Wednesday, 21 December 2011

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` போர்க்குற்ற ஆவணப்படம் ஒரு மீளாய்வு

“ஸ்ரீலங்கா கொலைக்களம்``

`ஏகாதிபத்தியமே நீதி வழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு` என முனகி இயங்கி வரும் ஈழத் தமிழர் மத்தியிலான ஏகாதிபத்திய தாச இந்திய விரிவாதிக்க பாச சமரசவாத இயக்கம் ஆங்கிலேய Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` என்ற ஆவணத் திரைப்படத்தை வரைமுறை தாண்டி கொண்டாடி மகிழ்கிறது.


“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` இலங்கை அரசின் யுத்தக் குற்றங்களை சர்வதேச தரத்துக்கு, சட்டபூர்வத் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட ஆவணம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இவ் ஆவணத்தின் அரசியல் மட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இவ் ஆவணத்தின் எல்லைகளுக்கு அப்பால் சிங்களத்தை எதிர்த்த ஜனநாயக அரசியல் இயக்கத்தை எம்மால் கட்டமுடியாது போய்விடும்.

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` பின்வரும் கோட்பாடுகளின் மீது கட்டியமைக்கப்பட்டுள்ளது. அவையாவன,

1. யுத்தங்களை சட்டபூர்வமானவை சட்ட விரோதமானவை என வகைப்படுத்துவது.

2. சட்டபூர்வ யுத்தங்களுக்கு அல்லது யுத்தங்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்குவதற்கு ஜெனிவா உடன்படிக்கையை ஆதாரமாக கொள்வது.

இந்த இரண்டு அடிப்படைகளில் இருந்தும்

• நிரபராதியான மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்வது,

• மருத்துவ நிறுவனங்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது,

• பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பது,

• சரணடைகிற மக்களை துன்புறுத்துவது, படுகொலை செய்வது,

• யுத்தக் கைதிகளை துன்புறுத்துவது, படுகொலை செய்வது,

• திட்டமிட்டு உணவுப்பற்றாக் குறையை ஏற்படுத்துவது குடிநீர் நிலைகளுக்கு விசம் கலப்பது. தானியச் சேனைகள் மற்றும் களஞ்சியங்களை அழிப்பது,

• பாலகர்களை படையில் சேர்ப்பது மற்\றும் படுகொலை செய்வது,

• நச்சுவாயு உள்ளிட்ட சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவிப்பது ஆகியவை பிரதானமானவை ஆகும்.

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` இவற்றில் சிலவற்றை இலங்கை இராணுவம் மீறியுள்ளதாக பல்வேறு மறுக்கப்பட இயலாத ஆதாரங்களை வைத்து நிறுவியுள்ளது. இதற்காக பல்வேறு மூலங்களையும் வளங்களையும் பயன்படுத்தியுள்ளது. இவற்றில் ஒன்று சரத் பொன்சேகாவின் அணியைச் சார்ந்து களத்தில் நின்ற இராணுவச் சிப்பாய்கள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.

இந்த வரையறைக்குள் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` ஒரு வலுவான போர்க்குற்ற ஆதாரமாக இருக்கிறது. இதனால் வரவேற்கத்தக்கது. ஆதரிக்கத்தக்கது. பார்த்துப் பரப்பத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்கமுடியாது.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டது முள்ளிவாய்க்காலில் தொடங்கவில்லை. மாறாக ஈழவிடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக மாறிய ஜூலை 1983 இற்கு முன்னாலும், பின்னாலும் இத்தகைய இராணுவக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையில் யுத்தக் குற்றம் இழைத்தது வெறுமனே சிங்களம் மட்டுமல்ல இந்திய விரிவாதிக்க அரசும் கூடத்தான்.

யுத்தங்களை சட்டபூர்வமான யுத்தம் சட்ட விரோதமான யுத்தம் எனப் பாகுபடுத்தக்கூடாது. போரிடும் வர்க்கங்களின் நலன்களின் அடிப்படையில் நீதியானதா?, அநீதியானதா? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் வகைப்படுத்த வேண்டும். பொதுவாக நீதியான யுத்தங்கள் எல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சட்டவிரோத யுத்தங்களாகும். இந்தச் சட்டவிரோதிகளே பயங்கரவாதிகள் ஆவர்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு. ஏகாதிபத்திய உலகத்தில் தடை செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்சிக் கொடியை ஏந்துவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் பிரச்சார இயக்கம் நடத்துவது, விடுதலை யுத்தத்துக்கு நிதி திரட்டுவது சட்டவிரோத நடவடிக்கைகளாக பிரகடனம் செய்யப்பட்டன. ’

 சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தான் கே பத்மநாதன் விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத பரிவர்த்தனை பொறுப்பாளர் பதவி வகித்த போது இன்ரபோல் என்ற சர்வதேச பொலிஸின் தேடுதல் வேட்டைக்கு இலக்காகினார்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்றும் போர்க் குற்றம் இழைத்தவர்கள் என்றும் சரிநிகர் சமானமாக குற்றம் சாட்டுகிறது இதனால் இந்த ஆவணத்தின் தர்க்கத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் மீதும் போர்க்குற்றம் சுமத்த முடியும். மேலும் இவ் ஆவணம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் மக்கள் இயக்கத்துக்கு எதிராகவும் இருக்கிறது.

புதிய சூழ்நிலை பற்றிய மதிப்பீடுகளினதும், கடந்த காலத் தவறுகள் குறித்த படிப்பினை மற்றும் சுயவிமர்சனத்துடனும் விடுதலைப் புலிகள் மீளத் தங்களை தமிழீழ விடுதலைக்காகப் போராடும், முற்போக்கு ஜனநாயக தேசிய விடுதலை அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு இத்தடையை நீக்கப் போராடுவது நமது ஜனநாயகக் கடமையாகும். மேலும் வரலாற்றின் அவசியமும் ஆகும்.

இத்தகைய குறிப்பான கடமைகளும் அதன்பாற்பட்ட முழக்கங்களும் இல்லாமல் வெறுமனே “விழ விழ எழுவோம்” என்பது வெறும் வீர வசனம் பேசுவதே ஆகும். நாம் கட்டப் பொம்மன் நாடகம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. வீழ்ந்த தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான காரண காரியங்களை கண்டறிந்தாக வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் தம் சொந்தத் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக போராடும் அடிப்படை அரசியல் ஜனநாயக உரிமையை எந்தச் சட்டங்கள் மறுத்து பயங்கரவாதம் எனப் பெயர் சூட்டி பழிவாங்கி படுகொலை செய்தனவோ அதே சட்டத்தின் வரம்புகளுக்குள் நின்று “விழ விழ எழுவோம்” என்று விழல்க் கதை பேசுவது அரசியல் ரீதியில் அரைவேக்காட்டுத் தனத்தையும் தாண்டிய முழு முட்டாள்த்தனமாகும்.

முள்ளிவாய்க்காலைத் தனிக்களமுனையாகக் கொண்டு பிரச்சனையை ஆராய முடியாது. ஆராயவும் கூடாது. தமிழ் தேசிய இனத்தின் மீதான வரலாற்று ரீதியான வன்முறை ஒடுக்குமுறை இல்லாமல் முள்ளிவாய்க்கால் திடீரென முளைக்கவில்லை. இந்த வரலாற்றுப் பின்னணியை “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` திட்டமிட்டு தவிர்த்திருக்கிறது. காரணங்கள் வருமாறு.

1. இலங்கையில் ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறை ஆங்கிலேய காலனியாதிக்கம் வகுத்த கட்டாய இணைப்புத் திட்டத்தில் ஆழ வேரூன்றி உள்ளது.

இந்த ஏகாதிபத்திய காலனிய, நவீன காலனிய தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளை பரந்துபட்ட மக்களுக்குப் புரிய வைப்பது, இங்கிலாந்து ஏகாதிபத்திய நலன் காக்கும் Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் வர்க்க குணாம்சத்துக்கு எதிரானது

2. இன ஒடுக்குமுறையின் அரசியல் வரலாற்றை விளக்கிக் கூறினால் அது விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று ஆக்கிவிடும். இதற்குப் பிறகு அவர்களைப் பயங்கரவாதிகள் என்றோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்றோ கூறமுடியாது.

3. வரலாற்று ரீதியாக இந்த விவகாரத்தை நோக்கினால் சிங்களம் ஈழமக்கள் மீது போர்க்குற்றம் இழைத்த எண்ணற்றப் போர்க்களங்களும் சம்பவங்களும் உள்ளன. சிங்களம் மட்டுமல்ல இந்திய விரிவாதிக்க அரசும் மூன்று தடவைகள் (1972, 1987 இல் நேரடியாகவும், 2008 இல் புறமுதுகில் பதுங்கியிருந்து நயவஞ்சகமாகவும்) இராணுவத் தலையீடு நடத்திப் போர்க்குற்றம் இழைத்துள்ளது. இதனாலும் அந்த வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

4. பொதுநலவாய நாடுகளில் ஒரு உறுப்பு நாடாக இருந்து மேன்மைதங்கிய மகாராணியாரின் முடியை மிஞ்சி கொடிபிடிக்க எண்ணும் ராஜ பக்சவை  தட்டியடக்குவதற்கு மேல் Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வேறெந்த அக்கறையும் கிடையாது.

முள்ளிவாய்க்காலுக்கு முந்திய போர்க்களங்களில் எல்லாம் சிங்களத்துக்கு ஆயுதம் விற்றவர்களில் இங்கிலாந்து ஒரு முக்கிய நாடாகும்.அப்போது வடக்குக் கிழக்கில் வாழ்ந்தவர்கள் யார்? சீனர்களா? அப்போதும் இந்தத் துப்பாக்கிகள் குறிபார்த்தது தமிழர்களைத்தானே; அப்போது எங்கே போனது மனித உரிமை? போர் நியாயம்? சட்டவாதம்?

இங்கிலாந்தில் சிங்களத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது Channel 4 தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமல்ல; The Financial Times, The Economist, The Times போன்ற உலகப் பிற்போக்கின் கொத்தளங்களும் கூடத்தான்! இதன் ஒரு அங்கமாக தமது ஆதிக்க நலனில் இருந்து இராஜ பக்ஷவை அம்பலப்படுத்தியிருக்கும் Channel 4 ஆவணம் தானே எழுப்பும் அடிப்படையான கேள்வியை திசைதிருப்பி குறுக்கித் தவிர்த்துள்ளது.

இந்த ஆவணத்தில் இருந்து எழுகிற தர்க்க ரீதியான கேள்வி மனித உரிமையும், சட்டவாதமும், யுத்தக் குற்றமும் அல்ல. மாறாக அடிப்படையானதும் மையமானதுமான கேள்வி இத்தகைய ஒரு அரசு முறையின் கீழ் ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியுமா என்பதே ஆகும். இந்த இனப்படுகொலை ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையை நியாயம் செய்கிறதா இல்லையா என்பதே ஆகும். இந்த அடிப்படையான அரசியல் ஜனநாயகக் கேள்வி எழுப்பபடவில்லையானால் யுத்தக் குற்ற இயக்கம் ஏகாதிபத்தியவாதிகள் தமது முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்கும் பொதுநலவாய நாடு ஒன்றின் சுயாதிபத்தியம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் பயன்பட்டு வெறும் பழிவாங்கும் வெஞ்சினத்தை வெளிக்காட்டிய சீர்திருத்த இயக்கமாக சீரழிந்துவிடும்.

இந்த அடிப்படையான கேள்வியை Channel 4 தொலைக்காட்சி நிறுவனம் எழுப்பாததற்கு முக்கிய காரணங்கள் உண்பாடு. ஒன்று ஈழத்தமிழர்களின் பிரிவினை கோரிக்கை ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக இருப்பது. இரண்டு இந்த அரசியல் நியாயத்தை ஏற்றுக்கொண்டால் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகி விடுவார்கள். இதற்குப் பின்னால் அவர்களுக்குச் சூட்டிய பயங்கரவாதப் பட்டம் பொய்யாகிவி,டும்.

யுத்தங்களை சட்டபூர்வமானவை, சட்டவிரோதமானவை என வகைப்படுத்தும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் ஒக்ரோபர் 24, 1945 முதல் இன்று வரையான 66 ஆண்டுகள் ஐநா (Uniited Nations- UN) நடத்திக் கொண்டிருக்கும் அனைத்துக் குற்றங்களும் சட்டபூர்வமானதாக மாறிவிடும். இஸ்ரேலின் இருப்பு நியாயமாகிவிடும்! பாலஸ்தீன படுகொலை சட்டபூர்வமாகிவிடும்!!

காலனி ஆதிக்கம் கிழித்துக் கீறிய எல்லைக் கோடுகளால் நிர்மாணிக்கப்பட்ட இறைமையின் பேரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பேரரசுகளும் சிற்றரசுகளும் அந்நாட்டுக்குள் உள்ள தேசங்கள் மீது தொடுக்கும் தேசிய ஒடுக்குமுறை யுத்தங்கள் சட்டபூர்வமானவை ஆகிவிடும். இந்திய பேரரசு இவ் இறையாண்மையின் பெயரால் 56 தேசங்களின் மீது இந்த சட்டபூர்வமான யுத்தத்தை கட்டவிழ்த்து வருகிறது. ஒரு சிற்றரசின் வேண்டுதலின் பேரிலோ அல்லது அதை மிரட்டி பணிய வைத்தோ ஒரு பேரரசு சிற்றரசுக்கு எதிராக தொடுக்கும் அனைத்து ஆக்கிரமிப்பு யுத்தங்களும் சட்டபூர்வமானதாகிவிடும். இந்தத் தர்க்கத்தின் படிதான் திருவாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அமைதிப்படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் சட்டபூர்வமான துப்பாக்கிகள் என்று சட்டவாதம் புரிந்தார்..

மேலும் இப்பொழுது இப்பிரச்சனை கிளப்பப்படுவதற்கு மற்றொரு முக்கிய சர்வதேச சூழ்நிலை சார்ந்த காரணமும் உண்டு. ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்திய ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பில் ரஷ்ய முகாமைச் சார்ந்த நாடுகளை மறுபங்கீடு செய்யவும் இதர தேசங்களின் மீது தலையீடு செய்யவும் பயன்படுத்தும் ஆயுதங்களில் இப்போர்க் குற்றமும் ஒன்றாகிவிட்டது. ஏகாதிபத்திய வாதிகள் தமக்கு அடிபணிய மறுக்கிற அரசுகளையும் அரசுத் தலைவர்களையும் ஆட்சிக்கவிழ்ப்புச் செய்வதற்கான ஆயுதங்களாக மனித உரிமை மீறல், மனிதப் பேரழிவு ஆயுதம், பயங்கரவாதத்துக்கு எதிரான போர், போர்க்குற்றம், போன்ற காரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா இதற்கு தலைமை தாங்குகிறது.

இங்கிலாந்து உட்பட, இலங்கையை தமது ஆதிக்க மண்டலத்துக்குள் அடிபணிய வைத்திருப்பதுதான் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டில் ஏகாதிபத்திய வாதிகளின் மறைமுகமான நோக்கமாக உள்ளது.ஈழத்தமிழர்களின் அரசியல் ஜனநாயக சுதந்திரமோ விடுதலையோ இவர்களது நோக்கமல்ல! இதை நியாயம் செய்வதற்கு ஒரு வினாடித் தகவல் கூட Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணத்தில் சேர்க்கப்படவில்லை!

ஈழத்தமிழர்களின் மற்றும் ஈழத்தமிழின ஆதரவாளர்களின் உலகு தழுவிய சிங்களத்தின் போர்க்குற்ற எதிர்ப்பு நீதியான மக்கள் இயக்கம் ஏகாதிபத்தியவாதிகளின் இக்கபட நோக்கத்துக்கு சேவகம் செய்வதாக அமைந்துவிடக் கூடாது.

உலக மறுபங்கீட்டுக்கான போர்க்களமாக இலங்கையை மாற்றிவரும் சிங்களத்தை,பக்ச பாசிஸ்டுக்களை எதிர்த்து நாம் போராட வேண்டும். அமெரிக்க இந்திய அணியைத் துணையாகவும் ஈரான், ரஷ்யா, சீனா அணியை பிரதானமாகவும் தங்கி நிற்கும் வெளியுறவுக் கொள்கையை பக்ச பாசிஸ்டுக்கள் கடைப்பிடிக்கின்றனர். இதில் எந்த அணியைச் சார்ந்திருப்பதாலும் ஒடுக்கும் சிங்கள தேசமோ ஒடுக்கப்படும் தமிழீழ தேசமோ விடுதலை பெற முடியாது. இந்த இரண்டு அணியுமே இலங்கைத் திருநாட்டின் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்கும் ஈழதேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கும் எதிரானவை ஆகும்.

ஆனால் சிங்களத்தின் ஆளும் கும்பல்களுக்கு இதில் எந்த அணியைச் சார்ந்து நாட்டை விற்றுப் பிழைப்பது என்பதற்குள்ள உரிமையில் அந்நியர்கள் தலையீடு செய்ய முடியாது. மாட்சிமை தங்கிய மகாராணியாரின் மகுடத்துக்கு இன்றும் இலங்கை அடிபணிய வேண்டுமென இலங்கையை எவரும் கோர முடியாது.

சிங்களத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிரான வெகுஜன இயக்கம் தன்னை தனது சொந்தக் காலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். `Channel 4 தொலைக்காட்சி நிறுவன ஆவணம்` என்ற போலி ஊன்றுகோலில் தொடர்ந்து நடக்கக் கூடாது.

வேறுவிதமாகக் கூறுவதானால் ஈழத்தமிழர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வகுத்துக் கொள்ளும் அரசியல் திட்டங்களும் நடைமுறைப் போராட்டங்களும் ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்கு எதிரானதாக அமைய முடியாது. அமையக் கூடாது. இந்த அந்நிய சார்பு வழியில் ஈழத்தமிழினம் தனது சுயநிர்ணய உரிமை மற்றும் ஜனநாயக விடுதலையை அடைய முடியாது.

இந்திய விரிவாதிக்க அரசுக்கும் பக்ச பாசிஸ்டுக்களுக்கும் அடிமைச் சமரச தொண்டு புரியும் கூட்டமைப்பு “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி சொல்கிறதே தவிர போர்க்குற்றம் குறித்துப் பேசுவதே இல்லை.

தமிழ் நாட்டில் நெடுமாறன் வைகோ சீமான் சமரசவாதிகள் ராஜ பக்ச இழைத்த போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கற்பழிப்புக்களை சுவைத்து ரசித்து சுகம் ஊட்டுகிறார்கள். ஆனால் 1987 இல் இந்தியா இழைத்த போர்க்குற்றங்களைப் பற்றியோ முள்ளிவாய்க்காலில் எமது போர்வீரர்களை விச வாயு அடித்துக்கொன்ற இந்தியப் போர்க்குற்றங்களைப் பற்றியோ பேசுவதே இல்லை.

செந்தமிழன் சீமான் ஜெயலலிதாவின் செருப்பாகி  இருக்கிறான் நெருப்பாய்!

புலம் பெயர் நாடுகள் எங்கும் புளுத்துக் கிடக்கும் தமிழர் பேரவைகளும் உருத்திர குமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஏகாதிபத்தியதாச இந்திய விரிவாதிக்கபாச சமரசவாதிகளே ஆவர்.

கலைப்புவாத NGO, Tamil Net குழு ஈழத்தமிழர்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறைகளை அன்றாடம் செய்திகளாக வெளியிட்டு, திரட்டிக் கொள்ளும் வாசகர்கள் மத்தியில் ஏகாதிபத்திய சார்பு தேசவிரோத கலைப்புவாத சித்தாந்த கருத் தாக்கங்களை தொடர்ந்து ஊட்டிவருகிறது.

தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர்நாடுகளிலும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் இயக்கம் மீது இச் சமரசவாதிகளின் அரசியல் செல்வாக்கு தனிமைப்படுத்தப்படாத வரையும் ஒரு முற்போக்குத் தேசவிடுதலை இயக்கம் உருவாகாது. அவ்வாறு ஒன்று உருவாக இவர்களின் வர்க்க நலன்கள் அனுமதிக்காது. இது ஒரு ஜீவமரணப் போராட்டமாகும். இதில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இதை நாம் வென்றே தீர வேண்டும்.

எனவே எதிரிகளை எதிர்த்து சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தி நமது சொந்த ஜனநாயக வர்க்கங்களில் ஆதாரப்பட்டு நின்று நாம் போராட வேண்டும்.

Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணம் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் புதிய சிங்கள ஆளும் கும்பலான   பக்ச பாசிஸ்டுக்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் வேர் கொண்டுள்ளது.

இது  ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய இய க்கத்துக்கு  மறை முக சேமிப்புச் சக்தியாக  உதவ   முடியுமே தவிர, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஆதாரப்படுத்தவல்ல நேர்முக சேமிப்புச் சக்தியாக அமையாது.


Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணப் படத்திற்கு பிரதட்டை எடுப்போர் இந்த எல்லைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் தேசியப்படுகொலையை நடத்தி முடித்த  பக்ச  பாசிஸ்டுக்களுக்கு பழிதீர்க்க வேண்டுமென்ற நியாயமான நல் எண்ணத்தால் உந்தப்பட்டு போர்க்குற்ற இயக்கத்தில் ஊக்கத்துடன் உழைக்கும் தோழர்கள் இந்த மட்டுப்பாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பகுதியை முழுமைக்கு கீழ்ப்படுத்த வேண்டும். போர்க்குற்ற இயக்கத்தை தேசியப் பிரிவினை இயக்கத்துக்கு கீழ்ப்படுத்த வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் தேசிய பிரிவினை இயக்கத்தை பணயம் வைத்து பக்ச பாசிஸ்டுக்களை பழிதீர்க்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டமைக்கக் கூடாது.

ஈழ வரலாற்றில் இரண்டு உதாரணங்கள்:

1989 இல் இந்தியப்படையை வெளியேற்றும் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் – பிரதித் தலைவர் மாத்தையா தலைமையில் பிரேமதாசாவுடன் உடன்பாடு கண்டனர். இதன் விளைவாக பிரேமதாசா இந்தியப்படையை வெளியேறுமாறு கோரினார். இந்தியப்படை வெளியேற வேண்டியதாயிற்று. இதை அடுத்து பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பிரேமதாசா விடுதலைப் புலிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மீண்டும் யுத்தம் வெடித்தது. இதனால் பிரிவினை இயக்கத்தைப் பாதுகாக்க விடுதலைப் புலிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மாறாக இந்தியப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகள் சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டிருந்தால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு அன்றே அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள்.

2002 பேச்சுவார்த்தையில் அன்ரன் பாலசிங்கம் என்கிற பிரம்ம ஞானி- இதைத் தலைகீழாகச் செய்தார். ஆனையிறவுத் தாக்குதலை அடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கிய மாபெரும் பாய்ச்சலை முடக்கிய ஏகாதிபத்திய வாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் விடுத்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு அரசியல் தீர்வுக்கு சிங்களத்துடன் முயலும் படியான நிர்ப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர் நோக்கினர்.

இத்திருப்புமுனையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் பேசும் மக்களிடையேயான பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரியிருக்க வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால்,

1. 1972 அரசியல் அமைப்புச் சட்டத்தை எதிர்த்தும், 1977 இல் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தும் தமிழீழமக்கள் ஜனநாயக ரீதியில் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் அளித்த தீர்ப்பை மீறுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு அதிகாரம் இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டிருக்கும்

2. அதை ஏகாதிபத்தியவாதிகள் மறுத்திருந்தால் அவர்களும் இந்திய விரிவாதிக்க அரசும் ஈழமக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் அம்பலப்பட்டுப் போயிருப்பார்கள்.

3. விடுதலைப் புலிகளின் நீதியான யுத்தத்திற்கு ஜனநாயக அடித்தளமும் மக்கள் ஆதரவும் இருந்திருக்கும்.பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒரு பொதுத் தேர்தலால் முறியடிக்க முடிந்திருக்கும்.

4. நோர்வேயால் தமிழீழமக்களின் பிரிவினைக்கான சர்வஜன வாக்கெடுப்பை நிராகரித்திருக்க முடியாது. ஏனெனில் சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்து போது இந்த ஜனநாயக நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டது.

அது ஏன் ஈழத்துக்குப் பொருந்தாது என்று எரிக் சொல்ஹெய்மும் சொல்லவில்லை. இதை எதிர்த்து புலித் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கமும் தேசத்துக்காக குரல் எழுப்பவில்லை. இதை எழுப்பியிருந்தால் தமிழீழப் பிரிவினைக்கு எதிராக நோர்வே நடத்தி முடித்த சதிப்புரட்சியை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க முடியும்.

இவ்வாறு ஒரு தத்துவாசிரியராக தேசத்தின் குரலாக பாலசிங்கம் செயல்படுவதற்குப் பதில் அவர் ஏகாதிபத்திய பிரமஞானியாக. ஒரு யுத்தப் பிரபுவாக செயல்பட்டார். அவர் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைத் தான்தோன்றித் தனமாக நிராகரித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதார நிலைப்பாட்டை மீறி, அமைப்பின் அனுமதிகூட இல்லாமல் எரிக் சொல்ஹெய்முடனும் மிலிந்த மொறகொடவுடனும் கூட்டமைத்து அகசுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப்பரவலாக்கக் கோட்பாட்டை முன்வைத்தார்.

தமிழீழ மக்களதும் விடுதலைப் புலிகளதும் தமிழீழ இலட்சியமும் கைவிடப்பட்டதற்குப் பின்னால் இந்த அகசுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்க வாதிகளினதும் அவர்களது காவல் நாயான சிங்களத்தினதும் திட்டமே ஆகும்.

இந்தத் திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் உடன்பாடானவர்கள் அல்ல. அதனால் அவர்கள் எதிரிகளாவார்.. அதனால்தான் இத்திட்டத்தை எதிர்த்த விடுதலைப் புலித் தலைவர்களும் அணிகளும் அவர்களை ஆதரித்த மக்களும் களமாடிப்பலியாக இத்திட்டத்தை ஆதரித்த அத்தனைத் தப்புலிகளும் பத்திரமாகத் தப்பிவிட்டார்கள். கே.பி தப்பிவிட்டான். உருத்திர குமாரனும் தப்பிவிட்டான். இவ்வாறு நாட்டுக்கு நாடு பத்திரிக்கைக்குப் பத்திரிகை இணையத்துக்கு இணையம் என இத்தப்புலிகளின் பட்டியல் மைல் கணக்கிற்கு நீளூம்.

சேரன் சோழன் பாண்டியன் என்றும், மான் மரை கரடி என்றும், சந்திரன் சூரியன் வியாழன் என்றும், புல் புழு பூண்டு என்றும் பிதற்றித் திரியும் ``மே 18 இற்கு முந்திய`` புலித் தத்துவாசிரியர்களால் இந்த மைல்கள் நீண்ட நெடும்பயணம் நடத்துகின்றன..

இந்திய அமைதிப்படையை வெளியேற்றுமாறு கோரி பிரேமதாசவுடன் மாத்தையா நடத்திய பேச்சுவார்த்தை, சிங்களத்துடன் அரசியல் தீர்வுகாண நோர்வே அநுசரணையில்  பாலசிங்கம் நடத்திய பேச்சுவார்த்தை ஆகிய இரண்டும், விடுதலைப் புரட்சியின் ஒரு குறிப்பான கட்டத்தில் வகுக்கப்படும் அரசியல் செயல் தந்திரங்கள். அவ்வியக்கத்தின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கவல்ல சக்தி படைத்தவை என்பதைக் காட்டுகின்றன.

மாத்தையாவின் விடுதலைச் செயல்தந்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பை பேரியிக்கமாக மாற்றியது. பாலசிங்கத்தின் ஏகாதிபத்திய நலன் காக்கும் சதிகார செயல்தந்திரம் விடுதலைப் புலிகளை பூண்டோடு துடைத் தொழித்தது.

முள்ளிவாய்க்கால் கற்றுத்தருகின்ற படிப்பினை இதுதான். நாம் ஆறாக இறைத்த குருதி வீணாகாது போக நாம் பெறுவதற்குள்ள உலகம் இந்தப் படிப்பினைகளே ஆகும். இவற்றை விழலுக்கு இறைத்த நீராக்க முயலும் எந்த ஒரு சக்திகளையும் நாம் அரசியல் அரங்கில் அனுமதிக்கமாட்டோம். அவர்களை தாக்கி அழிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்! முறியடிப்புச் சமரை என்றும் நாம் தொடர்வோம்.

• மாயமான்களை கண்டு மயங்கும் சீதைகள் அல்ல நாம்!

• மாவீரர் பொட்டிட்ட போர்வீரர் நாம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Monday, 12 December 2011

”யுத்தப்பிரபு” பிரபாகரனும் அரசியல் சாணக்கியன் அன்ரன் பாலசிங்கமும்


பிரபாகரன் பயங்கரவாதியோ, யுத்தப் பிரபுவோ அல்ல, தமிழீழத் தேசியத் தளபதியே!
அது எழுபதுகளின் நடுப்பகுதி, உலகம் இரண்டு துருவங்களாக பிளவுண்டு கிடந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த ஒரு துருவ அணி, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மறுதுருவ அணியுமாக இப்பிளவு அமைந்திருந்தது.

அணிசேரா நாடுகள் எனப்பட்டவை இவற்றில் ஏதோ ஒன்றை ஏதோ அளவில் சார்ந்து நின்றவையே ஆகும். சிங்களம் அமெரிக்க முகாமைச் சார்ந்திருந்தது. இந்திய விரிவாதிக்க அரசு ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.

ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு சார்பான அரசு உள்ள ஒரு நாட்டில் அந்நாட்டை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக ஒரு அரசு இருந்த நாட்டில் அவ்வரசை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு ரசியா ஆதரவளித்தது. இவ்வாறு ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரைக் காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சிகர இயக்கங்கள் ஏதோ ஒரு ஏகாதிபத்திய அணியின் கைக் கருவிகளாக மாறியிருந்தனர்.

இதன் விளைவாக காலப் போக்கில் இவற்றில் பெரும்பாலானவை சிதைந்து சீர்குலைந்து சீரழிந்து போயின. வேறு சில ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து மக்களின் ஒடுக்குமுறையாளராக மாறின.

இந்தப் பொது விதிக்கு விதிவிலக்காக இருந்தவை மிக ஒரு சில இயக்கங்களே ஆகும். இவற்றில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது எமது பெருமைக்குரிய வரலாறாகும்.

தேசிய விடுதலைப் புரட்சியின் மிக ஆதாரமான இந்த அரசியல் யுத்த தந்திர பிரச்சனையில் கொண்டிருந்த எச்சரிக்கை காரணமாகத் தான் திம்புக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து சிங்களத்துடன் கைகோர்த்து இந்திய விரிவாதிக்க அரசு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்த போது விடுதலைப் புலிகளால் எதிர்த்துப் போராட முடிந்தது. ரஷ்ய சமூக ஏகாதிபத்திய ஆதரவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இந்தியாவின் கைக்கூலியாகி, இந்திய ஆக்கிரமிப்புப் படையின் துணைப்படையாகி ஈழத் தமிழ் மக்கள் மீது படுகொலைத் தாண்டவம் ஆடியது. விடுதலைப் புலிகளோ இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி அந்த அநியாய அந்நியப் படையை விரட்டியடித்து ஈழத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து வரலாறு படைத்தார்கள்.

விடுதலை யுத்தத்தின் முப்பது ஆண்டுகளில் சிங்களத்துடன் பல்வேறு அரசியல் பேச்சு வார்த்தைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். அவற்றில் எல்லாம் தமிழர் நலன்களை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ளவில்லை. மாறாக சமாதான முயற்சிகள் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொரு கணத்திலும் விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள்.

விதிவிலக்காக எரிக் சொல்ஹெயும் மிலிந்த மொறகொடவும் ஒஸ்லோவில் வரைந்து, அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டு ஈழத்தை அடமானம் வைத்த ஒஸ்லோ அகசுய நிர்ணய உரிமைத் தீர்மானம் அமைந்திருந்தது. இதற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உடன்பாடு கொண்டிருக்கவில்லை என எரிக் சொல்ஹெயும் பகிரங்கமாக தனது வாய்மொழி மூலமாக சான்று பகர்ந்துள்ளார்.

ரோக்கியோ பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு அடிமைத் தீர்வைத் திணிப்பதற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் விலை பேசப்பட்டது. அத்தகைய கேடுகெட்ட பேரத்தை தூக்கியெறிந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.

இறுதியாக முள்ளிவாய்காலில் உயிர்ப்பிச்சை தருகின்றோம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்று கூறினார் ஒபாமா. அப்போதும் கூட விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. மாறாக மெளனிப்பதாக அறிவித்து தமது களஞ்சியத்தை வெடிவைத்து தகர்த்தனர்.

மேலும் ஈழத்தின் நலன்களில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்கு எதிராக, எந்த சர்வதேச சக்திகளோடும் விடுதலைப் புலிகள் கூட்டு வைக்கவில்லை. மாறாக அச்சக்திகளை எதிர்த்துப் போராடியே வந்தார்கள்.

குட்டிமுதலாளித்துவ வர்க்க இயல்பு காரணமாக ஊசலாட்டமும், சந்தர்ப்ப வாதமும், அனுபவ வாதமும், இருந்த போதும் ஈழத் தமிழினத்தின் விடுதலை என்ற அம்சத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு விடுதலைப் போராட்டத்தை பொறுப்பேற்றிருந்த தமது முப்பது வருட வாழ்வில் எந்தத் துரோகத்தையும் இழைக்கவில்லை. இது ஒர் இமாலய சாதனையாகும். இதற்காக ஈழத்தமிழ் இனம் மற்றும் அவர்களது விடுதலையை தொடர்ந்து முன்னெடுக்கப் போகும் அடுத்த தலைமுறையினர் விடுதலைப் புலிகளுக்கு நன்றி கூற என்றும் கடமைப்பட்டவர்கள்.

ஆனால் ஈழத்தமிழின விடுதலையில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்தும், ஒடுக்கும் சிங்களத்திடமிருந்தும் தமிழீழத் தனிநாடு விடுதலை பெறுவது. இரண்டு விடுவிக்கப்பட்ட தமிழீழ நாட்டில் ஜனநாயக அரசுமுறையையும், ஜனநாயக சமூக பொருளாதார முறையையும் உருவாக்குவது. இந்த இரண்டாவது அம்சத்தை விடுதலைப் புலிகள் முற்றிலும் தலைகீழாக கையாண்டனர். இதில் அவர்கள் கொண்டிருந்த எதிர்மறையான புரிதல் விடுதலை இலட்சியத்தை பலப்படுத்துவதற்குப் பதில் பலவீனப்படுத்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாறு அவர்கள் இழைத்த எண்ணற்ற தவறுகளில் ஒன்றைக் கூட தங்கள் வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. திருத்திக் கொள்ள முயலவுமில்லை என்பது ஒரு மிகவும் துரதிஷ்டவசமான சோகமாகும்.

ஆனால் இச்சிந்தனைப் போக்குக்கான முழுப் பொறுப்பும் விடுதலைப் புலிகளை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்களுக்கு மட்டுமே உரித்தானதும் அல்ல. அவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதும் அல்ல. கட்சி ஒன்றும் வானத்தில் இருந்து விழுவது கிடையாது. அதுவும் ஒரு சமுதாய விளைபொருளே ஆகும்.

ஈழத்தமிழ்ச் சமூகம் ஒரு ஜனநாயக சமூகம் கிடையாது. மரபுவழியில் விடுதலைப் புலிகளுக்குக் கையளிக்கப்பட்ட அரசியல் ஒரு ஜனநாய அரசியல் கிடையாது. சமூக உறவில், தொழில் உறவில், அரசியல் உறவில் எந்த வடிவங்களிலும் ஜனநாயக அமைப்பு முறை கிடையாது.

குடும்பம், கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வெகுஜன அமைப்புக்கள் எனப்பட்ட எவையும், ஜனநாயக ரீதியான நிறுவனங்கள் அல்ல. தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஜே ஆர் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படித் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாரோ அதுபோலவே தான் அமிர்தலிங்கமும் சமஷ்டிக் கட்சியை வைத்திருந்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஒழுக்கக் கோவைகளை வைத்து மிரட்டுகிற அமைப்பு வழிமுறை அது. தூய தலைவன் தீய தொண்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்..எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாராளுமன்றமோ ஒரு தேசிய இனத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிக் கொண்டிருந்தது. மலையகத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்திருந்தது. இதற்கும் மேலாக தனது சொந்தப் பிரதமரின் குடியுரிமையைப் பறித்து வீட்டுக் காவலில் பூட்டி வைத்திருந்தது. இதுதான் எமது சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகம் வாழ்ந்த கதை.

மார்க்சியத்தோடு முற்றாக முறித்துக் கொண்டு தூரத்துறந்தோடி விட்டதன் பின்னால் இந்தச் சமுதாயத்தின் விளைபொருளான ஒரு கட்சியிடம் இருந்து எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். இந்த வரலாற்றுக் காரணங்களின் மற்றும் நியதிகளின் எல்லைக்குட்பட்டுத் தான் ஒரு தனிநபரதோ ஒரு கட்சியினதோ வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்யமுடியும். மதிப்பீடு செய்யவேண்டும்.

மரபு வழியாக விடுதலைப் புலிகளுக்கு கையளிக்கப்பட்ட அரசியல், ஜனநாயக விரோத குறுமின வாதமாகும். வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றி வரலாற்றுப் பழிதேடிக் கொண்ட சம்பவம், துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறந்த அதிகாரம் மட்டுமல்ல சமூக அங்கீகாரத்துடனும் கூடியதுதான். மரபு வழியாக கையளிக்கப்பட்ட ஜனநாயக விரோத குறுமினவாத அரசியல் சிந்தனைப் போக்கு துடைத்தெறியப்பட்டு அதனிடத்தில் மக்கள் ஜனநாயக அரசியல் சிந்தனைப் போக்கு படைத்தெடுக்கப்படாமலேயே ஆயுதப்போராட்டம் தொடங்கிவிட்டது. தொங்குபாலத்தில் நடக்கிற மனிதனைப்போல ஆயுதப் போராட்டம் ஜனநாயக விரோத அரசியல் சிந்தனைப் போக்கின் மேலே நடந்து வந்தது. இது ஒரு வரலாற்று விபத்து. இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிதும் பொறுப்பாளிகள் அல்ல. உண்மையில் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் பிற்பட்ட, பலவீனப்பட்ட நிலைமையே இதற்கு முக்கிய பொறுப்பாகும்.

இது இன்னொரு சிறப்புரிமையையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கும். உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பலவீனமாக இருந்த, ஏகாதிபத்திய பிற்போக்கு தலைவிரித்தாடிய மூன்று தசாப்தங்களில் விடாப்பிடியாக விடுதலை யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள். சொல்லப் போனால் தனித்து நின்று போராடினார்கள்.நேபாளத்தில் மாவோயிஷ்ட்டுக்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட பிரசாந்தாவின் கட்சி மன்னரைப் பதவியில் இருந்து இறக்கியதுமே மக்களுக்குத் துரோகமிழைத்து இடைவழிச் சமரசம் செய்து ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டமைத்து ஆயுதங்களையும், போராளிகளையும் ஐநா சிறையில் அடைத்து விட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்கள். இத்தகைய கேடுகெட்ட சமரசங்களின் புறவய நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடினார்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு ஸ்தாபனம் என்ற வகையிலோ அல்லது தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களை அதன் தலைவர் என்ற முறையிலோ ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேற்கண்ட வரலாற்று நிபந்தனைகளுக்கும் நியதிகளுக்கும் நியமங்களுக்கும் உட்படுத்தித் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

அன்ரன் பாலசிங்கம், நவமார்க்சிய கலைப்புவாதி இதன் அரசியல் விளைவே அதிகாரப்பரவலாக்கம். எனவே ஏகாதிபத்திய நலன் காக்கும் சிங்களத்தைப் பாதுகாக்க எரிக் சொல்ஹெயுமும், மிலிந்த மொரகொடவும் தீட்டிய அகசுயநிர்ணய உரிமைத் திட்டத்தை பிரபாகரனின் அனுமதி இல்லாமல் பாலசிங்கம் கையொப்பமிட்டது தர்க்க ரீதியானதும் திட்டமிட்ட சதியுமாகும். இதன் தொடர்ச்சியே கருணாவின் உடைவு என்பதை நோர்வே ஆய்வறிக்கையும், ஆய்வரங்கில் எரிக் சொல்ஹெயுமின் பேச்சும் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஆய்வரங்கில் பேசிய சொல்ஹெயும், ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு பிரபாகரன் தெரிவித்த எதிர்ப்பை மனங்கொண்டு அன்ரன் பாலசிங்கம் கூறியதை பின்வருமாறு விபரித்தார், “ பிரபாகரன் ஒரு யுத்தப் பிரபு, அவர் ஜனநாயக சூழலில் வாழ்ந்தவர் அல்ல, மேற்குலகின் ஜனநாயகம் அவருக்குத் தெரியாது, அவர் சர்வேதேச அரசியல் அறியாதவர், சீன யுத்தப் பிரபுக்களுக்கு ஈடானவர்” இதை நான் சொல்லவில்லை. அன்ரன் பாலசிங்கம் எனக்குச் சொன்னார் என்றார் சொல்ஹெயும்.

யுத்தப் பிரபுக்கள் வட்டார மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு வட்டாரப் பிரபு இன்னொரு வட்டாரப் பிரபுவோடு ஐக்கியப்படுவதில்லை. அந்நிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டாலும் கூட ஒரு வட்டார யுத்தப் பிரபு இன்னொரு வட்டார யுத்தப் பிரபுவுடன் ஐக்கியப்படுவதில்லை. மாறாக அவருக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளர்களோடு கூட்டமைத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் பழைய சீனமும், இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

ஆப்கானிஸ்தானில் ரசிய சமூக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய யுத்தப்பிரபு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோடு கைகோர்த்துக் கொண்டார். இறுதியாக இவர் கார்சாய் அரசின் இராணுவத்தளபதியாக நியமனம் செய்யப்பாட்டார்! ("If you support me, I will destroy the Taliban and al Qaeda," Gen. Abdul Rashid Dostum told The Washington Times in an interview at his northern stronghold. "I don't want to be a minister, not even the defense minister. I need to be with my soldiers. Give me the task and I will do it."
Other ethnic leaders have made similar offers, but their support is problematic.Gen. Dostum is one of Afghanistan's most notorious warlords -- a Russian-educated former defense minister who turned against the Soviet Union in the 1980s but became a key figure in the Russian-backed fight against the Taliban a decade later.)

ஈராக்கில் சுனி சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்கள் சியா சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளனான அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்தனர்.இவர்களை சிறப்பு ஈராக் பிரஜைகள் என அமெரிக்கா சங்கேத மொழியில் அழைத்தது.(But alliance with U.S. forces against al-Qaeda has not translated into a new relationship with the Shia-dominated central government of Prime Minister Nouri al-Maliki in Baghdad, which has long been nervous about Petraeus' courtship of the Sunni insurgents and tribal militias – renamed "Concerned Local Citizen" (CLC) groups – that have helped in the anti-al-Qaeda fight.
http://antiwar.com/lobe/?articleid=11941)

சீனாவில் முதல் உள்நாட்டுப் புரட்சிகர யுத்தம் 1924-1927 ஆண்டுகளில் நடைபெற்றது.இது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு யுத்தமாகும்.1926 ஜூலையில் வடக்குப் படையெடுப்பு யுத்தம் தொடங்கியது. இது ஏகாதிபத்திய வாதிகளோடு கூட்டமைத்துக் கொண்ட சீன நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சேனையாகவும் அதன் தளபதிகளாகவும் இருந்த யுத்தப் பிரபுக்களின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.(நவ சீனப் புரட்சியின் வரலாறு- ஹோ கான் சி, தமிழ்ப் பிரசுரம் சென்னை புக்ஸ், அத்தியாயம் 4 பக்கம் 130-187)

பிரபாகரனுடைய விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இயக்கம். வட்டார இயக்கம் அல்ல. இலங்கையில் தமிழர் தாயகப் பரப்பான வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து அதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய தேசிய இயக்கமாகும். பிரபாகரன் அரசியல் அரங்கத்தில் தோன்றுகிறவரை ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு தேசிய இயக்கம் இருந்ததில்லை. ஒருவேளை விடுதலைப் புலிகளை யுத்தப் பிரபுக்கள் என வர்ணிப்பதாக இருந்தால் அது அன்ரன் பாலசிங்கத்துக்கும் கருணாவுக்கும் பெரிதும் பொருந்துமே அன்றி தேசியத் தளபதி பிரபாகரனுக்கு சற்றும் பொருந்தாது.

அக சுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சீர்குலைவுகளை ஏற்படுத்தி எரிக் சொல்ஹெயுமுடன் இணைந்து கருணாவை உடைத்து, கேபியை விலைக்கு வாங்கி தேசியத் தளபதி பிரபாகரனை யுத்தப் பிரபு என மாசுபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்கும் காரணமான அன்ரன் பாலசிங்கம் தேசத்துரோகியே ஆகும்.

பிரபாகரன் அவர்கள் மரியாதையின் நிமித்தமும் அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாகவும் பாலசிங்கத்துக்கு வழங்கிய ”தேசத்தின் குரல்” என்ற பட்டத்துக்கு அவர் தகுதியோ பொறுப்போ உடையவர் என்று நிரூபிக்கவில்லை. நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதலே நாம் பாலசிங்கத்தின் வழி நாசத்துக்கு இட்டுச் செல்லும் என சுட்டிக் காட்டி விமர்சித்து வந்தோம்.ஆனால் இன்று நோர்வே ஆய்வறிக்கை வெளிவந்த பின்னர் அன்று நாம் அனுமானித்த பல்வேறு உண்மைகளை இவ்வறிக்கை ஆதாரப்படுத்திய பின்னரும் அன்ரன் பாலசிங்கத்துக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு விழா எடுப்பவர்கள் மாண்ட நம் மக்களையும் மாவீரத் தோழர்களையும் தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்துபவரே ஆவர். அது மட்டுமல்ல பாலசிங்கத்தின் துரோகத்தை மூடிமறைப்பவர்கள் அத்துரோகத்துக்குத் துணைபோவதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்.

இதனால் அந்நிய சார்பு அதிகாரப் பரவலாக்கப் பாதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்திய மாபெரும் தீங்கை முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக தமிழீழ மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.பின்வரும் முழக்கங்களைக் கையில் ஏந்தி மீண்டும் எழ வேண்டும்!

* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

* தமிழீழ அரசு மக்கள் ஜனநாயகக் குடியரசு!

* தமிழீழத் தேசியத் தளபதி பிரபாகரன் நாமம் நீடூழி வாழ்க!

* மாவீரத் தோழர்களின் வீரம் நீடூழி வாழ்க!

* தமிழீழ விடுதலைப் போராட்டம் வெல்க!


                                            * இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்