* அமெரிக்க நவபாசிஸ வாதிகளின் ஈராக் ஆக்கிரமிப்பு, மூன்றாம் உலகப்போருக்கான முன்னறிவிப்பு!
* தடுத்து நிறுத்துவோம்; தவறின் உலகப் போரை உள்நாட்டுப் போராய் மாற்றுவோம்!!
* ஈழ தேச விடுதலை-(உள்நாட்டு)ப் போரை ஏகாதிபத்திய சமரசத்துக்கு பணியவிடாது தீவிரப்படுத்துவோம்!!!
மனிதகுலம் வகுத்தளித்திருந்த அனைத்து அறிவுக் கருவூலங்களையும் தம் வயப்படுத்தி விமர்சனபூர்வமாக ஆராய்ந்து இயற்கை சமூகம் சிந்தனை எனும் மாபெரும் மூன்று பெரும் துறைகளாகப் பிரபஞ்சத்தை பிரித்து, அவற்றின் இயக்கவிதிகளைப் புரிந்து,அவற்றுக்கிடையில் முற்றிணக்கமுள்ள ஒருமையான விஞ்ஞான உலக நோக்கை மார்க்சியம் முன் வைத்தது. மார்க்சிய தத்துவஞானத்தின் விஞ்ஞான மதிப்பு இதில் தான் முதன்மையாக அடங்கியுள்ளது. மார்க்சிய தத்துவஞானம் அதன் மூலவர் முதலில் பிரகடனம் செய்தவாறே, வரலாற்றை வியாக்கியானம் செய்வதை அல்ல, மாற்றியமைப்பதை தனது வரலாற்றுக் கடமையாக அதன் பிறப்பு முதலே வரித்துக் கொண்டது.இந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கான அதன் மனிதசமூக வரலாற்று ஆய்வில், மனித சமூக வாழ்வினதும் வரலாற்றினதும் வளர்ச்சிக்கட்டங்களை
அ) ஆதிப்புராதன சமூகம்
ஆ)ஆண்டான் அடிமைச் சமூகம்
இ) நிலப்பிரபுத்துவ சமூகம்
ஈ) முதலாளித்துவ சமூகம் - அதன் பிரத்தியேக உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம், என விஞ்ஞான வழியில் வரையறை செய்தது.
(சமுதாய அடக்குமுறையின் மீது கோபமும், புரட்சிகர செயல்பாடுகளின் மீது ஆர்வமும் கொண்டுள்ள இளம் கொம்யூனிஸ்ட்டுக்கள் இவற்றை மார்க்சிய மூலநூல்களில் இருந்து கற்றறிய கடுமையாகப் பாடுபடவேண்டும்.)
முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும்.
முதலாளித்துவம்
அ) பண்டஉற்பத்தி;
ஆ) உற்பத்தி சாதனங்கள் மீது தனியுடமை;
இ) கூலி உழைப்பு முறை;
ஈ) உபரிச்சுரண்டல் அதன் விளைவான மூலதன திரட்சி;
உ) காலனியாதிக்கம் மூலதன, மூலப்பொருள், வாணிக,உழைப்புச்சக்திக் கொள்ளை;
ஊ) முதலாளித்துவ தடையில்லாப் போட்டி;
எ) இவ்விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் முதலாளித்துவ உற்பத்திமுறையை கட்டிக்காத்து நிற்கும், அரசு எந்திரம்;
ஏ) முதலாளித்துவ உற்பத்திமுறையின் கீழ் புரட்சிகரமாக வளர்ச்சியுறும் உற்பத்தி சாதனங்கள் புரட்சிகர மாறுதலுக்கான போரை முதலாளித்துவ அரசுகள் மீது தொடுக்கின்றன..போர்கள் தொடர்கின்றன.
(இன்று நாம் முதலாளித்துவ தடை இல்லாப்போட்டியின் உலகில் வாழவில்லை.நாம் ஏகபோகங்களின் உலகில் வாழ்கிறோம். அதனால் இப்பகுதிக்கு கோட்பாட்டு முக்கியத்துவம் அளிப்பதோடு மட்டும் நிறுத்தியுள்ளேன்.)
ஏகாதிபத்தியம் கடந்த நூற்றாண்டில்(1900) ஆரம்பித்து இன்றுவரையிலும், மனிதகுலத்திற்கு இரு பெரும் உலக யுத்தங்கள் உட்பட எண்ணிலடங்கா குற்றங்களை இழைத்து ,சுதந்திர தேசங்களை கபளீகரம் செய்து, இரத்தங் குடித்து செல்வம் சேகரிக்கும் ஏகபோக சக்திகளுக்கு உந்துவிசையாகவும் உறுதுணையாகவும் இருக்கும் உலகு தழுவிய புல்லுருவித்தனமான உற்பத்தி முறையாகும்.
இது குறித்த மாமேதை லெனின் ஆய்வுரைகள்.
முதலாளித்துவத்திலிருந்து, ஏகாதிபத்தியத்தை பண்பு ரீதியில் வேறுபடுத்தி நிறுத்தக் காரணமான அதன் ஐந்து தனி விசேடமான இயல்புகளை தோழர்
லெனின் பின்வருமாறு வகுத்தளித்தார்.
ஏகாதிபத்தியத்தின் 5 தனி விசேடமான இயல்புகள்:
1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின், மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்;
2)வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று கலத்தலும், இந்த ''நிதி மூலதனத்தின்'' அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாதலும்;
3)பண்ட ஏற்றுமதியில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியம் பெறுதல்;
4)சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்;
5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்படுதல் நிறைவுறுகிறது.
"முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக்கட்டத்தில் ஏகபோகங்கள், நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன
ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ சர்வதேச டிரஸ்டுக்களுக்கிடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்'' என ஏகாதிபத்தியத்திற்கு பொருளாதார இலக்கணம் வகுத்தார் லெனின்.
அரசியல் வழியில் ஏகாதிபத்தியமானது பொதுவாக வன்முறையையும் பிற்போக்கையும் நோக்கியமைந்த பிரதேசக் கைப்பற்றலுக்கான பிரயத்தனம்
என்றும், தேசிய ஒடுக்குமுறையை உக்கிரப்படுத்தும் காரணி என்றும் எச்சரித்தார். நிதியாதிக்கக் கும்பலின் ஒடுக்குமுறையின் காரணமாகவும் தடையில்லாப் போட்டி அகற்றப்படதன் காரணமாகவும் எங்கும் பிற்போக்கும் கூடுதலான தேசிய ஒடுக்குமுறையும் தான் ஏகாதிபத்தியத்தின் பிரத்தியேகமான அரசியல் இயல்பு எனச் சுட்டிக்காட்டினார்.
இதனை லெனின் 1916 ஜனவரி- ஜூனில் எழுதி 1917 இல் வெளியிடப்பட்ட 'ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்' என்ற நூலில் பிரகடனப்படுத்தியிருந்தார்.
மனிதகுலத்தின் மீது ஏகாதிபத்தியவாதிகள் கட்டவிழ்த்த இரு பெரும் [முதலாவது( 1914-1918), இரண்டாவது (1937-1945) ] உலகப் போர்களும்
அவற்றுக்குப் பழி தீர்த்த ரசிய சோசலிசப் புரட்சியும் (1917), காலனி நாட்டு மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களும் லெனினின் மேற்கண்ட
பகுப்பாய்வை அவரது தீர்க்கதரிசனத்தை துல்லியமாக நிரூபித்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிலை:
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய சர்வதேச அரசியல் சூழ்நிலையின் பிரதான அம்சங்கள்.
1) ஒரு வலுவான சோசலிச முகாம் தோன்றியிருந்தது.
2)காலனி அரைக்காலனி நாடுகளில் வீசத்தொடங்கிய தேசிய விடுதலைப் போராட்ட அலை எழுச்சியின் விளைவாக அந்நாடுகளில் நேரடி காலனி
ஆட்சிகளை தக்கவைத்துக்கொள்ள இயலாமல் அவற்றில் இருந்து பின் வாங்கி, ஒரு புதிய வகைப்பட்ட- அரைக்காலனியாதிக்க-ஆட்சிமுறையையும்
சுரண்டல் வடிவத்தையும் மேற்கொள்ளும் படி ஏகாதிபத்தியநாடுகள் நிர்ப்பந்திக்கப்பட்டன.
3)இரண்டாம் உலகப்போரில் பாசிச ஜேர்மனியும் ஜப்பானும் தோல்வியடைந்தன; பிரிட்டனும் பிரான்சும் பலவீனமடைந்தன; போருக்குப் பின் அமெரிக்கா வல்லமை வாய்ந்த முதன் நிலை ஏகாதிபத்தியமாக உருவானது.இதன் விளைவாக ஏகாதிபத்திய சக்திகளின் பலாபலத்தில் மாற்றம் ஏற்பட்டது.இதனால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் கூட்டமைப்புக்களை புனரமைப்பதற்கு அமெரிக்காவைச்சார்ந்திருந்தன.போரில் ஒதுங்கியிருந்து, போரில் பங்கேற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் மற்றும் உதவிகளை- (The Marshll plan-Rebuilding Europe என அழைக்கப்பட்ட திட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் 1948 இல் அங்கீகாரம் வழங்கியது. 1952 இல் நான்கு ஆண்டுகளில் 16 ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் முதலீடு 13 பில்லியன் டொலர்களாக இருந்தது!!) -வழங்கிய அமெரிக்காவுக்கு, பலவீனப்பட்டுப்போன தனது 'கூட்டாளிகளை' நிர்ப்பந்தித்து அவற்றின் காலனிகளையும், செல்வாக்கு மண்டலங்களையும் தனக்கு திறந்துவிடும்படி செய்வது இலகுவில் சாத்தியமாயிற்று.
சுருங்கச் சொன்னால் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்த பலவீனமடைந்த ஏகாதிபத்திய நாடுகள் மீது, அமெரிக்கா தனது அரசியல் பொருளாதார மேலாதிக்கத்தை திணிப்பதற்கு ஏற்றவகையில் போருக்குப் பிந்திய சூழ்நிலை அமைந்திருந்தது.4)எனினும், 1917 ரசிய சோசலிஸ புரட்சியும், (1919-1949) சீன புதிய ஜனநாயகப் புரட்சியும், இவற்றின் பாதையைப் பின்பற்றி கிளர்ந்தெழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்களையும் கண்டு இவர்கள் ஒரு சேர அஞ்சி நடுங்கினார்கள்.எனவே மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனையின் உலகு தழுவிய செல்வாக்கை தடுத்து நிறுத்தவும், சோசலிச முகாமைக் கவிழ்க்கவும் ஒன்றிணைந்து முழு மூச்சுடன் பாடுபட்டனர். உள்ளேயும் வெளியேயும் புரட்சியைக்கவிழ்க்க உன்மத்தமான செயல்களில் ஈடுபட்டார்கள்.
5) இதேவேளையில் பொருளாதார ரீதியாக,
அ) தனது பொருட்களுக்கு கட்டுப்பாடற்ற சந்தை
ஆ) உபரி மூலதனத்துக்கு பாதுகாப்பு
இ) குறைந்த செலவில் மூலப்பொருட்களைப் பெறுவதற்கான ஆதாரங்கள்- இவை மூன்றையும் உத்தரவாதம் செய்தல் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது.தனது மேலாண்மையின் கீழ் இதனை அடையும் பொருட்டு, நிதிமூலதன ஆதிக்கத்துக்கும், வர்த்தக ஆதிக்கத்துக்கும் சேவை செய்வதற்காக உலகளாவிய நிதி மூலதன அமைப்பையும், வர்த்தக அமைப்பையும் உருவாக்க அமெரிக்கா முயன்றது. 1944 இல் ஆரம்பித்த இந்த முயற்சியின் விளைவாக உலக வங்கி (World Bank) , சர்வதேச நாணய நிதியம்(International Monitory Fund) ஆகிய நிதியாதிக்க கும்பலும், உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organaization) என்கிற வர்த்தக ஆதிக்க கும்பலும் தோன்றி நிலைபெற்றன.
சோசலிச முகாமில் முதலாளித்துவ மீட்சியும், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியும், சீனாவில் டெங் கும்பலுக்குப் பிறந்த புதிய முதலாளித்துவ ஆளும் கும்பல் சார்புமுதலாளித்துவ பாதையைக் கடைப்பிடித்தலும்.
1)1917- 1957-1987 என இரு காலகட்டங்களைக்கொண்ட அறுபது ஆண்டுகளின் வரலாறு இதுவாகும்.
2) இக்காலப் பகுதியின் முக்கிய அம்சங்கள்.
அ) மாமேதை லெனின் தலைமையில்- ரசியப்புரட்சி ஏகாதிபத்திய அடிமையான ஜார் மன்னனின் காலடியில் நசுங்கிக்கிடந்து பொசுங்கிப்போன நாட்டை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச முகாமின் தலைவனாக நிறுத்தியது.
ஆ) இதன் ஒளியில் நவ சீனத்தின் புதிய ஜனநாயகப் புரட்சி-தோழர் மா ஓ தலைமையில்- ஆசியாவின் மாபெரும் தேசத்தை அந்நிய அடிமைத்தளையில் இருந்த விடுவித்து, இதரஆசிய ஒடுக்கப்படும் விவசாய தேசங்களின் தேசிய விடுதலைப் புரட்சிகளுக்கு தத்துவார்த்த வழிகாட்டுதலையும்-(புதிய ஜனநாயகப் புரட்சித் தத்துவம்)- நடைமுறை உதவிகளையும் வழங்கியது.
இ) இதைக்கண்டு அஞ்சி நடுங்கிய ஏகாதிபத்தியம் சோசலிச முகாமைத் தகர்ப்பதற்கும், தேசிய விடுதலைப் புரட்சிகளை நசுக்குவதற்கும் தத்துவார்த்த ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேற்கொண்ட குரூரத்தாக்குதலில் தற்காலிகமாக வெற்றி கண்டது.பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிரான திரிபுவாதம் தலைதூக்கி, முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டு,அரசதிகாரம் பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, உருவாகிய சோவியத் சமூக ஏகாதிபத்தியம் இறுதியில் தகர்ந்தது(1987). அமெரிக்கா ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்புக்கு ஏகபோக தலைவன் ஆனது.
1916 இல் மாமேதையும் நமது பெருமதிப்புக்குரிய ஆசானுமான லெனின் எச்சரித்தபடி கடந்த 65 ஆண்டுகாலத்தில் அமெரிக்காவின்- அரசியல்
இராணுவ மேலாதிக்கத்தாலும் அதன் பொருளாதார ஆதிக்கக் கருவிகளான நிதியாதிக்க (IMF,WORLD BANK),வர்த்தக ஆதிக்க (WTO ) கும்பல்களாலும், காயப்படுத்தப்படாத, கறைபடுத்தப்படாத,அடக்குமுறைக்குஉள்ளாக்கப்படாத, அடிமைப்படுத்தப்படாத, சதிவலைகள் வீசப்படாத, சண்டாளத் தேவைகளுக்கு பணியவைக்கப்படாத,பொருளாதாரத்தடை என்கிற போர்வாளால் வெட்டி வீழ்த்தப்படாத......இவற்றில் ஒரு தண்டனையையேனும் அநுபவிக்காமல் தப்பிப் பிழைத்து வாழ முடிந்த ஒரு தேசத்தை, ஒரு சின்னஞ்சிறு தீவைக்கூட உலகப்படத்தில் எவரும் இயற்கையாக காணவும் முடியாது.........செயற்கையாக காட்டவும் முடியாது.
லெனின் வகுத்தளித்த கோட்பாடுகளின் அடிப்படையில் சராசரியாக 2000ஆம் ஆண்டின் உலக சித்திரம் வருமாறு.
1) உலகம் 100 ஏகபோக நிறுவனங்களின் ஆளுகைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது.
2)நிதியாதிக்க கும்பல்(IMF,WORLD BANK) களின் நிதி மூலதன ஆதிக்கத்துக்கு கீழைத்தேசங்கள் முற்றிலும் அடிமைப்பட்டது;
3)உலக வர்த்தக நிறுவனம்(WTO) தடையில்லாப்போட்டியை முற்றாக அகற்றி அதன் மீது ஏகாதிபத்திய வர்த்தக மேலாண்மையை நிறுவிக்கொண்டது
4) (கார்) ஏகபோக நிறுவனம் மூலவள ஆதாரங்கள் மீது முழு அளவிலான கொள்ளையையும், சட்டபூர்வமான உரிமையும் பெற்றுக்கொண்டது.
ஈராக்கில் ஐந்தாண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம்.
1) யுத்தச் செலவினம் $6trillion!!
2)அமெரிக்கா கொன்றொழித்த ஈராக்கிய மக்கள் தொகை 1.2 million
3)வேர் பிரிந்து ஊர் இழந்து அகதிகளானோர் 7 million
5)ஈராக் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டிருக்கிறது அமெரிக்கா.
6) படு பாசிச கூலிப்படை தனியார் இராணுவத்தை ஈராக் மக்களுக்கெதிராக ஏவி விட்டிருக்கிறது அமெரிக்கா.
7) ஈராக் மக்களை மனிதர்களாக நடத்துவதில்லை அமெரிக்கா.
8) ஈரானையும், சிரியாவையும் குறிவைத்து நிரந்தர இராணுவத் தளங்கள் நிறுவியுள்ளது அமெரிக்கா.
10) இத்தனை அனர்த்தத்துக்கும் பொறுப்பாளியான அமெரிக்கா இப்போது ஈரானை குற்றம் சாட்டுகிறது.செப்ரெம்பர் ஒன்பதில் அமெரிக்க சாம்பிராஜ்யத்தின் இருபெரும் மகுடங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சவூதி அரேபியராய் இருந்தபோதும் ஆப்கானிஸ்தானுக்கெதிராக போர் தொடுத்தது அமெரிக்கா; ஈராக்கில் இல்லாத மனிதப் பேரழிவு ஆயுதத்தை இருப்பதாகக் காட்டி ஈராக்குக்கெதிராக போர் தொடுத்தது அமெரிக்கா! இதே பாணியில் ஈரானை நோக்கித்திரும்புகிறது அமெரிக்கா!! உண்மை என்னவெனில், ஈரானுக்கெதிராக நடத்த திட்டமிட்டிருக்கும் அடுத்த தாக்குதலுக்காக பிரச்சாரம் செய்கிறது. சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறது.
எவ்வாறு தடுத்து நிறுத்துவது?
முன்னேறிய நாடுகளின் தொழிலாளவர்க்க இயக்கம் சோசலிச புரட்சித் திட்டத்தைக் கைக்கொள்வதும், கீழ்த்திசைத் தேசிய இயக்கங்கள் புதிய ஜனநாயக புரட்சித்திட்டத்தைக் கைக் கொள்வதும், இவ்விரு உலகத்தினதும் சிறுமுதலாளித்துவ சக்திகளின் பொதுவான யுத்த எதிர்ப்பு சீர்திருத்த முழக்கத்தை, 'ஏகாதிபத்தியவாதிகளின் பிரதேச-மூலவள கைப்பற்றுதலுக்கான அநீதியான தேசிய ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்போம்,நீதியான ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தேசபக்த யுத்தங்களை ஆதரிப்போம்' என அரசியல் மயப்படுத்தும் வழியில், ஒரு அமெரிக்க ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை
கட்டியெழுப்பிப் போராடுவதே இதற்குத்தீர்வாகும்.
தவறும் பட்சத்தில் மூன்றாம் உலகப் போர் எழுகையில் அதன் ஆதாரத் தூண்களில் ஒன்றான அரைக்காலனிய அரசுகளின் ஆளும் கும்பல்களை உள்நாட்டு யுத்தத்தால் கவிழ்ப்பது கீழ்த்திசை தேசங்களின் புரட்சிகரக் கடமை ஆகும். பிரமைகள்-பிதற்றல்கள் பற்றிய குறிப்புகள்:
அ) ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டிக்கும் யாரும் ஈராக் தலைவர் சதாம் அவர்களை கண்டுகொள்வதில்லை.
ஆ) ஈராக் யுத்தம் சட்டவிரோதமானது என்கிறசட்டவாதம்.காலனியாதிக்கத்தை தடுப்பதற்கு உலகத்தில் யார் சட்டமியற்றி இருக்கிறார்கள்? ஐ நா சபையா? அப்படியானால் ஆப்கானில் நேற்றோ ஆக்கிரமிப்பு சட்டபூர்வமானதா? சட்டத்துக்குட்பட்டு ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள எமக்கு 'வழிகாட்டுகிறவன்' எம்மை அடிமைப்படுத்துபவனே!
இ) ஈராக்கிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளார்களிடையே ஏகாதிபத்தியம் குறித்து ஊசலாட்டம் உள்ளது. அமெரிக்கா இவர்களுக்கு விலை பேசுகிறது. சில
வீணர்களை வாங்கியும் விட்டது. சதார் பேரத்துக்காகப் போராடுகிறார்!
ஈ)ஈராக் ஆக்கிரமிப்பு ஏகபோக முதலாளித்துவ நெருக்கடியின் தவிர்க்க இயலாத விளைவு. இதை புஸ் நிர்வாகத்தின் தவறு என கூறுபவர்கள்
ஏகாதிபத்திய தாசர்களே!
உ)'ஈராக் யுத்தம் எண்ணை யுத்தம்' என்கிற வாதம். ஈராக்கின் மூலவள ஆதாரங்களை கொள்ளையிடுவது இந்த ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியான நோக்கமே தவிர அதுவே முழுமையானதல்ல.அமெரிக்க நவீன காலனியாதிக்கமும் உலக மேலாதிக்கமுமே இதன் அரசியல் குறிக்கோள்.
ஊ) 'யுத்தம் வேண்டாம்' என்பது எந்தளவுக்கு அற்புதமான விருப்பமோ அந்தளவுக்கு கற்பனையான விருப்பமும் கூட! 5 வருடத்துக்கு முன்னால் இலட்சோப இலட்சம் மக்கள் 'யுத்தம் வேண்டாம்' என ஆர்ப்பரித்தீர்கள். உங்கள் மனச்சாட்சியின் முன்னால் நாம் மண்டியிடுகிறோம்.ஆனால் யுத்தம் தொடங்கியது....தொடர்கிறது.இப்போது பிரச்சனையெல்லாம் யுத்தம் அதன் பொதுவடிவில் இல்லை.ஆக்கிரமிப்பு யுத்தமும் அதை எதிர்த்த யுத்தமும் என யுத்தம் இரு முகம் கொண்டுள்ளது.எந்த யுத்தத்திற்கும் பொது முகம் இல்லை. இந்த யுத்தத்தில் எந்த முகத்தின் பக்கம் நீங்கள்??
எ) ஈராக்கில் இருந்து அமெரிக்கா தனது படைகளை உள்நாட்டு அரசியல் அதிகார -அரசாங்க-மாற்றங்களால் தானாக பின்வாங்கும், என்கிற பிதற்றலும் ஏமாற்றும். உலகமேலாதிகத்துக்கும் மத்திய ஆசியா மீதான பிராந்திய ஆதிக்கத்துக்கும் ஏதுவாக ஈராக்கில் நிரந்தரத் தளம் அமைத்துள்ளது அமெரிக்கா. விரட்டி அடித்தாலொழிய விட்டுவிலகாது அமெரிக்கா.
ஏகாதிபத்தியவாதிகள் காகிதப் புலிகள்.ஆப்கானும் ஈராக்கும் இதைத் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.இந்த இரு நாடுகளின் வீரம் செறிந்த யுத்தமே ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பின் நெருக்கடியை தீவிரப்படுத்தி நிலைகுலையச் செய்த சாதனங்கள்-சாதனைகள்- ஆகும்.
* ஆப்கானிஸ்தானில் நேற்றோ (NATO) ஆதிக்கம் ஒழியும்!
* ஈராக்கில் அமெரிக்கா மண்கவ்வி வெளியேறும்!!
* ஈரானுக்குள் புகுந்தால் அதன் அனைத்து அத்திவாரங்களும் தகரும்!!!
* ஈழமும் இவ் ஏகாதிபத்திய எதிர்ப்பணியில் விரைவில் அணிசேரும்!!!!(இனிமேலும் 'சர்வதேச சமூகத்திடம்' மண்டியிட்டு எலும்புத்துண்டுக்காக (புலி)வாலாட்டாது-அல்லது வாலாட்டக்கூடாது.) * தேசபக்த ஆப்கான் ஈராக் யுத்தம் வெல்க!
* ஏகாதிபத்தியம் ஒழிக!!
* ஈழ மக்கள் ஜனநாயக குடியரசு மலர்க!!!
* இறுதி வெற்றி ஒடுக்கப்படும் தேச மக்களுக்கே!!!!
16-04-2008-------------சுபா----------------ENB---------------------*