Monday, 18 June 2012

13வது திருத்தச்சட்டமும் மாகாணசபைகளும்


13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும்

ஏப்ரல் 1989
====================
குறிப்பு: ஜூலை 24 1983, தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து, தனது விரிவாதிக்க நலனை அடைய இந்திய அரசு ஈழப்பிரச்சனையில் தலையிட்டது.ஜுலை 13 1985 இல் ஈழப்போராட்டத்தை சமரசப்படுத்த போராளிக்குழுக்களுக்கும் சிங்களத்துக்கும் இடையே பூட்டான் நாட்டின் திம்பு நகரில் ஒரு பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்தது.இப்பேச்சுவார்த்தையில் போராளிக்குழுக்கள் முன் வைத்த தமிழீழ சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்களத்துடன் இணைந்து தனது மேலாதிக்க நலனை அடைய ஜூலை 29 1987 இல் ஒப்பந்தம் செய்துகொண்டது.இவ் ஒப்பந்தந்தின் அடிப்படையில் மாகாணசபைகள் ( Provincial Councils) எனும் அமைப்புக்கள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டன. இம்மாகாணசபைகள் 1978 அரசியல் யாப்புக்கு 14 நவம்பர் 1987 இல் செய்யப்பட்ட 13வது திருத்தத்துக்கு அமைய நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன.

கிழக்கு மாகாண மக்களிடையே தேர்தல் நடத்தி இறுதி முடிவு எடுக்கும் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணசபைகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இத்தற்காலிக வடகிழக்கு மாகாணசபைகளை ஏற்றுக் கொண்டு, ஆயுதங்களை ஒப்படைத்து ஈழப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலக்குமாறு போராளிகளை இந்திய அரசு பயமுறுத்தியது. பல்லாயிரக்கணக்கான போராளிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கினர். EPRLF உம் இதர அமைப்புக்களும் இந்தியப் படையின் கைக்கூலிகளாகி விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.மேலும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து தென்னிலங்கையில் ஜே.வி.பி ஆயுதக்கிளர்ச்சியில் இறங்கியது.நாடு தழுவிய போர்ச்சூழல் உருவானது.

இச்சூழலில்தான் இக்கட்டுரை இரகசியப் பத்திரிகையாக  ஏப்ரல் 1989 இல் இலங்கையில் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இப்போர்ச்சூழலும் அது சார்ந்த நிலைமைகளும் இன்று  கால் நூற்றாண்டு கடந்த வரலாறாகிவிட்டன.ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும் இன்னும் சமகால நிகழ்வில் சம்பந்தப்பட்டவையாய்  உள்ளன.இம்மாறியுள்ள நிலைமையை கவனத்திற்கொண்டு கற்குமாறு வாசகரை வேண்டுகின்றோம்.

(சுமார் ஒரு பக்கம் அளவிலான கட்டுரையின் முதற்பக்கமும், கடைசிப்குதியும் சிதைந்து விட்டமைக்கு வருந்துகின்றோம்)
=======================

13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபைகளும்

1) மாகாணசபைகளும் அவற்றுக்குள்ள அதிகாரங்களும்

அ). தற்போதைய வடக்குக் கிழக்கு இணைப்பானது இப்போதும் தற்காலிகமானதாகவே உள்ளது. மேலும் இது அருகருகாக உள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதேச இணைப்பை துண்டாடும் பாசிச அரசின் கபட நோக்கங்களையும் தன்னுள் கொண்டதாக உள்ளது.

