Friday 15 March 2013

தமிழக மாணவர் எழுச்சி: அவசியக் குறிப்புரை பகுதி (2)





தமிழக மாணவர் எழுச்சி: எழுச்சியின் தருணத்தில் ஒரு சுருக்கமான அவசியக் குறிப்புரை
பகுதி (2)

தமிழீழத் தேசியப் பிரச்சனையும் தமிழகமும்

1) நாடாளமன்றவாத அரசியல் கட்சிகள்

இவர்கள் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாதவர்கள், தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடுவார்களா என்ன!

1983 ஜூலை இனப்படுகொலை தமிழகமக்களைக் கொந்தளிக்க வைத்த போது, அதைப் பயன்படுத்தி இலங்கை அரசை இந்திய மேலாதிக்கத்துக்கு அடிபணிய வைக்கவும், விடுதலைப் போராட்ட அமைப்புக்களை சிதைத்து சீரழிக்கவும் இந்திய அரசு திட்டமிட்டபோது அதை தமிழகத்தில் அமூலாக்கியவர்கள் இவர்கள்.இது முதல் இந்திய விரிவாதிக்கத் திட்டத்துக்கு அடங்கி ஒடுங்கி அடிமைச் சேவகம் செய்வதே இவர்களது பிறவிப் பயன் ஆக இருந்து வந்துள்ளது.இதனால் தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து இவர்கள் வாயே திறப்பதில்லை! இந்திய அரசு இழைத்த யுத்தக் குற்றங்கள் குறித்து பேசுவதே இல்லை. பகுதி 1 இல் நாம் வகுத்தளித்த இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரைத் திட்டமிட்டு கருவறுத்து வந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ `தமிழீழத்தில் இந்திய விஸ்தரிப்புவாத திட்டத்துக்கு சேவகம் செய்து வந்ததைக் காண முடியும்.

2) அதிகாரபூர்வ ஈழத்தமிழின ஆதரவாளர்கள் ( பழ.நெடுமாறன் ஐயாவை அடியொற்றிய அமைப்புக்கள்)

இவர்களும் தமிழகத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாதவர்கள், தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடுவார்களா என்ன!

இந்திரா-எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் இந்தியா தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இருந்தது என்ற கடைந்தெடுத்த ஏமாற்றை நெடுமாறன் தொடர்ந்து செய்து வருகின்றார்.

முள்ளிவாய்க்காலில் நாம் மூச்சுத் திணறி நின்றபோது பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் பிரச்சனை தீரும் என்று வாக்களித்து `பின்வாங்க வேண்டிய தருணத்தில் முன்னேற` புலிகளுக்கு வழி சொன்னவர் வை.கோ.

தமிழீழம் கடந்துவந்த 30 ஆண்டுகால வேள்வியை தன் சொந்த (வர்க்க) அரசியல் எதிர்காலத்துக்காக ``நாம் தமிழர்`` கேவலப்படுத்தி வரும் அளவுக்கு வேறு யாரும் செய்ததில்லை.புலிகள் தலைவரை,புலிகள் சின்னத்தை,புலிகள் உறுதிமொழியை, புலிகளின் மாவீரர் கீதத்தை தம் தேர்தல் வேட்கைக்காக இழிவுபடுத்தி மலிவு படுத்தி எமது இரத்தத்தை வெறும் சத்தமாக மாற்றியவர்கள் இவர்கள்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயை திட்டமிட்டு அணைத்தவர்கள், முள்ளிவாய்க்காலுக்கு கொள்ளிவைத்தவர்கள்.

3) NGO கருங்காலிகள்
`அரபுவசந்த` நவீன காலனியாதிக்கத் திட்டத்தின் அடிப்படையில், மே- 18 இற்குப் பின்னால் அமைப்பாக முளைத்தவர்கள். அமெரிக்க உலகமறுபங்கீட்டு ஆட்சிக் கவிழ்ப்புத்திட்டத்துக்கு சேவகம் செய்பவர்கள்.நவீன காலத்தின் புதிய எதிர்ப்புரட்சிகர சக்திகள்.

4) CPI, CPM திருத்தல் வாதிகள்

இந்த இரண்டு கும்பலுமே தம் சொந்த சித்தாந்தக்கு துரோகம் இழைத்த `ரசிய சீன பாண்டியர்கள்`! சித்தாந்தத்துக்கே துரோகம் இழைப்பவன் வேறு எதில் நியாயமானவனாக இருப்பான்?

இந்த சமூக சக்திகள் தான் பிரதானமாக  (அகக் காரணமாக), தமிழீழ விடுதலைப் போருக்கான தமிழக மக்கள் ஆதரவை தணித்து அடக்கி முடக்கி சிதைத்து சீரழித்து வந்தவர்கள்!

புறவயப் பாதிப்புகளின்  உடனடி விளைவாக இந்த மூடு திரையோடு முட்டி மோதி எழுந்துள்ளது இந்த மாணவர் இயக்கம்.
===========
இப் பிரச்சனையில் மாணவர் இயக்க மதிப்பீடு (2) :
ஒட்டுமொத்தமாக இந்தக் கும்பலை மாணவர் இயக்கம் தலை தறித்து நிராகரித்திருக்கிறது.இது ஒரு திருப்பமாகும்.எனினும் இச் சமூக சக்திகளை புரிந்து கொண்ட அளவுக்கும், தெரிந்து கொண்டுள்ள அளவுக்கும் உள்ள விகிதாசாரமே இன்று  வெடித்திருக்கும் தன்னியல்பான எழுச்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  
எழுச்சி தொடர்க! எழுச்சி நடைமுறையில் இருந்து கற்றறிக! எழுச்சி வெல்க! மக்கள் ஆதரவு பெறுக, பெருகுக!

புதிய ஈழப்புரட்சியாளர்கள் ENB

No comments: