Saturday, 11 August 2012

நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்.

 நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும், செயல்தந்திரங்களும்.
சமரன் - ஜனவரி, 1989

[சர்வதேசப் போல்சுவிசத்தின் தமிழகப் போர்வாளும், நமது தோழமைத் தலைமைக் கட்சிப் பத்திரிகையுமான சமரனில் ,ஜனவரி 1989 இல் வெளிவந்த இக்கட்டுரையை நன்றியுடனும், அநுமதியுடனும் மறுபிரசுரம் செய்கின்றோம். ஆர்]
--------------------------------------------------------------------------------------------------------------------
முதலாளித்துவ நாடாளுமன்ற முறைபற்றி முதலாளித்துவ நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளும், பாட்டாளி வர்க்க கட்சிகளும் மேற்கொள்ள வேண்டிய
போர்த்தந்திர, செயல்தந்திர (Strategic and Tactic) அணுகுமுறையை வகுத்தளிக்கும் பொருட்டு, லெனின் தனது புகழ்மிக்க நூலான
‘இடதுசாரி கம்யூனிசம் - சிறு பிள்ளைத்தனமான கோளாறு’ என்ற  நூலில் இப்பிரச்சனை குறித்த தத்துவ கோட்பாடுகளை முன்வைத்துள்ளார்.
ஜெர்மனி, டச்சு மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இடது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடுகளை விமர்சித்தும், முதலாளித்துவ நாடுகளிலுள்ளபாட்டாளி வர்க்கக் கட்சிகள் முதலாளித்துவ  நாடாளுமன்ற  முறை   குறித்துப்  பிழையற்ற செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்காக
வழிகாட்டும் நோக்கத்துடனும் அவரால் இந்நூல் எழுதப்பட்டது.

முதலாளித்துவ  நாடுகளில்  உள்ள  கம்யூனிஸ்ட் -பாட்டாளி வர்க்க கட்சிகள் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை குறித்து மேற்கொள்ள வேண்டிய
செயல்தந்திர அணுகுமுறை, கோட்பாடுகள் எவை என்று இந்நூலில் அவர் வகுத்து அளிக்கிறாரோ, அவற்றை எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் -
பாட்டாளிவர்க்க கட்சிகள் காலம், இடம், இயல்பு ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், எந்த
மாற்றமுமில்லாமலும் அப்படியே பிரயோகிக்க வேண்டும் என்று இந்நாட்டு-இந்திய- நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு கொள்வோர் வாதிடுகின்றனர்.
நம்நாட்டில் உள்ள மார்க்சிய - லெனினிய குழுக்கள் (நக்சல்பாரிகள்) என அழைத்துக் கொள்ளும் சிலரும், வலது இடது கம்யூனிஸ்டுகளான
திரிபுவாதிகளும் தங்களுடைய பாராளுமன்ற பாதையை நியாயப் படுத்துவதற்காக லெனின் பெயரை உச்சாடனம்  செய்துகொண்டு, சமாதானப் பாதைக்கும், பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கும் கவசமாக ‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு’ என்ற நூலை
பயன்படுத்துகின்றனர்.

முதலாளித்துவ நாடாளுமன்றமும் பாட்டாளிவர்க்கக் கட்சியின் நிலைபாடும்:

‘இடதுசாரி கம்யூனிசம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு‘ என்ற  நூலில் கூறியுள்ளபடி முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை குறித்து பாட்டாளி
வர்ககக் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய போர்த்தந்திர செயல்தந்திர அணுகுமுறையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம், முதலாளித்துவமும்,
முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கி விட்டது. எனினும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில்
காலாவதியாகி விட்டது என்பதன் அடிப்படையில் பாட்டாளிவர்க்கக் கட்சிகள் தமது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ளக் கூடாது, முதலாளித்துவ
நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகி விட்டதா  இல்லையா என்பதை பொறுத்தே தமது செயல்தந்திரங்களை
வகுத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் கூறினார்.
    
ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா, இல்லையா என்பது அந்நாட்டில் நிலவும்
நிலைமைகளைத் துருவிப் பரிசீலிக்கும் பகுத்தாய்வினால் அறியக் கூடியதும், நிரூபிக்கக் கூடியதுமாகும். ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ
நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகாத வரை அதைப் புறக்கணிக்கக் கூடாது. அதை ஒரு பிரச்சார மேடையாகப் பாட்டாளி வர்க்கக்
கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.ஒரு நாட்டில் நிலவும் நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா என்று மதிப்பீடு செய்வதற்கான அடிப்படையையும், அவற்றில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கு கொள்வதின் நோக்கத்தையும், முறையையும், அவற்றைப் புறக்கணிப்பதற்கான நிபந்தனைகளையும் அவர் எடுத்துக் காட்டினார்.

இவை  அனைத்தும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளித்துவ நாடாளுமன்ற முறையையும், அவை நிலவிய புறவயமான நிலைமைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டும், பாட்டாளி  வர்க்க  இயக்கத்தின்  நடைமுறை  அனுபவத்தை  தொகுத்ததின் அடிப்படையிலும்,
அவர் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை குறித்து பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கு வகுத்தளித்த போர்த்தந்திர, செயல்தந்திர அணுகு முறையாகும்.

லெனினின் வரையறைகள்

லெனின் முன்வைத்துள்ள இரண்டு அடிப்படையான வரையறைகள்:

1.முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்து விட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கி விட்டது.
2. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா என்பதைப் பொறுத்தே பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இப்பிரச்சனை குறித்து தமது செயல்தந்திரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்டதில் முதல் வரையறை போர்த்தந்திர அணுகுமுறையையும், இரண்டாவது வரையறை செயல்தந்திரத்தை வகுத்துக் கொள்வதற்கான
அடிப்படையையும் வழங்குகின்றது. இவ்விரண்டு வரையறைகளும் முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளிவர்க்கக் கட்சிகளால் பிரயோகிக்கப் படுவதைப் போன்றே காலனிய, அரைக்காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளில் எவ்வித மாறுதலும் இன்றி, அப்படியே பிரயோகிக்கக் கூடியனவா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

லெனின் வழிகாட்டுதலில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உலகப் புரட்சிப் போக்கின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், பாதைகளையும்; அதன்
இயக்கு சக்திகளையும், சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதார நெறிகளையும், போர்த்தந்திர, செயல்தந்திரப் பிரச்சனைகளையும் நிர்ணயித்தது.

அவற்றுடன் ஒப்பிட்டே மேற் கூறப்பட்ட இரண்டு வரையறைகளையும் பரிசீலிக்க வேண்டும். மேலும் காலனிய சார்பு நாடுகள் மற்றும்
முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளின் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் அனுபவத்தோடும்    ஒப்பிட்டே
பரிசீலனை செய்யவேண்டும். அடிப்படைப் புரட்சிக் கோட்பாடுகள் வெவ்வேறு நாடுகளில் தனித்த நிலைமைகளுக்குத் தகவமைக்கப்பட வேண்டும்
என்பதன் அடிப்படையிலும் மேற்கூறப்பட்ட இரண்டு வரையறைகளைப் பரிசீலிக்க வேண்டும்.

இன்றைய சகாப்தத்தில் முதலாளித்துவ நாடாளுமன்றம்:

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது  அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற
முறையின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் துவங்கிவிட்டது என்ற வரையறையின்  (லெனின்) முதலாளித்துவ
நாடுகளுக்கும், காலனிய சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளுக்கும் ஆகிய
இருவகைப்பட்ட நாடுகளுக்குமுள்ள பொருளும் முக்கியத்துவமும் என்ன? இந்த அனைத்தையும் தழுவிய உண்மை எவ்வாறு வெளிப்படுத்திக்
கொண்டது? இவ்வரையறையை இருவகைப்பட்ட நாடுகளுக்கு லெனின் எவ்வாறு பிரயோகப்படுத்தினார்? இவ்வரையறையானது மேற்கூறப்பட்ட
இருவகைப்பட்ட நாடுகளின் கட்சிகளுடைய வேலைத்திட்டத்தையும், போர்த்தந்திரங்களையும் வகுப்பதில் எப்படி வழிகாட்டும் கோட்பாடாக அமைகிறது? என்பனவற்றைப் பரிசீலிப்பது அவசியம்.

இன்று நாம் வாழும் சகாப்தம் ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தமாகும்; இன்றைய சகாப்தத்தில் சமூக வளர்ச்சியை ஆளுமை புரியும் விதிகளால் மேற்கூறப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதின் அடிப்படையிலும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

வரலாற்று வழியில் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின்காலாவதி:

ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியினதுமான இன்றைய சகாப்தத்தில் முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டதின் பொருள்:

“உலக அரசியல் நிலைமை இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறது. உலக அரசியல் நிகழ்ச்சிகள், சோவியத் குடியரசுக்கு எதிரான உலக முதலாளிகளின் போராட்டம் எனும் தனியொரு மையத்தின் மீது தவிர்க்க முடியாதபடி ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளன. சோவியத் ருஷ்யக் குடியரசை சுற்றிலும் எல்லா நாடுகளிலுமுள்ள முன்னணித் தொழிலாளர்களின் சோவியத் இயக்கங்கள் ஒரு புறமும் , காலனிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியிலான எல்லா தேசிய விடுதலை இயக்கங்கள் மறுபுறமும் தவிர்க்க முடியாதபடி சேர்ந்து நிற்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோவியத் அமைப்புமுறை பெறும் வெற்றியில் மட்டும்தான் தமது விமோசனம் இருக்கிறது என்பதை அவை தமது கசப்பான அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றன.”

(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள். தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி உரைகள்.)

மேற்கூறப்பட்ட மேற்கோள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குப் போதிக்கின்றது.

ருசிய அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, ஏகாதிபத்தியத்தை (உலக முதலாளித்துவத்தை), எதிர்த்த போராட்டத்தில் உலக சோசலிசப் புரட்சியின்
ஒரு பகுதியாக காலனிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் புரட்சிகர தேசிய விடுதலை இயக்கம் மாறிவிட்டது என்பது மட்டுமல்ல, உலக
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து  சோவியத் அமைப்பு முறை பெறும் வெற்றியில்தான் இந்நாடுகளின் விமோசனம் அடங்கியிருக்கிறதே ஒழிய, பழைய வகைப்பட்ட பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் மூலம் அல்ல என்பதேயாகும். (அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மூலம் அல்ல என்பதாகும்) இன்றைய சகாப்தத்தில் அனைத்து நாடுகளுடைய மக்களின் விமோசனம் சோவியத் அமைப்புமுறை பெறும் வெற்றியில்தான்
அடங்கியிருக்கிறது என்பதன் பொருள், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே வரலாற்று வழியில் காலாவதியாகி
விடவில்லை, காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்திமுறை மேலோங்கி நிலவும் நாடுகளிலும் கூட முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்றுவழியில் காலாவதியாகி விட்டது என்பதே ஆகும். (அழுத்தம் ப-ர்)

எனினும், முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகியாகி விட்டது என்ற வரையறையின் பொருள் மேற்கூறப்பட்ட இருவகைகளைச் சேர்ந்த நாடுகளுக்கும்
ஒன்றாகவே அமைகிறதா? இல்லை.

இருவேறு பொருட்கள்:

முதலாளித்துவ நாடுகளைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி
விட்டது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் சகாப்தம்
தொடங்கிவிட்டது - என்பதன்  பொருள், இந்நாடுகளில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் குறிக்கோளாகச் சோசலிசப் புரட்சி நடைபெற்று முதலாளித்துவ
அரசுக்குப் பதிலாய் அதனிடத்தில் ஒரு புதுவகையான அரசை, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை அமைத்திடுவதாகும். இந்நாடுகளில் பாட்டாளிவர்க்கக் கட்சிகளின் நோக்கம் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை (ஆளும் வர்க்கங்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அரசு இயந்திரத்தை) தகர்த்தெறிந்து விட்டு பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலான அரசு முறைக்கு மாறாக சோசலிஸ்ட் சோவியத் அமைப்பு முறையிலான அரசையும் நிறுவுவதாகும்.

அதே வேளையில், காலனிய, சார்பு நாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறை மேலோங்கி நிலவும் நாடுகளில் முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதன் பொருள் வேறு ஒன்றாக இருக்கிறது.

தேசிய, விடுதலைப் புரட்சிகளின் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படை:

காலனிய,சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய  உற்பத்தி முறை மேலோங்கி நிலவும் நாடுகளின் தேசிய புரட்சிகர இயக்கங்கள்
ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துடன் நல்லிணக்கம் கொண்டுள்ள சீர்த்திருத்த முதலாளிவர்க்கத்தை எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பினும், இந்நாடுகளில் முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் மெய்யாகவே புரட்சிகரமானவையாக இருந்தால் மட்டுமே, அவற்றின் பிரதிநிதிகள் விவசாயிகளையும் மற்றும் பிற சுரண்டப்படும் மக்கள் திரளையும் ஒரு புரட்சிகரமான உணர்வில் பயிற்றுவித்து ஸ்தாபன ரீதியில்  திரட்டும் தமது வேலையைத் தடை செய்யாதபோது மட்டுமே ஆதரிக்க வேண்டியதாயிருப்பினும் இத்தகைய நாடுகளின் தேசியப் புரட்சி இயக்கமும், விடுதலைப் புரட்சியும் அவற்றின் சாராம்சத்தில் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமே ஆகும். காரணம், அவற்றின் நோக்கம் ஏகாதிபத்தியத்தையும் அதனுடன் நல்லிணக்கம் கொண்ட முதலாளிவர்க்கத்தை மட்டுமே ஒழிக்க கூடியதும், முதலாளித்துவத்தை முழுவதுமாக ஒழிப்பதல்ல என்பதால் மட்டுமல்ல, மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலான விவசாயிகள் பூர்ஷ்வா - முதலாளித்துவ உறவுகளைப் பிரதிநிதித்துவப்- படுத்துவோராக இருப்பதால் எந்த ஒரு தேசிய இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாகவே இருக்கும் என்றார் லெனின்.

புதிய வாய்ப்பு:

இத்தகைய நாடுகளின் தேசிய புரட்சிகள் அவற்றின் சாராம்சத்தில்   முதலாளித்துவ  ஜனநாயகத்  தன்மையைக் கொண்டனவாக இருப்பினும்,
சோசலிச அரசு ஒன்றின் உதயமும், பொதுவான உலகப் புரட்சி இயக்கத்தில் அது ஆற்றிய தலைமைப் பங்கும், முதலாளித்துவ நாடுகளின்
பாட்டாளிவர்க்க இயக்கம் ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய புரட்சிகர இயக்கங்களுக்கு நல்கிய உதவியும், தேச விடுதலைக்காகப் போரிடும் எல்லா
தேசத்தாரும் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்துக்குள் அடிவைக்காமலேயே சோசலிசத்தை சென்றடைவதற்கான வாய்ப்பினை கிடைக்கச் செய்தனர்.
ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியினதும் சகாப்தத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தின் ஊடாகச் செல்லாமலேயே ஒரு சில வளர்ச்சிக் கட்டங்களின் ஊடே கம்யூனிஸத்திற்கு  மாறிச்செல்ல முடியும் என்பதை லெனின் பின் வருமாறு கூறினார்:

“ ....வெற்றி வாகை சூடிய புரட்சிகரப் பாட்டாளிவர்க்கம் அவற்றின் மத்தியில் முறையான பிரச்சாரம் நடத்தும் பட்சத்தில், சோவியத் அரசாங்கங்கள் தம் வசமுள்ள சகல சாதனங்களுடனும் அவற்றுக்குத் துணைபுரியும் பட்சத்தில், பின்தங்கிய மக்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தின்  ஊடே  தவிர்க்க முடியாதபடி கடந்து செல்ல வேண்டும் என்று கருதுவது தவறாகக் கொள்ளப்படும் முடிவாகும். எல்லாக் காலனிகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் நாம் போராளிகளின் சுயேச்சையான படைப் பிரிவுகளையும் கட்சி நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, விவசாயிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கான பிரச்சாரத்தை உடனே துவக்கிவைத்து அவற்றை முதலாளித்துவத்துக்கு முந்திய நிலைமைகளுக்குத் தகவமைக்க முயல்வது மட்டுமல்ல, அதோடு முன்னேறிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் உதவியுடன் பின்தங்கிய நாடுகள் சோவியத் அமைப்பு முறைக்கும், ஒருசில வளர்ச்சி கட்டங்களின் ஊடே கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே மாறிச் செல்ல முடியும் எனும் கருத்துரையை அதற்கு உரியதான தத்துவார்த்த அடிப்படையுடன் கம்யூனிஸ்டு அகிலம் முன்வைக்க வேண்டும்.”
தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில் (தொகுதி 11 பக்கம் -78).

எனவே காலனிய, அரைக்காலனிய சார்புநாடுகள் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகள் மேலோங்கி நிலவும் நாடுகளைப் பொறுத்தமட்டில், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்பதன் பொருள், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டாலும் இந்நாடுகளின் தேசிய புரட்சியும், விடுதலையும் அவற்றின் சாராம்சத்தில் இன்னும் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மையைக் கொண்டவையாகவே இருக்கின்றன, அதே சமயம், முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதின் காரணமாக, இந்நாடுகள் முதலாளித்துவ வளிர்ச்சிக் கட்டத்தின் ஊடே கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலே, ஒருசில வளர்ச்சிக்   கட்டங்களின்   ஊடே 
கம்யூனிஸத்துக்கு  மாறிச் செல்ல முடியும்.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் உண்மையான விடுதலைக்கான பாதை:

முதலாளித்துவம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டதால் ஏகாதிபத்திய முதலாளிவர்க்கம் காலனியாதிக்க முறைகளைக் கைவிடும் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதற்கு மாறாக அவை காலனியாதிக்கத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே முயல்கின்றன மேலும் இந்நாடுகளின் தேசியப் புரட்சி முதலாளித்துவத்தன்மை யுடையவை -யாய் இருப்பினும் ஏகாதிபத்தியம், பாட்டாளிவர்க்கப் புரட்சி ஆகியவற்றின் சகாப்தமான இந்த சகாப்தத்தில் அவற்றின் விமோசனம் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவ ஜனநாயக குடியரசையும் நிறுவுவதற்கு மாறாக, சோவியத் அமைப்பு முறை வெற்றி பெறுவதில்தான் அடங்கியிருக்கிறது என லெனின் எடுத்துரைத்தார்.

ஏகாதிபத்தியவாதிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தும் பொருட்டும், காவுத்ஸ்கி வாதத்தை மறுதலித்தும் எதிர்காலத்தில் புதிய வேடங்களில்
தோன்றக்கூடிய நவீன திரிபுவாத குருசேவ், டெங்கு கும்பல்களின் செப்படி வித்தைகளைப் பற்றி (காலனியத்தின் மறைவு கோட்பாடு   போன்றவற்றைப்
பற்றி)  எச்சரிக்கை செய்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் உண்மையான விமோசனத்திற்கான  பாதையைச் சுட்டிக்காட்டும் பொருட்டும் லெனின் தனது ஆய்வுரையில் பின்வருமாறு கூறினார்:

“ ஆறாவதாக, அரசியல் ரீதியில் சுதந்திரமான அரசுகள் என்ற வேடத்தில் அவற்றைப் பொருளாதார ரீதியிலும், நிதி விஷயத்திலும் ராணுவத்துறையிலும் முழுமையாகச் சார்ந்து நிற்கும் அரசுகளை நிறுவும் பான்மையில் ஏகாதிபத்திய வல்லரசுகள் திட்டமிட்டுச் செயல்படுத்திவரும் மோசடியை எல்லா நாடுகளின், குறிப்பாக பின்தங்கிய நாடுகளின் பரவலாக உழைக்கும் மக்கள் திரள் மத்தியில்  இடையறாது விளக்கிக்கூறி அம்பலப்படுத்துவது அவசியம். இன்றுள்ள சர்வதேச நிலைமைகளின் கீழ், ஒரு சோவியத் குடியரசுகளின் ஒன்றியத்தில் மட்டுமின்றி வேறு வழியில் பலவீனமான சார்புநாடுகளுக்கு விமோசனம் கிட்டாது.”
(‘கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கான ஆராய்ச்சி உரைகள். தேசிய மற்றும் காலனியப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி உரைகள்’. லெ-தெ-நூ-தொகுதி 11 பக்கம்-18).

இந்நாடுகளின் மீது சுமத்தப்பட்டிருக்கிற காலனியாதிக்க முறைகளை ஏகாதிபத்திய முதலாளிவர்க்கம் கைவிடாது; அவற்றின் விமோசனம் சோவியத் அமைப்புமுறை வெற்றி பெறுவதில்தான் அடங்கி இருக்கிறது என்றாலும், இந்நாடுகளின் சோவியத்துகள் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு அமைப்புகள் இல்லை; அவை விவசாயிகளின் சோவியத்துகளும், உழைக்கும் மக்களின் சோவியத்துகளும் ஆகும் என்றார்  லெனின். காரணம் இந்நாடுகளின் தேசியப் புரட்சி ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி உறவுகளையும் தகர்த்தெறியும் தன்மையுடையதாகவும் ஜனநாயகத்
தன்மையுடையதாகவும் இருப்பதால் முதலாளித்துவமும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது எனும்
வரையறை பொருத்தக் கூடியதாகயிருப்பினும், அவை விவசாயிகளின் சோவியத்துகளும் உழைக்கும் மக்களின் சோவியத்துகளுமாகவே இருக்கின்றன.பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகவோ, சோசலிஸ்ட் சோவியத்துகளாகவோ இருக்க இயலாது. இந்நாடுகளின் சோவியத்துகளைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறினார்:

“முதலாளித்துவத்துக்கு முந்தியதான உறவுகள் மேலோங்கியிருக்கும் நாடுகளில் ‘உழைக்கும் மக்களின் சோவியத்துகள்’ போன்றவற்றை நிறுவுவது மூலம் சோவியத் அமைப்பு முறையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரயோகிக்க சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுவது பிரத்தியேகமாயும் அவசியம்”. (மேற் கூறப்பட்ட நூல் பக்கம் 17).

சீனப் புரட்சியும் ‘புதிய ஜனநாயகமும்’:

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது என்ற லெனின் வரையறையையும், தேசிய
மற்றும் காலனிப் பிரச்னை  பற்றிய  லெனினின்  தத்துவம்,  கோட்பாடு  மற்றும்  கொள்கையையும் தோழர் மாசேதுங் சீனாவின் குறிப்பான
நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகித்தார். ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்க புரட்சி ஆகியவற்றின் சகாப்தத்தில், அவற்றை காலனிய மற்றும் சார்பு
நாடுகளுக்குப் பிரயோகித்து, இந்நாடுகளின் புரட்சி பற்றிய கோட்பாடாக புதிய ஜனநாயகத்தை முன்வைத்தார்.

காலனிய, அரைகாலனிய மற்றும் சார்பு நாடுகளைப் பொருத்தவரை, ஏகாதிபத்தியமும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில், முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்ற வரையறையின் பொருள் என்னவென்பதை மாவோவின் பின்வரும் கூற்றிலிருந்து அறியலாம்;

“முதல் ஏகாதிபத்திய உலகப்போர் வெடித்த பிறகு, 1917 - ல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் மூலம் உலகப் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியில் சோசலிச அரசு உருவானதற்குப் பிறகு, சீன ஜனநாயகப் புரட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு, சீன பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி பழைய உலகப்பூர்ஷ்வா ஜனநாயக புரட்சியின் பழைய வகையைச் சேர்ந்ததாகவும், அந்தப் பழைய உலக பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவும்  இருந்தது.அதற்குப் பிறகு சீன பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி தனது    குணாம்சத்தை    மாற்றிக்  கொண்டது.   அது   இப்பொழுது புதிய பூர்ஷ்வா ஜனநாயப் புரட்சி வகையைச் சேர்ந்ததாக இருகிறது புரட்சி அணியைப் பொறுத்த வரையில், அது இப்பொழுது உலகப் பாட்டாளி வர்க்கச் சோஷலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.”

அவர் மேலும் கூறுகிறார் :

“இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்திற்கு, அதாவது சர்வதேச பூர்ஷ்வா வர்க்கத்திற்கு, அல்லது சர்வதேச முதலாளித்துவத்திற்கு எதிராக காலனி அரைக்காலனி நாடுகளில் நடத்தப்படும் எந்தப் புரட்சியும் இனிமேல் பழைய உலகப் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் வகையைச் சேர்ந்ததாக இருக்கமுடியாது. அது புதிய வகையைச் சேர்ந்ததாகவே இருக்கும். இனி அது பழைய உலக பூர்ஷ்வா அல்லது உலக முதலாளித்துவப் புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அது புதிய உலக பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச புரட்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது. இம்மாதிரியான புரட்சிகரமான காலனி, அரைக்காலனி நாடுகள் உலக முதலாளித்துவ எதிர்ப் புரட்சி அணியின் நேசசக்தியாக கருதப்படக் கூடாது; ஆனால் அவை உலக சோஷலிசப் புரட்சி அணியின் நேச சக்திகளாகக் கருதப்பட வேண்டும்.காலனிய, அரைக்காலனிய நாட்டு மக்கள் நடத்தும் இந்தப் புரட்சியின் முதல்  கட்டம் தனது சமூகக்குணாம்சத்தின்படி,  அடிப்படையில் இன்னும் பூர்ஷ்வா ஜனநாயகத் தன்மைகளையே கொண்டிருக்கிறது; அப்புரட்சியின் முதல் கட்டத்தின் ஸ்தூலமான திட்ட வட்டமான தேவைகள் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைக்கற்களை அகற்றுவதாகவே உள்ளது; இப்படி இருந்த போதிலும், இத்தகைய புரட்சி, இனி பூர்ஷ்வா வர்க்கத்தால் தலைமை தாங்கப்படுவதும் பூர்ஷ்வாவர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதுமான பழைய வகையைச் சார்ந்த பூர்ஷ்வா புரட்சியாக இருக்கவில்லை. ஆனால் இது பாட்டாளிவர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் புதிய வகைப்பட்ட புரட்சிகர வர்க்கங்கள் அனைத்தின் கூட்டு  சர்வாதிகாரத்தின் கீழ் அரசை அமைப்பதாகும். இவ்வாறாக, இந்தப் புரட்சி சோஷலிச வளர்ச்சிக்கான பாதையை விரிவாக்குவதற்கு உண்மையிலே சேவை செய்கிறது.”  (புதிய ஜனநாயகம் பக்கம் 9, 10)

முதலாளித்துவ நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதி- யாகிவிட்டது என்பதின் பொருளைப் பின்வரும் மாவோவின் வாசகங்களிலிருந்து அறியலாம்:

“ஒரு புறத்தில் ஏற்கனவே பழைமையாகிவிட்டதும் பூர்ஷ்வா சர்வாதிகாரத்தினால் ஆளப்படுவதும் ஆன மேலை நாட்டு வகையைச் சேர்ந்த முதலாளித்துவக் குடியரசில் இருந்து நம் புதிய ஜனநாயகம் வேறுபட்டது மறுபுறத்தில் சோவியத் ரஷ்யாவில் ஏற்கனவே உள்ள பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் அமைந்த சோவியத் வகையான சோஷலிசக் குடியரசில் இருந்தும் சீனப் புதிய ஜனநாயகக் குடியரசு மாறுபட்டது. மேலும் எல்லா முதலாளித்துவ நாடுகளில் அமைய இருப்பதும் தொழிலளவில் மிகவும் முன்னேறியுள்ள நாடுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி அமையப் போவதுமான சோவியத் வகையான சோஷலிசக் குடியரசில் இருந்தும் சீனப் புதிய ஜனநாயக குடியரசு மாறுபட்டது. ஆயினும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான காலகட்டத்தில் காலனி, அரைக்காலனி நாடுகளில் சோவியத் வகையைச்சேர்ந்த குடியரசைக் கொண்டுவரமுடியாது; எனவே இந்நாடுகளில் அரசு வடிவம் (form of state) ஒரு மூன்றாவது வகையைச் சார்ந்ததாகவே இருக்கும். அதுதான் புதிய ஜனநாயகக் குடியரசாகும். இந்த அரசு வடிவம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்திற்கு ஆனது. ஆகவே இது இடைக்காலத் தன்மை  கொண்டது ஆனாலும் இது தவிர்க்க முடியாத, மாற்ற முடியாத இடைக்கால வடிவமாகும்.”
 (புதிய ஜனநாயகம். பக்கம் 21)

மேலே எடுத்தாளப்பட்ட மேற்கோளில்,  “ஆயினும், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பூர்வமான காலகட்டத்தில் காலனி, அரைகாலனி நாடுகளில்
சோவியத் வகையைச் சேர்ந்த குடியரசைக் கொண்டு வர முடியாது” என்ற வாசகத்திலிருந்து லெனின் சொன்ன சோவியத் அமைப்பு முறை
எந்நாடுகளுக்கும் பொருந்தாது என மாவோ கருதுவதாகக் கொள்ளக் கூடாது. மேற்சொன்ன வாசகத்தின் பொருள் சோஷலிஸ்ட் சோவியத்துகள்
(பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம்) இந்நாடுகளுக்குப்  பொருந்தாது என்பதே ஆகும். சீனாவின் சிவப்பு அரசியல் அதிகாரத்தின் ஸ்தாபன வடிவம்
கிட்டதட்ட சோவியத் அரசியல் அதிகாரத்தினுடையதை ஒத்திருந்தது என அவர் கூறியதிலிருந்து அறியலாம்.

(தேர்ந்தெடுக்கப்பட்ட ராணுவப் படைப்புகள் பக்கம் 17.(குறிப்பு எண்.7) )

தொகுத்துக் கூறுவோமானால் காலனி, அரைக்காலனி நாடுகளைப் பொறுத்தவரையில், ஏகாதிபத்தியம் பாட்டாளிவர்க்கப்  புரட்சி  ஆகியவற்றின் 
சகாப்தத்தில், முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்பதின் பொருள்:

1. இந்த சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக காலனி அரைக்காலனி நாடுகளில் நடத்தப்படும் எந்தப் புரட்சியும் புதிய வகை பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சியே ஆகும்.

2. இந்நாடுகளின் மக்கள் நடத்தும் இந்தப்புரட்சியின் முதற்கட்டம், அதனுடைய சமூகக் குணாம்சத்தின்படி அடிப்படையில் இன்னும் பூர்ஷ்வா ஜனநாயகத்
தன்மைகளையே கொண்டிருப்பினும் இத்தகைய புரட்சி இனி பூர்ஷ்வா வர்க்கத்தால் தலைமைதாங்கப் படுகின்ற ஒன்றாகவோ, பூர்ஷ்வா வர்க்கச்
சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ சமூகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட ஒன்றாகவோ பழைய வகையைச் சார்ந்த பூர்ஷ்வா புரட்சியாகவோ
இல்லை.

3. அவை பாட்டாளிவர்க்கத்தால் தலைமை தாங்கப் படுவதாகவும் புதிய வகைப்பட்ட பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியாகவும் புரட்சிகரவர்க்கங்கள்
அனைத்தின் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழ் அரசை அமைப்பதாகவும், சோசலிச வளர்ச்சிக்கான பாதையை விரிவாக்குவதற்கு உண்மையிலே சேவை
செய்வதாகவும் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தினால் ஆளப்படும் முதலாளித்துவக் குடியரசை அமைப்பதற்கு மாறாக ஒரு புதிய ஜனநாயக குடியரசை அமைப்பதாகவும் அமையும். இந்த அரசுவடிவம் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திற்கானதாகையால் அது இடைக்கால வடிவமாகும்.
எனவே முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது, அதாவது முதலாளித்துவ
நாடாளுமன்ற முறையின் சாகப்தம் முடிவடைந்துவிட்டது. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் துவங்கிவிட்டது என்ற வரையறையும், சோவியத் அமைப்பு
முறையின் அடிப்படைக் கோட்பாடும் ஒன்றாகவே இருப்பினும் பாட்டாளி வர்க்கக் கட்சியால் அதன் பிரயோகம் வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்ப
மாறுபட்ட வழிகளில் வெளிப்படுகிறது.

முதலாளித்துவமும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையும் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்ற வரையறையும் சோவியத் அமைப்பு
முறையின் அடிப்படைக் கோட்பாடும், ஏகாதிபத்தியம், பாட்டாளிவர்க்கக் புரட்சி ஆகியவற்றின் சகாப்தத்தில் இருவகைப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தக்
கூடிய ஒன்றாக இருப்பதால் முதலாளித்துவத்துக்கு முந்திய உறவுகள் மேலோங்கி நிலவும் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளுக்கும்
பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரமும், சோசலிஸ்ட் சோவியத்துக்களும்தான் பாட்டாளிவர்க்க கட்சியின் உடனடி குறிக்கோளாக வரையறை செய்யவேண்டும் என்று யாராவது சொன்னால் அது எவ்வாறு பொருந்தும்? அவ்வாறு  சொல்வது ஒரு கோட்பாட்டை காலம், இடம், இயல்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பிரயோகிக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பாகுமே தவிர வேறு ஒன்றுமல்ல.

முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தத்தின் முடிவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் துவக்கமும்:

அரசு பற்றிய லெனின் போதனை:

ஜனநாயகக் குடியரசு என்று சொல்லப்படும் ஒரு அரசும் கூட, ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமே
தவிர வேறு எதுவும் இல்லை. ஆக ஜனநாயகமான ஒரு முதலாளித்துவக் குடியரசு முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும், விரல் விட்டு
எண்ணக்கூடிய ஒரு சில முதலாளிகள் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரமாகவே உள்ளது. ஆக சுதந்திரமான ஒரு குடியரசிலும்கூட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கின்றது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் ராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம். இது அரசு பற்றிய ஜனநாயக குடியரசு பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனை ஆகும்.

தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே “பொதுவான
ஜனநாயகம்” என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ள படியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள் என்ற முறையில் அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார்.

முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு
ஒருமுறை சொத்துடமை வர்க்கங்களின் எந்த பிரதிநிதி நாடாளுமன்றத்தில் “மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவர் மற்றும் அடக்குவார்” என்பதை
முடிவு செய்யும் உரிமைகளை அனுபவிக்கின்றன என்ற மார்க்சியப் போதனையை லெனின் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.

பாரீஸ் கம்யூன் அனுபவம்:

பாரீஸ் கம்யூன் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறை மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரலாற்று வழியிலான மரபுவழிபட்ட
தன்மையையும், வரம்புக்குட்பட்டதான மதிப்பையும் மிகத்தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகள் மத்திய
காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் முன்னேற்றமானவையாக இருப்பினும், பாட்டாளிவர்க்கப் புரட்சி சகாப்தத்தில் இவற்றை அடிப்படையாக
(முற்றாக) மாற்றுவதென்பது தவிர்க்க முடியாத தேவையாகும் என்ற வரலாற்றுப் படிப்பினையை தொகுத்துக் கூறி முதலாளித்துவ நாடாளுமன்ற
ஜனநாயகம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்.

கம்யூனானது முதலாளித்துவ அரசு இயந்திரத்தையும் அதிகார வர்க்கம் நீதித்துறை இராணுவம் மற்றும் போலீஸ் இயந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் வரைக்கும் சென்று அவற்றை நசுக்கவும் முயன்றது. சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு இடையே பிரிவினை இல்லாத தொழிலாளர் திரளின் ஒரு சுயாட்சி நிர்வாக நிறுவனம் மூலம் மாற்றீடு செய்ய முயன்றது இம்முயற்சிகளில்தான் உண்மையிலே கம்யூனின் முக்கியத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்சீய போதனையை எல்லா வகையான சந்தர்ப்பவாதிகளின் தாக்குதலில் இருந்தும் பாதுகாத்தார்.

பாரீஸ் கம்யூனின் அனுபவத்திற்கு பிறகு மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது, அதை தகர்த்தெறிய வேண்டும் என்று எடுத்துரைத்த புரட்சியைப்பற்றிய அடிப்படையான விதியை  லெனின் உறுதியாக ஆதரித்ததுடன் அதை மேலும் செழுமைப்படுத்தினார்.

புரட்சியின் உயிர்நாடி:

மார்க்சீய-லெனினிய போதனையின்படி ஒவ்வொரு புரட்சியிலும் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினைதான் பாட்டாளி வர்க்கப்புரட்சியில் உயிர் நாடியான பிரச்சினை பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரதைக் கைப்பற்றும் பொருட்டு, முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களைப் பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக் கட்டி, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதும் ஆகும்.

திருத்தல்வாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டம்:

பலாத்காரப் புரட்சியையும், பழைய அரசு இயந்திரத்தை உடைத்தெறியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் பெர்ன்ஸ்டைன் எதிர்த்தார்.
முதலாளித்துவம் சமாதான முறையில் “சோசலிசமாக வளர்ச்சியடையும்” என்று அவர் வாதிட்டார். நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல்
அமைப்பு அழிக்கப்படக் கூடாது என்றும் அதற்கு மாறாக, அது மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்ன்ஸ்டைன் கூறினார்.

திருத்தல்வாதத்தின் தலைமகன் பெர்ன்ஸ்டைனை லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்:

“மார்க்சியத்தின் நேரடியான புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டுமே மார்க்சியமாக பெர்ன்ஸ்டைன் வாதிகள்  
ஏற்றுக்கொண்டனர் இப்பொழுதும் ஏற்கின்றனர். பாராளுமன்றப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் ஆயுதங்களில்
ஒன்று என்று அவர்கள் கருதவில்லை மாறாக “பலாத்காரம்”, “கைப்பற்றுதல்”, “சர்வாதிகாரம்” போன்றவற்றை தேவையற்றதாகச் செய்து
விடுகிற முக்கியமான ஒரே போராட்ட வடிவமாக பார்க்கின்றனர்.”

(லெனின் - இராணுவப் படைகளின் வெற்றியும், தொழிலாளர் கட்சியின் பணிகளும்)

முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பில் “வர்க்க முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொள்ள இனியும்
இடமில்லை” என்றும் “பலாத்காரத்தின் மூலம் அரசைத் தூக்கியெறிய வேண்டும் எனப் பிரசாரம் செய்வது கேலிக்குரியது” என்றும் ஓடுகாலி
காவுத்ஸ்கி கூறினார்.  “இதுவரை இருந்தது போலவே இப்போதும் நமது அரசியல் போராட்டத்தின் நோக்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை
பெற்று, நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனாக மாற்றி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்து வருகிறது” என்று ஓடுகாலி
காவுத்ஸ்கி வாதிட்டார் அவரை  லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்.
“கயவர்களும் முட்டாள்களும்தான் முதலாளித்துவ நுகத்தடியின் கீழ், கூலி அடிமை என்ற நுகத்தடியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் பாட்டாளி
வர்க்கம் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று நினைக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று அல்லது முட்டாள்தனமாகும். இது
வர்க்கப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பதில் பழைய அமைப்பின் கீழ் பழைய அதிகாரத்துக்கு ஓட்டுப் போட்டுக்  கொண்டிருக்க வேண்டும் என்று
போதிக்கிறது.”
(லெனின் - ‘இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்’)

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனைத்தையும் தழுவிய விதிகளில் ஒன்றான பலாத்காரப்புரட்சி என்ற விதியையும், பழைய அரசு நிறுவனங்களை
ஒழித்துக் கட்டுவதின் அவசியத்தையும் ஆளும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளிவர்க்கத்தின்
தலைமையின் கீழ் ஆளப்படும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும் முதலாளித்துவச் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு
அதனிடத்தில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும், பண்டைய திருத்தல் வாதிகளிலிருந்து நவீன திருத்தல் வாதிகள் வரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சமாதான மாற்றத்திற்கு வாய்ப்புண்டு என்று வாதிடுகின்றனர். கத்தியின்றி, இரத்தமின்றி “சுதந்திரம்” பெற்று விட்டதாக கூறிக்கொள்ளும் இந்நாட்டில் இந்த வாதம் விலை போவதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன. சமாதான மாற்று பாதைக்காக வாதிட்ட பழைய திருத்தல் வாதிகள் தங்களது வாதத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, 1870- களில் அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் “தொழிலாளர்கள் தங்கள் இலட்சியத்தை சமாதான முறையில் அடைய முடியும்” என்று மார்க்ஸ் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.ஓடுகாலி காவுத்ஸ்கியைப் பற்றி விமர்சனம் செய்த போது லெனின் இந்த வாதத்தை மறுத்தலித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:

“சாத்தியப்பாட்டை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டார் என்ற வாதம் குதர்க்கவாதிகளின் வாதம். மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு செப்பிடுவித்தைகாட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும்.

முதலாவதாக, இந்த சாத்தியப்பாட்டை ஒரு விதிவிலக்கு என்ற அளவில்தான் அவர் ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவதாக, அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம், அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை.

மூன்றாவதாக, அப்போது இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றுள்ளது போல முதலாளித்துவ அரசு இயந்திரத்தில் முழுமையான
கருவியாக பணிபுரியக் கூடிய இராணுவம் இருக்கவில்லை. ”

(லெனின், “ பாட்டாளிவர்க்க புரட்சியும் ஒடுகாலி காவுட்ஸ்கியும்”)

குருச்சேவின் நவீன திருத்தல்வாதம்:

இவ்வாறு சமாதான மாற்றத்திற்கான சாத்தியப்பாடு உண்டென்ற வாதத்தை  லெனின் மறுதலித்த பிறகும் கூட, “சமாதான மாற்றம்”  அல்லது
“நாடாளுமன்ற பாதையின் மூலம் சோஷலிசத்திற்கு மாற்றம்” என்ற வழியை நவீன திருத்தல்வாதி குருசேவ் முன் வைத்தார். முதலாளித்துவச்
சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு பாட்டாளி வர்க்கம் நாடாளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை
பெறமுடியும் என்றும்; அவ்வாறு பெரும்பான்மை பெறமுடிந்தால் அதுவே, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை 
நொறுக்கி எறிந்ததும் ஆகும் என்றும்; பெரும்பான்மையைக் கைப்பற்றி அதனை ஒருமக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றிவிடுவது என்பதின் பொருள் முதலாளித்துவ வர்க்கத்தின் இராணுவ அதிகார வர்க்க இயந்திரத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளி
வர்க்க மக்கள் அரசை நிறுவியதாகும் என்றார் குருசேவ். குருசேவ் கூறுவது அனைத்தும் கோமாளித்தனமே அன்றி வேறு ஒன்றும் அல்ல.

நாடாளுமன்றத்தின் அதிகார எல்லை:

நாடாளுமன்ற முறை அரசாங்கம் உள்ள முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற அமைப்புகள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறதே ஒழிய, அதிகார வர்க்கமும், இராணுவமும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை, அவை நிலையானவை. இந்த அரசு பொறியமைவு முதலாளி வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்ற அமைப்புகளுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் உண்டே ஒழிய அதற்கு செயலாற்றும் அதிகாரம் இல்லை. அரசாங்கத்தின் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்றம் என்ற திரைக்குப் பின்னால் தேர்ந்தெடுக்கப்படாத அந்த நிலையான அமைப்பினால் (பொறியமைவினால்) செய்யப்படுகிறது. புதிதாக ஒரு நாடாளுமன்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அமைப்பும் கூட அந்த தேர்ந்தெடுக்கபடாத இராணுவ, அதிகார வர்க்க அமைப்பால்தான் பெரும்பாலும் கூட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப் படாத நிலையான அமைப்புகளான அதிகார வர்க்கமும், போலீசும், இரணுவம் ஆகியவைதான் நாடாளுமன்ற அமைப்புகளுக்கான தேர்தலையே நடத்துகிறது.

நாடாளுமன்ற மாயைக்கு எதிரான மாவோவின் போராட்டம்:

முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த அமைப்புகளால் நடத்தப்படும் தேர்தல்களில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி
பெரும்பான்மை பெறுவதோ, அவ்வாறு அது பெற்றாலும் அந்த வர்க்கத்திற்கு எதிராக பாராளுமன்றங்கள் செயல்பட அனுமதிக்கும் என்பதோ,
அமைதியாக அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிடும் என்பதோ நடவாத காரியம். இவ்வாறு கூறுவது பாட்டாளி வர்க்கத்தையும் பிற
உழைக்கும் மக்களையும் நாடாளுமன்ற மாயையில் மூழ்கடிக்கச் செய்வதற்கான ஒரு மோசடியே தவிர வேறொன்றுமல்ல. இருப்பினும் குருசேவின் நவீன திரிபுவாதத்தால் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் பீடிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 1957ஆம் ஆண்டு பிரகடனமும்,1960 அறிக்கையும் குருசேவின் திரிபுவாதத்தைக் கொண்டிருந்தன. மேற்கூறப்பட்ட இரண்டு ஆவணங்களில் அடங்கியுள்ள குருசேவின் திரிபுவாதத்தை மாவோவின் தலைமையில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு சுட்டிக் காட்டிற்று:

1.“ஆளும் வர்க்கம் தானாகவே அதிகாரத்தைத் துறக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் இந்த இரண்டு ஆவணங்களும் உள்நாட்டுப் போரின்றி பல முதலாளித்துவ நாடுகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று கூறுகிறது.

2.பாராளுமன்றமல்லாத பாதையின் மூலம் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்று கூறும் அதே சமயம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்குச் சேவை செய்யும் கருவியாக அதை மாற்ற முடியும் என்று சொல்லப்படுகிறது.

3.சமாதானமற்ற மாற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும் அதே வேளையில், பலாத்காரப் புரட்சியின் உலகு தழுவிய விதியை அது வலியுறுத்த தவறி விட்டது.”

இந்திய திருத்தல்வாதிகளின் ஏமாற்று வித்தை:

ஏற்கனவே நாடாளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத் தலைமைக்கு இது ஓர்
ஆயுதமாகப் பயன்பட்டது. இன்று வலது, இடது திரிபுவாதிகள் நாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றி இந்தியாவின் ஜனநாயகப் புரட்சிக்கு பெரும்
துரோகமிழைக்கின்றனர். நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளில் சட்ட மன்றங்களில் பெரும்பான்மை பெறுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு
சேவை செய்ய முடியும் என்று கூறி மக்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களாக செயல்பட்டு வருகின்றனர், பலாத்காரப் புரட்சி என்பது பாட்டாளி
வர்க்கப் புரட்சியின் விதிகளில் ஒன்றாகும்; மார்க்சிய லெனினிய அடிப்படைகளில் ஒன்றாகும் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் இவ்விதியைப் பற்றி மாவோ பின் வருமாறு கூறுகிறார்:

“ஆயுத சக்தியால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், யுத்தத்தால் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்பது புரட்சியின் கேந்திரக் கடமையும், அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும், புரட்சி பற்றிய இந்த மார்க்சிய - லெனினியக் கோட்பாடு சர்வவியாபகமாகப் பொருந்தியது, சீனாவுக்கு மாத்திரமல்ல, இதர நாடுகளுக்கும் பூரணமாகப் பொருந்தியது. “
(மாவோ- போர்த்தந்திரம் குறித்த பிரச்சினைகள்)

கோட்பாடு ஒன்றாக இருந்தாலும் பாட்டாளி வர்க்கக் கட்சியால் அதன் பிரயோகம் வேறுபட்ட நிலைமைக்கேற்ப வேறுபட்ட வழிகளில் வெளிப்படுகிறது.

முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா? என்ற பிரச்சனையும் செயல்தந்திரங்களும்:

லெனினும் பாட்டாளிவர்க்க கட்சியின் செயல்தந்திரங்களும்:
முதலாளித்துவ நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகி இருப்பினும் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் தங்களது செயல் தந்திரங்களை அதன் அடிப்படையில் வகுத்துக் கொள்ளக்கூடாது என்றார் லெனின். ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறை அரசியல் வழியில்
காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைப் பொறுத்தே அவை தமது செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்.
நாடாளுமன்ற முறை (நடைமுறையில்) அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா இலலையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஓர் அடிப்படையையும், அது அரசியல் வழியில் காலாவதியாகாத பட்சத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி அதில் பங்கு கொள்வதின் நோக்கத்தையும், அவ்வாறு அதில் பங்குக் கொள்ளும் போது ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி செய்ய வேண்டிய பணிகளையும், அதில் பங்கு கொள்வதற்கு ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கடைபிடிக்க வேண்டிய முறையையும் சில குறிப்பிட்ட நிலைமைகளில் நாடாளுமன்ற முறையையும் தேர்தல்களையும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி புறக்கணிக்க வேண்டிய பட்சத்தில் அவ்வாறு புறக்கணிப்பைத் தீர்மானிப்பதற்கான அணுகுமுறையையும்  லெனின் வகுத்தளித்தார்.

ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக்கட்சி பங்கு கொள்ளும் பிரச்சினை எழுமானால், அவ்வாறு பங்கு கொள்வதற்கு அது வகுத்துக் கொள்ள வேண்டிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தீர்மானிப்பதற்கான அணுகுமுறையையும் லெனின் வகுத்தளித்தார்.

சுருங்கக் கூறின், முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பற்றி ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி தனது செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையை அவர் வகுத்தளித்தார்.
எனினும், இவை அனைத்தையும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நிலவிய புறவயமான அம்சத்தைப் பற்றிய ஆய்விலிருந்தும், அந்நாடுகளின்
தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து பெற்ற நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும் அவர் வகுத்தளித்தார்.“இடதுசாரி கம்யூனிஸம் சிறுபிள்ளைத்தனமான கோளாறு”, “ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் வேறுபாடுகள்”, “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்,” என்ற அவருடைய நூல்களிலிருந்தும் மற்றும் பிற அவருடைய எழுத்துக்களிலிருந்தும் இதை நாம் அறியலாம். தவிர,” இடதுசாரி கம்யூனிஸம் - சிறுபிள்ளைத்தனமான கோளாறு” என்ற நூலை அவர் எழுதிய காலத்தில் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளில் கம்யூனிஸ்ட் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இல்லை. அதற்குப் பிறகே அவைக் கட்டப்பட்டன. ஆகையால் அவர் இந்நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கக் கட்சிகளைக் கட்டியமைப்பதற்கான தத்துவம் மற்றும் அடிப்படையான கோட்பாடுகளை வகுத்தளிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அவர் வரைந்த “தேசிய மற்றும் காலனிப் பிரச்சினைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி  உரைகள்” என்ற ஆவணத்தில்“இந்த நாடுகளில் பெயரில்
மட்டுமின்றி மெய்யாகவே கம்யூனிஸ்டாக இருக்கப்போகும் வருங்காலப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் சக்திகள் ஒன்று திரட்டப்படும், தமது சொந்த
தேசங்களில் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை எதிர்த்த போராட்டத்தின் தங்கள் விசேஷப் பணிகளைப் புரிந்துக் கொள்வதற்குரிய பயிற்சி தரப்படும் எனும் நிபந்தனையின் மீது மட்டுமே காலனி மற்றும் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்கு
கம்யூனிஸ்ட்டு அகிலம் ஆதரவு அளிக்க வேண்டும்”  என்று சொல்லப்பட்டதிலிருந்தே நாம் மேற்கூறியதை உணரலாம்.

எனவே, ஐரோப்பிய தொழிலாளர் இயக்கமும் பாட்டாளிவர்க்கக் கட்சிகளும் கடை பிடித்த செயல் தந்திர அணுகுமுறையும் கோட்பாடுகளும் பொதுவாகவும் முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதைப் பற்றி குறிப்பாகவும் பிரயோகிக்கும் பிரச்சினை எழும்போது, அவை முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகள் மேலோங்கி நிலவும் காலனிய, அரைக்காலனிய மற்றும் சார்பு நாடுகளின் புறவயமான அம்சத்தின் வளர்ச்சிப்போக்குக்கும், புறவயமான நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொருந்தும் வண்ணம் பிரயோகிக்கத் தகுந்தனவாகவே இருக்கின்றன.

ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றமுறைபற்றி செயல்தந்திரத்தை வகுத்துக் கொள்வது கோட்பாடு ரீதியில் அமையும்
பொருட்டு, ஒரு நாட்டில் நிலவும் முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதா? அது அரசியல் வழியில்
காலாவதியாக வில்லை என்றால் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அவ்வமைப்புகளில் பங்கு கொள்வதன் நோக்கம்; அவ்வமைப்புகளில் அது
செய்யவேண்டிய பணி; பங்கு கொள்வதில் அது கடைபிடிக்க வேண்டிய முறை; மற்றும் நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளையும்
தேர்தல்களையும் புறக்கணிப்பதைத் தீர்மானிப்பதற்கான அணுகு முறை ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண்கிறார். நாடாளுமன்ற முறை அரசியல்
வழியில் காலாவதியாகி விட்டதா? என்ற வினாவை எழுப்பி “துருவி பரிசீலிக்கும் பகுத்தாய்வினால் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று இது” என
விடையளிக்கிறார்.

நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகவில்லை என்பதைப் பற்றித் தீர்மானிப்பதற்கு அவர் கூறும் காரணங்கள்:

* “.....பாட்டாளி வர்க்கத்தினரில் இலட்சக் கணக்கானோரும்”, “எண்ணற்றோரும்” இன்னமும் பொதுவாக நாடாளுமன்ற முறையை ஆதரிப்பதோடன்றி, அப்பட்டமான “எதிர்புரட்சி தன்மை வாய்ந்தோராகவும்” இருக்கையில், “நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதென்று”  கூறுவது எப்படி!? ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதி ஆகிவிடவில்லை என்பது தெளிவு...”
(“இடதுசாரி கமுயூனிஸம் - இளம்பருவக் கோளாறு”  லெனின் நூல்திரட்டு  தொகுதி 4 பக்கம்-73)

* “ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியானதுதான்”  ஆனால்- இதுவே இங்குள்ள முக்கிய விசயம் - நமக்கு காலாவதியாகி விட்டதால் அதுவர்க்கத்துக்கும், வெகு ஜனங்களுக்கும் காலாவதியாகி விட்டதாகும் எனக்கருதக் கூடாது... ஆனால் அதேபோதில் (வர்க்கத்தின் கம்யூனிஸ்டு முன்னணிப்படை மட்டுமின்றி) வர்க்கம் அனைத்தின் (உழைப்பாளி மக்களின் முன்னேறிய பகுதியோர் மட்டுமின்றி) உழைப்பாளி மக்கள் அனைவரின் வர்க்க உணர்வு, தயார் நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை நீங்கள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும்.

* ஆலைத் தொழிலாளர்களில் “லட்சக்கணக்கானோரும்”  “எண்ணற்றோரும்” வேண்டாம். ஒரளவு பெரிதான சிறுபான்மையினர் மட்டும்தான் கத்தோலிக்கப் பாதிரிமார்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றாலும்கூட கிராமாந்திரத் தொழிலாளர்களிலும் இதுபோன்ற சிறுபான்மையினர் மட்டும்தான் நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளையும் பின்பற்றுகிறார்கள் என்றாலும்கூட -   ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் காலாவதியாகிவிட வில்லை...” (மேற் கூறப்பட்ட நூல் பக்கம்-74)
*  “....இங்கு எழும் கேள்வி முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் அதிககாலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல; பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவுக்கு (சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறையிலும்) தயாராய் இருக்கின்றார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி...” (மேற்கூறப்பட்ட நூல், பக்கம்-76)
 * “...முதலாளித்துவ நாடாளுளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்....” (மேற்கூறப்பட்ட நூல், பக்கம்-75)

மேலே எடுத்துக்காட்டப்பட்ட  மேற்கோள்களிலிருந்து ஒரு நாட்டில் உள்ள நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா என்பதை
எவ்வாறு மதிப்பீடு செய்வது? என்பதை பற்றியும், அது அரசியல் வழியில் காலாவதியாகிவிடவில்லை என்பது பற்றியும் பின்வருமாறு தொகுத்து
கூறலாம்.

1.ஒரு நாட்டில் உள்ள நாடாளுமன்றமுறை நீண்ட நாட்களாக இருக்கிறது என்பதாலோ, கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளி வர்க்கத்தினுடைய, உழைக்கும் மக்களுடைய முன்னணிப் பகுதியினரும் நாடாளுமன்றம் காலாவதியாகி விட்டது என்பதை உணர்ந்து விட்டதாலோ, ஒரு நாட்டிலுள்ள நாடாளுமன்றம் வர்க்கத்துக்கும் வெகுஜன மக்களுக்கும்கூட அரசியல் வழியில் (நடைமுறையில்) காலாவதியாகிவிட்டது என்று மதிப்பீடு செய்யக்கூடாது.
வர்க்கம் அனைத்தினதும் உழைக்கும் மக்கள் அனைவரினதும் வர்க்க உணர்வு, தயார் நிலை ஆகியவை பற்றிய எதார்த்த நிலவரத்தை ஒரு நிதானமான மதிபபீடு செய்யப்படுவதின் அடிப்படையில்தான் ஒரு நாட்டிலுள்ள முதலாளித்துவ நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி- விட்டதா இல்லையா என்பது பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.

2.(அ) தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் மக்களில் ஒரளவு பெரிதான சிறுபான்மையினர் நாடாளுமன்ற முறையை ஆதரித்தாலும், ஆளும்
வர்க்கத்தினரையும் மதகுருமார்களையும் (ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்) அவர்கள் பின்பற்றினாலும்
நாடாளுமன்ற முறை இன்னும் அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை என்பதேயாகும்.

(ஆ) பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்புகளை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ - ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும்
தயாராகாதவரையிலும்; முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் இதர பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் பாட்டாளிவர்க்க
இயக்கத்திடம் இல்லாத வரையிலும் நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகி விடவில்லை என்பதேயாகும்.

முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பாட்டாளிவர்க்கக் கட்சியின் பணி:

ஒரு நாட்டிலுள்ள நாடாளுமன்றம் அரசியல் வழியில் காலாவதியாகாத வரையில் பாட்டாளிவர்க்கக் கட்சி அதில் பங்கு கொண்டே ஆகவேண்டும்
என்றும் லெனின் கூறுகிறார்.

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கு கொள்வதின் நோக்கத்தையும், அதில் ஆற்ற வேண்டிய பணியையும் பற்றி
லெனின் கூறுவது என்ன?

நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதியாகாதவரை “புரட்சிகரப் பாட்டாளிவர்க்கக் கட்சி அதன் சொந்த வர்க்கத்தின் பிற்பட்ட
பகுதியோரைப் போதனை பெறச் செய்யும் பொருட்டும், அடக்கி ஒடுக்கப்படும், வளர்ச்சியில்லாத, அறியாமையில் ஆழ்ந்த கிராமாந்திர வெகுஜனங்களைப்
போதனை பெறச் செய்து அறிவொளி தரும் பொருட்டும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்ற அரங்கில் நடைபெறும் போராட்டத்திலும்
பங்கெடுத்துக்கொள்வது இக்கட்சியின் கடமையாகும் என்பதையே, இது சந்தேகத்துக்கு இடமின்றி குறிப்பிடுகிறது. முதலாளித்துவ
நாடாளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற்றில் நீங்கள்வேலை செய்தே ஆகவேண்டும்: ஏனெனில் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும் கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டு வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் காண்பீர்கள்” என லெனின் கூறினார். (மேற்கண்ட நூல் பக்கம் 74,75)

ஒரு நாட்டிலுள்ள முதலாளித்துவ நாடாளுமன்றம் அரசியல் வழியில் காலாவதியாகாமல் இருக்கும் பட்சத்தில் அவ்வமைப்புகளில் ஒரு பாட்டாளி
வர்க்கக் கட்சி பங்கு கொள்வதின் நோக்கம், பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பொருட்டும்,
முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம் கலைக்கப் படுவதை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பொருட்டும் அவர்களை சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார் செய்வதே ஆகும். இதை பின்வரும் லெனின் கூற்றிலிருந்து அறியலாம்.

“...சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சிலவாரங்களே முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங் கூட, முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம்
ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்திற்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட
வேண்டியது எப்படி அவசியமென்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும்.
இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல்
வழியில் காலாவதியாக்குவதற்குத் துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.” (மேற்படி நூல் பக்கம்-77)

மேற் கூறப்பட்ட மேற்கோள் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்குகொள்வதின் நோக்கத்தையும், அதில் பங்கு கொள்ள
வேண்டிய அவசியத்தையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது எதிர்ப்புரட்சி நாடாளுமன்றத்தின் உள்ளே சோவியத் எதிர்த்தரப்பு ஒன்று இருப்பது
நாடாளுமன்றத்தின் கலைப்புக்கு இடையூறாக இலலையென்றும் அதற்கு அணுசரணையாகவே இருந்தது என்றும் அவர் கூறுகிறார்...

“புரட்சியின் போது பிற்போக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறும் வெகுஜன நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தினுள் செயல்படும் புரட்சி
அனுதாபங்கொண்ட (நேரடியாக புரட்சியை ஆதரிப்பதாய் இருப்பின் இன்னும் நல்லதே) ஓர் எதிர்த் தரப்புடன் இணைக்கப் படுவதானது பெரும் பயன்
தரத்தக்கதென்பதே இப்புரட்சிகளின் அனுபவமாகும்” என்றும் அவர் கூறுகிறார். (மேற்படி நூல் பக்கம் -80)

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளு மன்றத்தில் செய்வது எதுவாயினும் -  நாடாளுமன்றத்தை   ஒரு பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துதல்; 

நாடாளுமன்ற வடிவிலான போராட்டத்தையும் நாடாளுமன்றத்திற்கு புறம்பானவற்றையும் இணைத்தல்;

ஊழல் மலிந்த இந்த முதலாளித்துவ நிறுவனங்கள் உழைக்கும் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வஞ்சகமான நடவடிக்கைகளையும், அரசியல்,
பொருளாதார, நிதி, அயல்நாட்டு உறவு, இராணுவத் துறை மற்றும் பிறவாழ்வு துறையிலும் நாடாளுமன்றத்தின் பேரால் அரசும், அரசாங்கமும்
ஆளும்வர்க்கங்களுக்குச் செய்யும் சேவையும் இன்னும் பிறவற்றையும் நாடாளுமன்ற மேடையிலிருந்தே அம்பலப்படுத்துதல்;

உழைக்கும் மக்களையும் நாட்டையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளின் மீது பல்வேறு சமுதாய வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்
கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றியும் நாடாளுமன்ற மேடையிலிருந்து உழைக்கும்
மக்களுக்கு எடுத்து உணர்த்துதல்; இன்னும் பிறவும்-

இவற்றில் எது ஒன்றாயினும் பரந்துபட்ட மக்கள் சோவியத் அமைப்பை ஏற்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அவர்களை சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயாரிக்கும் நோக்கத்திற்காக் செய்யப்பட வேண்டும் என்பதே ஆகும். முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் ஒரு பாட்டாளிவர்க்க கட்சி பங்கு கொள்ளும்போது, அது அவ்வமைப்பிலிருந்து செய்ய வேண்டிய பணி எது என்று அவர் சொன்னாரோ அப்பணியை அங்கிருந்து செய்வதின் நோக்கம் இதுவே ஆகும்.

ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்துவ நாடாளு மன்றத்தில் பங்கு கொள்ளும் முறையைப் பற்றி  லெனின் கூறும்போது, திட நம்பிக்கையும்
பற்றுறுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளால் ஆனதும், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கண்டிப்பான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதுமான ஒருதனி
நாடாளுமன்ற குழுவினை நிறுவி, அதன் மூலம் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினாரே தவிர, பாட்டாளிவர்க்கக் கட்சியை ஒரு
நாடாளுமன்ற நடைமுறைக்கே உகந்த ஒரு கட்சியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறவில்லை. (அழுத்தம் ப-ர்)

முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதின் அவசியத்தை உணர்த்தும்போது கூட அவர் எல்லாக் காலங்களிலும் பங்கு கொண்டே 
தீரவேண்டு மென்றோ புறக்கணிப்பதே கூடாது என்றோ அவர் சொல்லவில்லை. தவிர இடதுசாரி கம்யூனிசம் சிறுபிள்ளைத்தனமான கோளாறு என்ற நூலில் இடது போக்கின் புறக்கணிப்பு வாதத்தை விமர்சனம் செய்வதற்கு அழுத்தம் தரப்படும் முறையில் அவர் எழுதியிருந்தாலும் பங்குகொள்வதின் அவசியத்தை வலியுறுத்தும் போது அவர் பின்வருமாறு கூறினார்:

“....காலத்துக்கு ஒவ்வாத கருத்தை யாராவது உரைத்தால், அல்லது முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்குகொள்வதை எல்லா நிலைமைகளிலும் நிராகரிக்கலாகாது என்று பொதுவாகவே யாராவது கருதினால், அது தவறே ஆகுமென்பதில் சந்தேகமில்லை. பகிஷ்காரம் பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க இங்கு நான் முயற்சிப்பதற்கில்லை. ஏனெனில், இந்த கட்டுரையின் நோக்கம் அவ்வளவு விரிவானதல்ல; அதாவது, சர்வதேசக் கம்யூனிஸ்டுச் செயல்தந்திரம் சம்பந்தமான இந்நாளையப் பிரச்சினைகள் சிலவற்றில் ருஷ்ய அனுபவத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்”. (மேற்படி நூல், பக்கம் - 81)

லெனினும் தேர்தல் புறக்கணிப்புச் செயல்தந்திரங்களும்:

இடதுசாரி கம்யூனிசம்-சிறு பிள்ளைத் தனமான கோளாறு என்ற நூலில் புறக்கணிப்பு பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க அவர்
முயற்சிக்கவில்லை என்றாலும்கூட, புறக்கணிப்பு செயல்தந்திரத்தை உருவாக்குவதற்கான ஒரு அணுகு முறையை அளித்திருக்கிறார். அவர்
அளித்துள்ள அணுகு முறையைப் பரிசீலித்து அதைப்பற்றி ஒரு கருத்தாக்கத்தைப் பெறுவது அவசியம்.

புறக்கணிப்புச் செயல்தந்திரமா அல்லது பங்குபெறும் செயல் தந்திரமா என்பதைத் தன்னிச்சையாகவும் நமது “மன விருப்பங்களிலிருந்தும்” அல்லாமல் மார்க்சிய வழியில் உருவாக்கும்பொருட்டு பரிசீலிக்க வேண்டிய முதன்மையான அடிப்படையான புறநிலை விவரங்கள் பின்வருமாறு:

வர்க்கங்களுக்கு இடையில் உள்ள யதார்த்த உறவு, நிலவுகின்ற பிரதிநிதித்துவ நிறுவனங்களின் உள்ளும், புறமும் வர்க்கங்களின்  (பொருளாதார,
அரசியல் ) பாத்திரம், புரட்சியின் எழுச்சி அல்லது வீழ்ச்சி, நாடாளுமன்ற போராட்ட வழி முறைக்கும் நாடாளுமன்றத்திற்குப் புறம்பான போராட்ட
வழிமுறைக்குமுள்ள உறவு-என லெனின் கூறினார்.
(லெனின் தொகுப்பு நூல், பக்கம் 52-58)

புறக்கணிப்புப் பிரச்சினையை மார்க்சிய வழியிலிருந்து எவ்வாறு அணுக வேண்டும் என்பதை ரசிய அனுபவத்திலிருந்து சில உதாரணங்களை எடுத்துக்
காட்டினார்.

புல்கின் டூமாவை போல்சுவிக்குகள் புறக்கணித்தது ஒரு சரியான செயல்தந்திரம் என்பதற்குப் பின்வரும் விளக்கத்தை அளித்தார்.
“இந்த புல்கின் டூமாவைப் புறக்கணித்த செயல் தந்திரம் சரியானது என நிரூபிக்கப்பட்டுவிட்டது; ஏனெனில், வளர்ந்து வந்த சமூக சக்திகளின் யதார்த்த அணி சேர்க்கைக்கு ஏற்பனவாக அப்புறக்கணிப்பு இருந்தது, ஜார் ஆட்சி புல்கின் டூமா என்ற திரை மறைவிலே ஜோடனை செய்யப்பட்ட ஒரு சமரச நிறுவனத்தை அமைத்தது. அந்த நிறுவனம் நாடாளுமன்றச் செயல்பாட்டில் இறங்குவதற்கு மனப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை. மக்களைப் புரட்சியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய புல்கின் டூமாவைப் பழைய ஆட்சி அமைக்க முயன்றது.

பழைய ஆட்சியைத் தூக்கி எறியும்படி ஒரு முழக்கத்தை அப்புறக்கணிப்பு முதிர்ந்து வந்த புரட்சிக்கு அளித்தது. பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும்
நடத்திய நாடாளுமன்ற வழிமுறைக்குப் புறம்பான போராட்டங்கள் பலமாக இருந்தன. இவையே புல்கின் டூமாவைப்  புறக்கணிப்பதென்ற, சரியான
செயல்தந்திரத்தை, யதார்த்த நிலைமைகளுக்கேற்ப அமைந்த செயல் தந்திரத்தை உருவாக்கிய கூறுகளாகும்.” (மேற்படி நூல்)

புல்கின் டூமாவைப் புறக்கணித்ததுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் (இடது சாரிகம்யூனிசம் - சிறுபிள்ளைத் தனமானகோளாறு என்ற நூலில்) லெனின்
பின்வருமாறு விளக்கம் தந்தார்.

“1905 ஆகஸ்டில் ஆலோசனை அந்தஸ்துடைய “நாடாளுமன்றம்” கூட்டப் படுவதாக ஜார் பிரகடனம் செய்தபோது போல்சுவிக்குகள் எல்லா
எதிர்கட்சிகளுக்கும் மென்ஷெவிக்களுக்கும் எதிரான நிலையை ஏற்று, அதனைப் புறக்கணிப்பு செய்யும்படி அறைகூவினர். உண்மையில் இந்த
“நாடாளுமன்றம்” 1905 அக்டோபரில் மூண்ட புரட்சியால் துடைத் தெறியப்பட்டது. அக்காலத்தில், புறக்கணிப்பே பிழையற்றதாக இருந்தது. 
பிற்போக்கு நாடாளுமன்றங்களில் பங்கு கொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம்; எதார்த்த நிலைமையை நாங்கள்
பிழையின்றி மதிப்பிட்டதே, மதிப்பிட்டோம் என்பதே காரணம். வெகுஜன வேலை நிறுத்தங்கள் முதலில் அரசியல் நிறுத்தமாகவும், புரட்சிகர
வேலைநிறுத்தமாகவும், முடிவில் ஓர் எழுச்சியாகவும், வேகமாய் வளர்ச்சியுற்று வந்தன என்பதே அப்போதிருந்த எதார்த்த நிலைமை. தவிரவும்,
முதலாவது பிரதிநிதித்துவ சபை கூட்டப்படுவதை ஜாரின் கையில் விட்டுவிடுவதா, அல்லது அதனைப் பழைய ஆட்சியிடமிருந்து பறிப்பதற்கு முயற்சி செய்வதா என்பதே அக்காலத்திய போராட்டத்தின் மையப் பிரச்சினையாக இருந்தது. எதார்த்த நிலைமை இதை யொத்ததாக இருக்கும் என்ற நிச்சயம் இல்லாத போதும், இருக்கமுடியாத போதும், இதையொத்த ஒரு போக்கும் இதேவளர்ச்சி வேகமும் இருக்குமென்ற நிச்சயம் இல்லாதபோதும், இருக்க முடியாதபோதும் புறக்கணிப்பு சரியானதல்ல.

1905ல் போல்சுவிக்குகள் “நாடாளுமன்றத்தைப்” புறக்கணித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை
அளித்து செழுமைப் படுத்திற்று. சட்ட பூர்வமான, சட்ட விரோதமான போராட்ட வடிவங்களும் நாடாளுமன்ற, நாடாளுமன்றத்திற்கு விரோதமான
போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன்
அவசியமும் ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவுபடுத்திற்று.  ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே காப்பியடிப்பதும்,
விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும் பெருந்தவறாகிவிடும்.”

(இடதுசாரி கம்யூனிஸம்-சிறுபிள்ளைத்தனமான கோளாறு பக்கம்.33, 34)

புறக்கணிப்பு எப்போது தேவை?

மேலே எடுத்துக்காட்டப்பட்டமேற்கோள்களிலிருந்து பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

1) ஒரு புரட்சி எழுச்சியின்போது மக்களின் புரட்சிகர போராட்டங்களை திசை திருப்புவதற்காகவே ஆளும் வர்க்கங்களால் அமைக்கப்படும் போலித்தனமான
நாடாளுமன்ற அமைப்புகளும், தேர்தல்களும் புறக்கணிக்கத் தக்கவையாகும்.

2) மக்கள் இயக்கத்தின் வெள்ளம் பெருகி முன்னேறிக் கொண்டுள்ள போதும், புரட்சி அலை ஏற்றத்தின் போதும், ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி தாக்குதல்
செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களைப் புறக்கணிப்பது சரியானதே.

3) சட்டபூர்வமான சட்டவிரோதமான போராட்டங்களும் நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்கு விரோதமான வடிவங்களும் ஒன்றிணைக்கப் படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது.

4) நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதற்கு காரணமாக உள்ள பின்வரும் நிபந்தனையான - “முதலாளித்துவ நாடாளுமன்றங் களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்” என்பது நிறைவேறும்போது - அதாவது முதலாளித்துவ நாடாளுமன்றங் களையும் இதர பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும்
பலமிருக்கும்போது, அதுவே புறக்கணிப்பதற்கான நிலைமையாக ஆகிவிடுகிறது.

இந்திய நாடாளுமன்ற முறையிலான தேர்தல்களில் பங்குகொள்வது பொருந்தாது:

இரண்டு வகைச்  செயல்தந்திரங்கள்:

முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகாத போது, பரந்துபட்ட மக்கள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், பாட்டாளிவர்க்க சோசலிஸ்ட் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்க செய்யும் பொருட்டு அவர்களைச்சித்தாந்த வழியிலும், அரசியல் வழியிலும், நடைமுறை வழியிலும் தயார்செய்யும் நோக்கத்திற்காக, நாடாளுமன்ற முறையிலான அமைப்புகளிலும் தேர்தல்களிலும் பங்குகொள்ளும் செயல் தந்திரங்கள் பாட்டாளி வர்க்கக் கட்சிகளால் வகுக்கப்படுகின்றன.

புரட்சி எழுச்சியின் போது தாக்குதல் செயல் தந்திரங்களை மேற்கொள்ளும் பொருட்டும், ஆட்சி அதிகாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழும் பரந்துபட்ட
புரட்சிகர மக்களின் போராட்டங்களைத் திசை திருப்பும்பொருட்டும் ஆளும் வர்க்கங்கள் போலி நாடாளுமன்றத்தை முன்வைத்து தேர்தல்கள் நடத்துவது
போன்ற சதிச்செயல்களைச் செயலிழக்கச் செய்யும் பொருட்டும், பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தை க் கலைக்கத் தயாராக இருக்கும் போது புறக்கணிப்புச் செயல் தந்திரங்கள் வகுக்கப்படுகின்றன.

இரண்டுமே ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டின் புரட்சி அலை ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்பவே வகுக்கப்படுகின்றன. ஒன்று புரட்சி அலை தணிந்து
இருக்கும் போதும், மற்றொன்று புரட்சி அலை எழுச்சியின் போதும் வகுக்கப்படுகின்றன. இருப்பினும் இரண்டின் நோக்கமும் ஒன்றே. இரண்டுவகை செயல் தந்திரத்தை வகுப்பதின் நோக்கமும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பாட்டாளிவர்க்கச் சோசலிஸ்ட்டு சோவியத் அதிகாரத்தை நிறுவுதல் என்னும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்தந்திரத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

நாடு தழுவிய எழுச்சியும் நாடாளுமன்றத் தேர்தலும்:

முதலாளித்துவ நாடாளுமன்றத்தைக் கலைப்பதும் பாட்டாளி வர்க்கச் சோசலிஸ்ட் அதிகாரத்தை நிறுவுவதும் அமைதியான முறையில் நிகழ்வதல்ல. ஓர் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் நிகழ்வதாகும். முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் ஒரு ஆயுதம் தாங்கிய எழுச்சியின் மூலம் நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு பாட்டாளிவர்க்கமும் பிற உழைக்கும் மக்களும் பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையில் நடத்தப்படுவதாகும். இந்நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டு பரந்து பட்ட மக்களை நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும் சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான தயாரிப்பு, நாடுதழுவிய அளவில் செய்யக் கூடியதாகும்.

அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியின்போது மேற்கொள்ளப்படும் செயல்தந்திரங்களும். பெரும்திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக்
கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தயார் நிலையும், அதன் அடிப்படையில் அமையும் புறக்கணிப்பும் நாடுதழுவிய அளவில் செய்யக்
கூடியதாகும்.

அந்நாடுகளில் புரட்சி அலை தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும், இரண்டுமே நாடுதழுவிய அளவில் இருப்பதால் அவ்வாறு அமைகிறது. இதற்கு ஏற்றவாறே அரசியல் தந்திரங்களும் போராட்டம் மற்றும் அமைப்பு வடிவங்களும் - முழக்கங்களும் அவற்றை மாற்றிச் செல்லுதலும், சட்டரீதியான போராட்டத்துடன் சட்ட விரோதமானதையும் இணைத்தல் நாடாளுமன்ற முறைக்குப் புறம்பான போராட்ட வடிவத்துடன் இணைத்தல், இன்னும் பிறவும் அமைகின்றன.

தொகுத்துக் கூறுவோமானால், பங்கு கொள்வதின் நோக்கம் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும், சோவியத் முறையிலான அரசு அமைப்புகளைக் கட்டியமைப்பதற்கும், பரந்துபட்ட மக்களைத் தயாரிப்பதாகும், புறக்கணிப்பதற்கான நிபந்தனை புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரத்தை மேற்கொள்வதற்கான நிலைமைகளும் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் சோவியத்துக்களைக் கட்டியமைப்பதற்கும் தயாராக இருப்பதும் ஆகும்.

இரண்டுமே ஏககாலத்தில் நாடுதழுவிய அளவில் நிகழ்பவையாகும். இந்த அளவுகோல்கள் அல்லது நிபந்தனைகள் முதலாளித்துவ நாடுகளில்
நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்குகொள்வதற்கும், அல்லது அவற்றைப் புறக்கணிப்பதற்குமான செயல்தந்திரங்களை வகுப்பதற்கு அடிப்படையாக
அமைகின்றன. இவை அனைத்தும் நாடு தழுவிய எழுச்சி என்ற உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்
போர்த்தந்திரத்திற்குச் சேவை செய்யும் முறையில் வகுக்கப்படுகின்றன.

புரட்சியின் சமச்சீரற்ற வளர்ச்சியும் நாடாளுமன்றமும்:

மேற்கூறப்பட்ட அளவுகோல்களும் நிபந்தனைகளும் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமச்சீரற்ற வளர்ச்சியுடைய நாட்டில், அவ்வாறு
சமச்சீரற்ற வளர்ச்சியுற்றிருப்பதின் காரணமாக புரட்சியின் எழுச்சியும் சமச்சீரற்ற வளர்ச்சியுறும் நிலைமைகளில் நாடாளுமன்ற முறை பற்றிய செயல் தந்திரங்களை வகுப்பதற்குப் பொருந்துமா? இந்தியாவிற்குப் பொருந்துமா?

அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏற்ற தாழ்வாக (சமச்சீரற்ற முறையில்) வளர்ச்சி பெற்றுள்ள நாட்டில், புரட்சியின் புறவயமான அம்சம்
ஏற்ற தாழ்வான முறையில் வளர்சியுறுவதால் புரட்சியின் அகச் சக்திகளின் வளர்ச்சியும் ஏற்ற தாழ்வாக இருக்கின்றது. ஆகையால் புரட்சி அலை
தணிவதும், புரட்சி அலை எழுச்சியுறுவதும் ஏற்ற தாழ்வானதாகவே இருக்கின்றன. ஒரே நேரத்தில், நாடு தழுவிய அளவில் பரந்துப்பட்ட மக்கள்
நாடாளுமன்றத்தைக் கலைப்பதின் அவசியத்தையும், சோவியத் அமைப்புகளை நிறுவுவதின் அவசியத்தையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு,
அவர்களைச் சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறை வழியிலும் தயார்  செய்தல் நாடுதழுவிய அளவில் நடைபெறுவது
சாத்தியமானதல்ல எனவேதான் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கு கொள்ளும் செயல் தந்திரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. செயல்படுத்தவும் முடியாது.

அதைப் போன்றே புரட்சி அலை எழுச்சியும் நாடு தழுவிய அளவில் ஏற்படுகின்ற ஒன்றாக இல்லாததால், தாக்குதல் செயல்தந்திரங்களை வகுத்துக்  கொள்வதும், நாடு தழுவிய அளவில் பெரும் திரளான மக்கள் சோவியத் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தயாராக இருப்பதும் சாத்தியமில்லை. எனவே இதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் புறக்கணிப்புச் செயல்தந்திரம் வகுக்க முடியாது. இத்தகைய
நாடுகளில் புரட்சி எழுச்சி சமச்சீரற்ற முறையில் வளர்ச்சியுறுவதின் காரணமாக ஏக காலத்தில் ஒரு நாடு தழுவிய அளவில் புரட்சி எழுச்சிக்கு
வாய்ப்பில்லை.

எனவே ஒரு நாடு தழுவிய அளவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மாறாக, பிரதேசவாரியாக விடுவிப்பதிலும் தளங்களை
நிர்மாணிப்பதிலும் அதன் மூலம் நாடு தழுவிய எழுச்சியைத் துரிதப் படுத்துவதும், புரட்சி யுத்தத்தின் குணாதிசயமாக இருக்கின்றது. இதுவே புரட்சி
யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந் நாடுகளில் போர்த் தந்திர, செயல் தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கின்றது. இராணுவ
போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளை மட்டுமல்ல, அரசியல் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவும் இதனால் தீர்மானிக்கப் படுகின்றது.

எனவே பிரதேச ரீதியில் விடுவித்து நாட்டின் புரட்சி எழுச்சியைத் துரிதப்படுத்தும், இறுதியாக நாடு முழுவதையும் விடுதலை செய்யும் புரட்சிகர
யுத்தத்தோடு முதலாளித்துவ நாடாளுமன்ற முறையில் பங்குகொள்வதற்கும் மற்றும் புறக்கணிப்பதற்கும் முதலாளித்துவ நாடுகளில் வைக்கப்படும்
நிபந்தனைகளும் மற்றும் நிலைமைகளும் பொருந்தாது. நாட்டின் ஒரு சில பிரதேசங்களை விடுதலை செய்வதற்கான போராட்டத்தையும் (அரசு
இயந்திரத்தை தகர்த்தெறிந்துவிட்டு சோவியத்துக்கள் நிறுவுவதற்கான போராட்டத்தையும்) பிறபகுதிகளில் தேர்தல்களில் பங்குகொள்ளுதலையும்
மற்றும் நாடாளுமன்ற முறையைப் பயன்படுத்தலையும் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க இயலாது என்பது மட்டுமல்ல; சாத்தியமானது மல்ல.
சட்டரீதியான போரட்டத்தையும், சட்டவிரோதமான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் மற்றும் நாடாளுமன்ற முறைக்கு அப்பாற்பட்ட முறையிலான போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் ஆகியவையும் இதுவும் ஒன்றல்ல.

தவிர புரட்சி எழுச்சிக்குத் தயாரிக்கும் பணியோடு இணைக்கப்பட்டாலும், புரட்சி எழுச்சியின்போது தாக்குதல் செயல்தந்திரங்கள் வகுத்துக்கொள்வதை
அடிப்படையாக கொள்ளாமலும், புரட்சி இயக்கத்தின் புறநிலை அம்சத்தின் வளர்ச்சிப் போக்குக்கு இசைவாக இல்லாமலும் திட்டமிடப்படுகின்ற
செயல்தந்திரங்கள் தன்னியல்பானதாகவோ சீர்திருத்த வகைப்பட்டதாகவோ, அராஜகமானதாகவோ அல்லது அரசியல் அதிகாரத்தைப் புரட்சிகர
முறையில் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளாததாகவோ அமையும்.

எனவே அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத்தாழ்வாக வளர்ச்சி பெற்றுள்ள நமது நாட்டில், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற
அமைப்புமுறை மற்றும் தேர்தல்களில் பங்கு கொள்ளுதல் அதே நேரத்தில் சில பகுதிகளில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான ஆயுதப்
போராட்டத்தையும் ஒன்றிணைத்தல் என்பது சாத்தியமல்ல. ஆகவே நமது நாட்டில் நாடாளுமன்றமுறை மற்றும் தேர்தல்களைப் புறக்கணிப்பது
சரியானதும் தகுந்ததும் ஆகும். நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் பொருந்தாது.

நாடாளுமன்றமுறை அமைப்புகளிலும், தேர்தல்களிலும் பங்கெடுப்பதில்லை என்பதால் சட்டரீதியான போராட்ட முறைகளையும், வெளிப்படையான
போராட்ட முறைகளையும், பயன் படுத்தக்கூடாது என்று கொள்ளக்கூடாது. சட்டரீதியான போரட்டதினைச் சட்டவிரோதமான போராட்டத்துடன்
ஒன்றிணைக்கக் கூடாது என்றோ, இரகசியமான போராட்ட வடிவங்களையும், வெளிப்படையான போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைக்கக் கூடாது
என்றோ கொள்ளக் கூடாது.

நாடாளுமன்றமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கமும்:

முதலாளித்துவ நாடாளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்தும் செயல்தந்திரமும் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் ஒரு
பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது பற்றிய செயல்தந்திரமும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றல்ல. தற்காலிக புரட்சி அரசாங்கம் மற்றும் அதில் பாட்டாளி வர்க்கம் பங்கு  கொள்வது பற்றிய செயல்தந்திரம் குறித்த மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளும், போதனைகளும் அரைக் காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குப் பொருந்துமா என்பது நம் முன்னால் உள்ள பிரச்சனை யாகும்.

போர்த்தந்திரத்திற்குத் துணைபுரியும்பொருட்டு அதன் வெற்றிக்கான பாதையை நிச்சயமானதாக ஆக்கும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட தருணத்தில்
நிலவுகின்ற திட்ட வட்டமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு அதாவது எதிரிகள் முகாமிலும் பாட்டாளிவர்க்க முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு
ஏற்றவாறு பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடத்தை விதியைத் தீர்மானிப்பது செயல் தந்திரத்தின் முக்கியமான பணியாகும்.

எனவே ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தின் புரட்சிப் பணிகளடங்கிய கட்சியின் பொது வேலை திட்டத்தை நிறைவேற்றுவதை நிச்சயமானதாகவும், எளிமையானதாகவும் ஆக்கும்பொருட்டு எதிரி முகாமிலும் நமது முகாமிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு இசைவாகவும் பொது எதிரியை எதிர்த்த அனைத்து சக்திகளையும் பாட்டாளி வர்க்கம் தனது அணியில் சேர்க்கும் வண்ணம் அப்பொது வேலை திட்டத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பான திட்டத்தை வகுத்துக் கொள்வது இயல்பானதாகும் (இன்றியமையாததாகும் (ப-ர்)).

ஆகையால் தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளும், போதனைகளும் நமது புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்குப் பொதுவாக பொருந்தக் கூடியது என்றாலும் அவற்றை இன்றைய கட்டத்தில் இந்தியப் புரட்சியில் பாட்டாளி வர்க்கக் கட்சியின் பிரயோகம் கூட இந்தியாவின் புறநிலைமைகளுக்கு ஏற்றவாறு அமைகிறது.

இப்பிரச்சனை குறித்த லெனினிய போதனைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனபது புரட்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்திற்குள் தொடர்ச்சியான சில இடைமாற்றங்களும், இடைமாற்றக்
கட்டங்களும் இல்லாமல் ஒரு பின்தங்கிய நாட்டில் அதை ஒரு சோஷலிசப் புரட்சியாக மாற்றிட முடியாது என்பதின் அடிப்படையில், அதற்கு
ஏற்றவாறு வகுத்துக் கொள்ளப்படும் செயல் தந்திரம் ஆகும்.

2.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்னும் செயல் தந்திரம் புரட்சி எழுச்சியின் போது பாட்டாளிவர்க்கக் கட்சி தாக்குதல் செயல் தந்திரங்களைச் செயல்
படுத்துவதற்கான ஒரு அமைப்பு வடிவமும் போராட்ட வடிவமும் ஆகும்.

3.தற்காலிகப்புரட்சி அரசாங்கம் என்பது ஒரு நாட்டில் ஏற்கனவே நிலவியுள்ள அரசமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு அமைக்கப்படுகின்ற ஒரு
அரசாங்கம் அல்ல. அதற்கு மாறாக அது மேலிருந்து நடத்தப்படும் போராட்ட வடிவமாகும் என்பது மட்டுமல்லாமல் அதுவே ஒரு “புரட்சி எழுச்சியின்
உறுப்பாகிய புரட்சி அரசாங்கம்” ஆகும். இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கம் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையாகவும், அனைத்து
மக்களுடையதாகவும், அரசியலை நிர்ணயிப்பதற்குரிய அதிகாரமும் பலமும்  பெற்றிருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

4.புரட்சியின் வரலாற்றுக் கட்டத்திற்குள் ஒரு காலப்பகுதியின் புறநிலைமைகளோடும் பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோளோடும்
பொருந்தும்படியான செயலுக்குரிய ஒரு வேலை திட்டத்தை நிறைவேற்றுவது இந்தத் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் பணியாகும். இத்திட்டம் உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத் திட்டமாகும். ஒருபுறத்தில், அவற்றை இன்றுள்ள சமுதாய, பொருளாதார உறவு முறைகளின் அடிப்படையிலே, முற்றாக நடைமுறையில் சாதிக்கக்கூடியதும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் அக்கட்டப் புரட்சியின் பணிகளைச் சாதிப்பதற்கும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கும் அது தேவைப்படுகின்றது.

5.தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்பது ஒருபுறம் அரசதிகாரத்தைப் பற்றிய அராஜக கருத்துக்களுடனும், மறுபுறம் சீர்திருத்த வாதத்துடனும் முற்றாக
முறித்துக்கொள்வதால் இத்தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பங்குகொள்வது கோட்பாடு ரீதியில் அனுமதிக்கத்தக்கது.

6.கோட்பாடு ரீதியில் அனுமதிக்கதக்கதாய் இருந்த போதிலும் நடைமுறைப் பொருத்தமுடையதா? எந்த நிலைமையின் கீழ் மேலிருந்து நடத்தும்
இப்போராட்ட வடிவம் பொருத்த முடையது? போன்ற வினாக்களுக்குப் பதில் சக்திகளின் பரஸ்பர ஒப்பு போன்ற ஸ்தூலமான நிலைமைகள் பற்றி
உடனடியாக சொல்வது சாத்தியமில்லாததால் தற்சமயம் சொல்லக்கூடாது (சொல்ல முடியாது (ப-ர்)). ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கலந்து  கொள்வதின் தன்மையையும் குறிக்கோளையும் மட்டும்தான் குறிக்க முடியும்.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கு கொள்வது பின்வரும் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாகும்:

எதிர்ப்புரட்சி முயற்சிகளை எதிர்த்து விட்டுக் கொடுக்காமல் போராடுவது.
தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரமான நலன்களைப் பாதுகாப்பது, இப்படிப்பட்டப் போராட்டத்தில் எதிர்ப் புரட்சியை எதிர்த்து உண்மையான போர்
நடத்தும் பணியைப் பற்றி கவனம் செலுத்துமாறு பாட்டாளி வர்க்கக் கட்சி அறைகூவி அழைப்பது பொருத்தமானதாகும்.

7.கடைசியாகப் பகுப்பாய்ந்து பார்க்கும்போது அரசியல் சுதந்திரம் வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளைப் பலம் ஒன்றுதான்
தீர்மானிக்கிறது. பாதுகாப்புக்கு மட்டுமின்றி தாக்குதலுக்கும் இந்த பலத்தைத் தயாரிப்பதும் ஒழுங்கமைப்பதும் தீவிரமாகப் பயன்படுத்துவதும் பாட்டாளி
வர்க்கக் கட்சியின் வேலையாகும். ஒரு புதிய சகாப்தத்தில், அரசியல் எழுச்சிகளும், புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதியில் பழைய மாறுதலற்ற
சூத்திரங்களோடு ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன்னை நிறுத்திக்கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல்புரியவும் மிகவலுவான
தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யவேண்டும். அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.

8. மேலிருந்து செயல்புரிய முடியாமற் போகக்கூடிய நிலைமையில் பாட்டாளி வர்க்கக் கட்சி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்காலிகப் புரட்சி
அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி கொண்டு வரவேண்டும். கீழிருந்து நிர்ப்பந்தத்தை செயல்படுத்தும் பொருட்டு          
                              
 (1) பாட்டாளிவர்க்கம் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும்.
 (2)  ஒரு பாட்டாளிவர்க்கக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்க வேண்டும்.

இவ்வாறு ஆயுதம் ஏந்தி செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம்: புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவுபடுத்துவது - அதாவது புரட்சியின் ஆதாயங்களை முதலாளித்துவ வர்க்கம் அபகரித்துக் கொண்டு விடாமல் தடுத்து நிறுத்துவதாகவும் அந்த ஆதாயங்கள் நம் குறிப்பான வேலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும்.

(ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் - லெனின் நூல் திரட்டு தொகுதி.1 பக்கம் 95 - 180 வரை காண்க.)

தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய லெனினிய போதனையும் கோட்பாடும் பொருந்தக்கூடியது என்றாலும் நடைமுறைப் பொருத்தமுடையதா என்ற
பிரச்சனையைத் தீர்மானிப்பதில் பின்வரும் அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டும்:

1.அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதயிலும் ஏற்ற தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவில், புரட்சியின் புறவயமான அம்சம் ஏற்றத்தாழ்வான
முறையில் வளர்ச்சியுறுவதால் புரட்சியில் அகசக்தியின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கிறது. இவ்  அம்சம் புரட்சி யுத்தத்தை நடத்துவதற்கான மார்க்கத்தையும் இந்நாட்டின் அரசியல் மற்றும் இராணுவப் போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகள் பலவற்றையும் தீர்மானிக்கிறது.

2.இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் சாரமாக விவசாயப் புரட்சி இருப்பதுடன் விவசாயப் பிரச்சனை புரட்சியின் மையமான பிரச்சினையாகவும் இருக்கிறது.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி பங்குகொள்வது என்பதும் தற்போதைய நிலையிலுள்ள தரகு முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசில் உள்ள பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களில் பங்கு கொள்வது என்பதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது. முன்னால் கூறப்படுவது லெனினியக் கோட்பாடு வழியில் அமைந்ந ஒரு சரியான பாட்டாளிவர்க்கச் செயல்தந்திரமாகும். இரண்டாவது வகைப்பட்டது இந்நாட்டில் வலது, இடது போலிக் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் சீர்திருத்தச் செயல் தந்திரங்கள் ஆகும்.
(அழுத்தம் ப-ர்)

இப்போலிக் கம்யூனிஸ்டுகளால் செயல்படுத்தப்படும் சீர்திருத்தச் செயல்தந்திரங்கள் ஆளும் வர்க்கங்களுக்குச் சேவைச் செய்யக் கூடியதாகவும்  புரட்சியைத் திசை திருப்புவதாகவுமே இருக்கிறது.

இச் செயல்தந்திரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணங்களில்
ஒன்று, பாட்டாளி வர்க்கம் ஆயுதப்படை கொண்டு அரசியல் அதிகாரத்தை வெல்ல வேண்டும் என்பதற்கு மாறாக சோசலிசத்திற்குச் சமாதான மாற்றம்
என்ற பாதையை மேற்கொள்வது;

இரண்டு, இந்திய நாடாளுமன்றத்தைக் குறித்து செயல் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் லெனினியச் செயல் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதாகக்
கூறிக் கொண்டு இந்தியாவில் நிலவும் புறவயமான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து அல்லது  வேண்டுமென்றே மறைத்து
முதலாளிய நாடாளுமன்ற அமைப்புகளில் பங்குகொள்ளும் சீர்திருத்தச் செயல்தந்திரங்களை வகுத்துக் கொள்வது ஆகியனவாகும்.

இந்தப் பாராளுமன்ற முறையை மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும். இந்தப் பாராளுமன்ற முறையிலான அரசாங்கங்களைப் புரட்சியின்
தயாரிப்புக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்படும் வாதங்கள், சந்தர்ப்பவாதிகளினுடைய செப்பிடுவித்தை ஆகுமேயொழிய
இந்தியப் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்திற்குச் சேவை செய்யக் கூடியது அல்ல.

இறுதியாக தொகுத்துக் கூறுவோமானால், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி பெற்றுள்ள அரைக்காலனிய-அரை
நிலப் பிரபுத்துவ இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப்பாதைக்கு நாடாளுமன்ற அமைப்பு முறையிலும் தேர்தலிலும் பங்கு
கொள்வது உகந்ததல்ல.

தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் செயல்தந்திரம் இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மக்கள் யுத்தப் பாதைக்குக் கோட்பாடு
ரீதியில் பொருந்தக் கூடியதே ஆகும்.

சமரன் - ஜனவரி, 1989.

2 comments:

P.L.Richard. said...

வணக்கம் தோழரே
மிக சரியான முறையில் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்துகளை பதிவு செய்கின்றீர்கள்.
எனது கொள்கையும் இதுதான். சந்தர்ப்பப் கிடைத்தால் நாம் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் வலுப்படுத்தி செயற்படலாம்
என்றும் அன்புடன்
abirich .richard72 @gmail .com

P.L.Richard. said...

வணக்கம் தோழரே
மிக சரியான முறையில் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்துகளை பதிவு செய்கின்றீர்கள்.
எனது கொள்கையும் இதுதான். சந்தர்ப்பப் கிடைத்தால் நாம் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் வலுப்படுத்தி செயற்படலாம்
என்றும் அன்புடன்
abirich .richard72 @gmail .com