ஆ). தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் “அரச காணி” என்பதன் பேரால் சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் அவ் அரச காணி
தொடர்பில் அனைத்து அதிகாரங்களையும் தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது. “நீர்ப்பாசன காணிஅபிவிருத்தி செயற்திட்டங்களை மேற்கொள்ளல், தேசிய இனவிகித அடிப்படையில் காணிகளை பங்கீடு செய்து ஒதுக்குதல்”, ஆகியன தொடர்பில் “இச்செயற்திட்டங்களுக்கான நிர்வாகமும்
முகாமையும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கும்” என உறுதியாகக் கூறப்படுகிறது. அதே வேளை, “மாகாணசபை காணி பங்கீடு
தொடர்பில் (பேரினவாத) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசிய காணி ஆணைக்குழுவின் கொள்கைகளை கருத்திற் கொள்ள வேண்டும்” என
எச்சரிக்கப்பட்டுள்ளது.. (இந்தக் கொள்கைகள் எத்தகையதாக அமையக் கூடும் என்பதை ஊகிப்பது கடினமானதல்ல!)

ஆக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தையோ பிரதேச அபகரிப்பையோ துண்டாடலையோ கைவிடும் நோக்கம் எதுவும் மேன்மைதங்கிய இலங்கை
அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது மட்டுமல்ல அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தையும் அது மாகாண சபையிடம்
இருந்து பறித்துக் கொண்டுள்ளது. (என்னே அதிகாரப்பகிர்வு!)

இ). ஒரு தேசிய இனம் தன் சொந்தத் தேசத்தை பாதுகாக்க தனக்கு ஒரு சொந்தப் படையை வைத்திருக்கும் அதிகாரத்தை மறுக்கிறது. ஜனாதிபதி,
தேசிய பொலிஸ் ஆணைக்குழு, ஐஜிபி, டிஐஜிபி என்பதோடு “அதிகாரப்பரவலாக்கம்” நின்றுவிடுகிறது. இதற்கு மேல் மாகாணப் பொலிஸ்
ஆணைக்குழுவுக்கோ, முதலமைச்சருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. மேலும் தன் பாசிச கொலைப்பட்டாளங்களை மற்றும் உளவாளிகளை மக்கள்
மீது ஏவிவிட இலங்கை அரசு அதிகாரம் பெற்றிருப்பதுடன், அதற்குத் துணை நிற்கவும் மாகாண அரசாங்கத்தை கடமைப்படுத்தி உள்ளது. இல்லையேல்
மாகாண அரசாங்கம் கலைக்கப்பட்டுவிடும்!!

ஈ). “மாகாணத்திற்கான நிதி தொடர்பிலான அனைத்துக் கருமங்களும் ஆளுநரால் ஆக்கப்படுகின்ற விதிகளினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்”,
என்ற ஏற்பாடானது, தன் சொந்தத் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் புனர் நிர்மாணப் பணிக்கும் மாகாணசபை முற்றிலும் பேரினவாதப்
பாராளுமன்றத்தையே நம்பியுள்ளதைக் காட்டுகிறது. மேலும் அனைத்துப் பொருளாதாரத் திட்டங்களும் நிதி செலவிடப்படும் முறைகளும்
பாராளுமன்றத்தாலேயே (நிதி ஆணைக்குழு மற்றும் ஆளுநராலேயே) தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. ஆக சிங்களத் தரகு முதலாளித்துவ வர்க்க
புத்தமதவாத பேரினவாத அரசு அனுமதிக்கும் அளவுகளை மிஞ்சி எத்தகைய பொருளாதார அபிவிருத்திகளையும் புனர் நிர்மாணத்தையும்
மேற்கொள்வதற்கு மாகாணசபை அதிகாரமற்றதாக இருக்கிறது.

உ). தமிழ் மொழியைப் பொறுத்தவரை வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழ் மொழியை அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்துவதை சட்டத்தின்
மூலம் தடை விதித்துள்ளதுடன் ``தமிழை அரச கரும மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை பாராளுமன்றமே கொண்டுள்ளது”. அத்தகைய அதிகாரம் மாகாணசபைக்குக் கிடையாது.

ஊ). ’பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம்’ எனக் கள்ளப் பெயர் சூட்டியுள்ள மக்கள் விரோத பாசிசக் கறுப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாகாணசபை
இயங்க வேண்டும். இலங்கையின் பாதுகாப்ப்பு அச்சுறுத்தப்பட்டால், அல்லது கறுப்புச் சட்டம் மீறப்பட்டால் அல்லது மீறப்படும் என ஜனாதிபதி
கருதினால் அதற்கான நிலைமைகளை ஒடுக்குவதற்கு இந்த மாகாணசபை கடமைப்பட்டது. அதனை நிறைவேற்றத் தவறினால் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட இந்த மாகாணசபை (?), ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் கேட்டுக் கேள்வியின்றிக் கலைக்கப்பட்டுவிடும். இதுபற்றி எந்த
நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்தப்படுதலாகாது. மூச்! (தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோருவது இலங்கையின் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது
என்பதும், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறுகிறது என்பதும் சொல்லாமலே புரிந்து கொள்ளக் கூடியது. ஆக மாகாணசபையின் கடமை
என்னவாக இருக்கமுடியும்?)

எ). பிரதேசம், பொருளாதாரம், பாதுகாப்பு, மொழி, கல்வி, பண்பாடு இவற்றில் எதனையும் சிங்களத் தரகு முதலாளித்துவ வர்க்க புத்தமதவாத
பேரினவாத பாசிச இலங்கை அரசின் திட்டமிட்ட அழித்தொழிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்பதை
மேலே கூறப்பட்டவையிலிருந்து (13 ஆவது திருத்தப்படி) புரிந்து கொள்ள முடியும்.

எனவே மக்களின் நலன் என்கிற பக்கத்திலிருந்து ஆராய்கிறபோது “தேசியப் பெருவழிகள், தேசிய பெருவழிகள் மீதான பாலங்களும் பாதைகளும்
தவிர்ந்த குறுந்தெருக்கள் ஒழுங்கைகளைத் திருத்தவும், நன்னடத்தைப் பள்ளிகள் நடத்தவும்” மற்றும் இது போன்ற அற்பச் .சீர்திருத்த வேலைகளைச்
செய்வதற்கு மேல் இந்த மாகாணசபையால் எதுவும் முடியாது. ஆனால் கேள்வியெல்லாம் மக்களின் நலன் என்கிற ஒரு பக்கம் மட்டும்தானா? இந்த
மாகாணசபைக்கு உண்டு என்பதுதான். அவ்வாறில்லை, அவ் மாகாணசபைக்கு இந்திய இலங்கைப் பாசிச அரசுகளின் நலன் என்கிற மற்றொரு பக்கமும்
உண்டு. அந்நலன்களைக் காப்பதன் பெயரிலேயே இந்த மாகாணசபை அரசாங்கம் உருவெடுத்து நிற்கிறது.
 
2. இன ஒடுக்கலுக்கான இந்திய இலங்கை பாசிச அரசுகளின் கூட்டுச் சதியே மாகாணசபை!

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கான தமிழ் தேசிய இனத்தின் ஆயுதப் போராட்டம் இலங்கையின் அரைக் காலனிய அரசின் அத்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்த போது, இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க ரஷ்ய ஏகாதிபத்தியங்களின்
வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசினது பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கை அரசு ஏற்பதெனவும் இந்திய அரசு தமிழ் மக்களின் விடுதலைப்
போராட்டத்தை நசுக்கி இலங்கை அரசைக் காப்பது எனவும், இந்திய இலங்கை அரசுகள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன.

இந்த உடன்பாடு எட்டப்படும் வரை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி வந்தது
இலங்கை அரசு. ஆனால் இந்த ஒடுக்கலுக்கு எதிரான பெரும் எழுச்சியை, விடுதலைப் போராட்டத்தின் தீவிர வளர்ச்சியைக் கண்டபின்னர்,
போராட்டத்தை ஒடுக்க உண்மைத் தோட்டாக்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது என்பதை உணர்ந்து, தேன் தடவிய தோட்டாக்களைப்
பயன்படுத்த அதாவது ஒடுக்குமுறையுடன் சில்லறைச் சீர்திருத்தங்களையும் நிலமைக்குத் தக்கபடி கலந்து பயன்படுத்துவது என இந்திய இலங்கை
அரசுகள் திட்டமிட்டுக் கொண்டனர். இதற்கமைய ’அதிகாரப் பகிர்வுமுறை’ என்ற புனைபெயரில் முன்வைக்கப்பட்டவைதான் இந்த மாகாணசபைகள்.
இத்திட்டமானது வடக்குக் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கமட்டுமே சம்மதிக்கிறது. தற்காலிகமான இணைப்பை அறிவித்த மறுகணமே இவ்விணைப்பைத் துண்டிக்கவும் தமிழ்மக்களை சாதி மத பிரதேச ரீதியாகவும் பிளவுபடுத்தி துண்டாடுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் இலங்கைப் பேரினவாதப் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவின் மீதும் இந்த இரண்டு மாகாணங்களுடன் வேறு ஒரு
மாகாணத்தை இணைக்கவும், அல்லது இவ்விரு மாகாண இணைப்பை ரத்துச் செய்யவும், அல்லது இம்மாகாணங்களில் ஒன்றை (கிழக்கு மாகாணம்?)
வேறு ஒரு அருகில் உள்ள சிங்கள மாகாணத்துடன் இணைக்கவும் முடியும்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்றவோ, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களால் சிங்களமயமாக்கப்பட்ட பிரதேசங்களை வெட்டிப் பிரிக்கவோ மறுப்பதுடன், தொடர்ந்தும் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக நிலத்தின் மீதான குடியேற்ற அதிகாரத்தை மைய அரசின் வசமே வைத்துக்கொண்டுள்ளனர். இது சிங்களக் குடியேற்றத்தைத் தொடரவும், தமிழினத்தின் பிரதேச தொடர்ச்சியைத் துண்டாடவும், ஒரு இனமாக இல்லாதொழிப்பதற்கான முழு அக்கறையோடும் தீட்டப்பட்ட  திட்டமாகவே உள்ளது.

ஆக, இந்திய இலங்கைப் பாசிச அரசுகள் தமிழ்மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க மறுப்பது ஒரு புறமிருக்க, இவர்கள் தமிழ் மக்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்க, தமிழர் அனைவரையும் ஒரே மாநில ஆட்சி அமைப்பினுள் கொண்டு வந்து அவர்தம் தனித்துவத்தைப்
பேணிக்காப்பதற்கான உத்தரவாதத்தைக் கூட வழங்கத்தயாராக இல்லை. இத்தகைய ஒரு ஆட்சி முறையா இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டப்
போகிறது? இதனை ஏற்கச்சொல்லி தமிழ் மக்களை யுத்தத்தின் மூலம் நிர்ப்பந்திக்கிற இந்திய அரசா தமிழ் மக்களின் நண்பனாக இருக்க முடியும்?

இந்த மாகாணசபைக்கு பெயரளவிலான அதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. பிரதேசக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கவோ, பொருளாதார வளர்ச்சியை
உத்தரவாதம் செய்யவோ, மொழி,கல்வி,கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கவோ அதிகாரம் அற்றதாகவே உள்ளது. மாகாண சபைக்கான அதிகாரம்
பேரினவாதப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் படியே வழங்கப்படுகின்றது. இந்த அதிகாரங்களை பாராளுமன்றம் பறித்துக்கொள்ள முடியும், வரம்பிட
முடியும். தேவையேற்படின் இந்த அதிகாரங்களை ஜனாதிபதி தடுத்து தன் கையில் எடுத்துக்கொள்ளவும் முடியும்! இன ஒடுக்கலில் இருந்து விடுதலை
பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு தேசிய இனத்திற்கு நியாயமான தீர்வாகக் காட்டப்படும் இந்த மாகாணசபையும் இதற்குரிய அதிகாரங்களும்,  நாடு முழுவதற்கும் பொருந்தி வருவதைக் கொண்டே இதன் மோசடித் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாராளுமன்றத்தின் ‘வேலைக்காரர்களாக’ மாகாணசபைகளை உருவாக்கிவிட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பசப்புகின்றன இந்திய இலங்கைப் பாசிச அரசுகள். தமது அதிகாரக் கோட்டையில் ஆரோக்கியமாக அமர்ந்து கொண்டு ஆளும் கும்பல்கள் எடுத்து வீசுகிற எலும்புத் துண்டுதான் இந்த மாகாணசபை. இதனால் இவை இலங்கையை ஆளுகின்ற வர்க்கங்களின் அதிகாரத்தின் அத்திவாரத்தை உடைக்காது. ஒடுக்கப்படும் தேசத்தின் தமிழ் தேசிய இனத்திற்கு, ஒடுக்கும் தேசத்தின் சிங்களத்தேசிய இனத்துடன் சம உரிமை வழங்கிவிடாது. இத்தகைய ஆட்சி முறையில் இலங்கையில் ஒரு ஜனநாயகக் குடியரசு முறை ஏற்பட்டுவிடாது. இன ஒடுக்குமுறையும் ஒழிந்து விடாது. மாறாக சிங்களத் தரகுமுதலாளிய வர்க்கத்தின் கைகளில் உள்ள அதிகாரம் பாதுகாக்கப்பட்டவும் பாசிச அரசாங்கத்தை மேலும் கெட்டிப்படுத்தவுமே உதவுவதாக உள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின்படி (1989) இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்களப் பேரினவாதக் கட்சிகள்  85வீதத்துக்கு
மேற்பட்ட பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ளன. ஏனெனில் இலங்கையை ஆளும் வர்க்கங்கள் தங்களது ஆசனத்தை நிலைநிறுத்த சிங்களப் பேரினவாதத்தையும் புத்த மதவாதத்தையும் ஆதாரமாகக் கொண்டுள்ளன. அதன் மீது தமது பாசிச அரசை நிறுவியுள்ளன. இந்த நிலைமையில் ஒரு மாகாணசபை அரசாங்கம் இலங்கையை ஆளும் பேரினவாதிகளுக்கும், நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் சுரண்டும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக இருந்து இந்த அரசமைப்புக்கும் இன ஒடுக்குதலுக்கும் துணைபோகும் வரைக்கும்தான் ஆட்சி பீடத்தில் இருக்க அனுமதிக்கப்படும். அதற்கு மாறாக தனது மக்களதும் தேசிய இனத்தினதும் நலன்களை உறுதியாக பற்றி நின்று அரசுக்கு எதிராக செயற்படுமானால் “அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டளைகளை மீறுகிறது” எனக் குற்றம் சாட்டப்பட்டு கலைக்கப்பட்டுவிடும்.

எனவே இந்த மாகாணசபையால் இந்நாட்டில் நிலவும் அரைக் காலனிய  அரை நிலவுடமை முறையையும் அதைக் கட்டிக் காக்கப் பயன்படும், இனஒடுக்கு
முறையையும் இம்மியும் அசைக்க முடியாது. பதிலுக்கு  இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் தரகு முதலாளிகளும், நிலவுடமைச் சக்திகளும்,
பேரினவாதிகளும், தமிழினத்தின் மத்தியிலுள்ள சமரச சக்திகளுக்கும், சரணடைவு வாதிகளுக்கும் மாகாணசபை எனும் எலும்பை வீசித் தமிழினத்
துரோகிகளைப் புதிய புதிய அமிர்தலிங்கம் தொண்டமான்களை தயாரிக்கவும், சிங்களப் பேரினவாதிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கும்
சேவைசெய்ய தமிழர்களிடம் இருந்து புதிய சக்திகளைச் சேர்க்கவும் தேசிய இனத்தைப் பிளவுபடுத்தி கோடரிக்காம்புகளின் துணையோடு விடுதலை
இயக்கத்தை ஒடுக்கவும், தமது உண்மையான விடுதலையை வென்றெடுக்க போராட்டப் பாதையில் முன்னேறும் மக்களை சமரசப் பாதையில்
இழுத்துவிட்டுச் சீரழிக்கவுமே பயன்படுவதாகும். சுருங்கச் சொன்னால் இந்திய இலங்கை அரசுகள் கூட்டாக முன்வைக்கும் இந்த ஆட்சிமுறை 
இனஒடுக்கலுக்கும் இந்நாட்டில் நிலவும் பிற்போக்கான சமூக அமைப்பைக் கட்டிக் காப்பதற்குமான ஒரு கருவியாகவே உள்ளது. இதனால் இது இந்திய
இலங்கை அரசுகளின் நலன்களோடு பிரிக்கமுடியாதவாறு பிணைக்கப்பட்டதாகவும் உள்ளது.

ஆக, இந்திய இலங்கை பாசிச அரசுகளின் அடிவருடிகளான அமிர்தலிங்கம் தொண்டமான் ஆகியோரையும் இன்னும் பதவி வெறியர்களும்
பிழைப்புவாதிகளுமான பத்மநாபா, வரதராஜபெருமாள் போன்ற கைக்கூலிகளையும் தம் பக்கம் நிறுத்துவதற்காக அற்பச் சலுகைகளை வழங்குவது, மறுபுறம் தமிழ் இனத்தின் விடுதலை இயக்கத்தையும், விடுதலைப் போராளிகளையும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயகச் சக்திகளையும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் ஒடுக்க உண்மையான தோட்டாக்களையும் பயன்படுத்துவது என்ற இரட்டைக் கொள்கையின் ஒரு பக்கமே இந்த மாகாணசபைத் திட்டமாகும். சுருங்கச் சொன்னால் தமிழ் இனத்தின் ஒரு பிரிவை அற்பச் சலுகைகளைக் காட்டி உடைத்தெடுத்து தம் பக்கம் சேர்த்துக் கொண்டு விடுதலைப் போரில் உறுதியாக நிற்கும் மறு தரப்பை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது, இதற்காக தமது கைக்கூலிகளையே உபயோகித்துக் கொள்வது இந்திய இலங்கை அரசுகளின் தற்போதைய தந்திரோபாயமாகும். இப்புதிய தந்திரோபாயத்தை செயற்படுத்துவதற்காக இந்திய அரசானது- மக்களை ஏய்த்து  சமரத்துக்குப் பின்னால் திரட்டவும், விடுதலைப் போராளிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவுமாக- அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த மாகாணசபைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாகக் காட்டி இலங்கை அரசு இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண இறங்கி வந்துள்ளதாகவும்
போராளிகளும் இறங்கி வந்து இத்தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ஒரு நடுநிலையாளன் வேடத்தைப் போட்டுக் கொண்டு பசப்புகின்றது.
போராளிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஆயுதங்களை கீழேபோட்டுச் சரணடைந்து, இலங்கை அரசு திறந்துவைத்துள்ளதாகக் கூறும் ஜனநாயக
வழிமுறைக்கு வரும்படியும், வன்முறை எந்தப் பயனையும் தராது அன்பு அகிம்சை வழியாலேயே எதனையும் அடைய முடியுமெனவும் மக்கள் இன்று
அமைதியையே விரும்புகின்றார்கள் எனவே அமைதியை நிலைநாட்ட போராளிகள் சரணடைய வேண்டும், மாகாணசபைத் தீர்வை ஏற்று தேர்தல்
பாதைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்புவிடுகிறது; இந்த வகையான உபதேசங்கள் மூலம் தன்னை ஒரு நியாயவானாகக் காட்டிக் கொள்ள
முயல்கிறது  (இந்திய அரசு).
 
