ஓயாது அலை
தமிழீழத் தேசிய மாவீரர் தினம்
கார்த்திகை 27 2011
மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே, மற்றும் மரணித்த ஈழப்போராளிகளே செவ்வணக்கம்.
தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக தாங்கள் விதைத்த உடலை, எம் விவசாய பூமியெங்கும் குளம் குளமாய் நிறைந்து உறைந்த குருதிவெள்ளத்தை, உறவாலும்- பொருளாலும் தாங்கள் இழந்த உடமையை, அலைந்து திரிந்த அகதி வாழ்க்கையை, நம் சொந்தத் தவறுகளுக்கு தாங்கள் கொடுத்த விலையை, நீண்ட போரை எதிர்கொள்வதில் தாங்கள் காட்டிய வீரத்தை, தீரத்தை, அவற்றை வகுத்தெடுத்து படைத்தளித்த கலையை, பண்பாட்டை, பக்குவத்தை, மனோ தைரியத்தை, மானுட வலிமையை,
ஒரே வார்த்தையில்
தங்கள் புரட்சிகர ஆற்றலை
மதித்து மனதில் பதித்து, துதித்து ஆன்மீக ஆராதனை நடத்தும் இப் புனிதப் பெருநாள்,
ஈழ விடுதலைக்கான கடமையையும், பாதையையும், பணிகளையும் பிரகடனம் செய்யும் புரட்சித் திருநாளுமாகும்.
அவ்வாறுதான் அது இதுகாலமும் இருந்து வந்திருக்கின்றது, அவ்வாறுதான் அது இனிமேலும் இருக்கவேண்டும். இருக்கும்.
அத்திருநாளின் இவ்வருடப் பிரகடனமே
ஓயாது அலை.
`ஏகாதிபத்தியமே நீதிவழங்கு, இந்தியாவே தீர்வுவழங்கு` என முனகி, ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச சமரசக் கும்பல், கட்டியமைத்து வரும் பிற்போக்கு தேச விரோத இயக்கத்தைத் தோற்கடிப்போம்!
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போர் வெற்றி பெற, உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள் என முழங்கி, முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தைக் கட்டியமைப்போம்!
======================================================================
ஈழத்தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில் புரட்சிகர அலை எழுச்சியின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை.
(அறுபது ஆண்டுகாலச் சரித்திரத்தின் அறுவைச் சிகிச்சை)
===========================================================================
புரட்சிகர அலை எழுச்சியின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைக்கான காரணங்கள்
1. வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும் வர்க்க சக்திகளின் பரஸ்பர பலத்தில் ஏற்படும் மாறுதல்களாலும்,
2. சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களாலும்,
3. எதிர்பாராத விதமாக வர்க்கப் போராட்டத்துக்கு சாதகமான அல்லது பாதகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகளாலும் புரட்சிகர அலை எழுச்சியின் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு புரட்சிகர அலை எழுச்சியும் ஒரு குறிப்பான அரசியல் போக்கில் அல்லது அப்போக்கை வரையறுத்து வடித்துக் கூறும் அரசியல் முழக்கங்களின் மீதுதான் கட்டி அமைக்கப்படுகிறது.
இம்முழக்கம் புறவயச் சூழ்நிலையை எந்த அளவுக்கு விஞ்ஞானபூர்வமாக பிரதிபலிக்கிறது என்பதைப் பொறுத்து ஒரு புரட்சிகர அலை எழுச்சியை அடுத்த உயர்ந்த கட்டத்துக்கு கொண்டு செல்வதும் அல்லது அவ்வெழுச்சியை வடிய வைத்து தாழ்ந்த நிலைக்குத் தள்ளுவதும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் அலை எழுச்சி
1961- சத்தியாக்கிரகம் (ஒத்துழையாமை இயக்கம்)
போலிச்சுதந்திரத்தின் விளைவான அதிகாரக் கைமாற்றம் சிங்களத் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கங்கள் இணங்கி சம்மதித்துப் பெற்றுக் கொண்டதேயாகும். ஆனால் அதிகாரக் கைமாற்றத்தின் பின்னால் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொள்ள முயன்ற போது, சிங்கள தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கங்களிடையே முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கின.
இதனைப் பிரதிபலிப்பதாக டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா-செல்வா ஒப்பந்தம், கண்டி யாத்திரை, தனிச் சிங்களச் சட்டம், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் என்பன அமைந்தன. இந்தப் போராட்டப் போக்கில் சமஸ்டிக் கோட்பாடு உருவாகியது. இந்த சமஸ்டி முழக்கத்தின் மீது முதல் ஏற்பட்ட ஈழத்தமிழ் அரசியல் எழுச்சி சத்தியாக்கிரகமாகும்.
இந்த ஒத்துழையாமை இயக்கம் ஏகாதிபத்திய பக்கிரி காந்தியிடம் கடன் வாங்கிய சிந்தனையும் போராட்ட வடிவமும் ஆகும். சுமார் இரண்டரை மாதங்கள் வடக்குக் கிழக்கில் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தை இது ஸ்தம்பிக்கச் செய்தது. இச்சமரச இயக்கத்தின் சமஸ்டிக் கட்சித் தலைவர்கள் மீது பொலிஸ் குண்டர்களை ஏவி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு. இந்தப் பின்னணியில் தான் சமஸ்டிக் கட்சி எழுச்சிக்கால புகழ் பூத்த மூன்று பெரும் முழக்கங்கள் உதித்தன. அவையாவன
குண்டாந்தடிக்கு அஞ்சமாட்டோம்.
தூக்கு மேடை பஞ்சு மெத்தை.
போடு புள்ளடி வீட்டுக்கு நேரே.
இந்த எழுச்சியை கட்டியமைத்த முழக்கமே சமரசத் தன்மை கொண்டதாக இருந்ததால் பின்நாட்களில் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்துடன் பாராளுமன்ற பஞ்சு மெத்தையில் படுத்துப் புரள கூட்டமைத்து துரோகம் இழைத்த போக்கில் இந்த சமஸ்டி அலை வடியத் தொடங்கிவிட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டாவது அலை எழுச்சி
1977 பொதுத் தேர்தல்
1970களில் ஏற்பட்ட ஏகாதிபத்திய நெருக்கடி இலங்கையில் தேசிய இனப் பிரச்சனையை மென்மேலும் தீவிரப்படுத்தியது. சமஸ்டி இயக்கத்துக்கு கிடைத்த வெகுஜன ஆதரவை அமைப்பு ரீதியாக அணிதிரட்டி சமஸ்டி-சுயாட்சிக் கோரிக்கைக்காக போராட சமஸ்டிக்கட்சி முயலவில்லை. மாறாக சமஸ்டி இயக்கத்துக்கு மக்கள் அளித்த ஆதரவை வைத்து வாக்கு வேட்டையாடி, மைய அரசில் பங்கேற்று தன் சொந்த வர்க்கத்துக்கு ``கோட்டா`` -ஒதுக்கீடு- பெற்றுக் கொடுத்து சேவகம் செய்யவே முயன்றது.
மறுபுறம் 1972 குடியரசு அரசியல் யாப்பு, தரப்படுத்தல் சட்டம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், புத்தளம் பள்ளிவாசல் படுகொலை, தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை 1974, பாரிய அளவில் தமிழ் இளைஞர்களின் கைது, பஸ்ரியாம் பிள்ளையின் நாலாம் மாடிச் சித்திரவதைகள் என சிங்களப் பேரினவாத அடக்குமுறை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டது.
இதற்கெதிராக “பகிஸ்கரிப்பு, ஹர்த்தால், சட்டமறுப்பு” என சமரச வழி போராட்ட வடிவங்களைப் பாவித்து சமஸ்டிக் கட்சி தமிழ்பேசும் மக்களின் அரச எதிர்ப்பு விடுதலை உணர்வுக்கு வடிகாலமைக்க முயன்று வந்தது.
இதனை எதிர்த்த தமிழ் மத்தியதர வர்க்கத்தினரின் விரிசல் வெடிப்பாகியது. சமஸ்டிக் கோரிக்கை தனிநாட்டுக் கோரிக்கையாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் தலைமை குட்டி முதலாளிய வர்க்கத்துக்கு கைமாறியது. இதுமட்டுமல்லாமல் இக்குட்டி முதலாளிய அமைப்புக்கள் தேர்தல் புறக்கணிப்பை ஒரு கொள்கை என்று வேறு அறிவித்திருந்தனர். எனவே சரிந்துவிழும் செல்வாக்கைப் பாதுகாக்கவும் அடுத்துவரவுள்ள 1977 பொதுத் தேர்தலில் வெற்றிபெறவும் மக்களின் கோரிக்கையை தன்கையில் சமஸ்டிக் கட்சி எடுத்துக் கொண்டது. இதன் விளைவாக 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 1977 பொதுத் தேர்தலில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிவினைக்காக அன்றி வேறு எதற்காகவும் அத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. இதில் கிடைத்த வடக்குக் கிழக்குத் தழுவிய மாபெரும் தேர்தல் வெற்றியானது ஒரு பெரும் அரசியல் எழுச்சியும் தீர்ப்புமாகும்.
இவ்வெழுச்சியை தணிக்க தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து இறுதியாக 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை தமிழ் ஈழத்துக்கு எதிராக நிறுத்தியது. இதன் மூலம் 1980 களின் எழுச்சிக்கு அரசியல் அடிப்படையாக இருந்த தனிநாட்டு முழக்கத்தை சமரசவாத மாவட்ட அபிவிருத்தி சபை முழக்கமாக மாற்றீடு செய்வதன் மூலம் விடுதலை எழுச்சியை வடியவைக்க முயன்றது.
ஆனால் மாவட்ட அபிவிருத்திசபைத் திட்டத்தை எதிர்த்து ஒரு புறம் ஈழ மாணவர்கள் அரசியல் பிரச்சாரம் செய்தனர். மறுபுறம் தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடைக்கு கிரனைட் வீசிவிட்டு தப்பியோடிய விடுதலைப்புலி இளைஞர்கள் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என விண்ணதிர முழங்கிவிட்டு மாயமாய் மறைந்தனர். தேர்தல் சாவடியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்கள் மீது விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல் நடத்தினர். கந்தர்மடம் எரிந்து சாம்பலானது. யாழ்ப்பாணம் எங்கும் கொலைவெறித் தாண்டவம் கட்டவிழ்க்கப் பட்டது. இதை அடுத்து சிங்கள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கையாக திண்ணைவேலியில் தொடர் இராணுவ வாகன அணியொன்றின் மீது விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிதீர்க்கும் முகமாக1983 ஜூலை இனப்படுகொலை கட்டவிழ்க்கப்பட்டது. இத்துடன் 1977 தமிழின அரசியல் எழுச்சி அதன் உயர்ந்த வடிவமாகிய உள்நாட்டு யுத்தம் என்ற கட்டத்தை அடைந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மூன்றாவது அலை எழுச்சி
1987 திலீபனின் உண்ணாவிரதம்
1983 ஜூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து 1977 பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் விரும்பித் தெரிவித்த தெரிவுக்கு மாறாக தனிநாட்டுக் கோரிக்கையை சட்டவிரோதமாக்கும் இலங்கை அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தம் சட்டமானது. இதன் விளைவாக தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கம் சமரசப் பாத்திரத்தை ஆற்றுவதற்கான அரசியல் வல்லமையையும் சமூகத் தளத்தையும் இழந்தது.
இதனால் எல்லாம் அதன் சமரச இயல்பை அது கைவிட்டு விடவில்லை. இந்தியா சென்று தனது சமரசத்துக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கும் இடையில் இணக்கப்பாடு கண்டு, நெடுமாறனின் ஆலோசனை பெற்று எம் ஜி ஆர் கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் மாகாணசபை என்னும் சமரசத் திட்டத்தை அமூலாக்க முயன்றது. திரைகடலோடி தமிழ்த்தரகு முதலாளியம் தனக்குத் தேடிக்கொண்ட திரவியம் இது.
மறுபுறம் 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை எதிர்த்து, மற்றும் ஈழத்தமிழினத்தின் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்து, பாராளுமன்றப் பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து சொல்லப் போனால் ஈழவிடுதலையின் உடனடி அவசியக் கேள்விகளுக்கு குட்டிமுதலாளிய சிந்தனை வழியில் தீர்வு கண்டு, அந்த அரசியல் உள்ளடக்கத்தை புரட்சிகரமான வெகுஜன பிரச்சார வடிவங்களில், ஈழவிடுதலையின் அவசியத்தை எடுத்து விளக்கி, ஈழமாணவர் பொது மன்றத் தோழர்கள் (GUES-General union of eelam students) ஒரு வெகுஜன பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்தனர். உண்மையில் அதன் வடிவங்களில் அது ஒரு வெகுஜன அரசியல் பிரச்சார இயக்கம். அத்தகைய ஒரு அரசியல் பிரச்சார இயக்கம் ஈழமாணவர் பொது மன்றத்துக்கு முன்னாலும் இல்லை, பின்னாலும் இல்லை. முன்னால் பாராளுமன்றவாதம் அரசோச்சியது. பின்னால் துப்பாக்கிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டன (நன்றி நெடுமாறனின் அன்னை இந்திராவுக்கு!).
அதுமட்டுமல்ல இந்த ஈழமாணவர்களின் உள்ளூர்த் தலைவர்கள் குட்டிமுதலாளிய சமூகப் பின் புலத்தில் வேர் கொண்டிருந்தவர்கள். 1972 கல்வித் தரப்படுத்தல் சட்டத்தால் வெந்தெழுந்தவர்கள். புலம் பெயர்ந்த பெருந்தலைவர்களோ 1970 களின் பிற்பகுதியில் லண்டனில் கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்புள்ள குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
ஈழமாணவர்களின் முன்முயற்சி மிக்க அரசியல் பிரச்சார இயக்கம் அவர்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியது. தமது மத்திய தரவர்க்க சமூகப் பின்னணி தமது ~புரட்சிகர குணாம்சத்தை அழித்து விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்`` இந்த மனச்சாட்சியின் நல்லெண்ணாத்தால் உந்தப்பட்டு ``மாவோவின் வழி`` நடப்பதாய் நினைத்து ~கலாச்சாரப் புரட்சி செய்யும் பொருட்டு`` சாதி ரீதியில் தாழ்த்தப்பட்ட நிலமற்ற கூலி விவசாய மக்களுடன் கூடி கல்லுடைத்தார்கள்! புரட்சிகர உணர்வைப் பேணிப்பாதுகாப்பதற்காக!!
இவ்வாறு அடிமட்ட வெகுஜன மக்களிடையே ஆதரவும் அனுதாபமும் பெற்ற அரசியல் சக்தியாக அவர்கள் உருவாகினர்.
1977 பொதுத் தேர்தல் எழுச்சியை கட்டிக்காத்து ஈழத்தமிழின அரசியல் இயக்கத்தை ஆயுதப்போராட்டத்தை நோக்கி வளர்த்தெடுத்ததில் இம்மாணவர் இயக்கம் ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றியது.
இந்த ஆற்றைக் கடக்கும் வேலையை உண்மையில் விடுதலைப் புலிகள் செய்யவில்லை .ஈழமாணவர்களே செய்தார்கள். இவ்வாறு ஆயுதப் போராட்டத்துக்கான பாதை செப்பனிடப்பட்டது.
லண்டன் பெருந்தலைவர்கள் இந்தியா சென்று குடியேறினார்கள். திருத்தல்வாத, பாராளுமன்றவாத இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி (CPI- Communisit party of India) திருத்தல்வாதிகள் இந்திய விரிவாதிக்கத்துக்கு சேவகம் செய்ய தயார் செய்தனர். ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தை ஈழத்தமிழர்களின் நண்பன் என போதித்தனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முற்போக்குப் பாத்திரம்- ரஷ்ய சமூக ஏகாதிபத்திய ஆதரவுப் பாத்திரம்- என்ற கொள்கை வகுத்தளித்துக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு EPRLF உருவாகியது. இந்திய வெளிவிவகார உளவுத்துறை நிறுவனமான RAW இன் தத்துப் பிள்ளையானது. சுரேஸ் பிரேமச்சந்திரன் உலகமயமாக்களின் ஆதரவாளனும், இந்திய தேசத்துரோகியும் தமிழின விரோதியுமான ப.சிதம்பரத்தின் அரசியல் அடியாள் ஆகினான்.
EPRLF இற்கும் ஈழமாணவர்களுக்கும் இடையே 1985 இன் ஆரம்பத்தில் நடைபெற்ற கட்சிக் காங்கிரசில் கருத்து வேற்றுமைகள் தோன்றின.
மையமான பிரச்சனை வருமாறு.
ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்தால் சரணடைவதா அல்லது இந்தியாவை எதிர்த்து சண்டையிடுவதா?
ஈழமாணவர்களும் கட்சிக் காங்கிரசின் பெரும்பான்மையும் சண்டையிடுவது என முடிவு செய்தனர். இயக்கத்தின் மன நிலை இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இயக்கத்தில் ஈழமாணவர்களை, ஈழ விடுதலையில் ஊன்றி நின்றவர்களை வேட்டையாடும் பணீயில் சுரேஸ் பிரேமச்சந்திரன் இறங்கினான். அப்போது டக்ளஸ் தாயகத்தில் தலைமையைக் கைப்பற்ற ஈழமாணவர்களைச் சார்ந்து நின்றான். இதன் விளைவாக சூளை மேட்டுச் சம்பவத்தை நிகழ்த்தினான் சுரேஸ். தேசப்பற்றுள்ள ஈழமாணவர்களை தனிமைப் படுத்தினான். இந்திய சார்பு சக்திகளை இணைத்துக்கொண்டான். இவ்வாறு EPRLF ஐ இந்தியக் கைக்கூலி அமைப்பாக மாற்றினான். முதலாவது கட்சிக்காங்கிரசின் (1985) பெரும்பான்மை முடிவுக்கு எதிராக இந்திய .இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டான். ஈழத்தமிழ் மக்கள் மீது மாகாண சபை என்கிற அடிமைத் தீர்வைத் திணித்தான். அசோக்கா ஹொட்டேலில் அசோகச் சக்கரத்தின் விரிவாதிக்க ஆட்சி நடத்தினான்.
விடுதலைப் புலிப்போராளிகளை வேட்டையாடினான். அவர்களின் ஆதரவாளர்களை அழித்தொழித்தான். தேசிய இராணுவம் என்கிற இந்தியக் கைக்கூலி கொலைவெறித் துணைப்படையை ஏவிவிட்டு ஈழ வெகுஜனங்களை இரத்தப் பலிகொண்டான். ஈழ மாணவர்கள் நிலமற்றக் கூலிவிவசாயிகளுக்காக (தாழ்ந்த சாதி மக்களுக்காக) நடத்திய ஜனநாயகச் சீர்திருத்தப் போராட்டத்தின் விளைவாக பெற்றிருந்த அடிமட்ட கிராமிய மக்களின் ஆதரவை, தமிழீழ தேசிய விடுதலை இயக்கத்தை தோகடிப்பதற்காகவும் சாதி மோதல்களை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தி தோல்விகண்டான். ஈழமாணவர்களின் நல்லெண்ணம் அவர்களை நரகத்தின் நுழை வாயில்வரைக்கும் இட்டுச் சென்றது. EPRLF தலைவர் பத்மநாபாவும், முன்னால் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர், துரோகி வரதராசப் பெருமாளும் சிதம்பரத்தின் அடியாள் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆட்டுவித்த பொம்மைகளே ஆவர்.
1985 திம்புக் கோரிக்கையைக் காட்டிக்கொடுத்து, அமைப்புக் காங்கிரசின் முடிவுக்கு எதிராக, 1987இல் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து இந்திய ஆக்கிரமிப்புப் படையின் துணையுடன் ஈழ விடுதலை எழுச்சியை மாகாணசபைத் திட்டத்தின் மூலம் நசுக்க சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டணிக் கும்பலோடு கூட்டமைத்துக் கொண்டான்!.
1983 இலிருந்து ஈழத்தமிழர்களின் காவலனாகவும் மத்தியஸ்த்தனாகவும் இந்தியா ஆடிவந்த கபட நாடகம் அம்பலப்படுத்தப்படாத நிலையில், தமிழீழம் எங்கும் இந்திய ஆக்கிரமிப்புப் படை பல ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியப் படையை எதிர்த்து போராட விடுதலைப்புலிகள் தனித்து விடப்பட்டிருந்த நிலையில், இந்திய ஆக்கிரமிப்புப் படையும் இலங்கை இனவெறிப்படையும் ஒன்றாக இணைந்து தமிழின விடுதலை எழுச்சியை நசுக்கிவிடக் கூடிய சூழ்நிலை தோன்றியது.
ஆனால் விடுதலைப்புலிகள் மற்றொரு எழுச்சிக்கு நிதானமாகத் திட்டமிட்டனர். பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசு விடுதலைப்புலிகளை நடத்திய விதம், பிரபாகரனின் சுதுமைலை பேச்சு, திலிபனின் உண்ணாவிரதமும் இறுதியில் உயிரிழப்பும், குமரப்பா, புலேந்திரன் மற்றும் புலிவீரர்களின் படுகொலை, ஆகிய சம்பவப் போக்கின் பின்னணியில் இவ்வெழுச்சி கட்டியமைக்கப்பட்டது. திலீபனின் தியாக மரணமும் தமிழீழத் தேசிய எழுச்சியும் ஈழப்போராட்டத்தின் மூன்றாவது பெரும் அலை எழுச்சியாகும். இது தென் இலங்கையிலும் ஒரு புரட்சிகர அலை எழுச்சியைத் தூண்டியது. இதன் விளைவாக இலங்கை மண்ணிலிருந்து இந்திய ஆக்கிரமிப்புப் படை விரட்டியடிக்கப்பட்டது. கருணாநிதியைப் போன்ற மைய அரசின் அடிமை மாநிலத் தொண்டனும், கடைந்தெடுத்த தமிழின அயோக்கியனும் கூட தமிழக மக்களின் கோபத்துக்கு அஞ்சி இந்தியப் படையை வரவேற்கப் போகவில்லை!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நான்காவது அலை எழுச்சி
1999 ஆனையிறவுத் தாக்குதல்
மீண்டும் பிரேமதாசா அரசுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தை-யுத்தம், சந்திரிக்கா அரசுடன் ஏற்பட்ட யுத்தம்-பேச்சுவார்த்தை ஆகிய இத்துணைக் கட்டங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழின விடுதலைக்கான உத்தரவாதத்தை நிபந்தனையாக வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு தவறினால் யுத்தத்தைத் தொடர்வது என்ற செயல்தந்திரத்தை கடைப்பிடித்து வந்தது.
இதன் காரணமாகவும் பல களமுனை வெற்றிகளாலும் தமிழீழ விடுதலை எழுச்சி காக்கப்பட்டு ஆனையிறவு தாக்குதலில் அதன் உச்ச நிலையை அடைந்தது.
நான்கு பெரும் விடுதலை எழுச்சிகளின் சாராம்சம்
1) 1961 சத்தியாக்கிரகம்
2) 1977 பொதுத்தேர்தல்
3) 1987 திலீபன் உண்ணாவிரதம்
4) 1999 ஆனையிறவுத் தாக்குதல்
இந்த நான்கு பெரும் எழுச்சிகளும் வரலாற்றுப் போக்கில் வடிநிலை அடையாமல் வளர்ந்து வந்ததே அதன் சாராம்சமும் புரட்சிகர குணாம்சமுமாகும். இதைத் தீர்மானித்தது, சத்தியாக்கிரகம் தொடக்கி வைத்த தமிழின உரிமைக்கான கண்துடைப்புப் போராட்டங்களை, தமிழீழ விடுதலைக்கான இலட்சியமாகத் திடப்படுத்தி தொடர்ந்து போராடி பாதுகாத்து வந்தமையே ஆகும்.இந்த நீதியான இலட்சியத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அநீதியான இன ஒடுக்குமுறை மற்றும் அந்நிய ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்த்து நீதி யுத்தம் புரிந்ததாகும்.
புரட்சிப் பெருக்கின் வடிநிலை
ஆனையிறவுப் பெரும்படைத்தளம் வீழ்த்தப்பட்டதன் விளைவான இராணுவ அரசியல் பொருளாதார நிலைமைகளால் இலங்கை அரசு பொறிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக அந்நிய சார்பு இலங்கைப் பொருளாதாரம் எதிர்க்கணிய `வளர்ச்சி` கண்டது. யாழ்ப்பாணத்திலிருந்த பெருந்தொகையான சிங்கள இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் யுத்தக் கைதிகளாகி விடலாம் என்ற நிலை தோன்றியது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து தன்னைக் காக்குமாறு ஈனக் குரலெழுப்பியது இலங்கை அரசு. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சீனா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் இவற்றில் முதன்மையானவை ஆகும்.
இவர்கள் எல்லோரினதும் கூட்டான ஆலோசனையின் பேரில் ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறும் விடுதலைப் புலிகளின் திட்டம் கைவிட வைக்கப்பட்டது. அத்தகைய முயற்சிக்கு விடுதலைப்புலிகள் முயல்வார்களேயானால் அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் ஒரு சர்வதேச இராணுவ நடவடிக்கைக்கு தயங்கமாட்டோம் என எச்சரிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டு தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய செயல்தந்திரமும் அதற்கு அமைவான முழக்கங்களும் தேவைப்பட்டது. இவற்றின் கடமை ஆனையிறவு அலை எழுச்சியை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தது.
இவ்வரலாற்று ரீதியான திருப்புமுனையில் தம்முன்னே இருந்த சர்வதேச பிராந்திய உள்நாட்டு சூழ்நிலைமைகளை விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள், அவற்றின் அடிப்படையில் எத்தகைய அரசியல் இராணுவத் திட்டங்களை வகுத்தார்கள், அவற்றின் சாராம்சமாக என்ன முழக்கங்களை முன்வைத்தார்கள் என்பவற்றால் தீர்மானிக்கப்பட்டதே ஆனையிறவுக்குப் பிந்திய முள்ளிவாய்க்கால் வரையான வரலாறாகும்.
ரணில் விக்கிரமசிங்க அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விட்டது. ஏகாதிபத்தியவாதிகளின் சார்பில் நோர்வே அரசு மத்தியஸ்தம் வகிப்பதாகக் கூறியது.
இத் திருப்புமுனையில் விடுதலைப்புலிகள் கடந்த கால்நூற்றாண்டு களுக்கு மேலாக உறுதியுடன் கடைப்பிடித்து வந்த அரசியல் யுத்த தந்திரக் குறிக்கோளான பிரிவினை கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தனர்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல்வதாக ஒஸ்லோவில் பிரகடனம் செய்தனர்.
பிரிந்து செல்லும் உரிமை- தமிழீழப் பிரிவினை என்ற 26 ஆண்டுகால தேசிய சுதந்திர முழக்கத்திலிருந்து பின்வாங்கி அகசுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப் பகிர்வு சந்தர்ப்பவாத சீர்திருத்த முழக்கத்தை தேர்ந்து கொண்டனர்.
இந்த முழக்கத்திலிருந்து அரசியல் தீர்வாக தற்காலிக இடைக்கால அதிகார சபை (Internal Self Governing Authority -ISGA)முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா, இல்லையென்றால் ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் அதிகார சபைக்கு ஐநா அங்கீகாரம் கிடைக்குமென மக்களுக்கு கூறப்பட்டது.
யுத்தநிறுத்த காலத்தில் தேசிய மறுசீரமைப்புப் (National Reconciliation) பற்றிப் பேசப்பட்டது.
இம்மறுசீரமைப்பு அபிவிருத்திப் பணிக்கு உலகமயமாக்கல் பொருளாதாரப் பாதையைக் கடைப்பிடிக்க, Regaining Sri Lanka திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கத்தோலிக்கப் பாதிரிகள் திரைமறைவில் சமாதானத் தூது போனார்கள்.
ஓட்டுப்பொறுக்கி சந்தர்ப்பவாத இனமத சிறுபான்மைக் கட்சித் தலைவர்களோடு திடீரென கைகுலுக்கப்பட்டது!
பண முடிச்சுக்கள் பரிமாறப்பட்டன.
புற்றீசல் போல NGOக்கள் புரட்சிப் பூமியெங்கும் பரவ அனுமதிக்கப்பட்டன.
ஆளும் வர்க்கங்களின் பகட்டு ஆரவாரங்கள் அளவுமீறி மலிந்து கிடந்தன.
சமாதானத்தில் இளைப்பாறத் (Rest In peace-RIP) தலைப்பட்ட தலைவர்கள் தாள வாத்தியம் இன்றி தரை இறங்க மறுத்தனர்,
அணிகள் ஒரு புதிய உலகத்துக்குள் அரசியல் பிரக்ஞையற்று உலவ விடப்பட்டார்கள்.
இவ்வாறு 26 ஆண்டுகாலமாக தமிழ்மக்களின் அரசியல் அரணாக விளங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பு, அன்ரன் பாலசிங்கத்தால் அதன் ஆணிவேர் தறிக்கப்பட்டு தள்ளாடிக் கொண்டிருந்ததை இனங்கண்டு கொண்ட வழக்கமான புலிகளின் முதுகு சொறியும் புத்திஜீவிகள் தவறு செய்யத் தலைப்பட்ட அமைப்புக்கு தற்கொலைக்கு வழிகாட்டினார்கள்.
தூரம் அதிகமில்லை தெரியுதெங்கள் எல்லை என வீரமுழக்கமிட்டு, எதிரிகளின் பாசறைகளை நோக்கிப் பாய்ந்த வேங்கைகளுக்கு, தூரம் அதிகமில்லை தெரியுது கொசோவோ தமிழீழத்தின் எல்லை என புதிய பாடம் கற்பித்தார்கள்.
பிரிவினைக் கோரிக்கையை தடைசெய்யும் ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து, பாராளுமன்றத்தை ஈழ விடுதலைப் போர்க்களமாக்குவோம், வீட்டுக்குப் போக வீட்டுக்கு நேரே புள்ளடி போடுங்கள் என்றார்கள்.
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நிராகரிக்கப்பட்டிருந்த தேர்தல் பாதைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது.
வரலாற்று ரீதியான சமரசவாத பாத்திரத்தாலும், இந்தியப்படையோடு கூட்டமைத்து ஆடிய கொலைவெறித் தாண்டவத்தாலும், குட்டை சொறி சிரங்கு மற்றும் தொழுநோயாக தமிழீழ மக்களால் கருதப்பட்டு தேடுவாரற்று தெருமூலையில் தீண்டத்தகாத பிண்டங்களாக தூக்கியெறியப்பட்டுக் கிடந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதி ராசா, சம்பந்தன் ஆகியவர்கள் `தேர்ந்தெடுக்கப்பட்ட` ஜனநாயகப் பிரதிநிதிகள் ஆக்கப்பட்டார்கள்.
பத்மநாபாவை படுகொலை செய்த புலித் தேசியம், ப.சிதம்பரத்துக்கு தூதுவிடுவதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரனை ‘சுதந்திர புருஸனாக` அணைத்துக்கொண்டது
இக்கனவுக் காட்சியின் மாயை மறைக்க சர்வதேச ராஜதந்திரிகள் பலரும் அவ்வப்போது வந்து கைகுலுக்கி மாலை அணிந்து புன்னகைத்து அறிக்கை விட்டுச் சென்றார்கள்.
இவ்வழியே இதுவரையிலும் ஆளும் வர்க்கங்களுக்கிடையே உள்ள முரண்பாட்டைப் பயன்படுத்துவது என்ற கோட்பாடு ஆளும் வர்க்கத்தின் ஒரு தரப்பில் தங்கியிருப்பதாக மாறியது.
இந்த நம்பிக்கை மக்களுக்கும் அணிகளுக்கும் ஊட்டப்பட்டது. இவ்வாறு கனவுக்காட்சியில் அமைப்பும் அணிகளும் மக்களும் திளைத்துக் கொண்டிருந்த போது எதிரியானவன் நெடும்படையெடுப்பொன்றுக்கு கடும் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான்.
சீர்குலைவுவேலைகளில் ஈடுபட்டு கருணாவை ரணில் வாங்கினான். தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்ச கேபியை வாங்கினான். ராஜதந்திர முயற்சிகளால் பயங்கரவாதிகள் எனப் பட்டம் சூட்டி விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தார்கள். விடுதலை நிதியை முடக்கினார்கள். கேபி மூலமும் இந்தியா மூலமும் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆயுதக் கப்பல்களை அழித்தார்கள்.
ஏகபோக நிதியாதிக்க கும்பல்களான IMF உம் World Bank உம் உதவி என்கிற பேரில் யுத்த நிதியை வாரிவாரி வழங்கினார்கள். இங்கிலாந்து உள்ளிட்ட சாவு வியாபாரிகள் நீண்ட காலக் கடன் அடிப்படையில் யுத்தத் தளபாடங்களை வழங்கினார்கள். விரிவாதிக்க இந்தியாவுக்கு என்றும் நாம் நண்பர்களாக இருப்போம் என மறைந்த திரு நடேசன் அவர்கள் அறிக்கை விட்ட போது இந்திய அரசு விசவாயுக்களை வழங்கிக் கொண்டிருந்தது. இனவெறியும், பெளத்த மதவெறியும் ஊட்டப்பட்டு சிங்கள இனவெறிப்படை பலமடங்கு பெருக்கப்பட்டது. சமூகவிரோதிகள், கிரிமினல் குற்றவாளிகள், லும்பன்கள், தெருமுனைச் சண்டியர்கள், கிராமப்புறங்களில் கப்பம் அறவிடுவோர், கசிப்புக்காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்துவோர் என ஒரு காவாலி பாதாள உலக கும்பல்களைக் கொண்டு விசேடப் படைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு சீருடை அணிவித்து களத்தில் இறக்கப்பட்டனர்.
இத்தனை தயாரிப்புக்களும் முடிந்த தருணத்தில் ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இனப்படுகொலை யுத்தத்தைக் கட்டவிழ்த்தது ராஜபக்ச அரசு. இந்த முடிவை எந்த ஒரு சர்வதேச நாடும் கண்டிக்கவில்லை. மத்தியஸ்தம் வகுத்த நோர்வே கூட கண்டிக்கவில்லை.
கிழக்குமாகாணம் கோடரிக்காம்பு கருணாவின் துணையுடன் கைப்பற்றப்பட்டு வடக்கு நோக்கிய படையெடுப்புக்கான முதற்களமுனை மடுப் பிரதேசத்தில் திறக்கப்பட்டது. யுத்தசூனியப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த மடுவை ஊடறுத்து வடக்கை ஆக்கிரமிக்க சிங்கள ராணுவம் முயன்றது.
அமைதியினதும் சமாதானத்தினதும் பெயரால் ரணில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்த திரை மறைவில் தூதுபோன கத்தோலிக்க பாதிரிகள் இந்த ஆக்கிரமிப்பு யுத்த களமுனை திறக்கப்படுவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஈழமாதாவைக் காட்டிக் கொடுத்து விட்டு மடுமாதா சொரூபத்தைக் காவிக் கொண்டு ஓடியொழிந்து விட்டார்கள்.
மடுவில் திறக்கப்பட களமுனையைத் தடுத்து நிறுத்த விடுதலைப்புலிகள் ஜீவமரணப் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டம் வீரமிக்கதாகவும், தீரமிக்கதாகவும் அளப்பரிய அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்கதாகவும், துடிப்பும் துணிச்சலும் மிக்கதாகவும் இருந்தது. ஆனால் 2002 பேச்சுவார்த்தையின் திருப்பு முனையில் வகுக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கத்தின் அகசுயநிர்ணய உரிமை-அரசியல் செயல்தந்திர வழி இந்த யுத்தத்தின் தோல்வியை ஏற்கனவே முடிவு செய்து விட்டிருந்ததினால் இந்த வீரம் செறிந்த போராட்டம் காலம் தப்பிய பயிராக இருந்தது.
அகசுயநிர்ணயஉரிமை என்பது அதிகாரப்பரவலாக்கமே என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதால் இக்கட்டில் மாட்டிக் கொண்ட புலிகள் இதிலிருந்து மீள, அவிழ்த்து விட்ட சந்தர்ப்பவாத, (தாயகம், தேசியம், தன்னாட்சி) பொங்குதமிழ் இயக்கத்தாலும் இந்தத் தோல்வி நோக்கிய சரிவைத் தூக்கிநிறுத்த இயலவில்லை.
இறுதி அடைக்கலம் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவார் எனப் பெரிதும் நம்பப்பட்ட ஒபாமாவும், இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு பாபர்மசூதி பி.ஜே.பி ஆட்சி அமைக்கும் என்ற அற்பத்தனமான எதிர்பார்ப்புக்களும் ஆகின.
இது தற்செயலானது அல்ல அகசுயநிர்ணய உரிமைச் செயல்தந்திரவழியின் தர்க்கரீதியான விளைவும் அவசியமும் ஆகும்.
விடுதலைப் புரட்சியின் மிகமிக அடிப்படையான, ஆதாரமான, நண்பர்களையும் எதிரிகளையும் வரையறை செய்யும் பிரச்சனையில் கடைப்பிடித்து வந்த சந்த்தர்ப்பவாதக் கொள்கையின் தர்க்கரீதியான விளைவும் அவசியமுமாகும்.
ஒபாமா மூலமும், ஐ.நாமூலமும், சர்வதேசசமூகம் மூலமும் அழுத்தம் கொடுத்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தும் பொருட்டு லண்டனில் ஆரம்பித்து புலம்பெயர்நாடுகள் எங்கும் யுத்தநிறுத்த மக்கள்இயக்கம் வெடித்தது. பெருந்திரளானமக்கள் ஒரு பகிரங்கத்திடலில் கூடி ஒரு குறித்த அரசியல் கோரிக்கைக்காக வாரக்கணக்காக குடிகொண்டு போராடும் போராட்ட வடிவத்தை ஈழத்தமிழர்கள்தான் லண்டனில் ஆரம்பித்து வைத்தார்கள்!
லண்டனில் வின்சன்சேர்ச்சிலின் சிலையைச் சூழ்ந்து நின்று யுத்தநிறுத்தம் கோரி முழங்கிய மக்களின் தலையின் மேலே ``ஹிட்லர், ஸ்ராலின், சதாம் வரிசையில் ராஜபக்சேயும் சர்வாதிகாரியே`` என்ற பதாகை பிரித்தானிய தமிழர்பேரவையால் தொங்கவிடப்பட்டிருந்தது.
ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசுவாசமான இந்த சந்தர்ப்பவாதத்துக்கு கைமாறாக யுத்தத்தின் மிக இறுதிநாட்களில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை சிங்களஅரசிடம் கையளித்துவிட்டு சரணடைய வேண்டுமென பகிரங்கமாக ஆணையிட்டு ஈழத்தமிழர்களை நிராயுதபாணிகளாக்கி, விடுதலைப் புலிப்போராளிகளை அடிமைக் கைதிகளாக்கினான் ஒபாமா.
இந்த வேளையிலும் கூட, இறுதிமூச்சை சுவாசிக்க அவகாசம் இல்லாத இந்த வேளையில் கூட விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எதிரியிடம் ஒப்படைக்கத் தயாராக இருக்கவில்லை. மெளனிப்பதாக மட்டுமே பிரகடனம் செய்தனர்.
எந்தவெடியால் தமிழீழ தேசத்தின் அடிமைச் சங்கிலி தகருமென்று 30 ஆண்டுகளாக நம்பிவந்தார்களோ அந்த வெடிகலன்கள் அத்தனையையும் ஒருசேரப் போட்டு வெடிவைத்துத் தகர்த்தார்கள்; முள்ளிவாய்க்காலின் அந்தத் தீப்பிளம்பு முழுத் தமிழீழ தேசத்துக்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சியது! அது காலம் காலத்துக்கு மீண்டும் வெடிக்கக் காத்திருக்கும் தீக்குழம்பாகும்.
30 ஆண்டு கால வீரகாவியம் முள்ளிவாய்க்கால் பிரளயத்தோடு முடிவுக்கு வந்தது.
மூர்க்க பிடிவாதமுள்ள வரலாறு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி இட்டது.
முற்றுப்புள்ளி இடப்பட்டது, அல்லது முடிந்து போனது விடுதலையுத்தமும், விடுதலைப்புலிகள் அமைப்பும் மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தத்துவார்த்த அரசியல் ஸ்தாபனக் கோட்பாடுகளும் உலகப்பார்வையும் தான்!
இதிலிருந்து பெறப்படுவது “எல்லாம் முடிந்து விட்டது” என்கிற தோல்விவாதம் அல்ல. 1948 இலிருந்து 2008 வரையான 60 ஆண்டுகால தமிழினப்போராட்ட வரலாற்றை நாம் எடுத்து விளக்கிய இயங்கியல் ஆய்வுமுறையில் இருந்து சமூக வர்க்கங்களின் வரலாற்று ரீதியான வர்க்கப் போராட்டமானது அலை எழுச்சிகளையும் அலை வீழ்ச்சிகளையும் கொண்ட தனித்தனிக் கட்டங்களாக முன்னேறி வந்திருப்பதை பார்த்திருக்கின்றோம். புரட்சிகர இயக்கத்தின் இந்த இயக்கவிதி இன்றைய ஈழத்தின் நிலைமைக்கும் பொருந்தும்.
நாம் ஒரு அலைஎழுச்சி வீழ்ந்த காலத்திற்கும் அடுத்த அலைஎழுச்சி எழும் காலத்திற்கும் ஆன இடைநிலைக் கட்டத்தில் இருக்கின்றோம்.
அடுத்த எழுச்சியை எம்மால் கட்டியெழுப்ப முடியுமா?
இந்தக் கேள்விக்கான பதிலை கரிகால் பெருவளத்தான் புகழ் பாடியோ, “விழவிழ எழுவோம்” என்று வீரவசனம் பேசியோ அல்லது `தமிழீழம் மலர்ந்தே தீரும்` என்ற விருப்பார்வத்தைக் கொண்டோ விடையளிக்கவும் முடியாது. வழி சமைக்கவும் முடியாது.
`இன்றைய சர்வதேசிய, பிராந்திய, உள்நாட்டுச் சமூக முரண்பாடுகள் பற்றிய ஸ்தூலமான ஆய்விலிருந்து மட்டுமே இக்கேள்விக்கு விடையளிக்க முடியும்.
உலக ஏகபோக முதலாளித்துவப் பொருளாதாரம் மூன்றாவது உலகு தழுவிய ஒரு பொது நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையானது முதலாம், இரண்டாம் உலக யுத்தகால இரு உலகப் பொருளாதார பெருமந்தங்களைக் காட்டிலும் தீவிரமானதென முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களும் ஏகபோக நிதி மூலதன வங்கி அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இப்பிரச்சனையின் கோட்பாட்டு அடிப்படை என்னவெனில் இது ஏகாதிபத்திய உலகப் பொருளாதார அமைப்புக்குள் அடங்கியுள்ள பல்வேறு முரண்பாடுகளில் ஒன்றின் அல்லது சிலவற்றின் விளைவாக அல்லாமல் ஏகபோக பொருள் உற்பத்திமுறையின் அடி அத்திவாரத்திலிருந்து வெடித்த நெருக்கடியாக உள்ளது. மேலும் இதன் மிகத் தனிக்குறிப்பான தன்மை இது ஒரு நாடு எதிர்நோக்கும் குறிப்பான நெருக்கடியாக மட்டும் இல்லாமல், ஏகாதிபத்திய மண்டலங்கள் அனைத்தையும் தழுவி, உலக ஏகபோக பொருள் உற்பத்திமுறையின் அனைத்து மேற்கட்டுமானங்களையும் தகர்த்துவருகிற பொது நெருக்கடியாக இருப்பதாகும்.
இத் தனித்தன்மையின் காரணத்தாலேயே (வட்டி வீதத்தின் ஏற்ற இறக்கங்கள், காகித நாணயங்களை கண்டபடி அச்சிடுதல், நாட்டின் நாணயத்தை பணயம் வைத்து அந்நியக் கடன் பெறுதல், மக்கள் வரிகளை உயர்த்துதல், மிக மிக மலிவான முறையில் உற்பத்திக்கு வழி தேடுதல், உழைப்புச் சந்தையில் இருந்து வலுக்கட்டாயமாக உழைக்கும் மக்களை வெளியேற்றுதல், பொதுச் செலவினத்தைக் குறைத்தல் போன்ற) வழக்கமான கைமருந்துகள் எதனாலும் குணப்படுத்த இயலாத கொடிய வியாதியாக இது பரந்து விரிந்து வியாபித்து பரவி வருகின்றது.
மிகை உற்பத்திக்கும், வாங்கும் சக்திக்கும்; செல்வக் குவியலுக்கும், சொல்லொணா வறுமைக்கும்; ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கும், தேசியச் சுதந்திரப் பொருளாதர வளர்ச்சிக்கும்; உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கும் பங்குச் சந்தைச் சூதாட்டம் மற்றும் இலத்திரனியல் பணமாற்று மோசடிக்கும்; தொழில் துறைக்கும், விவசாயத்துக்கும்; பெருமூலதனத்துக்கும், சிறு மூலதனத்துக்கும்; உழைப்புச் சக்திக்கும், மூலதனத்துக்கும்; ஒரு வார்த்தையில் சொன்னால் இக்காலத்தின் உலகு தழுவிய உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான அடிப்படை முரண்பாட்டில் இந்நெருக்கடி ஆழ வேரூன்றியுள்ளது.
ஆக ஏகாதிபத்தியம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலேயே முரண்பாடுகள் முற்றுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளுக்கும், வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்குமிடையே முரண்பாடுகள் வலுக்கின்றன. பிராந்திய வல்லரசுகள் தம்முள் முரண்பட்டுக் கொள்கின்றன. இந்தச் சக்திகளுக்கும், அரைக்காலனிய நாடுகளுக்கும் உலக மறுபங்கீட்டில் தாம் சேரும் அணிசார்ந்து முரண்பாடுகள் வெடிக்கின்றன.
எனவே ஏகாதிபத்திய முகாமுக்குள் கூர்மையடையும் முரண்பாடுகள் ஏகாதிபத்தியத்துக்கும் அரைக்காலனிய ஆளும் கும்பல்களுக்கும் இடையான முரண்பாட்டை கூர்மைப்படுத்துகின்றன.
இலங்கை அதிகாரக் கைமாற்றம் அடைந்த நாள் முதல் IMF, World Bank வழிநடத்திய அந்நிய ஏகாதிபத்தியம் சார்ந்த பொருளாதாரப் பாதையையே கடைப்பிடித்து வந்தது வருகின்றது.
முக்கியமாக பெருவீதத் தொழில்துறையில் முதலீடு செய்வதில்லை. விவசாயத்தை முதன்மைப்படுத்துவதில்லை. பெருந்தோட்டத்துறையிலும், பொதுவாக விவசாயத்திலும் அரைநிலப் பிரபுத்துவ உறவுகளை மாற்றுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டது. (அபிவிருத்தி அபிவிருத்தி என வாய்கிழியக் கத்துகிற இரு பெரும் கட்சிகளும் இன்றுவரை- அறுபது ஆண்டுகளாக மின்சார மயமாக்கல் என்கிற ஒரு திட்டத்தைக் கூட நாட்டில் நிறைவு செய்யவில்லை. மீண்டும் நினைவு படுத்துகின்றோம் 60 ஆண்டுகள்! இதே காலத்தில் தான் மெழுகுவர்த்தி கூட தடை செய்யப்பட்டிருந்த தமிழீழத்தில் தேசியத் தளபதி பிரபாகரன் ஓடுபாதையும், விமானமும், நீர்மூழ்கிக் கப்பலும் உற்பத்தி செய்து தனது விடுதலைப் படையை அபிவிருத்தி செய்திருந்தார்! எத்தகைய பயங்கரம்!! எத்தகைய பயங்கரம்!!)
எழுபதுகளில் இது ஒரு பாய்ச்சலை அடைந்து திறந்த பொருளாதாரக் கொள்கை எனும் பெயரால் ஒட்டுமொத்த நாடும் ஒட்டச் சுரண்டப்படுவதற்கு வழி திறந்து விடப்பட்டது. சுதந்திர வர்த்தக வலயங்கள் எனப்படுகிற அந்நியத் தொழிற்சாலைகளை நாட்டுக்குள் அனுமதித்து சிங்கள உழைக்கும் மக்களைக் கொண்டு அந்நியச் சந்தைக்கு மலிவுக்கூலியில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாயின. இது ஏற்றுமதிப் பொருளாதாரம் என்று கூட அழைக்கப்பட்டது. இத்தகைய அந்நிய சார்பு உற்பத்தி முறையை ஏகபோக முதலாளித்துவத்தின் மூன்றாவது உலகப் பொது நெருக்கடி கடுமையாகப் பாதித்து வருகிறது.
இது இலங்கை நாட்டுக்குள்ளான சமூக வர்க்கங்களின் முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது.
இந்நெருக்கடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு புறம் இலங்கை அரசு மென்மேலும் பாசிசமயப்பட்டு இராணுவமயப்பட்டு வருகிறது.
மறு புறம் தனது இருப்புக்கு ஆதாரமான தமிழ்த்தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழீழத்தை ஒரு தேசமாக இல்லாதொழிப்பதற்கான – (கருத்துணர்வு என்ற வகையில் மட்டுமல்ல ஒரு பெளதீகப் பொருள் என்ற வகையிலும் கூட) முயற்சிகளில் முழு மூச்சாக இறங்கி வருகிறது.
இவ்வாறான ஒரு தேசிய ஒழிப்பு நடவடிக்கை ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்திய விரிவாதிக்கவாதிகளுக்கும் இலங்கையில் கால் பதிக்க முயலும் சீன ரசிய ஆதிக்கச் சக்திகளுக்கும் உடன்பாடானவையே ஆகும்.
இதனால் தமிழீழத் தேசஅழிப்பும், தமிழ்த் தேசிய இன அழிப்பும் தீவிரமடைகின்றது.
இப்புறவய நிலைமைகளில் இருந்து இரண்டு உண்மைகள் பெறப்படுகின்றன.
1. தமிழ் மக்கள் தமது தேசத்தைக் காக்கவும் தேசிய இன இருப்பை தற்காக்கவும் சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள்.
2. இச்சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையானது குறிப்பாக பிரிவினை வடிவத்தை எடுத்து தமிழீழக் கோரிக்கையாக மாறி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கமாகி விட்டது. இந்த அரசியல் சுதந்திர முழக்கத்தை ஏந்திவிட்ட தமிழீழ மக்கள் அற்பச் சலுகைகளுக்காக அடிபணிய மாட்டார்கள்.
இந்த இரண்டு அடிப்படைகளிலுமிருந்து ஈழத்தில் ஒரு தன்னியல்பான தமிழீழக் கிளர்ச்சி மீண்டும் தோன்றியே தீரும். இக்கிளர்ச்சிக்கு ஒரு ஜனநாயகத் திட்டத்தை வகுத்தளித்து அதன் மீது அக்கிளர்ச்சியைக் தூக்கி நிறுத்துவது மட்டுமே ஜனநாயக சக்திகளின் முதன்மையான முன்னணிப் பணியாகும்.
அந்த எழுச்சியை கடந்த ஆறு தசாப்த கால எழுச்சிகளால் பற்றாக்குறையானவை என நிரூபிக்கப்பட்ட அரசியல் கொள்கை கோட்பாடுகளைக் கொண்டு கட்டியமைக்க முடியாது.
மக்கள் மற்றொரு புதிய ஜனநாயக எழுச்சியை உருவாக்குவதற்கு புதிய மக்கள் ஜனநாயக அரசியல் திட்டம் அவசர அவசியம்.
அத்திட்டத்தின் மீது மட்டுமே இப்புதிய ஜனநாயக ஈழவிடுதலை எழுச்சியை விரிவாக்க முடியும். உள்நாட்டிலும் சரி, புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி வேறெந்த வழியாலும் முடியாது. முடியவேமுடியாது.
அந்த அரசியல் திட்டத்தின் அடிப்படை அம்சங்கள் வருமாறு,
1. தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு
இலங்கை இரு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடாகும். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பது இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாண, நிலம் மற்றும் கடல் பரப்புக்களை தமது வாழ்விடப் பிரதேசமாகவும், இப்பிரதேசத்தில் விவசாயம், மீன்பிடி, வணிகம், சிறு கைத்தொழில் அடங்கிய பொதுப்பொருளாதாரத்தாலும், பொதுவான தமிழ் மொழியாலும், தாம் தமிழர்கள் என்கிற பொது மன உணர்வாலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வரலாற்று ரீதியான நிலையான மக்கள் சமூகத்தினராவர்.
இந்தத் தேசம் தேசிய சுயநிர்ணய உரிமையுடையது.சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையே.பிரிந்து செல்லும் உரிமை அன்றி வேறெந்தப் பொருளிலும் சுயநிர்ணய உரிமையை அர்த்தப்படுத்தக் கூடாது.(இதுவே தேசியப் பிரச்சனையில் முரணற்ற லெனினிய நிலைப்பாடாகும்)
பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினைக் கோரிக்கையும் ஒன்றல்ல. பிரிவினை கோரிக்கையை ஒரு குறிப்பிட்ட தேசத்தின் தனிக்குறிப்பான வரலாற்றை ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.
இலங்கையில் சிங்களத் தரகுமுதலாளித்துவ, பெளத்த மதவாத, சிங்களப் பேரினவாத, இனவெறிப்பாசிச, இராணுவ சர்வாதிகார, நவீன அரைக் காலனிய அரசு -சிங்களம்- தமிழீழ தேசத்தின் மீதான ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.
இதனால் இலங்கை அரசின் கீழ் ஈழதேசத்தைக் கட்டிப்போடுவது தேசியப் படுகொலை மற்றும் தமிழினப் படுகொலையே ஆகும்.
30 ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை தமிழ் மக்களுக்கு இல்லாதிருப்பது, இத்திருப்பத்தில் தமிழ் மக்களின் மீது எதையும் தீர்வு என்று சொல்லி ஏமாற்றித் திணிப்பதை அனுமதிக்கமுடியாது.
ஈழத்தமிழ் மக்கள் தமது பிரச்சனைக்கு என்ன, எத்தகைய தீர்வை விரும்புகிறார்கள் என்பதை அறிய வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோர வேண்டும்.
2. தேசிய சிறுபான்மையினர் சிறுபான்மைத் தேசிய இனத்தவர் பற்றிய நிலைப்பாடு
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும், ஐ.நா சாசனத்திலோ, வேறு சர்வதேசச் சட்டங்களிலுமோ கூறப்படுகிற சுயநிர்ணய உரிமையும் ஒன்றல்ல. ஐ.நா சாசனத்தில் கூறப்படும் சுயநிர்ணய உரிமை “ஒரு பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் கூட்டம் உள்நாட்டு யுத்தத்தால் அல்லது இயற்கை அனர்த்தங்களால் அல்லது வேறு பிற காரணங்களால் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்க்கப்பட்டால் அப்பகுதியில் மீண்டும் திரும்பி குடியமர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.” இதையே ஐ.நா. சபையின் சுய நிர்ணய உரிமை குறித்து நிற்கிறது. இது தேசம் பற்றியதோ தேசிய இனவிடுதலை பற்றியதோ, சுதந்திர தேசத்தை உருவாக்குவதற்கான உரிமை பற்றியதோ அல்ல.
இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களும் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களும் ஒரே இனத்தவர்கள் அல்ல. ஆனால் பொதுவான அடக்குமுறையின் காரணத்தால் பொது மொழி பேசுவதாலும் மலையகத் தமிழ் மக்கள் ஈழத் தேசத்துடன் இணைந்து வாழ விரும்புவதே இயல்பானது. எனினும் தமிழ் சமூகத்திடையே இருக்கும் கள்ளத் தோணிக் கோட்பாடும், அடிமை உழைப்பில் ஆதாயம் அடையும் அரை நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறையும் அவர்களை ஜனநாயக ரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு பெரும் அகவயத் தடையாகவுள்ளது. இதனால் நுவரேலியா. பதுளை, நோட்டன் பிரிஜ் ஆகிய இலங்கையின் மைய மாகாணங்களில் செறிந்து வாழும் மலையக மக்களை ஒரு தனிமாநிலமாக வரையறுப்பதுடன் அம்மாநிலத்துக்கு நிர்வாக ரீதியில் ஈழத்துடனோ அல்லது ஸ்ரீ லங்காவுடனோ இணைந்து வாழ்வதற்கான விருப்பத்தை அறிய மலையக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழ் மக்கள் தமது மதத் தனித்துவத்தின் காரணமாகவும், சிங்கள, தமிழ், முஸ்லீம், தரகுமுதலாளிய வர்க்கங்கள் அவர்களை தமிழ் மக்களோடு ஐக்கியப்பட அனுமதிக்காமையினாலும், தமிழ்த்தரகு முதலாளிய சமஸ்டி இயக்கம் விதைத்த விச வித்தான `தொப்பி பிரட்டி` குறுமின வெறியும், இதற்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலைப் புலிகள் முஸ்லீம் மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து இரவோடிரவாக 24 மணிநேர உத்தரவில் ஈழத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாலும், அவர்களின் விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் சூறையாடியதாலும் தமிழ்மக்களுடன் அவர்கள் ஐக்கியப்படத் தடையாக இருக்கின்றன.
வடக்குக்கிழக்கில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை ஒரு தனி மாவட்டமாக இணைத்து அவர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்குவது ஈழமக்கள் ஜனநாயகக் குடியரசின் கடமையாகும்.
இவையே ஈழத்தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயகத் தீர்வாகும்.
3. ஈழப்புரட்சியின் போர்த்தந்திரம்
இந்த ஜனநாயகத் தீர்வை அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஏகாதிபத்திய நாடுகளும் ஏற்கத் தயாராக இல்லை. இதனால் அவர்கள் ஈழவிடுதலைப் புரட்சியின் எதிரிகளாவர்.
இந்த ஜனநாயகத் தீர்வை இந்திய விரிவாதிக்க அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்திய விரிவாக்க அரசு ஈழவிடுதலைப் புரட்சியின் எதிரியாகும்.
உலக மறுபங்கீட்டுப் போட்டியில் பிராந்திய ஆதிக்கத்துக்காக போரிடும் சீனா, ரஷ்யா, இஸ்ரேல், ஈரான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த ஜனநாயகத் தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்நாடுகளும் எதிரிகளின் கூட்டாளிகளே ஆவர்.
ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியில் ஈடுபடும் நாடுகளும் ஈழத்தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாமல் இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து தேசியப் படுகொலைக்கு, தமிழினப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். எனவே தமிழீழ விடுதலைப் புரட்சியானது வெறுமனே உள்நாட்டின் இலங்கை அரசை எதிர்த்தது மட்டுமல்ல, விரிவாதிக்க இந்திய அரசையும் ஏகாதிபத்திய அரசுகளையும் பிராந்திய மேலாதிக்க வல்லரசு நாடுகளையும் எதிர்த்த போராட்டமாகும்.
இதை எமது 30 ஆண்டுகாலப் போராட்ட வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
மேலும் ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமல்ல அவர்களின் சித்தாந்த ஆயுதங்களான ஐ.நா சபை, கிறீஸ்தவத் திருச்சபை, ஏகாதிபத்திய தொண்டு நிறுவனக் கலைப்புவாத என்.ஜீ.ஓக்கள் ஆகியவையும் ஈழவிடுதலைப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகார சித்தாந்த சக்திகளே ஆகும்.
4. ஈழ சமூக வர்க்க ஆய்வு
காலனி ஆதிக்கத்துக்கு முன்பும் பின்பும் இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடு தொடர்ந்து வந்திருக்கிறது. இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு ஆதாயம் பெறும் வர்க்கங்களான உலக மயமாக்கல் சார்ந்த சிறுவீத உள் நாட்டுத் தொழில்துறை, மற்றும் அந்நியசார்பு வணிகத்துறை சிங்களத் தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்கள், மற்றும் மலையக முஸ்லீம் தரகுமுதலாளிய வர்க்கங்களும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் பங்காளிகளாகும். இவ்வர்க்கங்களில் மேன்நிலை பெற்ற தரகுமுதலாளிய வர்க்கங்கள் அனைத்தும் விடுதலையினதும் ஜனநாயகத்தினதும் எதிரிகளான விதேசிய வர்க்கங்களாகும்.
• இலங்கை மிகச்சிறிய நாடு. நமது மன்னர்கள் கோவில் கட்டியல்ல சமுத்திரங்கள் கட்டி மக்களை –விவசாயிகளை ஆண்டவர்கள். பராக்கிரமபாகு என்கிற நமது ஒரு மன்னனின் நினைவாக இன்றும் இருப்பது அவர் கட்டியெழுப்பிய பராக்கிரமபாகு சமுத்திரமாகும்! இந்தச் சமுத்திரத்தில்தான் இலங்கையின் விவசாயிகளின் அனைத்து வாழ்வும் இன்று வரையும் ஆதாரப்பட்டுக் கிடக்கின்றது!
• இலங்கையில் பாரிய பெரியநிலப்பிரபுத்துவம் கிடையாது. இதனால் ஆசிய நாடுகளில் பொதுவாக இருக்கும் பெருநிலப்பிரபுத்துவ வர்க்கம் என்கிற சமுதாய சக்தி இலங்கையில் இல்லை. மாறாக ஒப்பீட்டில் பெருநிலஉடமையாளர்கள் உள்ளனர். இது காலனியாதிக்கத்தில் ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டமைத்து இன்றுவரை தொடர்ந்து வரும் விதேசியவர்க்கம் ஆகும். அதனால் இது தமிழ் சிங்கள விவசாய ஒற்றுமைக்குத் தடையாக விவசாயிகளிடையே மோதல்களை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் செய்யும் வர்க்கமாக உள்ளது. இந்தப் பெருநிலவுடைமை வர்க்கத்தின் ஸ்தாபன ரீதியான நிறுவனங்களாக இலங்கையில் விளங்குபவை பெளத்தமடாலயங்களும் கத்தோலிக்கத் திருச்சபைகளும் ஆகும். பெளத்தமடாலயங்கள் இருபெரும் ஆளும் வர்க்கக்கட்சிகளான ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஊடாகவும், சந்தர்ப்பவாத சமூக தேசிய வெறியரான ஜே.வி.கட்சி ஊடாகவும் அரசியல்செல்வாக்குச் செலுத்துவது மட்டுமல்லாமல், ஜாதிக ஹெல உறுமய போன்ற சொந்த பாசிச அமைப்புக்களாகவும் திரண்டுள்ளனர். கத்தோலிக்க திருச்சபை பொதுவாக ஐ.தே.கட்சியின் ஆதரவாளர் ஆவர். தமிழ்ப்பிரிவினர் ஐ,தே.கட்சியின் தமிழ்ப்பங்காளி சமஸ்டிக் கட்சி ஆதரவாளர்கள் ஆவர். இன்றைய நாடுகடந்த அரசாங்கத்தின் இம்மானுவேல் பாதிரியார் இந்த வழியில் வந்தவரே!
இலங்கையில் ஒரு பலமான தேசிய முதலாளித்துவத் தொழிற்துறை இல்லை. சிறுவீத தொழிற்துறையிலிருந்து பெருவீத முதலாளித்துவத் தொழிற்துறையை நோக்கி வளர்வதற்கான தேவையும் வேட்கையும் உள்ளது. சமூக அவசியத்தின் நெருக்கடியால் உணர்வுரீதியாக இந்த வேட்கை ஒரு பலமான சக்தியாக இருக்கிறது. அதே அளவுக்கு பெளதீக ரீதியாக மிகப் பலவீனமாக இருக்கிறது. இவ்விடுதலை வேட்கையினதும் சுதந்திர உணர்வினதும் காரணமாக இச் சமூக சக்தி முன்னேறிய முற்போக்கான விடுதலைப் புரட்சியின் ஆதரவு சக்தியாக உள்ளது.
இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயத்தின் பிரதான உடமை வடிவம் சிறு உடமை ஆகும். இதனால் ஈழத்தின் குட்டி முதலாளித்துவ அல்லது சிறு உடமை வர்க்கம் என்பது பிரதானமாக சிறுதளவான சிறு வணிகர்களும், பெருமளவிலான சிறு உடமை விவசாயிகளுமே ஆவர். விடுதலைப் புலிப்படை என்பது சாராம்சத்தில் இந்த விவசாயப் படையே ஆகும். விடுதலைப் புலிப்படையின் வியக்கத்தக்க பல இராணுவ முறியடிப்புச் சமர்களின் சாதனைகளுக்கு உண்மையான காரணம் கொச்சையாகக் கூறப்படுவது போல `தமிழ் வீரம்` அல்ல, மாறாக இந்தப் படைவீரர்கள் தம் பூமி நன்கறிந்த விவசாயப் புதல்வர்கள் ஆவர் என்பதே ஆகும், அவர்கள் அதில் உழுதார்கள், விதைத்தார்கள், அறுவடை செய்தார்கள், உண்டு மகிழ்ந்தார்கள், `இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற` உறுதியோடு உண்மையாகவே உணர்ந்து போராடி மடிந்தார்கள்.
சிறுவிவசாயம், மற்றும் சிறுகைத்தொழில், சிறு கூலித்தொழில், சிறு வணிகம், சிறு அதிகாரிகள் அடங்கிய சிறுவீத உற்பத்தித்துறையிலேயே பெரும்பாலான சிறுமுதலாளித்துவ வர்க்கம் நிலை கொண்டுள்ளது. சனத்தொகையில் மிகப் பெருவீதமான இப்பிரிவினரின் தேவைகளை சிறுவீத உற்பத்திமுறையின் பின்தங்கிய நிலைமையால் ஈடு செய்ய முடியாதுள்ளது. இதனால் இவ்வர்க்கம் புறவயமாக விடுதலைப் புரட்சியில் குதிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஆனால் அகவயமாக எதிரிகளின் சித்தாந்தத்துக்கு சிந்தனா பூர்வமாக அடிமைப்பட்டுள்ளது.இதனால் இச்சிறுமுதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய முற்போக்கான பிரிவு விடுதலைப்புரட்சியின் ஊசலாட்டமிக்க நண்பனாகும்.
நிலமற்ற கூலிவிவசாயிகள், உற்பத்திச்சாதனங்களற்ற கடற்றொழிலாளர்கள், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் அடங்கிய உழைக்கும் பாட்டாளி மக்களே விடுதலைப் புரட்சியின் அடிப்படையான உறுதியான நீடித்த ஆதார சக்திகளாகும்.
ஈழப்பாட்டாளி மக்களிடத்தில் ஆதாரப்பட்டு நின்று, குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தை நண்பர்களாகக் கொண்டு, அவர்களின் ஊசலாட்டத்தை முடக்கி, தேசியவாத முதலாளித்துவ பிரிவுடன் ஐக்கிய முன்னணி அமைத்து ஈழவிடுதலைப் புரட்சியை இடைவழிச் சமரசத்துக்கு இட்டுச் செல்ல முனையும் சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி; சர்வதேசிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், அதன் பிராந்தியக் காவல் நாயான இந்திய விரிவாதிக்க அரசுக்கு எதிராகவும், உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையில் கால்பதித்து வரும் ரஷ்ய, சீன வல்லரசுகளுக்கு எதிராகவும் அணிதிரண்டு சிங்களத்தின் மீது தாக்குதலைத் தொடுப்பதே சரியான போர்த்தந்திரப் பாதையாகும்.
5) நீண்டகால மக்கள் யுத்தம்
விடுதலைப்புலிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலை யுத்தத்தில் ஊன்றி நின்றிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் விடுதலை யுத்தத்தின் ஒவ்வொரு புதிய கட்டமும் அதற்கு முன்பிருந்த கட்டத்திலிருந்து மாறுபட்டதாக இருந்துள்ளது. சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாறுதலாலும் உள்நாட்டு சூழலில் ஏற்பட்ட மாறுதலாலும், போராடும் தரப்பின் அணிசேர்க்கையில் ஏற்பட்ட மாறுதலாலும், படைபலத்தின் பரஸ்பர நிலையில் ஏற்பட்ட மாறுதலாலும் பொருளாதார மற்றும் இயற்கைக் காரணிகளாலும் இத்தனித்தனியான போர்க்கட்டங்கள் தமது கட்டத்துக்கென விசேச இயல்புகளைக் கொண்டிருந்துள்ளன.
இதற்கமைய போர்முறையும் போர்முழக்கங்களும் மாறிவந்துள்ளன. யுத்தமும் பேச்சுவார்த்தையும், பேச்சுவார்த்தையில் இருந்து மீண்டும் யுத்தமும் எனப் புரட்சியின் வடிவங்கள் காலத்துக்குக் காலம், ஆட்சிக்கு ஆட்சி, அரசாங்கத்துக்கு அரசாங்கம் மாறிவந்துள்ளன. இது இந்த 30 ஆண்டுகாலப் போரில் ஒரு தொடர் விதியாகச் செயற்பட்டு வந்திருக்கிறது.
இந்த புறவயமான இயக்க விதி போதிப்பது என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புரட்சியின் இராணுவ மார்க்கம் நீண்டகால மக்கள் யுத்தம் என்பதேயாகும்.
கீழ்த்திசை நாடுகளில் தேசிய விடுதலை புரட்சிகள் குறித்த சர்வதேச கொம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவார்த்த நடைமுறை அனுபவங்களில் இருந்து ஈழவிடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்த 1983 ஜூலையிலேயே தமிழக போல்ஸ்விக்குகள் இந்த வரையறையை வகுத்து அளித்திருந்தனர்.
இருந்தும் கூட, தமிழீழ விடுதலை யுத்தத்தின் இராணுவ மார்க்கம் முன்னணிப்படையே, முழுப்புரட்சியையும் நடத்தி முடிக்கவல்லது என்ற கோட்பாட்டை தழுவி நின்றது. ( தமிழ் வீரம் எனப் பொதுவாகக் கூறப்பட்டு போற்றித் துதிக்கப்படுவது இந்த தவறான கோட்பாடே ஆகும்!)கெரில்லாக் குழுக்களாக இருந்த முன்னணிப்படை நிரந்தர இராணுவமாக வளர்ந்த போதும் முன்னணிச் சேனையாக மாறியதே தவிர மக்கள் விடுதலைப் படையாக மாறவில்லை. ஆயுதப்பயிற்சி பெற்ற விவசாயிகளினதும் கடற்றொழிலாளர்களினதும், மற்றும் சிறு உடைமையாளர்களினதும் குடிப்படைகள் உருவாக்கப்படவில்லை. மக்கள் அமைப்பாக்கப் படவில்லை. மக்களுக்கு அரசியல் சுதந்திரமோ அதிகாரமோ இருக்கவில்லை. புலிப்படை ஒரு அதிகாரத்துவ இராணுவமாக இருந்தது.அரசியல் துப்பாக்கிகளைத் தீர்மானிக்கவில்லை. மாறாக துப்பாக்கிகளே அரசியலைத் தீர்மானித்தன. ஒரு வேளை “துப்பாக்கி குழாய்களில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்ற ஒரு மேற்கோளை மட்டும் மார்க்சியத்திடமிருந்து கடன் வாங்கியது காரணமாக இருக்கலாமாக்கும்!
6) சோவியத் அதிகார வடிவம்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசிய விடுதலைக்காகவும் இனஒடுக்கு முறையை எதிர்த்து ஜனநாயகத்துக்காகவும் போராடும் அனைத்து ஈழசமூக வர்க்கங்களின் நலன்களும் ஆட்சி அதிகாரத்தால் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் போது மட்டுமே அவ்வர்க்கங்களை விடுதலைப் புரட்சியின்பால் ஈர்க்கவும் ஊன்றி நிற்கவும் செய்ய முடியும்.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விவசாயிகளும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும், மாணவர்களும், அறிவு ஜீவிகளும் அடங்கிய வெகு ஜனங்கள் புதிய ஜனநாயக அரசியல்சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் விடுதலை பெறும் தமிழீழத் தேசம் எவ்வாறு அமையும் என்பதற்கு அல்லது அமைய வேண்டுமென்பதற்கு ஒரு குறிகாட்டியாக திசைகாட்டியாக முன்னுதாரணமாக அமையவில்லை. விடுதலைப் புரட்சியின் வெற்றிக்கனி எவ்வாறு இருக்குமென அவர்களால் அனுபவிக்க முடிந்ததெல்லாம் புலி அதிகாரத்துவ முதலாளித்துவ சர்வாதிகாரமே. சிங்கள அதிகாரத்தின் இனப்படுகொலைத் தாண்டவத்துக்கு முன்னால் இந்தப் புலி அதிகாரம் அடைக்கலமாகவும் அரணாகவும் இருந்த உண்மையின் அளவுக்கு வெகுஜன ஆதரவும் இருந்தது. எனினும் புலி அதிகாரத்துவ முதலாளித்துவ சர்வாதிகாரம், புரட்சியின் நேச வர்க்கங்களை அவர்களின் பாத்திரத்தை கணிசமாகப் பாதித்தது. இதனால் அவர்கள் விடுதலைப் புரட்சியில் ஊக்கம் குன்றிப் பின்வாங்கி ஒதுங்க நேரிட்டது. இது முன்னணிப்படை மீது-விடுதலைப்புலி களமுனைப் போராளிகள் மீது - போரின் முழுச் சுமையையும் சுமத்துவதாக அமைந்தது. மேலும் படைவீரர்களின் பற்றாக் குறைக்கு வழிவகுத்தது. இதிலிருந்து பலாத்காரப் படைச் சேர்ப்பு என்கிற தவறான நடவடிக்கை உருவாகிற்று.
தலைமை (அதாவது தலைவர்) விசுவாசத்தையும், களமுனைச் சாதனைகளையும் கொண்டு படைத் துறை அதிகாரரிகளின் படிநிலை அமைப்பு தீர்மானிக்கப்பட்டது. மேலதிகாரிக்கு கீழதிகாரி கட்டுப்படுகிற அதிகாரத்துவ இராணுவக் கோட்பாடு இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஆளும் வர்க்க ஒடுக்குமுறை அரசு இராணுவக் கோட்பாடே அமைப்பின் கோட்பாடாக இருந்தது. அமைப்புக் கண்காணிப்புக்கான சாதனம் உளவுப்படையாக இருந்தது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடாக இருக்கவில்லை.
இத்தகைய ஒரு அமைப்புக் கோட்பாட்டுச் சூழலில் இருந்துதான் அன்ரன் பாலசிங்கம், கருணா, கேபி போன்ற நபர்களால் ஒரு இலட்சிய இயக்கத்தின் அடிஅத்திவாரத்தை தகர்க்க முடிந்தது.
எதிரியானவன் மூர்க்கத்தனமான போர் வெறியன். எந்த யுத்த தர்மங்களையும் மதிக்காத மிலேச்சத்தனமான காடையன். அவன் பாரிய படைத் தளபாடங்கள் உடையவன். இறைமையின் பேரால் வான்வெளியில் இருந்து தன்நாட்டின் சொந்தப் பிரஜைகளின் மீதே குண்டுமழை பொழிந்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழிக்கத் தயங்காதவன்.
இக்குரூரமான கொடிய எதிரியிடமிருந்து, தற்காலிகமாக வீரக்களமுனை போர்களால் விடுவிக்கப்பட்ட பிராந்தியங்களையும், மக்களையும், யுத்தகாலப் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் கடமையை, மூர்க்கமான போரை அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட முன்னணிப்படையால் ஒரே நேரத்தில் சாதிக்க முடியாது.
இதிலிருந்து விடுதலைப் புரட்சியைப் பாதுகாக்கக்கூடிய வல்லமை பெற்ற ஒரேயொரு சக்தி ஈழமக்களின் சோவியத் வடிவ ஆட்சி அதிகார உறுப்புக்கள் மட்டுமே ஆகும்.இச்சிவப்பதிகார புரட்சித்தளங்களால் மட்டுமே இந்த வெண்பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும்.
வெறும் முன்னணிப்படையால் மட்டும், அது விடுதலைப்புலிகள் அளவுக்கு தமிழீழ உணர்வு மிக்கதாகவும் தீரம் மிக்கதாகவும் தியாகம் மிக்கதாகவும் அர்ப்பணத்தைக்கண்டு அஞ்சாததாகவும் ஈழத்தேசத்தின் மீது அப்பழுக்கற்ற பற்றும் விசுவாசமும்கொண்டிருந்த போதும்- முடியாது என்பதை எதிரியிடம் பறிகொடுத்த நம்தளங்கள் நிரூபிக்கின்றன.
எதிரியானவன் பாசிச முற்றுகையைத் தொடுத்து அளவு மீறிய இராணுவ வல்லமையுடன் யுத்த தர்மங்கள் எல்லாவற்றையும் மீறி முன்னேறித்தாக்க முயன்ற ஒவ்வொரு களமுனையிலும் ’பாரிய இடப்பெயர்வு’எனும் நிகழ்வு ஈழப்போரில் தொடர்ந்து இடம் பெற்றுவந்தது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஈழவிடுதலைப் புரட்சியின் ஆதாரச் செந்தளங்கள் அமைக்கப்படாமையே இதற்குக் காரணமாகும்.
மேலும் ஆழ்ந்து நுணுகி ஆராய்ந்தால் சிவப்பதிகாரத்துக்கு –மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம்- அஞ்சியும், இன ஒடுக்குமுறையை மிஞ்சியும் விடுதலை காண்பதென்பதுதான் நமது 30 ஆண்டுகால யுத்தத்தின் அரசியல் போர்தந்திரப்பாதையாக இருந்திருக்கிறது. ஈழத்தமிழின விடுதலையும் சரி உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசங்களின் விடுதலையும் சரி இரண்டு கதிரைகளுக்கு இடையில் இருக்க முடியாது. இரண்டாவது கதிரை தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கே மறுக்கப்படுகின்ற அரசியல் போக்கு வளர்ந்து வரும் சூழலில் ஜனநாயக வர்க்கங்கள் இது குறித்து எண்ணிப்பார்க்கவே முடியாது என்பது திண்ணமாகும்.ண்ட்
7) பாட்டாளிவர்க்கத் தத்துவம்
சித்தாந்தத்துறையில் சிறு முதலாளித்துவ வர்க்கத்துக்கென தனியான ஒரு சித்தாந்தம் கிடையாது.சிறுமுதலாளித்துவ வர்க்கச் சித்தாந்தம் என்பது முதலாளித்துவ சித்தாந்தமே ஆகும். அவ்வாறன்றி வேறெதுவாகவும் இருக்கமுடியாது, இருக்கவும் இயலாது.
நாம் ஏகாதிபத்தியத்தினதும் சோசலிசப்புரட்சியினதும் சகாப்தத்தில் வாழ்கிறோம்.நமது காலத்தில் அனைத்து முரண்பாடு களினதும் ஆதார அடிப்படையாகவும் அடித்தளமாகவும் இருப்பது இம்முரண்பாடே ஆகும்.முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியைப் பூர்த்தி செய்யாத கீழத் திசை தேசங்களில் சோசலிச இயக்கமானது புதிய ஜனநாயகப்புரட்சி என்கிற இடைக்கட்டத்தினூடாக வளரும் விதியைக் கொண்டிருக்கிறது.
இந்நாடுகளில் தேசிய விடுதலைப் புரட்சிகள், தேசிய சுய நிர்ணய இயக்கங்கள் ஆகியவை புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாக மட்டுமே அமைய முடியும்.
இந்த ஒரே காரணத்தினால் மட்டுமே தேசிய சுயநிர்ணய இயக்கத்திற்கு முதலாளித்துவ சித்தாந்தம் சற்றும் வழிகாட்ட சக்தியற்றது என்பது நிரூபணம் ஆனதாகும்.
தேசிய விடுதலைப்புரட்சிகளுக்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சிய லெனினிய மாவோசேதுங் சிந்தனையே ஆகும்.
8) போல்சுவிக் கட்சி
ஈழதேசிய விடுதலைப்புரட்சியில் ஊன்றி நிற்கும் வர்க்கங்களுக்கு-மக்களுக்கும் பிரதானமாக உழைக்கும் பாட்டாளி மக்களுக்கும், விவசாய வெகுஜனங்களுக்கும், முன்னணிப்படைகளுக்கும், மக்கள் விடுதலைப் படைக்கும் ஒன்றிணைந்த தலைமையை வழங்க வல்லது மார்க்சிய லெனினிய, மாவோசேதுங் சிந்தனையால் வழிநடத்தப்படும் வைராக்கியமும், செயல் துடிப்பும் மிக்க லெனினியக் கோட்பாடுகளுக்கமைந்த போல்ஸ்விக் கட்சியால் மட்டுமே முடியும்.
செயல்தந்திர வழியின் அடிப்படையிலும், குறிப்பான திட்டத்தின் அடிப்படையிலும், அரசியல் பிரச்சார நடைமுறைப் பணிகளில் ஈடுபடும் அதேவேளை நாட்டின் சமூகப் பொருளாதாரப் படிவத்திலிருந்து எழுகிற தனித்தன்மைகளை ஆராய்ந்து, வரையறுக்கப்பட்ட புரட்சிகரத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு போல்சுவிக் கட்சியை கட்டியமைக்க கடுமையாக உழைப்பது புதிய ஈழப்புரட்சியாளர்களின் தலைமையானதும் முதன்மையானதும் பிரதானமானதும் மிக அவசர அவசியமானதுமான கடமையாகும்.
ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல் புரட்சி இல்லை என்கிற மாமேதை லெனினின் கட்டளைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க புதிய ஈழப்புரட்சியாளர்கள் ஒருபோதும் தவறக்கூடாது.
9) பேச்சுவார்த்தைக்கான அடிப்படைக் கொள்கை
மீண்டும் ஒரு புதிய ஜனநாயக தேசிய விடுதலை அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடிப்படையான அரசியல் முழக்கம் சுயநிர்ணய உரிமையே ஆகும்.
பிரிவினை தவிர்ந்த பிற வழிகளில் இலங்கை அரசுடன் தமிழ்த் தரப்பு பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என ஏகாதிபத்திய வாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும், ஐநா சபையும் போதனை செய்து ஈழமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுதலைப்பாதையில் இருந்து திசை திருப்புகின்றனர்.
ஈழத்தமிழ் மக்கள் பிரிவினையை கைவிட வேண்டுமானால் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்த ஜனநாயக அரசு முறையாக இலங்கை அரசு முறை மாற்றப்பட வேண்டும். அவ்வாறல்லாமல் இலங்கை அரசின் இனஒடுக்குமுறை அத்திவாரத்தை அசைக்காத, அகற்றாத எந்தத் தீர்வும் இன ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டாது. சமஸ்டி, மாவட்ட சபை, மாகாண சபை, இடைக்கால தன்னாட்சி அதிகார சபை என்கிற அரச அதிகார வடிவங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது ஒடுக்கும் தேசமும் ஒடுக்கப்படும் தேசமும் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்படாத வழியில் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள முடியும் என்கிற மோசடித் தனமான உண்மைக்குப் புறம்பான ஒடுக்கப்படும் தேச மக்களை ஏமாற்றும், ஏய்த்துப் பிழைக்கும் அதிகாரப் பகிர்வுக் கோட்பாடே ஆகும். இக்கோட்பாட்டை ஆதரித்து நிற்கும் அனைவரதும் ஒருங்கிணைந்த ஒரே குறிக்கோள் இன ஒடுக்குமுறையைத் தொடர்வதும் இனவெறிப் பாசிச ஏகாதிபத்தியதாச சிங்களத்தைப் பாதுகாப்பதே ஆகும்.
இந்தச் சதிக்குள்தான் அன்ரன் பாலசிங்கம் விடுதலைப் புலிகளை வீழ்த்தினான். இதிலிருந்து தான் 30 ஆண்டுகால விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய விடுதலைப் புரட்சிக்கான அடித்தளத்தின் ஆணிவேர் தகர்க்கப்பட்டு அழிவின் ஆரம்பம் தொடங்கியது என்பதை ஒரு கணமேனும் தமிழீழ மக்கள் மறந்துவிடக்கூடாது.
எனவே அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கான அடிப்படை ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுவதே ஆகும்.இது தமது பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை தீர்மானிப்பதற்கு அவர்களுக்குள்ள உரிமையாகும்.
இது ஈழ மக்கள்,தமக்காக, தாமே எடுக்கும் முடிவாகும். இதில் ஒபாமா தலையிடக் கூடாது! சர்வகட்சி மாநாடு நடத்தி இதை முடிவு செய்யக்கூடாது. விசாரணைச் சபைகளாலும் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடாது.
இதற்கான ஜனநாயகத் தீர்வு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையே கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவதுதான்.
இது தவிர வேறு எதுவும் இல்லை, இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி.
10) எதிர்காலத்துக்கான ஒற்றுமை
தேசிய இன ஒடுக்குமுறையின் தீய விளைவு அது ஒரு தேசத்தை ஒடுக்குகிறது என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக ஒடுக்கும் தேசத்தினதும் ஒடுக்கப்படும் தேசத்தினதும் உழைக்கும் மக்களுக்கு இனவெறி ஊட்டி அவர்களது வர்க்க உணர்வைச் சிதைக்கிறது. இதன் மூலம் அந்தந்தத் தேசங்களின் தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சிகளுக்கும் இது தடையாக அமைகின்றது.
இதனால் இன ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டாமல் இலங்கையில் ஜனநாயகப் புரட்சிஒரு அடியும் முன்னேற முடியாது.இதிலிருந்து பெறப்படும் கோட்பாட்டு முடிவானது இலங்கை நாட்டின்-விவசாயப்புரட்சியின்- அடிப்படையான முழக்கம் பிரிந்து செல்லும் உரிமை என்பதே ஆகும்.
இன்று நாம் பிரிவினைக் கோரிக்கைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடினாலும் தென் இலங்கையில் – ஸ்ரீலங்காவில் மற்றும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் ஜனநாயகப் புரட்சிகள் வெற்றியடைவதை ஒட்டி, இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் ஒன்றியம் ஒன்றில் இணைந்து ஏகாதிபத்தியத்தை அடித்து வீழ்த்தவும் உலக சோசலிசப் புரட்சிகர இயக்கங்களை உந்தித் தள்ளவும் போராடுவோம்.
சோசலிச சமூக வளர்ச்சியின் முதிர்வைத் தொடர்ந்து ஒடுக்குமுறையற்ற சுரண்டலற்ற வர்க்க பேதமற்ற சோசலிச சமூகத்தை படைத்துப் பாதுகாக்க பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிப்போம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வாக்களித்த தமிழ்பேசும் மக்கள், திலீபன், மற்றும் மாவீரத் தோழர்களின் எண்ணற்ற ஈழப்போராளிகளின் சோசலிச தமிழீழக் கனவை நனவாக்குவோம்.
இன்னும் நாற்பதே ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கக் கூடுமெனக் கருதப்படுகின்ற பூமிக் கிரகத்தின் மானுட சனத்தொகையின் தேவைகளை உற்பத்திச் சக்திகளை நாசப்படுத்தும் ஏகாதிபத்திய அமைப்பு முறையினால் தீர்க்க முடியாது.
தமிழீழத் தாய்நாட்டில் கூட்டமைப்பும், தமிழ் நாட்டில் நெடுமாறன், வைகோ, சீமான் கும்பலும் புலம் பெயர் நாடுகளில் புழுத்துக் கிடக்கும் தமிழர் பேரவைகளும் நாடுகடந்த அரசாங்க உருத்திர குமாரன் கும்பலும் ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச, சமரச சக்திகளே ஆவர். தமிழ் நெற் இணையக் குழு குறுமின வாதத்தையும் கலைப்புவாதத்தையும் பரப்பி அரசு சாரா நிறுவனங்கள் எனச் சொல்லப்படும் ஏகாதிபத்திய NGO க்களிடம் நிதி பெற்று வயிறு வளர்த்து ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைச் சேவகம் செய்கிறது.
இலங்கை அரசின் நேரடிப் பராமரிப்பில் இயங்கும் சில ஒட்டுக்குழு இணையங்கள் தவிர இதர பெரும்பாலான பிறப்பறியாத் தமிழ் இணையங்களும் இச்சமரச சரணாகதி வழியைப் பிரச்சாரம் செய்பவையாகவே உள்ளனர்.
புலம் பெயர் நாடுகளில் நிலை பெற்றுவிட்ட ஒரு ஈழத்தமிழ் வணிக வர்க்கத்தினர் அந்நாடுகளில் ஏகபோக மூலதனத்தினால் அடித்து வீழ்த்தப்படுகின்ற உலக பொருளாதர நெருக்கடியின் சூழ்நிலையில் தமது மூலதனத்தை பெருப்பித்து விரிவாக்க ஈழத்தில் ஒரு அமைதிச் சூழலை உருவாக்க முயன்றனர். இந்த வர்க்க நலனின் பின்னணியில் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை ISGA க்கு அடிபணிய வைத்தார்கள்.
ஆனால் இந்த ஏகாதிபத்திய தாச ஈழ தேசிய விரோத சமரச சந்தர்ப்ப வாதம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் முழுதான அழிவுக்கு வழிவகுத்தது. மக்களும் மாவீரத் தோழர்களும் சிந்திய இரத்தம் காய முன்னமே யுத்தக் குற்றவாளி போர்ப்படைத் தளபதி பொன்சேக்காவுடன் கூட்டமைத்தது இந்தக் கும்பல். அது சாத்தியமற்றுப் போனதால் இராஜபக்சவின் காலில் விழுந்து நக்குவதற்குப் படையெடுத்தது. அதுவுங் கூட நிறைவேறவில்லை. இறுதியாக நெடுமாறன் கும்பல் மூலம் தமிழகத்தில் கடைவிரிக்க அலைகின்றது.கருணாநிதி குடும்பத்தின் ஏகபோகத்தால் சுகமிழந்து, சுதந்திரமிழந்து, திடீரெனத் திராவிடத்தைத் துறந்து தமிழராகிய நாம் தமிழர் கும்பலோடு கூடிக்குலாவுகின்றது. சீமானை செந்தமிழன் என்கிறது.
தேசிய ஒடுக்குமுறையின் கோட்டை கொத்தளங்களான ஏகாதிபத்திய பாராளுமன்றங்களில் இருந்து தமிழீழப் பிரகடனம் செய்கிறது.
மறுபுறம் புலிக்கொடி ஏந்தி உடற்பயிற்சி செய்து, நடைப் பயணம், வீதிப்பயணம், உந்துருளிப் பயணம் என நெடுமாறன் கும்பல் ஏவிவிட்ட தமிழீழ மாணவர்கள் தம்மை புரட்சியாளர்கள் எனப்பிரகடனம் செய்து திராவிடப் பாணியில் திளைக்கிறார்கள்.
இந்தப் போக்கின் கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் என்னவென்றால் இந்தக் கும்பல் அனைத்தும் தனது நெற்றியில் தமிழீழத் தளபதி பிரபாகரனின் திரு உருவத்தையும், பிடரியில் தமிழீழத் தேசியப் புலிக்கொடியையும் தாங்கிய வண்ணம் இத் தேசத் துரோகத்தை இழைப்பதுதான்.
`ஏகாதிபத்தியமே நீதி வழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு`
என இந்தக் கும்பல் ஒரு சேர ஈனத்தனமாக முனகுகிறது. இந்த யுத்த தந்திரப்பாதைக்கு மக்களைத் திருப்பி, அவர்களை நிரந்தர அடிமைத்தனத்தில் கட்டிப்போட முயலுகின்றது. இதன் மூலம் தமது எசமானர்களான ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்திய விரிவாதிக்க வாதிகளுக்கும் சேவகம் செய்யத் துடிக்கின்றது. தமிழீழ மக்கள் மத்தியில் ஒரு புரட்சிகர ஜனநாயக தேசிய விடுதலைக்கான அரசியல் தலைமை இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், மாவீரத் தோழர்களுக்கும் வீரம் செறிந்த ஈழப்போராட்ட வரலாற்றுக்கும் நிரந்தர சமாதி கட்டிவிடலாம் எனக் கனவு காண்கின்றது. இதில் தாம் வெற்றி அடைந்து மக்களின் விடுதலை உணர்வு மங்கி மறைந்து போய்விடுகிறபோது தங்கள் நெற்றியில் ஒட்டுப் பொட்டிட்ட தமிழீழத் தளபதி பிரபாகரனை உரித்தெறிந்து விட்டு தங்கள் தளபதி ஒபாமாவை நெற்றியில் ஒட்டிக் கொண்டு, பிடரியில் புலிக்கொடிக்குப் பதில் அசோகச் சக்கரத்தை தாங்கிக் கொண்டு ஈழவிடுதலைக்கெதிராக படையெடுக்க திட்டமிடுகின்றது. இதன் அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கி விட்டன. 2011 மாவீரர் தின பிரச்சார விளம்பர பிரசுரங்கள் அனைத்தும் துப்பாக்கிகளை புதைத்தொழித்து விட்டு கார்த்திகைப் பூக்களை பூக்கவிட்டுள்ளன.
ஏகாதிபத்தியதாச இந்திய விரிவாதிக்க பாச சமரசவாதிகள் – அவர்கள் எங்கிருப்பினும் சாதிக்க விரும்புவது இதுதான்.
இதனால் ஏகாதிபத்தியமே நீதி வழங்கு, இந்திய அரசே தீர்வு வழங்கு என்ற முழக்கத்தின் அடிப்படையில், ஏகாதிபத்திய தாச இந்திய விரிவாதிக்கபாச, சமூக சக்திகளால் நடத்தப்படும் இடைவழிச் சமரசத்துக்கான தேச விரோத இயக்கம் தோற்கடிக்கப்பட வேண்டியதாகும்.
இந்த பிற்போக்கு தேச விரோத இயக்கத்தை தோற்கடிக்கும் போராட்டத்தின் போக்கிலேயே, முற்போக்கு தேசிய விடுதலை இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
வோல் ஸீர்ற் முற்றுகை இயக்கம் உலக மயமாகி வருகிறது. உற்பத்தியின் உலகு தழுவிய சமூக மயமான தன்மைக்கும் உற்பத்தி முறைக்கும் இடையான முரண்பாடு இப்போராட்டங்களை உலகமயமாக்கி வருகிறது.
உலகெங்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், பெண்கள், ஜனநாயக உணர்வு கொண்ட அறிவுத் துறையினர், கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் என பரந்துபட்ட வெகுஜன மக்கள் கோடான கோடியாகக் கூடி ஏகபோகத்தின் அனைத்துத்துறை ஆதிக்கத்துக்கும் எதிராக தன்னியல்பாகத் திரண்டெழுந்து போராடத் தொடங்கி விட்டனர். தடுத்து நிறுத்த முடியாத வகையில் இத் தன்னியல்பு இயக்கம் உலகமயமாகி வருகிறது.
மறுபுறம் ஏகாதிபத்தியவாதிகளால் அவர்களின் அரசியல் உலக மறுபங்கீட்டுப் போர்களால், பொருளாதார உலகமயமாக்கல் கொள்கைகளால் ஒடுக்கப்படும் கீழ்த்திசை நாடுகளின் நவீன காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த, தம்சொந்த நாடுகளில் ஆதிக்கவர்க்கத்தை எதிர்த்த, கிளர்ச்சி இயக்கங்கள் தமது அரசாங்கங்களையும் அதனது அரசர்களையும் அகற்றி வருகின்றன.
உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுசேருங்கள் என்ற முரணற்ற சர்வதேசியவாத ஜனநாயக முழக்கம் தன் உள்ளடக்கத்தில் கிளர்ச்சி முழக்கமாக மாறி யதார்த்தமாகி வருகிறது.
ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் தமிழ் மக்கள் இந்த முழக்கத்தையும் இதை நடைமுறையாக்கும் வல்லமை பெற்ற சமூக வர்க்கங்களையும் சார்ந்து நின்று போராட வேண்டும்.
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாண்ட நம் மக்களதும், மாவீரத் தோழர்களினதும் மரணித்த ஈழப்போராளிகளினதும் தேசிய விடுதலைக் கனவை நனவாக்க இது ஒன்றே வழியாகும்.
• இப்புனிதப் பெரு நாளில் இல்லங்களில் விளக்கேற்றி உள்ளங்களில் மாவீர மக்களை நினைவு கொள்வோம்!
• விடுதலையின் எதிர்காலம் குறித்து ஒன்று கூடி விவாதிப்போம். சிந்திப்போம். செயற்படுவோம்.
• முள்ளிவாய்க்காலில் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முதல் நிலைத் தலைவர்கள், தளபதிகள் போராளிகள், அவர்களின் குடும்பங்கள் வீரப் புதல்வர்கள், வீராங்கனைப் புதல்வியர்களின் விடுதலைக் கனவை நினைவில் நிறுத்துவோம்!
• அண்ணன் புதுவை ஆணையிட்டான் ``அணைய விடாதீர்கள் ஊதிக்கொண்டே இருங்கள்`` ஆம் நாம் ஊதிக்கொண்டே இருப்போம்! இறுதி வெற்றி காணும்வரை!!
• ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தைமீளக்கட்டியமைக்க உலகத் தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்வோம்.
• .ஏகாதிபத்தியமே நீதிவழங்கு, இந்தியாவே தீர்வுவழங்கு` என முனகி, ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச, சமரசக் கும்பல் கட்டியமைத்து வரும் பிற்போக்கு தேச விரோத இயக்கத்தைத் தோற்கடிப்போம்!
• ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போர் வெற்றிபெற, உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள் என முழங்கி, முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தைக் கட்டியமைப்போம்!
• புலம் பெயர்நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம். அவற்றைப் புதிய ஈழ எழுச்சிக்கான புரட்சிப்பள்ளிகளாக மாற்றுவோம்.
• மாவீரர் நினைவு நீடூழி வாழ்க!
• இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
மாண்ட நம் மாவீரப் புலிப் புதல்வர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
புதிய ஈழப்புரட்சியாளர்கள்.