Tuesday 22 July 2014

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் : கறுப்பு ஜூலை 2014 நினைவு வெளியீடு

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் : 
கறுப்பு ஜூலை 2014 நினைவு வெளியீடு


அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே,இளைஞர்களே,முப்பது ஆண்டுகாலம் களமாடி மீண்டிருக்கும் போராளிகளே,`புத்திர சோகத்தில் புலம்பியழும்`தாய்மார்களே,

ஜூலை 2014 கறுப்பு ஜூலை 1983 இன் 31 ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தக் கோர நினைவு ``கறுப்பு ஜூலை 83`` என்ற ஒரே பதாகையின் கீழ் ஆண்டாண்டு தோறும் தமிழர்களால் நினைவு கோரப்பட்டுவரும் ஆறாத வடுவாகும்.கறுப்பு ஜூலையை 30 ஆண்டுகள் மறக்காத மக்கள், முள்லிவாய்க்காலை 300 ஆண்டுகளானாலும் மறக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இங்கிலாந்துக்கு அயர்லாந்து எப்படியோ, அப்படியே சிங்களத்துக்கு தமிழீழமும்.நமது தலைமுறை போர் புரியும்!

இவ்வாண்டு ஜுலை நினைவு தினம், இந்தியாவில் மோடி -ஆர்.எஸ்.எஸ் பாசிசம் ஆட்சியமைத்துள்ள சூழலில் பிறக்கின்றது.மோடி ஆட்சியானது தாராளமய, தனியார்மய, உலகமய `அபிவிருத்தியை` காங்கிரஸ் விட்ட இடத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு  நகர்த்துவதில், `ஒரு பாய்ச்சலை` ஏற்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதற்கமைய இந்துத்துவா 
மதவெறியையும்,`சார்க் சகோதரத்துவ` இந்திய விரிவாதிக்க வேட்டையையும் தனது உள்நாட்டு, வெளி விவகாரக் கொள்கைகளாக முறையே கொண்டுள்ளது.இதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டு திட்டத்துக்கு, சேவகம் செய்யும் பிற்போக்கு காவலனாக உருவாகியுள்ளது.

இதன் விளைவாக அமெரிக்க இந்திய சர்வதேச உறவிலும்,பிராந்திய உறவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,இயல்பாகவே இந்திய இலங்கை உறவிலும், ஈழப்பிரச்சனையின் செயல்தந்திர வழியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் இவ்வாண்டு ஜூலை நினைவாக ஈழப்புரட்சியை மோடி ஆட்சியின் நிலைமைகளின் கீழ் முன்னெடுப்பதற்கு ஏதுவாக, மோடி ஆட்சியைப்பற்றிய மதிப்பீட்டை முன்வைப்பது அவசர தத்துவார்த்தக் கடமை ஆகியது. பருண்மையான சூழ்நிலை பற்றிய ஸ்தூலமான ஒரு மதிப்பீடு இல்லாமல் புரட்சியை ஒரு போதும் வழி நடத்த  இயலாது. இக்கடமையின் பாற்பட்டு `` மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும்`` என்கிற தலைப்பில், அடுத்த செயல்தந்திர காலகட்டம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

1) முதலாம் பகுதியில் மோடி ஆட்சியை வழிபடும், தமிழ்த் தரகு அணியின் துரோகம் அம்பலப்படுத்தப்பட்டது;

2) இரண்டாம் பகுதியில் மோடி ஆட்சியின் தாராளமய தனியார்மய உலகமய விதேசிய பொருளாதாரக் கொள்கை விமர்சிக்கப்பட்டது;

3) மூன்றாம் பகுதியில் மோடி ஆட்சியின் 13 இற்கு மேல் நாடகம் அம்பலப்படுத்தப்பட்டது;

4) நான்காம் பகுதியில் தமிழழீழ தேசிய இயக்கத்தை மதவாத  ஆயுதத்தைக் கொண்டு சீரழிக்கும் திட்டமும் அதற்கு துணை நிற்கும் சமூக சக்திகளும் இனங்காட்டப்பட்டது; 

5) ஐந்தாம் பகுதியில் கறுப்பு ஜூலையின் 31ஆம் ஆண்டில், சம உரிமை பேசும் சிங்கள சமூக தேசிய வெறியர்களை அம்பலப்படுத்தி, தமிழர் பிரச்சனைக்குத்தீர்வு தமிழீழமே என்பது வரையறை செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது.

இவ் ஆய்வின் அடிப்படையில் இறுதியாக நடைமுறை இயக்கத்துக்கான நமது பிரச்சார முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கறுப்பு ஜூலை முப்பத்தோராம் ஆண்டு நினைவு நாளில் , ஈழ விடுதலைப்புரட்சியின் எதிரிகளைத் தோற்கடிக்கவும், சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தவும்,மலையக இஸ்லாமிய தமிழ் உழைக்கும் மக்களை விடுதலைப் புரட்சியில் அணி சேர்க்கவும் இவ் அரசியல் செயல் தந்திர வழி முன்மொழியப்படுகின்றது.

இதனை விமர்சன நோக்கில் கற்றறிந்து, விவாதித்து, ஈழவிடுதலையை வென்றெடுக்க புதிய ஈழப்புரட்சியாளர்களோடு அணி சேருமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

தாழ்மையுடனும் தோழமையுடனும்

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.



மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (1)

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (2)

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (3) 

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (4) 

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (5) 

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 5

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 5

``ஐக்கிய இலங்கை இடது சாரிகளின்`` அதிகாரப்பரவலாக்கப் பாதை மோடி ஆட்சியின் 13 இற்கு மேல் பாதையே! 

முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்தேறி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், ஈழத்தமிழரின் அரசியல் சுதந்திர வாழ்வில் எத்துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை.மாறாக தமிழீழத் தேசிய இனப்படுகொலையை வேறு பல வழிகளில் பக்ச பாசிச சிங்களம் தொடர்ந்து வருகின்றது.தமிழீழ தேசத்தின் இருப்பை பெளதீக வழியில் இல்லாதொழிப்பதையும்,தமிழ்த் தேசிய இனத்தை மத ரீதீயாகப் பிளவுபடுத்தி மோதவிட்டு தேசி இன ஒருமைப்பாட்டைச் சிதைப்பதையும் திட்டமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

முதல் 30 ஆண்டுகள் அரசியல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோதும், அடுத்த 30 ஆண்டுகள் இன ஒடுக்குமுறை யுத்தம் கட்டவிழ்க்கப்பட்டபோதும், தன் சொந்த சகோதர தேசிய இனத்தில் மூன்று இலட்சம் மக்களைக் கொன்று குவித்த போதும், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை அரங்கேறிய போதும் வாய் மூடி மெளனிகளாக இருந்தது சிங்கள தேசம்.தன் சொந்த ஆளும் கும்பல்கள் தமிழ்த்தேசிய இனப்படுகொலையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தது சிங்கள தேசம்.

இதற்கு முக்கிய காரணமும், பொறுப்பாளிகளும் ரொட்ஸ்கிய திரிபுவாதிகளே ஆவர். இவர்களின் வரலாற்று ரீதியான துரோகமும், திரைமறைவில் ஆளும் கும்பல்களுக்கு எப்பொதும் துணை நின்ற காட்டிக் கொடுப்பும், சிங்களப் பேரினவாதமும், பெளத்த மதவாதமும், ஒரு தமிழின விரோத பாசிச அரசுமுறையாகக் கட்டியெழுப்பப்படுவதற்கு பக்க பலமாக இருந்ததுமான வரலாற்றுப் பாத்திரமே இந்நிலைமைக்கான காரணமாகும்.இதனை இவர்கள் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனையில் - தமிழீழத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியான நிலை எடுத்து தொடர்ந்து போராடத்தவறிய சந்தர்ப்பவாதத்தின் விளைவாகச் சாதித்தனர்.சுயநிர்ணய உரிமையை-அதிகாரப் பகிர்வு என்கிற பொருளிலேயே நடைமுறையில் செயற்படுத்தி வந்தனர். எந்தக்காலத்திலும் சுயநிர்ணய உரிமையை பிரிந்து செல்லும் உரிமை என்று பொருள் கொண்டதில்லை. சுயநிர்ணய உரிமையை பிரிந்து செல்லும் உரிமை என்பதைத் தவிர வேறெந்தப் பொருளிலும் பிரயோகிக்கக்கூடாது,பிரிந்து செல்லும் உரிமையும்,பிரிவினையும் ஒன்றல்ல என்ற லெனினியத்தின் போதனையை மீறினர்.இந்த சந்தர்ப்பவாதத்தின் விளைவாக இந்த முகாமே இறுதியில் சிங்களப் பேரின வாதத்துக்கு பலியாகியது.வாசுதேவ நாணயக்கார ராஜபக்சவின் ஆலோசகர் ஆகியது இவ்வாறுதான் நடந்தேறியது.

இந்தச் சந்தர்ப்பவாத போக்கு ரொட்ஸ்கிய இயக்கத்தில் மட்டுமல்ல `புதிய ஜனநாயகம் மாஓசிந்தனை` பேசிய சண்முக தாசனின் சீன சார்பு இயக்கத்திலும் நீடித்தது.1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு மாகாண சபை தீர்வாக முன்வைக்கப்பட்டு, அதை எதிர்த்து ஒட்டுமொத்த இலங்கையையும் ஆக்கிரமித்திருந்த இந்தியப்படையை விரட்டியடிக்க விடுதலைப்புலிகளும், ஜே.வி.பியும் போராடிக்கொண்டிருந்தபோது, ``சுயநிர்ணய உரிமை என்பது மாகாண சபையாகவும் இருக்கலாம்`` என வீரகேசரிப் பத்திரிகையில் புதிய ஜனநாயகக் கட்டுரை எழுதியவர் தோழர் சண்! இந்தப் பாவத்தை `செந்தில் கும்பல்` எந்தக் கங்கையில் கழுவும்!

ஜே.வி.பி, சமூக சிங்களப் பேரின வெறியர்களாகவே (Social Chauvinist) அதாவது சொல்லில் சோசலிசமும்,செயலில் சிங்கள பெளத்த வெறியும் என்பதாகவே தோற்றம் பெற்றது.இது ஒரு சிங்களக் குட்டி முதலாளிய இயக்கம், இதன் பின்னால் இரண்டு ஆயுத எழுச்சிக்கும், ஒரு தேர்தல் வெற்றிக்கும் காரணமாய் அமைந்து திரண்ட சிங்களக் குட்டி முதலாளிய வர்க்கத்துக்கு துரோகம் இழைத்த தலைமையாகும்.இது தொடர்ந்து சிதறிச் சின்னாபின்னப்பட்டு வருவது இயல்பானதே.இவ்வாறு பிளவு நேரும் ஒவ்வொரு தடவையும் ஒரு பிரிவு சிங்கள ஆளும் வர்க்க அணியில் இணைவதும், மறு பிரிவு NGO வுக்கு விலை போவதும் ஜே.வி.பி.இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பொது போக்காகும்.இதை இயக்கும் விதி என்னவென்றால்,இது ஒரு குட்டி முதலாளித்துவ சீர்திருத்த இயக்கமாக இருப்பதால், எப்போதும் உள் நாட்டில் ஆளும் கும்பல் குறித்தும், உலக ஏகாதிபத்திய சக்திகள் குறித்தும் புரட்சிகர மதிப்பீடுகளைக் கொண்டிராததாகும்.

இந்த கடந்தகால மக்கள் விரோதப் பாதைக்கு `ஐக்கிய இலங்கை இடது சாரிகள்` முதலில் சுய விமர்சனம் செய்ய வேண்டும். அதைப் பகிரங்கமாக மக்கள் முன் - குறிப்பாக தமிழீழ மக்கள் முன் (தமிழ் மொழியில்!) முன் வைக்க வேண்டும்.

மேலும்,

கறுப்பு ஜூலை 83 மூன்று கூறுகளைக் கொண்டது.1) முப்பதாண்டுகால பாராளமன்ற ஏமாற்றுப் பாதை அம்பலமானது, 2) புதிய ஆயுதப் புரட்சிப்பாதை அறிமுகமாகி உள்நாட்டு யுத்தமாக மாறியது.3)இதைப் பிரசவிக்க தமிழீழ மக்கள் கொடுத்த விலை- `கறுப்பு ஜூலை 83 இனப்படுகொலை`.

இந்த வரலாறு மீண்டும் எழுதப்படும் நிலைமைகளை நோக்கியே இலங்கை செல்கின்றது.

இந்நிலையில் ``மீண்டும் ஒரு கறுப்பு ஜுலை வேண்டாம்``, ``சிங்களவர் தமிழர் இஸ்லாமியர் அனைவரும் மனிதர்களே``, ``ஒடுக்கும் தேசிய இனத்துக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் இடையில் சம உரிமை`` என்கிற நிகழ்கால மக்கள் விரோத செயல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

தமிழீழத்தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையை ஒடுக்கும் சிங்களப் பெருந்தேசிய இனம் அங்கீகரிக்க வேண்டும்.

கோட்டைப் புகையிரத வாசலில் நாலு மொட்டையர் கொடிபிடித்துவிட்டு, பிரிவினைக் கோரிக்கையை கைவிடுமாறு மக்கள் விரோத கோரிக்கைகளை முன் வைக்கக் கூடாது.

ஓடுகாலிகளின் இந்த வெற்றுக்கூச்சலை நம்பி, தமிழீழ முரசு கொட்டும் விடுதலைப்புரட்சியைக் கைவிட புதிய ஈழப்புரட்சியாளர்கள் ஒன்றும் இழிச்ச வாயர்கள் அல்ல!.

``ஐக்கிய இலங்கை இடது சாரிகளின்`` அதிகாரப்பரவலாக்கப் பாதை மோடி ஆட்சியின் 13 இற்கு மேல் பாதையே! இந்தக்கும்பல் மோடிப்பாசிசமும்,பக்ச பாசிசமும் தமிழீழத்தேசியத்தை அழித்தொழிக்கும் திட்டத்துக்கு துணை போகும் சக்திகளே.
=============================================
இந்நிலைமைகளின் அடிப்படையில் இறுதியாக நடைமுறை இயக்கத்துக்கான நமது பிரச்சார முழக்கங்கள் வருமாறு:

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவு முழக்கங்கள்!


சிங்கள தேசமே;

* முப்பது ஆண்டுகால ஈழவிடுதலை யுத்தத்தின் முறியடிப்பைப் பயன்படுத்தி, முழு நாட்டையும் `உலக மறு பங்கீட்டுக்குத் தாரை வார்த்து
பிழைக்கும்` பக்ச பாசிஸ்டுக்களின் ஆட்சியை வீழ்த்த  சூளுரை!

* மூன்று இலட்சம் ஈழமக்களை கொன்றொழிக்க துணைபோன தேசமே, `சம உரிமையும்` `மாந்த நேயமும்`பேசாதே, ஈழப்பிரிவினைப் பொது வாக்கெடுப்புக்கு குரல் கொடு!

* சமூக சிங்களப் பேரின வெறியர்களான (Social Chauvinist) ஜே.வி.பி, மற்றும் `பிரிந்த`, சந்தர்ப்பவாத NGO கிளைகளை நிராகரி! புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பு!

* ரொட்ஸ்கிய திரிபு வாதத்துக்கு முடிவுகட்டு, மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வழி பரப்பு!

* மோடிப் பாசிசமும்,பக்ச பாசிசமும் ஈழதேசியத்தை இல்லாதொழிக்க கட்டவிழ்க்கும் `பெளவுத்த பல படையணியின்` மதவெறிப் பாசிசத்தை தடுத்து நிறுத்தப் போராடு!

* ஈழதேசிய இனப்படுகொலை அரசை, தூக்கு மேடையில் ஏற்ற துணை நில்!

ஈழத்தமிழினமே,

*தேசிய விடுதலைக்கு புரட்சி செய்!
*இன மதச் சிறுபான்மையினரான மலையக, இஸ்லாமியத் தமிழர்களை ஒன்றுபடுத்து!
* உழைக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆதரி!
* `தரகுத் தமிழ் அணியை` தனிமைப்படுத்து!
* இலங்கையில் ஏகாதிபத்திய NGO ஆட்சிக்கவிழ்ப்புக்கு துணைபோகாதே!
* சுயநிர்ணய உரிமையைப் பேரப்பொருள் ஆக்காதே, பிரிவினையைக் கைவிடாதே!
* உலகத் தொழிலாளர்களுடனும்,ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேர்!