Sunday, 29 January 2012

யார் இந்த TNA?



யார் இந்த  –TNA (Tamil National Alliance)?

தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

(முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்.)

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த நாள் முதல், ஆயுதப் போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989 இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.இந்த வெற்றிகளில் முக்கியமானது, தமிழீழத்தைக் கைவிட்டு, பிரிந்து செல்லும் உரிமையைக் கை விட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டு, திம்புக்கோரிக்கையைக் கைவிட்டு, வருடா வருடம் மாவீரர் தின உரையின் தாரக மந்திரமாக இருந்த புலிகளின் தாகத்தையும் மறந்து, ஒரு புதிய வாக்கெடுப்பைக் கூடக்கோராமல் ஒற்றையாட்சிக்குள் `அக சுயநிர்ணய உரிமை` யின் அடிப்படையில் அதிகாரத்தைப் பங்கீடு செய்யலாம் என்று புலிகளை நம்ப வைத்த பாலசிங்கத்தின் சதி ஆகும்,}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது.
(10) The LTTE has for the past two years put up with the violent, surly behavior of the armed forces without impairing the conditions for peace and observing the cease-fire and acting steadfastly and firmly towards the path of peace. Hence, the international community should create the environment by removing the restrictions put in place by certain countries on the LTTE, the authentic sole representatives of the Tamil people, so that they could, with authority, dignity and with equal status conduct talks with the government of Sri Lanka
TNA Election Manifesto 2004

இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.

சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி, (நடைமுறைக்கு வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சமஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி, 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி, 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.

சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க் கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் இப் புனிதக் கூட்டுக் குறித்து, மனதுக்குள் முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.

பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.

இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.

இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள
முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம் பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள் என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிற மேலைநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாக்காவுடன் கூட்டமைத்து,  கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது.யுத்தக்குற்றம் பற்றிய முறையீட்டில் கலந்து கொள்ளவில்லை.  பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு  போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின் ஒரு  பகுதியாக இலங்கையிலும் அதன் பிரதிபலிப்பு வெடிக்கின்றது.அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளது.
அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வைத் தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது.
 இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்திய அரசியல் ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.

(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ்
மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது
பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த்
தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண
முயலவேண்டும் எனக் கோருகின்றார்.சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின்
நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)

புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன்
ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.

மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி
வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது
போய்விட்டன.

இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க
ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின்
நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய
அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.

இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு
காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப்
படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில்ம இருந்து அந்நியப்படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை  ஆழத்தள்ளி அதன் பழியை ஈழத் தமிழரைச் சுமக்க வைப்பதாகும். 

இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.

இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது
கூட்டமைப்பு.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ்
மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும்.

கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகார பேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.

போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில்
எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இந்த ஈர்ப்பு மையத்தைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.

ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.

இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும்
வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன
அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.

இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.இது ஒன்றே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட சிங்களத்தைத் தகர்க்கும்.இதுவே தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டும், இதன் மூலம் மட்டுமே இன மதச் சிறுபான்மை மக்களும், சிங்களப் பெருந்தேசிய இனமும் விடுதலை பெற முடியும்.

கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில்
பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற
பொருளிலேயே  ஆகும்.

ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத்
திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக,
ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது, ஐ.நா.யுத்தக் குற்றவாளியான சிங்கள இராணுவ அதிகாரியை தனது அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசகராக நியமித்துள்ளது! இவை தான் சமரசவாதிகள் அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ.நா. விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! ( இன்னும் நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)

1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)

இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள்
மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான
சமூகத் தூண்களாய் உள்ளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.
கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.

கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை
நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே
காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!

இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது அல்ல. ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க
முடியாது.தடுக்கக் கூடாது.இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்கு இன்று உடனடியாகத் தேவைப்படுவதெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டுதல் மட்டும் தான்.

இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீயாய் மூளும்!

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர்.இதனால்
இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப்
பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை
இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும்,
சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத்
தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின்,ஈழத்தமிழ் மக்கள் மீதான செல்வாக்கைத் தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

         * அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!


         * அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!


         * நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!


         * மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத் தீர்வே!


         * ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன
            வாக்கெடுப்பே!


         * ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக்
            கிழித்தெறியவும் போராடுவோம்!


         * அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான
            கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!


         * தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய
           கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
           இதர அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!


         * பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு
            தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!


         * மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப்
            படுத்துவோம்!


         * மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான
           சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
           அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!


         * சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும்
            உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!


         * உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும்
            ஒன்றுசேருவோம்!

                                                 புதிய ஈழப் புரட்சியாளர்கள்


                                                                        ஜனவரி-2012