கடமை முடியவில்லை!
யுத்தக் கைதிகள் விடுதலை:திருமலையில் கதவடைப்பு |
ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள், இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.
யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத் தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.
இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்நாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.வியட் கொங் மக்கள் படையால் விடுவிக்கப்பட்ட ஒரு அமெரிக்க யுத்தக்கைதி இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றார்.
ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.
நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.
இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.
சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!
இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்து தற்போது தொடர்ந்து வருகின்றனர்,தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.
போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று நேற்றைய தினம் 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.
அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.
இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.
எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.
முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.
இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.
மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.
நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.
தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.
மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்` நாம் வெற்றி பெறுவது திண்ணம்.
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
14-11-2015 புதிய ஈழப் புரட்சியாளர்கள்