரத் திட்டத்தின் திசை வழி குறித்து:

மோடி ஆட்சியின் பொருளாதார-அபிவிருத்தித் திட்டம் தாராளமய, தனியார்மய,உலகமய (Liberalization, Privatization,Globalization - LPG)  பாதையே என்பது தெளிவு.இதை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் `அபிவிருத்தி` எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன் ஆட்சி கடைப்பிடித்த அதே அந்நிய சார்ப்புப் பாதையையே மோடி ஆட்சியும் பின்பற்றப் போகின்றது.அதாவது மோகன் ஆட்சி அழிவில் நிறுத்திய பொருளாதாரத்தை, மோடி ஆட்சி பேரழிவுக்கு இட்டுச் செல்லப்போகின்றது.

இதன் விளைவாக வெகுஜனங்களிடமிருந்து எழும் சினத்தை நசுக்க இந்தியப் பாசிச அரசையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகின்றது.

என்னதான் பாரதமாதா, இந்துத்துவா, சிவப்புப் பொட்டும்,காவிச்சட்டையுமாய் வர்ணாசியில் யாகம் நடத்தி,பாராளமன்றப் படியில் விழுந்து கும்பிட்டு, `இந்து-இந்திய` நாடகம் ஆடினாலும்,பொருளாதாரம் என்று வருகின்ற போது, வழிநடத்துகின்ற இராமர்கள் என்னவோ, அயோத்தியில் இல்லை, அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும்,IMFஇலும், WB இலும் தான் இருக்கின்றார்கள்!

ஏகாதிபத்திய சந்தை நலன்களின் அடிப்படையில் உலக விவகாரங்களை நோக்கும் உலகத்தரமிக்க பத்திரிகை Financial Times (FT) ஆகும்.
இது இலண்டனை தளமாகக் கொண்டு இயங்குகின்றது.ஏகாதிபத்திய புல்லுருவிகளின் சர்வதேசத் தலைமையகம் லண்டன் ஆகும்.

Martin Wolf
இப்பத்திரிகையின் பிரதான Commentator  Martin Wolf என்பவர் ஆவார். முதலாளித்துவ பொருளாதார கல்விமான்.``தாராளமய,தனியார்மய,
உலகமய`` காலனியாதிக்க பொருளாதாரக் கோட்பாட்டின் மூர்க்கமான பாதுகாவலர்.ஏகாதிபத்திய புல்லுருவிகளின் சிந்தனைச் சுரங்கம்.

Financial Times (FT) பத்திரிகை மோடி ஆட்சி அமைத்ததும், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையையும், அதாவது 10 ஆண்டு
மோகன் ஆட்சி விட்டுச்சென்ற இடத்தையும், இதிலிருந்து மீள மோடி ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்றும் இவரிடம் கருத்தறிந்தது.

அவர் இந்தியப் பொருளாதாரத்தின் நான்கு கூறுகளை தனித்தனியாக ஆராய்ந்து,பின்னர் அவற்றை,அவற்றுக்கிடையில் உள்ள பரஸ்பர
உறவில் ஆராய்து,இறுதியாக அவற்றின் பொதுத்தொடர்பில் இந்தியப் பொருளாதாரம் குறித்த தனது தீர்ப்பையும்,தீர்வையும் முன்
மொழிந்தார். மோடி ஆட்சி அதை வழி மொழிந்திருக்கின்றது!

அவசியம் கருதி இந்த அறிவாளி தனது ஆய்வில் இந்தியாவின் வேலையின்மை, வறுமை போன்ற முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கு
எந்த மதிப்பும் அளிக்கவில்லை. இவரது ஆய்வின் இறுதியில் இந்த விபரங்களை நாம் இணைத்துள்ளோம்.

நான்கு அம்சங்கள்: 1) வாக்குப் பங்கு 2) மொத்தத் தேசிய உற்பத்தி 3) இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு 4) பணவீக்கம்/ நிதி நிலைப் பற்றாக்குறை
என்பன ஆகும்.

 1) வாக்குப் பங்கு



பா.ஜ.க.வுக்கு கிடைத்த வாக்குகள் மற்றும் ஆசனங்களையும், காங்கிரஸ் அடைந்த படுதோல்வியையும் ஒப்பீடு செய்து , பா.ஜ.க.வுக்கு இது ஒரு
பிரமாண்டமான வெற்றி என்று பிரகடனம் செய்தார்.மோடியின் தனிப்பெரும்பான்மைப் பலத்தை இந்திராவின் பலத்தோடு ஒப்பீடு செய்தார்.
இந்த ஒப்புவமையின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமல்ல. அந்தப் பலத்தைக் கொண்டு தான் இந்திரா தாராளமயக் கொள்கையை
அமூலாக்கினார்.

ஆக வாக்குப் பங்கு குறித்த அவரது ஆய்வு அநுமானிப்பது என்னவென்றால், மோடி ஆட்சியின் பொருளாதார-அபிவிருத்தித் திட்டம் தாராளமய,
தனியார்மய,உலகமய (Liberalization, Privatization,Globalization - LPG) பாதையில் பயணிப்பதற்கு மோடி ஆட்சி தங்கு தடையற்ற பலம் பெற்றிருக்கின்றது
என்பதாகும்.

2) மொத்த உள்நாட்டு உற்பத்தி



மோகன் ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகால மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி 5வீதமே ஆகும்.இது தான் மோகன் ஆட்சியின் சாதனை
ஆகும்.9-10 வீதத்தில் ஆரம்பித்து 4.5% அதல பாதாள வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரத்துக்கு காரணமான மோகன் கொள்கைகள் குறித்து
இந்த மேதை ஒரு வரி கூடக் கூறவில்லை.மாறாக ``சாதாரணமான சில பொருளாதார கொள்கை நடவடிக்கைகளைக் கொண்டே`` இந்தியப்
பொருளாதாரம் 7-9% வளர்ச்சியை எட்ட முடியும் என்கிறார்.மேலும்``அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் முதன்மைப்
பொருளாதாரமாக இந்தியா மாறவில்லையென்றால் அது என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்`` என்று கொம்பு சீவி விடுகின்றார்.

3) இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு



இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு 3 தளங்களுக்குள் அடக்கப்படுகின்றது. அவை
1) சேவைத் துறை
2) கட்டுமானத்துறை
3) விவசாயத்துறை என்பனவாகும்.

சேவைத்துறை இதர இரு துறைகளையும் விழுங்கி வருவதில் பரமானந்தம் அடையும் அவர், சேவைத்துறையின் வளர்ச்சித் தேவையை ஈடு செய்வதற்கு நிகராக கட்டுமானத்துறை வளரவில்லையெனகவலைப்படுகின்றார்.இதனால் கட்டுமானத்துறை Infrastruture ஐகட்டியெழுப்ப முயலவும்,முதலீடு செய்யவும் வேண்டும் என்கின்றார். இந்தக் கட்டுமானத்துறை என்பது பெருவீதத் தொழிற்துறை அல்ல, சேவைத்துறைக்கு சேவகம் செய்யும் உப கட்டுமான துறையே ஆகும். இந்தக்கட்டுமானத்துறையில் முதலீடு செய்வதன் மூலம் கட்டுமானத்துறையையும், சேவைத்துறையையும் விரிவாக்க முடியும் என தர்க்கிக்கின்றார்.

நசுங்கி வரும் சீனா இப்பாதையில் இருந்து விலகி வருவதால் இது இந்தியாவுக்கு அரிய வாய்ப்பாகும் என்று கூறி -சீனாவை நசுக்கிய பாதையை இந்தியாவுக்கு சிபார்சு செய்கிறார்.

மேலும் இந்தியா சீனாவைக் காட்டிலும் மிகவும் வறிய நாடு என்பதால் கூலிமட்டமும் அந்தளவு தாழ்ந்திருக்க வேண்டுமென்றும், அமைப்புசார்
துறையில் அந்நிய முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் தொழிலாளர் நல பாதுகாப்புகள் நீக்கப்பட வேண்டுமெனவும் நீசத்தனமாகக் கூறுகின்றார்.

4) பணவீக்கமும் நிதிநிலைப் பற்றாக்குறையும்.



பணவீக்கம் (9%) மிக உயர்வாக உள்ளது.நிதிச் செலவினக் கொள்கை (Fiscal policy), வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு சிக்கனப்படுத்தப்பட வேண்டும்,
இந்த வீண் விரயம்- ``Too much waste'', என்பது அரசாங்க மானியங்கள் ஆகும்! (Monetary Policy) பணக்கட்டுப்பாட்டுக் கொள்கை மாற்றப்பட வேண்டும்,
அதாவது அந்நியமுதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்கிறார்.

இந்தப் பொருளாதாரக் கல்வி மானுக்கு இந்தியப் பெரு நாட்டின் வேலையின்மையும்,வறுமையும் ஒரு பொருளாதாரப் பிரச்சனையாகத்
தோன்றவேயில்லை.இங்கே தான் ``தூய`` அறிவின் வர்க்கச்சார்பு அடங்கியிருக்கின்றது.

ஆக முடிவாக,
உள்நாட்டு உற்பத்தித் தேக்கம்,பணவீக்கம்,கட்டுமானத்துறை வீழ்ச்சி,நிதிச் செலவின,பணக்கட்டுப்பாட்டு கொள்கை மாற்றம், தொழிற்சங்க,
தொழிலாளர் உரிமை பறிப்பு அடங்கிய அமைப்பு ரீதியான மாறுதல் செய்யப்படவேண்டும் என்பது அவரது தீர்ப்பாகும்.இந்த அமைப்பு ரீதியான
மாறுதல் என்பது அரைக்காலனிய இந்தியப் பொருளாதாரத்தை முழுக்காலனியாக்குவது தவிர வேறெதுவும் இல்லை.

``இந்தியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்`` (''Indians know what to do''). சாதிப்பதற்கு மோடிக்கு போதிய பலமும் (இந்திரா காந்தி போல்!) உண்டு, சாதிப்பாரா என்பதே கேள்வி எனக்கேட்டு, மோடியின் சாதனைக்கு வழிகாட்டியுள்ளார்.

1970 களில் இந்திரா ஆரம்பித்து படிப்படியாக இந்தியாவைப் பற்றிப்படர்ந்து வரும் புற்று நோயே  தாராளமய,தனியார்மய,உலகமய
(Liberalization, Privatization,Globalization - LPG) அந்நிய சார்பு பொருளாதாரப் பாதை ஆகும்.

மோடி RSS பாசிச சக்திகள் பெற்றிருக்கும் போலிப்பாராளுமன்றப் `பலம்` இதில் ஒரு பாய்ச்சலை  ஏற்படுத்தப் போவது திண்ணம்.

நமது கல்விமானுக்கு ஒரு பொருட்டாக தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்ட  `வேலையின்மையும்,வறுமையும்` இந்த முரண்பாட்டின்
மறு பக்கமாகும்.

அந்த தகவல்கள் வருமாறு.

1) வேலையின்மை


இந்தப் போலிப் புள்ளிவிபரம் காட்டுகிற அளவுக்குள்ளேயே மோகன் ஆட்சியில் பத்தாண்டு சராசரியாக 8% வேலையின்மையும். இறுதி ஐந்தாண்டுகளில் 10% வேலையின்மையும் இருந்ததைக் காண முடியும்.

2) வறுமை


ஏறத்தாழ 200 உலக நாடுகளில் வாழும் வறியவர்களில் 35% ஆனோர் இந்தியா என்கிற ஒரு நாட்டில் மட்டும் வாழ்கின்றார்கள்.அறுபது ஆண்டுகாலச் சுதந்திரம்  இந்திய உழைக்கும் குடிமகனுக்கு தின்னச் சோறு கூடக் கொடுக்கவில்லை, என்ன கொடுமை!

இங்கே தான் வர்க்கப் போராட்டத்துக்கான களம் திறக்கப்படுகின்றது.விதேசியத்துக்கு எதிரான தேசியத்தின் போர்க்களம் இது.

ஒரு சிறுபான்மை தரகுப் பெரு முதலாளித்துவ,பெரு நிலப்பிரபுத்துவ கும்பலின் நலனுக்காக இந்தியப் பெரு நாடு கொள்ளை போவதை , இந்திய
உழைக்கும் மக்கள் ஒரு போதும் அநுமதிக்க மாட்டார்கள். உழைப்பாளிகள் தொடர்ந்து உணவின்றி மடியமாட்டார்கள், விவசாயிகள் எலிதின்று
மாள மாட்டார்கள்.அடிமைத்தனத்தையும்,அடக்குமுறையையும் ஏற்கமாட்டர்கள்.தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை நசுக்கப்படுவதை
சகித்துக்கொள்ள மாட்டார்கள்.தலித்துக்கள் நீண்ட காலம் தங்கள் பிஞ்சுகள் தூக்குக் கயிற்றில் தொங்குவதை தாங்க மாட்டார்கள். ஜனநாயக சுதந்திர உணர்வுமிக்க இந்திய உழைக்கும் மக்கள் `இந்திய விரிவாதிக்கத்தை` ஏற்க மாட்டார்கள்.சார்க் நாடுகளோடு சகோதரத்துவம் என்கிற மோடிப்பாசிச பொய்மையை நம்ப மாட்டார்கள்.

மோடி ஆட்சியின் அநுமதியில் 60 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நிதி மூலதனம் இந்தியாவுக்குள் பாய்கிறது.இந்த இரத்தம் குடிக்கும் அட்டையை வெட்டியெறிய புரட்சி தவிர வேறு வழியில்லை.

உழைக்கும் மக்களைச் சார்ந்து மோடி RSS பாசிச ஆட்சியை  தூக்கி எறிய சூளுரைப்போம். ஒரு பிரளயத்துக்கான புறச்சூழலை கையகப்படுத்துவோம்!


http://video.ft.com/3583814584001/Wolf-on-what-Modi-s-win-means/Markets

புதிய ஈழப்புரட்சியாளர்கள்