Wednesday, 26 February 2025

ஐ.நா காவடி- புதிய ஈழப் புரட்சியாளர்கள் அறிக்கை

ஏகாதிபத்திய தாச ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

ஜனநாயகத் திட்டத்தில் ஈழப்புரட்சியை முன்னெடுப்போம்!!

டுக்கும் சிங்கள தேசத்தின் ஆளும் கும்பல்கள் 30 ஆண்டுகளாக தொடுத்துவந்த ஈழப்போரை, ஐ.நா வில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடுகளின் ஆதரவோடும், தலைமை நாடுகளின் இராணுவ உதவியோடும், ஐ.நா வின் ராஜதந்திர பக்கபலத்தோடும் முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் மூலம் மே 18 2009 இல், நிறுத்தியது.

எந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களுக்காக இத் தேசியப் படுகொலைக்கு ஐ.நா.துணை போனதோ-குருதி உறையுமுன்னமே, பிணம் தின்ற நாய்களின் கடைவாயில் நிணம் ஒட்டிக்கொண்டிருந்த போதே அந்த மயானத்தைப் பார்வையிட்ட ஐ.நா.தலைவர் பான்கி மூன் அங்கு கொல்லப்பட்டவர்கள் ஆக பத்தாயிரம் பேரே என அறிக்கையிட்டு அதை அதிகார பூர்வ சர்வதேச சமூக வெளியீடாக மாற்றினாரோ, அவரும் அந்த சபையும்- அதே கூட்டு நலன்களின் பாற்பட்டு அத் தேசியப் படுகொலைக்கு -`இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்`- என (பெயர் சூட்டின) வரையறை செய்தன.

அது முதல், இந்த வரையறை உலக நியமம் ஆகி, ஊடகப் பிசாசுகளால் பரப்பப்படுவதான உண்மை  என்றாகிவிட்டது!

இவ்வாறே முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து ஈழ தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்துக்கு வடிகால் அமைத்து, முள்ளிவாய்க்கால்ப் புரட்சிக்கனலை நீர்த்துப் போகச் செய்து, நிர்மூலமாக்குவதற்கான உபாயமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியம் புறந்தள்ளப்பட்டு `மனிதம்` உயர்த்திப் பிடிக்கப்படுவது உலகளாவிய போக்காக மாறிவிட்டது.

அரசியல் அதிகாரம் சார்ந்த அனைத்து வர்க்கப் போராட்டங்களும் மனித உரிமைப் பிரச்சனைகளாக மகுடம் தரித்துக் கொண்டுள்ளன.புரட்சி வெறும் சீர் திருத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இது ஏகாதிபத்திய கோட்பாடும், திட்டமும் ஆகும்.இதைச் செயலாக்கும் வாகனங்களாகவே ஐ.நா.வின் இலட்சோபம் NGO படைகள் இயங்குகின்றன. 

இதனடிப்படையில் இந்த மனித உரிமைத் திருவிழாவுக்கு அரோகராப் போட, தேசியப் புரட்சியின் எதிரிகள், எகாதிபத்திய தாசர்கள் ஓரணி சேர்ந்தது தர்க்க ரீதியானதே.

அது முதல், 2025-2009 = 16 ஆண்டுகள்,வருடா வருடம் ஐ.நா சபைக்கு மனித உரிமை விடாய் எடுக்கும்போது, உள்ளக வெளியக இனத்துவக் கும்பல்கள் காவடி எடுத்துவருகின்றன.

மெழுகு வர்த்திப் போராட்டங்கள் நடத்துகின்றன. சந்து பொந்துகளில் உந்துருளி ஓடுகின்றன!

விசித்திரமாக இந்த வருடமும்; எந்த நியமும் இன்றி எல்லா நியமங்களையும் மீறி இஸ்ரேல் நடத்திக்கொண்டிக்கும் பாலஸ்தீன தேசிய நிர்மூலத்துக்கு எதிரான தீர்மானங்களை, ஒருவர் மாறி ஒருவர் எதிர்த்து வாக்களித்து முறியடித்துக் கொண்டு, மறுபுறம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு அனைவரும் ஏகமனதாக வாக்களித்து, ஐ.நா.வின் ஏகாதிபத்திய சாரத்தை உலக உழைக்கும் மக்களுக்கு அம்பலமாக்கி ஐ.நா நிர்வாணமாக நின்ற - இந்த வருடமும் வெட்கம் மானம் சூடு சொரணை இன்றி  இந்த மனித உரிமைத் திருவிழா அரங்கேறி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடைய முன்னின்று போராடும் ஈழத் தாய்மார்களின் கூட்டிற்குள் புகுந்து அவர்களது கைகளில் அமெரிக்க,ஐரோப்பியன் யூனியன் கொடிகளைத் திணித்த கொழும்புத் தரகன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்னும்-பாலஸ்தீன படுகொலைக்குப் பின்னும் அந்தக் கொடிகளைத் திரும்பப் பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடையும் போராட்டம் ஈழ தேசத்தின் ஆன்மாவை உலுக்கும் தேசியப் பிரச்சனை பற்றியதாகும். யாரை எதிர்த்து யாரை அணி சேர்த்து இப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்கிற ஜீவாதாரமான பிரச்சனையில் சந்தர்ப்பவாத பொன்னன் கட்சியின் தவறான வழி காட்டுதல்தான் மூவாயிரம் நாட்களாகியும் அந்தப் போராட்டம் ஒரு வெகு ஜன இயக்கமாக மாறாததற்கு காரணம் ஆகும். இவ்வாறு தான் இச் சைக்கிள் கட்சி மாணவர்களையும் திசை திருப்பி வருகின்றது.

வழக்கம் போல இந்த ஆண்டும் இத்திருவிழாவின் விவாதப் பொருள் உள்ளகமா? வெளியகமா? என்பது தான்!

ஒரு வேறுபாடு என்னவென்றால் இந்தத் தடவை ஒடுக்கும் போர்க்குற்ற சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மாறியிருக்கின்றார்கள்.

நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கையில் ஏந்தி யுத்தத்தை நடத்தியவர்கள் அல்லாமல், அவர்களுக்கு பக்க பலமாக, மறைமுகமாக, தத்துவார்த்த ரீதியாக போரை ஆதரித்து பிரச்சாரம் செய்து, படைக்கு ஆட் சேர்த்து, பதுங்கு குழிகள் வெட்டிய  துணைக் குற்றவாளிகளான ஜே.வி.கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது.ஆட்சி அமைத்திருக்கின்றது.

இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றிய இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்: 

``எமது குறிக்கோள் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்ட வரம்புக்குள், உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமான மற்றும் வலுவான நிலைக்கு கொண்டுவருவதாகும்". எனக் கூறியுள்ளார்.

இந்த அலுவல் அகங்கள் அனைத்தும் இவை ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டவை. மேலும் இந்த 16 ஆண்டுகளில் அவை எதையும் சாதிக்கவில்லை. இவை அனைத்தும் சிங்களத்தின் (தரகுமுதலாளிய, பெருந் தேசியவாத,பெளத்த மதவாத அரசின்) அழுக்கு முகங்களே ஆகும். இதை வலுப்படுத்துவது அநீதியை வலுப்படுத்தவே உதவும்.

விஜித ஹேரத் ``அரசியலமைப்பு சட்ட வரம்பு'` பற்றிப் பேசுகின்றார்.

இலங்கையின் முதல் ஆங்கிலேய காலனித்துவ சோல்பரி அரசியல்யாப்பு பொன்னம்பல `சேர்-Sir' களும், சேன-நாயக்கர்களும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

1972, 1978 யாப்புகள் ஈழ தேசத்தின் அங்கீகாரம் பெற்றவையல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக 1978 யாப்பின் 6வது திருத்தம் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மறுக்கின்றது. பிரிந்து செல்லும் உரிமையை தடை செய்து சட்டவிரோதமாக்கியுள்ளது.

இதன் விளைவாகவே `ஈழ அரசியல்`  வன்முறை வடிவத்தை எடுத்தது. உள் நாட்டு யுத்தமாக வளர்ந்தது.

இந்த யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, இதே அரசியலமைப்பு எப்படி நீதி வழங்கும்?

ஆக இறுதியாக, அதிகார பீடத்தில் அமர்ந்ததும் ஜே.வி.கும்பல் காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியலில் ` போர்க்குற்ற நீதி` ப்பிரச்சனையும் இணைந்துவிட்டது.

இந்நிலையில் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக் கனலைத்  தணியவைக்கும், ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களை, சக்திகளை எதிர்த்து, தேசிய ஜனநாயகத் திட்டத்தில் ஈழ விடுதலைப் புரட்சித் தீயை அணையவிடாது பிரகாசிக்கச் செய்வதே எமது புரட்சிகர அரசியல் கடமையாகும்.

அதற்காக அணிதிரளுமாறு இளைய தலைமுறையினருக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை எம் தந்தையர் நாடு! ஈழதேசம் எம் தாய் வீடு!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

ஈழம்                                                                         26-02-2025

தொடர்புக்கு: eelamnewsbulletin @gmail.com