மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் :
கறுப்பு ஜூலை 2014 நினைவு வெளியீடு
கறுப்பு ஜூலை 2014 நினைவு வெளியீடு
அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே,இளைஞர்களே,முப்பது ஆண்டுகாலம் களமாடி மீண்டிருக்கும் போராளிகளே,`புத்திர சோகத்தில் புலம்பியழும்`தாய்மார்களே,
ஜூலை 2014 கறுப்பு ஜூலை 1983 இன் 31 ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தக் கோர நினைவு ``கறுப்பு ஜூலை 83`` என்ற ஒரே பதாகையின் கீழ் ஆண்டாண்டு தோறும் தமிழர்களால் நினைவு கோரப்பட்டுவரும் ஆறாத வடுவாகும்.கறுப்பு ஜூலையை 30 ஆண்டுகள் மறக்காத மக்கள், முள்லிவாய்க்காலை 300 ஆண்டுகளானாலும் மறக்க மாட்டார்கள் என்பது திண்ணம். இங்கிலாந்துக்கு அயர்லாந்து எப்படியோ, அப்படியே சிங்களத்துக்கு தமிழீழமும்.நமது தலைமுறை போர் புரியும்!
இவ்வாண்டு ஜுலை நினைவு தினம், இந்தியாவில் மோடி -ஆர்.எஸ்.எஸ் பாசிசம் ஆட்சியமைத்துள்ள சூழலில் பிறக்கின்றது.மோடி ஆட்சியானது தாராளமய, தனியார்மய, உலகமய `அபிவிருத்தியை` காங்கிரஸ் விட்ட இடத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதில், `ஒரு பாய்ச்சலை` ஏற்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதற்கமைய இந்துத்துவா
மதவெறியையும்,`சார்க் சகோதரத்துவ` இந்திய விரிவாதிக்க வேட்டையையும் தனது உள்நாட்டு, வெளி விவகாரக் கொள்கைகளாக முறையே கொண்டுள்ளது.இதன் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உலக மறுபங்கீட்டு திட்டத்துக்கு, சேவகம் செய்யும் பிற்போக்கு காவலனாக உருவாகியுள்ளது.
இதன் விளைவாக அமெரிக்க இந்திய சர்வதேச உறவிலும்,பிராந்திய உறவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன,இயல்பாகவே இந்திய இலங்கை உறவிலும், ஈழப்பிரச்சனையின் செயல்தந்திர வழியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இவ்வாண்டு ஜூலை நினைவாக ஈழப்புரட்சியை மோடி ஆட்சியின் நிலைமைகளின் கீழ் முன்னெடுப்பதற்கு ஏதுவாக, மோடி ஆட்சியைப்பற்றிய மதிப்பீட்டை முன்வைப்பது அவசர தத்துவார்த்தக் கடமை ஆகியது. பருண்மையான சூழ்நிலை பற்றிய ஸ்தூலமான ஒரு மதிப்பீடு இல்லாமல் புரட்சியை ஒரு போதும் வழி நடத்த இயலாது. இக்கடமையின் பாற்பட்டு `` மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும்`` என்கிற தலைப்பில், அடுத்த செயல்தந்திர காலகட்டம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
1) முதலாம் பகுதியில் மோடி ஆட்சியை வழிபடும், தமிழ்த் தரகு அணியின் துரோகம் அம்பலப்படுத்தப்பட்டது;
2) இரண்டாம் பகுதியில் மோடி ஆட்சியின் தாராளமய தனியார்மய உலகமய விதேசிய பொருளாதாரக் கொள்கை விமர்சிக்கப்பட்டது;
3) மூன்றாம் பகுதியில் மோடி ஆட்சியின் 13 இற்கு மேல் நாடகம் அம்பலப்படுத்தப்பட்டது;
4) நான்காம் பகுதியில் தமிழழீழ தேசிய இயக்கத்தை மதவாத ஆயுதத்தைக் கொண்டு சீரழிக்கும் திட்டமும் அதற்கு துணை நிற்கும் சமூக சக்திகளும் இனங்காட்டப்பட்டது;
5) ஐந்தாம் பகுதியில் கறுப்பு ஜூலையின் 31ஆம் ஆண்டில், சம உரிமை பேசும் சிங்கள சமூக தேசிய வெறியர்களை அம்பலப்படுத்தி, தமிழர் பிரச்சனைக்குத்தீர்வு தமிழீழமே என்பது வரையறை செய்யப்பட்டு முன்வைக்கப்பட்டது.
இவ் ஆய்வின் அடிப்படையில் இறுதியாக நடைமுறை இயக்கத்துக்கான நமது பிரச்சார முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கறுப்பு ஜூலை முப்பத்தோராம் ஆண்டு நினைவு நாளில் , ஈழ விடுதலைப்புரட்சியின் எதிரிகளைத் தோற்கடிக்கவும், சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தவும்,மலையக இஸ்லாமிய தமிழ் உழைக்கும் மக்களை விடுதலைப் புரட்சியில் அணி சேர்க்கவும் இவ் அரசியல் செயல் தந்திர வழி முன்மொழியப்படுகின்றது.
இதனை விமர்சன நோக்கில் கற்றறிந்து, விவாதித்து, ஈழவிடுதலையை வென்றெடுக்க புதிய ஈழப்புரட்சியாளர்களோடு அணி சேருமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.
தாழ்மையுடனும் தோழமையுடனும்
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (1)
மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (2)
மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (3)
மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (4)
மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (5)