Thursday 12 January 2012

On LLRC Report: படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

சிங்களத்தை நன்கறிந்த ஈழத்தமிழ் மக்களுக்கும், புரட்சிகர ஜனநாயகச் சக்திகளுக்கும், இந்தப் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான
ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கை ஒரு கண்துடைப்பு என்பதை கட்டுரை எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

போர்க்குற்றம் இழைத்த சிங்களத்தை தண்டிக்க வேண்டுமென உலக மக்கள் கோரியபோது, ஐநா சபை சிங்களத்தையே அவ்வாறு ஒரு விசாரணையை நடத்துமாறு கோரியது. அமெரிக்காவும் அதையே கோரியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் அதையே கோரினர். ஆக ஐநா சபையின் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் வேண்டுகோளுக்கமைய சிங்களம் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை போர்க்குற்றம் தொடர்பில் இரு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆதாரப்பட்டு நிற்கிறது.

1. இந்த யுத்தம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான மனித நேய நடவடிக்கை.

2. மனித நேய நடவடிக்கையில் நாம் பயங்கரவாதிகளுடன் போரிட்டோம். பயங்கரவாதிகளான புலிகள் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அரசு
சாராத அங்கத்தவர்களாவர். இதனால் அரசுகளுக்கு எதிராக நடக்கும் யுத்தங்களில் கடைப்பிடிக்க வகுக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை (International Humanitarion Laws) இத்தைகைய போர்களுக்கு பொருத்தக் கூடாது.

இந்தக் கோட்பாடுகளின் மூலகர்த்தாக்கள் சிங்களமோ அல்லது பக்ச பாசிஸ்டுக்களோ அல்ல. மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட், பாசிஸ்ட்டுக்கள் வகுத்தளித்து கடைப்பிடித்த கோட்பாடுகள் தான் இவை. ஆப்கானிஸ்தானிலும். ஈராக்கிலும் பயன்படுத்தப்பட்டவைதான் இவை. பயங்கரவாதிகளை சர்வதேச மனிதநேயச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தக் கூடாது என்ற அடிப்படையில் தான் நாடுகடந்த வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் 10 ஆண்டு நிறைவு கண்ட, கியூபா, குவாண்டனோமாவில் அமைக்கப்பட்ட டெல்டா 4 என்கிற வதை முகாமாகும். தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு ஒபாமா அந்த வதை முகாமைக் கூட மூடவில்லை.

LLRC அறிக்கைக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாதென ஐ.நா கருதுவதாக இன்னசிற்றி பிரஷ் (Innercity Press),கருத்து வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, பக்‌ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான போர்க்குற்ற இயக்கத்தை ஒபாமாவையும், ஐநாவையும் சார்ந்து நின்று நடத்தக் கூடாது, மாறாக உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று நடத்த வேண்டுமென நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றோம். இதற்கு மாறாக ஒபாமாவினதும் ஏகாதிபத்தியவாதிகளினதும் `கவனத்தை ஈர்க்க` ஐநாவுக்கு நீதிப்பயணம் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எந்த ஒபாமாவினதும் ஐநாவினதும் கோட்பாடுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதுவோ அவர்களிடம் நீதிகேட்கிற போலிப் போராட்டங்களின் போக்கிரித் தனமும் அப்பலமாகிவிட்டது. இவர்களை நம்பி இவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்களின் கதை மண்குதிரையை நம்பி கடற்பயணம் செய்த கதையாகிவிட்டது.

இவ்வருட மாவீரர் தினத்தன்று வானொலி நிலையமொன்றுக்கு கருத்துரை வழங்கிய கவிஞர் திரு காசி ஆனந்தன் அண்ணன் அவர்கள் இலங்கையில்
ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை, போர்க்குற்றமாக மட்டும் குறுக்கக் கூடாது. அது ஒரு தேசிய படுகொலையாகும் எனப் பிரகடனம் செய்தார். இதை
எதிர்த்து தமிழீழ மக்கள் போராடுவதற்கு இலங்கையிலுள்ள நிலைமைகள் தடையாகவும் அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. எனினும் மக்கள்
போராடுவார்கள், தமிழீழம் மலர்ந்தே தீரும்……… அதற்கு தமிழ்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

அதே வானொலி நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய வை.கோ தமிழீழத்தில் இன்று போராடக் கூடிய நிலைமையில் தமிழ்மக்கள் இல்லை என்றும்
அவர்களுக்காக தமிழ்நாட்டு மக்களும், புலமபெயர் தமிழர்களுமே போராட வேண்டுமென்றும் கூறினார். மேலும் போர்க்குற்ற விசாரணை கோரி
அமெரிக்காவை நோக்கியும், ஐநாவை நோக்கியும் நடக்கும் போராட்டங்கள் ஊக்கம் பெற்று வருவதாகவும் அப்பாதையில் நாம் தொடர்ந்தும் முன்னேற
வேண்டுமென்றும் `அறைகூவல்` விட்டார்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் காசி அண்ணனின் கூற்றை சரியென்றும், வைகோவின் கூற்றைப் பிழையென்றும் நிரூபிக்கின்றன.

`தமிழீழத்தில் தமிழ்மக்கள் போராடும் நிலையில் இல்லை` என்பது கோட்பாட்டு அடிப்படையில் இருவகையில் தவறானதாகும். ஒன்று
அடக்குமுறையை எப்போதும் மக்கள் எதிர்ப்பார்கள். ஸ்பாட்டகஸ் தலைமையில் அடிமைகள் கூடக் கலகம் செய்திருக்கிறார்கள். இரண்டாவது
தமிழ்மக்களின் விடுதலைகாக தமிழீழ மக்கள் தான் போராட வேண்டும். தமிழ்நாட்டுமக்களோ புலம் பெயர் தமிழர்களோ போராடமுடியாது. இவ்வாறான ஒரு தப்பெண்ணத்தை தமிழீழ மக்கள் மத்தியில் வளர்த்து புலம் பெயர் தமிழர்களை நோக்கி அவர்களை கையேந்தி நிற்க வைக்கவும் கூடாது.

`ஐநாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!` என முனகும் அத்தனை சமரசவாதிகளும் ஒரு சேர ஈழத்தில் தமிழ்மக்கள் போராடக்கூடிய நிலையில் இல்லை என்று ஒப்புவித்து வருகின்றனர். இதற்கான காரணங்களில் ஒன்று ஈழத்தமிழர்களின் போர்க்குணத்தை மழுங்கடிப்பது. இரண்டு ஈழத்தமிழர்கள் தமக்காக தாமே போராடினால் தமது சொந்த நலன்களை உத்தரவாதம் செய்யவல்ல மண்ணின் விடுதலைக்கான முழக்கங்களை முன்வைத்துப் போராடுவார்கள். இதற்குப்பதில் போராட்டங்களை சமரசவாதிகள் தத்தெடுத்துக் கொண்டால் அவற்றை ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்கவாதிகளினதும் நலன்களுக்கமைந்த சீர்திருத்த வழியில் சீரழித்து விடலாம் என்பதே இவர்களது திட்டமாகும்.

கூட்டமைப்பு கடந்த சிலமாதங்கள் வரை போர்க்குற்றம் குறித்து வாயே திறக்கவில்லை. போர்க்குற்றம் குறித்து பேசுவதில்லை என ராஜ பக்‌சவுடன் உடன்பாடுகண்டிருப்பதாகக் கூட சில புலம் பெயர்தமிழர் அமைப்புக்களால் குற்றச்சாட்டவும்பட்டது. `காணிநிலம் வேண்டும் –காக்க பொலிஸ் அதிகாரம் வேண்டும்` என பராக்கிரமன் ராஜபக்‌சவிடம் வேண்டிய அதிகாரப் பிச்சை கிடைக்காமல் போக யுத்தக் குற்றப்பிரச்சனையை ஒரு பேரப்பொருளாக   இப்போது பயன்படுத்துகிறது. அப்போதும்கூட அயோக்கியத்தனமாக, இருதரப்பும் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கும் அனைத்துலக விசாரனை தேவை எனக் கூறுகிறது. இவ்வாறு இருதரப்பு மீதும் விசாரனை நடத்தக் கோருவது கூட்டமைப்பு மட்டுமல்ல. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர்நாட்டுப் பேரவைகளை உள்ளடக்கிய உலகத் தமிழ்ப் பேரவை ஆகியவையும் தான்.

இதுவேதான் சனல் 4, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளினதும் நிலைப்பாடாகும்.


தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரிவினை இயக்கத்தை ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்திய விரிவாதிக்கவாதிகளுக்கும் விற்றுப்பிழைக்கும் இச்சமரசக் கும்பலுக்கு, மீண்டும் புலிகள் எழுந்து வந்து விடுவார்களோ என்ற பயபீதி இன்னமும் உள்ளது. அவ்வாறு வந்தால் அவர்களைக் கூண்டில் அடைக்கவே புலிகள் மீது யுத்தக் குற்ற விசாரனை வேண்டுமென அரசியல் பிரச்சாரத் தயாரிப்பு செய்து வருகிறது.

மேலும் விடுதலைப் புலிகள் மீது யுத்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவது அவர்கள் மீதான தடையை விதிப்பதற்கு வலுவான காரணமாக அமையும்.
எனவே விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து, அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டால் அது தமது சமரசச்
சவாரியை தமிழ்மக்கள் மீது நடாத்த வசதியாக இருக்கும் எனவும் இக்கும்பல் கணக்குப் போடுகிறது.

எமது சொந்தத் தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கு நமது கடந்த காலத்தை சுயவிமர்சன நோக்கில் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது மக்களின் பெயரால் எமது மண்ணின் பெயரால் எமது மாவீரர்களின் பெயரால் நாம் ஏற்றுக் கொள்கிற கடமையாகும். அந்தப் பொறுப்பையோ
பணியையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. ஆனால் இந்த சுயவிமர்சன பரிசீலனையும், எம்மை ஏகாதிபத்தியவாதிகளின்
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதும் ஒன்றல்ல.

போலிச்சுதந்திரமடைந்த காலமுதல் 1977 வரையான முப்பது ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமை தரகு முதலாளித்துவ சமரசவாத
அரசியல் தலைமையாக இருந்தது. அவர்கள் பாராளுமன்ற பாதையைக் கடைப்பிடித்தனர். தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் சிங்களப் பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து, கூட்டரசாங்கம் அமைத்து உறவுக்குக் கைகொடுக்கத் தயங்கவில்லை. அகிம்சையை தமது யுத்த தந்திரப் பாதையாகக் கொண்டிருந்தனர். காந்தி, சமஸ்டி இயக்கத்துக்கு ஆதர்ஸ புருசனாக விளங்கினார். எஸ். ஜே.வி. செல்வநாயகம் ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சிதான் இன்றைய கூட்டமைப்பும், நாடுகடந்த அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், தமிழ்க் கத்தோலிக்கப் பாதிரிகளும் ஆவர்.

இந்த அளவுக்கு ஆழ வேரூன்றிய ஏகாதிபத்திய சார்பு சமரசவாத, சந்தர்ப்பவாத அகிம்சா இயக்கம் சமஸ்டி இயக்கமாகும். இதனால் இந்த இயக்கத்தின் வாரிசாக தளபதி பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஆயுதப் போராட்டமோ தோன்றியிருக்க முடியாது.கல்லில் இருந்து குஞ்சு பொரிக்காது!

தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஆயுதப் போராட்டத்தினதும் தோற்றுவாய் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அரச பயங்கரவாத அடக்குமுறையே ஆகும். எனவே ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் விளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டியது சிங்களமே தவிர தமிழ் மக்களோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்ல.

காலனியாதிக்க ஆட்சியில் சிங்களத்துடன் எம்மைக் கட்டாயமாக இணைத்து, போலிச் சுதந்திரம் முதல் முள்ளிவாய்க்கால் வரை சிங்களத்தைப் போசித்து வளர்த்து, முள்ளிவாய்காலுக்குப் பின்னாலும் தமிழீழத் தேசத்தைச் சூறையாட வெறிகொண்டு அலையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்தியவிரிவாதிக்கவாதிகளுக்கும் எம்மைக் குற்றஞ்சாட்டி தமது சுண்டுவிரலை நீட்ட எந்த யோக்கியதையும் கிடையாது. உரிமையும் தகுதியும் கூடக் கிடையாது.

எனவே இருதரப்பிற்கும் யுத்தக்குற்ற விசாரனை என்கின்றவர்கள் சிங்களத்தின் யுத்தக் குற்றங்களை ஒருவழியில் நியாயம் செய்பவர்களே ஆவர். ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க விசுவாசத்தை இந்தப் பரந்து விரிந்த போலி ஜனநாயகத்தால் மூடிமறைத்து விடலாமென இந்த மூடர்கள் இனிமேலும் நம்பக்கூடாது.

இந்த LLRC அறிக்கையில் ஆங்காங்கே சில நட்சத்திரங்கள் மின்னுவதாக கண்டறிந்த சிந்தனைச் சுரங்கங்களில் NGOக்காரர்கள் முக்கியமானவர்களாவர். உள்ளூர் அரசாங்கங்களைச் சாராமல் ஏகாதிபத்திய அரசுகளையும் ஐநா சபையையும் சார்ந்து அவர்களது நிதியிலும்
கொள்கைத்திட்டத்திலும் இயங்கும் விதேசிய ஊடுருவல் நிறுவனங்களே இந்த NGOக்கள் ஆகும். நக்கித்தின்னும் பிழைப்புக்கு நன்றிக்கடனாக
ஏகாதிபத்தியவாதிகளும் ஐநாவும் அங்கீகரித்த LLRC அறிக்கையில் சொக்கி மகிழ இக்கும்பல் விழைவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இவர்களோடு
கூடவே ரொட்ஸ்கிய திரிபுவாதிகளும் சேர்ந்து கொண்டது தற்செயலானது அல்ல. ஐரோப்பிய நாடொன்றின் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட ஒரு பிரகிருதி தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிக்கையை தமிழ் மொழியாக்கம் செய்து பரவலாக விநியோகிக்க
வேண்டுமெனவேறு உளறிக் கொட்டியது.

இவர்களது கோரிக்கை எல்லாம் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற சிங்களத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதாகும்.

சிங்களம் இப்பரிந்துரைகளை நிறைவேற்றுமா என்பதற்கு முன்னால் இந்தப் பரிந்துரைகளை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்

LLRC recommendations
1. Responding to the Channel 4 programmes
2. Armed groups in operation
3. Heavy militarization in North – East
4. Land disputes and alienation
5. Devolution of powers.

முதலாவதாக இப்பரிந்துரைகள் இலங்கையில் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டவில்லை. மாறாக ஈழத்தமிழர்களை இலங்கை மக்களின் ஒரு சமூகப் பிரிவினராகக் காண்கிறது. இப்பரிந்துரைகள் அப்பிரிவினரின் அதிருப்தியின் தொகுப்பாகும். இந்த அதிருப்திகளைப் போக்குவதன் மூலம் இனப்பகைமைக்கு முடிவு கட்டி பரஸ்பர இணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. ஒரு வேளை இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது இலங்கையின் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதாக அமையாது. ஏனெனில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனை என்பது சுயநிர்ணய உரிமை சம்பந்தமான பிரச்சனையாகும். இதன் மூலம் இந்த ஆணைக்குழுவில் நம்பிக்கை வைத்து தமது பிரச்சனைகளை முறையிட்ட மக்களுக்கு இந்த ஆணைக்குழு துரோகம் இழைத்துள்ளது.

இறுதியாக இப்பரிந்துரைகளாவது நடைமுறைக்கு வருமா என்று கேட்டால் அதுவும் கூட நடைபெறாது. இராணுவ மயமாக்கல் என்பது தேசியப்
பாதுகாப்புக்கான அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்கானது என கோதபாய ராஜபக்‌ச கூறுகிறார். புலிகளும், ஜே.வி.பி இல் இருந்து பிரிந்த குழுவினரும் இணைந்து ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு திட்டமிடுவதாக உயர் கல்வி அமைச்சர் கூறுகின்றார்..ஆக இந்தப் பரிந்துரை தேசியப் பாதுகாப்புக்கு எதிரானதாகும்!!. நிலவிநியோகம் அதிகாரப்பரவலாக்கம் என்பதை சிங்களம் அடியோடு நிராகரித்து விட்டது. LLRC அறிக்கையின் அடிப்படையில் சனல் 4 ஆவணத்தின் போர்க்குற்றச்சாட்டு, கோட்பாட்டு ரீதியில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விடப்பட்டதாகும். மென்மேலும் இராணுவ மயமாகிவரும் சிங்களத்தின் அங்கீகரிக்கப்படாத ஒரு அதிகாரவடிவமாக துணை இராணுவக் குழுக்கள் இருந்தே தீரும். இதற்கு மேல் பரிந்துரைகளை
நிறைவேற்றுவதற்கு என்ன இருக்கிறது.

எனவே `ஐ.நாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வுவழங்கு!!` என முனகும் சமரசவாதிகள் அரைமனதோடும், `இலங்கைப் பற்றுமிக்க`
`அதிகாரப்பரவலாக்க` சந்தர்ப்பவாத சமரசவாதிகள், கலைப்புவாதிகள் முழுமனதோடும் LLRC பரிந்துரைகளை நிறைவேற்று எனப் பிரச்சாரம் செய்து ஜனநாயக இயக்கத்தை திசைதிருப்பத் தொடங்கிவிட்டனர்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை தீர்வுகாணப்படாமல் இருப்பதாகும்.தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை - பரஸ்பர இணக்கத்துக்கான ஏற்பாட்டை - ஆணைக்குழுக்களைக் கொண்டு தீர்மானிக்க முடியாது.வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையேயான சர்வ ஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்க முடியும்.தீர்மானிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நீதியான ஜனநாயகக் கோரிக்கைக்காக சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்துப்
போராட கூட்டமைப்போ, சமூக தேசியவெறியரான ஜே.வி.பி கட்சியினரோ, கலைப்புவாத ரொட்ஸ்கிய குழுக்களோ, புலம் பெயர் பேரவைகளோ தயாராக இல்லை.

எனவே சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்து முற்போக்கு தமிழீழ தேசவிடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்ப பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறைகூவுகின்றோம்.

* ஏகாதிபத்தியவாதிகளே, உலகமறுபங்கீட்டில் இலங்கையைப் பங்குபோட ஈழத்தமிழரைப் பலிக்கடா ஆக்காதீர்!


* உலக முதலாளித்துவ பொதுப் பொருளாதார மந்தத்துக்கு தீர்வுகாண தமிழீழ தேசத்தை சூறையாடாதீர்!


* ஐ.நா.சபையே, பொதுநலவாய நாடுகள் மன்றமே யுத்தக் குற்ற அரசு சிறீலங்காவின் உறுப்புரிமையை ரத்துச் செய்!


* யுத்தக் குற்றப் பங்காளி இந்திய விரிவாதிக்க அரசே, ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!


* சிங்களமே, தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆணைக்குழுக்கள், தெரிவுக்குழுக்கள் அமைத்து வழக்கமாக ஆடும் நாடகத்தை நிறுத்து!


* வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.
ஜனவரி 2012

1 comment:

நெறியாளன் said...

சமரசவாத சக்திகளை அம்பலப்படுத்தும் நல்ல கட்டுரை. தேசிய சுய நிர்ணய உரிமையைப் பேசாமல் எப்பிரிவினரும் ஈழப்பிரச்சனையை தீர்வு காண இயலாது.
ஈழம் மலரும்!!! ஏகாதிபத்தியவாதிகளும், அடிவருடிகளும் மண்ணில் புதையும் காலம் வெகுதூரம் இல்லை!!