தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,
(`தமிழர் மகாசனசபை` இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)
பகுதி 3
விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியும் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தி ன் வீழ்ச்சியும் ( 1970-1977)
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தமிழ்மக்களின் தேசியவிடுதலையை அரைக்காலனிய அமைப்பு முறைக்குக் கட்டிப்போட்டு சீரழிக்க தன்னாலான வரையும் முயன்ற போதும் அந்த முயற்சிகள் அனைத்தையும் மீறிக்கொண்டு தேசியவிடுதலைப் போராட்டம் வெளிக்கிளம்பியது. ஏன்? எவ்வாறு?
அரைக்காலனிய அமைப்பு முறையை தனது பிரதான உறுஞ்சு குழலாக கொண்ட ஏகாதிபத்திய சுரண்டல் முதலாளித்துவத் தொழிற்துறை வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. அதிகாரக் கைமாற்றத்தின் பின்னால் தரகுமுதலாளிய ஆளும் கும்பல்கள் ஏகாதிபத்திய நிதி நிறுவனமான உலக வங்கியின் “பாரியமுதல் தேவைப்படும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பதிலாக, சிறுகைத்தொழில்களிலேயே இலங்கை கவனம் செலுத்த வேண்டும்” என்ற கட்டளையை (1951) ஏற்றுக்கொண்டு நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையிலேயே தக்க வைத்துக் கொண்டது. இதன் விளைவாக நாட்டின் 78%ஆன சனத்தொகை விவசாய முறையிலேயே தங்கியிருக்கச் செய்யப்பட்டது. இந்த விவசாயத் துறையும் மரபுரீதியான பின்தங்கிய தன்மையைக் கொண்டதாகவும், சிற்றுடமை விவசாயமாகவும் உள்ளது. இச் சிறு உடமை விவசாயம் பெருகிவரும் சமுதாயத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாக இருக்கிறது. இதனால் விவசாயத் துறையில். ஏற்கக்கூடிய அளவுக்கு மிஞ்சிய ஒரு உபரிச் சனத்தொகை அத்துறையில் இருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறது. இச்சனத்தொகையில் பதிவுசெய்யப்பட்ட பகுதியினர் மட்டும் (அரசாங்கத் தகவல்களின் படி) 1963 இல் 4 இலட்சம் ஆகவும், 1970 இல் 7 இலட்சத்து 92 ஆயிரமாகவும் இருந்தது. இந்த உபரிச்சனத்தொகையை உள்வாங்க எந்த உற்பத்தித் துறையும் இல்லை. இதுவே தனிநபர் மட்டத்தில் வேலையில்லாப் பிரச்சனையாக உணரப்படுகிறது. உண்மையில் முதலாளித்துவ தொழிற்துறை வளர்ச்சி மட்டுமே இவ் உபரிச்சனத் தொகையை உள்வாங்கி உற்பத்தி சக்திகளை மென்மேலும் வளர்த்து, உற்பத்தியைப் பெருக்கி சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும். அது இல்லாத போது சமுதாயம் தன் தேவைகளை நிறைவு செய்ய கொந்தளிக்கும். . . .போராடும்….. இந்த புரட்சிகளும் அவற்றை முன்னெடுக்கும் வர்க்கங்களுமே உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் வழிகோலுகின்றன.
உற்பத்தித்துறையின் இப்பின்தங்கிய நிலைமைக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் இடையிலான இம்முரண்பாடு 1971 ஏப்ரலில் சிங்களக் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் ஆயுதக் கிளர்ச்சியாக வெடித்தது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுக்கிற ஏகாதிபத்தியங்களின் காவல் நாயும், பிற்போக்குவர்க்கமும் ஆகிய சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம், இந்தியத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் துணையோடு இக்கிளர்ச்சியை ஒடுக்கி ஏகாதிபத்தியத்துக்கு சேவகம் செய்தது. அத்துடன் நீடித்திருக்கும் முரண்பாடு தனக்கெதிராக மீண்டும் வெடித்து விடுவதைத் தடுக்க சிங்கள மக்களைத் தமிழ்மக்களுக்கு எதிராக திருப்பியது.
விவசாயத்தில் இருந்து பிரிந்த உபரிச் சனத்தொகையை மீளவும் விவசாயக் காணிகளிலேயே குடியமர்த்தும் முயற்சி தமிழ்விவசாயிகளிடம் இருந்து காணிகளை அபகரிக்கும் ’திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாக’ வெளிப்பட்டது. (அட்டவணை 2)
அட்டவணை 2 சிங்களக் குடியேற்றம்
மாவட்டம் | ஆண்டு | தமிழர் % | சிங்களவர் % |
திருகோணமலை | 1971 | 38.1 % | 29.1 % |
1981 | 36.4 % | 33.6 % | |
அம்பாறை | 1971 | 22.8 % | 30.2 % |
1981 | 19.9 % | 37.6 % | |
மன்னார் | 1971 | 68.1 % | 4.1 % |
1981 | 63.8 % | 8.1 % |
அரசாங்க நிர்வாகம் மற்றும் சேவைத்துறைகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பைப் பறித்து சிங்களமக்களுக்கு அளித்தது. கல்வியில் தரப்படுத்தல் முறைகளைப் புகுத்தி தமிழ்மாணவர்களின் கல்விவாய்ப்பைப் பறித்து சிங்கள மாணவர்களுக்கு அளித்தது. (அட்டவணை 3) மேலும் 1970 -1977 ஆண்டுகளில் தமிழ்மாணவர்களின் மருத்துவத் துறை அனுமதி 64% ஆலும், பொறியியல் துறை அனுமதி 44% ஆலும் வீழ்ச்சியடைந்தது.
அட்டவணை 3 பல்கலைக்கழக அனுமதி 1970 -1974 | ||||||||
1970-1971 | 1971-1972 | 1973 | 1974 | |||||
விஞ் | கலை | விஞ் | கலை | விஞ் | கலை | விஞ் | கலை | |
சிங்களவர் % | 60.6 | 89.9 | 63.2 | 92.6 | 67.4 | 91.5 | 75.4 | 86 |
தமிழர் % | 35.3 | 7.6 | 33.6 | 4.8 | 29.5 | 6.1 | 20.9 | 10 |
அடிப்படையில் பார்த்தால் ‘விவசாயத்திலிருந்து வேறுபிரிந்த உபரிச்சனத் தொகைக்கு’ வடிகால் அமைக்க தமிழ்மக்களுக்கு இருந்த அற்ப வாய்ப்புக் களையும் (அட்டவணை 1) பறிக்கும் கொள்கை தீவிரமாக்கப்படுகிறது. இது சிங்கள மக்களின் மீதான பாசத்தால் உந்தப்பட்டு செய்யப்பட்டதல்ல. அப்படியானால், ஏகாதிபத்திய சுரண்டலை ஒழித்து தேசியத் தொழிற்துறையைப் பெருக்குவதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும். ஆனால் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் கண்ட தீர்வு, அந்நிய நிதி மூலதன இறக்குமதியைத் தொடர்ந்தபடியே, அதன்மூலம் தமது தரகுமுதலாளிய நலன்களை அடைந்தபடியே, அதன் விளைவாக எழும் பொருளாதார, அரசியல் சமுதாயப் பிரச்சனைக்கு சிங்கள – தமிழ் சமுதாயங்களை மோதவிடுகிற கேடுகெட்ட வழிமுறையாகும். இது நிலவுடமை வர்க்கங்களதும், தரகுமுதலாளிய வர்க்கங்களதும், அந்நிய நிதி மூலதனத்தினதும் நலன்களுக்குச் சேவை செய்கிற வழிமுறையாகும்.
ஆனால் இவர்களின் சகபாடியான தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கமோ அரசினதும், சிங்கள ஆளும் கும்பல்களினதும் ‘அந்நிய நிதிமூலதனத்துக்குச் சேவகம் செய்யும் தரகுமுதலாளியவர்க்க இயல்பை’ மூடிமறைத்து சிங்கள எதிர்ப்புணர்விலும், குறுமினவாத உணர்விலும் வளர்த்தது. ஆக நாட்டின் அடிப்படைப் பிரச்சனையில் இருந்து இரு தேசிய இனங்களது தரகுமுதலாளிய வர்க்கங்களும் இனவாதத்தின் துணைகொண்டு மக்களைத் தேசியபுரட்சிப் பாதையில் இருந்து திசைதிருப்பி தமது வர்க்க நலனைப் பாதுகாக்கவே முயன்றனர்.
ஆனாலும் மேலே கண்டவாறு அரைகாலனிய அமைப்புமுறைக்குள் இருந்த அற்பமான உற்பத்தி வாய்ப்புக்களையும் சிங்கள பேரினவாதம் பறித்தெடுத்துக் கொண்டதானது தமிழ்மக்களின் பிரச்சனையை புதிய பரிணாமம் எடுக்கவைத்தது. ’70 களின் பின்னால் தமிழ்தேசிய பிரச்சனையின் தீவிர போக்குக்கான அடிப்படையாக ‘உற்பத்தி வாய்ப்பற்ற உபரிச்சனத்தொகையின் பிரச்சனையும்’, அதன் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனவெறித்தாக்குதல்களும் அமைந்தன. இந்நிலைமையானது தமிழ்த்தரகுமுதலாளியத்தின் சமரச வாதத்தையும், பாராளுமன்ற சட்டவாதத்தையும் நிராகரித்து அரைக்காலனிய அமைப்புமுறைக்கு எதிரானதாக தமிழ்த்தேசிய பிரச்சனையை வெளிக்கொணர்ந்தது. அதுவே தனிநாட்டுக் கோரிக்கை. இது தமிழ் முதலாளிய வர்க்கத்தின் சமக்ஷ்டிக் கோரிக்கையைப் போல் அந்நியக்குரலாக இப்போதும் இல்லை. தமிழ் சமுதாயத்தின் சொந்தக்குரலாக வெளிவருகின்றது.
தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட இத்திருப்பத்தின் பலம், பலவீனம் பற்றிய பகுப்பாய்வு மிக இன்றியமையாதது. ஏனெனில் இவையே 80களுக்குப் பின்னால் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடிப்படையாக விளங்குகிறது. இத் திருப்பத்தின் கவனத்துக்குரிய அம்சங்கள் பின்வருமாறு;
அ) இத் திருப்பம் புறநிலையில் இதுவரையான தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் கோரிக்கைகளைப் போலல்லாது, இலங்கையின் அரைக்காலனிய அமைப்பு முறைக்கும், இனஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்ட பாசிஸ அடக்குமுறைக்கும், ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கும் எதிரானதாக அமைகிறது.
ஆ) ஆனால் அகநிலையில் இது இருபிரதான பலவீனங்களைக் கொண்டிருந்தது. ஒன்று, இக்கோரிக்கை தமிழ்ச்சமுதாயத்துள் ஆதாரப்பட்டுநிற்கிற சமூகவர்க்கம் குட்டிபூர்சுவாவர்க்கமாகும். இரண்டு, இக்கோரிக்கையும், அதற்கான போராட்டங்களும் தன்னியல்பானவையாகும். உணர்வுபூர்வமானவை அல்ல.
இதன் விளைவு என்னவெனில் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் சிந்தனை வரம்புகளைத் தாண்டி ‘தனிநாட்டுக் கோரிக்கை’ தனது உள்ளட்டக்கத்தைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை. பிரதானமாக தனிநாட்டுக் கோரிக்கையின் உயிர், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடங்கியிருப்பது உணர்ந்து கொள்ளப்படவில்லை. “சிங்கள அரசிடம்” இருந்து தமிழ்மக்கள் விடுதலை பெறுவதாக குறுக்கிப் புரிந்து கொள்ளப்படுகிறது. இது மறுபக்கத்தில் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு ஒரு குறுமினவாத உருவத்தைக் கொடுத்து விடுகிறது. இதனால் தனிநாட்டுக் கோரிக்கை தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்துடன் தன்னைக் கொள்கை ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை. தமிழ்த்தரகுமுதலாளிய அரசியல் கைவிடப்படாமலேயே தனிநாட்டுக் கோரிக்கை கையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வர்க்கப் பார்வையின்மையும், ஏகாதிபத்திய எதிர்ப்பற்ற தன்மையும் காரணமாக தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தை தவறாக எடைபோட்டுக் கொள்கிறது. அதிகபட்சம் அதனது விமர்சனம், ‘இதயசுத்தி’, ‘தனிநபர் நேர்மை’, ‘பதவி வெறி’, ‘பிழைப்பு வாதம்’ என்பதாகவே இருக்கிறது. இவற்றுக்குப் பின்னால் (தமிழ்த்தரகுமுதலாளிய) வர்க்கம் இருப்பதையும், அதன் நலன்கள் தேசியப் புரட்சிக்கு எதிராக இருப்பதையும் குட்டிப்பூர்சுவா வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தமிழ்த்தரகு முதலாளியத்திடம் கண்ட குறைபாடுகளை நீக்கி தான் நேர்மையாகவும் ஊக்கத்துடன் செயற்படுவதின் மூலம் விடுதலையை அடைந்துவிடலாம் என எண்ணுகிறது. போதாக்குறைக்கு குட்டிபூர்சுவா வர்க்கத்தின் எல்லாக் கற்பனாவாதங்களும் போராட்ட இயக்கத்தில் தொற்றவைக்கப்படுகிறது. “சோசலிஸத்தமிழீழமும்” அத்தகைய ஒரு கற்பனைவாதமே! இத்தனை பலவீனங்களோடும் தான் குட்டிபூர்சுவா வர்க்கம் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துடன் மோதுகிறது.
70 களின் பின்னால் தமிழ்க்கூட்டணியினரோடு சம்பந்தங் கொள்ளாத சுயாதீனமான குட்டிபூர்சுவா மாணவர் இளைஞர் ஸ்தாபனங்கள் தோன்றின. தமிழ் இளைஞர் பேரவை உடைந்தது. ஈழவிடுதலை இயக்கம் தோன்றியது. ‘எரிமலை’(பத்திரிகை) வெளிவந்தது. போட்டிக்கு ‘குமுறல்’ (தமிழ்த்தரகு முதலாளிய ஆதரவுப் பத்திரிகை) வந்தது. மாணவர்கள். இளைஞர்கள். இளம்பெண்கள், மத்தியில் தனிநாட்டுப்பிரச்சார இயக்கம் தன்முனைப்போடு கொண்டுசெல்லப்பட்டது. தேர்தல் பாதை நிராகரிக்கப்பட்டது. தமிழர்கூட்டணியினர் “குற்றவாளிக்கூண்டில்” நிறுத்தப்பட்டனர். இந்த எதிர்ப்புக்கள் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் ‘செயலற்ற கையாலாகாத்தனத்தின்’ மீதான குட்டிபூர்சுவா வர்க்கத்தின் வெறுப்பின் வெளிப்பாடுகளாக இருந்தன. அதே வேளை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் எதிர்ப்புரட்சி அரசியலின் மீதான தாக்குதலாக அமையவில்லை. இந்த எதிர்ப்புக்கு தன்னியல்புதான் அடிப்படை. தேசிய விடுதலைக்கான திட்டம் அடிப்படையல்ல.
இதன் விளைவாக, தேசியப் புரட்சியின் நடுவே புகுந்து அதனைத் திசைதிருப்பி சீரழிக்கப்பாடுபடும் சமரசசக்தியாக தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தை இனங்காணவில்லை. இவர்களை அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தி மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் கொள்கை இருக்கவில்லை. சமரசசக்திகளை தனிமைப்படுத்தும் கோட்பாட்டுத்தீர்வின் அடிப்படையில் அமையாத தன்னியல்பான எதிர்ப்புக்களாக ‘70களின்’ எதிர்ப்புக்கள் அமைந்தன. இத்தன்னியல்பே திம்புப் பேச்சுவார்த்தையிலும் அதன்பின்பும், தமிழர் கூட்டணியினருடன் ‘ஐக்கிய முன்னனி’ அமைக்கவும், பின்னர் “முதலாளித்துவ ஜனநாயகம்” பேசுவதற்கும் காரணமாயிற்று.
இந்தப் பலவீனங்கள் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் ‘குளிர்காய்வதற்கு’ இடம்விட்டுக் கொடுத்தன. குட்டிபூர்சுவா வர்க்கத்தின் தனிநாட்டுக் கோரிக்கையும், தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு ‘கருவேப்பில்லை’ ஆனது. முதல் கட்டத்தில் இளைஞர்களது நம்பிக்கையைப் பெறவும், அதே நேரத்தில் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் முயல்கின்றனர். “தமிழின த்தின் ஒற்றுமையைக் கெடுக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை. “தம்பிமார் படிக்க வேண்டும்” என்ற ஆலோசனை. “மார்க்சியத்தில் மனந்தோய்தவன்” என்ற ஏமாற்று. “நிதானம் இழந்தால் இனத்துக்கு அழிவு” என்கிற புத்திமதி. “நான் இளைஞனாக இருந்த காலத்தில்………” என்கிற வரலாற்றுப் போதனை. திருவாளர் அமிர்தலிங்கம் அவர்கள் “அமிர் அண்ணா” ஆகுதல்` இந்த மோசடிகள் எதுவும் பலிக்காமல் போகிறது. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தானே அம்பலமாகிறது. இந்த நிலைமையில் குட்டிபூர்சுவா எழுச்சியை வடிய வைக்க தனிநாட்டுக் கோரிக்கையை தாமே எடுத்துக் கொள்கிறனர்.
1970 – 1976 வரை ஆட்சியில் இருந்த சிங்களத் தொழிற்துறைத் தரகுமுதலாளிய வர்க்கத்திற்கெதிராக வணிகத் தரகர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டனர். தொண்டமான் ஜே. ஆருடன் கூட்டுச் சேர்ந்து மலையகத்திலும் தென்னிலங்கையிலும் போராட்டம் நடத்தி வந்தார். (1977 இல் இவருக்குப் பதவி கிடைக்க இருந்தது!) மறுபுறம் தமிழ் வணிகத் தரகர்களுடனும் கூட்டுக்குப் போனார். இந்த வணிகத்தரகர்களின் கூட்டை “தமிழர் கூட்டணி” (1974) என்று பெயரிட்டு அழைத்தனர். (இக்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் ‘விடுதலை’ பற்றிய கருத்து வளர்ந்து வந்ததால் பின்னர் இது தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியது!) 1976 இல் வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். 1977 இல் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி வரவிருக்கிறது. “இந்தமுறைத் தேர்தல் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு” என்றாகிறது. தேர்தல் விஞ்ஞாபனம் சொல்வதாவது;
”எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழும் தொடர்பான பிரதேசம் முழுவதும் உள்ளடங்கியதான சுதந்திரமான, இறைமையுள்ள, மதச்சார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை நிறுவுவதற்கு தமிழ்த்தேசிய இனத்தின் கட்டளையைத் தமிழர் கூட்டணி நாடி நிற்கிறது.”
குட்டிபூர்சுவா வர்க்கம் முன்னெடுத்துச் சென்ற தனியரசுப் பிரச்சாரத்தை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் அறுவடை செய்தது. என்றுமில்லாத பெரும்பான்மை வெற்றியடைந்தனர். ஆனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் வழக்கமான ‘கருவேப்பிலை’ விளையாட்டில் இருந்து இது வித்தியாசமானது. தமிழீழக்கோரிக்கை சமக்ஷ்டிக்கோரிக்கையல்ல. அது பொருளாதார அடித்தளத்தில் வேர்கொண்டு, முழுச்முதாயத்தினதும் ஜீவாதார நலன்களை உள்ளடக்கி நின்ற அரசியல் கோரிக்கை ஆகும். வாக்குரிமை பறிக்கப்பட்ட போது இருந்த தீர்க்கதரிசனம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது இல்லாது போய்விட்டது!
81 இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளுடன் வருகிறார்கள்.; யாழ் பல்கலைக்கழக வளவில் உதய சூரியன் (”தமிழீழத்தேசியக் கொடி”) கொடிபோர்த்திய அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி சுடர்விட்டு எரிகிறது. 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் வருகிறார்கள்; பொதுத்தேர்தலில் தமிழ்த்தரகுமுதலாளியம் மண்கவ்வுகிறது. 1989 ஜூலையில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை ‘வெளியேற வேண்டாம் தமக்குப் பாதுகாப்பில்லை’ என்கிறார்கள். அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும் சுட்டுத்தள்ளப்பட்டார்கள். இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன என்பது உண்மைதான். ஆனால் இவை நிச்சயமான வீழ்ச்சிகள் அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். 80 களின் இந்த எதிர்ப்புக்கள் ’70 களின்’ எதிர்ப்புக்களில் இருந்த அடிப்படைத் தன்மையில் மாறாதவை. ’தன்னியல்பானவை’ என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
தமிழ்த்தேசிய இனம் தனது விடுதலைக்காக போராடும் போது, நண்பர்க ளையும் சந்திக்கிறது; எதிரிகளையும் எதிர்கொள்கிறது. “நமது எதிரிகள் யார்?” நண்பர்கள் யார்?” புரட்சியில் இந்தப்பிரச்சனை முதல்முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.” தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தேசியப்புரட்சியில் நண்பனா? எதிரியா?. சமுதாய அளவில் இந்தப்பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை.
தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கிலிருந்து மீள்தல், தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கு முன்நிபந்தனையாகும். எனவேதான் போராட்ட முன்னனியினரதோ, மக்களதோ தன்னியல்பான எதிர்ப்புக்களில் அன்றி தமிழ்த்தரகுமுதலாளியத்தின் எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை விஞ்ஞான வழியில் புரிந்துகொள்வதின் மீது இயக்கம் தனது பலத்தை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான் மக்களைத் தேசியப்புரட்சியில் ஊன்றி நிற்கச் செய்வது சாத்தியமாகும்.
தேசிய இன விடுதலையில் தமிழ்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம் பகுதி 4
No comments:
Post a Comment