பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும், விடுதலைப்புலி யுத்தக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஒன்றுபடுவோம்! - போராடுவோம்!!
( சர்வதேச ஜனநாயக சக்திகளுக்கு ஒரு பகிரங்க அழைப்பு )
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகத்தை நேசிக்கும் சான்றோரே, மனிதநேயத்தை மதிக்கும் மானுடரே,சட்டவாளர்களே, புத்திஜீவிகளே, மாணவர்களே, இளைஞர்களே,தாய்மாரே தந்தையரே;
1) இலங்கை என்கிற நாடு இரண்டு தேசங்களைக் கொண்டதாகும்.
2) இலங்கையில் தமிழீழ தேசத்தவரான தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறை அதன் ஆரம்பம் முதலே வன்முறை வடிவிலானதாகும்.
3) தமிழ் பேசும் மக்கள் மீது இந்த ஆயுதமேந்திய அரச வன்முறை ஒரு புறம், 1915,1953,1956,1958,1977,1981,1983 களில் `இனக்கலவரம்`, என்ற பெயரில் தமிழர்களின் இருப்புக்குச் சவாலாகவும், மறு புறம் `தேசியப் பாதுகாப்பு` என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை நீதி விசாரணையின்றி படுகொலை செய்யும் இராணுவ அடக்குமுறைகளாகவும் பல தடவைகள் பாரிய அளவில் ஏவப்பட்டது,
(1979) இல் யாழ்ப்பாணம் நவாலியில் இன்பம், செல்வம் என்கிற இரு தமிழ் இளைஞர்கள் இராணுவச் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு இரவோடு இரவாக பண்ணைப்பாலத்தில் காட்சிக்காக வீசப்பட்டிருந்தனர்! இவ்வாறு எண்ணற்ற கோர,கொடிய,நிகழ்வுகள் அரங்கேறின.
4) இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள தள்ளப்பட்டனர்.
5) இந்த சுமார் 30 ஆண்டு கால அரச வன்முறை வரலாற்றின் தவிர்க்க இயலாத, தர்க்க ரீதியான விளை பொருளே தமிழீழ விடுதலைப் புலிகள்-Liberation Tigers of Tamil Eelam (Tamil Tigers)- ஆகும்.
6) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதமேந்திய தற்காப்பு, 1983 ஜுலை இனப்படுகொலையுடன் உள்நாட்டு யுத்தமாக மாறியது.
7) 30 ஆண்டுகள் நீடித்த இந்த யுத்தத்தில் பல தடவை பல நூற்றுக்கணக்கான அரசபடையினர் விடுதலைப்புலிகளால் யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
8) இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சிறீலங்கா அரசிடம் சரணடையுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பகிரங்கமாக வேண்டிக்கொண்டார். சிறீலங்கா அரசாங்கமும் வேண்டிக் கொண்டது.
9) மேன்மை தங்கிய சிறீலங்கா ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்சே அவர்கள் மே 18, 2009 இல் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததாக உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
10) பாதுகாப்பு செயலர் மேன்மை தங்கிய திரு.கோத்தபாய அவர்கள் சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைந்ததாகவும் அவர்களில் 11ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளவர்கள் சுமார் 700 பேர் வரையிலானவர்களே என்றும், இவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு முடிவு காணப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக மனோ கணேசன் அவர்களும், விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக திரு.கஜேந்திரன் அவர்களும் பகிரங்கமாக கூறியுள்ளனர்.
11) மேலும் இந்த 700 பேரைத்தவிரவும், பல ஆயிரக்கணக்கானோர், கடந்த 30 ஆண்டு காலத்தில் விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு உதவியவர்கள் என்ற `குற்றச்சாட்டில்`, பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
12) பயங்கரவாதச் சட்டம் தன்னளவிலேயே `பயங்கரமானது`. ஆனால் அது அமூல் படுத்தப்பட்டமுறையோ அதைவிடப் பயங்கரமானது.
13) இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வகை தொகை இன்றி எழுந்தமானமாகக் கைது செய்யப்பட்டு, எந்தவிபரங்களும் வெளியிடப்படாமல், எந்த விசாரணைகளும் நடத்தப்படாமல், எங்கிருக்கின்றார்கள் என்பதே வெளியிடப்படாமல்,`காணாமல் போனவர்களாக` சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும், அதிகாரபூர்வமற்ற `பாதாளச் சிறை`களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
14) இவர்கள் எந்தவித அரசியல் உரிமைகளும் அற்றவர்களாக, அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படாதவர்களாக நவீன அடிமைகளாக அதிகார துஸ்பிரயோகத்துக்கும், கொடிய சித்திரவதைகளுக்கும் மிக நீண்டகாலம் உள்ளாகிவருவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் நெடுங்காலமாகவே சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் பாதுகாப்பு, விடுதலை, எதிர்காலம் குறித்து நாம் ஆழ்ந்த கரிசனையும் கவலையும் அச்சமும் கொண்டுள்ளோம்.
1) இவர்கள் உள் நாட்டு யுத்த சூழலில் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் சரணடைந்தவர்கள்.
2) அரசியல் கைதிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஒரு உத்தேசக் கணிப்பாகவே உள்ளது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடம் தாண்டியுள்ள நிலையிலும் இவர்கள் ஒவ்வொருவரதும் பெயர் விபரங்களையும் சரியான தொகையையும் இன்றுவரை அரசாங்கம் வெளியிடவில்லை.
3) இவர்களில் பெண்கள், இளம் வயதினர், பாடசாலை செல்லும் பருவத்தினர், யுத்தத்தினால் ஊனமுற்றவர்கள், காயம்பட்டவர்கள், மன விரக்திக்கு உள்ளானவர்கள், மிக நீண்டகாலமாக உற்றார் உறவினரை, தாய் தந்தையரைப் பிரிந்து கானகத்தில் வாழ்ந்தவர்கள் , அரசாங்க பணியாளர்கள், மதகுருமார், மற்றும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே கைது செய்யப்பட்ட அப்பாவிப் பொதுஜனங்கள் எனப் பலரும் அடங்குவர்.
4) யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னால் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பல ஆதாரங்கள் உள்ளன.
5) 1983 ஜூலையில் உலகைக் குலுக்கிய ஒரு சிறைப்படுகொலை இலங்கையில் நடந்தது, இன்று வவுனியாவில் நிமல ரூபன் படுகொலையோடு மீண்டும் தொடங்கியுள்ளது.நிமலரூபன் படுகொலையை அரசாங்கம் `மாரடைப்பு` என்று கூறுகின்றது!
6) 1987 இல் நீதி விசாரணையற்று பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல் அடையாளம் தெரியாதவாறு ரயர் மூட்டி எரிக்கப்பட்டு தெருவோரங்களிலும் களனி ஆற்றிலும் வீசப்பட்டனர். ரிச்சாட் டி சொய்சா என்கிற மனித உரிமைப் போராளி கல்லைக்கட்டி கடலில் எறிந்து கொல்லப்பட்டார் (1990 மாசி).
7) ‘காணாமல் போதல்’என்பது இலங்கையில் அன்றாட நிகழ்வாகும்.இது குறித்து வடக்கு- கிழக்கு மனித உரிமைகள் செயலகம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) UTHR(J), சர்வதேச மன்னிப்புச் சபை(AI), மனித உரிமை கண்காணிப்பகம் (HRW), போன்ற ஸ்தாபனங்கள் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
8) மேலும் இறுதி யுத்தத்தில் கணக்கற்று இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குறித்து இலங்கை அரசின் மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
9) இலங்கையின் சமூக வாழ்வில் இராணுவம் ஒரு அங்கமாக மாறி வருகின்றது.
10) பத்திரிகைச் சுதந்திரம்,பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுந்திரம் ஆகியன அருகி வருவதும்,சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் சுதந்திரமாக இயங்கிவருவதும், நீதித் துறையில் தலையீடு செய்வதும் என சட்டத்தின் ஆட்சி சீர்குலையும் போக்கும் இலங்கையில் தலையெடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கா ஆகியோர் கூட இது குறித்து பெரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள், மற்றும் விடுதலைப்புலி யுத்தக்கைதிகளின் பாதுகாப்பு, விடுதலை, எதிர்காலம் குறித்த நமது கவலையையும் கரிசனையையும் அச்சத்தையும் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
எனவே யுத்தம் முடிவடைந்து மூன்று வருடம் தாண்டியுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தொடர்ந்தும் இவர்களை சிறைவைத்திருப்பது, நீதி நியாயமற்றதும் ஏற்கத்தகாததுமாகும்.
இதனால்அரசியல் கைதிகள், மற்றும் விடுதலைப்புலி யுத்தக்கைதிகளின் விடுதலைக்காக, ஒரு சர்வதேச சட்டவாளர் மன்றம் ஒன்றை அமைக்கவும், மக்களைத் திரட்டிப் போராடவும், பரந்துபட்ட ஜனநாயக வெகுஜன முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்ப தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஒன்றிணையுமாறு தயவுடன் வேண்டுகின்றோம்.
வலைத்தளசமூக நண்பர்கள், ஊடகங்கள், பரந்துபட்ட மக்கள் மத்தியில் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு தோழமையுடன் கோருகின்றோம்.
இலங்கை அரசே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும், விடுதலைப்புலி யுத்தக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்!!
குறிப்பு:(முதல் நகல் - விவாதத்துக்காக) தொடர்புக்கு: enb1917@ymail.com
No comments:
Post a Comment