ஆனால் இலங்கை அரசுக்கு நெருங்கிய கூட்டாளியாக செயற்பட்டபடியே இந்த நாடகத்தை இந்திய அரசு ஆடிவருகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும்
ஆக்கிரமிக்கப்பட்டவர்களுக்கும் இடையே, ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையே என்ன விட்டுக் கொடுப்பும் சமரசமும் சாத்தியமாக முடியும்? ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பைக் கைவிட்டு வெளியேறுவது ஒடுக்குபவர்கள் ஒடுக்குமுறையைக் கைவிட்டு சுயநிர்ணய உரிமையை வழங்குவது என்பதை விடவும் வேறு தீர்வு ஏதும் இருக்க முடியுமா? இந்திய அரசு கூறும் இருபுறமும் விட்டுக் கொடுத்து சமரசத்துக்கு வருவதென்பது “நீ அவல் கொண்டுவா, நான் உமிகொண்டு வருகின்றேன் இருவருமாக ஊதி ஊதிச் சாப்பிடலாம்.” என்பது போன்ற ஒரு ஏமாற்றாக மட்டுமே இருக்க முடியும். விடுதலை அல்லது அடிமைத்தனம் என்பதற்குமேல் ஒடுக்கப்படும் மக்கள் இனங்களுக்கு வேறுஎன்ன மூன்றாவது தீர்வு இருக்கமுடியும்? ஒரு தேசிய இனம் தனது அடிப்படையான அரசியல் ஜனநாயக உரிமையான சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு எதைப் பெற்றாலும் அது ஏதாவது ஒரு வழியிலான அடிமை வாழ்வாகவே இருக்கும்.

இந்த நிலைமையில் மக்களின் ஜனநாயக உரிமை என்பது ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதும் இன ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதும் அல்லவா! மக்கள் தமது வாழ்வைத் தாம் விரும்பும் பாதையில் அமைக்கவும்  தம் முன் வைக்கப்படும் எந்த ஒரு தீர்வையும் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அவர்களுக்குள்ள உரிமையே ஜனநாயக உரிமையாகும். இந்த வகையில் தமிழ் மக்கள் பிரிந்து செல்வதா?, இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்குள் வாழ்வதா?, என்ற பிரச்சனையில் மக்களுக்கு ஜனநாயகபூர்வமாக முடிவுசெய்யும் (கருத்துக் கணிப்பு) வாய்ப்பு வழங்கப்படுமா?.இதைச் செய்வதற்கு இந்திய இலங்கைப் பாசிச அரசுகள் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல இலங்கையின் ஒற்றையாட்சி என்கிற இனஒடுக்குதலுக்கான ஆட்சிமுறைக்குள்ளேயே தாம் வைக்கும் மாகாணசபை ஆட்சிவடிவத்தை ஏற்கிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும் மக்களின் வாக்குகளுக்கு உரிமை இல்லை. எத்தகைய ஆட்சிவடிவம்? எது பரப்பெல்லை? எந்தளவு அதிகாரம்? எல்லாவற்றையுமே அவர்கள் தீர்மானித்துவிட்டு, இதில் பங்கு கொள்கிற அமைப்புக்களையும் தாமே உருவாக்கிவிட்டு அவற்றுக்கு வாக்களிப்பதை மட்டும் ( சொல்லப்போனால் வாக்கையும் கூட அவர்களே தான் அளித்தார்கள்) ஜனநாயக நீரோட்டத்தில் கலப்பதாக கூறுகிறது இந்தியா! யாருக்குத் தேவை இந்த நீரோட்டம் தூ! …….

குறிப்பு: (இத்துடன் இணைந்து வந்திருக்க வேண்டிய மற்றெருபக்கம் தற்சமயம் நம்கைவசம் இல்லை. தயவுசெய்து மன்னிக்கவும்)


புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments: