Monday, 21 July 2014

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (4) - மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 4

மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை நாடு தழுவிய மத மோதலாக மாற்றுவதே மோடிப் பாசிசத்தினதும்,பக்ச பாசிசத்தினதும் புதிய திட்டம்.

மோடி ஆட்சி தனது பதவியேற்பு வைபவத்திற்கு `சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்` என்கிற போர்வையில் ஈழத்தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பளித்தது.திரை மறைவில் பேசப்பட்ட விடயங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு `13 இற்கு மேல்` தீர்வுக்கு வலியுறுத்தியதாக, தரகுத்தமிழ் அணியும் அவரகளது ஊதுகுழல் ஊடகங்களும் ஓயாது முழங்கின!

`13 இற்கு மேல்` என்கிற அடிமைத் தளையை ஈழத்தமிழர் மேல் திணிப்பதன் மூலம் ஒரு புறம் இலங்கை அரசை-சிங்களத்தை- பொறிந்து விழாமல் பாதுகாத்துக் கொண்டும், மறு புறம் ஓடுகாலிகளையும், தமிழ்த்தரகு அணியையும் தனது சமூக ஆதரவாக்கிக் கொண்டு, `தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண` முயல்வதாக நாடக மாடிக்கொண்டு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை விரிவாக்க, ஈழ தேசியப் பிரச்சனையை மத மோதல்களை தூண்டி சீரழித்து சிதைப்பதே மோடி ஆர்.எஸ்.எஸ் பாசிச ஆட்சியின் புதிய திட்டமாகும்.

பிரித்தானிய காலனியாதிக்கவாதிகள் கற்றுக் கொடுத்த `பிரித்தாளும் தந்திரத்தை` அவர்களது அரைக்காலனிய சேவகர்கள் இந்திய விரிவாதிக்கத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். 1987 இல் காங்கிரஸின் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழர்களை சாதி ரீதியாக பிளவு படுத்தி, தமிழ்த்தேசிய புலிகள் இயக்கத்தை தோற்கடிக்கலாம் என்று கனவுகண்டது.இதற்காக EPRLF அமைப்பைப் பயன்படுத்த முயன்று படு தோல்வி கண்டது. ``மத்தாளோடைப் பத்மநாபா`` இந்திய ஆக்கிரமிப்பின் கூலிப்படைத் தலைவன் ஆனார்.

 இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களில் ஒன்றான காங்கிரஸ், ஈழ தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி அழிக்க `சாதி` என்கிற ஆயுதத்தை ஏந்தியது என்றால், அதன் மறு முகமான பி.ஜே.பி மதம் என்கிற ஆயுதத்தை ஏந்திவருகின்றது.

ஈழ சமூகத்தில் மத முரண்பாடு கூர்மையானதாகவோ, பிரதானமானதாகவோ, இயற்கையாக இல்லாத போதும், எளிமை நிலையில் உள்ள முரண்பாட்டை செயற்கையாக முன்னிலைப் படுத்துவதற்கான சமூகக் கூறுகளும்,சமூக சக்திகளும்,நிறுவனங்களும் உள்ளதைப் புறக்கணிக்க முடியாது.இதைச் செயற்கையாகத் தூண்டி மோதல்களை உருவாக்குவதற்கான புறவய வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.

அவையாவன:

1)  அமிர்தலிங்கம் தமிழும் சைவமும் நமதிரு கண்கள் என்று பேசி வந்த தலைவர்.சமஸ்டிக்கட்சியின் தேர்தல் சின்னமாக முதலில் சிபார்சு செய்யப்பட்டது `பசு` ஆகும்,பின்னால் இது வீடாக மாற்றப்பட்டது.இது வாக்கு வேட்டைக்கு செய்த திருத்தமே தவிர கொள்கைத் திருத்தம் அல்ல.
2) சமஸ்டிக்கட்சியின் கொடி `பச்சை மஞ்சள் சிவப்பு` வர்ணங்களைக் கொண்டதாகும்.இதில் பச்சை நிறம் இஸ்லாமியத் தமிழர்களைப் பிரதி நிதித்துவம் செய்தது. யாழ்ப்பாண/மன்னார்  பாரம்பரிய வாழ் நிலத்தில் இருந்து 24 மணி நேர கட்டாய இராணுவ உத்தரவில் இஸ்லாமியத் தமிழர்களை விரட்டியடித்து நாடு கடத்திய `விடுதலைப் புலிகள்` தமிழர்களின் அரசியல் வரலாற்றின் வர்ணங்களில் இருந்து பச்சை நிறத்தை அடியோடு நீக்கி விட்டார்கள்.புலம்பெயர் தமிழர் இயக்கமும், கூட்டமைப்பும், இந்தக் கறையை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
3)விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதிபதி. சட்டக் கல்வித் துறை சார்ந்தவர்.வடக்கு மாகாணத்தின் அனைத்து மதப் பிரிவு மக்களிடையே இருந்தும் பெரும்பான்மை வாக்குகளால் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டு, வடக்குத் தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதி சர்வதேச சமூகத்தால் போற்றப்பட்டவர். இவரது பதவியேற்பு வைபவத்தில் இவருக்கு விநாயகர் விக்கிரகத்தை பரிசளித்தார் ஐக்கிய இலங்கையின் ஜனாதிபதி!இதன் குறி பொருள் என்ன?
4)யாழ்பாணப் பல்கலைக் கழக - `அறிவாலயத்தின்` சின்னம் இப்போதும் நந்திச் சிலை தான்.யாழ் பொது சன நூலக வாசலில் -மற்றொரு அறிவாலய வாசலில் வெள்ளைத் தாமரை யில் சரஸ்வதி தான் வீற்றிருக்கின்றாள்.கம்பர் வருதி ஜெயராஜா மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.`இந்திய இலங்கை இந்து மக்கள் முன்னணி` என்கிற அமைப்பு ஒன்று மோடிக்காக நல்லூர் கோவிலில் ஜெபிக்கின்றது.
5) கொழும்பில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக -அதாவது கிறீஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக- இந்து மன்றம் பெளத்தபல படையணியோடு கூட்டமைத்து கண்டன ஊர்வலம்- போராட்டம்- நடத்துகின்றது.
6)BJP ஆதரவு  NDTV (New Delhi Television) இலங்கையில் பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் பொது வழிபாட்டுத் தெய்வமாக கண்ணகி இருப்பதாக `ஆவணத்திரைப்படம்` ஒன்றை வெளியிட்டு வருகின்றது.பா.ஜ.கட்சி ஈழத்தமிழகளுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் என்று கூறுகின்ற அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஸ்ணன், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறை குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ, போர்க்குற்றம் குறித்தோ ஒரு வரி கூடப் பேசுவதில்லை, மாறாக ``அங்கு இந்துக் கோவில்கள் சிங்களவர்களால் தாக்கி அழிக்கப்படுவதாக`` அழுகின்றார்! நவாலித் தேவாலயப் படுகொலைக்கும், புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்கும் இவரது பதில் என்ன? இலங்கையின் தலைமை இந்துக் கோவில்கள்  தமிழ் நாட்டுக் கோவில்களுடன் தொடர்புடையவை.

இவை அனைத்தும் தமிழர் எழுச்சிக்கு எதிராக, ஒரு இந்து எழுச்சியை கட்டியெழுப்பும் முனைப்பையே சுட்டிக்காட்டுகின்றன.

இதை முளையிலேயே கிள்ளியெறியத் தவறினால்  ஒரு புறம்  பிரதேச ரீதியான துண்டாடலும்,மறுபுறம் மத சமூக அடிப்படையிலான மோதலுமாக தமிழீழத்துக்கான பொருளாயத அடித்தளம் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுவிடும்.

இது வரலாற்றை பின்னோக்கி தள்ளும் முயற்சி எனினும், இதை எதிர்த்து முறியடிக்கத் தவறினால் தற்காலிகமாகவேனும் இந்தப் பிற்போக்கு வெற்றி பெறுவது சாத்தியமே.

இதைக் கூட்டமைப்பைக் கொண்டோ, தமிழ்த் தரகு அணியைக் கொண்டோ சாதிக்க முடியாது,இதற்கு ஒரு புரட்சிகர ஜனநாயக முற்போக்கு முன்னணிப்படை அவசியம்.அத்தகைய ஒரு படையால் மட்டுமே இன.மத,சாதிய,பிரதேச பிளவுகளைக் கடந்து அனைத்துப் பிரிவினரிடையேயும் உள்ள உழைக்கும் மக்களை ஈழ தேசிய விடுதலை புரட்சியில் இணைக்க முடியும்.

இத்தகைய ஒரு அணி மட்டுமே தமிழகத்தில், இந்திய விரிவாதிக்க தமிழ்த் தரகுச் சமரச துரோகிகளுக்கு மாற்றாக, தமிழகத்தின் மக்கள் ஜனநாயக இயக்கத்துக்கு துணை நின்றும், அதன் துணையோடும் ஈழவிடுதலையை வென்றெடுக்க வல்லதாகும்.இலங்கையில் சமூக மாறுதலை,ஈழவிடுதலைப் புரட்சியை தொடர்ந்து நசுக்கி வரும் இந்திய விரிவாதிக்கத்தை வெற்றி கொள்ள தமிழகத்தில் ஒரு புரட்சிகர மக்கள் ஜனநாயக இயக்கம் அவசியத் தேவையாகும்.

`காங்கிரஸ் கருங்காலி நெடுமாறன், சி.ஐ.ஏ.உளவாளி வை.கோ, பதவிப் பித்தன் சீமான், சாதி வெறியன் ராமதாஸ், ஆளும் வர்க்க ஓட்டுப் பொறுக்கி தி.மு.க, அ.தி.மு.க மற்றும் இத்தியாதி, இந்திய விரிவாதிக்க ஆதரவு அணியில் எதைச் சார்ந்து நின்றும் ஈழவிடுதலையை வென்றெடுக்க முடியாது.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் முதுகில் குத்திய ``தொப்புழ் கொடி உறவின்``, ``தாய்த் தமிழகத்தின்`` சங்கார துரோகத்தை ஈழம் மன்னிக்காது, மறக்காது.

ஈழப்புரட்சி ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது. இனிமேல் இதனை எந்த சக்தியாலும் அடக்க முடியாது.

மோடிப்பாசிசமும், பக்ச பாசிசமும் ஈழதேசிய ஜனநாயகப் புரட்சி இயக்கத்தை, `மத வெறித் தாக்குதல்களால்` முறியடிக்கும் சதியை, ஈழ-தமிழக மக்கள் ஜனநாயக இயக்கத்தால் மட்டுமே முறியடிக்க முடியும்.

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (3) புதிய ஆயுதம் மத மோதல்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 3


ஈழ தேசிய இன ஒடுக்குமுறையில் எதிரிகளின் 

புதிய ஆயுதம் மத மோதல்.

இலங்கை அரைக்காலனியாதிக்க அரசானது தான் ஏகாபதிபத்திய சுரண்டலின் உறுஞ்சு குழலாக இருப்பதை மூடிமறைக்க, உள்நாட்டு மக்களை இடையறாது மோதவிட்டு வருகின்றது.ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து, அதற்குக் காரணமான இலங்கை அரசை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சித்  திட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று படுவதைத் தடுப்பதற்காகவே இன,மத,மோதல்களைத் தூண்டி வருகின்றது.இதில் இனப்பிரச்சனை பிரதான வடிவமெடுத்து இலங்கையின் அரைக்காலனிய அரசுமுறையே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது.இதனால் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்துக்கு  பிரிவினை தவிர்க்க இயலாததாக்கியதால் பிரிவினை தவிர்க்க இயலாததாகியது. தமிழீழ விடுதலைப் போர் வெடித்தது.30 ஆண்டுகால விடுதலை யுத்தம் முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது!

இன ஒடுக்குமுறையின் புதிய ஆயுதம் மத மோதல்.

ஆனாலும் இன ஒடுக்குமுறையைக் கை விடவில்லை.இன ஒடுகுமுறையின் புதிய வடிவமாக தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிடும் தந்திரம் பின்பற்றப்படுகின்றது.

2002 பேச்சுவார்த்தையில் `மத்தியஸ்த்துவம்` வகித்த நோர்வே நாட்டிற்கு எதிராகவும்,ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவுக்கு எதிராகவும்,இன வெறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொடும்பாவிகள் எரித்து தம்மை தேசபக்தர்களாகக் காட்ட முயன்ற போதும், இந் நாடுகளை `கிறீஸ்தவ` நாடுகள் என்றுதான் வசதியாக வரையறை செய்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக `தமிழ்ப்பயங்கரவாதிகளாக` இருந்த புலிகள் இப்போது கிறீஸ்தவ பயங்கரவாதிகள் ஆகி விட்டனர்.

நமது இடது சாரிகள் `தேசிய முதலாளித்துவ` சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அமைத்த முற்போக்கு கூட்டணியின் 1972 குடியரசு அரசியல் யாப்பு, பெளத்த மதத்தை அரச மதமாகவும், அதைப்பாதுகாத்து பராமரிப்பதுஅரசின் பொறுப்பு என்றும் கூறி தன்னை `இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு` என மானங்கெட்ட விதமாகப் பிரகடனம் செய்தது.

பக்ச பாசிஸ்டுக்களின் முழுப் பாதுகாப்பிலும்,பராமரிப்பிலும், கோத்தபாயாவின் தலைமையிலும் கீழ்தான் -(சிங்கள மொழியில்) பொ(B)து பல சேனா என அழைக்கப்படும்- பெளத்த பலத்தின் படையணி என்கிற போதிப் பாசிசப் படை ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இந்தப் போதிப்படை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது.ஹலால் உணவு எதிர்ப்பு, மசூதிகள் மீது தாக்குதல், முஸ்லீம் சிறு வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் என களமிறங்கியது. களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, பேருவளை நகரங்களில் கலவரத்தைக் கட்டவிழ்த்தது.இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்தது, சொத்துக்களை சூறையாடியது,தீக்கிரையாக்கியது.மக்களை அகதிகளாக்கியது.

புகைப்படங்கள்,ஒளி நாடாக்கள், ஒளிப்பதிவுகள்,CCTV பதிவுகள்,கண் கண்ட சாட்சியங்கள் என எல்லாமிருந்த போதும்,இதுவரையில் ஒரு காவிக் காடையனாவது நீதியின் முன் நிறுத்தப்படவில்லை!அரசதிகாரத்தின் உதவியுடனும்,அரசமைப்புச் சட்ட பாதுகாப்புடனும்,இந்தப் பெளத்த பலத்தின் பாசிசச் சேனை, இலங்கையின் சிவசேனையாக ஊட்டி வளர்க்கப் படுகின்றது.இந்தப் பாசிசக் காவிக் கும்பலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பக்ச பாசிஸ்டுக்கள் புறந்தள்ளி வருகின்றனர்.

 மோடி ஆட்சியும் தேசிய இனப்பிரச்சனையும்.

இத்தகைய ஒரு சூழலில் தான் மோடி - ஆர்.எஸ்.எஸ்- பாசிசம் இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறியுள்ளது.குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் இரத்தம் குடித்தவன் மோடி.பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறிப் பாசிசக் கட்சி பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ், சிவசேனைக் காவிக் கும்பல் ஆலயம் ஆலயமாகச் சென்று பாதிரிப் பெண்களை நரபலி எடுத்தவர்கள்.Face Book இல் இனந்தெரியாத ஒருவர் சிவசேனா நிறுவனர் பால் தக்காரையும், சக்கராதிபதி சிவாஜியையும்,அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் பதிவிட்டதற்கு எதிராக காட்டுத் தர்பாரில் இறங்கியது இந்து மத வெறிக்கும்பல்.இந்தக் கபளீகரத்தில் சாலையோரமாகச் சென்ற ஒரு 24 வயது இளைஞன் தாடி வைத்திருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமியன் என அடையாளம் காணப்பட்டு, 25 பேர் அடங்கிய ஒரு கும்பல் சாகும் வரை அடித்து நொருக்கி நரபலி எடுத்துள்லது.தாமரை மலர்ந்ததும் தலைகள் உருளத் தொடங்கி விட்டன!தளிர்கள் உலர்கின்றன!! ஆட்சிக்கட்டில் ஏறிய ஒரு வாரத்துக்குள்ளாவே இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது மோடிப்பாசிசம்.

ஜம்மு காஸ்மீர் மகாராஜாவை மிரட்டி அம்மாநிலத்தைக் கட்டாயமாக இணைத்த `சுதந்திர` இந்தியாவின் அரசியல் யாப்பு, வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்புச் சலுகைகளை அரசியல் யாப்பில் உத்தரவாதம் செய்திருந்தது.இதுவே சரத்து 370 (Article 370) எனப்படுவதாகும். 1947-1948 முதல் இருந்து வரும் இப்பிரிவை விவாதிப்பது என்ற போர்வையில் நீக்குவதற்கு முயல்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் பங்குபோட போட்டியிடும் சூழலில், அந்த மாநிலம் முழுமையும் இந்தியாவின் பிரிக்க இயலாத பகுதி என இந்திய விரிவாதிக்கம் அடம்பிடித்து வருகின்றது.இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை இதுவரையும் ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட காஸ்மீர்` என அழைத்து வந்தது. அதனை இப்போது  ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட ஜம்மு காஸ்மீர்` என மாற்றியமைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்த சிறப்புப் பாதுகாப்புகளை நீக்கி முழு ஜம்மு காஸ்மீர் மாநிலத்தையும்-தேசத்தையும்- கபளீகரம் செய்ய மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிசவாதிகள் முயலுகின்றனர். அதற்காக களம் இறங்கிவிட்டனர்.

ஒரு புறம் பாரத மாதா, வந்தே மாதரம்,ஒற்றுமைச் சிலை , இந்திய ஒருமைப்பாடு பேசிக் கொண்டு மறு புறம் கட்டாய இணைப்புக்குள்ளான இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழி வாரி மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளையும், ஜம்மு காஸ்மீர் மாநில சிறப்புரிமைகளையும், பழங்குடி மக்களின் பாதுகாப்பு உரிமைகளையும் பறித்தெடுத்து, இந்துத்துவ,இந்திய விரிவாதிக்க,உலகமய பாசிசத்தைக் கட்டவிழ்க்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

மோடி ஆட்சியும் ஈழப்பிரச்சனையும்

இவ்வாறு சொந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனையில் பாசிச அடக்குமுறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மோடி ஆட்சி, ஈழத்தமிழருக்கு `13 இற்கு மேல்` அதிகாரப் பகிர்வுத் தீர்வு பெற்றுத்தரப்போவதாக நாடகமாடுகின்றது.

இக்கட்டுரையின் பாகம் ஒன்றில் நாம் விரிவாக ஆராய்ந்து விளக்கியவாறு தமிழ்த்தரகு அணியும் , தமிழ் ஊடகங்களும் இந்த ஏமாற்றைப் பரப்பி ஏய்த்துப் பிழைத்து வருகின்றன.

``பதவியேற்பு வைபவத்துக்கு அழைத்து அவர் மூஞ்சையில் குத்து விட்டதாகவும், இந்திரா காந்தி பாணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமிக்கப் போவதாகவும் தாங்காத புளுகத்தில் பிரதட்டை எடுத்து வருகின்றனர்.மீண்டும் இந்திய விரிவாதிக்க வலைக்குள் ஈழப்புரட்சியை அடக்கி அழிக்க முயலுகின்றனர்.

இந்திய விரிவாதிக்க அரசு தனது மேலாதிக்கத்தை, இலங்கை மீது திணிப்பதற்காகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அதிகாரப் பரவலாக்க சீர்திருத்த பாதையில் சீரழிக்கவும்,நீதி  யுத்தத்தை முறியடிக்கவும், விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவும் ஜே.ஆர்.அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் உறுதி செய்து கொண்ட இந்திய விரிவாதிக்க நலனை, மூடி மறைக்க ஈழத்தமிழர்களுக்கு நன்மை பெற்றுத் தந்தது போல் ஆடிய நாடகப் பதிவுதான் 13வது திருத்தம்.

13 வது திருத்தம்

1) இது தமிழ் மக்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்கவில்லை.
2) வடக்கு கிழக்கு பிரிவினைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிட்டது,
3) தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை `அதிகாரப் பகிர்வு பேரமாக` முன் வைத்தது.
4) இந்தப் பேரம் கூட வரதன் முதல் விக்னேஸ்வரன் வரை அடையப்படவில்லை!

இதுதான் 13வது திருத்த மாகாணசபையின் நிலை,

இந்தியப் பாசிசமும், இந்திய விரிவாதிக்கமும் என்ற ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியுமாகும். இவை இரண்டுமே ஈழப்புரட்சியின் எதிரிகள் ஆகும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்த இரு இந்திய விரிவாதிக்க பாசிசக் கட்சிகளின் நிலையும்  தமிழின ஒடுக்கு முறையில் சிங்கள ஆதரவு நிலையே!

இந்திய விரிவாதிக்க நலனுக்கு - இலங்கையின் சீன சார்பு போக்கு- ஒரு பகடைக் காயாகவே ஈழத்தமிழர் பிரச்சனை பயன்படுத்தப்படுகின்றது.
``13 இற்கு மேல் `` என்பது இலங்கை அரசை தட்டி அடக்கும் இந்திய மேலாதிக்கத்தின் கைத்தடியே!

இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

எனவே ஈழத்தமிழ், இந்தியத் தமிழ் தரகு அணிகள் கூறுவது போல் மோடி ஆட்சியில் ஈழத்தமிழினம் விடுதலை பெறாது.மாறாக மத ரீதியாக துண்டாப்பட்டு தனது தேசிய அத்தாட்சியை-அடையாளத்தை  இழந்து விடும்.

இதுவே ஈழதேசிய எதிரிகளின் ஒரே குறிக்கோள். இதில் அவர்களின் பயணம் ஆரம்பித்துவிட்டது.

தொடர் (பகுதி 4)