தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,
(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)
பகுதி4:
தேசிய விடுதலை எழுச்சியும் தமிழ்த் தரகு முதலாளியத்தின் காட்டிக் கொடுப்பும் (1977 – 1987)
தேசிய விடுதலை எழுச்சியும் தமிழ்த் தரகு முதலாளியத்தின் காட்டிக் கொடுப்பும் (1977 – 1987)
1977 இல் சிங்கள வணிகத்தரகுமுதலாளியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஏற்கனவே வளர்ந்திருந்த பொருளாதார அரசியல் சமூக முரண்பாடுகள் மேலும் கூர்மையடைகிறது. தமிழ் மக்கள் தனித் தமிழீழ அரசை வேண்டி நின்றனர் ஜே.ஆர். 1915 இல், முஸ்லீம் வணிகத்தரகுமுதலாளிகளை அடித்து பணிய வைத்த வழிமுறையில், மக்களின் விடுதலை உணர்வையும் அடித்து பணியவைக்க நினைத்தார்! “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என யுத்தப் பேரிகை முழங்கியது . ஆவணியில் ஒரு இன அழித்தொழிப்புக் கலவரத்தின் இரத்தக்கறையோடு ஆட்சியை ஆரம்பித்தார் ஜே.ஆர். “தமிழினத் தலைவன்” அமிர்தலிங்கம் தமிழ்மக்களின் எதிர்ப்புக்களைக் காலில் போட்டு மிதித்து ‘எதிர்க்கட்சித்தலைவர்’ பதவியை ஏற்றுக் கொண்டார். (தமிழீழத்துக்காக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்ய ஒரு அரிய சந்தர்ப்பம்!”, “ஒரு தமிழன் எதிக்கட்சித் தலைவனாக இருப்பது எத்துணைப் பெருமை!”என்றெல்லாம் இது விளக்கப்பட்டது.)
மக்கள் ‘தமிழீழம் எங்கே’ என்று கேட்டார்கள். ‘”அந்நிய நாட்டில் அரசாங்கம்” வைகுந்தவாசனின் மசாசூட்ஸ் தமிழீழம்! அமைக்கப் போவதாகப் புரட்டினர். இப்படிச் சேடம் இழுக்கத் தொடங்கிய தமிழ்த்தரகு முதலாளியத்தின் “தமிழீழத்துக்கு” சீக்கிரமே மூச்சு நின்று போய்விட்டது. சிங்களத் தொழிற்துறைத் தரகர்களின் 1972 அரசியல் யாப்பு எதிர்க்கப்பட்டது. செல்வா பதவி துறந்தார். சிங்கள வணிகத்தரகர்களின் 1978 பாஸிச அரசியல் யாப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. `அமிர் அண்ணா` எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப் படுகின்றது.(1978). பயங்கரவாதத் தடைச்சட்டம். அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டு (1979) தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்படுகின்றனர். தாராள இறக்குமதிக் கொள்கை, சுதந்திர வர்த்தக வலயம் என ஏகாதிபத்திய சுரண்டலுக்கு நாட்டை அம்மணமாக நிறுத்தியது, நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியது. ஒடுக்குமுறையும் கூர்மையடைந்தது. தமிழ்த்தேசிய விடுதலை எழுச்சி தீவிரமடைந்தது.
தமிழ்த்தரகுமுதலாளியம், தன் வணிகச் சுரண்டல் நலனுக்குக் கிடைத்த வாய்ப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டது. எந்த ஒரு போராட்டத்திலும் இறங்கவில்லை. எல்லா ஒடுக்குமுறைக்கும் துணைபோகிறது. வர்க்க நலனின் முன்னால் ‘இன நலன்’ அர்த்தமற்ற செல்லாக்காசாகி விட்டது.
இறுதியாக அரைக்காலனிய அமைப்பு முறைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய தேசிய விடுதலை எழுச்சிக்கு வடிகால் அமைக்க சிங்களத் தரகுமுதலாளியத்துடன் கூட்டுச் சேர்ந்து ‘மாவட்ட அபிவிருத்திச் சபை’த் திட்டத்தை முன்வைக்கின்றனர். இதிலேயும் குறைந்தபட்சம் ஒரு சுயாட்சிக்கான சுவடு கூடக் கிடையாது. போராளிக் குழுக்களதும், மக்களதும் தீவிர எதிர்ப்பின் மத்தியில் தமிழ்த்தரகுமுதலாளியம் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் பங்கேற்கிறது. இச்சமரச முயற்சி படு தோல்வியைத் தழுவியது.
தமிழ்த்தரகுமுதலாளியத்தின் கையை மிஞ்சி வளர்ந்து சென்ற தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ’83 ஜூலை இன அழித்தொழிப்பு’ பெரும் உந்து விசையை அளித்தது. தேசம் தழுவிய பேரெழுச்சியாக விடுதலைப் போராட்டம் குமுறி வெடித்தது. எல்லோரும் ஆயுதங்களைத் தேடினர். “வீட்டுக்கு ஒருவன்” அல்ல பலர் வீதிக்கு வந்தனர். “பழம் பழுத்தது”!
இப் பேரெழுச்சியைத் ஒடுக்க சிங்களத்தரகுமுதலாளிய பேரினவாத பாஸிச அரசு (ஈழக்கோரிக்கையைத் தடைசெய்யும்) ஆறாவது திருத்தச் சட்டத்தை இயற்றியது; தமிழ்த்தரகுமுதலாளியத்தை நெருக்கடிக்குள் தள்ளியது. 6 வது திருத்தத்தை (பகிரங்கமாக) ஏற்றுக் கொண்டால் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட வேண்டும், தனது பின்புலத்தை இழந்து போனால் சிங்களத்தரகுமுதலாளியத்துடன் பேரம்பேசுவதற்கான பலத்தை இழந்துவிட நேரிடும், இந்தக் கதியேற்பட்டால் சிங்களத்தரகுமுதலாளியம் போடுகின்ற பிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு மேல் அதிகம் கோர பலமிருக்காது. திருத்தத்தை ஏற்கமறுத்தால் “பாராளுமன்ற பஞ்சுமெத்தை” பறிபோய்விடும். பாராளுமன்றத்தை விட்டுவிட்டு மக்களிடம் போனால் அவர்கள் ‘விடுதலையுணர்வோடு” இருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஆயுதங்கள் வேறு அது “தம்பிமாருக்குத்” “தலைவர்கள்” பணிந்து போகவேண்டிய கேவலமாகும்: பிறவர்க்கங்களுக்கு சேவகம் செய்கிற கொடுமையாகும். இந்த நேரத்தில் தான் வனாந்தரத்தில் ஒரு அசரீரி ஒலிக்கிறது. “தமிழ்மக்கள் அடக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்த்தரகுமுதலாளியம் பாக்கு நீரிணையைத் தாண்டுகிறது.
இந்திய அரசின் துணைகொண்டு இலங்கை அரசை பணிய வைத்து அதன் மூலம் தமது வணிகத்தரகுமுதலாளிய நலங்களை அடைய முயல்வது, இதற்குத் தடையாக இருக்கக் கூடிய விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் இந்திய அரசைக் கொண்டே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, இதற்காக இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு சேவகம் செய்வது இதுதான் அவர்களது திட்டம்.
· ஒப்புதல் வாக்குமூலம் ‘செல்வா ஈட்டிய செல்வம்’, (இந்திய – இலங்கை ஒப்பந்த வரலாறு), அ.அமிர்தலிங்கம், தமிழர் கூட்டணி வெளியீடு. சென்னை 13.09.1987 இல் இருந்து எடுக்கப்பட்டன. (பக் -29)
இந்த சதித்திட்டத்தை சாத்தியமாக்க தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் நாலு ஆண்டுகள் (83 -87) பாடுபட்டுள்ளது! முதல் கட்டத்தில் தமிழ்மக்களின் பாதுகாவலனாக இந்திய அரசு ஆடிய கபட நாடகத்துக்கு அங்கீகாரம் பெறவும், இலங்கை அரசைத் தனிமைப்படுத்தவுமான சர்வதேசப் பிரச்சாரத்தில் இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு சேவகம் செய்கிறார். அமிர்தலிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம் * (1)
” . . .இப்படியே உலகநாடுகளுக்கெல்லாம் எம் நிலையை விளக்க நாம் எடுத்த முயற்சி, மக்கள் துன்பப்பட ஓடிப்பதுங்கும் செயலா, துன்பம் துடைக்க இந்திய உதவியை அதற்கு உலகின் ஆதரவைத் திரட்டும் முயற்சியா? என்பதை நம்மக்கள் நிச்சயமாக அறிந்தே இருக்கின்றனர்.”
அதே நேரத்தில் சமரசத்தீர்வுக்கான முயற்சியில் இறங்குகிறார். இது இணைப்பு “c“ இலிருந்து இந்திய –இலங்கை ஒப்பந்தம் வரையான நீண்ட முயற்சியாகும். இந்த நீண்ட முயற்சிகளில் எங்கும் சுயநிர்ணய உரிமை பற்றியோ, குறைந்த பட்சம் ஒரு பூரண சுயாட்சிக்காகவோ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் முயலவில்லை. அதன் குறி அனைத்தும் மைய அரசின் அதிகாரத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்பதே. தமிழ்மக்களின் நண்பனாக நாடகமாடிய இந்திய அரசு போராளிக்குழுக்கள் திம்புவில் வைத்த கோரிக்கைகளை மறுக்கிறது. இந்த மறுப்பை ஏற்றுக்கொண்டு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் ஒரு ‘மாற்றுத்திட்டத்தை’ முன்வைக்கிறது. இத்திட்டம் வடக்கு கிழக்கு இணைப்புக்கூட கோரவில்லை. இந்தத் துரோகத்தை பூசி மெழுகிறார் அமிர்தலிங்கம். ஒப்புதல் வாக்குமூலம் * (2)
“1985 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றமானது சூழ்நிலையில் – திம்புக்கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்க மறுத்து விட்ட சூழ்நிலையில் ;- நாம் ஒரு மாற்றுத்திட்டம் முன்வைக்கா விட்டால் எமக்கு (தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு) நமக்குச் சார்பான ஒரே நாடான இந்தியாவின் ஆதரவை இழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக இந்தியாவின் நட்பைப் பேணுவதற்காக. நாம் ஒரு திட்டத்தைப் பாரதப் பிரதமரிடம் கையளித்தோம்.”
திம்புக்கோரிக்கை தமிழர்களின் ஜீவாதார நலன்களை உள்ளடக்கியது. இதை வலியுறுத்தினால் “இந்தியாவின் நட்புக்” கெடுகிறது! இதற்காக, அதை கைவிட்டுவிட்டு “இந்தியாவின் நட்புப் பேணப்படுகிறது” என்றால், அந்த நட்பு யாருடைய நலனைக் காப்பதற்காக?
பெங்களூர் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகள் சமரசமுயற்சியை நிராகரிக்கின்றனர். ஒப்புதல் வாக்குமூலம் (3)
”இதற்கு உடன் சம்மதத்தைப் பெறும் நோக்கத்தோடு இரவோடிரவாக தமிழீழ புலிகளின் இயக்கத்தலைவர் திரு.பிரபாகரன் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார். நீண்டவிவாதங்கள் நடைபெற்ற போதும் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.”
இதற்குப்பின்னால் போராளிக்குழுக்களை ஓரங்கட்டி வைத்து விட்டு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் இந்திய விஸ்தரிப்புவாத அரசின் சமரசத் திட்டத்துக்கு சதியாலோசனை வழங்கும் பாத்திரத்தை ஆற்றுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் (4)
“இதனால் இத்திட்டம் (டிசம்பர் -19) உத்தியோகபூர்வமாக தமிழ் இயக்கங்களுக்கு அறிவிக்கப்படவோ அவர்கள் கருத்துக்கள் கோரப்படவோ இல்லை.”
இறுதியாக இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்தை ஏற்கப்பண்ண இந்திய அரசே நேரடியாக அச்சுறுத்தியது.
1) சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஒழித்துக் கட்டவும்,
2) இலங்கைபாஸிச அரசைப் பாதுகாக்கவும்,
3) இந்திய மேலாதிக்கத்தை நிறுவவும் தமிழ்த்தரகு முதலாளியத்தின் முழு ஒத்துழைப்போடு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஒப்புதல் வாக்குமூலம் (5)
“ஏற்கனவே நாலு வருடங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் படிப்படியாக வளர்ந்து வந்த திட்டத்தில் இருந்து உருவாகிப் பிறந்ததுதான் ஜீலை 29 ந் திகதி கையெழுத்தான இலங்கை – இந்திய ஒப்பந்தமாகும்.”
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் (தேசத்துரோக இந்திய கைக்கூலிக் குழுக்களும்) மேலாதிக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது. தனது எதிர்ப்புரட்சிப் பாத்திரம் காரணமாக மக்களிடம் இருந்து தனிமைப்பட்ட இக்கும்பல், மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை வன்முறை கொண்டு நசுக்குவதன் மூலம் தமிழ்த்தேசிய இனத்தை இந்திய மேலாதிக்கத்தின் அடிமைகளாக்கி தனது தரகுமுதலாளிய வர்க்க நலனை அடைய இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இருந்த ‘குறைபாடுகளுக்கு’ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் முன்வைத்த திருத்தம் இதுதான்!. ஒப்புதல் வாக்குமூலம் (6)
“வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு நேரடி இந்தியத் தலையீடு அவசியம். சிங்களப் பொலிஸையோ, இராணுவத்தையோ அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது.”
ஈழப்போராட்டத்தை ஒடுக்கி, தமிழ்த்தேசிய இனத்தை தேர்தல் பாதைக்குள் இழுத்துவிட்டு இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்துக்கு பணியவைத்து தனது தரகுமுதலாளிய வர்க்க நலனுக்கு பக்கதுணையாக இருக்க வேண்டுமென இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் (7)
”இந்தியாவின் மேலான ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் எமக்கிருக்க வேண்டும்.அதுவே எமது பாதுகாப்புக்குஉத்தரவாதம், அதற்குப் பாத்திரமானவர்களாக (இந்தியக்கைக் கூலிகளாக!) நாம் நடந்து கொள்வோம்.”
இவ்வாறு தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தேசிய விடுதலைப் புரட்சியின் இலக்காக, தேசத்துரோக இந்திய கைக்கூலிக்கும்பலாக தமிழ்மக்கள் முன்னால் தன்னை முழு நிர்வாணமாக நிறுத்தியுள்ளது.
தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம் பகுதி 5
No comments:
Post a Comment