Saturday, 16 March 2013

தமிழக மாணவர் எழுச்சி: அவசியக் குறிப்புரை பகுதி (3)




தமிழக மாணவர் எழுச்சி: எழுச்சியின் தருணத்தில் ஒரு சுருக்கமான அவசியக் குறிப்புரை   பகுதி (3 )

மாணவர் எழுச்சி வீச்சும் எல்லையும்.

முதல் இரு பகுதிகளில் முதலாவதில் இந்திய விஸ்தரிப்புவாத அரசு எவ்வாறு சிங்களத்தின் நண்பனாகவும், தமிழீழத்தின் எதிரியாகவும் இருந்தது என்பதையும், இரண்டாவதில் தமிழக அதிகாரபூர்வ கட்சிகள் எவ்வாறு இதற்கு தொடர்ந்து துணை போனார்கள் என்பதையும் விளக்கினோம்.இவை இரண்டின் விளைவாகவும் மூன்றாவதாக இந்திய நடுவண் அரசின் தமிழகம் மீதான ஒடுக்குமுறைகளின் விளைவாகவும், நான்காவதாக வெகுஜன மயப்பட்ட போராட்டங்கள் உலகெங்கும் பொதுவாக வெடித்துவருவதன் விளைவாகவும் இம்மாணவர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைக்கான தமிழக மாணவர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கழகத்தின் 22வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு ``எதிராக`` தீர்மானம் கொண்டுவரப்போவதாக அமெரிக்காவும், அதை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழகக் கட்சிகளும் நாடகமாடிய வேளையில் இறுதியில் வந்த தீர்மானம் ஈழத்தமிழர் நலனைப் பேணும் எந்த அம்சங்களையும் கொண்டதல்லாமல், மாறாக அமெரிக்க இந்திய நலனுக்கு இலங்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக மட்டுமே இருந்ததால் கோபம் கொண்ட மாணவர்களை ஒழுங்கமைத்து போராட முயன்றதின் விளவான எழுச்சி இதுவாகும்.

ஆரம்பத்தில் ``அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றுத்தீர்மானம்``, ``தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்து``, ``இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்து`` என்ற அடிப்படை முழக்கங்களை முன்வைத்து சென்னை லயோலாக் கல்லூரியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தினர்.ஜெயா அரசின் தமிழகப் பொலிஸ் படை இரவோடிரவாக அவர்களைக் கடத்தி `கல்லூரி அதிபரின் பழரசத்தோடு` முறியடித்தது, முறியடித்துவிட்டதாகக் கனவு கண்டது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்துக்கு பேட்டியளித்த மாணவர் தலைவர்கள் `லயோலாக் கல்லூரியில் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டாலும் நாம் வேறு போராட்ட வடிவங்களைக் கையாண்டு தமிழக மாணவரிடையே நமது போராட்டத்தை விரிவு படுத்துவோம்` என்ற பொருளில் நம்பிக்கை அளித்துப் பேசினார்.

அவர் கூறியவாறே, மறு நாள் விடிகாலை முதல், இச்சிறு பொறி பெருங்காட்டுத்தீயாய் தமிழகம் எங்கும் பரந்தது.போராட்ட வடிவங்களும் மாறின.உண்ணாவிரதப் போராராட்டம், உள்ளிருப்பு, வகுப்புப் புறக்கணிப்பு, சாலைமறியல், ரெயில் மறிப்பு, அரச காரியாலய பணி முடக்கு, என வெவ்வேறு வடிவங்களை எடுத்தன.

இதன் போக்கில் முழக்கமும் தமிழகப் பிரிவினை, இந்தி எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு என சொந்த நாட்டு விடுதலை எண்ணங்களையும் இணைத்துக் கொண்டன!

மாணவர் இயக்கத்துக்கு ஆதரவாக வெகுஜனங்களும் திரண்டனர்.
இதனால் அச்சங்கொண்ட ஜெயா அரசு தமிழகப் பள்ளிகள் அனைத்துக்கும் கட்டாய விடுமுறை அளித்து மாணவர் போராட்டத்தை முடக்க முயல்கிறது.
கல்லூரிகளுக்கு வெளியால் கூடும் மாணவர்களைக் கைது செய்து காட்டுத்தர்பார் நடத்துகின்றது!

உண்ணாமல் பிச்சைகேட்டு பொது இடங்களில் கூடுவோர் அநுமதியா பெற்றார்கள், பொது இடத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்க அநுமதி வேண்டுமென்கிறது ஜெயா அரசு; ஆனால் அந்த அனுமதியைக்கூட சட்ட பூர்வமான உரிமையைக் கூட ஜெயா அரசு மாணவர்களுக்கு மறுக்கின்றது!
இதை வெற்றி கொள்ள மாணவர் இயக்கத்துக்கு தெளிவான முழுவிரிவான திட்டம் தேவை.

முதலாவதாக:
இந்த மாணவர் இயக்கம் பின்வரும் முக்கிய மூன்று; ``அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றுத்தீர்மானம்``, ``தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்து``, ``இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்து`` முழக்கங்களுக்கான பிரச்சார இயக்கமாகும்.இந்த ஒட்டுமொத்த இயக்கமும் பிரச்சாரக் கட்டத்தில் தான் இருக்கின்றது.இப்பிரச்சாரக் கட்டத்தைப் பூர்த்தி செய்யாமல், இம்முழக்கங்கள்பால் அமைப்பு ரீதியான மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளாமல் கிளர்ச்சி நடவடிக்கையில் மாணவர்கள் இறங்கக் கூடாது. இப்பிரசார இயக்கம் பூர்த்தியடையாமல் மாணவர்கள் தமது கோரிக்கைகளை உடனே வென்று பெற்றுவிட முடியாது. எனவே பிரச்சாரக்கட்டத்தையும், கிளர்ச்சிக்கட்டத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. எழுச்சியின் தருணத்தில் இது மிகவும் ஆபத்தானது ஆகும்.

இரண்டாவதாக:
மாணவர் இயக்கம் ஒரு முன்னணி பிரச்சாரப் படை மட்டும் தான். இந்த முன்னணிப்படையே புரட்சியை நடத்திவிட இயலாது, முடியாது.இதற்கு முள்ளிவாய்க்காலை தவிர வேறு சிறந்த வரலாற்று உதாரணங்கள் தேவை இல்லை.மாணவர் இயக்கத்தின் பிரதான கடமை இந்த முழக்கங்களை இறுதிவெற்றிக்கு இட்டுச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற சமூக வர்க்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு ஞானமூட்டி அமைப்பாக்குவதாகும்.இத்தகைய விடுதலை வேட்கை கொண்ட மக்கள் திரள் மத்தியில் மாணவர் இயக்கம் வேரூன்றவேண்டும்.மாணவர் இயக்கத்துக்கு உழைக்கும் மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும்.

மூன்றாவதாக:
மூலோபாய மற்றும் செயல்தந்திரக் குறிக்கோள்களை இரத்தினச் சுருக்கமாக வரையறுத்து வனையப்படுபவை முழக்கங்கள் ஆகும்.அவை நெற்றிப்பொட்டுப்போல ஒரு கட்சி அல்லது இயக்கம் ஒரு குறிப்பான கட்டத்தில், அல்லது ஒரு குறிப்பான பிரச்சனையில் அடைய விரும்புவதை சுட்டிக்காட்டுகின்றன.

உதாரணத்துக்கு 1983 ஜூலை இனப்படுகொலை இலங்கையில் அரங்கேறிய போது ``காப்பாற்று காப்பாற்று தமிழினத்தைக் காப்பாற்று`` என தமிழக இனமான கட்சிகள் முழங்கின. ``காப்பாற்றுவதாகக் கூறி`` நடுவண் அரசு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை செய்து கொண்டது.இதில் தனது மேலாதிக்க நலனையும், சிங்களத்தின் நிரந்தர அடிமைத்தனத்தின் கீழ் ஈழ தேசத்தை 13வது திருத்தம் மூலம் கட்டிப்போட்டது.ஈழதேசத்தை வடக்கு கிழக்காக துண்டாட வழியமைத்தது.இந்திய `அமைதிப் படை` அனுப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் வேட்டையாடப்பட்டார்கள்.தமிழீழ மக்கள் புலிகளுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்க அவர்கள் மீது `போர்ப் பயங்கரம்` கட்டவிழ்க்கப்பட்டது.இந்தப் போர்ப் பயங்கரத்தின் பிரதான ஆயுதம் `பாலியல் வன்முறை` ஆகும்.இக்கட்டத்தில் `` கொல்லாதே கொல்லாதே தமிழனைக் கொல்லாதே`` என்று அதே வாயால் முழங்கினார்கள்.எந்தத் தமிழினத்தைக் காப்பாற்றும் என்று இந்தியப் படையை அனுப்பினார்களோ, அந்தப் படையே எப்படி தமிழினத்தைக் கொன்றொழித்தது என்பதற்கு இன்று வரை விளக்கம் இல்லை.

ஆக இந்த பாசாங்குத் தனமான, அதேவேளை படு மோசடித்தனமான முழக்கங்கள் அடைய விரும்பியது என்ன?
விளைவு மூலத்தை நியாயம் செய்கிறது.
இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை இவர்கள் அடைய விரும்பினார்கள் என்பதுதான்.

எனவே முழக்கங்கள் மட்டும் போதுமானதல்ல. அவை வரையறை செய்யப்பட்ட (சர்வதேச, இந்திய,தமிழக, பிராந்திய, தமிழீழ) சூழ் நிலை  தொடர்பான மதிப்பீடும், இச்சூழலில் எமது முழக்கங்களை உறுதியாக ஆதரிக்கும், ஊசலாட்டத்துடன் ஆதரிக்கும், உறுதியாக எதிர்க்கும், கூட இருந்து குழிபறிக்கும் நமது போராட்டத்தின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்கிற வரையறையும் தெளிவும் மிக மிக அவசியமானவை.

( எந்தப் புரட்சியினதும் மையமான பிரச்சனை புரட்சியின் நண்பர்களையும் எதிரிகளையும் வரையறை செய்துகொள்வதுதான் என்பதை `மாணவர்கள்` நாம் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!)

நான்காவதாக:
முழக்கங்களோடு கூடவே செயல்தந்திர குறிக்கோள் பற்றிய விளக்கங்களும் அவசியம். இவ் விளக்கப் பிரசுரங்கள் அவசியம். இவற்றை பல இலட்சக் கணக்கில் மாணவர் பாசறைகளில் விநியோகித்து ஞானமூட்டுவது அவசியம்.

ஐந்தாவதாக:
மாணவர் இயக்கத்தின் `தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு` என்ற முழக்கம் ஒரு ரோன் தாக்குதலாகும்.ஏகாதிபத்தியம் தேசிய சுதந்திரத்தின் எதிரி.விரிவாதிக்க வாதம் (இந்திய சீன), தேசிய சுதந்திரத்தின் எதிரி.இவர்களின் எதிர்ப்பை அடக்குமுறையை மாணவர் இயக்கம் சந்தித்தே தீர வேண்டும்.மக்கள் ஆதரவு இல்லாமல் இந்த அடக்குமுறையை மாணவர் இயக்கம் மட்டுமே எதிர்கொள்ள இயலாது.இயலாது.இயலாது

முடிவாக:
மாணவர் இயக்கத்தின் வீச்சு எல்லை இந்த ஐந்து பிரதான பண்புகளையும் எட்டுவதையொட்டி மட்டுப்படுத்தப்பட்டிருகின்றது.

இப் பிரச்சனையில் மாணவர் இயக்கம் குறித்த மதிப்பீடு (3) : 
மாணவர் இயக்கமும் மக்கள் இயக்கமும் ஒன்று சேர்ந்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்று அவர்களது பதாகை கூறுகின்றது.

முன்னணிப்படையின் முன் முயற்சியில் எவ்வாறு ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்கிற பிரச்சனையை அவர்கள் புரிந்து கொண்ட அளவுக்கும், தெரிந்து கொண்டுள்ள அளவுக்கும் உள்ள விகிதாசாரமே இன்று  வெடித்திருக்கும் தன்னியல்பான எழுச்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

எழுச்சி தொடர்க! எழுச்சி நடைமுறையில் இருந்து கற்றறிக! எழுச்சி வெல்க! மக்கள் ஆதரவு பெறுக, பெருகுக!

புதிய ஈழப்புரட்சியாளர்கள் ENB

No comments: