Monday, 21 September 2009

தமிழீழ தேசிய விடுதலைக்கான தொலை நோக்குத்திட்டம்

தமிழீழ தேசிய விடுதலைக்கான தொலை நோக்குத்திட்டம்
(முதல் வரைபு)
1
1. இலங்கைத் தீவானது 300 ஆண்டு காலம் அந்நியரின் நேரடி ஆதிக்கப்பிடியில் அகப்பட்டுக் கிடந்தது.
2.போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும்,வணிக நலன்களுக்காக நமது நாட்டை ஆக்கிரமித்தனர்.
3. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவத்தின் உதயகாலத்தில், தமது சொந்த நாட்டில் முதலாளித்துவத்தைக் கட்டியெழுப்பும் களவுக் களஞ்சியங்களில் ஒன்றாகவும், அரசியல் ஆதிக்கத்துக்காகவும், இராணுவத் தளத்துக்காகவும் இலங்கை நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு சுரண்டி நமது வளங்களை சூறையாடினர்.. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை கைப்பற்றிய காலம் மன்னராட்சி மரணத்தறுவாயிலும், இலங்கையில் தேசியம் - முதலாளித்துவ வளர்ச்சி - இளம் குழந்தையாகவும் இருந்த காலமாகும்.அதன் உற்பத்திமுறை முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையாக இருந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் நமது நாட்டின் சுதந்திர தேசிய உருவாக்கத்தை தடுத்து , தன் சுரண்டலை நடத்த, முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி முறையை பேணிப்பாதுகாத்ததுடன், அவ் உற்பத்திமுறை தோற்றுவித்திருந்த ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து, அவர்களைத் தமது தரகர்கள் ஆக்கிக் கொண்டதன் மூலம் தரகு முதலாளிகள் என்கிற ஒரு புதிய சமூக வர்க்கத்தை உருவாக்கி தமது ஆதிக்கத்துக்கான அடிப்படை ஆக்கிக் கொண்டது.
கத்தோலிக்க மத நிறுவனங்களைக் கொண்டு ஆங்கிலக் கல்வி பயிற்றுவித்து ஒரு (அரசு சேவக) அதிகார வர்க்கத்தையும் உருவாக்கிக் கொண்டது,
4. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்;
ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவான முதல் உலகப் போர் வெடித்தது. அதைத் தொடர்ந்து 1917 மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சி, பூமிப்பந்தில் பிரகாசித்தது. அது ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியங்களுக்குள்’ விடுதலை நெருப்பை மூட்டியது. நேரடிக் காலனி ஆதிக்கத்தை கதிகலங்க வைத்தது.
காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை நெருப்பு அகிலமெங்கும் சுவாலை விட்டெரிந்தது.
5) இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத் தேசிய விடுதலை நெருப்பை ஏந்திச்செல்ல எதிர்ப்புரட்சிகர சக்திகள் கொம்யூனிச அகில விவாத்தில் மறுத்ததன் விளைவைப் பயன்படுத்தியும் ,தாம் ஏற்கெனவே செப்பனிட்டு வைத்திருந்த ஏகாதிபத்திய தரகு முதலாளிகளைக் கொண்டும் நேரடி முழுக் காலனியாதிக்கத்தில் இருந்து மறைமுக அரைக் காலனியாதிக்கத்துக்கு -பெரும்பாலான காலனி நாடுகள் மாறியது போல- 1947 இல் இலங்கையும் மாறியது. இதுவே இன்றுவரை சிங்களவர்களாலும் தமிழர்களாலும் “சுதந்திரம்” எனப் போற்றப் பட்டுவருகிறது.
6) ஏகாதிபத்தியமானது நம் நாட்டை சுரண்டுபவன் என்ற முறையில் நாட்டின் பொருளாதார வாழ்வின் மீது குருதி குடிக்கும் ஒட்டுண்ணியாகவே உள்ளது.இந்த ஒட்டுண்ணி நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டத்தோடு ஒப்பிடுகையில் மிகப் பயங்கரமானதும் சக்திவாய்ந்ததுமான சுரண்டலாளனாகும்.இதன் சுரண்டல் வடிவம் நமது நாட்டில் தம் சொந்த நாட்டின் சுரண்டல் வடிவத்தை ஒத்ததாக அல்லாமல், உபரி மூலதனத்தை அபகரித்துச் செல்வதன் மூலமாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை தடை செய்வதாக உள்ளது.
7) இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் போசிப்பதற்கு வழியற்றதாக ஏகாதிபத்தியவாதிகளால் மாற்றப்பட்டுள்ளது.இது இன்றுவரை தொடர்கிறது.
8) இதனால் எழும் உள் நாட்டுக் கிளர்ச்சிகளில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக,- சிங்கள பெரும்பான்மை மக்களை தம் பக்கம் இழுப்பதற்காக, தமிழர்களை எதிரிகளாகக் காட்டி, ‘சிங்கள பவுத்த பேரினவாதத்தை’ தனது சித்தாந்த ஆயுதமாக ஏந்தி இன ஒடுக்குமுறை அரசாக வடிவெடுத்துள்ளது இலங்கை அரசு.
9) இதன் தர்க்கபூர்வமான, வரலாற்று ரீதியான விளைவாக இரு தேசிய இனங்கள் வாழும் இலங்கை நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான தொடர்ந்த அடக்குமுறையே இலங்கை அரசின் இருப்புக்கு ஆதாரமாகிவிட்டது.சுருங்கச் சொன்னால் இலங்கை அரசு தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையின் மீது கட்டுண்டு கிடக்கிறது.
10) இதன் காரணமாக இலங்கையின் இன்றைய அரசுமுறைக்குள் இன சமத்துவம் என்பது அடையப்பட முடியாததாக ஆகிவிட்டது.
2
1) துரதிஸ்ரவசமாக இலங்கை ஆளும் கும்பல்களின் சித்தாந்த செல்வாக்குக்கும் ரொட்ஸ்கிய திரிபுவாதத்துக்கும் பெரும்பான்மை சிங்கள உழைக்கும் மக்கள் உட்பட்டுப் போய், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு கடந்த 60 ஆண்டுகளாக துணை நின்றதால், இன்றும் துணை நிற்பதால், சிங்கள தமிழ் உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த புரட்சிகர நடவடிக்கையின் மூலம் இலங்கையில் ஒரு இன சமத்துவ மக்கள் ஜனநாயக குடியரசை நிறுவுவதற்கான வாய்ப்பு இல்லாது போய்விட்டது.
2) இதன் விளைவாக தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக் கோரிக்கையாக மாறிவிட்டது.இலங்கை அரசின் அடிமை நுகத்தடியில் இருந்து சிங்கள இனம் விடுதலை பெறுவதற்கும் தமிழீழம் பிரிவது முந்நிபந்தனையாகிறது.
3
1) இன்றைய இலங்கை அரசு சிங்கள தமிழ் தேசிய இனங்களின் சம உரிமையை அங்கீகரித்த ஒன்றியமல்ல.இந்த கட்டாய இணைப்பை உருவாக்கியது சிங்களவர்களும் அல்ல.இது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களின் சம்மதம் இன்றி ஏற்படுத்திய பலாத்கார பிணைப்பாகும்- கட்டாய இணைப்பாகும்.
2) 1947 இல் நேரடியான ஏகாபத்திய அதிகாரம் உள்நாட்டு தரகர்களுக்கு கைமாற்றப்பட்டு இலங்கை போலிச்சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கையில் தமிழ்த் தேசிய இனம், மற்றும் இன மத சிறுபான்மை மக்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்து வந்துள்ளது.
3) இலங்கையின் அரைக்காலனித்துவ அரசு தமிழ்த் தேசம் மீதான ஒடுக்குமுறையை தனது இருப்புக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது.இதனால் அதன் வீழ்ச்சிக்கும் சிங்கள மக்களின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் பிரிவினைக் கோரிக்கை வெற்றி பெறுவது முன் நிபந்தனையாகவுள்ளது.
4) சிங்கள பெரும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள், சிங்கள பவுத்த பேரினவாதத்துக்கு பலியாகி இருப்பதால் இரு இனமும் ஒன்று பட்டு இலங்கையில் ஜனநாயக குடியரசை அமைக்கப் போராடுவதற்கான வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.
5) இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயகமாகக் கொண்ட தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாகும். அவர்களது வட கிழக்கு மாகாணம் ஒரு தனித் தேசமாகும்.
6) இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் இனச் சிறுபான்மையினர் ஆவர்.
7) இஸ்லாமியத் தமிழர்கள், அல்லது முஸ்லிம் தமிழர்கள் மதச் சிறுபான்மையினராவர்.
4
மேற்கண்ட குறிப்பான வரலாற்று நிலைமைகளின் தனித்தன்மைகளில் இருந்தே இலங்கையின் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் –சிங்கள மக்கள் ஒன்றிணைந்த நடத்தும் ஒரு புரட்சியாக அமையுமா அல்லது ஈழப்பிரிவினையின் மூலம் நிறைவேறுமா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
மார்க்சிய லெனினிய மாசே துங் சிந்தனையின் வழிகாட்டுதலில், ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் 60 ஆண்டுகால ஒடுக்குமுறை வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத ஆய்வு முறையின் அடிப்படையில் ஆய்வு செய்து ஈழத்தமிழர் பிரச்சனைக்கு நாம் காணும் தீர்வு வருமாறு
1) தமிழ்மக்களின் பிரிந்து செல்லும் உரிமையானது பிரிவினைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் தமிழ் மக்கள் தமிழீழத் தனி நாடு அமைப்பதும்,
2) இஸ்லாமியத் தமிழர்கள் செறிந்து வாழும் கிழக்குமாகாணப் பிரதேசங்கள் அமையப்போகும் தமீழிழ அரசுக்குள் ஒரு சுயாட்சி மாநிலமாக அமைவதும்,
3) அரைக்காலனிய அடிமைத்தளையில் இருந்து மலையக மக்களை மீட்டெடுத்து குடியுரிமை வாக்குரிமை மற்றும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழங்கி பன்னூறு ஆண்டுகள் இரத்தமும் வியர்வையும் சிந்தி அந்த மக்கள் உருவாக்கிய மலையக மண்ணை அவர்கள் ஆளும் ஒரு ஆட்சிப் பிரதேசமாக்குவதும்.
4) அது தமிழீழத்துடன் இணைவதா அல்லது சிங்கள தேசத்துடன் இணைவதா என்பதை அவர்களின் வாக்களிப்பால் தீர்மானிப்பதும்,
5) இவையே முரணற்ற ஜனநாயகத் தீர்வுகளாகும்.
5
1) இத்தகைய ஒரு அரசியல் மாறுதலை, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.
2) இதன் சித்தாந்தம் மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை ஆகும்.
3) இதன் தலைமை கொம்யூனிஸ்ற் கட்சியாகும்.
4) இந்நிலையில் இன்றிருக்கும் சித்தாந்த அரசியல் வல்லமையோடு நடைமுறைப் போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனையின் அடிப்படையில் நமது நாட்டின் சமூக பொருளாதார அமைப்பிலிருந்து எழும் தனித்துவ அம்சங்களை கண்டறிந்து அதன் அடிப்படையிலான திட்டத்தின் மீது ஒரு கொம்யூனிஸ்ற் கட்சியைக் கட்டியமைப்பதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும், பாடுபடவேண்டும்.இதற்காக புரட்சிகர சக்திகளின் சர்வதேசிய உறவை கட்டியமைத்து காப்பாற்றி வரவேண்டும்.கோட்பாட்டு நிலையில் விட்டுக்கொடாத சகோதரத்துவ விவாதங்களை தொடர வேண்டும்.கிணற்றுத் தவளைகளாய் இருக்கக் கூடாது.விவாதத்துக்கு அஞ்சக் கூடாது.
5) இன்றுள்ள அரசியல் நிலைமையில் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிவினையே தமிழ் மக்களை இன ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்கும், மற்றும் முழு இலங்கையையும் ஜனநாயகப்படுத்தும் அச்சாணியாகும்,
6
1) இன்றுள்ள அரசியல் நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு சிங்கள உழைக்கும் மக்களும் ஜனநாயக உணர்வு கொண்ட சக்திகளும் தம் பெரும் தேசிய இன ஒடுக்குமுறை அரசு தமிழீழ தேசத்தின் மீது கட்டவிழ்க்கும் அடக்குமுறைகளை எதிர்த்து தமிழீழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தம் சொந்த அரசுக்கெதிராகப் புரட்சி செய்யுமானால் நமது அரசியல் நிலைப்பாட்டிலும், போராடும் பாதையிலும் மாற்றம் ஏற்படும்.இல்லையேல் இல்லை.
2) அமையும் தமிழீழத் தனியரசு ஒரு ஜனநாயக் குடியரசாகும்.அது ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விஸ்தரிப்புவாதிகளையும் சுட்டெரிக்கும் நெருப்பாகும்.
3) அரசியல் ரீதியில் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை நிறுவுவது என்ற போர்வையில் அரைக்காலனிய அடிமை/பொம்மை அரசுகளை ஏகாதிபத்தியவாதிகள் தமது ஆதிக்க மண்டலங்களில் நிறுவி வருகின்றனர்.தமிழர் ஈழம் அத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைய நாம் ஒருபோதும் அநுமதியோம்.
4) இராணுவ நோக்கிலிருந்து வலிமை கொண்ட ஏகாதிபத்திய வல்லரசுகளின் சுற்றிவளைப்பிலிருந்து,மக்கள் ஜனநாயக, மற்றும் சோசலிஸக் குடியரசுகளை காக்கும் அரண் நம்மிடையேயான ஒன்றியமேயாகும்.
5) இன்று நாம் ஒரு தனிநாட்டை அமைத்தாலும் வருங் காலத்தில் சிங்கள தேசத்திலும், இந்தியத் துணைக்கண்டத்திலும், இந்து சமுத்திர பிராந்திய எல்லையோர நாடுகளிலும் ஜனநாயகப் புரட்சியின் ஆதரவாளர்களாக இருந்து இந்து சமுத்திர தேசங்களின் ஒன்றியத்தில் ( Union of Indian Ocean Nations – UNION) நாம் ஒன்றிணைவோம்.
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.ENB

Friday, 20 March 2009