Thursday 6 October 2011

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (6)


தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)

பகுதி 6   
பதில். . . . . . . படுகொலையா ?
       
தமிழ்தரகுமுதலாளிய வர்க்கம் எதிர்ப்புரட்சி வர்க்கமாகும். அதன் தோற்றம் முதல் இன்று வரை தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் புரட்சியை திசைதிருப்பி மழுங்கடிக்கும் எதிர்ப் புரட்சிப் பாத்திரத்தை ஆற்றிவருகிறது. தமது விடுதலையை வென்றடுப்பதற்காக தமிழ்மக்கள் சிந்திய இரத்தத்தை, அவர்களின் அளப்பரிய தியாகத்தை, பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை, உடமை இழப்புக்களை இந்த எதிர்ப்புரட்சிக்கும்பல் தன் சொந்த வர்க்க நலனுக்காக வேட்டையாடியுள்ளது. சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு போராடும் மக்களை இரத்தப் பலி கொண்டுள்ளது. இதற்குத் தமிழ்த்தேசிய இனம் ஒருநாள் பதில் சொல்லியே தீரும். . . எவ்வாறு?
     
கடந்த ஜீலைமாதம் கொழும்பில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் உரிமை கோரிக் கொள்ளாத ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழியில் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு பதில் சொல்லிவிடலாம் என நாம் கருதவில்லை. ஏன்?
      
எந்தக் கட்சியையும் போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு வர்க்கத்தின் கட்சி. இது தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் – நலனுக்காக போராடிய – கட்சி. இந்த வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதி என்றவகையில் தான் அமிர்தலிங்கம் தனது பாத்திரத்தை ஆற்றியுள்ளார். தனிமனிதனை அழிப்பதனால் அவன் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கம் அழிந்து போய்விடுவதில்லை. (வெகுசாதாரண உண்மைதான் என்றாலும் சொல்ல வேண்டியுள்ளது தானாகவே செத்துப் போனவர் செல்வநாயகம், இதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் செத்துப் போய்விடவில்லையே!). இவ்வாறு பெளதீக ரீதியாக ஒரு வர்க்கத்தை, அதன் அரசியற் பாத்திரத்தை, செயற்பாட்டை அழித்துவிடவும் முடியாது. உலக வரலாறு முழுமையிலும் இதற்கு ஒரு உதாரணத்தைத்தானும் காணமாட்டோம்.
        சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளது. இச் சமூக வர்க்கங்களின் முரண்பட்ட நலன்களில் இருந்தே பல்வேறு கருத்துப்போக்குகளும், ஸ்தாபன அமைப்புக்களும் தோன்றுகின்றன. இச்சமூக வர்க்கங்களும் சமூக நிறுவனங்களும் திட்டவட்டமான பொருளாயத அடிப்படையிருப்பதன் காரணமாகவே அவை விடாப்பிடியாக தமது இருப்புக்காக போராடுகின்றன. ஒரு வர்க்கத்தின் முன்னணிப்பிரிவு, அவ்வர்க்கத்தின் நலன்களை உறுதி செய்யும் அரசியற் குறிக்கோள்களையும், அவ்வரசியல் குறிக்கோள்களின் அடிப்படையில் கட்சியாகவும் ஸ்தாபனப்படுகிறது.
     
அரசியல் போராட்டங்களில் அரசதிகாரத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வர்க்க நலன்களே மோதிக்கொள்கின்றன. இம் மோதல்களில் தனிமனிதர்களின் இழப்புக்கள் ஒரு வர்க்கத்தின் இருப்பை இல்லாதொழித்து விடுவதில்லை. இதற்கு மாறாக அவ்வர்க்கம் உள்ள வரையில் தனது அரசியல் தலைவனை உடனடியாகவோ சற்றுக் காலந்தாழ்த்தியோ உருவாக்கிக் கொள்கிறது. எனவேதான் அமிர்தலிங்கத்தை கொலை செய்வதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ, அதன் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரமோ இல்லாதொழிந்துவிடாது என்கிறோம்.
      
ஆனால் எதிர்ப்புரட்சி வர்க்கமான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கிலிருந்து தமிழ்மக்களை விடுவிக்க வழிகாட்டவேண்டும். இதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நிச்சயமாகவும் முடிவாகவும் ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. ‘நாடுதழுவிய வகையில் அரசியல் அம்பலப்படுத்தலைத் திரட்டி ஒழுங்கமைப்பதே’ அவ்வழியாகும்.  தீர்க்கமான தாக்குதலையும், தீர்மானகரமான வெற்றியையும் இவ்வழியில் மட்டுமே சாதிக்க முடியும்.
     
ஏனெனில்”ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமாகும்.” ஆளும் வர்க்கங்கள் – அதன் இளைய கூட்டாளியான தமிழ்ததரகுமுதலாளிய வர்க்கமும் – தமது எதிர்ப்புரட்சி அரசியலை வைத்து மக்களைத் தம்பின் திரட்டுகின்றன. நாம், நமது அரசியலை வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அரசியல் தெளிவை ஊட்டுதல் வேண்டும். கூட இருந்து குழிபறிக்கும் சமரச வர்க்கங்களைத் தனிமைப்படுத்த வேண்டும். எதிரிகளை மக்களுக்கு இனங்காட்டி அவர்களை எதிர்த்துப் போராட மக்களைத் திரட்டி அமைப்பாக்க வேண்டும். இந்த ’அரசியல் போராட்ட வழியில்’ செல்வதன் மூலம் மட்டுமே நாம் வர்க்கப் போராட்டத்தில் முன்செல்லலாம்.
      
’இவ்வழியில் நம்பிக்கையோ இதனைச் சாதிப்பதற்கான ஆற்றலோ பொறுமையோ இல்லாதவர்கள் தமது வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொள்ள பயங்கரவாதம் தவிர வேறு போக்கிடம் தேடுவது கஸ்டம்தான்’ இதனால் அவர்கள் அமிர்தலிங்கத்தைக் கொன்று விட்டார்கள். ஆனால் அமிர்தலிங்கத்தின் ஆவியைச் சந்திப்பார்கள். அது மக்களின் சிந்தனையில் அமுக்குப் பேயைப் போல் உட்கார்ந்திருக்கிறது.!
       
புரட்சியைத் துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை. அரசியல் தான் தீர்மானிக்கிறது. (ஈழப்போராட்டத்தின் பின்னடைவு துப்பாக்கிகளின் பற்றாக்குறையால் ஏற்படவில்லை. பிரதானமாக அது ரசிய சமூக ஏகாதிபத்தியம், இந்திய விஸ்தரிப்புவாத அரசு, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் மற்றும் போராட்ட நடைமுறை குறித்த தவறான அரசியல் மதிப்பீடுகளின் விளைவாக, போராட்டப் பாதையைத் தவறவிட்டதால்தான் ஏற்பட்டதென்பது கண்கூடான உண்மையல்லவா!). 


தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் மூன்று எதிர்ப்புரட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் தான் தமிழ்மக்களின் மத்தியில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இக்கோட்பாடுகளில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்காத வரையில் ஒரு வர்க்கம் என்கிற முறையில் அதன் எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தை எந்தத் துப்பாக்கியும் எதுவும் செய்துவிடாது.
    
எனவே தமிழ்த்தரகுமுதலாளிய மூன்று கோட்பாடுகளின் பழைய முழக்கங்கள் மண்மூடிப்போகட்டும். ‘இந்திய – இலங்கைப் பாசிஸ அரசுகளை எதிர்த்து தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்’ என்ற புதிய முழக்கத்தோடு போராட்டப் பாதையில் முன்னேறுவோம்.
(முற்றும்)


குறிப்பு: இக்கட்டுரை நவம்பர் 1989 இல் (22 ஆண்டுகளுக்கு முன்னால்), எழுதப்பட்டு புதிய ஈழப்புரட்சியாளர்களால் தமிழீழத்தில் தலைமறைவாக விநியோகிக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன்னால் பிரச்சாரப்படுத்தப்பட்ட இச் சிறு பிரசுரம் எந்தக் கருத்துத் திருத்தமும் இல்லாமல் இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது


புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments: