Friday 15 March 2013

தமிழக மாணவர் எழுச்சி: அவசியக் குறிப்புரை பகுதி (1)



தமிழக மாணவர் எழுச்சி: எழுச்சியின் தருணத்தில் ஒரு சுருக்கமான அவசியக் குறிப்புரை

பகுதி (1)

தமிழீழத் தேசியப் பிரச்சனையும் இந்திய விஸ்தரிப்புவாத அரசும்.

1983 இல் தமிழீழத் தேசியப் பிரச்சனை ஒரு உள்நாட்டு யுத்தமாக வடிவெடுத்தது முதல் இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரைத் திட்டமிட்டு கருவறுத்து வந்துள்ளது.

1) 1983-தமிழீழப் போராளிகளை மண்ணில் இருந்து வேரறுத்தது.

2) 1984-ஆயுதம் மற்றும் பணத்தைக் கொடுத்து அவர்களது தமிழீழ இலட்சியத்தைக் கைவிட நிர்ப்பந்தித்தது.

3) 1985- திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது.

4) 1986- போராளிக்குழுக்களுக்கிடையே மோதலை `ரோ` மூலம் உருவாக்கி, ``சகோதர யுத்தத்தைத்`` தூண்டியது!

5) 1987- இந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை அடிமைப்படுத்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை, ஜே.ஆர்.அரசை `ஈழப்போராட்ட ஆதரவு மூலம்``
அடிபணிய வைத்து திணித்தது.

6)1987-1988- இந்தியப் படைகளை அனுப்பி இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தைக்  கட்டவிழ்த்தது, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடியது. தமிழீழ மக்கள் மீது எண்ணற்ற யுத்தக்குற்றங்களைப் புரிந்தது.

7) எனினும், இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திலும், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறை யுத்தத்திலும் விடுதலைப்புலிகள் தொடர் வெற்றிகளை ஈட்டி, அதன் உச்சமாக ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை வீழ்த்தி தமிழீழத்தின் பெரும்பகுதியை சிங்கள இராணுவ அடக்குமுறையின்  ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து யாழ் நோக்கி முன்னேறிய வேளையில், மீண்டும் ஒரு `அமெரிக்க-இந்திய கூட்டு` இரணுவத்தலையீட்டைக்காட்டி எச்சரித்து சமரச வழியில் திசை திருப்பியது.

8) 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதல் விடுதலைப்புலிகளை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தி, அவர்களை பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து தடை செய்ய முன்னின்று செயற்பட்டது.

9) சிங்களத்தை அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயார் செய்தது.

10) ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை மீறி கட்டவிழ்த்த, கோர இனப்படுகொலை யுத்தத்தின் பங்காளியாகி, ஆனந்தபுர
விசவாயுப் படுகொலை மூலம் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளை கோழைத்தனமாகக் கொன்றொழித்து, சிங்களத்தின் வெற்றிக்கு வழி
வகுத்தது.

11) விஸ்தரிப்புவாத நலனின் பேராலும், பொருளாதார நலனின் பேராலும் சிங்களத்தின் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கோரும் ஜனநாயக,மனித நேய, இன நல ஆதரவு இயக்கங்களின் சர்வதேச முயற்சிகளை தொடர்ந்து சர்வதேச அரங்கில் முறியடித்து வருகிறது.

12) இலங்கை ஒரு நாடு இரு தேசம், என்ற உண்மையை மூடி மறைத்து, இலங்கையில் தமிழர் ஒரு `சமூகம்` என்றும் அவர்களுக்கு 13 வது
திருத்தமே தீர்வு என்றும் தொடர்ந்து ஒப்புக்குச் சொல்லி  வருகிறது.
முடிவாக:
1983-2013 முப்பது ஆண்டுகளின் வரலாற்றுப் புள்ளிகள் இணைந்து வரைகின்ற கோலம் என்னவென்றால் இந்தியா இலங்கையின் நட்பு நாடு என்பதும் தமிழீழத்தின் எதிரி நாடு* என்பதுமேயாகும்.
 
( ஐ .நா. மனித உரிமை சபையின் 22வது கூட்டத்தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் தருணத்திலும், அமெரிக்கத் தீர்மானத்துக்கு 4வது திருத்தத்தை, இலங்கையை பாதுகாக்க இந்தியா  மேற் கொண்டுள்ள இந்த வேளையிலும் இதுவே உண்மையாகும்) 
---------------
* எதிரி நாடு என்று குறிப்பிடும் போது நாம் அந்த நாட்டின் ஆளும்வர்க்கங்களையும், அரசுமுறையுமே கருதுகின்றோம்.மக்களை அல்ல. இந்தியா பெரு நிலப்பிரபுத்துவ, தரகுமுதலாளிய ஆளும் வர்க்கங்களின் பிடியில் அரசியல் அதிகாரமும், அதனால் இயற்கையாகவே அரைக்காலனிய பாசிச அரசுமுறையையும் கொண்ட நாடாகும். இதன் தர்க்க ரீதியான  விளைவாக உள் நாட்டிலும் அண்டை அயல் நாடுகளிலும், பிராந்தியங்களிலும் தேசிய சுதந்திரத்தின் எதிரியாகும்.
============================
இப் பிரச்சனையில் மாணவர் இயக்கம் குறித்த மதிப்பீடு (1) : இந்த வரலாற்றைப் புரிந்து கொண்ட அளவுக்கும், தெரிந்து கொண்டுள்ள அளவுக்கும் உள்ள விகிதாசாரமே இன்று  வெடித்திருக்கும் தன்னியல்பான கிளர்ச்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  
எழுச்சி தொடர்க! எழுச்சி நடைமுறையில் இருந்து கற்றறிக! எழுச்சி வெல்க! மக்கள்ஆதரவு பெருகுக!
புதிய ஈழப்புரட்சியாளர்கள் ENB
============================

No comments: