அன்பார்ந்த தமிழீழ மக்களே, மாணவர்களே, இளைஞர்களே, போராளிகளே,
மே 18 2016, முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினமாகும்.மே 18 2009 இலிருந்து, ஜனவரி 2015 வரை பக்ச பாசிஸ்டுக்கள் யுத்த வெற்றியின் வெறியில் திளைத்திருந்தனர். நிராயுதபாணியான தமிழீழத்தை ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்யத் திட்டமிட்டனர்.இராணுவத்தை உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி ஒரு வர்க்கமாக வளர்க்க முயன்றனர்.இனவெறிப் பாசிச சிங்களத்தை, இராணுவ பாசிச சிங்களமாக மாற்ற முயன்றனர்.
சர்வதேசிய நிலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ந்து செல்லும் போக்கையும், அதற்கு முண்டு கொடுக்க இந்திய விரிவாதிக்கம் வெறி பிடித்தலைவதையும் கருத்தில் கொண்டு, ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டுக் கால கட்டத்தில் சீன ஏகாதிபத்திய சார்பு வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
இந்த உலக மறுபங்கீட்டுப் போர்க்களத்தில்,அமெரிக்க அணி சார்ந்து நடத்தப்பட்ட, ஏகாதிபத்தியதாச புலம் பெயர் அமெரிக்க இந்திய விசுவாசிகளின் பேரவைகள் நடத்திய `போர்க்குற்ற ஐ.நா. விசாரணை இயக்கம்` படு தோல்வியில் முடிந்தது.அதுமட்டுமல்ல இந்த இயக்கம் புறவயமாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்வதில் வந்து முடிந்தது.
உடனடி மீட்சி எனக் கருதி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாக்களித்து போர்க்குற்றவாளி மைத்திரியை ஜனாபதியாக்கியது.சிங்கள அடிமை சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவனாக்கியது. சுமந்திரனை தமிழர் குரலாக்கி சுதந்திரப் போரின் குரல் வளையை நெரித்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஈழ விரோத கும்பல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாகவும்,இந்திய விரிவாதிக்கத்தின் காவலர்களாகவும்,சிங்களத்தின் ஏவலர்களாகவும் அரசியல் பாத்திரம் ஆற்றுவதால் தமிழர் வாழ்வில் எதுவும் மாறவில்லை.
போதாதற்கு ஏகாதிபத்திய `சிவில் சொசைட்டிகளின்` ஊடுருவலாலும் தமிழர் வாழ்வில் எதுவும் மாறவில்லை.
இத்தகைய சூழலில் தான் ரணில் மைத்திரி பாசிச ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நலன் காக்கும் நல்லாட்சி தன் சிங்களக் கொடுங் கரத்தை தமிழீழம் மீது விரித்து கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து வருகின்றது.
இதில் ஒரு பகுதி தான் ஈழப்புலிப் போராளிகள் மீளக் கைது செய்யப்படும் நிகழ்வு.
நல்லாட்சி அரசாங்கம் இதற்கு எந்தவித அதிகாரபூர்வ காரணங்களையும் தெரிவிக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவன் சிங்கள அடிமை சம்பந்தனும் இதற்கு பதில் சொல்லவில்லை.
கோடம்பாக்க நடிகர் பாக்கிய ராஜுக்கு தனிப்படக் கடிதமெழுதிய நாடுகடந்த உருத்திரகுமாரனின் அரசாங்கம், வேலைப் பழுவில் போலும், கேள்வி கேட்கவில்லை.
புலம் பெயர் பேரவைகள் `அதிகாரப் பரவலாக்க சமரச சமஸ்டித் திட்டத்துக்கு தமிழீழத்தை தாரை வார்க்கும் பணியில் முழு மூச்சாகவும் மும்முரமாவும் ஈடுபட்டுள்ள நிலையில்` புலி மீட்சி` இவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.இதனால் இவர்களும் கண்டு கொள்ளவில்லை.
ஈழமுரசு சேரமான் உள்ளமைப்பு பிறழ்வுகளை விலாவாரியாக விளக்கிவிட்டு ``உண்மைப் போராளிகள்`` கைதுக்கான காரண காரியம் பற்றி ஒரு வரி பேசாமல் `மெளனித்து விட்டார்`!
ஆளும் வர்க்க உளவாளி ஊடகவியளாளன் DBS Jeyarajah தனது கண்டுபிடிப்பில் `புலம் பெயர் புலிகள்,புனர்வாழ்ப் புலிகளை பணம் கொடுத்து வாங்கி ,இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பு நலனின் பாற்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையே இப் போராளிகள் கைது என பறைசாற்றியுள்ளான்.
அபத்தம்!
1) இனத்துவப் புலிப் புரட்சி இயக்கம் மீளத்தோன்ற வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஒரு பேரவை கூட புலம் பெயர் நாடுகளில் இல்லை.
2) பணம் கொடுத்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவது அவர்களது அரசியல் பாதை அல்ல. இவர்கள் சட்டபூர்வ பாராளுமன்ற சமரசவாத சமஸ்டி அரசியல் தரகர்கள்.
3) அந்நியப் பணத்துக்கு கையேந்தி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சாத்தியமான ஒரு கூலிப்படையை உருவாக்கும் சூழல் ஈழத்தில் தற்போது இல்லை, போராளிகளும் அதற்கு தயாராகவும் இல்லை.
ஆக இந்த திடீர் போராளிகள் மீள் கைதுகளுக்கு காரணம் என்ன?
எல்லோரும் மூடி மறைக்கும் அந்த மர்மம் என்ன?
70 களின் பிற்பகுதியில் இலங்கையை உலகமயமாக்கும் ஜே.ஆரின் சிங்கப்பூர் திட்டத்தின் மீது விழுந்த பேரிடி தான் `புலிப் பயங்கரவாதம்`!
இதனால் தான் 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர்கள் முதலில் அறிவித்த பிரகடனம் REGAINING SRI LANKA என்கின்ற அந்நிய அடகுத் திட்டமாகும்.இலங்கையை `மீளப்பெறுவதற்கு` எப்போது இழந்தார்கள்? எதனால் இழந்தார்கள்?
உலகமயத்துக்கு திட்டமிட்ட போது,புலிகளின் விடுதலைப் போராட்டத்தால் இழந்தார்கள்.
அமைதி,சமாதானம்,நல்லிணக்கம்,
நல்லாட்சி,என்கிற பெயர்களில் எல்லாம் தற்போது நடந்தேறி வருவது, இழந்த இலங்கையை உலகமயத்துக்கு மீளக்கையளிப்பதாகும்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் இதற்கு இருந்த தங்கு தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.
பக்ச பாசிஸ்டுக்கள் ஆரம்பித்ததை, ரணில் மைத்திரி பாசிஸ்டுக்கள் தொடருகின்றார்கள்.TNA சமரசவாதிகளும், சிவில் சொசைட்டி ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் தொண்டூழியம் புரிகின்றார்கள்.
இலங்கையில் உலகமயம் அரசியல் வரலாற்றுப் போக்கு
இலங்கையில் உலகமய பொருளாதாரக் கொள்கை அமூலாக்கப்பட்ட வரலாற்றை ஆறு கட்டங்களாக ஈழ அரசியல் நோக்கில் வகைப்படுத்தலாம். அவையாவன;
1) 1948-1977 2) 1977- 1983 3)1983- 2002 4) 2002- 2009 5) 2009 -2015 6) 2015.......
1) 1948-1977
இந்த முப்பதாண்டுக்காலம் போலிச் சுதந்திரத்தின், நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சிக் காலமாகும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுதந்திர விவசாய இயக்கத்தை நசுக்கி, உள்நாட்டின் பயிற்றுவித்த ஏஜென்டுகளின் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரம் இலங்கையில் நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சியை, இரு பிரிவாக நிறைவேற்றிய காலகட்டமாகும்.
இந்த இரு வர்க்கப்பிரிவுகள் இலங்கையில் இவ்வாறு அமைந்திருந்தன:
1) நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு இலங்கையை முற்றாக -படிப்படியாக- அடிமைப் படுத்தி சேவகம் செய்யும் பாதையை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தது.
2) நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில் உள்ளூர் சிறு தொழில் துறைக்கு சலுகை அளிக்கும் சார்புப் பாதையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது.
இக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் தான் இலங்கையின் முதல் முப்பது ஆண்டு வாழ்வு நடந்தேறியது.
இந்தக்கால கட்டத்தில் உலக வங்கி ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவித்து வந்தது. இலங்கையின் இரு பெரும் ஆளும் வர்க்கப் பிரிவுகளின் கட்சிகளும் கடைப் பிடித்த நிதி மூலதனக் காலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக 1970 களின் உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியைச் சார்ந்து உள் நாட்டு நெருக்கடி வெடித்தது. ரோகணாவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் போராட்டம்,1972 பாசிச அரசியல் யாப்பு, ஈழ விடுதலை இயக்கத்தின் உதயம் என்பன இக்காலகட்டத்தின் இயற்கைப் பிரசவமாகின.இறுதியில் இது ஈழ சமரசவாதிகளை வட்டுக்கோட்டைத் தூக்குமேடையில் நிறுத்தியது. துரதிஸ்டவசமாக இந்த தூக்குமேடையோ பஞ்சு மெத்தையாக அமையவில்லை! 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் ஈழப்பிரிவினையை ஏற்று பொது வாக்களித்தனர். இதற்காக 1977 கலவரத்தால் பழி வாங்கப்பட்டனர்.இந்த அநீதிக்கு பழி வாங்க `ஆயுதப் போராட்டம்` என்கிற எண்ணம் கருக்கொண்டது. 1977 பொதுத் தேர்தலில் மலரும் முள்ளும் ஒரு சேர முகிழ்த்தன. மலர், ஈழப்பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பாக அமைந்தது.முள், ஜே.ஆர்.ஆட்சி தனியார்மய தாராளமயக் கொள்கையை `இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்` `நீதியான சமுதாயம் படைப்பேன், என முழங்கி அமுலாக்கியது.இந்த முள்ளுக்கும் மலருக்கும் இடையான போராட்டம் தான் எஞ்சிய இலங்கை வரலாறாகும்.இன்றுவரை!
2) 1977- 1983
நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு சேவகம் செய்ய சமஸ்டிக்கட்சி ஈழத்தமிழரின் பொது வாக்கெடுப்புத் தீர்ப்பை பாடையில் ஏற்றி 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற போலி ஏமாற்றுத்தீர்வை ஏற்றுக்கொண்டது.தேர்தலில் பங்கேற்றது.தேர்தல் கூட்ட மேடை மீது கைக்குண்டை வீசி எறிந்து விட்டு தலைமறைவானோர் ஒலித்த குரல்
`` புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்``.தமிழீழத்தாயகத்தை சிங்கள
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க திண்ணை வேலியில் நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலும் 13 சிங்களச் சிப்பாய்களின் மரணம், காத்திருந்த சிங்களத்துக்கு நல்ல காரணமாய் அமைந்து 1983இனப்படுகொலை வெடித்தது.ஜே ஆரின் சிங்கப்பூர் கனவு தவிடு பொடியாகியது. விடுதலைப்புலிகளை விசர் நாய்கள் என்று அவர் காரணம் இல்லாமல் குரைக்க வில்லை.
உள்நாட்டு யுத்தம் வெடித்தது.ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு இலங்கை அரசை தனது மேலாதிக்கத்துக்கு பணிய வைக்க நிர்ப்பந்தித்தது.
3) 1983 -2002
உள்நாட்டு யுத்த காலம். வடக்கு கிழக்கு ஈழத்தில் நிதி மூலதனக் காலனியாதிக்கம் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.சிங்களத்திலும் அந்நிய மூலதன முதலீடு பாதுகாப்பற்றிருந்தது.ஆனையிறவுப் படைத்தளத்
தாக்குதல் (2000 ஆம் ஆண்டு மார்ச் 26), இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப்புலிகளின் மேலோங்கிய நிலையை நிரூபித்தது.இதற்கு சிகரமாகவும்,வரலாற்று திருப்பு முனையாகவும் அமைந்தது
விடுதலைப்புலிகளின் விமானப் படையின் கட்டு நாயக்கா விமானப் படைத்தள தாக்குதல் (ஜூலை 24, 2001).ஆகும்.இப்போது தான் இலங்கைப் பொருளாதாரம் முதல் தடவையாக எதிர்க்கணிய வீழ்ச்சி கண்டு பொறிந்து விழுந்தது. அரசு நிலை குலைந்திருந்தது. மிக மிக துரதிஸ்டவசமாக இதுவரைக்கும் வந்த புலிகள் இதன் பயன்களை எட்டாதவாறு ஏகாதிபத்திய பொறிக்குள் வீழ்த்தப்பட்டனர் அல்லது வீழ்ந்தனர்.2002ஆம் ஆண்டு மாசி மாதம் நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் ஏகாதிபத்திய சதிவலை வீசப்பட்டது.
4) 2002-2009
இந்த பேச்சுவார்த்தையை சூசக மொழியில் PEACE PROCESS என அழைத்தனர்.இதன் பொருள் அது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.இந்த தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வு, Regainning Sri Lanka.`ஈழ விடுதலைப் போரால் இழந்த` நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை, 'சமாதான காலத்தில்` எவ்வாறு மீள நிர்மாணிக்க வேண்டும் என உலக வங்கி வகுத்தளித்த திட்டமே Regainning Sri Lanka ஆகும்.இது சம்பிரதாய பூர்வமாக ரணில் அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் உலக வங்கியால் `பரிந்துரைக்கப்பட்டது`!
இந்த சமாதானப் பேச்சுவார்த்தை உருவாக்கிய யுத்த நிறுத்தத்தை சிங்களம், அடுத்தகட்ட இனப்படுகொலைப் போருக்கு தயாராகிவிட்ட நிலையில் தன்னிச்சையாக, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி போர் தொடுத்தது.நோர்வே சிங்களத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது! இந்த சதிச் சமாதானம் ஆனந்தபுர போர்க்களத்தில் நடத்தப்பட்ட சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறிய விசவாயுத் தாக்குதலில் கோழைத்தனமாக விடுதலைப் புலிப் போர்த் தளபதிகளை கொன்றொழித்தது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.முப்பது ஆண்டுகால முதலாவது `ஈழ யுத்தம் மெளனித்தது`.
5) 2009-2015
யுத்தத்தில் விசவாயுத்தாக்குதல், இனப்படுகொலை, ஆகிய ஆயுதங்களால் வெற்றிவாகை சூடிய பக்ச பாசிசம், Regainning Sri Lanka திட்டத்தை மகிந்த சிந்தனை என்கிற மாறு வேடத்தில் வெளியிட்டது. யுத்த வெற்றியை மூலதனமாக்கி ,`இராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப முயன்றது. இதற்கு சீனாவோடு அணிசேர்ந்தது.
ஐ நா வின் பாசையில் `சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாதை`யில் பயணிக்க எத்தனித்தது.
இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் பக்ச பாசிசம் ஜனவரி 8 2015 இல் அரசியல் அதிகாரத்தை இழந்தது.
6) 2015............
ரணில் மைத்திரிப் பாசிசம் அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
புலிகள் இல்லாத இலங்கை , தங்கு தடையற்ற உலகமயத்துக்கு திறந்து விடப்பட்டது.
அந்தத் திட்டம் வருமாறு:
1) Naval & Maritime Hub
2) Aviation Hub
3) Commercial Hub
4) Energy Hub
5) Knowldge Hub
6) Tourism Hub
வேறு விதமாகச் சொல்வதானால் முழு நாட்டையும் அதன் வளங்களையும் உலகமயக் கொத்தளங்களாகக் கூறுபோட்டு அந்நிய நிதிமூலதன காலனியாதிக்கத்துக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டது. இது மகிந்த சிந்தனை என்றே இன்றுவரையும்(2016) அழைக்கப்பட்டுவருகின்றது!.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உலகமய வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்திருக்கும் பூகோள ரீதியான வாய்ப்பை இதற்கான மூலதனமாக்கிக்கொள்கின்றது.உண்மையில் இதில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கடல் பரப்பு ஈழத்துக்குச் சொந்தமானதாகும்.பேடித்தனமாக ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் புலிகள் தலைமையை அழித்து, இனப்படுகொலையால் ஈழ தேசத்தைக் கபளீகரம் செய்த சிங்களம், இப்போது அதை அந்நியனுக்கு ஏலம் போட்டு விற்றுவருகின்றது.பக்ச பாசிசம் சீனாவோடு இணைந்து செய்த அதே கைங்கரியத்தை ரணில் மைத்திரி பாசிசம் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க முகாமின் அடிமைக் கூட்டாளியாக செய்ய முயலுகின்றது.
மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு (அரசியல் குறிப்புகள் ENB இட்டவை),2002 பேச்சுவார்த்தையில் இருந்து அந்நியக் கடன் அதிகரிப்பைக்காட்டுகின்றது.
மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு (அரசியல் குறிப்புகள் ENB இட்டவை),2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அந்நியக் கடனின் சடுதியான அதிகரிப்பைக் காட்டுகின்றது.மேலும் 2009 இல் 1500000 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய்களாக இருந்த அந்நியக்கடன் 2016 இல் 3000000 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய்களாக-இரு மடங்காக- அதிகரித்துள்ளமையைக் காட்டுகின்றது.போருக்குப் பிந்திய காலத்தில் அந்நியக் கடன் இருமடங்காக அதிகரித்ததை எவ்வாறு விளங்கிக் கொள்வது? அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நல்லாட்சி,என்கிற பெயர்களில் எல்லாம் தற்போது நடந்தேறி வருவது, இழந்த இலங்கையை உலகமயத்துக்கு மீளக் கையளிப்பதாகும்.ஒட்டு மொத்த நாட்டையும் அந்நிய நிதி மூலதனத்துக்கும்,உலக மறுபங்கீட்டுக்கும் அடகு வைப்பதாகும்.
மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு,அந்நியக்கடன் மொத்த தேசிய உற்பத்தியில்
வகிக்கும் விகிதாசாரத்தை அளவிட்டுள்ளது.இவ்வரைபின் படி இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அந்நியக்கடன்(வட்டி உட்பட) 75% இலிருந்து மேலும் அதிகரித்துச் செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றது.
அதாவது சாதாரண வாழ்வில் ஒரு குடியானவன்,ஒரு ஓட்டோக்காரன்,ஒரு ரிக்ஸாக் காரன் தனது 100 ரூபா வருமானத்தில் 75 ரூபாவை கந்து வட்டிக் கடனுக்கு கொடுத்துவிட்டு,எவ்வாறு வெறும் 25 ரூபாவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளானோ,அதே நிலமையில் தான் இலங்கை நாடே இருக்கின்றது.
கிரேக்கம் எவ்வாறு ஐரோப்பிய ஜூனியனால் மென்று, தின்று, விழுங்கப்பட்டதோ,இதுவே தான் IMF கடனால் இலங்கைக்கு நிகழப்போவதும்!
இவ்வாறு அரைக்காலனிய நாடுகளின் ஏகாதிபத்திய தாச ஆளும் வர்க்கங்கள் எந்தளவுக்கு எந்தளவு அதிக சந்தையை அபகரித்து தாரை வார்க்கின்றார்களோ,எந்தளவுக்கு எந்தளவு சுதந்திர தேசங்களை,தேசிய இயக்கங்களைகொன்றொழித்து இரத்தக் கறை படிகிறார்களோ,அந்தளவுக்கு அந்தளவு ஏகாதிபத்திய வெகுமதி பெறுகின்றார்கள்.
தென்னாசியாவிலும்,மத்திய ஆசியப்பகுதிகளிலும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் அடிமைச் சேவகம் தான் இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான யுத்ததந்திர கூடணியாகும்.
ஈழத்தை சிங்களம் ஆக்கிரமித்திருப்பதும் முழு இலங்கை நாட்டையும் உலகமயத்துக்கும், உலக மறுபங்கீட்டுக்கும் பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கேயாகும்.
உலகமயத்துக்கும்,உலக மறுபங்கீட்டுக்கும்,நாடு தாரைவார்க்கப்படுவதால் எழும் சமூகக் கொந்தழிப்புகளைத் திசை திருப்பும் ரணில் மைத்திரி பாசிசத்தின் மோசடிதான், இப்புலிப்பூச்சாண்டி.
வழக்கம் போல இரண்டு தரகுக் கட்சிகளும், தமிழ் மற்றும் இடது சாரிக் கும்பல்களும். பக்ச பாசிஸ்டுக்களும்,சிவில் சொசைட்டிகளும்,ஊடகப் பயங்கரவாதிகளும், இந்த உண்மையை மூடி மறைக்கின்றனர்.
``பிரபாகரன் வருவார்``,``பொட்டம்மான் இருக்கின்றார்`` ,``தற்கொலை அங்கி கண்டு பிடிப்பு``,``புலம் பெயர் புலிகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுகின்றனர்`` என்றவாறு பொய்யான போலியான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, புலிப்பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.
இதை நியாயப்படுத்தும் பொருட்டு ``புனர் வாழ்வு`` பெற்று விடுவிக்கப்பட்டு பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் போராளிகளை மீண்டும் கைது செய்து வருகின்றது சிங்களம்.அரசியல் சுதந்திரத்தை அச்சுறுத்துகின்றது.அடக்குமுறைகளைக் கட்டவிழ்க்கின்றது. பாதுகாப்பற்று பய பீதியில் வாழ நிர்ப்பந்திக்கின்றது.
ஆயுதங்கள் அற்று,அமைப்பு வாழ்க்கையற்று, பொதுவான அரசியல் குறிக்கோள் அற்று, உதிரிகளாக தேசிய உணர்வோடு வாழவும்,தமது முப்பது ஆண்டுகால போர்வாழ்வை,பதியவும்,பகிரவும்,படைக்கவும் உள்ள உரிமையையும் இந்தப் போலி நல்லாட்சி மறுத்துவருகின்றது.
ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் விடுதலைப் போர்க் கைதிகளை விடுவிக்கவில்லை.அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மீளக் கையளிக்கப்படவில்லை.இன ஒடுக்குமுறை யுத்தத்தின் வடுக்களில் இருந்து ஈழ தேசம் மீளவில்லை.வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை.அபிவிருத்தி திட்டங்களும், மாகாண எல்லைத் திருத்தங்களும், அரசியல் அமைப்புத் திருத்தமும் ஈழத்தை துண்டாடுவதையே குறிகோளாகக் கொண்டுள்ளன.
சிங்களப் பேரினவாதமும், பெளத்த மதவாதமும், இராணுவ ஆக்கிரமிப்பும்,கலாச்சார ஆதிக்கமும்,உலகமயமும்,உலக மறுபங்கீடும் என எண்ணற்ற அந்நிய தளைகளில் சிங்களம் ஈழத்தைக் கட்டிப்போட்டு அடிமைத் தேசமாக ஆக்கியுள்ளது.
``பிளவு படாத இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு`` என்கிற முழக்கம் ஈழ தேசத்தை அமெரிக்க,இந்திய,சிங்கள அல்லது ரசிய சீன சிங்கள ஏகாதிபத்திய முகாம்களில் ஏதோ ஒன்றின் அடிமைத் தேசமாக மாற்றும் முழக்கமே ஆகும்.தற்போது ஈழ தேசத்தை அமெரிக்க, இந்திய,சிங்கள முகாமுக்கு அடிமைப்படுத்தும் முழக்கமாகவும், சீன திருத்தல்வாதிகளால் ரசிய சீன சிங்கள ஏகாதிபத்திய முகாமுக்கு அடகு வைக்கும் முழக்கமாகவும் உள்ளது.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் இனத்துவ விடுதலைப் புரட்சி அரசியல் மெளனித்து, புதிய ஜனநாயக ஈழப் புரட்சி அரசியல் எழுந்து கொண்டிருக்கும் இடை வெளியில், சமரச சமஸ்டி எதிர்ப்புரட்சி அரசியல் ஓங்கி நிற்பதே அனைத்து தமிழர் அவலங்களுக்கும் பிரதான காரணமாகும். மேலும் இது இலங்கையில் மட்டும் இடம் பெறவில்லை,தமிழகத்தில் நிகழ்ந்தன,புலம் பெயர் நாடுகளிலும் நிகழ்ந்தன.திரைமறைவில் ஒன்றிணைந்தே நிகழ்த்தப்பட்டன.
ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் ஏழாம் ஆண்டில் அநுபவிக்கும் இன்னல்கள் இந்தச் சூழலில் தான் நிகழ்ந்தேறுகின்றன..
இந்த எதிர்ப்புரட்சி சூழலை மாற்றியமைத்து, புதிய ஈழப்புரட்சிச் சூழலை உருவாக்க பின்வரும் முழக்கங்களின் மீது அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.
* நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிசமே, இலங்கைத் திரு நாட்டை உலகமய , உலக மறுபங்கீட்டு போர்க்களத்திற்கு தீனியாக்கும் திட்டத்தைக் கைவிடு!
* இலங்கையை நல்லிணக்க நாடாக மாற்ற ஈழத்தமிழ்த் தேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரி!
* சிங்கள பெளத்த இராணுவ மேலாதிக்கத்தை ஈழம் மீது திணிக்காதே!
* ஈழ தேசிய பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து!
* அபகரிக்கப்பட்ட ஈழ விவசாய நிலங்களை ஏழை விவசாயிகளிடம் உடனே ஒப்படை!
* போராளிகள் மீள் கைதை உடனே நிறுத்து;அவர்கள் பொது வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடாதே!
* விடுதலைப் போர்க்கைதிகளை உடனே விடுதலை செய்!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்