Thursday, 29 September 2011

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (2)

தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்

(’தமிழர் மகாசனசபை’ இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976)

பகுதி-2
தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் எழுச்சியும் அதற்கான அடிப்படையும்

காலனித்துவ ஆட்சியில் ஏகாதிபத்தியம் வழங்கிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களிடையே ஏற்பட்ட போட்டி தமிழ்த்தரகுமுதலாளியத்தை வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை நோக்கிச் சாயச் செய்ததை முற்பகுதியில் கண்டோம். தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையேயான போட்டி 1915 இல் முஸ்லீம் வணிகத் தரகுமுதலாளியத்தை அடித்து விழுத்தியதையும், 1930 களோடு இந்திய வம்சாவழி வணிகத் தரகுமுதலாளியத்துக் கெதிராக திரும்பியதையும் இவ்விரு சந்தர்பங்களிலும், சிங்கள – தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கங்கள் கூட்டுச் சேர்ந்து நின்றதையும் பார்த்தோம். ’கொழும்புப் பிரதிநிதித்துவம்’ நிராகரிக்கப்பட்டமை (1920), 1931 தேர்தலில் 6% பங்கு கிடைத்தமை, 1936 மந்திரி சபையில் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஏகபோகம் நிறுவப்பட்டமை, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத் தின் ‘சம அதிகாரக் கோரிக்கை’ (50:50) சோல்பரி ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டமை, ஆகியவை சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தி வந்தன. இவ்வரலாற்றின் தொடர்ச்சியாகவே ‘அதிகாரக்கைமாற்றம்’, மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் உறவில் ஒரு கொள்கை ரீதியான மாற்றம் உருவாகிற்று. தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்களைத் தனது ஆதாரமாக்கிக் கொள்வது தவிர்க்கவியலாத அவசியம் ஆகிவிட்ட போதுதான் ‘தமிமக்களின் பிரச்சனைகள்’ தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்படுகிறது. அப்போதுங்கூட தமிழ்மக்களின் பிரச்சனைக்காக  முன் வைக்கப்பட்ட தீர்வுகளும், நடத்தப்பட்ட போராட்டங்களும் தமிழ்த்தரகு முதலாளிய நலன்களை அடைந்து கொள்வதுக்கு அப்பால் சென்றுவிடாதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.

அதிகாரக் கைமாற்றத்தின் முதற் சாதனை மலையகத்தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையே என்பது எல்லோரும் அறிந்ததே!. இதன்மூலம் வாக்குரிமை அளிக்கத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டோர் 1) புத்திசுவாதீனமற்றவர், 2) கைலஞ்ச ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், 3) மலையகத் தொழிலாளர்கள்! ! இந்த மானங்கெட்ட செயல் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஜனநாயகப் பண்புக்கும், அவர்கள் பெற்றுக் கொண்டது ”சுதந்திரம்” தான் என்பதற்கும் போதுமான சான்று என்பதை போகிற போக்கில் சொல்லிக் கொள்கிறோம். – மலையகத் தமிழரின் வாக்குரிமையே இந்திய வம்சாவழித் தரகுமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் பலமாக அமைந்தது. இது பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 10 பிரதிநிதித்துவத்தைத் தேடிக்கொடுக்க வல்லதாக இருந்தது. சிங்கள –இந்திய வம்சாவழி வணிகத் தரகுமுதலாளிய வர்க்கங்களிடையே எழுந்த போட்டி இவ் அரசியல் பலத்தை தகர்ப்பதை அவசியமாக்கியது. 1930 களில் தீவிர மடைந்த இம்மோதல் 1948 இல் அதிகாரம் கைக்கெட்டியதோடு ஒரு முடிவுக்கு வந்தது.

வாக்குரிமையைப் பறித்ததானது, அரசியல் அதிகாரத்தில் தனது ஏகபோகத்தை நிலைநிறுத்தும் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் முயற்சியாகும். இதுவே தமிழ்த்தரகுமுதலாளியத்தை அச்சுறுத்தியது. அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு முன்னர் நின்றதுபோல் இனிமேலும் இவ் ஏகபோக விருப்பத்துக்கு துணை நின்றால் அது தன் தலைக்கே ஆபத்து என்பதை செல்வநாயகம் உணர்ந்து கொண்டார். இந்த நிலையில் சிங்கள –தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையேயான உறவு குறித்து ஒரு கொள்கைப் பிரச்சனை எழுகிறது. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் கருத்துப்படி ‘சிங்களத் தரகுமுதலாளியத்தின் ஏகபோகத்துக்குத் துணைபோய் அது போடுகிற பிச்சையை வாங்கிக் கொண்டு அண்டிப்பிழைப்பதாகும்! இதற்கு அவர் வைத்த பெயர் “இணைப்பாட்சி”. செல்வநாயகத்தின் கருத்துப்படி; ‘இது தலைபோகிற காரியம்; சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்துடனான கூட்டுறவை முறித்துக் கொள்ளாமலே, தமிழ்மக்களைத் தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களது பின்பலத்தில் தங்கியிருந்து, போடுகிற பிச்சையை வாங்குபவர்களாக இல்லாமல் போராடி அதிக அதிகாரத்தைப் பெறுவதற்கு முயல வேண்டும்.’ என்பதாகும். இதற்கு அவர் வைத்த பெயர் ”சமஸ்டி”. (மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’.) இங்கு ஒரு விடயத்தைக் கவனித்தாக வேண்டும். இவர்களுடைய பிரச்சனையும் சரி. அதற்குக் கண்டு கொண்ட தீர்வும் சரி தமிழ்ததரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டவை. இதற்கும் வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களுக்கும் அல்லது மலையகத் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொள்ளும் போக்கில் இருந்து, தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்க நலனை எவ்வாறு காத்துக் கொள்வது என்ற கொள்கைப் பிரச்ச னையில் தமிழ்காங்கிரஸ் உடைந்து சமஸ்டிக்கட்சி (FEDERAL PARTY) 1949 இல் தோன்றியது.பேச்சு வழக்கில் இது தமிழரசுக் கட்சி எனத் தந்திரமாக அழைக்கப்பட்டு வந்தது*

தன்வர்க்க இயல்பை மூடிமறைப்பதற்காக தமிழரசுக் கட்சி ஒரு பொய்யோடு பிறந்தது. ”மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராகவே தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை செல்வநாயகம் உருவாக்கினார்.” என்பது அந்தப் பொய். வரலாற்றைத் திரித்துப் புரட்டுகின்ற இந்தக் கும்பல் 1948 முதல் 1955 வரையான யு. என். பி ஆட்சிக்காலத்தில் இதற்காக மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் இறங்க வில்லை. இந்த மானங்கெட்ட செயலுக்கெதிராக வடக்குக் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தொடர்ச்சியாகப் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு செல்லவில்லை. 1950 எஸ். எஸ். எவ். பி ஆட்சிக்காலத்தில் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமக்கு அற்பச் சலுகைகள் கிட்டிவிட வேண்டும் என்ற நப்பாசையில் பண்டார நாயக்காவின் வேண்டுகோளுக்கிணங்க மலையகத் தமிழரின் வாக்குரிமைக் கோரிக்கை கைவிடப்பட்டது. மீண்டும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து “தேசிய அரசாங்கம்” அமைத்தபோது இதனை முந்நிபந்தனையாக வைக்கவுமில்லை. இதற்குப் பிந்திய முழுவரலாற்றிலும் இப்பிரச்சனைக்காக தமிழ்தரகுமுதலாளிய வர்க்கம் எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதில்லை. ‘பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.!

இலங்கையின் அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய வரலாற்றை மிகவும் மேலெழுந்த வாரியாக ஒப்புநோக்கும் ஒருவருக்குக்கூட தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம், சிங்களத் தொழிற்துறைத் தரகுமுதலாளியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் போராடப் புறப்பட்டிருப்பதும். சிங்கள வணிகத் தரகுமுதலாளியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் ஓய்வெடுத்துக் கொண்டதும் எளிதில் புலனாகும். இந்நடத்தையைத் தீர்மானிப்பது எது?

யு . என். பி யும் எஸ். எல். எவ். பி யும் சிங்களத்தரகு முதலாளிய வர்க்கத்தின் வணிகத்துறை தொழிற்துறைப் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளாகும். தமிழ்மக்களை ஒடுக்கவதைப் பொறுத்தவரைக்கும் இவ்விரு கட்சிகளும் ’அஞ்சல் ஓட்டமே’ நடத்தின. ஒன்றுவிட்ட இடத்திலிருந்து மற்றையது ஒடுக்குமுறையைத் தொடரும். எனவே யு. என். பி ஆட்சிக்காலங்களில் போராட்டங்கள் கைவிடப்படுவதற்கு எந்த தர்க்க நியாயமுமில்லை. …..; இவை தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களாக இருந்திருக்குமானால் ! உண்மையில் இந்தப் போராட்டங்கள் தமிழ்மக்களின் நலனை அடைவதற்காக நடத்தப்பட்டவையல்ல. எஸ். எல். என்.பி யினரின் ‘பண்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை’ பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை’ போன்ற தொழிற்துறை, தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பேணுவதற்கான வணிகக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளால் பாதிப்படைந்த தமிழ்வணிகத் தரகுமுதலாளிய வர்க்கம் தமது வணிக நலன்களைக் காத்துகொள்ள நடத்திய போராட்டங்களே இவையாகும். யு. என். பி இனரின் பொருளாதாரக் கொள்கைகள் வணிகத் தரகுமுதலாளிய நலங்களுக்கு வாய்ப்பாக அமைந்தமையால் தமது வர்க்க நலனை அடைந்து கொள்ளவும், சிங்கள வணிகதரகுமுதலாளிய வர்க்கதுடனான வர்க்க ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் இவர்கள் தமிழ்மக்களையும் போராட்டங்களையும் கைவிட்டு வந்தனர்.

இதனால் அடிப்படையில் தமிழ்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவது ஒருபோதும் பிரச்சனையாக இருந்தது இல்லை. சுயநிர்ணய உரிமையை மறுத்துக் கொண்டே தமிழ் மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்துவதில் தமக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதிலேயே பிரச்சனை எழுகின்றது. இந்த அதிகாரப்பங்கு தமிழ்த்தரகுமுதலாளியவர்க்கத்தின் நலங்களைக் காப்பதற்கானவையே தவிர தமிழ்மக்களின் நலங்களைக் காப்பதற்கல்ல என்பது சொல்லாமலே புரியும்…… மத்தியில் இந்த அதிகாரம் போதுமான அளவு ‘கவனிக்கப்படுமானால்’ மாநிலத்தில் தமிழ்மக்களை ஒடுக்கும் பாத்திரத்தை தானே செய்வதற்கு அது தயாராக உள்ளது. எப்படியும் இந்த அதிகாரத்தை பெற்றுவிடுவதற்காக அது விடாப்பிடியாக முயல்கிறது. என்வே சிங்கள –தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களைப் பொறுத்தவரையில் அவை சுயநிர்ணய உரிமைக்கு எதிரா னவை ஆகும். அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் வன்முறை கொண்டு ஒடுக்குவதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்குச் சேவகம் செய்கிறது. அதிகாரத்தில் பங்கு பெறுவதற்காக போராடுகின்ற தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் சுயநிர்ணய உரிமைப்பாதையில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்பி சீரழிக்கும் சமரச சக்திப் பாத்திரத்தின் மூலம் ஏகாதிபத்தியத்துக்குச் சேவகம் செய்கிறது. இங்கே வழிமுறைகள் தான் வேறுபடுகின்றன. தேசியப் புரட்சியை ஒடுக்குவதில் சிங்கள தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்கள் ஒன்றுபடுகின்றன.

அதிகார கைமாற்றத்துக்குப் பிந்திய அரைக் காலனிய இலங்கை அரசு, காலனியாதிக்கச் சுரண்டலைத் தொடர்ந்து வந்த, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. 1950களின் ஆரம்பத்தில் இந்நெருக்கடி கூர்மையடைந்து உணவுப் பொருட்களுக்கான மானியங்கள் வெட்டப்படு மளவுக்குச் சென்றது. இதற்கு எதிரான 1953 ஆம் ஆண்டின் ஹர்த்தால் அரசஎந்திரத்தை ஸ்தம்பிக்கச்செய்து பிரதம மந்திரியை பதவி இறக்கியது. சர்வஜன வாக்குரிமையும், 1940 களில் சுயபாசைக்கல்வி விரிவடைந்த போதும் அரசியல் அதிகாரத்திலும், அரசநிர்வாகத்துறைகளிலும் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்து (1832-1956) சொத்துடைய மேட்டிக்குடியினரின் ஆதிக்கம் பாதுகாக்கப்பட்டு வந்தது. பெருகிவந்த ‘வேலையில்லாத் திண்டாட் டத்தால்’ பாதிக்கப்பட்ட குட்டிபூர்சுவா வர்க்கம் ‘ஆங்கில ஆட்சிமொழிக் கொள்கைக்கு’ எதிராக சுயபாக்ஷைக் கோரிக்கையை முன்வைத்தது. இக்கோரிக்கை ஆரம்பத்தில் தமிழ், சிங்கள இருமொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையாகவே முன்வைக்கப்பட்டது என்பது முக்கியமானது. சிங்களத் தரகு பூர்சுவா வர்க்கங்கள் இருமொழிக் கொள்கையை ஆரம்பத்தில் வரவேற்றுப் பேசியது இதன் காரணமாகவே! ஆனால் சுயபாக்ஷை கோரிக்கை ஆளும் (ஐக்கிய தேசியக் கட்சி) கும்பல்களு க்கு எதிராகத் திரும்புகிறது. இது ஒரு நெருக்கடியாகும். உற்பத்தி வாய்ப்பற்ற, விவசாயத்தில் இருந்து வேறுபிரிந்த உபரிச் சனத்தொகைக்கு உற்பத்தி வாய்ப்பளித்துத் தீரவேண்டிய நெருக்கடியாகும். ஏகாதிபத்திய சுரண்டலின் காவல்நாய்களாக விளக்கும் சிங்களத்தரகு பூர்சுவா வர்க்கங்களுக்கு இந்நெருக்கடிக்கு எதிரான எதிர்ப்புக்களைத் திசைதிருப்ப வேண்டியது அவசியமாகி விட்டது.

நாடுதழுவிய இப்பிரச்சனைக்கு ஏகாதிபத்திய சுரண்டலை ஒழித்து சுதந்திர, முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் தீர்வுகாண்பதற்குப் பதில், சிங்களக் குட்டிபூர்சுவா வர்க்கத்தை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பித் தமிழர்களுக்கிருந்த வாய்ப்புக்களைப் பறித்துக் கொடுப்பதன் மூலம் “தீர்வு காணப்பட்டது.” இதனால் குட்டிபூர்சுவா வர்க்கத்தின் சுயபாக்ஷைக் கோரிக்கை சிங்களத் தரகு பூர்சுவா வர்க்கங்களால் தனிச் சிங்களக் கோரிக்கையாக உருச்சிதைக்கப்பட்டது. “தனிச் சிங்களச் சட்டம் சிங்களவர்களுடைய வேலையில்லாப் பிரச்சனையைப் போக்கும் எனக்கூறப்பட்டது.” (பீற்றர் கெனமன்) இதன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அரைக்காலனிய அரசுக்கு எதிராகவும் சென்றிருக்கவேண்டிய போராட்டம் தமிழ்தேசிய இனத்துக்கு எதிராக திருப்பபட்டு விட்டது. “தேசியவாதி” பண்டாரநாயக்காவின் சாதனை இது!!

இதன்மூலம் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் தனது பிற நோக்கங்களையும் சாதித்துக் கொண்டது. தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையான போட்டியில் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்தின் கருத்தியல் ஆயுதமாக வளர்ந்து வந்த “சிங்களப்பேரினவாத – பெளத்தமதவாதம்” மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்ததோடு சிங்கள ஆளும் வர்க்கங்களின் பின் சிங்கள மக்களைக்கட்டிப் போடுவதற்கான சித்தாந்த ஆயுதமாக திடப்பட்டுவிடுகிறது. 1950 களில் இலங்கையின் அரைக்காலனிய அரசை இச் சித்தாந்த அடிப்படையில் கட்டியமைத்து சிங்கள மயமாக்குவதற்கான முயற்சி ஆரம்பமாகிறது. இதன் முதல் நடவடிக்கை அரசதுறையில் இருந்த தமிழ்மக்களை வெளியேற்றுவதாகும். அரசதுறையில் தனிச்சிங்களப் பிரயோகத்தைச் சட்டமாக்கியதன் மூலம் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் இதனையும் சாதித்துக்கொண்டது. தமிழரசுக்கட்சியினரின் 1957 இன் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டமும், 1961 இன் சத்தியாக்கிரகமும், இந்த தனிச்சிங்கள பிரயோகத்தை எதிர்த்து நடத்தப்பட்டவையே. இப்போராட்டங்கள் தமிழ் மக்களை தம் பலமாக்கிக் கொள்ளும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றி வைத்தன.

”1956 ஜூன் 14 ம் நாள் சிங்கள மொழிமட்டுமே அரசகரும மொழியாகும் என்ற சட்டம் பாரளுமன்றத்தில் நிறைவேறியது. 1956 இன் 33ம் இலக்க அரச கருமமொழிச் சட்டத்தின் ஏற்பாட்டுக்கமைய தமிழ் அல்லது ஆங்கில மொழிமூலம் அரச சேவையில் சேரும் சகல ஊழியர்களும் மூன்று ஆண்டுகளில் சிங்கள மொழியில் தேர்ச்சிபெற வேண்டுமென நிர்ப்பந்திக்க ப்பட்டனர். அவ்வாறு தேர்ச்சிபெறத் தவறுவோரின் வழமையான சம்பள உயர்வு இடைநிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட கால எல்லையுள் சிங்கள மொழியில் தேர்ச்சிபெறத் தவறிய அரச ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டனர்.” இதன் விளைவை அட்டவணை 1 எடுத்துக் காட்டுகிறது.

அட்டவணை 1 – அரச துறையில் தமிழர்களின் விகிதாசாரம்

துறைகள்------------ 1956           1965              1970

நிர்வாகத்துறை       30%             20%               5%

எழுதுவினைஞர்     50%             30%               5%

மருத்துவம்,
பொறியியளாளர்,
விரிவுரையாளர்.     60%             30%               10%

ஆயுதப்
படையினர்                 40%               30%               1%

தொழிலாளர்
பிரிவினர்                     40%                20%              5%

வேறுவிபரங்களில் இருந்து இக்காலப்பகுதியில் (1959 – 1970) அரசதுறை சராசரியாக 82% சிங்களமயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மெய்விபரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன ?

தன்தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையற்றிருக்கிற ஒரு தேசிய இனத்தின் தலைவிதியை சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கம் எவ்வாறு தீர்மானித்தது என்பதைத்தான். அரசதுறையில் இருந்து தமிழர்கள் கழுத்தைப்பிடித்து வெளியில் தள்ளப்பட்டார்கள்!

எனவே மொழிப்பிரச்சனையில் தமிழ் மக்களின் நலனுக்காக குரல் எழுப்புகிற ஒரு கட்சியாக இருந்தால் அது சுயநிர்ணய உரிமைக்காக குரல் எழுப்பித்தீர வேண்டும். ‘தாய்மொழிக்கொள்கையை’ முன்வைத்துப் போராடி யிருக்க வேண்டும். மேலும் அரைக்காலனிய அமைப்புமுறையை தூக்கியெறிவதை நோக்கித் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கத்தையும் கிளர்ச்சி நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்க வேண்டும்.

அதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் செய்தது என்ன? அது தனிச் சிங்களச்சட்டத்தின் அரச எந்திரத்தை சிங்களமயமாக்கும் நோக்கம், சிங்கள ஆளும் கும்பலின் தரகுமுதலாளிய வர்க்க இயல்பில் இருந்து வருவதை மூடிமறைத்து விட்டது. அரைக்காலனிய அமைப்பு முறையில் இவ் இன ஒடுக்கலில் இருந்து விடுதலை பெற சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதில் இருந்து தமிழ்மக்களை திசைதிருப்பி விட்டது. இந்த வரம்புக்கு உள்ளே நின்றுதான் அது போராட்டத்தில் குதித்தது. இப்போராட்டம் தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு அவசியமாகியது. ஆட்சியில் இருப்பது எஸ். எல். எவ். பி இனர் என்பதாலாகும் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்! “தூக்குமேடை பஞ்சுமெத்தை” “குண்டாந்தடிக்கு அஞ்ச மாட்டோம்” இவை சத்தியாக்கிரகத்தின் வீரமுழக்கங்கள்: அடுத்த பொதுத் தேர்தல் வருகிறது. தமிழரசுக்கட்சி பெரும் வெற்றியடைகிறது. ஐக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து “தேசிய அரசாங்கம்” அமைக்கின்றது. அதிகாரப்பங்கை அடைந்து கொண்டதும் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டது. இந்தக் கசப்பான உண்மையைத் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்னவோ; 1965 – 1969 வரை தமிழரசுக்கட்சியினர் அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலத்தில் அரசுத்துறையில் இருந்து தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வீதாசாரம் முந்தைய ஆட்சிக்காலத்தை விட பன்மடங்கு அதிகமாக இருந்ததை அட்டவணை 1 காட்டுகிறது.! எது உண்மை? தமிழரசுக் கட்சியினர் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடினார்களா? தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலன்களை அடைய தமிழ்மக்களின் பிரச்சனையைப் பயன்படுத்தினார்களா?

மேலும் இவர்கள் செய்துகொண்ட இரண்டு ஒப்பந்தங்களைப் பார்ப்போம்;

பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 ஜூலை) கூறுகிறது;

”வடமாகாணத்தை ஒரு மாவட்டசபைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது மூன்று மாவட்டசபைப் பிரதேசங்களாகப் பிரித்தல்.”

டட்லி –செல்வா ஒப்பந்தம் (1965 மார்ச்) கூறுகிறது;

“இரு தலைவர்களாலும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அதிகாரங்களைக் கொண்ட மாவட்டசபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். எனினும் தேசிய அவசியங்களைக் கருத்திக் கொண்டு மேற்படி சபைக்கு பணிப்புரை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது.”

இவை சுட்டிக்காட்டும் உண்மைகள் ஆவன:

அ) தமிழ்தேசிய இனத்தின் பாரம்பரிய பிரதேசமான வடக்குக் கிழக்குப் பிரதேசங்களைத் துண்டாடி தமிழ்மக்களைத் ஒரு தேசிய இனமாக இல்லாதொழிக்கும் சதியை சிங்களத் தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்கள் கூட்டாகவே நிறைவேற்றுகின்றன. (1981 இன் மாவட்ட அபிவிருத்தி சபைகளும், பின்னர் இணைப்பு ‘C’ யிலிருந்து இந்திய இலங்கை ஒப்பந்தம், 13ஆவது திருத்தச்சட்டம் வரையான சமரசங்களும் இச்சதியை நிறைவேற்றுவதற்கான விடாப்பிடியான முயற்சியே.)

ஆ) ”தேசிய அவசியம்” என்பது அடிப்படையில் தமிழ்மக்கள் ஒரு தனியான தேசமாக இருப்பதை நிராகரித்து இலங்கையை ஒரே தேசமாக அங்கிகரிக்கிறது. “பணிப்புரை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இருத்தல் வேண்டும்” என்பது தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து  அவர்களைச் சிங்களப் பெருந்தேசியவாத ஆளும் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கட்டிப்போடுவதே அன்றி வேறொன்றுமில்லை.

இ) தமிழ்த் தேசியத்தின் பிரதேசத்தையும், சுயநிர்ணய உரிமையையும் சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதற்கு பின்னால் “இருதலைவர்களும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான அதிகாரம்” என்பதற்கு என்ன பொருள்? தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலனை எந்தளவு கவனித்துக் கொள்ள சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கம் இணங்கி யுள்ளது” என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

இவை தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கத்தின் நலனை வேண்டி நிற்கின்றனவே அன்றி தமிழ்மக்களின் நலன்களை அல்ல. எனினும் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கிடையிலேயே உள்ள போட்டியால் – இப்போட்டிக்கு எப்போதுமே பேரினவாதம் ஒரு கருவியாகப் பயன்பட்டு வந்திருப்பதனால் – இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. இதனால் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் நஸ்டமடைந்திருக்கலாம். ஆனால் இவை அமுல்படுத்தப் பட்டிருப்பினும் கூட தமிழ்மக்கள் தமது தேசியத் தேவைகளை இவை மூலம் அடைந்திருக்க முடியாது.

தமிழரசுக் கட்சியின் போராட்ட வடிவங்களைப் பார்ப்போம். கறுப்புக் கொடி காட்டுதல், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், அமைதியான ஊர்வலம், பாராளுமன்ற வெளிநடப்பு இந்த வகையான மென்மையான போராட்ட வடிவங்களையே த.அ.கட்சியினர் கையாண்டு வந்தனர். அது ஆளும் வர்க்கத்துக்கும் அதன் சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளுக்கும் இடைஞ்சல் விளைவிக்காத, மக்களுக்குப் போர்க்குணத்தை உண்டுபண்ணாத தரகு முதலாளிய வர்க்கத் தேவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இந்த வடிவங்களைக் கொண்டு சாதாரண நிலைமைகளைச் சரிக்கட்டிக் கொள்கிற இவர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் போராட்ட உணர்வு வளர்ந்துவிடுகிற அசாதாரணமான நிலைமைகளில் மக்களின் இந்த எழுச்சிக்கு வடிகால் அமைக்க கையாளுகின்ற வடிவம் ‘சட்டமறுப்பு இயக்கம்’ ஆகும்.

சட்டமறுப்பு இயக்கம் பெரும் விளம்பரத்தைப் பெறும். உணர்ச்சி பீறிட்டுப் பாயும், கட்டம் கட்டமாக போராட்டம் திட்டமிடப்படும். வழக்கம் போல் எப்போதும் முதல் கட்டம் தான் நடக்கும். அடுத்த கட்டம் வரவே வராது. அனுமதி பெறாமல் - சரியாகச் சொன்னால் அனுமதி பெற்றது மக்களுக்குத் தெரியாமல் – ஊர்வலம் தொடங்கும். பொலிஸ் குண்டர்கள் ஊர்வலதைத் தடுத்தால் கிழித்த கோட்டைத் தாண்டாது. இப்போது சட்டம் மறுக்கப்படவில்லை. ஏற்கப்படுகிறது. சட்டவிரோதமாகத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும். கைது செய்யப்பட்டால் ‘ட்ரயலற்பார்’ ( Trail at Bar) இல் வழக்காடும். இவர்களின் சட்டமறுப்பு என்பது சிறிய சட்டத்தை மறுத்து பெரிய சட்டத்தை ஏற்பதாகும். ஒரு கட்டத்தில் சட்டத்தை மறுத்து பிறிதொரு கட்டத்தில் சட்டத்திற்குக் கட்டுப்படுவதாகும்.

இதன்மூலம் மக்களின் போராட்ட எழுச்சி அரைகாலனிய அமைப்பு முறைக்கும், அரசுக்கும், அரசபடைகளுக்கும் எதிராகப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். மறுபுறம் இத்தகைய போலிப் போராட்டங்கள் மூலம் மக்களின் எழுச்சிக்கு வடிகால் அமைத்து விடுகிறார்கள். இந்தக் கைங்கரியத்துக்கான கூலியை பாராளுமன்றத்தில் நாகரீகமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இப்படி தமிழரசுக் கட்சியினர் தமது தரகுமுதலாளிய வர்க்க நலன் பாதிக்கப்படுகிற போது – எஸ். எல். எவ். பி. ஆட்சிக்காலங்களில் – “தமிழ்மக்களுக்காக போராடுவதுபோல் காட்டிக்கொள்வதும், அப்போராட்டக் கோரிக்கைகளிலும் சரி, போராட்டவடிவங்களிலும் சரி தமது வர்க்கநலனைக் காத்துக்கொள்வதும் வரலாறாக இருந்திருக்கிறது. இதே நேரத்தில் இவர்கள் தமிழ்மக்களின் காவலர்களாக, தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடுப வர்களாக கருதப்பட்டார்கள். தமிழ்மக்களின் மீது இவர்கள் தமது ஏகபோக தலைமையை நிறுவியிருந்தனர். இந்த முரண்பாட்டை இப்போது நாம் விளங்கியாக வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகியது?

எப்போதுமே வரலாற்றுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று ஒடுக்குவோரின் பக்கம், மற்றையது ஒடுக்கப்படுவோரின் பக்கம். ஒடுக்கு வோரின் நலன்களும் ஒடுக்கப்படுவோரின் நலன்களும் ஒன்றுக் கொன்று பகைமையானவை. ஏனெனில் ஒன்றை மற்றொன்று வலுக்கட்டாயமாக அடக்குவதன் மூலமே தனது நலனை அடைய நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிவர்க்கங்களும், தரகுமுதலாளிய நிலவுடமை வர்க்கங்களும் காலனிய, அரைக்காலனிய நாடுகளின் ஒடுக்கும் வர்க்கங்கள் ஆகும். தேசிய முதலாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் இவர்களால் ஒடுக்கப்படும் வர்க்கங்கள் ஆவர். இவ் ஒடுக்கப்படும் வர்க்கங்களையே நாம் ‘மக்கள்’ என்கிறோம். ஏகாதிபத்திய, தரகுமுதலாளிய. நிலவுடமை வர்க்கங்களின் கூட்டான எதிரிமுகாம் இம்மக்களை வலுக்கட்டாயமாக அடக்குவதன் மூலம் மட்டுமே தன் நலனைப் பெருக்கிக் கொள்ளமுடியும். இதற்கு அவர்கள் அரசியல் அதிகாரத்தை, சட்டங்களை, கூலிப்படைகளை, “சட்டபூர்வத்துப்பாக்கிகளை” பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டமே இதுநாள் வரையான மனித குலத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தையும் உந்தித் தள்ளிய சக்தியாக இருந்து வந்துள்ளது.

ஒடுக்கும் வர்க்கங்களின் நலன் பரந்துபட்ட பெரும்பான்மையான வர்க்கங்களின் நலனுக்கு நேர்விரோதமானது. இதனால் ஒன்று: அவர்கள் தமது சொந்தவர்க்க நலனைப் பகிரங்கப்படுத்த முடியாது. இரண்டு; தமது சொந்தவர்க்கத்தின் பலத்தில் மட்டும் தங்கி இருந்து தமது நலன்களை அடைய முடியாது. மூன்று; ஒடுக்கப்படும் வர்க்கங்கள் இருக்கவும் வேண்டும். ஆனால் அவை ஒடுக்குமுறையை எதிர்க்கவும் கூடாது. இது ஒரு முரண்பாடாகும். இம்முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு வழியில் தீர்வு காணாமல் ஒடுக்கும் வர்க்கங்கள் தமது நலனைக் காத்துக்கொள்ள முடியாது. ஒடுக்கும் வர்க்கங்களின் இப்பொதுவான அவசியம், ஒடுக்கப்படும் சமூக வர்க்கங்களை பொய்யான வழிகளில் ஏமாற்றி தம்பின்னே திரட்டிக் கொள்ளவைக்கிறது. ஒருபுறம் இவ்வாறும் மறுபுறம் சட்டபூர்வ வன்முறை மூலமும் இம்முரண்பாட்டுக்குத் ( தற்காலிக) தீர்வுகாண முயல்கின்றனர்.

இன்னொன்றும் நடக்கிறது. அது ஒடுக்கும் வர்க்கங்களுக்குள்ளேயே உள்ள போட்டியின் விளைவானதாகும். இபோட்டியின் காரணமாகவும் இவை தம்முள் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டத்துக்கான பின்பலத்தையும் இவர்கள் ஒடுக்கப்படும் சமூகவர்க்கங்களிடமிருந்தே பெற்றுக் கொண்டாக வேண்டும்.இங்கேயும் ஒரு முரண்பாடு உள்ளது. ஒடுக்கும் ஒரு சமூக வர்க்கப்பிரிவே தன்னால் ஒடுக்கப்படும் சமூகவர்க்கங்களைத் தன்பின்னால் திரட்டிக் கொள்வது அம்முரண்பாடாகும். சமுதாய வரலாற்றில் இதுவும் சாத்தியமாகவே செய்கிறது. .. .. ஆனால் முற்றிலும் தற்காலிகமாக; இது எவ்வாறு சாத்தியமாகிறது?

சமுதாயத்தின் வளர்ச்சி என்பது, அச்சமுதாயம் தானே உற்பத்தி செய்து கொண்ட உற்பத்திச் சக்திளின் வளர்ச்சியினால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு சீரான பரிணாம வளர்ச்சிப்போக்காக இருப்பதில்லை. மார்க்சின் கண்டுபிடிப்பின்படி; “வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமுகத்தின் பொருளாயத உற்பத்திச்சக்திகள் அன்றைக்கிருந்த உற்பத்தி உறவுகளோடு – அல்லது அவற்றைச் சட்டபூர்வமான சொற்களில் வெளிப்படுத்துகிற சொத்துரிமை உறவுகளோடு – இதுவரை இவை இயங்கிவந்திருக்கிற சுற்றுவட்டத்துக்குள்ளேயே மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதில் இருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகபுரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் அந்த மாபெரும் மேல்கட்டிடம் முழுவதையுமே விரைந்தோ சற்று தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன.

ஆனால் பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் – முதலாளியத்துக்கு முந்திய உற்பத்திமுறையில் இருந்து சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கிய மாறுதல் அப்படியே கண்ணாடியில் தெரிகிற விம்பத்தைப் போல் மேல்கட்டுமானத்தில் – அரசியலில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் – அச்சொட்டாக பிரதிபலிப்பதில்லை. மேலும் மார்க்ஸ் கூறுகிறார்,

“இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிறபோது உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல் இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.) சட்டம், அரசியல், மதம், கலைத்துறை அல்லது தத்துவஞானத்துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதிமுடிவாகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்போதுமே அவசியமாகும்.”

(மார்க்ஸ் ‘அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒருகருத்துரை’ – முன்னுரையில்)

இங்கே பழைய உற்பத்தி முறையின் மேல்கட்டுமானங்களான சித்தாந்த அரசியல் கருத்துக்களும் தம்மை நிலைநிறுத்தப் போராடும். இவை மாறுதலை வேண்டிநிற்கும் சமுதாய இயக்கத்தின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தி நிற்கும். இது மக்களின் சிந்தனையில் பலமாக பதிந்தும் இருக்க முடியும். இந்த நிலைமை உள்ள வரையில் பழைய உற்பத்தி உறவுகளைப் பாதுகாத்து நிற்கிற பிற்போக்கான சமுகவர்க்கங்களும் – தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம் – தமது அரசியல் தலைமையை மக்கள் மீது நிறுவ முடிகிறது. இதுவே தமிழ்த்தரகுமுதலாளியத்தின் ‘சமரசசக்தி’ பாத்திரத்துக்கான அடிப்படை ஆகும். தமிழ்மக்களின் தேசியத்துக்கு முந்திய  சாதிய, இனக்குழு, மத உறவுகளுக்கு கொள்கை வடிவம் கொடுத்து, மக்களின் வாழ்நிலையையும் அதன் தேவையாக தேசியம் இருப்பதையும் காணவிடாது தடுத்ததன் மூலம் தனது தலைமையை நிறுவிக்கொண்டது. இவ்வாறுதான் தமிழ்த்தரகுமுதலாளியவர்க்கத்தின் எழுச்சி சாத்தியமாகியது.

எனினும் இத் தலைமையானது சமுதாய வளர்ச்சிப்போக்கில் கழித்துக்கட்டப்பட்டு விடுகிற பின்தங்கிய உற்பத்தி உறவுகள் மீது ஆதாரப்பட்டு நிற்பதாகும் .இதனால் அதன் வீழ்ச்சி சர்வநிச்சயமானது. ஆனால் இது தானாகவே வீழ்ந்துவிடாது. இது வீழ்த்தப்பட வேண்டும். பொருளாதார அடித்தளம் வேண்டிநிற்கும் முதலாளித்துவப் பொருளாதார மாறுதல் அவசியமாக இருக்கும் வர்க்கங்கள் (– தேசிய முதலாளித்துவ வர்க்கம் (இடது), குட்டிபூர்சுவா வர்க்கம் (இடதுபிரிவு), தொழிலாளர்வர்க்கம், விவசாயிகள் –) தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் பிரதிநிதித்துவம் செய்யும் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் எதிர்ப்புரட்சித் தன்மையை அம்பலப்படுத்தி அதன் சித்தாந்த அரசியல் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்டெடுத்து தேசியப் புரட்சியை முன்னெடுப்பதன் மூலமே இவ்வர்க்கத்தை வீழ்த்தமுடியும். அல்லாத வரையில் – புதிய பொருளாதார உறவுகளுக்கும் அதனடிப்படையில் வளர்ந்து செல்லும் சமுதாய இயக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் இவ்வர்க்கம் தன்னைத் தானே எவ்வளவு அம்பலப்படுத்திக் கொண்டாலும் கூட – ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் எதிர்ப்புரட்சிச் செல்வாக்கு நீடிக்கவேசெய்யும்.

ஏனெனில் எவ்வளவுதான் தமிழ்த்தரகுமுதலாளியத்தின் சித்தாந்த அரசியல் செல்வாக்கு, தேசியவிடுதலை வேண்டிநிற்கும் சமுதாய இயக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற போதும் இறுதியாக பொருளாதார உறவுகளே தீர்மானிக்கும் காரணிகளாய், புரிதலுக்கு இட்டிச் செல்பவையாய் அமைகின்றன. முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ சமூக வளர்ச்சிப் போக்கை வேண்டிநிற்கும் பொருளியல் முரண்பாடு மேல்கட்டுமானத்தில் தேசியவிடுதலைப் போராட்டமாக விடாப்பிடியாக வளர்ந்துவந்த போது அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தமிழ்த்தரகுமுதலாளியம் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டது. அதன் பிற்போக்குப் பாத்திரம் அரைகுறையான வடிவில் வெளித்தெரியத் தொடங்குகிறது. இந்தளவில் தமிழ்த்தரகுமுதலாளியத்தின் வீழ்ச்சியும் அமைகின்றது. நமது பணி இந்தக் கிழட்டுக்கட்டையின் ஈமைக்கிரிகையை முடித்து வைப்பதாகும். இது தமிழ்த் தரகு முதலாளியத்தின் எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை அம்பலப்படுத்துதல், தேசியப்புரட்சியை விடாப்பிடியாக முன்னெடுத்தல் ஆகிய இரு முனைகளில் சாதிக்கப்பட வேண்டும்.

தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,பகுதி 3

ஈழத்தில் வர்க்கப் போராட்டம் பகுதி 6 (1)

ஈழத்தில் வர்க்கப் போராட்டம்

தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(’தமிழர் மகாசனசபை’ இலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை 1921-1976 )
>>>>>>>>>>>>>>>>
வரலாற்றுக் குறிப்பு: இக்கட்டுரை நவம்பர் 1989 இல் (22 ஆண்டுகளுக்கு முன்னால்), எழுதப்பட்டு புதிய ஈழப்புரட்சியாளர்களால் தமிழீழத்தில் தலைமறைவாக விநியோகிக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன்னால் பிரச்சாரப்படுத்தப்பட்ட இச் சிறு பிரசுரம் எந்தக் கருத்துத் திருத்தமும் இல்லாமல் இங்கே அப்படியே மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது
>>>>>>>>>>>>>>>>>
பகுதி1.

தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கமும், அதன் தேசிய விடுதலைப்புரட்சிக் கெதிரான இயல்புகளும்

===============================================================
”பலவீனமான மக்கள் இனங்களை அடிமைப்படுத்தும் போக்கை அதிகரித்து வரும் நவீன ஏகாதிபத்தியம் தேசிய ஒடுக்குமுறையினை உக்கிரப்படுத்தி வரும் ஒரு புதிய காரணியாகும். தேசிய ஒடுக்கு முறையை ஒழிப்பதென்பதை முதலாளித்துவ சமுக அமைப்பில் அடைவது சாத்தியமாக வேண்டுமானால், அது ஒரு முரணற்ற ஜனநாயகக் குடியரசு அமைப்பின் கீழ் மட்டுமே சாத்தியமாகும்”

- லெனின்-

===============================================================
அரசியல் பிரிவுகளின் முடிவான அடிப்படை வர்க்கப் பிரிவே,


“அரசியல் பிரிவுகளின் முடிவான அடிப்படை, வர்க்கப் பிரிவுதான் என்பது உண்மையே; இறுதியான பரிசீலனையில் நிச்சயமாக அதுதான் அரசியல் பிரிவுகளைத் தீர்மானிக்கிறது. ஆனால் இந்த இறுதியான அடிப்படை சரித்திர ரீதியாக வளர்ச்சிப் போக்கில் பங்கு பெறும் அதைப் படைப்பவர்களின் உணர்வு வளரும் போதுதான் வெளிப்படுகிறது. இந்த இறுதியான பரிசீலனையை அரசியல் போராட்டத்தினால் மட்டுமே – சில சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகள் அல்லது பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கிற விடாப்பிடியான போராட்டமாக, சில சமயங்களில் அரசியல் நெருக்கடியாக வெடிக்கிற, மற்றச் சமயங்களில் பிசுபிசுத்து தற்காலிகமாக தேக்க நிலைக்கு வருகிற போராட்டத்தினால் மட்டுமே செய்யமுடியும்.”
(லெனின் – தொகுப்பு நூல் 7 – பக் 43)

=======================================================================
தேசிய இன விடுதலையில் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் பாத்திரம்,

(’தமிழர் மகாசனசபை’ இலிருந்து தமிழர்விடுதலைக் கூட்டணிவரை,)

மிழ்மக்கள் தமது விடுதலையை வென்றெடுக்க வேண்டுமானால் தமது
வரலாற்றை விஞ்ஞான வழியில் புரிந்து கொள்வது அவசியம். தமிழ்த்தரகு
முதலாளிய வர்க்கம் தன்னைப்பற்றியும், தமிழ்மக்களின் விடுதலையைப்
பற்றியும் சொல்லியவற்றை தமிழ்ச்சமூகம் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்காங்கிரஸிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணிவரை சுமார் 50 ஆண்டுகால ஸ்தாபன ரீதியான வரலாற்றை தமிழ்த்தரகு முதலாளியவர்க்கம் கொண்டுள்ளது. இந்த நீண்ட காலப்பகுதியில் இவ்வர்க்கம் தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்கு என்ன பங்கை ஆற்றியுள்ளது என்பது இன்று வரைக்கும் சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலைமையே நீடிக்கிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது வரலாற்றை முன்கொண்டு செல்ல இரத்தம் சிந்தி எடுத்த முயற்சி தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு இந்திய விஸ்தரிப்புவாத அரசின் துணையோடு ஒடுக்கப்பட்டதற்குப் பின்னாலும் இந்த நிலைமை நீடிப்பது அந்த தேசத்தின் துரதிக்ஷ்டமே! இவ் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தேசம் தன்விடுதலைப் பாதையில் முன்னேற முடியாது. இத் தவிர்க்கவியலா தேவை கருதி தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகி விட்டது.

1. தரகுமுதலாளிய வர்க்கமும், அதன் தேசிய விடுதலைப்புரட்சிக் கெதிரான இயல்புகளும்

போர்த்துக்கேயர்(1505), ஒல்லாந்தர்(1638) ஐத் தொடர்ந்து இலங்கை பிரித்தானியரின் ஆதிக்கத்துக்கு (1796) இல் உட்பட்டது. இறுதியாக 1802 இல் இலங்கை பிரித்தானியாவின் ஒரு ‘காலனி நாடாக’ (Colony) பிரகடனம் செய்யப்பட்டது. இக் காலனித்துவ ஆட்சியாளர் தமது சுரண்டல் நலன்களில் இருந்து ஏற்படுத்திய பொருளாதார, அரசியல். சமூக மாற்றங்கள் புதிய சமூக வர்க்கங்களையும் தோற்றுவித்துள்ளன.

இக் காலனித்துவ சுரண்டல் மேலைத்தேய நாடுகளில் முதலாளித்துவ உற்பத்திக்கு வழிதிறந்த அதே வேளையில் காலனி நாடுகளை ‘முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்திமுறை’ யிலேயே நீடித்திருக்கச் செய்தன. காலனி நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட எத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களும் சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நவீன ஏகாதிபத்தியமானது காலனித்துவச் சுரண்டலையும், தேசிய ஒடுக்குமுறையையும் உக்கிரப்படுத்திய ஒரு புதிய காரணியாக உருவாகிற்று.

நமது நாட்டில் முதலாளித்துவ தொழில்துறை வளர்ச்சிக்கான மூலதனத்தயும், மூலவளத்தையும் ஏகாதிபத்தியம் அள்ளிச் சென்றது. மறுபுறம் ஏகாதிபத்திய உற்பத்திப் பொருட்களின் சந்தையாகவும் நமது நாடு மாற்றப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்’ ஆரம்பமாகியது. இதற்கு அவசியமான சலுகைகளை அண்டி வணிக நகரங்கள் தோற்றம் பெற்றன. துறைமுகங்களோடு இணையப்பெற்ற இரயில் பாதைகள், போக்குவரத்து சேவைகள் விரிவாகின. தொலைத்தொடர்புச் சாதன வசதிகள் வந்தன. இவை ஒருங்கே அமையப் பெற்ற வணிக நகரங்களை மையப்படுத்தி (கொழும்பு), ஏகாதிபத்திய பண்ட ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்ட வணிகத் தரகுமுதலாளிய வர்க்கம் தோன்றியது. ஏகாதிபத்திய சுரண்டல் ஏற்பாடுகளின் கருப்பையில் இருந்து பிறப்பெடுத்த இந்த சமூக வர்க்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிடுகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் ஒழிக்கப்படுமானால் இவ்வர்க்கமும் ஒழிந்து தீர வேண்டும் என்பதால் இயல்பிலேயே இது ஏகாதிபத்தியச் சுரண்டலின் காவல் நாயாக விளக்குகிறது. ஏகாதிபத்திய அதிகாரத்தின் இருப்பைக் கோரி நிற்கிற உள்நாட்டின் விதேசியக் குழுவாக விளங்குகிறது.

கொழும்பை மையப்படுத்திய இவ்விதேசிய, தமிழ் வணிகத் தரகு முதலாளிய வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சிகளாகவே தமிழர் மகாசனசபை(1921), அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்(1944), அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி(1949) என்பன உருவாகின. இவை வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களின் பிரதேச, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத்தேவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தேவைகளைப் பிரதிபலித்து நின்றவை ஆகும்.

தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்து எழுந்த சாதிய, இனக்குழு நிலைகளைத் தகர்த்து வடக்கு கிழக்குச் சார்ந்த ஒரு பொதுப்பிரதேசத்தாலும், பொதுப்பொருளாதாரத்தாலும் ஒரு தேசமாக ஒன்றிணைக்கப்பட வேண்டிய தேவையின் முன்னே உள்ளனர். இது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் தகர்விலும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்திலுமே சாத்தியமானதாகும். தமிழ்மக்களின் இத் தேவையை தமிழ் வணிகத்தரகு முதலாளியக் கட்சிகள் பிரதிபலிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு நேர் எதிராக சாதிய, இனக்குழு நிலைகளைப் பாதுகாத்து நிலவுடமை வர்க்கங்களுடன் கூட்டுச் சேரவும், ஏகாதிபத்தியச் சுரண்டலையும் ஏகாதிபத்திய அதிகாரத்தையும் பாதுகாத்து, அத்தகைய அதிகாரத்தில் தமக்கும் பங்கு கோருபவர்களாகவே இவர்கள் இருந்துள்ளனர். இது காலனித்துவ நாடுகளில் சுதந்திர முதலாளித்துவ வளர்ச்சியைத் தடைசெய்ய நிலவுடமை வர்க்கங்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியக் கொள்கையுடன் பொருந்திப் போகிற செயற்பாடாகும்.

பின்தங்கிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளையும், சமூகக் கட்டுக் கோப்புக்களையும் சட்டரீதியில் பாதுகாத்துநின்ற ‘யாழ்ப்பாண – தேசவழமைச்சட்டம்,’ ’மட்டக்களப்பு – முக்குவர் சட்டம்’ போன்றவற்றையும், சாதிய அமைப்பையும் பாதுகாக்க தமிழ் வணிகத் தரகு முதலாளிய வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டாகச் செயற்படுகிறது.

1928 இல் சேர்-பொன் இராமநாதன் 79 கிராமச்சங்க பிரதிநிதிகளுடன் அன்றைய வெள்ளைக்காரத் தேசாதிபதியைக் கண்டு சாதி அமைப்புமுறையிலான பாடசாலை நடைமுறைகளை வலியுறுத்தினார். தேசவழமைச் சட்டத்தின்படி தமிழர்களின் பாரம்பரியம் காப்பாற்றப்படுவது அவசியம், என வாதம்புரிந்தார்…டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போதும் சாதி அமைப்பு முறைகளைப் பாதுகாத்து வாதிட்டார். தேசவழமையை வலியுறுத்தியும் படித்தவர்களூக்கு மட்டுமே சர்வசன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் சாட்சியம் அளித்தார். 1945 இல் சோல்பரி ஆணைக்குழு முன் ’தாழ்த்தப்பட்ட மக்கள்’ சாட்சியமளிக்க வேண்டுமென்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் (1943) கோரிக்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். 1967-68 இல் சங்கானையில் ‘தேனீர்க்கடை பிரவேச உரிமை’ கோரி ஒடுக்கப்பட்ட சமுகத்தினர் நடத்திய போராட்டத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம்; ‘சங்கானையில் நடப்பது சாதிப்போராட்டமல்ல ‘சங்காய்’ போராட்டம் (வியட்நாம் போராட்டம்) எனக் கூறி தனது சாதிய வக்கிரத்துக்கு சான்று பகர்ந்தார். 1968 இல் மாவட்டபுரம் கந்தசாமிகோவில் ஆலயப் பிரவேசத்தில் சி.சுந்தரலிங்கம் என்கிற ‘அடங்காத் தமிழன்’ சாதிவெறியர்களோடும், பொலிஸ் குண்டர்களோடும் சேர்ந்து போராட்டத்தை நடத்தினார். (ஆதாரம்; சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்- புதிய பூமி வெளியீடு- யாழ்ப்பாணம் 1989)

இவ் வரலாற்று மெய் விபரங்கள் தமிழ் வணிகத்தரகு முதலாளிய வர்க்கத்துக்கும் நிலவுடமை வர்க்கங்களுக்கும் இடையிலான கூட்டையும், இவர்களது ஜனநாயக விரோத மிலேச்சத்தனத்தையும், மக்களின் தேசிய சமுக உருவாக்கத்தை தடை செய்து ஏகாதிபத்திய சுரண்டல் நலன்களுக்கு சேவகம் செய்யும் தரகுமுதலாளிய வர்க்க இயல்பையும் வெட்ட வெளிச்சமாக்குகின்றது.

இதன் காரணமாகவே 1833 இல் கோல்புரூக்-கமரென் சீர்திருத்தப்படி இலங்கை என்கிற ஒரு நாட்டுக்குள் இருந்த இரு (சிங்கள-தமிழ்) தேசங்கள் அத்தேசமக்களின் சுயவிருப்பத்திற்கு மாறாக ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்களால் தமது சுரண்டல் நலன்களுக்காக பலவந்தமாக ஒன்றிணைக்கப்பட்டதற்கு –கட்டாய இணைப்புக்கு- தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் எத்தைகைய எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக இக்கட்டாய இணைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசமைப்பில், ஏகாதிபத்திய சுரண்டலுக்குத் துணை புரிய தமக்கும் அதிகாரத்தில் பங்கு கோருபவர்களாகவே இவர்கள் இருந்துள்ளனர்.

ஒடுக்கப்படும் தமிழ் தேசத்தின் நலன்களுக்கு விரோதமாக ஏகாதிபத்திய அதிகாரத்தில் பங்கு கோரும் பிற்போக்கு வர்க்கமாக இது இருந்தமையே சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. இந்த அடிப்படையின் மீதே 1919 இல் ‘இலங்கை (வி)தேசிய காங்கிரஸ்’ எனும் சிங்கள-தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் ஒரே ஸ்தாபனம் உருவாகியது. இப்படி ஒரு ஏகாதிபத்திய அடிவருடி விதேசியக்கும்பல் தோன்றியதைத் தொடர்ந்தே ’உள்ளூர் விதேசிகளை’ அதிகாரத்தில் அமர்த்தி பயிற்றுவிக்கும் வேலையை ஏகாதிபத்தியம் ஆரம்பித்தது.

இலங்கையின் மீதான ஆட்சிப்பொறுப்பு முழுவதையும் ஏகாதிபத்தியம் தனது கையிலே வைத்துக்கொண்டு மகாதேசாதிபதி மூலம் ஆட்சி நடத்தி வந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன்படி சட்ட நிரூபண சபை (1833), சட்ட நிர்வாக சபை என்ற ஆட்சியதிகார உறுப்புக்கள் அமுலுக்கு வருகின்றன. இவற்றில் உள்ளூர் விதேசிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள், கடமைகள், அதிகாரங்கள் குறித்து ஏகாதிபத்தியம் படிப்படியாக மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. 1855, 1910, 1920, 1924, ஆகிய ஆண்டுகளில் இத்தகைய சீர்திருத்தங்களும் ‘உள்ளூர் விதேசிகள்’ அதிகளவில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பங்களில் எல்லாம் இலங்கையின் தரகுமுதலாளிய வர்க்கப்பிரிவுகள் ஏகாதிபத்திய அதிகாரத்தில் தமக்கு ‘அதிக பங்கு’ கிடைக்க வேண்டுமென்பதற்காகவே போட்டிபோட்டு வந்துள்ளன. 1920 இல் சட்ட நிரூபண சபை அங்கத்துவம் மூன்றிற்கு உயர்த்தப்பட்டபோது அதில் தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு அதிக பங்கு கிடைக்க வெண்டுமென்றும், கொழுப்பில் தனியான தேர்தல் தொகுதி வரையறுத்து ஒதுக்கப்பட வேண்டுமென்றும் தமிழ்த்தரகு முதலாளிய வர்க்கம் கோரியது. இவ் அதிகாரப் பங்குக் கோரிக்கை சிங்களத்தரகுமுதலாளிய வர்க்கத்தால் நிராகரிக்கப்பட்டதால் ‘இலங்கைத் தேசிய காங்கிரஸ்’ உடைந்து ‘தமிழர் மகாசன சபை’ (1921) இல் தோன்றியது. அதிகாரப்பங்கு போட்டி காரணமாக இவ் உடைவு ஏற்பட்டபோதும் தரகுமுதலாளிய வர்க்க ஐக்கியத்துக்கு உட்பட்ட போட்டியே இது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஏகாதிபத்திய சுரண்டலையும், இலங்கையின் காலனிய அமைப்பு முறையையும் பேணிக்காப்பதில் இவ் வர்க்க ஐக்கியம் கூட்டுறவு கொள்கிறது. அவ்வாறு பேணிக்காப்பாற்றுவதைத் தொடரும் நேரத்தில், தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வதிலேயே போட்டி எழுகிறது. இது அவர்களது ‘குடும்ப விவகாரம்’. இதில் மக்கள் எள்ளளவும் சம்பந்தம் கொள்ளவில்லை.

மாறாக இவ்வணிகத் தரகுமுதலாளிய வர்க்கங்களிடையே எழுந்த போட்டி இந்நாட்டு மக்களுக்கு பெரும் சாபக்கேடை உருவாக்கிவிட்டுள்ளன. நம்நாட்டில் தலைவிரித்தாடுகிற ‘சிங்கள பேரினவாத – பெளத்தமதவாத சித்தாந்தமும்’ மறுபுறம் ஒடுக்கப்படும் தமிழ்தேசிய இனத்துள் வளர்க்கப்பட்ட ‘குறுமினவாதமும்’ இதன் விளைவுகளே ஆகும்.

ஏகாதிபத்தியச் சுரண்டல் தோற்றுவித்த வணிகத் தரகுமுதலாளியப் பிரிவுகளாக முஸ்லீம் வணிகத்தரகு முதலாளியவர்க்கமும், இந்திய வம்சாவழி வணிகத்தரகு முதலாளியவர்க்கமும், சிங்களத் வணிகத்தரகு முதலாளியவக்கமும், தமிழ் வணிகத்தரகு முதலாளியவர்க்கமும் தோன்றின. இவர்களுள் முன்னிலை வகித்தது முஸ்லீம் வணிகத்தரகு முதலாளியவர்க்கம் ஆகும். “1880 இல் புறக் கோட்டை வர்த்தகத்தில் 86 (இந்திய வம்சாவழி வணிகத்தரகு முதலாளிய) செட்டியார் கம்பனிகளும் , 66 முஸ்லீம் கம்பனிகளும் முதன்மை பெற்றன…. விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்கள வியாபாரிகளே காணப்பட்டனர். 1890 இல் குஜராத்தைச் சேர்ந்த புதிய முஸ்லீம் வர்த்தக குழுவினர் – போரா, கோவா, மேமன் போன்றோர் – ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இடம் பெற்றனர். இவர்களே புதிய வியாபார முக்கியஸ்த்தர்களாக மாறி பிரித்தானியரின் கூட்டுப்பங்கு தாரர்களாகவும் அமைந்தனர்.” (குமாரி ஜெயவர்த்தனா ’இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள்’ – குமரன் பதிப்பகம், சென்னை 1987, பக்.18). இதற்கு எதிராக சிங்கள – தமிழ் வணிகத்தரகு முதலாளிகள் கூட்டுச் சேர்ந்து தாக்குதல் தொடுக்கின்றனர். 1915 கலவரத்தின் மூலம் இந்த ஆதிக்க நிலை அடித்து பணியவைக்கப்படுகிறது. 1946 இல் அமைக்கப்பட்ட ஐக்கியத் தேசியக்கட்சி இவர்களையும் உள்ளடக்கிக் கொண்டது. முஸ்லீம் வணிகத்தரகு முதலாளியம் எந்தளவிற்கு அடித்து வீழ்த்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது. இதிலிருந்து சிங்களத்தரகு முதலாளிய வர்க்கத்தை அண்டிவாழ வேண்டிய நிலைக்கு முஸ்லீம் வணிகத்தரகு முதலாளியம் ஆளானது. இதையே அவர்கள் ‘தேசிய ஒற்றுமைக்கு’ முயல்வதாகக் கூறி முஸ்லீம் மக்களை ஏமாற்றி வந்தனர். இக்கலவரத்தில் சிங்களத்தரகு முதலாளிய வர்க்கத்துக்கு நியாயம் கோரி இலண்டன் சென்று திரும்பிய போது தான் சேர். பொன். இராமநாதன் தேர்கட்டி மரியாதை செலுத்தப்பட்டார். இது முஸ்லீம் வணிகர்களை ஒடுக்குவதில் சிங்கள – தமிழ் வணிகர்களிடையே இருந்த ஐக்கியத்தைக் காட்டுகின்றது. இதில் ‘இனப்பெருமைக்கு’ எதுவுமிருப்பதாகத் தெரிய வில்லையே……. வரலாற்று மோசடியைத்தவிர!.

இரண்டாவது மோதல் இந்திய வம்சாவழி வணிகத்தரகு முதலாளிய வர்க்கத்துக்கும் சிங்களவணிகத் தரகுமுதலாளியவர்க்கத்துக்கும் இடையே தோன்றி வளர்ந்தது. 1930 களில் கூர்மையடைகின்றது. ஒரு புள்ளிவிபரப்படி மொத்த வணிகத்தில் 90% உம், இடைவணிகத்தில் 60% உம், சில்லறை வியாபாரத்தில் 40% உம் இந்திய வம்சாவழி வணிகத்தரகு முதலாளிகளின் கைகளில் இருந்ததாக அறியமுடிகிறது. (க. மோகன்ராஜ்—இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் ஈழ ஆய்வு நிறுவன வெளியீடு – சென்னை 1984, பக். 63. மேற்கொள்ளப்பட்டது) இவ்வணிகப்போட்டி இந்தியர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரமாக மாற்றப்படுகிறது. இதுவே கொழும்புவாழ் இந்தியவம்சாவழி தரகுமுதலாளிய வர்க்கத்துக்கு மலையக மக்களைத் தன்பின் திரட்டுவதன் மூலம் தம்மைப் பலப்படுத்தி தமது வர்க்க நலனைக் காத்துக்கொள்ளும் தேவையை உருவாக்கியது. “நாம் இந்தியர்கள்” என்ற உணர்வு மலையகத் தமிழர்களுக்கு ஊட்டப்பட்டதற்கும் இந்தியத் தரகு பெருமுதலாளிய வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளான காந்தி, நேருவின் ஆசீர்வாதத்தோடு ‘இலங்கை இந்தியக் காங்கிரஸ்’ (1939). தோன்றுவதற்கும் இதுவே காரணமாகியது. இந்திய வம்சாவழி தரகுமுதலாளிய வர்க்கத்தின் அதிகாரப் பேரத்துக்கான பின்பலமாக மலையகத் தமிழர் அமைவதனால் அவர்களின் அரசியல் பலத்தைத் தகர்ப்பது சிங்கள- தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களுக்கு அவசியமாகிறது. சேர். பொன். அருணாச்சலம் “தோட்டக்கூலிகளுக்கு” வாக்குரிமை வழங்கக் கூடாதென வெளிப்படையாகவே வாதிட்டு வந்தார். இது இந்திய வம்சாவழி வணிகத்தரகு முதலாளிகளின் வணிக ஆதிக்கத்தை தகர்ப்பதில் சிங்கள – தமிழ் வணிகத்தரகு முதலாளிகளிடையே இருந்த ஐக்கியத்தைக் காட்டுகிறது. அதிகாரக் கைமாற்றத்தின் பின்னால் வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலம் இவ்வணிகப் போட்டிக்கு முடிவு கட்டப்படுகிறது.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் வணிகத் தரகுமுதலாளிய வர்க்கங்களுக் கிடையேயான ‘அதிகாரப்போட்டி’ மூடிமறைக்கப்பட்டு தத்தம் இனநலன்கள் உயர்த்திப் பிடிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டது. இது தமது தரகுமுதலாளிய நலன்களைக் காத்துக்கொள்ள தத்தம் இனப்பிரிவை சமூக அடிப்படையாக மாற்றிக் கொள்ளும் தந்திரம் ஆகும். இவ்வாறு சிங்களமக்கள் ‘சிங்களப் பேரினவாத – பெளத்தமதவாதக் கருத்தியலில்’ வளர்த்தெடுக்கப்பட்டனர். மலையகமக்களுக்கு ‘நாம் இந்தியர்’ என்ற உணர்வு ஊட்டப்பட்டது. முஸ்லீம் மக்கள் குறுகிய மத உணர்வில் கட்டிப்போடப்பட்டனர் இதே வழியைத் தமிழ் தரகுமுதலாளியமும் மேற்கொள்கிறது. அது பின்வரும் வரலாற்றுச் சம்பவங்களூடே நடந்தேறுகிறது.

1929 இல் டொனமூர் விசாரணைக் கமிக்ஷன் சர்வஜன வாக்குரிமையை ஏகாதிபத்தியம் வழங்கிய சலுகைபோல (!) இலங்கையருக்கு அளித்தது. உள்ளூர் விதேசிகளுக்கு அதிகளவு எண்ணிக்கையில் பயிற்சி அளிக்க விரும்பி தமது எதிர்கால காவல்நாய்களை உருவாக்கும் நோக்கில் –டொனமூர் அரசியல் யாப்பினதும் சர்வஜனவாக்குரிமையினதும் அடிப்படையில் இலங்கையில் முதலாவது பொதுத் தேர்தல் 1931 இல் நடைபெற்றது. இத்தேர்தலைப் பகிக்ஷ்கரிக்கும்படி ‘யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்’ கோரிக்கை விட்டது. இத் தேர்தல் பகிக்ஷ்கரிப்புக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆவர். தேர்தல் பகிக்ஷ்கரிப்பு இயக்கத்தின் தோல்விக்குப்பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் (1932) ஜி. ஜி. வெற்றி பெற்றார். 1931 இல் அமைக்கப்பட்ட சட்டசபைக்கு இருந்த அதிகாரத்தில் சிங்களத் தரகு முதலாளிய வர்க்கத்துக்கு 80%பலமும், தமிழ்தரகு முதலாளிய வர்க்கத்துக்கு 6% பலமும் கிடைத்திருந்தது. இது 1936 இல் முறையே 72%மாகவும், 16% மாகவும் இருந்தது. எனினும் 1936 மந்திரி சபை சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஏகபோகத்தின் கீழ் சென்றுவிடுகிறது. இந்தப் பரிதாபகரமான நிலமையில் தமிழ் தரகுமுதலாளிய வர்க்கம் சோல்பரிக் கமிக்ஷன்முன் (1944) இல் 50% பிரதிநிதித்துவம் கோருகிறது. (50:50 கோரிக்கை). அதுவும் நிராகரிக்கப்படுகிறது. இப்போதுதான் தமிழ் காங்கிரஸ் (1944)”தலைநிமிர்கிறது”.இங்கே ஒரு உண்மை தெட்டத் தெளிவாகிறது. தமிழர் மகாஜன சபையில் இருந்து இந்தத் தமிழ் காங்கிரஸ் வரையான இந்த 25 ஆண்டுகளிலும் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் பொருளாதாரம். பிரதேசம், அரசியல், ஜனநாயக உரிமைகள், மொழி மற்றும் பண்பாட்டுப் பிரச்சனைகள் சம்பந்தமான ஒரு கோரிக்கையையோ, ஒரு நடவடிக்கையையோ மருந்துக்கேனும் காணமாட்டீர்கள்!! அத்தனையும் தமிழ்தரகுமுதலாளிய வர்க்கத்தின் அதிகாரப்போட்டியோடு சம்பந்தப்பட்டவை! ! மேலும் இச்சம்பவப் போக்குகள் நமக்கு உணர்த்துவதாவது;

அ) இலங்கையில் சிங்களப்பேரினவாத – பெளத்தமதவாத கருத்தியல் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராட்டத்தில் இருந்து மக்களைத் திசைதிருப்புவதற்கான பொருத்தமான சித்தாந்த ஆயுதம் என்பதை ஏகாதிபத்தியம் இனங்கண்டு அதனை அரசியல் அதிகார அளவில் திடப்படுத்த சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தை அணைத்துக் கொண்டது.- பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் டொனமூர் அரசியல் யாப்பை இவ்வாறுதான் புரிந்து கொள்ளமுடியும் !-.

ஆ) இதற்கிடையில் தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம் தனது வர்க்க நலனை அடைவதற்கு ஏகாதிபத்தியத்திடம் அதிகாரப்பிச்சை கேட்டு நிற்கிறது. கொழும்பு பிரதிநிதித்துவத்திலிருந்து, ஐம்பதுக்கைம்பது வரை இது வெற்றியளிக்காததையொட்டியே தமிழ்மக்களை தன் பின்பலமாக்கிக் கொண்டு தனது ’அதிகாரப் பங்கை ‘ சற்று அதட்டிக் கேட்க ஆசைப்பட்டது. அதாவது வடக்குக் கிழக்கு தமிழர்களை நோக்கிய கொழும்புத் தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் திருப்பம் அதன் சொந்த வர்கக நலனின் பாற்பட்டதாகும். இது தமிழரசுக்கட்சியின் தோற்றத்தோடு ஒரு போக்காக வளர்கிறது.

இவ்வாறு ஏகாதிபத்தியச் சுரண்டலிலும், ஏகாதிபத்திய அதிகாரத்திலும் பங்குபெறுவதற்கான ‘நாய்ச்சண்டையில்’ ஈடுபடுகிற வர்க்கமாகத்தான் தரகுமுதலாளிய வர்க்கம் இருந்துள்ளது. ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரல் வேறுமூலையில் இருந்து ஒலித்துள்ளது. நாடுபிடிக்கும் ஏகாதிபத்திய நெருக்கடிகளுக்கெதிராக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏகாதிபத்திய நிலப்பறிமுதலுக்கும், கொடிய வரிவிதிப்புக்களுக்கும் எதிராக விவசாயிகளின் தன்னியல்பான போராட்டம் வெடித்துள்ளன. அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து மக்கள் போராடியுள்ளனர். இவை தம் இயல்பில் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருந்த போதும் தன்னியல்பான போராட்டங்களாகவே இருந்துள்ளன. இத்தன்னி்யல்பின் காரணமாக, ஆதிக்கம் செலுத்திய சிங்களப் பேரினவாத பெளத்தமத வாத கருத்தியலுக்கு இறுதியில் இவை பலியாகிவிட்டன.

அக்காலத்தைய இடதுசாரி இயக்கங்கள் மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிக்கும் பொருளாதார உறவுகளைப் புரிந்து கொண்டிருக்கவில்லை. அதனால் ஏகாதிபத்திய அதிகாரத்தை தூக்கிவீசவும், தரகுமுதலாளிய நிலவுடமை வர்க்கங்களை எதிர்க்கும் தேசிய விடுதலைப்புரட்சியை முன்னெடுப்பதற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சிங்கள –தமிழ் தேசங்களை ஐக்கியப்படுத்தும் திட்டத்தின்மீது தமது போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இதனாலேயே அவற்றை தன்னியல்பானவை என்கின்றோம்.

குறித்த ஒரு காலப்பகுதியில் தமது இலட்சியத்தையும், இலட்சியத்தின் எதிரிகளையும் நண்பர்களையும், விஞ்ஞான வழியில் வரையறை செய்து எதிரிகளுக்கெதிராக நண்பர்களை ஐக்கியப்படுத்தி போராட்டப்பாதையில் முன்னேறத்தவறுகிற எந்த ஒரு கட்சியும் எதிரிக்கும் மக்களுக்குமிடையில் ஊசலாட நிர்பந்திக்கப்படுகிறது. பொதுவாக ஊசலாட்டத்துக்கு நேருகின்ற கதி என்னவென்றால் அது எதிரிகளுக்கு பலியாகிவிடுவதாகும். எந்தத் தன்னியல்பான இயக்கத்துக்கும் இவ்விதி பொதுவாகப் பொருந்தக்கூடியது. நமது இடதுசாரிகள் பிற்காலத்தில் சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கக் கட்சிகளான யு.என்.பி. உடனும் எஸ்.எல்.எவ்.பி .உடனும் கூட்டுச் சேர்ந்து இனவாதிகளாகச் சீரழிந்தனர் என்றால் அது ‘இலங்கைத் தேசிய காங்கிரஸ்’ உடன் கூட்டுமுன்னனி அமைத்த அவர்களது கொள்கைத்தவறின் தொடர்ச்சியாகவே கொள்ளப்படவேண்டும். இதுதன்னியல்பின் தலைவிதி.

இவ்வாறு தேசிய விடுதலைப் புரட்சிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்து முன்னேறிய வர்க்கத்தின் தலைமை மக்களுக்கு இல்லாது போனதினால் சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் தலைமை மக்கள் மீது நிறுவப்பட்டது. சிங்களப் பேரினவாத – பெளத்தமதவாத கருத்தியலின் செல்வாக்குக்கு சிங்கள மக்களும், தமிழ் குறுமினவாதத்துக்கு தமிழ்மக்களும் பலியாகினர். இதன் மூலம் சிங்கள, தமிழ், இந்திய வம்சாவழி தரகு முதலாளிய வர்க்கங்கள் தமது நலனை அடைந்தது. மக்களின் மீது ஏகாதிபத்திய நுகத்தடி மென்மேலும் தன்னை இறுக்கிக் கொண்டது.

இந்த கைங்கரியத்தை ஏகாதிபத்தியத்துக்குச் செய்து கொடுத்த தரகுமுதலாளியக் கட்சிகளாகவே இலங்கைத் தேசிய காங்கிரஸ், தமிழர் மகாஜனசபை, இலங்கை இந்திய காங்கிரஸ், சிங்களமகாசபை, தமிழ் காங்கிரஸ் ஆகியன இருந்து வந்துள்ளன. இவற்றின் முறைப்படியான வாரிசுகளாக ஐக்கியதேசியக்கட்சி, தமிழரசுக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை தோன்றின. இந்த விதேசிக் கும்பல் காலனியாதிக்க ஆட்சியிலேயே குறைந்தது 16 ஆண்டுகள் (1931 – 1947) ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து மக்களை ஒடுக்கியது. இந்தக் கும்பலிடம் 1948 இல் அதிகாரம் கைமாற்றப்பட்டதற்கு ‘சுதந்திரம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள இந்தச் “சுதந்திர”த்தின் பொய்மையைப் புரிந்து கொள்வது அவசியம்.

காலனியாதிக்கம் என்பது உலகுதழுவிய நிகழ்ச்சிப் போக்காகும். உலகுதழுவிய வகையில் ஏகாதிபத்தியம் சந்தித்த நெருக்கடி காலனியாதிக்கக் கொள்கையில் சில மாற்றங்கள் ஏற்படவும் காலனியாதிக்க வடிவத்தை மாற்றிக்கொள்ளவும் ஏகாதிபத்தியங்களை நிர்ப்பந்தித்தன. ஏகாதிபத்திய ஒடுக்குமுறை நுகத்தடியில் இருந்து தனது விடுதலையை வென்றெடுக்கும் காலனிநாட்டு மக்களின் தேசிய விடுதலைப் புரட்சிகளுக்கு 1917 ஆம் ஆண்டின் ‘ஒக்ரோபர் சோசலிசப்புரட்சி’ மாபெரும் உந்துவிசையை அளித்தது. உலகெங்கும் காலனிநாடுகள் தமது விடுதலைக்காகப் போர்க்கொடி உயர்த்தின.

இந்தியாவில் ஏகாதிபத்தியச் சுரண்டல் இரு வகை அரசியல் போக்குகளை அதன் ஆரம்ப காலத்திலேயே (1830 களிலேயே) வெளிக் கொணர்ந்தது. ஒன்று ஏகாதிபத்திய அரசை ஆதரித்து, அரைநிலவுடமையின் பொருளாதார வடிவத்தைக் கட்டிக்காத்து, அந்நியத் தன்மை கொண்ட அரசில் பங்கேற்கத்துடித்த விதேசியப் போக்காகும். மற்றையது ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு சுயதேசிய உணர்வாகும். நடுத்தர வர்க்க ஜனநாயகவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட இச்சுயதேசிய உணர்வு எண்ணற்ற விவசாயிகள் கலகங்களாகவும், தொழிலாளர் போராட்டங் களாகவும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளாகவும் வெடித்து ஏகாதிபத்திய அதிகாரத்தை அச்சுறுத்தியது. முன்னைய விதேசிப் போக்கை அரவணைத்துக் கொள்கிறது ஏகாதிபத்தியம். இதனைப் பிரதிநிதித்துவம் செய்த ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்கிற கட்சி அலகு அக்டேனியன் ஹியூம் என்ற வெள்ளைக்கார ஏகாதிபத்திய அதிகாரியால் தொடங்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே! இந்த அதிகாரி உள்நாட்டில் வளர்ந்து வந்த சுயதேசிய உணர்வை ஆராய்ந்து கூறுகிறான்:

“நம்பிக்கையற்ற ஏழைமக்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும் என்ற திகில் கொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று விழைவதையே அவை காட்டின… இந்த ஏதாவது என்பது வன்முறையே, அச்சமயத்தில் அரசின் மீது ஆத்திரமும் கசப்பும் கொண்ட – ஒருவிதத்தில் காரணமில்லாமலேயே – படித்தவகுப்பாரின் ஒரு பிரிவினர் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டு ஆங்காங்கு தலைமைப் பொறுபேற்று எழுச்சிக்கு ஒரு தெளிவான பொருள் தந்து அதை ஒரு தேசியப்புரட்சியாக நடத்தலாம் எனக் கருதப்பட்டது.” (அழுத்தம் நமது, ’இந்திய தேசியத்தின் தோற்றம்’, கோ. கேசவன், சிந்தனையகம் வெளியீடு, சென்னை,1985, பக் 167 )

ஓங்கப்பட்ட இந்த வாளில் இருந்து தமது தலையைப்பாதுகாக்க ஏகாதிபத்தியம் ஒரு கேடயத்தைக் கண்டுபிடித்தது. ஹியூம் கூறுகிறான்;

“நம் செயல்களால் விளைவிக்கப்பட்ட சக்திகள் மாபெரும் அளவில் வளர்ந்து அவற்றிடம் இருந்து தப்புவிக்க ஒரு பாதுகாப்புக் கேடயம் உடனடியாகத் தேவைப்படுகிறது. நமது காங்கிரஸ் இயக்கத்தை விடப் பயன்தரத்தக்க பாதுகாப்புக் கேடயத்தை உருவாக்க இயலவில்லை.” (அழுத்தம் நமது : நூல் மேற்கண்டது, பக் . 174 )

ஹியூமின் இம்மதிப்பீட்டின் சரியான தன்மையை 1895 இல் காங்கிரஸ் – தொடங்கி 10 ஆண்டுகளின் பின் – தலைமையுரை நிரூபிக்கிறது.

“நாம் பணியாற்றுவோம் . . . பிரிட்டன் அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லாத ராஜவிசுவாசத்துடன் இருப்போம். அப்போதுதான் காங்கிரஸை நிறுவியவர்களின் நம்பிக்கைகளைச் செயலாற்ற இயலும். இந்தியாவில் பிரிட்டன் அரசை நீக்குவதல்ல எமது நோக்கம். அதை, ஆழப்படுத்துவதாகும். அதன் தளத்தை விரிவுபடுத்துவதாகும். அதன் நல்நோக்கம் இன்னும் பலருக்குக் கிடைக்கச் செய்வதாகும். அதன் பரந்த மனோபாவத்தை அதிகப்படுத்தலாகும். இந்தியாவில் பிரிட்டன் ஆட்சியை என்றென்றைக்கும் ‘மாறா நிலைக்கு உறுதிப்படுத்தலாகும்.”

(அழுத்தமும் அவர்களே!; நூல் மேற்கண்டது. பக். 175)

இந்த விதேசிய போக்கும், ஏகாதிபத்திய நலனும் தான் இந்தியாவில் ஒரு ஏகாதிபத்திய ‘பக்கிரி’யைத் தோற்றுவித்தது. ”அண்ணல் காந்தி” என்றும் ”அகிம்சாமூர்த்தி” என்றும் அழைக்கப்படுகிற இந்தபக்கிரி இலண்டனில் படிக்கும் போது எந்த மாணவர் போராட்டத்திலும் ஈடுபட்டவர் அல்ல. ‘சைவச் சாப்பாட்டுச் சங்கம்’ அமைத்து புலால் உணவை எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இந்தியாவுக்குத் திரும்பிய பின் மொசப்பதேமியாவில் போரிடும் ஆங்கிலப்படையின் காயமுற்ற சிப்பாய்களைத் தூக்கிச் செல்வதற்காக ஒரு பாடைதூக்கும் தொண்டர்படை அமைக்கத் தயாராய் இருப்பதாக வைஸ்ராய்க்கு (பிரித்தானியாவின் இந்தியச் செயலாளர்) கடிதம் எழுதினார். முதலாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டன் இராணுவத்துக்கு ஆள்பிடிக்கும் அதிகாரியாக சேவை செய்தார். குஜராத்தில் உழவர்களை பிரிட்டன் ராணுவத்தில் சேருமாறு கேட்டு பிரசுரம் வெளியிட்டார். அப் பிரசுரத்தில் ”நாம் ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதற்காகவும், சுயராஜ்யத்தை பெறுவதற்காகவும் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு” என்று கூறி மக்களை ஏமாற்றினார் இந்த அகிம்சாமூர்த்தி.

பிரிட்டன் ஆட்சியின் போது பார்சிகளும் பணியாட்களும் பிரிட்டனுடன் பெருமளவு வியாபாரம் செய்யத் தொடங்கினர். அவர்கள் மத்தியில் இருந்து தான் தரகர்கள் உதித்தனர். ஏராளமான வியாபாரிகள் தென்னாபிரிக்காவில் தங்கி வியாபாரம் செய்து வந்தனர். அங்கு அவர்கள் நலன்களைப் பாதுகாக்க ஒரு வக்கீல் தேவைப்பட்டார். காந்தியைத் தென்னாபிரிக்காவிற்கு அழைத்துக் கொண்டனர். அவர் அங்கு தங்கியிருந்த போது ‘போயர்’கள் என்ற பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கும், தென்னாபிரிக்காவை ஆண்டுவந்த வெள்ளையர்களுக்கும் யுத்தம் நடந்தது. இந்த போயர் யுத்தத்தில் பிரிட்டனுக்கு ஆதரவான இந்தியர்களைக் கொண்ட ஒரு தொண்டர்படை அமைத்து படை காக்கும் வேலை செய்தார். இதனை அயர்லாந்து விடுதலை இயக்கப் பத்திரிகைகள் ”காந்தி என்ற நோட்டால் ( ஆபிரிக்காவில் காந்தி தங்கியிருந்த இடம்) இந்தியனின் கீழ்த்தரமான செய்கைகளைச் சொல்ல வார்த்தையில்லை” எனக் கடுமையாகத் திட்டியது.

முதல் உலகயுத்தம் முடிந்தபின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின்பு இந்தியா வில் இருந்த நிலைமைகள் காந்தியை மகாத்மா ஆக்கிவிட்டன. பயங்கரமான வறுமை, விலைவாசியேற்றம், வேலையின்மை, கறுப்புச்சந்தை என இந்தியா மோசமான நிலையில் இருந்தது. மான்போர்ட் சீர்திருத்தங்கள் வந்தது. பிரிட்டீஸ் ராஜ்யத்துக்குள்ளேயே தன்னாட்சி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது ஏகாதிபத்திய விசுவாசிகளை வென்றெடுத்து புரட்சியாளர்களை நசுக்குவதற்கான திட்டமாகும்.

எனவே தரகுமுதலாளிய வர்க்கம் மக்களைத் தமது கைகளிலேயே அடக்கி வைத்திருக்கவும், மக்களைக் காட்டி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து காலனியை அரைக்காலனியாக மாற்றுவதற்கும் உகந்த ஒரு தலைவனைத் தேடியது. காந்தியை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டனர். அவரும் ஏற்றுக் கொண்டார். அவர் வருவதற்கு முன்பே பெரும் முதலாளித்துவப் பத்திரிகைகள் அவரை ’மகாத்மா காந்தி’ என வானளாவப் புகழ்ந்தன. காந்தி வந்ததும் தனது திட்டத்தை வெளியிட்டார். அது முழுக்க நிலப்பிரபுக்களின், தரகுமுதலாளிகளின் கோரிக்கைகளாகும்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சவ்வுரி சவுராவில் ஒரு பொலீஸ் நிலயத்தைத் தாக்கி 22 பொலீஸ்காரர்களைக் கொன்றுவிட்டனர். இது ஒத்துழையாமை இயக்கத்தின்போது நடந்தது. உடனே காந்தி வன்முறையை கண்டித்து ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். அப்பொழுது அவர் “நான் ஒரு இமாலயத்தவறு செய்துவிட்டேன். சுயராஜ்யத்தின் நாற்றம் மூக்குவரை அடிக்கிறது” என்றார். அப்போது சிறையில் இருந்த சுபாஸ் சந்திரபோஸ் கோபத்துடன் ‘நீ ஒரு தலைவனாக இருப்பதற்கு லாயக்கு இல்லை. இமயமலையில் சந்நியாசியாக இருக்கவே லாயக்கு.” என்றார். இதற்கு காந்தி திமிராக பதில் அளித்தார். “நீ ஒரு கைதி, உனக்கு பேச உரிமை இல்லை, கைதி என்பவன் அரசியல் ரீதியாக இறந்தவன்!’

1930 இல் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன இயக்கங்கள் இந்தியாவைச் சூழ்ந்து கொண்டன. சில நகரங்களை ஆயுத எழுச்சிகள் மூலம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இந்த வெகுஜன இயக்கங்களைத் தடுப்பதற்காகத்தான் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் காந்தி கூறுகிறார், “ஒரு வன்முறையற்ற இயக்கம் தொடங்கப்படாவிட்டால் வன்முறை இயக்கம் தொடங்கி விடும். வன்முறை ஆட்சி வளர்ந்து வருகிறது. எனவே வளர்ந்து வருகிற கட்சியின் கட்டமைக்கப்படாத வன்முறைக்கும், பிரிட்டிஸ் பேரரசின் கட்டமைக்கப்பட்ட வன்முறைக்கும் எதிராக அகிம்சா சக்திகளை அவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம்.”

இதுதான் காந்தியின் அகிம்சையின் வர்க்க உள்ளடக்கம். காலனிய அமைப்பு முறைக்குச் சேதம் விளைவிக்காமல் இந்தியத்தரகுப் பெருமுதலாளிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் நலன்களை அடையக் காந்தியின் ஏகாதிபத்திய மூளை கண்டுபிடித்த தத்துவமே அகிம்சை ஆகும்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியாவின் விடுதலையை ஆயுதப் போராட்டம் மூலமே அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு போராடி வந்த பகவத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கில் போட்டுவிட்டு பிற அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக ‘காந்தி – கிர்வின் ஒப்பந்தம்’ செய்யப்பட்டது. இதில் காந்தி கையொப்பம் இட்டார். அவர் கையெழுத்திடச் செல்லுமுன் ஏராளமானோர் பகவத்சிங்கை விடுதலை செய்யாமல் காந்தி கையொப்பம் இடக்கூடாது என ஆர்பாட்டம் செய்தனர். அதற்குக் காந்தி ’பகவத்சிங் அரசியல் கைதியல்ல’ எனத் திமிராக பதிலளித்தார். 1930ம்’ ஆண்டு அக்டோபர் 7 இல் விக்ஷேட நீதிமன்றம் பகவத்சிங், சக்கன், ராஜகுரு ஆகிய போராளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அது பற்றி இந்த அகிம்சாமூர்த்தி வைஸ்ராய்க்கு ஆலோசனை சொல்லுகிறார்;

”அந்தப் பையன்களைத் தூக்கிவிடுவதாக இருந்தால் கராச்சிக் காங்கிரஸ் கூட்டத்துக்குப் பின்னதாக இல்லாமல், முன்னதாகவே தூக்கிலிடுவது நல்லது.” காந்தியின் ”அமைதிப் புரட்சி”க்குப் பின்னால் மூடிமறைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனத்திலும், தேசத்துரோகக் குற்றங்களிலும் இவை மிகச்சில. ஆனால் இவை இந்தியத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் ஏகாதிபத்திய விசுவாசத்துக்கான வரலாற்றுச் சட்சியங்கள். இந்தியாவின் கதை இப்படி.!

மத்திய கிழக்கின் மன உணர்வை ஒரு ஏகாதிபத்தியவாதி – வென்டல் ஹில்கி, அமெரிக்கக் குடியரசுக்கட்சியின் சார்பில் 1940 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ரூஸ்வெல்ட்டுடன் போட்டியிட்டவர், இவர் எழுதிய ‘ஒரே உலகம்’ நூலில் (1945) சித்தரிப்பதைப் பாருங்கள்.

“இந்த ஜனங்களுக்கு ஒரு புதிய பசி உண்டாகியிருக்கிறது. பழைய மதத் தடைகள் அரசாங்க நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்ற பசி தங்கள் சொந்த நிர்வாகிகளும் அவர்களுக்கு மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்நிய மேலதிகாரிகளும் தங்களுடைய இந்த பசியைத் தீர்க்காவிட்டால், புதிய விழிப்படைந்த இந்த ஜனங்கள் இந்தத் தலை முறையிலேயே எவரோ ஒரு தீவிரவாதத் தலைவரைத்தான் பின்பற்றிவிடப் போகிறார்கள். முகமூடி. பெங்குல்லா, நோய், அசுத்தம், கல்விக்குறைவு, நவீனக் கல்விக்குறைவு, அரசாங்கத்தின் எதேச்சாதிகாரம் இவையெல்லாம் ஒன்று சேர்ந்திருப்பதை, தங்கள் சமுகத்திலுள்ள சில சக்திகளும் அந்நிய ஆதிக்கத்தின் சுயநலமும் ஒன்று கூடிய ஒரு கூட்டுறவாக அவர்கள் எண்ணுகிறார்கள். அந்தக் கூட்டுறவே பழைமையைத், தங்கள் தலையில் சுமத்தி வைத்திருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.” (அழுத்தம் நமது)

மத்திய கிழக்கிற்கு உரிய சில தனித்தன்மை நீங்கலாக இவை எல்லாக் காலனி நாட்டு மக்களுக்கும் பொருந்தும். மேலும் கூறுகிறார்;

“இந்தப் பிரச்சனையை நாம் சமாளித்தாக வேண்டும். இல்லையானால் மூர்க்க வெறிபிடித்த ஒரு புதிய தலைவன் தோன்றி விடுவான். அவன் இந்த அதிர்ப்திக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவான். அதன் பலம் என்ன ஆகும்?. ஒன்று அந்நிய அரசுகள் அடியோடு அங்கிருந்து வாபஸ் ஆகிவிடவேண்டும்; அதனால் அங்கே ஜனநாயகத்தின் (காலனித்துவ அமைப்பு முறையின் எனப் படிக்க) செல்வாக்கு அடியோடு அற்றுப் போய்விடும். அல்லது இந்த நாடுகளை அந்த அந்நிய அரசுகள் முற்றும் இராணுவ பலத்தால் (மக்களின் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு) ஆண்டு நிர்வகித்து வர வேண்டும்.” (அழுத்தம் நமது).

ஆக காலனி நாடுகளின் மீதான ஏகாதிபத்திய அதிகாரம் ”அடியோடு” நீங்கி விடாமலும், ஏகாதிபத்திய ஆதிக்க முறைக்கு எதிரான காலனி மக்களின் “ஆபத்தான உள்ளக்கிளர்ச்சிக்கு” ஒரு வடிகாலாகவும் அமையக் கூடிய ஒரு தீர்வை ‘காலனித்துவ ஆட்சிக்கு மாறாக முன்வைத்துத் தீர வேண்டிய நெருக்கடிக்குள் ஏகாதிபத்தியம் சிக்கிக் கொண்டது.

காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே ‘ஏகாதிபத்திய அதிகாரத்தில் பங்கு’ கோரி அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து மக்களை ஒடுக்கி வந்த தரகுமுதலாளிய வர்க்கங்களின் கையில் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டதன் மூலம் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எந்தவிதத்திலும் எக் கெடுதலும் நேராத வகையில் இம்மாபெரும் பிரச்சனை தீர்க்கப்பட்டது!. காலனிய ஆதிக்கம் அரைக்காலனிய ஆதிக்கமாக மாறியது. இதற்கு “சுதந்திரம்” எனப் பெயர் சூட்டிக் கொண்டனர்.
----------------------------------------------------------------------
இந்தியத் தொழிலாளர் சார்பில் நீங்கள் நீண்டகாலமாகச் செய்த முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளமை தங்களுக்குப் பேருவகை நல்கியிருக்க வேண்டும். நம் எல்லோரிடமிருந்து நன்மை பெறுவதற்குப் போதிய தகுதி வாய்ந்த இம்மக்கள் வாழ்வில் திருப்தி அளித்தமை (பிரித்தானிய) சாம்ராஜ்யத்துக்குச் செய்த ஒரு உண்மையான சேவையாகும்.”

(குரூப்பிரபு 1922 ஜுலை 27 இல் சேர்.பொன். அருணாச்சலத்துக்கு எழுதிய கடிதத்தில் இருந்து)
__________________________________________________________________________________

தொகுத்துப் பார்த்தால், ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சிக்கான – சுரண்டலுக்கான முக்கிய ஆதார ஊன்று கோல்களாக தரகுமுதலாளிய வர்க்கத்தையும் நிலவுடமை வர்க்கங்களையும் ஆக்கிக் கொண்டனர். இவ் வர்க்கங்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே தமது எஜமான விசுவா சத்தை நிரூபித்துக் கொண்டன. அதிகாரப் பங்குக் கோரிக்கை, மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சமரசசக்திப் பாத்திரம், ஏகாதிபத்திய சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்குமான சமூக ஆதரவு என்பவற்றால் இது சாதிக்கப்பட்டது. மறுபுறம் தம்முள்ளான தரகுமுதலாளியப் போட்டியின் காரணமாக மக்களைச் சிங்கள பேரினவாத பெளத்தமதவாத கருத்தியலிலும், தமிழ்க்குறுமினவாதத்திலும் பயிற்றுவித்துக் கொண்டன. இவ்வாறு ஒரு சமூகப் பின்பலத்தையும் தேடிக்கொண்டன. ஏகாதிபத்தியம் தனது சுரண்டல் நலன்களுக்காக நமது நாட்டின் சமூக வளர்ச்சியை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையை தகர்த்து முன்னேற அனுமதிக்கவில்லை. இது ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குக் கூட்டாளிகளான தரகுமுதலாளிய நிலவடமை வர்க்கங்களை நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக விளங்குகிறது. இவ்வடித்தளத்தைப் பாதுகாக்கும் வகையில் ஏகாதிபத்தியம் நிறுவிக்கொண்ட மேற்கட்டுமானங்களாக பாராளுமன்றம், படைகள், நீதிமன்றம் (சோல்பரி) அரசியல்யாப்பு, சட்டங்கள், நவீனக் கல்விமுறை மற்றும் அனைத்தும் அவ்வாறே கெட்டியாக இருக்கத்தக்கதாக, தன்னோடு கூட்டுச் சேர்ந்து 16 ஆண்டுகாலம் மக்களை ஒடுக்கிவந்த தரகுமுதலாளிய (நிலவுடமை) வர்க்கங்களிடம் அதிகாரத்தை மாற்றிக் கொள்கிறது. ஏகாதிபத்தியம் தனது உலகு தழுவிய காலனியாதிக்கக் கொள்கையில் சந்தித்த நெருக்கடிகள் அதனை அரைக்காலனியாதிக்க வடிவத்துக்கு மாற்ற நிர்ப்பந்தித்தன. காலனிய ஆதிக்கத்தில் கண்ணுக்கு முன்னால் நின்ற ஏகாதிபத்தியம், அரைக்காலனிய ஆதிக்கத்தில் “சுதந்திர” திரைக்குப் பின்னால் ஒழித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு ’மூடுதிரையே’ நமக்குச் சொல்லப்படுகிற “சுதந்திரம்.” உண்மையில் இப்போது ஏகாதிபத்தியம் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக நீடிக்கிறது.

சுதந்திரத்திற்கான நாளையும் தானே தீர்மானித்தது. சுதந்திரத்துக்குப் பின்னால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒப்பந்தங்களையும் செய்து கொண்டு ஏகாதிபத்தியம் தட்டில் வைத்துக் கொடுத்த இந்தச் சுதந்திரம் தரகுமுதலாளிய நிலவுடமை வர்க்கங்களுக்கான சுதந்திரமே தவிர மக்களுக்கான சுதந்திரமல்ல. மக்களை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையின் கொடூரத்திலும், அரைக்காலனிய ஒடுக்குமுறை நுகத்தடியின் கீழும் அடிமைகளாக வாழவைக்கவே இந்த “சுதந்திரம்” பயன்பட்டு வந்திருப்பதை கடந்த 40 ஆண்டுகால வரலாறு தெட்டத் தெளிவாக நிரூபிக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------
”பிரித்தானிய அரசின் நீதியின் மீது மக்களின் நம்பிக்கையை ஈடாடச் செய்யத்தக்க வகையில் எக்கருமமும் நிகழக் கூடாது.
(1915 இல் ’முஸ்லீம் கலவரம்’ இராணுவச் சட்டங்கொண்டு அடக்கப்பட்டது பற்றி சட்ட நிரூபனசபையில் சேர். பொன். இராமநாதன்)
---------------------------------------------------------------------------------------------------------
காலனியாதிக்க ஆட்சியில் சிங்கள – தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங் களிடையே அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. சிங்களத் தரகுமுதலாளியத்தின் ஏகபோக அதிகாரத்துக்கான ஆவலும், சிங்களப்பேரினவாத – பெளத்தமதவாத கருத்தியலின் வளர்ச்சியும், இதனை ஏகாதிபத்தியம் தனது உடனடி மற்றும் நீண்ட கால சுரண்டல் நலன்களின் நோக்கில் அரவணைத்து ஊக்குவித்ததும், தமிழ்தரகுமுதலாளியத்தை அச்சுறுத்தி வந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பைத் தனது இருப்பு மையமாகக் கொண்டிருந்த தமிழ்த்தரகுமுதலாளிய வர்க்கம், வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களை நோக்கிச் சாயத் தொடங்கியது.

அதிகாரக் கைமாற்றத்தின் பின்னால் சிங்களத்- தமிழ் தரகுமுதலாளிய வர்க்கங்களின் உறவு நிலையில் ஒரு கொள்கை ரீதியான மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ்தரகுமுதலாளிய வர்க்க நலன்களைக் காத்துக் கொள்ள வடக்குக் கிழக்குத் தமிழர்களை தமது சமூக அடிப்படையாக மாற்றிக் கொள்வது தவிர்க்க இயலாத அவசியமாகி விடுகிறது. 1920 இல் ஆரம்பித்து, தமிழரசுக் கட்சியின் தோற்றத்தோடு இது ஒரு போக்காக (TREND) வளர்கிறது. இனிமேல் தரகுமுதலாளிய வர்க்கம் தனது சொந்த நலனுக்காக மட்டுமல்ல தமிழ்மக்களின் நலனுக்காகவும் பேசுவதுபோல் இருக்க வேண்டும். இதிலிருந்து தமிழ்த்தரகுமுதலாளியம் தமிழ் மக்களைப் ‘படுத்திய பாட்டை’ அடுத்துக் காண்போம்!.

Friday, 23 September 2011

மார்க்சிய அறிவகம்: விவசாயப் பிரச்சினை பற்றிய கட்சியின் மூன்று அடிப்பட...

மார்க்சிய அறிவகம்: விவசாயப் பிரச்சினை பற்றிய கட்சியின் மூன்று அடிப்பட...: விவசாயப் பிரச்சினை பற்றிய கட்சியின் மூன்று அடிப்படை முழக்கங்கள் யான் – ஸ்கியிக்கு பதிலுரை ஜே.வி.ஸ்டாலின் (லெனினியத்தின் பிரச்சினைகள்) உண்ம...

Thursday, 22 September 2011

மார்க்சிய அறிவகம்: எழுச்சியும் போரும் குறித்து- லெனின்

மார்க்சிய அறிவகம்: எழுச்சியும் போரும் குறித்து- லெனின்: பின்னுரை (எழுச்சியும் போரும் குறித்து) 1 முன்னுள்ள வரிகளை ஏற்கனவே எழுதி முடித்த பிறகு அக்டோபர் முதல் தேதி நோவயா ழீஸ்ன் மற்றொரு மணியான முட்ட...

மார்க்சிய அறிவகம்: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்...

மார்க்சிய அறிவகம்: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்...: அக்டோபருக்கான தயாரிப்புக் காலகட்டத்தின்போது போல்க்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரங்களின் சில தனிச்சிறப்பான அம்சங்கள். -ஜே. வி .ஸ்டாலின் எதிர்த்தர...

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

Tuesday, 20 September 2011

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம்,ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம், ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

அப்பொன்னாளில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் நால்வரின் விடுதலைக்காக முழக்கமிடுவோம்! போராடுவோம்!

ஈழத்தில் சுரேஸ்,தமிழகத்தில் நெடுமாறன்,புலம்பெயர்ந்த நாடுகளில் உருத்திரகுமாரன் தலைமை ஒருசேர அரங்கேற்றும் இடைவழிச்சமரசத்தை எதிர்ப்போம்!

தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிபோம்!


ராஜிவ் கொலை வழக்கு

ராஜிவ் கொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை ஏற்றுக் கொள்ள இந்திய ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவு தமிழ் மக்களின் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளதாக அமைந்துள்ளது.

இத்ந்த முடிவனது, ஈழவிடுதலையை தொடர்ந்து ஆதரிக்கும் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பைத் தூண்டியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் எங்கும் தன்னியல்பான இயக்கங்கள் வெடித்து கிழம்பியுள்ளன.

செங்கொடி என்கிற செம்மலர் தீய்ந்து கரியாகிப்போனாள்!

இதன் பிரதி விம்பங்கள் புலம்பெயர் நாடுகளிலும் தெறிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தன்னியல்பான மக்கள் இயக்கங்களின் மத்தியில் பல்வேறு சமூக வர்க்கங்களும் தம் நலன் சார்ந்து, தம் நிலை சார்ந்து, தம் சொந்த முழக்கங்களை முன்வைத்து இத்தன்னியல்பான மக்கள் இயக்கம் மீது தம் சொந்தக் குறிக்கோள்களை அடைய தலையீடு செய்து போராடி வருகின்றன.

இந்நிலையில் சர்வதேசிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் தமிழீழப் படைப்பிரிவினரான புதிய ஈழப் புரட்சியாளரின் நோக்கு நிலையை விளக்குவது இச்சிறு பிரசுரத்தின் நோக்கமாகும்.

ராஜிவ் படுகொலையானது புற நிலையில், 1987 ஜூலை மாதம் இலங்கை அரசை இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு அடிபணியச் செய்யும் பொருட்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அரசியல் எதிர் விளைவாகவும் இவ் ஒப்பந்தத்தை அமுலாக்கவும், விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பொருட்டு ம் இலங்கையில் நிலை கொண்ட ராஜிவ் படை இழைத்த யுத்த குற்றங்களின் இராணுவ எதிர் விளைவாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

1947இல் அரைக்காலனியப் போலிச் சுதந்திரம் கிடைத்த பின்னரும் இலங்கை நாடானது உலக வங்கியினதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்களைச் சார்ந்தே பிரதானமாக இயங்கி வந்தது.ஆனால் இக்காலத்தில் சர்வதேசிய சூழ்நிலையானது இரட்டைத் துருவ அமைப்பைக் கொண்டிருந்தது.

அதாவது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியானது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் பிரதானமாக முனைப்புற்றிருந்தது. இந்த அணிசேர்க்கையில் அரசியல் ரீதியாக இலங்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் (மற்றும் பாக்கிஸ்தான்) சார்ந்தும் இந்தியா அரசியல் ரீதியாக சோவியத் சமூகஏகாதிபத்தியத்தைச் சார்ந்தும் இயங்கி வந்தன.

1971இந்திய பாக்கிஸ்தான் போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டது.voice of America வானொலி நிலையம் அமைக்க இலங்கை அனுமதித்தது. 70 களின் நடுப்பகுதியில் தென்னாசிய பிராந்திய நாடுகளில் இலங்கையே முதன் முதலாக திறந்த பொருளாதார உலக மயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தது.

இதன் விளைவாக அரைக்காலனிய இலங்கை நாடு ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் சந்தையாக மாறியது.

இந்த பின்னணியில் “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரும் தருணத்தில்”அவசர நிலைமையில் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியதற்கு அப்பால் இலங்கை அரசானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெளிவிவகாரக் கொள்கையிலும் இந்தியாவின் விரிவாதிக்கக் குடைக்கு வெளியே நின்ற ஒரு நாடாகவே இருந்தது.

இதனை சகித்துக் கொள்ளாத, இதனால் கசப்புணர்வு கொண்ட இந்திய ஆளும் கும்பல் இலங்கைக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அதட்டல்களும் மிரட்டல்களும் விட்டு தன்னுடைய விரிவாதிக்கக் குடைக்குள் வீழ்த்துவதற்கு போராடிவந்தது. இதே நேரத்தில் 70 களில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருந்த சமரவாதத் தமிழ் தலைமையினர் இந்திய ஆளும் கும்பலோடும் தமிழக மாநில ஆளும் கும்பல்களுடனும் அடுத்த கட்ட அரசியல் ஸ்தாபன உறவுகளை ஸ்தாபித்திருந்தனர்.

இந்த வேளையில்தான் இலங்கையில் 1983 ஜூலை இனப்படுகொலை அரங்கேறியது. இதன் விளைவாக ஈழத்தமிழர்கள் உயிர்த்தஞ்சம் கோரி தமிழீழக் கடற்றொழிலாளர்கள் தமிழகக் கடற்றொழிலாளர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த வீரதீரச் செயல்களால் தமிழகத்துக்குள் அகதிகளாகக் குவிந்தனர். மறுபுறம் 70 களின் பிற்பகுதில் கெரில்லாப் போர்க்கட்டத்திலிருந்த ஆயுதமேந்திய தமிழீழப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக வடிவமெடுத்தது.

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் இப்புதிய இரு பரிணாமங்களையும் இந்திய அரசு தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்த முனைந்தது. இதற்கமைய தனது அரசியல் வெளிவிவகார மற்றும் இரனுவக் கொள்கை களையும் வரையறுத்துக் கொண்டது. இதற்குத் துணையாக ,மேலும் இதற்குப் பக்கபலமாக இந்திய விரிவாக்கத்தின் ஆதரவாளர்களும் தமிழகத்தின் இனமானத் தமிழ் சமரசவாதிகளும்

“கொல்லாதே கொல்லாதே ஈழத்தமிழர்களைக் கொல்லாதே”

”இந்திய அரசே இந்திய அரசே ஈழத்தமிழர்களைக் காக்க இலங்கையில் இராணுவத் தலையீடு நடத்து”

என முழங்கி மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தி ஈழத்தமிழர்களை இந்திய விஸ்தரிப்புவாத அடிமைச் சங்கிலியால் கட்டிப்போட பாதையைச் செப்பனிட்டனர். இதே கடமையைத்தான் ஈழத்தமிழினத்தின் சமரசவாத தமிழர் கூட்டணிஅமிர்தலிங்கம் கும்பலும் நிறைவேற்றப் பாடுபட்டது. இந்தப் புண்ணியவான்களின் பேருதவியுடன் ஈழத்தமிழர் காவலன் என்கிற கொடியேந்தி இலங்கையை தனது விரிவாதிக்க நலனுக்கு உட்படுத்தும் உண்மை நோக்கத்தை மூடிமறைக்க ஒரு தார்மீக நியாயத்தை இந்தியா பெற்றுக் கொண்டது.

இது ஒரு பெரும் அரசியல் வெற்றியாக இருப்பினும் இதை மட்டும் கொண்டே இலங்கை அரசைப் பணியவைப்பது சாத்தியமாக இருக்கவில்லை.

இதற்காக இந்திய அரசு ஒரு சதித்தனமான இராணுவத்திட்டத்தை வகுத்தது

இத்திட்டம் இரு அம்சங்களைக் கொண்ட இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தது. அவ் அம்சங்கள் ஆவன;

1. ஈழப் போரளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான பயங்கரவாத படுகொலை நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலம் இலங்கை அரசைப் பணிய வைப்பது,

2. ஆயுதப் பயிற்சி என மோகம் காட்டி பயங்கரவாதப் படுகொலைப் பாதையில் வழிதிருப்புவதன் மூலம் தமிழீழத் தேசிய விடுதலைக்காக ஒரு மக்கள் ஜனநாயக இயக்கத்தை வளரவிடாமல் தடுப்பது,

இந்த இரு குறிக்கோள்களையும் நிறைவேற்றும் பொறுப்பை இந்திய ஆளும் வர்க்கங்களினதும் இந்திய மைய அரசினதும் சார்ப்பில் இந்தியப் புலனாய்வுத்துறையான Reasarch And Analysis Wing (RAW)  இன் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் திறந்து விடப்பட்டு தமிழகத்தில் சட்டபூர்வமாகவும் பகிரங்கமாகவும் இயங்கி வந்த,இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை அணுகி இராணுவப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. உத்தரப் பிரதேசத்தில் பிரதானமாகவும் தகிழ்நாட்டின் கும்பகோணம் மற்றும் பகுதியில் துணையாகவும் இராணுவப்பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு RAW உளவாளிகளால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான முகாம்களில் சிறைக்கைதிகளாக சுமார் இரண்டு வருடங்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈழப்போராளிகள் உடற்பயிற்சிக்கு மேல் எந்த இராணுவப் பயிற்சிகளையும் பெறவில்லை.

இவ்வாறு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஈழப் போராளிகளை பயன்படுத்தி 1985 நடுப்பகுதிகளில் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிராக RAW ஒரு படுகொலைத் தாக்குதலை ஏவியது. இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளாகச் செயல்பட்டு, ஈழப் போராளிகளும் தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இந்த ஈனத்தனமான செயலை செய்து முடித்தனர். இந்த நடவடிக்கையானது அன்றிருந்த J.R. ஜெயவர்த்தனா அரசுக்கு ஒரு பெரும் நிர்ப்பந்தமாக அமைந்து இந்திய விரிவாதிக்கத்தின் காலில் இறுதியாக வீழ்த்தப்பட்டார்.

இலங்கை அரசை தனது காலில் விழுத்திய மறுகணமே ஈழப் போராளிகளின் மீது பாய்ந்தது இந்திய அரசு.

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண இலங்கை அரசோடு போராளிக் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதற்கு தான் மத்தியஸ்துவம் வகிக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்தது. இதற்கமைய 1985 ஜூன் மாதத்தில் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் போராளிக்குழுக்களுக்கும் இடையில் தனது மத்தியஸ்துவத்தில் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள வேண்டுமெனப் போராளிக் குழுகளைப் பணித்தது. இதுவே இன்று திம்புப் பேச்சுவார்த்தை என அழைக்கப்படுவதும் அறியப்பட்டதுமான வரலாற்று முக்கியத்தும் மிக்க நிகழ்வாகும்..

திம்பு பேச்சுவார்த்தை

திம்பு பேச்சுவார்த்தையில் EPRLF, PLOT, TELO, TULF, LTTE ஆகிய அமைப்புக்கள் தமிழர்கள் சார்பில் பிரதிநிதித்துவம் செய்தன. அவர்களுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணும் முகமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் தான் மத்தியஸ்துவம் வகிக்கும் பாத்திரத்தை ஆற்றுவதாக இந்திய அரசு கூறியது. இவ்வாறு பேச்சுவார்த்தையில் தானும் ஒரு பங்காளி ஆனது. பேச்சுவார்த்தையில் பங்கு கொண்ட தமிழர் தரப்பு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமானால் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது.

அக்கோட்பாடுகளும், கோரிக்கைகளும் பின்வருமாறு;

1. வடக்கு மாகாணம், கிழக்குமாகாணம் அடங்கிய நிலப்பரப்புக்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் ஆகும்.

2. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்தவரும் தேசிய சுயநிர்ணய உரிமை உடையவர்களும் ஆவர்.

3. தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக சட்டரீதியாகவும் நடைமுறையிலும் அமுலாக்கப்படவேண்டும்.

4. வாக்குரிமை பறிக்கப்பட்ட அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் வாக்குரிமையும்,வாழ்விட உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

இந்த நியாயமான ஜனநாயக ரீதியான அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளை இலங்கை அரசு ஏற்க மறுத்தது.குறிப்பாக தாயகம்,தேசியசுயநிர்ணய உரிமைக்கோட்பாடுகளை அடியோடு நிராகரித்தது.

இலங்கை அரசின் நிலையைப் போலவே இக்கோரிக்கைகளை ஏற்க இந்திய அரசும் மறுத்தது.இந்நிலையில் இலங்கை அரசுக்கும், ஈழத்தமிழ் தரப்புக்குமிடையில் மத்தியஸ்துவம் வகிப்பதாக கூறிவந்த இந்திய அரசு குத்துக்கரணம் அடித்து இலங்கை அரசுடன் இணைந்து கொண்டது. இவ்விணக்கத்தின் பயனாக இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் உருவானது. இவ்வொப்பந்தத்தின் மூலம் ஒருபுறம் இலங்கை அரசை தனது அரசியல் இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. மறுபுறம் ஈழத்தமிழரின் தேசிய சுயநிர்ணய உரிமைப்,போரை நசுக்க விடுதலைப்புலிகளை நிராயுதபாணியாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையைக் கட்டவிழ்த்து ஒரு காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை நடத்தியது.

*******************************

இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை நடத்திய யுத்தம் நவீன மனித நாகரீக வரலாறு இதுவரையிலும்(2011), காணாத அளவுக்கு கேடானதும் கொடியதும் சர்வதேச சட்ட விதிகளை மீறியதும் ஆகும்.

தமிழீழ தாய்க்குலத்துக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்முறையை (கற்பழிப்பை) ஒரு போராயுதமாக இந்திய அரசு ஈழத்தில் பயன்படுத்தியது.

இது உலக யுத்த வரலாற்றில் அமெரிக்க வியட்நாமிய யுத்தத்திலும், இலங்கை விடுதலைப் புலிகள் யுத்ததிலும் கூட எந்தத் தரப்பாலும் பயன்படுத்தப்படாத படு கேடான மிக இழிவான மிலேச்சத்தனமான காட்டுமிராண்டி ஆயுதமாகும். இதை இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழின படுகொலை யுத்தத்தில் பிரதான ஆயுதமாக பயன்படுத்தியது.

இதுபோன்ற எண்ணற்ற இந்திய ஆக்கிரமிப்பு யுத்தக்குற்ற தகவல்களும், ஆதாரங்களும் தனியாக இணைக்கப்படும்.
1 2 3
*******************************

இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை மீது தனது மேலாதிக்கத்தை நிறுவதன் மூலம் இந்திய பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மை உறுதி செய்யப்படுவதாக அமைந்ததால் இது அனைத்து ஏகாதிபத்திய வாதிகளினதும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தது, பெற்றிருக்கிறது!

இதனால் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நிகழ்த்திய போர்க்குற்ற அட்டூழியங்கள் இன்றுவரை உலக மக்களின் கண்களுக்குத் தெரியாமல் முற்றுமுழுதாக மூடிமறைக்கப்பட்டுள்ளன. உலகத்தில் ஒரு ஆக்கிரமிப்பு போர், அதன் அடிச்சுவடு கூடத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப்புப் போர்தான்.அதுமட்டுமல்லாமல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வடகிழக்கில் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளை வேட்டையாடி தமிழ்மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்க சிங்கள இராணுவம் முழுமையாக தென்னிலங்கையில் குவிக்கப்பட்டு JVP போராளிகள் மீதும் சிங்கள பொதுமக்கள் மீதும் கொலைவெறித்தாண்டவத்தைக் கட்டவிழ்த்தது. இன்றுவரைக்கும் சரியான கணக்குத் தெரியாமல் இந் நரபலி வேட்டையில் கொன்றொழிக்கப்பட்டோர் ஒரு உத்தேசத்துக்கு சில லட்சம்  என அறியப்படுகிறது. சிங்கள இராணுவம் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக இரவோடு இரவாக பகலோடு பகலாக சுற்றிவளைத்து சிங்கள இளைஞர்களைக் கூட்டம் கூட்டமாக கைது செய்து வதை முகாம்களில் சித்திரவதை செய்து கைகளைப் பின்னால் கட்டி இறப்பர் ரயர்களால் தீமூட்டிக் கொழுத்தியது. பாதி கருகிய உருக்குலைந்த சடலங்களை களனி ஆற்றில் தூக்கிவீசியது. ஒரு கட்டத்தில் சிங்களச் சிறுவர்கள் மனித எலும்புக் கூடுகளின் முறிவுகளைப் பற்றி மோதறைக் கடற்கரையில் பந்தடித்து விளையாடினார்கள்.

அப்போது கொழும்பை ஆண்ட இந்தியத் தூதுவராக இருந்த J.N.திட்சித் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற அரசியல் பேச்சுவாத்தைகளில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைப் புலித் தலைவர்கள் மாத்தையாவையும் பிரபாகரனையும் சுட்டுக் கொல்லுமாறு இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பேரறிவாளராகும். இந்த திட்சித்தான் அப்போது இலங்கையை ஆண்டுகொண்டிருந்தார்.

இக்கோர கொலைவெறித் தாண்டவத்தின் பின்னணியில் இருந்து அதை இயக்கிய அதிகாரி இவர்தான். எனவே தமிழீழத்தில் நடந்த படுகொலைக்கு மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த படுகொலைகளுக்கும் இலங்கை அரசுக்கு இணையாக இந்திய அரசும் பொறுப்பேற்ற வேண்டும்.

இவ்வாறு சிங்கள இளைஞர்களை இந்தியப் படை படுகொலை செய்தது இதுவல்ல முதல் தடவை 1972 இல் JVPஇன் ஆயுதமேந்திய கிளர்ச்சியையும் இந்தியப் படையே நசுக்கியது. அப்போது இலங்கை அரசிடம் ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியை நசுக்கக் கூடிய இராணுவமே இருக்கவில்லை. உள்ளூர் விவசாயிகளின் ஆயுதப்பாவனை அப்போதுதான் பறிக்கப்பட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ராஜீவ் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் இடம்பெற்ற அரசமரியாதை வைபவத்தில் கலந்து கொண்ட ஒரு சிங்களக் கடற்படைச் சிப்பாய் தன் துப்பாக்கியால் ஓங்கி ராஜீவின் பிடரியில் அறைந்தான்.ஒரு குறியீடாக அமைந்த இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளும்--தமிழ்மக்களும், தென்னிலங்கையில் ஜே.வி.பியும்-- சிங்கள மக்களும் தனித்தனியான பாதையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த நாடுதழுவிய கிளர்ச்சிக்கு வித்திட்டனர். இதன் விளைவாக இலங்கை அரசு பொறிந்து விழும் நிலையேற்பட்டது.

அரசாங்கம் ஸ்தம்பித்துப் போனது. பெரும்பாலான மந்திரிகள் பிரேமதாசாவை விட்டுத் தப்பியோடி “பயங்கரத்துக்கு அஞ்சி” பதுங்கிவிட்டார்கள். ஆட்டங்கண்டுவிட்ட அரசு முறையைப் பாதுகாக்க இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றக் கோரும் இலங்கை மக்களின் தேசியப் புரட்சிக்கு பிரேமதாசா அடிபணிய நேரிட்டது. விடுதலைப் புலிகளின் உதவித் தலைவர் மாத்தையாவுடனான பேச்சுவார்த்தையில் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கு உடன்பாடு காணப்பட்டு யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தியா இலங்கையில் “கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு போரிட்ட காரணத்தால்” மண்கவ்வி மானமிழந்து தன் சொந்த நாடு திரும்பியது.

இவ்வாறு ராஜீவ் படை கட்டவிழ்த்த அரச பயங்கரவாத போர்க்குற்றங்களுக்கு பழிதீர்க்கும் பதில் பயங்கரவாத நடவடிக்கையாகத்தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமிழகம் ஒரு பலமான பின்புலமாக இருந்த நேரத்தில், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை நசுக்கும் பொருட்டும், இலங்கை நாட்டை தனது மேலாதிக்கத்துக்கு உட்படுத்தும் பொருட்டும் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்ட ஒரு அண்டைநாட்டுடனான முரண்பாட்டை ஈழதேசிய விடுதலை இயக்கம் இவ்வாறு அணுக முடியுமா? இந்த வழிமுறை சரியானதா? என்று வேண்டுமானால் விவாதிக்கலாம். உணமையில் விவாதிக்கவும் வேண்டும். விவாதங்களும் வேண்டும்.

ஆனால் இது ராஜீவ் காந்திக்கு தண்டனை வழங்குவதற்கான நியாயங்களை இல்லாமல் செய்துவிடாது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது 1987 இல். ராஜீவ் கொலை நடைபெற்றது 1990 இல். முத்தமிழரின்தூக்குத்தண்டனை விவகாரம் எழுந்திருப்பது 2011 பிற்பகுதியில்.எனவே முத்தமிழர் தூக்குத் தண்டனை விவகாரத்தில் 1987 இல் நிலைமைகளோடு மட்டுமல்ல, 1990 இற்குப் பிந்திய 21 ஆண்டுகால உலக உள்நாட்டு நிலைமைகளிலுள்ள மாறுதல்களுடனும் ஒப்பிட்டு நோக்க வேண்டும்

* ஆப்கானிஸ்தானில் தளமிட்டு இயங்கிய இஸ்லாமிய அல்கெய்டா அமைப்பைச் சார்ந்த சவுதிஅரேபிய உறுப்பினர்கள் இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி சுமார் மூவாயிரம் அமெரிக்கர்களை படுகொலை செய்தனர்.இதற்காக முழு ஆப்கான் நாட்டையுமே அமெரிக்கா இன்று ஆக்கிரமித்து இருக்கிறது. பாக்கிஸ்தானுக்குள் அத்துமீறிப் புகுந்து ஒசாமா பின்லாடனை படுகொலை செய்தது.

* உள்நாட்டுமக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கமை, குர்திக்ஷ் மக்கள் மீது விசவாயு அடித்தமை ஆகிய குற்றங்களுக்காகத் தான் ஈராக்கு எதிரான இரண்டாவது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கப்பட்டது. ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் அவர்கள், இறுதிப்பிராத்தனை முடிவதற்கு முன்னமே கோரத்தனமாக தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டார்.

* ஆசிய சமூதாய வளர்ச்சிக்கட்டதையும், ஆபிரிக்க சமூக வளர்ச்சிக்கட்டத்தையும் ஒப்புநோக்கி, அரசு முறை வடிவத்தை நோக்கினால் நேரு குடும்பத்தின் பாராளுமன்ற பாசிசம் கடாபி குடும்பத்தின் ராணுவ சர்வாதிகாரத்துக்கு சற்றும் சளைத்தது அல்ல.ஆனால் மனிதகுலத்தின் மனச்சாட்சியையே உலுக்கக் கூடிய வகையில் “மனிதாபிமான நடவடிக்கை” என்ற பெயரில் லிபிய நாடு மறைமுகமாக ஆக்கிரமிக்கப்பட்டு நவீன காலனிய NTC பொம்மை அரசு நிறுவப்பட்டுள்ளது.லிபியத் தளபதி கடாபியை படுகொலை செய்ய எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தும் கூட நேட்டோவும்,Interpol உம் அவரை வேட்டையாட கொலை வெறி கொண்டு லிபியா எங்கும் அலைகிறது.

* இவற்றுக்கெல்லாம் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அனுசரனையில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை ஒரு அங்குலமும் முன்னேறவிடாமல் தடுத்தது இந்திய அரசு.இறுதியாக இலங்கை அரசு ஒருதலைப் பட்சமாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும், பேச்சுவார்த்தையிலிருந்தும் விலகி இனப்படுகொலை யுத்தத்தைக் கட்டவிழ்த்தது.இந்த யுத்தத்துக்கு இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதரவு வழங்கிய இந்திய விஸ்தரிப்புவாத அரசு சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து நேரடியாக யுத்ததில் பங்கேற்று விச வாயுக்களை வீசி விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நிர்மூலமாக்கி சிங்கள படைகளின் முன்னேற்றத்துக்குவழியமைத்தது. இறுதியாக யுத்தத்தில் சிங்களம் வெற்றிகொள்வதற்கும் விடுதலைப் புலிகள் தலைமை முற்றாக அழித்தொழிக்கப்படுவதற்கும் காரணகர்த்தாவாக அமைந்தது.இந்த ஈழப்போரில் இறுதிச் சில நாட்களில் மட்டும் எழுபதினாயிரம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இந்த இரத்த வரலாற்றுக்கும் இந்திய அரசு பிரதான பொறுப்பாளியாக இருக்கிறது.சதாம் குவைத்தை ஆக்கிரமித்து குர்க்ஷித் மக்கள் மீது விசவாயுவை அடித்தது, பின்லாடன் இரட்டைக்கோபுரத்தை தாக்கியழித்தது, கடாபி உள்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்தது இதற்காக எல்லாம் அவர்கள் கொலை செய்யப்படுவது நியாயமென்றால் இவை அனைத்தையும் இலங்கை நாட்டின் மீது மூன்று தடவை மீண்டும் மீண்டும் பிரயோகித்த இந்திய அரசை ஈழத்தமிழ் மக்கள் தண்டிப்பது எந்த வகையில் குற்றமாகும்.

ராஜீவ் காந்தியை தண்டிப்பதற்கு ஈழத்தமிழர்களுக்குள்ள அரசியல் உரிமையை மறுப்பது எந்த வகையில் நியாயமானதாகும், ஜனநாயகமானதாகும்?.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதியானது நியாயமானது. இதற்கு அஞ்சி நாம் மரண தண்டனைக்குள்ளும் மனிதாபிமானத்துக்குள்ளும்,மனித உரிமைக்குள்ளும் முக்காடுபோட்டு மறைந்திருந்து முனகத்தேவை இல்லை, அதற்கு நாம் தயாராக இல்லை.

எனவே ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும்,இந்திய விஸ்தரிப்புவாதத்தையும் எதிர்த்து, ஈழத்தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்குமான ஜனநாயக இயக்கத்தின் ஒரு பகுதியாக நாம் ஈழத்தமிழர் விடுதலை இயக்கத்தின் மீது இந்திய விஸ்தரிப்புவாத அரசு தொடர்ந்து தலையீடு செய்வதற்கும், விடுதலைப்புலி இயக்கத்துக்கு தடை விதித்திருப்பதற்கும், ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி ஈழத்தமிழின விடுதலைப்போரை தொடர்ந்து நசுக்கி வருவதற்கும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து போராடுவோம் எனப் பிரகடனம் செய்கிறோம்.

முத்தமிழர் உயிர்காப்புப் போராட்டம்

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனைக்குக் காத்திருக்கும் முத்தமிழ் உயிர்கள் தொடர்பான இக்குறிப்பான பிரச்சனையில் பின்வரும் அம்சங்கள் கவனத்துக்குரியவை.

1. ரஜீவ் கொலையில் காங்கிரசின் ஒரு பகுதியினரின் பங்கு.

2. ரஜீவ் கொலையில் ரஜீவ் குடுப்பத்தின் பங்கு

3. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் யார் என்ற கேள்வி.கே.பி.குறித்த சர்ச்சைகள்.

4. இவ்வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டமை.

5. வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்பட்டமை.

6. இம்மூவரும் ஏற்கனவே 21 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்து முடித்திருப்பது

7. இம்மரண தண்டனை சட்டவிரோதமானதென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது.

இக்காரணங்களால் முத்தமிழர்களின் கருணை மனுவை நிராகரித்திருப்பதும் தொடர்ந்து சிறை வைத்திருப்பதும் சட்டவிரோதமானதும், அநீதியானதும் சட்டத்தின் ஆட்சியின் வரம்புகளுக்கு உட்பட்டே கூட ஜனநாயக விரோதமானதாகும்.

எனவே முத்தமுழர் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட்டு உடனடியாக அவர்கள் மூவரும், நளினியும் விடுதலை செய்யப்பட்ட வேண்டுமென அறைகூவுகின்றோம்.இக்கொடுமையை எதிர்த்து போரிடும் உலகத்தொழிலாளரினதும், உலகத் தமிழ்மக்களதும் ஜனநாயக இயக்கத்தில் பின்வரும் சொந்த முழக்கங்களுடன் நாமும் பங்குபெறுகின்றோம்.

* இந்திய அரசே ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!

* போர்க்குற்றவாளி ராஜபக்க்ஷவை சர்வதேச அரங்குகளில் பாதுகாக்காதே!

* இலங்கை அரசு தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்காதே!

* இந்திய விஸ்தரிப்புவாத ஆதரவு பொம்மைத் தமிழ் குழுக்களை உருவாக்கி அவர்களே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என பிரகடனம் செய்து மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டை மாசுபடுத்தாதே!

* இலங்கையில் மூன்று தடவைகள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று தண்டனை வழங்கும் ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை அங்கீகரி!

* இலங்கை மக்களுக்கு இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு நக்ஷ்ட ஈடு வழங்கு!

* பேரறிவாளன்., முருகன், சாந்தன் ஆகிய முத்தமிழ் உயிர்கள் மீதான மரண தண்டனையை ரத்துச் செய்!

* நளினி உள்ளிட்ட நால்வரையும் உடனே விடுதலை செய்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்