Thursday, 23 July 2015

ENB - கறுப்பு ஜூலை 2015 நினைவாக

புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க 
புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவோம்!

அன்பார்ந்த தமிழீழ மக்களே மாணவர்களே, இளையோரே, புலம்பெயர் புதிய தலைமுறையே,``புனர் வாழ்வுப்`` போராளிகளே! புலத்தமிழ் ஈழ சிறு முதலாளித்துவ சில்லறை வர்த்தக வணிகர்களே,

கறுப்பு ஜூலையின் 32 ஆம் ஆண்டு நினைவில், புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம் என முழங்குவோம்! 



ஏன் இந்த முழக்கம் இதன் சமுதாய அவசியம் என்ன? 
கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் சம்பவம் , 30 ஆண்டு கால சிங்கள அடக்குமுறையை எதிர்த்து, ``போராடிய`` சமரசவாதம் அம்பலமாகி, இறுதியாக ஈழ தேசம் ஆயுதம் ஏந்தி ஆக்கிரமிப்புச் சிங்கள இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுத்த வெற்றிகரமான யாழ் திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலுக்கு, பதில் என்ற போலிக் காரணத்தில் 1983 ஜீலை மாதம் 23 ம் தேதி ஈழ தேச மக்கள் மீது சிங்களம் நடத்திய தேசிய இனப்படுகொலைத் தாக்குதல் ஆகும். 

இவ்வாறு நாம் கூறுகையில் இது ஒரு பொதுச் சித்திரத்தைத்தான் வரைகின்றது.

58 இற்கும், 61  இற்கும், 77 இற்கும் , 81இற்கும் 83  இற்கும் இடையிலான தனிக்குறிப்பான எதிரியின் குறிகோளை இந்த பொதுச் சித்திரம் குறிப்பாக விளக்கவில்லை.

1983 ஜூலைக்கலவர இனப்படுகொலையைக் குறித்த எழுத்துக்கள் எதிரியின் வெளித்தோற்ற இன வெறி வன்முறையை விளக்கிய அளவுக்கு, அந்த வன்முறை சாதித்த, மீண்டும் வெற்றி கொண்ட , உள்ளடக்க அரசியல் குறிக்கோளை இதுவரை முன்னிலைப்படுத்தவில்லை.

1983 ஜூலைக் கலவர இனப்படுகொலையின் மூலம் சிங்களம் சாதித்தவை எவை?

1) கொழும்பு முதல் தென்னிலங்கை அடங்கிய சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அழித்தொழித்து , ஈழத்துக்கு விரட்டியடித்தது, எஞ்சியோரை அடிமைகளாக அடிபணிய வைத்தது.
2) கொழும்பு வர்த்தகத்தில் இருந்து ஈழத் தமிழர்களின் அனைத்து வர்க்கங்களையும் `தமிழன்` என்ற பேரால் தறித்தெறிந்து நக்கிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளியது.
3) இந்த அடக்குமுறையை மலையக மக்கள் மீதும் ஏவி, நீங்களும் தமிழரே என எச்சரித்தது.
4) இதர தேசிய இன மத சிறுபான்மையினர் மீதான பகைமையே சிங்கள தேசத்தின் விடுதலைக்கு வழி என பெருந்தேசிய சிங்கள மக்களை இன வெறிப்போரில் தமிழர்களுக்கு எதிரான நிரந்தர எதிரிகளாக நிறுத்தியது.
5) இது அரசியல் அமைப்புச் சட்டமாக்கப்பட்டது.(இலங்கை அரசியல் யாப்பபுக்கான 6வது திருத்தம்)

இதில் வெற்றி கொண்ட சிங்களம் இலங்கையின் அரசியல் யாப்பை ஆறாவது தடவையாகத் திருத்தியது.

இந்த ஆறாவது திருத்தம் ஈழத்தமிழர் பிரிவினை கோருவதை சட்டவிரோத தேச விரோத பயங்கரவாதக் குற்றமாகப் பிரகடனப்படுத்தியது.

இதன் விளைவாகவே ஈழத்தமிழரின் அரசியல் இரத்தம் சிந்துவதாக மாறியது. இன்றும் அந்த நிபந்தனையின் மீதுதான் ஈழப்புரட்சி நகர்கின்றது.

ஈழ விடுதலையின் எதிரிகளின் எதிர்ப்புரட்சி, எப்போதும் ஆயுதம் ஏந்திய வன்முறையாகும்; இதனால் நாம் மெழுகு வர்த்தி ஏந்தி புரட்சி செய்ய முடியாது!

இதன் சுருக்கமானஅரசியல்  வரலாற்றுப் பின்னணி வருமாறு;

1) 1947 போலிச் சுதந்திர அதிகாரக் கை மாற்றுதலைத் தொடர்ந்து
2)சிங்கள ஆளும் கும்பல் ஏகாதிபத்தியவாதிகளுக்கு நிரந்தர சேவை செய்யும் பொருட்டு
3) இனப்பகைமையை நாட்டில் திட்டமிட்டு தூண்டி வளர்த்தனர்,
4)  இதன் மறுபக்கமாக அரசியல் அதிகாரத்தை சிங்கள ஏகபோகமாக்க முயன்று வெற்றிபெற்றனர்.
5) இவ்வாறு சுதந்திரம் என்ற பெயரால் ஏகாதிபத்திய நலன் பேணும் அரைக்காலனிய அரை நிலப்பிரவுத்துவ அடிமை அரசு இனப்பகைமையின் மீது இலங்கையில் நிறுவப்பட்டது.
6) இதன் விளைவாகவே அன்று(1947) முதல் இன்று (2015) வரை இன மோதலும் இரத்தக்களரியுமாக அந்தச் சின்னத்தீவு மாறியுள்ளது.
7) இவ்வாறு இனமோதல் களமாக மாறிய இலங்கைத் திரு நாடு இன்று ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டு போர்க்களமாகவும் மாறி விட்டது
8) அமெரிக்காவின் ஆசிய பசுபிக் ஆக்கிரமிப்புத்திட்டம்
9) அதற்கு சேவகம் செய்யும் இந்திய அரைக்காலனிய அரசு
10) உலக மறுபங்கீட்டில் இலங்கை மீதான சீனாவின் தலையீடு,

இவைபால் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகளின் மதிப்பீடு!

அ) இந்த முரண்பாட்டில் ஈழவிடுதலை சாத்தியம் என்று கற்பிக்கின்ற அந்நிய சக்திகள்- புலம்பெயர் தமிழர் பேரவைகள்,
இ) சிவில் சொசைற்றி அரசியலைப் பரப்பும் அந்நிய ஏஜெண்டுகள்
ஈ) `20 ஆசனம் பெற்று பேரம் பேசுவோம்` என்கிற பாராளமன்ற சட்ட வாத , சம்பந்தன்,சேனாதி,சுரேஸ்,சுமந்திரன் கும்பல்,
உ) பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு முழக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு `ஒரு நாடு இரு தேச` ஐக்கிய இலங்கைக்கு வாக்குப் பொறுக்கும் கஜேந்திரகுமார் கும்பல்
ஊ) இவர்கள் அனைவருக்கும் பங்குபாகம் பிரித்து சேவகம் செய்யும் யாழ் பல்கலைக் கழகம்!
எ) ஈழதேசிய இனப்பிரச்சனையை, கலாச்சார தேசியமாகக் குறுக்கி ,நான்கு தேசிய இனங்களின் ஐக்கிய இலங்கையில் கும்மியடிக்கும் இடது சாரிய, ``புதிய ஜனநாயக` NGOகள்

சபாஸ் நாவலர்களே!

இவர்கள் அனைவருமே, கறுப்பு ஜூலையின் 32ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டிய நாட்களில் தான் இந்தத் தேர்தல் திருவிழாவை அரங்கேற்றினார்கள், அரங்கேற்றி வருகின்றார்கள்.

சிங்களம் இன்று பெருமனதோடு பிரகடனம் செய்கின்றது: இலங்கை நாடு இலங்கை மக்களுக்கு உரியது, எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று.

ஐ நா சபை மகிழ்ச்சியில் சிரித்து வாய் கிழிந்து கொடுப்பில் ஆனந்த இரத்தம் கொட்டிக் கொண்டாடுகிறது!

நம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நம் தாய் நிலமே நம் வசம் இல்லை என்பதுதான் உண்மை!

தங்கள் நிலமென்று உரிமை கோரி எங்களை விரட்டியடித்து, எங்கள் பூர்வீகப் பூமியையும் அபகரித்து கபளீகரம் செய்து, இதற்காக அறுபது ஆண்டுகள் இரத்தப் பலி கொண்ட ஒடுக்கும் தேசத்தின் ஆளும்கும்பலுக்கு `நிபந்தனையற்று ஆதரவளித்தோம்` என்கிறான் சுமந்திரன்.

வீட்டுக்கதவைத் தட்டி வாக்குக் கேட்க வருகின்றார்கள்!

புலம் பெயர் பினாமி  ஊடகங்கள் புல்லாங்குழல் இசைக்கின்றார்கள்!

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி கறுப்பு ஜூலை நினைவாக,

தேர்தல் பாதையை நிராகரிப்பதும்,  புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க  புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுமே ஆகும்!

புதிய ஈழப் புரட்சியாளார்கள்

No comments: