Wednesday 22 July 2020

கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`


காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

அன்பார்ந்த ஈழ தேச மக்களே,


கறுப்பு ஜூலையின் 37வது நினைவாண்டு இன்று, ஜூலை 23, 2020ஆகும்.
 
இலங்கையின் கறுப்புச் சுதந்திர பாராளமன்றத்தின் 16வது பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆகும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் தனி அம்சங்களையும், அவற்றின் பொது இணைப்பையும், இது நிறைவேறும் குறிப்பான சர்வதேசச் சூழ்நிலையையும் ஆய்ந்தறிந்து, கறுப்பு ஜூலை 37 ஆம் ஆண்டு நினைவாக, ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஈழதேச மக்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன என்பதை கண்டறிவது இத் தொடர் கட்டுரையின்  குறிக்கோள் ஆகும்.

பாகம் (1)

கறுப்பு ஜூலை 1983

எழுபதுகளில் தோன்றிய பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்,சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர் தாயகமான தமிழீழ தேசத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதன் பொருட்டு தம் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் தேதி யாழ்ப்பாணம் பலாலி இராணுவத்தளத்தில் இருந்து வந்த சிங்களப் படையின் வாகனத் தொடர் அணி மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 13 சிங்கள படையினர் பலியாகினர்.இதை ஒரு பொறியாக வைத்து மூட்டப்பட்ட நாடு தழுவிய  தீ தான் கறுப்பு ஜூலை 1983.

இதை விசமத்தனமாக `கலவரம்-Riots' என பொதுவாக கூறிவருகின்றனர். கறுப்பு ஜூலை 1983, இரண்டு சமூகங்களுக்கிடையே தோன்றிய தற்காலிக வன்முறை மோதல் அல்ல.இது அரசதிகாரத்தின் துணையுடன்,படை பலத்துடன், பெரும்பான்மையான சிங்கள மக்களை; அவர்களது பகுதியில் சிறுபான்மையினராக வாழும், ,வட கிழக்குத் தமிழர்,மலையகத் தமிழர், இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவி 
கட்டவிழ்க்கப்பட்ட இனவெறிப் படுகொலைத் தாண்டவம் ஆகும்.மேலும் ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான ஏதோ ஒரு அதிகாரம் ஏவி விடுகின்ற கண் மூடித்தனமான அராஜக வன்முறை அல்ல 

கறுப்பு ஜூலையில் நிகழ்ந்தது.``கலகக் காரர்கள்`` வாக்காளர் பட்டியலை வைத்து, தமது இலக்கைத் தேர்ந்து கொண்டார்கள். வர்த்தக இருப்புக்களைக் கண்டறிந்தார்கள்.வாழ் நாள் தேட்டத்தை தீ மூட்டி அழித்தார்கள்.பொலிசார் எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்கள், படை வீரர்கள் காவல் காத்தனர் ``கலகக் காரர்களை``! தமிழரின் தனிச் சொத்துரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு தரகு முதலாளித்துவ வர்க்கம் 

கூட தப்பவில்லை.இவை அனைத்தும் அரசதிகாரத்தின் துணையில் ஏவப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் ``கலவரம்`` என்றழைக்கப்படுகின்ற எந்த ஒரு நிகழ்வும், ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான கண் மூடித்தனமான அராஜக வன்முறை கொண்ட தன்னியல்பான சமூக 
மோதலாக ஒரு போதும் இருந்ததில்லை.இவை அனைத்தும் ஆளும் வர்க்கம், அரசதிகாரம், படைபலம் கொண்டு தெளிவான திட்டத்தோடு தூண்டிவிட்டு ஏவப்பட்ட இனப்பகைமை ஆயுதமாகவே இருந்துள்ளன``. 

இது சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை அசுரக்கரங்களில் ஒரு கரமாக -பிரிக்க முடியாத அங்கமாக இன்றும் இருந்து வருகின்றது.என்றும் இருந்துவரும்.

`நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை` என்கிறோமே, அதுபோல  இந்த ஆயுதம் ஆங்கிலேய காலனிய ஆட்சிமுறையில் இருந்து கற்று, சிங்களம் சுதந்திரமாக கடன் வாங்கிக் கொண்டதாகும்.

1915 இலேயே இது இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவப்பட்டது.இதை நமது ``சேர்`` ( பொன்னம்பலம்,இராமநாதன்) தலைவர்களும் இணைந்தே செய்தார்கள். பின்னால் இந்த தமிழ்-சிங்கள ஏகாதிபத்திய தாச தரகர்கள் சுதந்திர புருசர்கள் ஆனார்களே 1948 இல்!, அதற்குப் பின்னால் இது தமிழ்த் தரகர்களுக்கு எதிராக திரும்பியது.

1949 இன் வாக்குரிமைப் பறிப்பில் ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களின் ஒரு பிரிவு துரோக நிலையையும், மறு பிரிவு சந்தர்ப்பவாத நிலையையும் எடுத்தது. இதன் விளைவாக சிங்களம் திடப்பட்டது.

1915 இலும் 1949 இலும் நமது தமிழ்த் தலைவர்கள் (ஏகாதிபத்திய தாச சமரசவாத தமிழ்த் தரகர்கள்), எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஈழ விடுதலைப் புரட்சியின் மீது விழுந்த முதலாவது வரலாற்றுப் பழியாகும்.ஈழ தேசிய ஒற்றுமையை வேரறுக்கும் இப்பழியை இவர்கள் திட்டமிட்டே செய்தார்கள்.

இவ்வாறான துரோகப் பாத்திரத்தால் திடம் கொண்ட சிங்களம் 1972 இல் ரொட்ஸ்கிய கம்யூனிச விரோதிகளோடு கூட்டமைத்து பெளத்த சிங்கள அரசியல் யாப்பை உருவாக்கியது.இது SLFP சிறீமா அரசாங்கத்தில் நிறைவேறியது.(இது தான் சீன ஏகாதிபத்திய தாச, செந்தில், சிவசேகரம் கும்பல் தேங்காய் உடைக்கும் `தேசிய முதலாளித்துவக் கட்சி`!)

இந்த அரசியல் யாப்பு ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. S.J.V செல்வநாயகம் பதவி விலகினார்.

இது வெறும் உள் நாட்டு நிகழ்வு மட்டுமல்ல, எழுபதுகளில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் சார்ந்ததாகும்.

இதனால் மிகவும் நலிந்து போன தமிழ்க் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்து தான் தனி நாட்டுக்கோரிக்கை தர்க்க ரீதியாக, நீதியாக முதலில் எழுந்தது.

தமிழீழக் கோரிக்கை ``தந்தை செல்வாவால்`` முன் வைக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பொய் ஆகும்.

அதற்கு முன்னரே தமிழீழ விடுதலை இயக்கம் தோன்றி விட்டது. சிவ.ஜோதிலிங்க செம்பாட்டான்கள் இதைக் கண்ணாரக் கண்டும் அதிகார பூர்வ `அரசியல் ஆய்வாளர்` என்கிற மகுடத்துக்காக பொய் 
சொல்லுகின்றனர்.இவ்வாறான பொய்வாளர்களின், பொய் வாழர்களின் பட்டியல் மெய்யாகவே மிக மிக நீளமானது.

இந்த நெருக்கடியில் இருந்து மீள, தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் தவிர்க்க இயலாமல், தம்மை தக்க வைத்துக் கொள்ள கண்டடைந்த வழிதான் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

1915 இல் கலவரம், 1958 இல் கலவரம். 1961 இல் கலவரம், 1977 இல் கலவரம்,1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை பலிக்களம்,  1983 இல் இனப்படுகொலைக் ``கலவரம்``. இவ்வாறு 68 ஆண்டுகள் அரசியல் அமைப்புச்சட்டம் என்ன சொன்னாலும் இந்த கலவர ஆயுதத்தால் தான் நாடு ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

மூச்சு விட மக்களுக்கு தேசம் இருந்ததென்றால் அது இந்தப் ``பாசிசப் பிராபகரனின்`` முப்பது ஆண்டுகள் மட்டும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கைச் சோனகர்களுக்கு எதிராக கலவர ஆயுதத்தை ஏவினர்.

ஒரு ஞாயிறு தினத்தில் சடுதியாக சஹாரான் என்கிற பயங்கரவாதி உயிர்த்தது, அது உலகளவில் பிரபல்யமாகியது, கலவர ஆயுதம் கைவிடப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.

எவ்வாறு எண்பத்தி மூன்று ஜூலை கலவரக் கிளர்ச்சிக்கு டட்லியில் இருந்து ஜே.ஆர் வரை ஒரு 35 ஆண்டுகால பிரச்சார இயக்கம் இருந்ததோ, அதேபோல 2009 இற்குப் பின்னாலும் ஒரு பிரச்சார இயக்கம் 

ஆரம்பித்தாகிவிட்டது.பிக்கு வர்க்கத்தை ஆதார சமூக சக்தியாகக் கொண்ட இந்த வரலாற்று இயக்கத்தின் ஒரே குறிக்கோள் , ``ஏக்க ரட்டே`` சிங்கள அரசு, சிங்கள நாடு என்பதேயாகும்.

1983 இற்குப் பின்னால் 2009 வரை ``சிங்கள தமிழ்க் கலவரம்`` நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிப்படை காப்பரணாக இருந்ததே!

துடைத் தொழித்து விட்டார்கள் துரோகிகள்!

நிராயுத பாணியாக நிற்கிறது ஈழ தேசம்!

பக்ச பாசிசம் அரங்கேற, நாடாள மன்ற ஜனநாயகம் ஏணிப்படியாய் நிற்கின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் பக்ச பாசம் வரலாறு காணாத ஏகாதிபத்திய நெருக்கடியின் காலகட்டத்தில், உலக மறுபங்கீட்டு மூன்றாம் பெரும் போர் முகிழ்க்கும் தருணத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது.

அடுத்த கறுப்பு ஜூலை கதவைத் தட்டுகின்றது.
காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

(தொடரும்)


No comments: