Saturday, 28 January 2012

TNA: தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

யார் இந்த  –TNA (Tamil National Alliance)
தமிழ்க் கூட்டமைப்பா,  இந்திய நாட்டமைப்பா?

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA)  தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தது முதல், ஆயுதப்
போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தது. (படிக்க ஈழத்தில் வர்க்கப் போராட்டம்).  ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும். இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி  அணைத்துக் கொண்ட இயக்கமாகும். 1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப்
பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது
குட்டிமுதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு  திரிபுவாதிகளும்,பாராளமன்றவாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியிடம் CPI, ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது. 1985 ஆரம்பத்திலேயே
அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்டது.  இந்த இந்திய சார்பு
அணிக்கு தலைமை வகுத்தவர், இந்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, மாகாணசபையை அங்கீகரித்து,
இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ
மக்களுக்கு எதிராக கொலைவெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.
அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும், இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள்
சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் கூறினார். சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்-அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து
வந்தார்.

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான, வீரம் செறிந்த, வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றிவாகை
சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. இந்திய
ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் இந்தியாவிலும் உதிரிகளாக
தஞ்சம் புகுந்தனர். தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு
ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார்!

தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டது. இந்தப் பணியைப் பொறுப்பேற்று
இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில்
விடுதலைப் புலிகளின் “ஏகபோகம்” -தனித்த தலைமைத்துவம்- நிலைநாட்டப்பட்டது. இவ்வாறு விடுதலைப் புலிகள் ``பாசிசப் புலிகளாகி!``, 1989
இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள்  தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தனர்.

இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர். தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறீலங்கா இராணுவம்
விரட்டியடிக்கப்பட்டது.எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின. இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்டது.
இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது. ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண 
முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்னர். அமெரிக்க இந்தியப் படைகளின்
ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே
முடிவு செய்தனர்.

{இது முதல், மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின்
செல்வாக்கில் புலிகளின் அரசியல், வழி நடந்தது. எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால், `` ``பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி
தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது.அவர் அத்தகைய தலைவர் அல்ல. அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன்
பாலசிங்கம் மட்டும் தான்.எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம்.பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது
வெற்றியும் அளித்தது.)``.}

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்றனர். இந்த முயற்சியின் விளைவே  கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள், தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு
செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும், ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த
கோரிவந்த, `அரசியல் பன்முகத் தன்மை`க் கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட, சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும்
விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து, தேர்தலில் நிறுத்தி, `வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`; எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து, கூடவே வாக்கும் அளித்து பாராளமன்றத்துக்கு அனுப்பினார்கள். இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப்
பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது. இவ்வாறு, தமது ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என
மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது தர்க்கமாகியது. (அவர்களது-எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிக்கும் `காய் நகர்த்தல்` என
இதனைப் புலி அறிவாளர்கள் புரிந்து கொண்டனர்.)

குறிப்பு 1.
சமஸ்டிக் கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு சமஸ்டி ஆட்சி முறையைத் தீர்வாக முன்வைத்துக் கட்டப்பட்ட கட்சி. (நடைமுறைக்கு
வரவில்லையென்றாலும் டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம் ஆகியவை சமஸ்டிக்கு மிகவும் கீழானவை ஆகும்.ஐக்கிய தேசியக்
கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்த போது சம்ஸ்டியை நிபந்தனையாக வைக்கவில்லை சமஸ்டிக்கட்சி.) 1977 இல் தமிழ் ஈழத்துக்கு-பிரிவினைக்கு
சர்வஜன வாக்கெடுப்பு கோரி மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி. 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 1987 இல்
மாகாணசபையை ஏற்றுக் கொண்ட கட்சி. 2002 இல் மீண்டும் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழ் மக்களின் `சுயநிர்ணயத்தை` ஏற்றுக் கொண்ட
கட்சி. பூச்சி, புழுக்கள் கூட இந்த அளவுக்கு வளைந்து நெளியாது!.

குறிப்பு 2.
சம்பந்தனின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். அ.அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சுரேஷ் பிரேமச்சந்திரனின் EPRLF கட்சியின் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தத் தலைவர்களது தொண்டர்களான, கூட்டமைப்புத் தலைவர்கள் யாரும், ஏன் எங்கள் `தாய்க்கட்சிகளின்` தலைவர்களைக் கொன்றீர்கள் என்று பகிரங்கமாகக் கேட்கவில்லை. தலைவர்கள் மரணதண்டனைக்குரிய “குற்றங்களை
இழைத்திருந்த போது”, தொண்டர்களோடு எப்படி அரசியல் கூட்டமைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்களும் அறிவு ஜீவிகளும் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கூட இக்கேள்வியைக் கேட்கவில்லை. மக்கள் மட்டும் மனதுக்குள் இப் புனிதக் கூட்டுக் குறித்து முணுமுணுத்து முறுகிக் கொண்டனர்.

குறிப்பு 3.
பிரிவினைக்காக – தமிழீழத் தனியரசுக்காக போராடிய விடுதலைப் புலிகளுடன் `அரசியல் கூட்டமைத்த` கூட்டமைப்பு, பிரிவினைக் கோரிக்கையைத் தடை செய்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது எப்படி, என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

குறிப்பு 4.
இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது. காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன. விச ஜந்துக்களும்
வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன. இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் “அரசியல் ஆய்வாளர்”
என்பதாகும்.இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும், இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு `போர்வாள்` என ஆய்ந்து அறிந்து கூறிவந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை பாராளமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும், யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு ``வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள்`` என முழங்கி, புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால், டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர, எஞ்சிய  24 இல் 22  பொரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு
பாராளுமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு- பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தங்கியிருந்தது.

கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து, போர்க்களம் பாராளமன்றமானது. யுத்தத் தளபதி பொன்சேகாவுக்கு கூட்டமைப்பு தமிழ்
மக்களிடையே வாக்கு வேட்டையாடியது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜ பக்‌ஷவுக்கு நன்றி செலுத்தியது. புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது. பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு போராடவில்லை!

விடுதலைப் புலிகள்  தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க  கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.அவர்களது-எதிரிகளது- தடியைக் கொண்டே அவர்களுக்கு
அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய், தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது.அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது
மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல.இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய்
நகர்த்தல்.(இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி, அரசியல் மொழி கிடையாது)

உலக மறுபங்கீடு நடைபெற்ற வண்ணமிருக்கும் சர்வதேசப் போக்கின்பகுதியாக இலங்கையிலும் அதன்பிரதிபலிப்பு வெடிக்கின்றது.
அமெரிக்க இந்திய அணியும், ரசிய சீன அணியும் இப்போட்டியில் குதித்துள்ளன.ரசிய சீன அணி சிங்களத்தை முற்றிலுமாகச் சார்ந்து, தமிழ்மக்களுக்கு எதிரான நிலை
எடுத்துள்ளது.அமெரிக்க இந்திய அணி சிங்களத்தின், ரசிய சீன அணி நோக்கிய சாய்வை தடுக்க ஈழத்தமிழர்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்
கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது. இவ்வாறு தமிழ் மக்களை வைத்து தமது நலன்களை அடைய முயலும் இந்தியாவும் அமெரிக்காவும் இந்தத் துடைப்பங்கட்டையை தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக அங்கீகரித்து (தமது நாடுகளுக்கு வரவழைத்துப் `பேச்சுவார்த்தை`கள் நடாத்தி) முடி சூட்டி விட்டனர். ஆகக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டது!.
இந்தியஅரசியல்ஆலோசகரான விரிவாதிக்கவாதி B.ராமன், ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு முதற்படி, `அரபாத் இல்லாத பாலஸ்தீனம்` என்ற கொள்கையை வகுத்தளித்தார்.இதுவே இந்திய அரசின் அதிகாரபூர்வ கொள்கையுமாகியது.ஆக அரபாத் இல்லாத பாலஸ்தீனத்தில் கூட்டமைப்பை தனது அரசியல் பிரதிநிதியாக நிறுவியிருக்கின்றது இந்திய விரிவாதிக்க அரசு.இவ்வாறு கூட்டமைப்பு இந்திய நாட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.
(இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய ஆய்வறிக்கை தொடர்பான விமர்சன அரங்கில் கலந்துகொண்ட எரிக் சொல்ஹெய்ம் `` தமிழ் மக்கள் இனிமேல் ஆயுதம் ஏந்திப்போராடக் கூடாது, கூட்டமைப்பு தமிழ்மக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதி. அவர்கள் மூலம் நோர்வே தனது பங்களிப்பைத் தொடரும்`` எனக் கூறியிருந்தார்.இந்துப்பத்திரிகை கூட்டமைப்பு தனது கடமையில் இருந்து தவறக் கூடாது என ஆலோசனை வழங்கியுள்ளது.உருத்திரகுமாரன் `தாயகத்தில் கூட்டமைப்பும், புலம்பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கமும்` ``தமிழீழ விடுதலைப் பணியை``த் தொடர்வோம் என அறிவிக்கின்றார். தமிழ் கத்தோலிக்க பெரிய பாதிரியார் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முயலவேண்டும் எனக் கோருகின்றார்.தேசிய சமாதானத்துக்கு அயராது உழைக்கும் அந்நிய NGO க்களின் சிங்கள முகாமையாளர்கள் கூட்டமைப்பின் நம்பிக்கையைப் பெற LLRC பரிந்துரைகளை அரசாங்கம் அமூலாக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறார்கள்.)
புதிய அணிசேர்க்கைக்கான தயாரிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளைச் செலவிட்ட கூட்டமைப்பு இறுதியாக ஒரு தெளிவான விதேசியத் திட்டத்துடன் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டும் குதிக்கின்றது.இனிமேலும் கூட்டமைப்பு செத்தபாம்போ செல்லாக் காசோ அல்ல.
மக்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பு செத்த பாம்பாகவும், செல்லாக்காசாகவும் இருப்பதனால் இது எந்தக்காலத்திலும் பரந்துபட்ட மக்களின் பெருந்திரளான ஆதரவைப் பெறப்போவதில்லை. இதன் காரணத்தால் இது அமைப்பு ரீதியிலும் பலம் பெறப்போவதில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் சிங்களத்துடன் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு எந்தப்பலமும் கிடையாது. மேலும் பொருளாதார மையப்படுதலின் விளைவான பாசிசத்தின் வளர்ச்சி காரணமாக, உலகு தழுவிய ஒரு பொதுப்போக்கைச் சார்ந்து இலங்கையிலும் பிரதான ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் ஒற்றுமை மேலும் மேலும் நெருங்கி வருகின்றது.கொள்கைகள் ஏறத்தாழ ஒன்றே என்று ஆகிவிட்டன. இதனால் இங்கேயும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாது போய்விட்டன.
இந்த நிலையில் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பக்ச பாசிஸ்டுக்களின் ரசிய சீன சாய்வைக் கணக்கில் கொண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய விரிவாதிக்க அரசின் நலன்களுக்கும் சேவகம் செய்யும் தரகுப் பாத்திரத்தை ஆற்ற கூட்டமைப்பு விளைகின்றது.இவர்களின் நலன்களுக்கு சிங்களத்தைப் பணியவைப்பதற்கு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்க முயலுகின்றது. இதனால் உண்மையில் இந்த அதிகார பேரம் ஈழத்தமிழ் மக்களின் நலன் சம்பந்தப்பட்டது அல்ல.அமெரிக்க இந்திய விரிவாதிக்க அரசின் நலன் சம்பத்தப்பட்டதாகும்.இவ்வகையில் கூட்டமைப்பு உலக மறுபங்கீட்டு போட்டியில் ரசிய சீன அணிக்கெதிராக, அமெரிக்க இந்திய- ஏகாதிபத்திய அணிக்கு சேவகம் செய்ய முயல்கிறது.
இது ஒரு அபாயகரமான சமரச, சதிகாரப் பாதை.இது தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்ல.ஒட்டு மொத்த நாட்டையுமே அந்நியருக்கு காட்டிக்கொடுப்பதாகும். கூட்டமைப்பின் இத் தேச விரோத விதேசிய நடத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பழியும், இழிவும் தேடி பலவீனப் படுத்துவதாகும்.சிங்கள மக்களை மேலும் தமிமீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அந்நியப் படுத்துவதும் சிங்களத்தைப் பலப்படுத்துவதுமாகும்.
இதற்கான கோரிக்கையே அரசியல் அமைப்பின் 13வது சட்டத் திருத்தத்துக்கு அமைய அமைக்கப்பட்ட மாகாணசபை(கள்) ஆகும்.
இம்மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இந்தியாவின் பின்பலத்தில் அதிகார பேரம் நடத்தி அந்நிய சேவகம் செய்து பிழைக்க முயல்கின்றது கூட்டமைப்பு.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அமெரிக்காவுக்கும், இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அழைப்பு விடுவது அப்பட்டமான துரோகம் ஆகும்.மேலும் தமிழ் மக்களின் போராட்டத்தை 25 ஆண்டுகள் பின்னோக்கித்தள்ளி அதிகாரப்பரவலாக்க சீர்திருத்த வழியில் சீரழிப்பதாகும். கடந்த 25 ஆண்டுகால சிங்களப் பேரினவாதத்தின் வளர்ச்சியும், மாறியுள்ள சர்வதேச-பிராந்திய சூழ்நிலைமைகளும், புலிகளின் வீழ்ச்சியும் அதிகாரபேரத்தை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டன.
போலிச்சுதந்திரத்துக்குப் பிந்திய இந்த 64 ஆண்டுகால அரசியல் வரலாறு சொல்லுவதெல்லாம், சிங்களம் தனது அரசியல் அதிகாரத்தில் எந்தப்பங்கையும் ஈழதேசத்துக்கு வழங்கத் தயாராகவில்லை என்பதுதான். இதைச் சுற்றித்தான் இந்த 64 ஆண்டுகால வரலாறும் நகர்ந்திருக்கின்றது.
ஒற்றையாட்சி என்பது சிங்களத்தின் அரசியல் அதிகாரத்தின் ஏகபோகம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்நிலையில் ஒற்றையாட்சிக்குள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் `அரசியல் தீர்வு காண்பது` என்பது, கட்டாய இணைப்புக்குள் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திப்பது என்பது தமிழீழ தேசத்தின் இருப்பை படிப்படியாக இல்லாதொழிப்பதற்கான சதியே தவிர வேறெதுவுமல்ல.இது தேசிய இன அழிப்பும், தேசியப் படுகொலையும் ஆகும்.
இதனால் பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடிப்பது இன்றியமையாத ஜனநாயகக் கடமையாகும்.கூட்டமைப்பு, உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் இவையாவும் கூட வசதிக்கேற்ப `சுய நிர்ணய உரிமையை` ஒரு சொல் என்ற அளவில் பயன்படுத்துகின்றன. ஆனால் உள்ளடக்கத்தில் பிரிந்து செல்லும் உரிமை என்ற பொருளில் அல்ல மாறாக, ’சேர்ந்துவாழ  அதிகாரப் பகிர்வு’ என்ற பொருளிலேயே  ஆகும்.
ஆக வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றது.ஆனால் இந்தத் தடவை எழுதுவோர் அனைவரின் முகங்களிலும் நாம் தமிழரின் எதிரிகள் என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது!.கூட்டமைப்பு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைத் திட்டத்தை தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வாகக் கையில் எடுத்துள்ளது.காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் குறித்து சிங்களத்துடன் அதிகார பேரம் நடத்தும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ``அமெரிக்கவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!!` எனச் சமரசவாதிகள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, ஒபாமா ராஜபக்சவை யுத்தக் குற்றக் கூண்டிலிருந்து விடுவித்து விட்டார், இந்தியா மாகாணசபைத் தீர்வு வழங்கியுள்ளது! ஐ.நா யுத்தக் குற்றவாளியான சிங்களத்தின் இராணுவ அதிகாரியை தனது `உலக அமைதி காக்கும் நடவடிக்கைக்கு ஆலோசகனாக நியமித்துள்ளது! இவைதான் சமரசவாதிகள்அமெரிக்காவிடம் இருந்தும், இந்தியாவிடமிருந்தும், ஐ நா விடமிருந்தும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த நீதி! (நம்பிக்கை இழக்காத மயிலைக் காளைகள் மட்டும் நீதி கேட்டு நடந்தவண்ணமே இருகின்றார்கள்!)
1987 ஐ விட 2012 மாகாண சபை மேலானது என்று காட்ட இந்த நாடகத்தில் இணைத்துக்கொண்ட மேலதிக அங்கமே இந்த 13+ ஆகும்! (Extra Large!)
இன்று அமைப்பு ரீதியாக இம்முழக்கத்தை முன் வைப்பது கூட்டமைப்பாக இருந்தாலும், இச்சமரச தேசத்துரோக வழியில் நிற்பவர்கள் இவர்கள் மட்டுமல்ல.ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும்,தமிழ் நாட்டிலும் உள்ள சில சமூக சக்திகள்- வர்க்கங்கள் இவ்வழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான சமூகத் தூண்களாய் உளளன. புற முதுகில் பதுங்கி இருந்து விடுதலைப் புலிகளுக்கு கொள்ளி வைத்ததில் இக்கும்பலுக்கு பெரும் பங்குண்டு.கூட்டமைப்பு TNA, உலகத் தமிழர் பேரவை Global Tamil Forum, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamil Forum, நாடு கடந்த அரசாங்கம் Trans National Government of Tamil Eelam), அந்நிய தமிழ் NGO கோடரிக்காம்புகள்,  நெடுமாறன்- வை.கோ கும்பல், கத்தோலிக்க பாதிரிகள், இந்துப் பெருங் கோவில்களின் சொந்தக்காரச் செல்வந்தர்கள் ஆகிய வகையறாக்கள், ஒரு கொடியின் கீழ், ஒரே அமைப்பின் கீழ் திரளாவிட்டாலும், அவரவர் தளங்களில், அடிப்படையில் ஒரே நலனுக்காகவே செயற்படுகின்றனர். அது தரகு முதலாளித்துவ நலனும், தேசத் துரோக, தமிழின விரோத, சந்தர்ப்பவாத சமரசவாத வழியும் ஆகும்.
கூட்டமைப்பும் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முயல்கின்றது. ஏதோ EPRLFஉம், TELOவும் சமஸ்டிக் கட்சிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல, சமஸ்டிக்கட்சி தன்னை தாய்க் கட்சி என்று உரிமை கோருகின்றது. பிள்ளைக் கட்சிகளோடு கொடி,சின்னம்,பெயர் பற்றி விவாதித்து வருகின்றது.மாநாடு கூட்டத் திட்டமிடுகின்றது.அமைப்பை மேலும் விரிவாக்கிப் பலப்படுத்த சம்பந்தன் பிள்ளையான் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இவையனைத்தும் ஈழத்தமிழரின் பெயரால் அமெரிக்க இந்திய ஆதரவு அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட்டு வருவதையே காட்டுகின்றது.இதை நுகர்ந்து பிடித்துவிட்ட புலம்பெயர் மேட்டுக்குடி பொன்னாடை போர்த்தத் தொடங்கிவிட்டது!
இதே நேரத்தில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியை நீக்க முயற்சிகள் நடப்பது தற்செயலானது
அல்ல.ஆயுதங்களை மெளனித்துவிட்ட விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செயற்படுவதை யாரும் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. இதை ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

போலிச் சுதந்திரத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகால பாராளுமன்ற பாதையிலும், அடுத்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டப் பாதையிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிரிகளை நன்கு அறிந்துள்ளனர்.சிங்களத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியும்.அமெரிக்கா, மற்றும் இதர ஏகாதிபத்தியவாதிகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும்.இலங்கையில் கால்பதித்துவரும், ஏகாதிபத்திய நோக்கில் வளர்ந்து வரும் சீன, ரசிய வல்லரசுகளையும் மக்கள் அறிவர்.இந்திய விரிவாதிக்க அரசையும் அதன் கபட வேடத்தையும் மக்கள் நன்கறிவர்.

மக்களுக்குத் தேவையெல்லாம் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான சரியான, புரட்சிகரமான தத்துவார்த்த, அரசியல் ஸ்தாபன வழிகாட்டல் மட்டும் தான்.இந்தப் பொறி மக்களைப் பற்றிக்கொண்டால் மீண்டும் ஒரு பெருங்காட்டுத் தீ மூளும்.

இதைத் தடுப்பதுதான் அனைத்து சமரசவாதிகளின் நோக்கம்.இவர்கள் எங்கிருந்தாலும் இந்த ஒரே குறிக்கோளுக்காகவே பாடுபடுகின்றனர். இதனால் இச்சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தாமல் புரட்சிகர வெகுஜன மக்கள் திரளை விடுதலைப் புரட்சியின் பக்கம் வென்றெடுக்க முடியாது. அதிகாரப் பகிர்வு வழியை ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் முறியடிக்காமல், பிரிவினைக் கோரிக்கையின் மீது மீண்டும் ஒரு முற்போக்கு தேச விடுதலை இயக்கத்தைக் கட்டியமைக்க முடியாது. இதை அரசியல் ரீதியில் சாதிக்காமல் ஏகாதிபத்தியவாதிகளோடும், இந்திய விரிவாதிக்க அரசோடும், சிங்களத்தோடும் தீர்மானகரமான முறிவை ஏற்படுத்த முடியாது.இத்தகைய ஒரு முறிவு ஏற்படாமல் ஈழவிடுதலைப் புரட்சி பரந்துபட்ட மக்களைத் தழுவுவது என்பது சாத்தியமில்லை.எனவே கூட்டமைப்பின் அணியில் இணையும் அனைத்து சமரசவாத தமிழினத் துரோகிகளின் செல்வாக்கை தடுத்து நிறுத்தி, புரட்சிகர ஈழ மக்களை, எதிரிகளுக்கெதிராக விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிறுத்த பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.

* அன்ரன் பாலசிங்கத்தின் ‘அகசுய நிர்ணய உரிமை’ அதிகாரப் பகிர்வே!

*அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் விடுதலை அல்ல அடிமைத்தனமே!

* நமது விடுதலைக் கோரிக்கை பிரிந்து செல்லும் உரிமையே!

* மாகாணசபை, இடைக்கால அதிகார சபை அனைத்தும் அடிமைத்தீர்வே!

* ஜனநாயகத் தீர்வுக்கு வழி, தமிழ்பேசும் மக்களிடையேயான சர்வஜன வாக்கெடுப்பே!

* ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவும்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவும் போராடுவோம்!

* அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க அரசுகளின் அடியாளான கூட்டமைப்பைத் தனிமைப்படுத்துவோம்!

* தமிழ்பேசும் மக்கள் வேண்டும் அரசியல் தீர்வு, என்ன என்பதை அறிய கூட்டமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினால் ஒழிய,
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்போம்!

* பிரிந்து செல்லும் உரிமையை உயர்த்திப்பிடித்து முற்போக்கு தேசவிடுதலை அமைப்பைக் கட்டியமைப்போம்!

* மலையக இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புரட்சியில் ஐக்கியப் படுத்துவோம்!

* மலையக, இஸ்லாமியத் தமிழர்கள், மற்றும் சிங்கள மக்கள் மீதான சிங்களத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்,
அவர்களின் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* சிங்கள ஜனநாயக சக்திகளை ஈழத் தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கக் கோருவோம்!

* உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!
                                            






புதிய ஈழப் புரட்சியாளர்கள்  
ஜனவரி2012

Thursday, 12 January 2012

On LLRC Report: படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய ஒரு பரிசீலனை.

சிங்களத்தை நன்கறிந்த ஈழத்தமிழ் மக்களுக்கும், புரட்சிகர ஜனநாயகச் சக்திகளுக்கும், இந்தப் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான
ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கை ஒரு கண்துடைப்பு என்பதை கட்டுரை எழுதி விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

போர்க்குற்றம் இழைத்த சிங்களத்தை தண்டிக்க வேண்டுமென உலக மக்கள் கோரியபோது, ஐநா சபை சிங்களத்தையே அவ்வாறு ஒரு விசாரணையை நடத்துமாறு கோரியது. அமெரிக்காவும் அதையே கோரியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் அதையே கோரினர். ஆக ஐநா சபையின் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் வேண்டுகோளுக்கமைய சிங்களம் படிப்பினை மற்றும் பரஸ்பர இணக்கத்துக்கான ஆணைக்குழு (Lession Learnt and Reconciliation Commission- LLRC) வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை போர்க்குற்றம் தொடர்பில் இரு அடிப்படைக் கோட்பாடுகளில் ஆதாரப்பட்டு நிற்கிறது.

1. இந்த யுத்தம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான மனித நேய நடவடிக்கை.

2. மனித நேய நடவடிக்கையில் நாம் பயங்கரவாதிகளுடன் போரிட்டோம். பயங்கரவாதிகளான புலிகள் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அரசு
சாராத அங்கத்தவர்களாவர். இதனால் அரசுகளுக்கு எதிராக நடக்கும் யுத்தங்களில் கடைப்பிடிக்க வகுக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை (International Humanitarion Laws) இத்தைகைய போர்களுக்கு பொருத்தக் கூடாது.

இந்தக் கோட்பாடுகளின் மூலகர்த்தாக்கள் சிங்களமோ அல்லது பக்ச பாசிஸ்டுக்களோ அல்ல. மாறாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ், சென்னி, ரம்ஸ்பீல்ட், பாசிஸ்ட்டுக்கள் வகுத்தளித்து கடைப்பிடித்த கோட்பாடுகள் தான் இவை. ஆப்கானிஸ்தானிலும். ஈராக்கிலும் பயன்படுத்தப்பட்டவைதான் இவை. பயங்கரவாதிகளை சர்வதேச மனிதநேயச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தக் கூடாது என்ற அடிப்படையில் தான் நாடுகடந்த வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் 10 ஆண்டு நிறைவு கண்ட, கியூபா, குவாண்டனோமாவில் அமைக்கப்பட்ட டெல்டா 4 என்கிற வதை முகாமாகும். தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூடக் காற்றில் பறக்கவிட்டு ஒபாமா அந்த வதை முகாமைக் கூட மூடவில்லை.

LLRC அறிக்கைக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாதென ஐ.நா கருதுவதாக இன்னசிற்றி பிரஷ் (Innercity Press),கருத்து வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, பக்‌ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான போர்க்குற்ற இயக்கத்தை ஒபாமாவையும், ஐநாவையும் சார்ந்து நின்று நடத்தக் கூடாது, மாறாக உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று நடத்த வேண்டுமென நாம் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றோம். இதற்கு மாறாக ஒபாமாவினதும் ஏகாதிபத்தியவாதிகளினதும் `கவனத்தை ஈர்க்க` ஐநாவுக்கு நீதிப்பயணம் நடத்தியவர்கள், நடத்துகிறவர்கள் இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எந்த ஒபாமாவினதும் ஐநாவினதும் கோட்பாடுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதுவோ அவர்களிடம் நீதிகேட்கிற போலிப் போராட்டங்களின் போக்கிரித் தனமும் அப்பலமாகிவிட்டது. இவர்களை நம்பி இவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்களின் கதை மண்குதிரையை நம்பி கடற்பயணம் செய்த கதையாகிவிட்டது.

இவ்வருட மாவீரர் தினத்தன்று வானொலி நிலையமொன்றுக்கு கருத்துரை வழங்கிய கவிஞர் திரு காசி ஆனந்தன் அண்ணன் அவர்கள் இலங்கையில்
ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை, போர்க்குற்றமாக மட்டும் குறுக்கக் கூடாது. அது ஒரு தேசிய படுகொலையாகும் எனப் பிரகடனம் செய்தார். இதை
எதிர்த்து தமிழீழ மக்கள் போராடுவதற்கு இலங்கையிலுள்ள நிலைமைகள் தடையாகவும் அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. எனினும் மக்கள்
போராடுவார்கள், தமிழீழம் மலர்ந்தே தீரும்……… அதற்கு தமிழ்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

அதே வானொலி நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய வை.கோ தமிழீழத்தில் இன்று போராடக் கூடிய நிலைமையில் தமிழ்மக்கள் இல்லை என்றும்
அவர்களுக்காக தமிழ்நாட்டு மக்களும், புலமபெயர் தமிழர்களுமே போராட வேண்டுமென்றும் கூறினார். மேலும் போர்க்குற்ற விசாரணை கோரி
அமெரிக்காவை நோக்கியும், ஐநாவை நோக்கியும் நடக்கும் போராட்டங்கள் ஊக்கம் பெற்று வருவதாகவும் அப்பாதையில் நாம் தொடர்ந்தும் முன்னேற
வேண்டுமென்றும் `அறைகூவல்` விட்டார்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் காசி அண்ணனின் கூற்றை சரியென்றும், வைகோவின் கூற்றைப் பிழையென்றும் நிரூபிக்கின்றன.

`தமிழீழத்தில் தமிழ்மக்கள் போராடும் நிலையில் இல்லை` என்பது கோட்பாட்டு அடிப்படையில் இருவகையில் தவறானதாகும். ஒன்று
அடக்குமுறையை எப்போதும் மக்கள் எதிர்ப்பார்கள். ஸ்பாட்டகஸ் தலைமையில் அடிமைகள் கூடக் கலகம் செய்திருக்கிறார்கள். இரண்டாவது
தமிழ்மக்களின் விடுதலைகாக தமிழீழ மக்கள் தான் போராட வேண்டும். தமிழ்நாட்டுமக்களோ புலம் பெயர் தமிழர்களோ போராடமுடியாது. இவ்வாறான ஒரு தப்பெண்ணத்தை தமிழீழ மக்கள் மத்தியில் வளர்த்து புலம் பெயர் தமிழர்களை நோக்கி அவர்களை கையேந்தி நிற்க வைக்கவும் கூடாது.

`ஐநாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வு வழங்கு!` என முனகும் அத்தனை சமரசவாதிகளும் ஒரு சேர ஈழத்தில் தமிழ்மக்கள் போராடக்கூடிய நிலையில் இல்லை என்று ஒப்புவித்து வருகின்றனர். இதற்கான காரணங்களில் ஒன்று ஈழத்தமிழர்களின் போர்க்குணத்தை மழுங்கடிப்பது. இரண்டு ஈழத்தமிழர்கள் தமக்காக தாமே போராடினால் தமது சொந்த நலன்களை உத்தரவாதம் செய்யவல்ல மண்ணின் விடுதலைக்கான முழக்கங்களை முன்வைத்துப் போராடுவார்கள். இதற்குப்பதில் போராட்டங்களை சமரசவாதிகள் தத்தெடுத்துக் கொண்டால் அவற்றை ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்கவாதிகளினதும் நலன்களுக்கமைந்த சீர்திருத்த வழியில் சீரழித்து விடலாம் என்பதே இவர்களது திட்டமாகும்.

கூட்டமைப்பு கடந்த சிலமாதங்கள் வரை போர்க்குற்றம் குறித்து வாயே திறக்கவில்லை. போர்க்குற்றம் குறித்து பேசுவதில்லை என ராஜ பக்‌சவுடன் உடன்பாடுகண்டிருப்பதாகக் கூட சில புலம் பெயர்தமிழர் அமைப்புக்களால் குற்றச்சாட்டவும்பட்டது. `காணிநிலம் வேண்டும் –காக்க பொலிஸ் அதிகாரம் வேண்டும்` என பராக்கிரமன் ராஜபக்‌சவிடம் வேண்டிய அதிகாரப் பிச்சை கிடைக்காமல் போக யுத்தக் குற்றப்பிரச்சனையை ஒரு பேரப்பொருளாக   இப்போது பயன்படுத்துகிறது. அப்போதும்கூட அயோக்கியத்தனமாக, இருதரப்பும் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கும் அனைத்துலக விசாரனை தேவை எனக் கூறுகிறது. இவ்வாறு இருதரப்பு மீதும் விசாரனை நடத்தக் கோருவது கூட்டமைப்பு மட்டுமல்ல. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர்நாட்டுப் பேரவைகளை உள்ளடக்கிய உலகத் தமிழ்ப் பேரவை ஆகியவையும் தான்.

இதுவேதான் சனல் 4, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளினதும் நிலைப்பாடாகும்.


தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான பிரிவினை இயக்கத்தை ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்திய விரிவாதிக்கவாதிகளுக்கும் விற்றுப்பிழைக்கும் இச்சமரசக் கும்பலுக்கு, மீண்டும் புலிகள் எழுந்து வந்து விடுவார்களோ என்ற பயபீதி இன்னமும் உள்ளது. அவ்வாறு வந்தால் அவர்களைக் கூண்டில் அடைக்கவே புலிகள் மீது யுத்தக் குற்ற விசாரனை வேண்டுமென அரசியல் பிரச்சாரத் தயாரிப்பு செய்து வருகிறது.

மேலும் விடுதலைப் புலிகள் மீது யுத்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவது அவர்கள் மீதான தடையை விதிப்பதற்கு வலுவான காரணமாக அமையும்.
எனவே விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்து, அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டால் அது தமது சமரசச்
சவாரியை தமிழ்மக்கள் மீது நடாத்த வசதியாக இருக்கும் எனவும் இக்கும்பல் கணக்குப் போடுகிறது.

எமது சொந்தத் தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கு நமது கடந்த காலத்தை சுயவிமர்சன நோக்கில் பரிசீலனை செய்ய வேண்டும். இது எமது மக்களின் பெயரால் எமது மண்ணின் பெயரால் எமது மாவீரர்களின் பெயரால் நாம் ஏற்றுக் கொள்கிற கடமையாகும். அந்தப் பொறுப்பையோ
பணியையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. ஆனால் இந்த சுயவிமர்சன பரிசீலனையும், எம்மை ஏகாதிபத்தியவாதிகளின்
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதும் ஒன்றல்ல.

போலிச்சுதந்திரமடைந்த காலமுதல் 1977 வரையான முப்பது ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமை தரகு முதலாளித்துவ சமரசவாத
அரசியல் தலைமையாக இருந்தது. அவர்கள் பாராளுமன்ற பாதையைக் கடைப்பிடித்தனர். தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் சிங்களப் பேரினவாதக் கட்சிகளோடு கூட்டமைத்து, கூட்டரசாங்கம் அமைத்து உறவுக்குக் கைகொடுக்கத் தயங்கவில்லை. அகிம்சையை தமது யுத்த தந்திரப் பாதையாகக் கொண்டிருந்தனர். காந்தி, சமஸ்டி இயக்கத்துக்கு ஆதர்ஸ புருசனாக விளங்கினார். எஸ். ஜே.வி. செல்வநாயகம் ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சிதான் இன்றைய கூட்டமைப்பும், நாடுகடந்த அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், தமிழ்க் கத்தோலிக்கப் பாதிரிகளும் ஆவர்.

இந்த அளவுக்கு ஆழ வேரூன்றிய ஏகாதிபத்திய சார்பு சமரசவாத, சந்தர்ப்பவாத அகிம்சா இயக்கம் சமஸ்டி இயக்கமாகும். இதனால் இந்த இயக்கத்தின் வாரிசாக தளபதி பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஆயுதப் போராட்டமோ தோன்றியிருக்க முடியாது.கல்லில் இருந்து குஞ்சு பொரிக்காது!

தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஆயுதப் போராட்டத்தினதும் தோற்றுவாய் தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அரச பயங்கரவாத அடக்குமுறையே ஆகும். எனவே ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் விளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டியது சிங்களமே தவிர தமிழ் மக்களோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்ல.

காலனியாதிக்க ஆட்சியில் சிங்களத்துடன் எம்மைக் கட்டாயமாக இணைத்து, போலிச் சுதந்திரம் முதல் முள்ளிவாய்க்கால் வரை சிங்களத்தைப் போசித்து வளர்த்து, முள்ளிவாய்காலுக்குப் பின்னாலும் தமிழீழத் தேசத்தைச் சூறையாட வெறிகொண்டு அலையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், இந்தியவிரிவாதிக்கவாதிகளுக்கும் எம்மைக் குற்றஞ்சாட்டி தமது சுண்டுவிரலை நீட்ட எந்த யோக்கியதையும் கிடையாது. உரிமையும் தகுதியும் கூடக் கிடையாது.

எனவே இருதரப்பிற்கும் யுத்தக்குற்ற விசாரனை என்கின்றவர்கள் சிங்களத்தின் யுத்தக் குற்றங்களை ஒருவழியில் நியாயம் செய்பவர்களே ஆவர். ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க விசுவாசத்தை இந்தப் பரந்து விரிந்த போலி ஜனநாயகத்தால் மூடிமறைத்து விடலாமென இந்த மூடர்கள் இனிமேலும் நம்பக்கூடாது.

இந்த LLRC அறிக்கையில் ஆங்காங்கே சில நட்சத்திரங்கள் மின்னுவதாக கண்டறிந்த சிந்தனைச் சுரங்கங்களில் NGOக்காரர்கள் முக்கியமானவர்களாவர். உள்ளூர் அரசாங்கங்களைச் சாராமல் ஏகாதிபத்திய அரசுகளையும் ஐநா சபையையும் சார்ந்து அவர்களது நிதியிலும்
கொள்கைத்திட்டத்திலும் இயங்கும் விதேசிய ஊடுருவல் நிறுவனங்களே இந்த NGOக்கள் ஆகும். நக்கித்தின்னும் பிழைப்புக்கு நன்றிக்கடனாக
ஏகாதிபத்தியவாதிகளும் ஐநாவும் அங்கீகரித்த LLRC அறிக்கையில் சொக்கி மகிழ இக்கும்பல் விழைவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இவர்களோடு
கூடவே ரொட்ஸ்கிய திரிபுவாதிகளும் சேர்ந்து கொண்டது தற்செயலானது அல்ல. ஐரோப்பிய நாடொன்றின் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட ஒரு பிரகிருதி தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிக்கையை தமிழ் மொழியாக்கம் செய்து பரவலாக விநியோகிக்க
வேண்டுமெனவேறு உளறிக் கொட்டியது.

இவர்களது கோரிக்கை எல்லாம் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற சிங்களத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதாகும்.

சிங்களம் இப்பரிந்துரைகளை நிறைவேற்றுமா என்பதற்கு முன்னால் இந்தப் பரிந்துரைகளை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்

LLRC recommendations
1. Responding to the Channel 4 programmes
2. Armed groups in operation
3. Heavy militarization in North – East
4. Land disputes and alienation
5. Devolution of powers.

முதலாவதாக இப்பரிந்துரைகள் இலங்கையில் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டவில்லை. மாறாக ஈழத்தமிழர்களை இலங்கை மக்களின் ஒரு சமூகப் பிரிவினராகக் காண்கிறது. இப்பரிந்துரைகள் அப்பிரிவினரின் அதிருப்தியின் தொகுப்பாகும். இந்த அதிருப்திகளைப் போக்குவதன் மூலம் இனப்பகைமைக்கு முடிவு கட்டி பரஸ்பர இணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. ஒரு வேளை இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டாலும் கூட அது இலங்கையின் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதாக அமையாது. ஏனெனில் தமிழ்த்தேசிய இனப்பிரச்சனை என்பது சுயநிர்ணய உரிமை சம்பந்தமான பிரச்சனையாகும். இதன் மூலம் இந்த ஆணைக்குழுவில் நம்பிக்கை வைத்து தமது பிரச்சனைகளை முறையிட்ட மக்களுக்கு இந்த ஆணைக்குழு துரோகம் இழைத்துள்ளது.

இறுதியாக இப்பரிந்துரைகளாவது நடைமுறைக்கு வருமா என்று கேட்டால் அதுவும் கூட நடைபெறாது. இராணுவ மயமாக்கல் என்பது தேசியப்
பாதுகாப்புக்கான அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவதற்கானது என கோதபாய ராஜபக்‌ச கூறுகிறார். புலிகளும், ஜே.வி.பி இல் இருந்து பிரிந்த குழுவினரும் இணைந்து ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு திட்டமிடுவதாக உயர் கல்வி அமைச்சர் கூறுகின்றார்..ஆக இந்தப் பரிந்துரை தேசியப் பாதுகாப்புக்கு எதிரானதாகும்!!. நிலவிநியோகம் அதிகாரப்பரவலாக்கம் என்பதை சிங்களம் அடியோடு நிராகரித்து விட்டது. LLRC அறிக்கையின் அடிப்படையில் சனல் 4 ஆவணத்தின் போர்க்குற்றச்சாட்டு, கோட்பாட்டு ரீதியில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விடப்பட்டதாகும். மென்மேலும் இராணுவ மயமாகிவரும் சிங்களத்தின் அங்கீகரிக்கப்படாத ஒரு அதிகாரவடிவமாக துணை இராணுவக் குழுக்கள் இருந்தே தீரும். இதற்கு மேல் பரிந்துரைகளை
நிறைவேற்றுவதற்கு என்ன இருக்கிறது.

எனவே `ஐ.நாவே நீதி வழங்கு! இந்தியாவே தீர்வுவழங்கு!!` என முனகும் சமரசவாதிகள் அரைமனதோடும், `இலங்கைப் பற்றுமிக்க`
`அதிகாரப்பரவலாக்க` சந்தர்ப்பவாத சமரசவாதிகள், கலைப்புவாதிகள் முழுமனதோடும் LLRC பரிந்துரைகளை நிறைவேற்று எனப் பிரச்சாரம் செய்து ஜனநாயக இயக்கத்தை திசைதிருப்பத் தொடங்கிவிட்டனர்.

மாதகலிலும், கீரிமலையிலும், யாழ்பல்கலைக்கழகத்திலும், வல்வெட்டித்துறையிலும், மலையகத்திலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், காத்தான்குடியிலும் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும், மாணவர்களும், மலையகத் தொழிலாளர்களும் முஸ்லீம் மக்களும் நடத்திய போராட்டங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை தீர்வுகாணப்படாமல் இருப்பதாகும்.தமிழ்த்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை - பரஸ்பர இணக்கத்துக்கான ஏற்பாட்டை - ஆணைக்குழுக்களைக் கொண்டு தீர்மானிக்க முடியாது.வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களிடையேயான சர்வ ஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்க முடியும்.தீர்மானிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நீதியான ஜனநாயகக் கோரிக்கைக்காக சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்துப்
போராட கூட்டமைப்போ, சமூக தேசியவெறியரான ஜே.வி.பி கட்சியினரோ, கலைப்புவாத ரொட்ஸ்கிய குழுக்களோ, புலம் பெயர் பேரவைகளோ தயாராக இல்லை.

எனவே சிங்களத்தையும், இந்திய விரிவாதிக்க அரசையும், ஏகாதிபத்தியவாதிகளையும் எதிர்த்து முற்போக்கு தமிழீழ தேசவிடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்ப பின்வரும் முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு அறைகூவுகின்றோம்.

* ஏகாதிபத்தியவாதிகளே, உலகமறுபங்கீட்டில் இலங்கையைப் பங்குபோட ஈழத்தமிழரைப் பலிக்கடா ஆக்காதீர்!


* உலக முதலாளித்துவ பொதுப் பொருளாதார மந்தத்துக்கு தீர்வுகாண தமிழீழ தேசத்தை சூறையாடாதீர்!


* ஐ.நா.சபையே, பொதுநலவாய நாடுகள் மன்றமே யுத்தக் குற்ற அரசு சிறீலங்காவின் உறுப்புரிமையை ரத்துச் செய்!


* யுத்தக் குற்றப் பங்காளி இந்திய விரிவாதிக்க அரசே, ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!


* சிங்களமே, தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆணைக்குழுக்கள், தெரிவுக்குழுக்கள் அமைத்து வழக்கமாக ஆடும் நாடகத்தை நிறுத்து!


* வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.
ஜனவரி 2012

Wednesday, 21 December 2011

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` போர்க்குற்ற ஆவணப்படம் ஒரு மீளாய்வு

“ஸ்ரீலங்கா கொலைக்களம்``

`ஏகாதிபத்தியமே நீதி வழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு` என முனகி இயங்கி வரும் ஈழத் தமிழர் மத்தியிலான ஏகாதிபத்திய தாச இந்திய விரிவாதிக்க பாச சமரசவாத இயக்கம் ஆங்கிலேய Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` என்ற ஆவணத் திரைப்படத்தை வரைமுறை தாண்டி கொண்டாடி மகிழ்கிறது.


“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` இலங்கை அரசின் யுத்தக் குற்றங்களை சர்வதேச தரத்துக்கு, சட்டபூர்வத் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட ஆவணம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இவ் ஆவணத்தின் அரசியல் மட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இவ் ஆவணத்தின் எல்லைகளுக்கு அப்பால் சிங்களத்தை எதிர்த்த ஜனநாயக அரசியல் இயக்கத்தை எம்மால் கட்டமுடியாது போய்விடும்.

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` பின்வரும் கோட்பாடுகளின் மீது கட்டியமைக்கப்பட்டுள்ளது. அவையாவன,

1. யுத்தங்களை சட்டபூர்வமானவை சட்ட விரோதமானவை என வகைப்படுத்துவது.

2. சட்டபூர்வ யுத்தங்களுக்கு அல்லது யுத்தங்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்குவதற்கு ஜெனிவா உடன்படிக்கையை ஆதாரமாக கொள்வது.

இந்த இரண்டு அடிப்படைகளில் இருந்தும்

• நிரபராதியான மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்வது,

• மருத்துவ நிறுவனங்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது,

• பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பது,

• சரணடைகிற மக்களை துன்புறுத்துவது, படுகொலை செய்வது,

• யுத்தக் கைதிகளை துன்புறுத்துவது, படுகொலை செய்வது,

• திட்டமிட்டு உணவுப்பற்றாக் குறையை ஏற்படுத்துவது குடிநீர் நிலைகளுக்கு விசம் கலப்பது. தானியச் சேனைகள் மற்றும் களஞ்சியங்களை அழிப்பது,

• பாலகர்களை படையில் சேர்ப்பது மற்\றும் படுகொலை செய்வது,

• நச்சுவாயு உள்ளிட்ட சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவிப்பது ஆகியவை பிரதானமானவை ஆகும்.

“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` இவற்றில் சிலவற்றை இலங்கை இராணுவம் மீறியுள்ளதாக பல்வேறு மறுக்கப்பட இயலாத ஆதாரங்களை வைத்து நிறுவியுள்ளது. இதற்காக பல்வேறு மூலங்களையும் வளங்களையும் பயன்படுத்தியுள்ளது. இவற்றில் ஒன்று சரத் பொன்சேகாவின் அணியைச் சார்ந்து களத்தில் நின்ற இராணுவச் சிப்பாய்கள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.

இந்த வரையறைக்குள் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` ஒரு வலுவான போர்க்குற்ற ஆதாரமாக இருக்கிறது. இதனால் வரவேற்கத்தக்கது. ஆதரிக்கத்தக்கது. பார்த்துப் பரப்பத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்கமுடியாது.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டது முள்ளிவாய்க்காலில் தொடங்கவில்லை. மாறாக ஈழவிடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக மாறிய ஜூலை 1983 இற்கு முன்னாலும், பின்னாலும் இத்தகைய இராணுவக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையில் யுத்தக் குற்றம் இழைத்தது வெறுமனே சிங்களம் மட்டுமல்ல இந்திய விரிவாதிக்க அரசும் கூடத்தான்.

யுத்தங்களை சட்டபூர்வமான யுத்தம் சட்ட விரோதமான யுத்தம் எனப் பாகுபடுத்தக்கூடாது. போரிடும் வர்க்கங்களின் நலன்களின் அடிப்படையில் நீதியானதா?, அநீதியானதா? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் வகைப்படுத்த வேண்டும். பொதுவாக நீதியான யுத்தங்கள் எல்லாம் ஆளும் வர்க்கங்களுக்கு சட்டவிரோத யுத்தங்களாகும். இந்தச் சட்டவிரோதிகளே பயங்கரவாதிகள் ஆவர்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு. ஏகாதிபத்திய உலகத்தில் தடை செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்சிக் கொடியை ஏந்துவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் பிரச்சார இயக்கம் நடத்துவது, விடுதலை யுத்தத்துக்கு நிதி திரட்டுவது சட்டவிரோத நடவடிக்கைகளாக பிரகடனம் செய்யப்பட்டன. ’

 சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தான் கே பத்மநாதன் விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத பரிவர்த்தனை பொறுப்பாளர் பதவி வகித்த போது இன்ரபோல் என்ற சர்வதேச பொலிஸின் தேடுதல் வேட்டைக்கு இலக்காகினார்.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்றும் போர்க் குற்றம் இழைத்தவர்கள் என்றும் சரிநிகர் சமானமாக குற்றம் சாட்டுகிறது இதனால் இந்த ஆவணத்தின் தர்க்கத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் மீதும் போர்க்குற்றம் சுமத்த முடியும். மேலும் இவ் ஆவணம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் மக்கள் இயக்கத்துக்கு எதிராகவும் இருக்கிறது.

புதிய சூழ்நிலை பற்றிய மதிப்பீடுகளினதும், கடந்த காலத் தவறுகள் குறித்த படிப்பினை மற்றும் சுயவிமர்சனத்துடனும் விடுதலைப் புலிகள் மீளத் தங்களை தமிழீழ விடுதலைக்காகப் போராடும், முற்போக்கு ஜனநாயக தேசிய விடுதலை அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு இத்தடையை நீக்கப் போராடுவது நமது ஜனநாயகக் கடமையாகும். மேலும் வரலாற்றின் அவசியமும் ஆகும்.

இத்தகைய குறிப்பான கடமைகளும் அதன்பாற்பட்ட முழக்கங்களும் இல்லாமல் வெறுமனே “விழ விழ எழுவோம்” என்பது வெறும் வீர வசனம் பேசுவதே ஆகும். நாம் கட்டப் பொம்மன் நாடகம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. வீழ்ந்த தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான காரண காரியங்களை கண்டறிந்தாக வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் தம் சொந்தத் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக போராடும் அடிப்படை அரசியல் ஜனநாயக உரிமையை எந்தச் சட்டங்கள் மறுத்து பயங்கரவாதம் எனப் பெயர் சூட்டி பழிவாங்கி படுகொலை செய்தனவோ அதே சட்டத்தின் வரம்புகளுக்குள் நின்று “விழ விழ எழுவோம்” என்று விழல்க் கதை பேசுவது அரசியல் ரீதியில் அரைவேக்காட்டுத் தனத்தையும் தாண்டிய முழு முட்டாள்த்தனமாகும்.

முள்ளிவாய்க்காலைத் தனிக்களமுனையாகக் கொண்டு பிரச்சனையை ஆராய முடியாது. ஆராயவும் கூடாது. தமிழ் தேசிய இனத்தின் மீதான வரலாற்று ரீதியான வன்முறை ஒடுக்குமுறை இல்லாமல் முள்ளிவாய்க்கால் திடீரென முளைக்கவில்லை. இந்த வரலாற்றுப் பின்னணியை “ஸ்ரீலங்கா கொலைக்களம்`` திட்டமிட்டு தவிர்த்திருக்கிறது. காரணங்கள் வருமாறு.

1. இலங்கையில் ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறை ஆங்கிலேய காலனியாதிக்கம் வகுத்த கட்டாய இணைப்புத் திட்டத்தில் ஆழ வேரூன்றி உள்ளது.

இந்த ஏகாதிபத்திய காலனிய, நவீன காலனிய தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளை பரந்துபட்ட மக்களுக்குப் புரிய வைப்பது, இங்கிலாந்து ஏகாதிபத்திய நலன் காக்கும் Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் வர்க்க குணாம்சத்துக்கு எதிரானது

2. இன ஒடுக்குமுறையின் அரசியல் வரலாற்றை விளக்கிக் கூறினால் அது விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகள் என்று ஆக்கிவிடும். இதற்குப் பிறகு அவர்களைப் பயங்கரவாதிகள் என்றோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்றோ கூறமுடியாது.

3. வரலாற்று ரீதியாக இந்த விவகாரத்தை நோக்கினால் சிங்களம் ஈழமக்கள் மீது போர்க்குற்றம் இழைத்த எண்ணற்றப் போர்க்களங்களும் சம்பவங்களும் உள்ளன. சிங்களம் மட்டுமல்ல இந்திய விரிவாதிக்க அரசும் மூன்று தடவைகள் (1972, 1987 இல் நேரடியாகவும், 2008 இல் புறமுதுகில் பதுங்கியிருந்து நயவஞ்சகமாகவும்) இராணுவத் தலையீடு நடத்திப் போர்க்குற்றம் இழைத்துள்ளது. இதனாலும் அந்த வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

4. பொதுநலவாய நாடுகளில் ஒரு உறுப்பு நாடாக இருந்து மேன்மைதங்கிய மகாராணியாரின் முடியை மிஞ்சி கொடிபிடிக்க எண்ணும் ராஜ பக்சவை  தட்டியடக்குவதற்கு மேல் Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வேறெந்த அக்கறையும் கிடையாது.

முள்ளிவாய்க்காலுக்கு முந்திய போர்க்களங்களில் எல்லாம் சிங்களத்துக்கு ஆயுதம் விற்றவர்களில் இங்கிலாந்து ஒரு முக்கிய நாடாகும்.அப்போது வடக்குக் கிழக்கில் வாழ்ந்தவர்கள் யார்? சீனர்களா? அப்போதும் இந்தத் துப்பாக்கிகள் குறிபார்த்தது தமிழர்களைத்தானே; அப்போது எங்கே போனது மனித உரிமை? போர் நியாயம்? சட்டவாதம்?

இங்கிலாந்தில் சிங்களத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது Channel 4 தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமல்ல; The Financial Times, The Economist, The Times போன்ற உலகப் பிற்போக்கின் கொத்தளங்களும் கூடத்தான்! இதன் ஒரு அங்கமாக தமது ஆதிக்க நலனில் இருந்து இராஜ பக்ஷவை அம்பலப்படுத்தியிருக்கும் Channel 4 ஆவணம் தானே எழுப்பும் அடிப்படையான கேள்வியை திசைதிருப்பி குறுக்கித் தவிர்த்துள்ளது.

இந்த ஆவணத்தில் இருந்து எழுகிற தர்க்க ரீதியான கேள்வி மனித உரிமையும், சட்டவாதமும், யுத்தக் குற்றமும் அல்ல. மாறாக அடிப்படையானதும் மையமானதுமான கேள்வி இத்தகைய ஒரு அரசு முறையின் கீழ் ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியுமா என்பதே ஆகும். இந்த இனப்படுகொலை ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையை நியாயம் செய்கிறதா இல்லையா என்பதே ஆகும். இந்த அடிப்படையான அரசியல் ஜனநாயகக் கேள்வி எழுப்பபடவில்லையானால் யுத்தக் குற்ற இயக்கம் ஏகாதிபத்தியவாதிகள் தமது முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்கும் பொதுநலவாய நாடு ஒன்றின் சுயாதிபத்தியம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் பயன்பட்டு வெறும் பழிவாங்கும் வெஞ்சினத்தை வெளிக்காட்டிய சீர்திருத்த இயக்கமாக சீரழிந்துவிடும்.

இந்த அடிப்படையான கேள்வியை Channel 4 தொலைக்காட்சி நிறுவனம் எழுப்பாததற்கு முக்கிய காரணங்கள் உண்பாடு. ஒன்று ஈழத்தமிழர்களின் பிரிவினை கோரிக்கை ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக இருப்பது. இரண்டு இந்த அரசியல் நியாயத்தை ஏற்றுக்கொண்டால் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகி விடுவார்கள். இதற்குப் பின்னால் அவர்களுக்குச் சூட்டிய பயங்கரவாதப் பட்டம் பொய்யாகிவி,டும்.

யுத்தங்களை சட்டபூர்வமானவை, சட்டவிரோதமானவை என வகைப்படுத்தும் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் ஒக்ரோபர் 24, 1945 முதல் இன்று வரையான 66 ஆண்டுகள் ஐநா (Uniited Nations- UN) நடத்திக் கொண்டிருக்கும் அனைத்துக் குற்றங்களும் சட்டபூர்வமானதாக மாறிவிடும். இஸ்ரேலின் இருப்பு நியாயமாகிவிடும்! பாலஸ்தீன படுகொலை சட்டபூர்வமாகிவிடும்!!

காலனி ஆதிக்கம் கிழித்துக் கீறிய எல்லைக் கோடுகளால் நிர்மாணிக்கப்பட்ட இறைமையின் பேரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பேரரசுகளும் சிற்றரசுகளும் அந்நாட்டுக்குள் உள்ள தேசங்கள் மீது தொடுக்கும் தேசிய ஒடுக்குமுறை யுத்தங்கள் சட்டபூர்வமானவை ஆகிவிடும். இந்திய பேரரசு இவ் இறையாண்மையின் பெயரால் 56 தேசங்களின் மீது இந்த சட்டபூர்வமான யுத்தத்தை கட்டவிழ்த்து வருகிறது. ஒரு சிற்றரசின் வேண்டுதலின் பேரிலோ அல்லது அதை மிரட்டி பணிய வைத்தோ ஒரு பேரரசு சிற்றரசுக்கு எதிராக தொடுக்கும் அனைத்து ஆக்கிரமிப்பு யுத்தங்களும் சட்டபூர்வமானதாகிவிடும். இந்தத் தர்க்கத்தின் படிதான் திருவாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அமைதிப்படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் சட்டபூர்வமான துப்பாக்கிகள் என்று சட்டவாதம் புரிந்தார்..

மேலும் இப்பொழுது இப்பிரச்சனை கிளப்பப்படுவதற்கு மற்றொரு முக்கிய சர்வதேச சூழ்நிலை சார்ந்த காரணமும் உண்டு. ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பிந்திய ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பில் ரஷ்ய முகாமைச் சார்ந்த நாடுகளை மறுபங்கீடு செய்யவும் இதர தேசங்களின் மீது தலையீடு செய்யவும் பயன்படுத்தும் ஆயுதங்களில் இப்போர்க் குற்றமும் ஒன்றாகிவிட்டது. ஏகாதிபத்திய வாதிகள் தமக்கு அடிபணிய மறுக்கிற அரசுகளையும் அரசுத் தலைவர்களையும் ஆட்சிக்கவிழ்ப்புச் செய்வதற்கான ஆயுதங்களாக மனித உரிமை மீறல், மனிதப் பேரழிவு ஆயுதம், பயங்கரவாதத்துக்கு எதிரான போர், போர்க்குற்றம், போன்ற காரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா இதற்கு தலைமை தாங்குகிறது.

இங்கிலாந்து உட்பட, இலங்கையை தமது ஆதிக்க மண்டலத்துக்குள் அடிபணிய வைத்திருப்பதுதான் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டில் ஏகாதிபத்திய வாதிகளின் மறைமுகமான நோக்கமாக உள்ளது.ஈழத்தமிழர்களின் அரசியல் ஜனநாயக சுதந்திரமோ விடுதலையோ இவர்களது நோக்கமல்ல! இதை நியாயம் செய்வதற்கு ஒரு வினாடித் தகவல் கூட Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணத்தில் சேர்க்கப்படவில்லை!

ஈழத்தமிழர்களின் மற்றும் ஈழத்தமிழின ஆதரவாளர்களின் உலகு தழுவிய சிங்களத்தின் போர்க்குற்ற எதிர்ப்பு நீதியான மக்கள் இயக்கம் ஏகாதிபத்தியவாதிகளின் இக்கபட நோக்கத்துக்கு சேவகம் செய்வதாக அமைந்துவிடக் கூடாது.

உலக மறுபங்கீட்டுக்கான போர்க்களமாக இலங்கையை மாற்றிவரும் சிங்களத்தை,பக்ச பாசிஸ்டுக்களை எதிர்த்து நாம் போராட வேண்டும். அமெரிக்க இந்திய அணியைத் துணையாகவும் ஈரான், ரஷ்யா, சீனா அணியை பிரதானமாகவும் தங்கி நிற்கும் வெளியுறவுக் கொள்கையை பக்ச பாசிஸ்டுக்கள் கடைப்பிடிக்கின்றனர். இதில் எந்த அணியைச் சார்ந்திருப்பதாலும் ஒடுக்கும் சிங்கள தேசமோ ஒடுக்கப்படும் தமிழீழ தேசமோ விடுதலை பெற முடியாது. இந்த இரண்டு அணியுமே இலங்கைத் திருநாட்டின் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்கும் ஈழதேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கும் எதிரானவை ஆகும்.

ஆனால் சிங்களத்தின் ஆளும் கும்பல்களுக்கு இதில் எந்த அணியைச் சார்ந்து நாட்டை விற்றுப் பிழைப்பது என்பதற்குள்ள உரிமையில் அந்நியர்கள் தலையீடு செய்ய முடியாது. மாட்சிமை தங்கிய மகாராணியாரின் மகுடத்துக்கு இன்றும் இலங்கை அடிபணிய வேண்டுமென இலங்கையை எவரும் கோர முடியாது.

சிங்களத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிரான வெகுஜன இயக்கம் தன்னை தனது சொந்தக் காலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். `Channel 4 தொலைக்காட்சி நிறுவன ஆவணம்` என்ற போலி ஊன்றுகோலில் தொடர்ந்து நடக்கக் கூடாது.

வேறுவிதமாகக் கூறுவதானால் ஈழத்தமிழர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வகுத்துக் கொள்ளும் அரசியல் திட்டங்களும் நடைமுறைப் போராட்டங்களும் ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்கு எதிரானதாக அமைய முடியாது. அமையக் கூடாது. இந்த அந்நிய சார்பு வழியில் ஈழத்தமிழினம் தனது சுயநிர்ணய உரிமை மற்றும் ஜனநாயக விடுதலையை அடைய முடியாது.

இந்திய விரிவாதிக்க அரசுக்கும் பக்ச பாசிஸ்டுக்களுக்கும் அடிமைச் சமரச தொண்டு புரியும் கூட்டமைப்பு “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி சொல்கிறதே தவிர போர்க்குற்றம் குறித்துப் பேசுவதே இல்லை.

தமிழ் நாட்டில் நெடுமாறன் வைகோ சீமான் சமரசவாதிகள் ராஜ பக்ச இழைத்த போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கற்பழிப்புக்களை சுவைத்து ரசித்து சுகம் ஊட்டுகிறார்கள். ஆனால் 1987 இல் இந்தியா இழைத்த போர்க்குற்றங்களைப் பற்றியோ முள்ளிவாய்க்காலில் எமது போர்வீரர்களை விச வாயு அடித்துக்கொன்ற இந்தியப் போர்க்குற்றங்களைப் பற்றியோ பேசுவதே இல்லை.

செந்தமிழன் சீமான் ஜெயலலிதாவின் செருப்பாகி  இருக்கிறான் நெருப்பாய்!

புலம் பெயர் நாடுகள் எங்கும் புளுத்துக் கிடக்கும் தமிழர் பேரவைகளும் உருத்திர குமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஏகாதிபத்தியதாச இந்திய விரிவாதிக்கபாச சமரசவாதிகளே ஆவர்.

கலைப்புவாத NGO, Tamil Net குழு ஈழத்தமிழர்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறைகளை அன்றாடம் செய்திகளாக வெளியிட்டு, திரட்டிக் கொள்ளும் வாசகர்கள் மத்தியில் ஏகாதிபத்திய சார்பு தேசவிரோத கலைப்புவாத சித்தாந்த கருத் தாக்கங்களை தொடர்ந்து ஊட்டிவருகிறது.

தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர்நாடுகளிலும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் இயக்கம் மீது இச் சமரசவாதிகளின் அரசியல் செல்வாக்கு தனிமைப்படுத்தப்படாத வரையும் ஒரு முற்போக்குத் தேசவிடுதலை இயக்கம் உருவாகாது. அவ்வாறு ஒன்று உருவாக இவர்களின் வர்க்க நலன்கள் அனுமதிக்காது. இது ஒரு ஜீவமரணப் போராட்டமாகும். இதில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இதை நாம் வென்றே தீர வேண்டும்.

எனவே எதிரிகளை எதிர்த்து சமரசவாதிகளைத் தனிமைப்படுத்தி நமது சொந்த ஜனநாயக வர்க்கங்களில் ஆதாரப்பட்டு நின்று நாம் போராட வேண்டும்.

Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணம் ஏகாதிபத்திய வாதிகளுக்கும் புதிய சிங்கள ஆளும் கும்பலான   பக்ச பாசிஸ்டுக்களுக்கும் இடையேயான முரண்பாட்டில் வேர் கொண்டுள்ளது.

இது  ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய இய க்கத்துக்கு  மறை முக சேமிப்புச் சக்தியாக  உதவ   முடியுமே தவிர, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஆதாரப்படுத்தவல்ல நேர்முக சேமிப்புச் சக்தியாக அமையாது.


Channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணப் படத்திற்கு பிரதட்டை எடுப்போர் இந்த எல்லைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் தேசியப்படுகொலையை நடத்தி முடித்த  பக்ச  பாசிஸ்டுக்களுக்கு பழிதீர்க்க வேண்டுமென்ற நியாயமான நல் எண்ணத்தால் உந்தப்பட்டு போர்க்குற்ற இயக்கத்தில் ஊக்கத்துடன் உழைக்கும் தோழர்கள் இந்த மட்டுப்பாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பகுதியை முழுமைக்கு கீழ்ப்படுத்த வேண்டும். போர்க்குற்ற இயக்கத்தை தேசியப் பிரிவினை இயக்கத்துக்கு கீழ்ப்படுத்த வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் தேசிய பிரிவினை இயக்கத்தை பணயம் வைத்து பக்ச பாசிஸ்டுக்களை பழிதீர்க்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டமைக்கக் கூடாது.

ஈழ வரலாற்றில் இரண்டு உதாரணங்கள்:

1989 இல் இந்தியப்படையை வெளியேற்றும் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் – பிரதித் தலைவர் மாத்தையா தலைமையில் பிரேமதாசாவுடன் உடன்பாடு கண்டனர். இதன் விளைவாக பிரேமதாசா இந்தியப்படையை வெளியேறுமாறு கோரினார். இந்தியப்படை வெளியேற வேண்டியதாயிற்று. இதை அடுத்து பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பிரேமதாசா விடுதலைப் புலிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மீண்டும் யுத்தம் வெடித்தது. இதனால் பிரிவினை இயக்கத்தைப் பாதுகாக்க விடுதலைப் புலிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மாறாக இந்தியப் படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகள் சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டிருந்தால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு அன்றே அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருப்பார்கள்.

2002 பேச்சுவார்த்தையில் அன்ரன் பாலசிங்கம் என்கிற பிரம்ம ஞானி- இதைத் தலைகீழாகச் செய்தார். ஆனையிறவுத் தாக்குதலை அடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கிய மாபெரும் பாய்ச்சலை முடக்கிய ஏகாதிபத்திய வாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் விடுத்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு அரசியல் தீர்வுக்கு சிங்களத்துடன் முயலும் படியான நிர்ப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எதிர் நோக்கினர்.

இத்திருப்புமுனையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் பேசும் மக்களிடையேயான பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரியிருக்க வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால்,

1. 1972 அரசியல் அமைப்புச் சட்டத்தை எதிர்த்தும், 1977 இல் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தும் தமிழீழமக்கள் ஜனநாயக ரீதியில் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் அளித்த தீர்ப்பை மீறுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு அதிகாரம் இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டிருக்கும்

2. அதை ஏகாதிபத்தியவாதிகள் மறுத்திருந்தால் அவர்களும் இந்திய விரிவாதிக்க அரசும் ஈழமக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் அம்பலப்பட்டுப் போயிருப்பார்கள்.

3. விடுதலைப் புலிகளின் நீதியான யுத்தத்திற்கு ஜனநாயக அடித்தளமும் மக்கள் ஆதரவும் இருந்திருக்கும்.பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒரு பொதுத் தேர்தலால் முறியடிக்க முடிந்திருக்கும்.

4. நோர்வேயால் தமிழீழமக்களின் பிரிவினைக்கான சர்வஜன வாக்கெடுப்பை நிராகரித்திருக்க முடியாது. ஏனெனில் சுவீடனில் இருந்து நோர்வே பிரிந்து போது இந்த ஜனநாயக நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டது.

அது ஏன் ஈழத்துக்குப் பொருந்தாது என்று எரிக் சொல்ஹெய்மும் சொல்லவில்லை. இதை எதிர்த்து புலித் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கமும் தேசத்துக்காக குரல் எழுப்பவில்லை. இதை எழுப்பியிருந்தால் தமிழீழப் பிரிவினைக்கு எதிராக நோர்வே நடத்தி முடித்த சதிப்புரட்சியை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க முடியும்.

இவ்வாறு ஒரு தத்துவாசிரியராக தேசத்தின் குரலாக பாலசிங்கம் செயல்படுவதற்குப் பதில் அவர் ஏகாதிபத்திய பிரமஞானியாக. ஒரு யுத்தப் பிரபுவாக செயல்பட்டார். அவர் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைத் தான்தோன்றித் தனமாக நிராகரித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதார நிலைப்பாட்டை மீறி, அமைப்பின் அனுமதிகூட இல்லாமல் எரிக் சொல்ஹெய்முடனும் மிலிந்த மொறகொடவுடனும் கூட்டமைத்து அகசுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப்பரவலாக்கக் கோட்பாட்டை முன்வைத்தார்.

தமிழீழ மக்களதும் விடுதலைப் புலிகளதும் தமிழீழ இலட்சியமும் கைவிடப்பட்டதற்குப் பின்னால் இந்த அகசுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்க வாதிகளினதும் அவர்களது காவல் நாயான சிங்களத்தினதும் திட்டமே ஆகும்.

இந்தத் திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் உடன்பாடானவர்கள் அல்ல. அதனால் அவர்கள் எதிரிகளாவார்.. அதனால்தான் இத்திட்டத்தை எதிர்த்த விடுதலைப் புலித் தலைவர்களும் அணிகளும் அவர்களை ஆதரித்த மக்களும் களமாடிப்பலியாக இத்திட்டத்தை ஆதரித்த அத்தனைத் தப்புலிகளும் பத்திரமாகத் தப்பிவிட்டார்கள். கே.பி தப்பிவிட்டான். உருத்திர குமாரனும் தப்பிவிட்டான். இவ்வாறு நாட்டுக்கு நாடு பத்திரிக்கைக்குப் பத்திரிகை இணையத்துக்கு இணையம் என இத்தப்புலிகளின் பட்டியல் மைல் கணக்கிற்கு நீளூம்.

சேரன் சோழன் பாண்டியன் என்றும், மான் மரை கரடி என்றும், சந்திரன் சூரியன் வியாழன் என்றும், புல் புழு பூண்டு என்றும் பிதற்றித் திரியும் ``மே 18 இற்கு முந்திய`` புலித் தத்துவாசிரியர்களால் இந்த மைல்கள் நீண்ட நெடும்பயணம் நடத்துகின்றன..

இந்திய அமைதிப்படையை வெளியேற்றுமாறு கோரி பிரேமதாசவுடன் மாத்தையா நடத்திய பேச்சுவார்த்தை, சிங்களத்துடன் அரசியல் தீர்வுகாண நோர்வே அநுசரணையில்  பாலசிங்கம் நடத்திய பேச்சுவார்த்தை ஆகிய இரண்டும், விடுதலைப் புரட்சியின் ஒரு குறிப்பான கட்டத்தில் வகுக்கப்படும் அரசியல் செயல் தந்திரங்கள். அவ்வியக்கத்தின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கவல்ல சக்தி படைத்தவை என்பதைக் காட்டுகின்றன.

மாத்தையாவின் விடுதலைச் செயல்தந்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பை பேரியிக்கமாக மாற்றியது. பாலசிங்கத்தின் ஏகாதிபத்திய நலன் காக்கும் சதிகார செயல்தந்திரம் விடுதலைப் புலிகளை பூண்டோடு துடைத் தொழித்தது.

முள்ளிவாய்க்கால் கற்றுத்தருகின்ற படிப்பினை இதுதான். நாம் ஆறாக இறைத்த குருதி வீணாகாது போக நாம் பெறுவதற்குள்ள உலகம் இந்தப் படிப்பினைகளே ஆகும். இவற்றை விழலுக்கு இறைத்த நீராக்க முயலும் எந்த ஒரு சக்திகளையும் நாம் அரசியல் அரங்கில் அனுமதிக்கமாட்டோம். அவர்களை தாக்கி அழிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்! முறியடிப்புச் சமரை என்றும் நாம் தொடர்வோம்.

• மாயமான்களை கண்டு மயங்கும் சீதைகள் அல்ல நாம்!

• மாவீரர் பொட்டிட்ட போர்வீரர் நாம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Monday, 12 December 2011

”யுத்தப்பிரபு” பிரபாகரனும் அரசியல் சாணக்கியன் அன்ரன் பாலசிங்கமும்


பிரபாகரன் பயங்கரவாதியோ, யுத்தப் பிரபுவோ அல்ல, தமிழீழத் தேசியத் தளபதியே!
அது எழுபதுகளின் நடுப்பகுதி, உலகம் இரண்டு துருவங்களாக பிளவுண்டு கிடந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த ஒரு துருவ அணி, ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த மறுதுருவ அணியுமாக இப்பிளவு அமைந்திருந்தது.

அணிசேரா நாடுகள் எனப்பட்டவை இவற்றில் ஏதோ ஒன்றை ஏதோ அளவில் சார்ந்து நின்றவையே ஆகும். சிங்களம் அமெரிக்க முகாமைச் சார்ந்திருந்தது. இந்திய விரிவாதிக்க அரசு ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.

ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு சார்பான அரசு உள்ள ஒரு நாட்டில் அந்நாட்டை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக ஒரு அரசு இருந்த நாட்டில் அவ்வரசை எதிர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு ரசியா ஆதரவளித்தது. இவ்வாறு ஏகாதிபத்திய எதிர்ப்பு, அரைக் காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் புரட்சிகர இயக்கங்கள் ஏதோ ஒரு ஏகாதிபத்திய அணியின் கைக் கருவிகளாக மாறியிருந்தனர்.

இதன் விளைவாக காலப் போக்கில் இவற்றில் பெரும்பாலானவை சிதைந்து சீர்குலைந்து சீரழிந்து போயின. வேறு சில ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து மக்களின் ஒடுக்குமுறையாளராக மாறின.

இந்தப் பொது விதிக்கு விதிவிலக்காக இருந்தவை மிக ஒரு சில இயக்கங்களே ஆகும். இவற்றில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது எமது பெருமைக்குரிய வரலாறாகும்.

தேசிய விடுதலைப் புரட்சியின் மிக ஆதாரமான இந்த அரசியல் யுத்த தந்திர பிரச்சனையில் கொண்டிருந்த எச்சரிக்கை காரணமாகத் தான் திம்புக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து சிங்களத்துடன் கைகோர்த்து இந்திய விரிவாதிக்க அரசு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்த போது விடுதலைப் புலிகளால் எதிர்த்துப் போராட முடிந்தது. ரஷ்ய சமூக ஏகாதிபத்திய ஆதரவு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இந்தியாவின் கைக்கூலியாகி, இந்திய ஆக்கிரமிப்புப் படையின் துணைப்படையாகி ஈழத் தமிழ் மக்கள் மீது படுகொலைத் தாண்டவம் ஆடியது. விடுதலைப் புலிகளோ இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி அந்த அநியாய அந்நியப் படையை விரட்டியடித்து ஈழத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து வரலாறு படைத்தார்கள்.

விடுதலை யுத்தத்தின் முப்பது ஆண்டுகளில் சிங்களத்துடன் பல்வேறு அரசியல் பேச்சு வார்த்தைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டார்கள். அவற்றில் எல்லாம் தமிழர் நலன்களை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ளவில்லை. மாறாக சமாதான முயற்சிகள் தோற்கடிக்கப்பட்ட ஒவ்வொரு கணத்திலும் விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள்.

விதிவிலக்காக எரிக் சொல்ஹெயும் மிலிந்த மொறகொடவும் ஒஸ்லோவில் வரைந்து, அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டு ஈழத்தை அடமானம் வைத்த ஒஸ்லோ அகசுய நிர்ணய உரிமைத் தீர்மானம் அமைந்திருந்தது. இதற்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உடன்பாடு கொண்டிருக்கவில்லை என எரிக் சொல்ஹெயும் பகிரங்கமாக தனது வாய்மொழி மூலமாக சான்று பகர்ந்துள்ளார்.

ரோக்கியோ பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை ஒப்படைத்து ஒரு அடிமைத் தீர்வைத் திணிப்பதற்காக 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் விலை பேசப்பட்டது. அத்தகைய கேடுகெட்ட பேரத்தை தூக்கியெறிந்து விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.

இறுதியாக முள்ளிவாய்காலில் உயிர்ப்பிச்சை தருகின்றோம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்று கூறினார் ஒபாமா. அப்போதும் கூட விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. மாறாக மெளனிப்பதாக அறிவித்து தமது களஞ்சியத்தை வெடிவைத்து தகர்த்தனர்.

மேலும் ஈழத்தின் நலன்களில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலைக்கு எதிராக, எந்த சர்வதேச சக்திகளோடும் விடுதலைப் புலிகள் கூட்டு வைக்கவில்லை. மாறாக அச்சக்திகளை எதிர்த்துப் போராடியே வந்தார்கள்.

குட்டிமுதலாளித்துவ வர்க்க இயல்பு காரணமாக ஊசலாட்டமும், சந்தர்ப்ப வாதமும், அனுபவ வாதமும், இருந்த போதும் ஈழத் தமிழினத்தின் விடுதலை என்ற அம்சத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு விடுதலைப் போராட்டத்தை பொறுப்பேற்றிருந்த தமது முப்பது வருட வாழ்வில் எந்தத் துரோகத்தையும் இழைக்கவில்லை. இது ஒர் இமாலய சாதனையாகும். இதற்காக ஈழத்தமிழ் இனம் மற்றும் அவர்களது விடுதலையை தொடர்ந்து முன்னெடுக்கப் போகும் அடுத்த தலைமுறையினர் விடுதலைப் புலிகளுக்கு நன்றி கூற என்றும் கடமைப்பட்டவர்கள்.

ஆனால் ஈழத்தமிழின விடுதலையில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்தும், ஒடுக்கும் சிங்களத்திடமிருந்தும் தமிழீழத் தனிநாடு விடுதலை பெறுவது. இரண்டு விடுவிக்கப்பட்ட தமிழீழ நாட்டில் ஜனநாயக அரசுமுறையையும், ஜனநாயக சமூக பொருளாதார முறையையும் உருவாக்குவது. இந்த இரண்டாவது அம்சத்தை விடுதலைப் புலிகள் முற்றிலும் தலைகீழாக கையாண்டனர். இதில் அவர்கள் கொண்டிருந்த எதிர்மறையான புரிதல் விடுதலை இலட்சியத்தை பலப்படுத்துவதற்குப் பதில் பலவீனப்படுத்துவதாய் அமைந்திருந்தது. இவ்வாறு அவர்கள் இழைத்த எண்ணற்ற தவறுகளில் ஒன்றைக் கூட தங்கள் வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை. திருத்திக் கொள்ள முயலவுமில்லை என்பது ஒரு மிகவும் துரதிஷ்டவசமான சோகமாகும்.

ஆனால் இச்சிந்தனைப் போக்குக்கான முழுப் பொறுப்பும் விடுதலைப் புலிகளை மட்டும் சார்ந்தது அல்ல. அவர்களுக்கு மட்டுமே உரித்தானதும் அல்ல. அவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதும் அல்ல. கட்சி ஒன்றும் வானத்தில் இருந்து விழுவது கிடையாது. அதுவும் ஒரு சமுதாய விளைபொருளே ஆகும்.

ஈழத்தமிழ்ச் சமூகம் ஒரு ஜனநாயக சமூகம் கிடையாது. மரபுவழியில் விடுதலைப் புலிகளுக்குக் கையளிக்கப்பட்ட அரசியல் ஒரு ஜனநாய அரசியல் கிடையாது. சமூக உறவில், தொழில் உறவில், அரசியல் உறவில் எந்த வடிவங்களிலும் ஜனநாயக அமைப்பு முறை கிடையாது.

குடும்பம், கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வெகுஜன அமைப்புக்கள் எனப்பட்ட எவையும், ஜனநாயக ரீதியான நிறுவனங்கள் அல்ல. தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஜே ஆர் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படித் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாரோ அதுபோலவே தான் அமிர்தலிங்கமும் சமஷ்டிக் கட்சியை வைத்திருந்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஒழுக்கக் கோவைகளை வைத்து மிரட்டுகிற அமைப்பு வழிமுறை அது. தூய தலைவன் தீய தொண்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்..எல்லாவற்றிற்கும் மேலாக நமது பாராளுமன்றமோ ஒரு தேசிய இனத்தை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிக் கொண்டிருந்தது. மலையகத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்திருந்தது. இதற்கும் மேலாக தனது சொந்தப் பிரதமரின் குடியுரிமையைப் பறித்து வீட்டுக் காவலில் பூட்டி வைத்திருந்தது. இதுதான் எமது சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகம் வாழ்ந்த கதை.

மார்க்சியத்தோடு முற்றாக முறித்துக் கொண்டு தூரத்துறந்தோடி விட்டதன் பின்னால் இந்தச் சமுதாயத்தின் விளைபொருளான ஒரு கட்சியிடம் இருந்து எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். இந்த வரலாற்றுக் காரணங்களின் மற்றும் நியதிகளின் எல்லைக்குட்பட்டுத் தான் ஒரு தனிநபரதோ ஒரு கட்சியினதோ வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பீடு செய்யமுடியும். மதிப்பீடு செய்யவேண்டும்.

மரபு வழியாக விடுதலைப் புலிகளுக்கு கையளிக்கப்பட்ட அரசியல், ஜனநாயக விரோத குறுமின வாதமாகும். வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றி வரலாற்றுப் பழிதேடிக் கொண்ட சம்பவம், துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறந்த அதிகாரம் மட்டுமல்ல சமூக அங்கீகாரத்துடனும் கூடியதுதான். மரபு வழியாக கையளிக்கப்பட்ட ஜனநாயக விரோத குறுமினவாத அரசியல் சிந்தனைப் போக்கு துடைத்தெறியப்பட்டு அதனிடத்தில் மக்கள் ஜனநாயக அரசியல் சிந்தனைப் போக்கு படைத்தெடுக்கப்படாமலேயே ஆயுதப்போராட்டம் தொடங்கிவிட்டது. தொங்குபாலத்தில் நடக்கிற மனிதனைப்போல ஆயுதப் போராட்டம் ஜனநாயக விரோத அரசியல் சிந்தனைப் போக்கின் மேலே நடந்து வந்தது. இது ஒரு வரலாற்று விபத்து. இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிதும் பொறுப்பாளிகள் அல்ல. உண்மையில் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் பிற்பட்ட, பலவீனப்பட்ட நிலைமையே இதற்கு முக்கிய பொறுப்பாகும்.

இது இன்னொரு சிறப்புரிமையையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கும். உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பலவீனமாக இருந்த, ஏகாதிபத்திய பிற்போக்கு தலைவிரித்தாடிய மூன்று தசாப்தங்களில் விடாப்பிடியாக விடுதலை யுத்தத்தில் ஊன்றி நின்றார்கள். சொல்லப் போனால் தனித்து நின்று போராடினார்கள்.நேபாளத்தில் மாவோயிஷ்ட்டுக்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட பிரசாந்தாவின் கட்சி மன்னரைப் பதவியில் இருந்து இறக்கியதுமே மக்களுக்குத் துரோகமிழைத்து இடைவழிச் சமரசம் செய்து ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டமைத்து ஆயுதங்களையும், போராளிகளையும் ஐநா சிறையில் அடைத்து விட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்கள். இத்தகைய கேடுகெட்ட சமரசங்களின் புறவய நிர்ப்பந்தங்களுக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடினார்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு ஸ்தாபனம் என்ற வகையிலோ அல்லது தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களை அதன் தலைவர் என்ற முறையிலோ ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேற்கண்ட வரலாற்று நிபந்தனைகளுக்கும் நியதிகளுக்கும் நியமங்களுக்கும் உட்படுத்தித் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

அன்ரன் பாலசிங்கம், நவமார்க்சிய கலைப்புவாதி இதன் அரசியல் விளைவே அதிகாரப்பரவலாக்கம். எனவே ஏகாதிபத்திய நலன் காக்கும் சிங்களத்தைப் பாதுகாக்க எரிக் சொல்ஹெயுமும், மிலிந்த மொரகொடவும் தீட்டிய அகசுயநிர்ணய உரிமைத் திட்டத்தை பிரபாகரனின் அனுமதி இல்லாமல் பாலசிங்கம் கையொப்பமிட்டது தர்க்க ரீதியானதும் திட்டமிட்ட சதியுமாகும். இதன் தொடர்ச்சியே கருணாவின் உடைவு என்பதை நோர்வே ஆய்வறிக்கையும், ஆய்வரங்கில் எரிக் சொல்ஹெயுமின் பேச்சும் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஆய்வரங்கில் பேசிய சொல்ஹெயும், ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதற்கு பிரபாகரன் தெரிவித்த எதிர்ப்பை மனங்கொண்டு அன்ரன் பாலசிங்கம் கூறியதை பின்வருமாறு விபரித்தார், “ பிரபாகரன் ஒரு யுத்தப் பிரபு, அவர் ஜனநாயக சூழலில் வாழ்ந்தவர் அல்ல, மேற்குலகின் ஜனநாயகம் அவருக்குத் தெரியாது, அவர் சர்வேதேச அரசியல் அறியாதவர், சீன யுத்தப் பிரபுக்களுக்கு ஈடானவர்” இதை நான் சொல்லவில்லை. அன்ரன் பாலசிங்கம் எனக்குச் சொன்னார் என்றார் சொல்ஹெயும்.

யுத்தப் பிரபுக்கள் வட்டார மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு வட்டாரப் பிரபு இன்னொரு வட்டாரப் பிரபுவோடு ஐக்கியப்படுவதில்லை. அந்நிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டாலும் கூட ஒரு வட்டார யுத்தப் பிரபு இன்னொரு வட்டார யுத்தப் பிரபுவுடன் ஐக்கியப்படுவதில்லை. மாறாக அவருக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளர்களோடு கூட்டமைத்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் பழைய சீனமும், இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

ஆப்கானிஸ்தானில் ரசிய சமூக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய யுத்தப்பிரபு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோடு கைகோர்த்துக் கொண்டார். இறுதியாக இவர் கார்சாய் அரசின் இராணுவத்தளபதியாக நியமனம் செய்யப்பாட்டார்! ("If you support me, I will destroy the Taliban and al Qaeda," Gen. Abdul Rashid Dostum told The Washington Times in an interview at his northern stronghold. "I don't want to be a minister, not even the defense minister. I need to be with my soldiers. Give me the task and I will do it."
Other ethnic leaders have made similar offers, but their support is problematic.Gen. Dostum is one of Afghanistan's most notorious warlords -- a Russian-educated former defense minister who turned against the Soviet Union in the 1980s but became a key figure in the Russian-backed fight against the Taliban a decade later.)

ஈராக்கில் சுனி சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்கள் சியா சமூகத்தைச் சேர்ந்த யுத்தப் பிரபுக்களுக்கு எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளனான அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்தனர்.இவர்களை சிறப்பு ஈராக் பிரஜைகள் என அமெரிக்கா சங்கேத மொழியில் அழைத்தது.(But alliance with U.S. forces against al-Qaeda has not translated into a new relationship with the Shia-dominated central government of Prime Minister Nouri al-Maliki in Baghdad, which has long been nervous about Petraeus' courtship of the Sunni insurgents and tribal militias – renamed "Concerned Local Citizen" (CLC) groups – that have helped in the anti-al-Qaeda fight.
http://antiwar.com/lobe/?articleid=11941)

சீனாவில் முதல் உள்நாட்டுப் புரட்சிகர யுத்தம் 1924-1927 ஆண்டுகளில் நடைபெற்றது.இது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு யுத்தமாகும்.1926 ஜூலையில் வடக்குப் படையெடுப்பு யுத்தம் தொடங்கியது. இது ஏகாதிபத்திய வாதிகளோடு கூட்டமைத்துக் கொண்ட சீன நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சேனையாகவும் அதன் தளபதிகளாகவும் இருந்த யுத்தப் பிரபுக்களின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.(நவ சீனப் புரட்சியின் வரலாறு- ஹோ கான் சி, தமிழ்ப் பிரசுரம் சென்னை புக்ஸ், அத்தியாயம் 4 பக்கம் 130-187)

பிரபாகரனுடைய விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இயக்கம். வட்டார இயக்கம் அல்ல. இலங்கையில் தமிழர் தாயகப் பரப்பான வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து அதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய தேசிய இயக்கமாகும். பிரபாகரன் அரசியல் அரங்கத்தில் தோன்றுகிறவரை ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு தேசிய இயக்கம் இருந்ததில்லை. ஒருவேளை விடுதலைப் புலிகளை யுத்தப் பிரபுக்கள் என வர்ணிப்பதாக இருந்தால் அது அன்ரன் பாலசிங்கத்துக்கும் கருணாவுக்கும் பெரிதும் பொருந்துமே அன்றி தேசியத் தளபதி பிரபாகரனுக்கு சற்றும் பொருந்தாது.

அக சுயநிர்ணய உரிமை என்கிற அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் சீர்குலைவுகளை ஏற்படுத்தி எரிக் சொல்ஹெயுமுடன் இணைந்து கருணாவை உடைத்து, கேபியை விலைக்கு வாங்கி தேசியத் தளபதி பிரபாகரனை யுத்தப் பிரபு என மாசுபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் பிரளயத்துக்கும் காரணமான அன்ரன் பாலசிங்கம் தேசத்துரோகியே ஆகும்.

பிரபாகரன் அவர்கள் மரியாதையின் நிமித்தமும் அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாகவும் பாலசிங்கத்துக்கு வழங்கிய ”தேசத்தின் குரல்” என்ற பட்டத்துக்கு அவர் தகுதியோ பொறுப்போ உடையவர் என்று நிரூபிக்கவில்லை. நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் முதலே நாம் பாலசிங்கத்தின் வழி நாசத்துக்கு இட்டுச் செல்லும் என சுட்டிக் காட்டி விமர்சித்து வந்தோம்.ஆனால் இன்று நோர்வே ஆய்வறிக்கை வெளிவந்த பின்னர் அன்று நாம் அனுமானித்த பல்வேறு உண்மைகளை இவ்வறிக்கை ஆதாரப்படுத்திய பின்னரும் அன்ரன் பாலசிங்கத்துக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு விழா எடுப்பவர்கள் மாண்ட நம் மக்களையும் மாவீரத் தோழர்களையும் தேசியத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களையும் இழிவுபடுத்துபவரே ஆவர். அது மட்டுமல்ல பாலசிங்கத்தின் துரோகத்தை மூடிமறைப்பவர்கள் அத்துரோகத்துக்குத் துணைபோவதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்.

இதனால் அந்நிய சார்பு அதிகாரப் பரவலாக்கப் பாதை ஈழத்தமிழர்களின் விடுதலைப் பாதையில் ஏற்படுத்திய மாபெரும் தீங்கை முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக தமிழீழ மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.பின்வரும் முழக்கங்களைக் கையில் ஏந்தி மீண்டும் எழ வேண்டும்!

* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

* தமிழீழ அரசு மக்கள் ஜனநாயகக் குடியரசு!

* தமிழீழத் தேசியத் தளபதி பிரபாகரன் நாமம் நீடூழி வாழ்க!

* மாவீரத் தோழர்களின் வீரம் நீடூழி வாழ்க!

* தமிழீழ விடுதலைப் போராட்டம் வெல்க!


                                            * இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Wednesday, 23 November 2011

சிங்களத்தின் வரவு செலவுத் திட்டம் 2012 - பார்வையும் பணிகளும்

ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று,
உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012         
_______________________________________________________

இனவெறிச் சிங்களத்தின் 2012 வரவு செலவு திட்டத்தில் இராணுவச் செலவினம் 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மே 19 இல் ஈழப் பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டதாக சிங்களம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்த பிறகும் அதற்குப் பின்னால் ஈழப் பயங்கரவாதம் முகிழ்ப்பதற்கான கூறுகள் எதுவும் இந்த இரண்டரை ஆண்டுகளில் தோன்றாதிருந்தும் கூட சிங்களம் தனது இராணுவ வலிமையை 7%
த்தால், அமைதி மற்றும் அபிவிருத்திக் காலகட்டத்தில் அதிகரித்தது ஏன்?

1. சிங்களத்தின் இராணுவம் ஒரு சமூக அரசியல் சக்தியாக உருமாறுவது

2. தமிழீழ தேசத்தை தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் வைத்திருப்பது.

3. விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வருவார்கள் என அஞ்சுவது.

4. தென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசு எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சி தோன்றுமென நம்புவது.

5. நாடுதழுவி பரந்து விரியும் அந்நிய மூலதனத்துக்கும் அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கும் இராணுவப் பாதுகாப்பளிப்பது.

6. அமெரிக்காவின் ஐ.நா சபை முகமூடி அணிந்த உலக மறுபங்கீட்டு யுத்தங்களுக்குச் சேவை செய்யும் கூலிப்படைத் திட்டத்தில் இலங்கை
இராணுவத்தை ஒரு பகுதியாக இணைப்பது.

7. ஏகாதிபத்தியத்துக்கும் சுதந்திர தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான யுத்தத்தில், தமிழீழப் படுகொலையின் அநுபவங்களை
போதிக்கும் சட்டம்பியார் ஆவது, தனியார் இராணுவம் என்ற கேடுகெட்ட முதலீட்டில் சிங்களப் படைகளை உள்ளடக்கி இலாபம் ஈட்ட முயல்வது.

8. உலக மறுபங்கீட்டில் எடுத்துக் கொள்ளும் சார்புநிலை காரணமாக பிராந்திய யுத்த களத்துக்கு மேலும், வெடிக்கக் கூடிய உலக யுத்தத்துக்கு
இராணுவச் சேவகம் புரிய நாட்டைத் தயார்ப்படுத்துவது..

9. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால், பெருகிவரும் வேலையற்ற விவசாயப் பட்டாளத்தை இராணுவக் கூலிப்படைகள் ஆக்குவதன் மூலம் இலங்கையில் விவசாய புரட்சி இயக்கத்தை சீரழித்து தமிழ் விவசாயிகளுக்கு எதிராக, ஆயுதம் ஏந்திய சிங்கள விவசாயிகளை நிறுத்தி மோதவிடுவது.

10. இவ்வாறு சிங்களம் கடைப்பிடித்துவரும் அனைத்து தேச விரோத மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்து வந்து தீரப் போகிற, நாடு தழுவிய எழுச்சியை நசுக்குவதற்காக தனது பாசிச அரசுமுறையை, அதன் அரசதிகாரத்தை மென்மேலும் பலப்படுத்தி
இராணுவமயமாக்கி வருகிறது.

`வன்முறைக்கு முடிவுகட்டி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம். நாட்டில் அமைதியை நிலை நாட்டியும் இலங்கை மக்களுக்கிடையே
சமாதானத்தை உருவாக்கியும் நாடுதழுவிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனச் சிங்களம் தம்பட்டம் அடித்து` மக்களை ஏமாற்றி வருகின்றது.. இதை இந்திய அரசும் ஏகாதிபத்திய வாதிகளும் ஒத்தூதுகின்றனர். IMF உம் WBஉம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதாவது- உலகமயமாக்கல் அபிவிருத்தியால் ஏகாதிபத்தியவாதிகள் நன்மையடையும் வீதம் (5,6,7,- 8,9,10), ஐந்து ஆறு ஏழு,- எட்டு ஒன்பது பத்து என, கொங்கை குலுங்க கும்மியடிக்கின்றனர். HSBC வங்கி அதிகாரி பிரமை பிடித்தவனைப்போல ``லாபாய்``, ``லாபாய்`` என அலறுகின்றான்!

முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்தேறிக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சிங்களத்திடம் சரணடைய
வேண்டுமென பிணந்தின்னி ஒபாமா கோரிக்கை விடுத்தான். பாங்கீ மூனும் அதையே கூறினான். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட இதையே
கோரியது.ஒரு படி மேலே போய் மன் மோகன் - சோனியா அரசு புலிகளை முற்றாகக் கொன்றொழிக்கக் கங்கணம் கட்டி நின்றது, (பகுத்தறிவாளன்
வை.கோ பாபர்மசூதி BJP வந்து ஈழபூமியைக் காக்கும் என்றான்!!)

வன்முறைக்கு முடிவு கட்டப்பட்டு, பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டப்பட்டு, முப்பது மாதங்கள் முடிந்து
விட்டபின்னாலும், பக்ச பாசிச்ஸ்டுக்கள் தங்கள் வன்முறைப் பட்டாளத்துக்கான செலவினத்தை 7% த்தினால் உயர்த்தியது குறித்து இந்தச் சாவு வியாபாரிகள் அலட்டிக் கொள்ளவே இல்லை.

காரணம் என்னவெனில் மேலே வரையறுக்கப்பட்ட பத்து நோக்கங்களினாலும் பாதுகாக்கப்படுவது சிங்களத்தின் நலன்கள் மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்கவாதிகளின், மற்றும் உலக மறுபங்கீட்டு வேட்டையில் குதித்துள்ள பிராந்திய மேலதிக்க அரசுகளின் நலன்களும் கூடத்தான்.

வேறுவிதமாகச் சொன்னால் சிங்களத் தரகுமுதலாளிய, பேரினவாத, பொளத்தமதவாத, இனவெறிப் பாசிச, நவீன அரைக்காலனிய, இராணுவ
சர்வாதிகார அரசின் ஒரு சொல்லில்- சிங்களத்தின் நலன்களும் ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க அரசுகளின் நலன்களும் இரண்டறக் கலந்துள்ளன.

இதனாற்தான் சிங்களம் எப்போது ஆட்டங்கண்டாலும் அதை அரவணைத்துப் பாதுகாக்க இவர்கள் படையெடுக்கிறார்கள்.1972 இல் எடுத்தார்கள், 1987 இல் எடுத்தார்கள், 1999 இல் ஆனையிறவுத் தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினால் படையெடுத்து நசுக்குவோமென மிரட்டி நமது முன்னேற்றத்தைத் தடுத்தார்கள். 2008 இல் முள்ளிவாய்க்காலில் நவவஞ்சகமான படையெடுப்பின் மூலம் நம்மையும் நமது தலைமையையும் முன்னணித் தலைவர்களையும், முதன் நிலைப் போராளிகளையும் கொன்றொழித்தார்கள்.

மேலும் இக்காரணத்தால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையையும் தமது நலன்களுக்காக பாடுபடும் வர்க்கங்களுக்கு மேலாக, வளர்வதற்கு அனுமதிப்பதில்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டினார்கள். அதனிடத்தில் TNA சமரசவாதிகளை ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறி ஊட்டி வளர்க்கிறார்கள். தமிழகத்தில் நெடுமாறன், வைகோ, சீமான் கும்பலுக்கு அப்பால் ஈழவிடுதலைக்கான சக்திகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்க மறுக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளைத் தடைசெய்து அவர்களின் உண்மையான ஆதரவாளர்களைக் கூண்டிலேற்றும் ஏகாதிபத்தியவாதிகள், மறுபுறம் நாடுகடந்த அரசாங்க உருத்திராச்ச குமாரர்களை, ஒபாமாவுக்கான தமிழர்களை, மற்றும் நாட்டுக்கு நாடு முளைத்திருக்கும் ”தமிழர் பேரவை”களை, ஒரு சேரக் கூட்டிக் கட்டி, களத்தில் தமக்காகக் குரைக்க கொட்டி விட்டுள்ளனர்.

இந்தக் கும்பல் அனைத்தும் தமது ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச, வர்க்க சமரச பாத்திரத்தின் காரணமாக “ஏகாதிபத்தியமே நீதி வழங்கு,
இந்தியாவே தீர்வு வழங்கு” என முனகுகிறது. இந்த ஈனக்குரல், ஒரு சந்தர்ப்ப வாத சமரசவாத சரணாகதிக் குரலாகும். இதனால் இது சிங்களத்துக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. சிங்களத்தின் ஆட்சி அதிகார அடித்தளத்தை சிதைப்பதற்குப் பதில் பாதுகாத்து நிற்கும் சீர்திருத்தக் குரலாகும்.

இத்தன்மை காரணமாக ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கும் சேவகம் செய்யும் பிற்போக்குக் குரலுமாகும்.ஏகாதிபத்தியமே நீதி வழங்கு இந்தியாவே தீர்வு வழங்கு என முனகி சமரசவாதிகள் கட்டியமைக்கும் இயக்கம் உலக மறுபங்கீட்டில் ஒரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டமைக்கிறது. குறிப்பாக அமெரிக்க இந்திய அணியைச் சார்ந்து நிற்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தங்களை ,அநீதியான ஆட்சிக் கவிழ்ப்புக்களை ஆதரிக்கிறது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை அங்கீகரிக்கிறது. தேசிய இனப்பிரச்சனையை குறுமின வாதமாக குறுக்குகின்றது. அதிகாரப் பரவலாக்க தீர்வுக்கு அலைகின்றது. நாடு கடந்த அரசாங்கமென நாடகமாடுகின்றது. இதனால் இது பிற்போக்கானதும் தேசவிரோதமானதும் தோற்கடிக்கப்பட வேண்டியதுமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு , தாம்  விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது முதல், இன்றுவரை சுருட்டிக் கொண்ட சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எவ்வளவு துல்லியமாகத் தெரியுமோ, அதே அளவுக்கு பக்ச பாசிஸ்டுக்களிடம் இருந்து தமிழ் மக்கள் ஒரு சல்லியும் பெறமுடியாது என்பதும் மிக நன்றாகத்தெரியும்! இருந்தும் எம்மை அழித்தவர்களிடமே நாம் நீதியும் தீர்வும் பெறலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போகாத ஊருக்கு வழிகாட்டுவது மட்டுமல்ல போக வேண்டிய பாதையில் இருந்து திட்டமிட்டு திசை திருப்புவதுமாகும்.

சமரசவாதிகள் எங்கிருந்தாலும் இந்தக் குறிக்கோளில் அவர்கள் ஒன்றுபட்டேயுள்ளனர்.

மேலும் இவ்வரவு செலவுத்திட்டத்தின் இதர முக்கிய அம்சங்களை நோக்குவோம்.

2) நாணயப் பெறுமதி இறக்கம்

படுபாதக பக்ச பாசிஸ்டுக்கள் நமது நாணயத்தின் அமெரிக்க டொலருக்கு ஈடான பெறுமதியை, அதிர்ச்சியளிக்கத்த எண்ணிக்கையில் 3% ஆல் வெட்டிச் சரித்துள்ளனர்."Our exporters find it difficult to remain competitive," Rajapakse said. இந்த Our exporters என்பது தரகுமுதலாளிய வர்க்க விதேசிகளே ஆவர். இவர்களின் நலன் காக்க எடுத்த இந்நடவடிக்கையின் விளைவாக  1 அமெரிக்க டொலருக்கு சராசரியாக 110.38  ரூபாய் பெறுமதி உடையதாக இருந்த  இலங்கை நாணயம் தற்போது 106.85 இலங்கை ரூபாயாக பெறுமதி இழக்க வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 அமெரிக்க டொலரை வாங்குவதற்கு தேவைப்பட்ட அதே இலங்கை ரூபாயைக்கொண்டு இன்று 0.97 அமெரிக்க டொலரையே வாங்கமுடியும்.அதாவது அமெரிக்க டொலருக்கு நாம் அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம். இதன் விளைவாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான
அந்நியக் கடனைத் திருப்பி அடைப்பதற்கு எமக்கு மேலதிகமாக 350 மில்லியன் இலங்கை ரூபாய்கள் தேவைப்படும்.அல்லது 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கிறபோது நாம் 350 மில்லியன் ரூபாய்கள் குறைவான தொகையையே விலையாகப் பெறுவோம்.

இதற்காக நாம் மேலதிகமாக உழைக்க வேண்டும், அல்லது உண்மையில் சொல்லப்போனால் இந்த மேலதிக உழைப்பின் பயனாக திரளும் உபரி உள்நாட்டில் மிகை மூலதனமாகாமல் அந்நியர்களால் களவாடப்பட்டு விடும் நாடு மீண்டும் மீண்டும் அந்நியக் கடனை நம்பியே வாழும். முற்றிலும் அந்நியக்கடனிலும் [EXTERNAL DEBT and RESOURCE FLOWS
1989 1999 2008 2009(US$ millions)Total debt outstanding and disbursed 5,181 9,800 15,611 17,208,]
ஏற்றுமதி சார்ந்த வர்தகத்திலும் (US$billions 21.4 in 2009 World Bank/ Exports are projected to grow at around 14 per cent,...... Imports are projected to grow at around 10 per cent ) பிரதானமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் நவீன காலனிய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில்(With an economy worth $56 billion
(2011 IMF estimate ) இந்த 3% மதிப்பிறக்கம் மிகப்பெரிய இரத்தம் குடிக்கும் அட்டை ஆகும்.

இவ்வாறு உள்நாட்டு மக்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைத்து, உபரி மூலதனத்தை சூறையாடும் இந்தப் பகல் கொள்ளையை நம் தேசியத் தலைவர்கள் ஜனநாயக வழியில் பாராளமன்றத்தில் நிறைவேற்றியிருகிறார்கள்! இந்தப் புனிதப் பாராளமன்றத்தைத் தகர்க்க பயங்கரவாதிகளை அநுமதிக்க முடியுமா என்ன?!


3) அரசுத்துறை ஊழியருக்கு 10% ஊதிய உயர்வு.

இலங்கையில் பணவீக்கம் 25% இற்கும் 5% இற்கும் இடையில் ஈடாடி வந்திருகின்றது.பணவீக்கக் கணிப்பீடே வெறுமனே சந்தை சார்ந்தாக இருப்பது, புள்ளிவிபர மோசடி,ஆளும்கட்சித் தலையீடு இவை யெல்லாவற்றையும் கவனத்திற் கொண்டு தற்போது பொதுவாக 7% என நம்பப்படுகிற விபரத்தை 10 % மாகக் கொள்வது எவ்வகையிலும் மிகைப்படுத்தலாகாது.அவ்வாறெனில் இவ் ஊதிய உயர்வு பணவீக்கத்தையே ஈடு செய்கிறது.மேலும் நாணயப் பெறுமதி இறக்கம் உழைப்புச் சக்தியின் மதிப்பை இறக்கியிருக்கின்றது மேலும் இதுவே பணவீக்கத்தை தூண்டக்கூடியதாகும்.இதனால் இவ் ஊதிய உயர்வு அதன் நடைமுறை மதிப்பில், அரசுத்துறை ஊழியர்களின் வருமானத்தை - வாங்கும் சக்தியை- உயர்த்தி அவர்கள் வாழ்வை மேம்படுத்தப்போவதிலை.

4) வரிச்சலுகை

கித்துள் பனங்கட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க நிபந்தனை விதிக்கிற சிங்களம், உல்லாசத்துறைக்கென இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை 50% ஆல் குறைத்துள்ளது. புத்தங் சரணங் கச்சாமி!

5) பாதுகாப்புச் செலவினம்.

மேலே வெகு விரிவாக ஆராய்ந்துள்ளோம். மேலதிகமாக ஒரு குறிப்பு. Of 230 billion rupees allocated to defense, 203 billion or 88 percent will be spent on salaries, food and uniforms.என்கிறது சிங்களம்! இந்த உலகத்திலேயே தனது இராணுவச் செலவினத்தில் 88% ஐ படையாட்களின் உணவுக்கும், உடைக்கும், ஊதியத்துக்கும் செலவிடும் அரசு சிங்களமாகவே இருக்கும். அவ்வாறல்லாமல் இதுவே உண்மையென்று எடுத்துக் கொண்டால் இதை வேறொரு வழியிலும் விளக்க முடியும், எண்ணற்ற வழிகளில் தனது
ஜீவனோபாயத்துக்கு வருமானம் தேடிக்கொள்ள சிங்களம் தன் வன் படைக்கு வகைசெய்து கொடுத்துள்ளது.ஒருபுறம் சிங்கள வன்படை முதலீடுகளில் ஈடுபடுகிறது.மறுபுறம் கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறது ( பிரதானமாக தமிழீழ தேசத்தில்).இதற்கு மேல், கித்துள்பனங்கட்டி வரி உட்பட மக்களின் வரிப்பணத்தில் ஊதியமும் உடையும் கொடுத்து உண்டு கொழுத்திருக்கிற அதிகார வர்க்கமாக இராணுவத்தை உருமாற்றுகிறது. இந்த அடித்தளத்தில் சிங்களம் தன் இராணுவத்தை ஒரு சமூக அரசியல் சக்தியாக மாற்றி வருகின்றது. மேலும் ராஜபக்சவின் வ.செ.திட்ட உரையின் பின்வரும் பகுதியைப் படியுங்கள்!

INFRASTRUCTURE

"We have allocated 30 billion rupees ($271.8 million)for the inter provincial road network." "We can be the regional sports hub and that can help to strengthen our economy. I propose 500 million rupees for development of infrastructure complexes and all sport goods will be tax-free in order to encourage sports." ( இது Formula 1 போன்ற ஏகாதிபத்திய கோர விளையாட்டுக்கு மைதானம் அமைத்துக் கொடுத்து இலாபமீட்டும் இழி தொழில்.)

A monthly allowance of Rs. 750 to each of the parents of members of the security forces


A special loan scheme ‘Ranaviru Divi Neguma’ for the benefit of disabled soldiers, to be engaged
in self employmentA sum of Rs. 14,000 million has been allocated in this Budget to meet the
monthly allowance aid to all disabled soldiers.


It is propose to extend the application of the proposal that I announced in the last Budget to grant Rs.100,000 at the birth of the third child of any member of the security forces, to those who are serving in the Police force as well.


The monthly allowance paid to the elders over 70 years from Rs. 300 to Rs.1,000 and from Rs.100 to Rs.500 in relation to others.

Samurdhi allowance that is paid in 8 slabs, ranging from Rs.210 to Rs.1,500. Accordingly, the Rs.210 to Rs.615 allowance being paid to low income small families will be increased to Rs.750, while the Rs.900 allowance paid to low income general families will be increased to Rs. 1,200.

6) சிங்களம் அங்கீகரிக்கும் விதேசிய விவசாயத்திட்டம்

வரவு செலவுத் திட்ட உரையின் ஆவணப்பிரதியின் குறிப்பு 24-44 வரையான பகுதிகள் இலங்கை விவசாயம் குறித்தவை,நிலம் கடல் காடு தழுவிய துறையில் சிங்களத்தின் முதலீடு பற்றிய பகுதி இது. இவற்றைத் தனித்தனியாக அறுவைச் சிகிச்சை செய்வதை இக்கட்டுரை நீண்டு செல்வதன் காரணமாக தவிர்த்து அவற்றின் கோட்பாட்டு அடிப்படையை மட்டும் தொகுத்துத் தருகின்றோம்.

அ) இலங்கை விவாசாயத்தை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றுவது. ஏகாதிபத்திய சந்தைக்கான விவசாயப் பண்டங்களை உற்பத்தி செய்வது.
புதிய தானியங்களை அறிமுகம் செய்வது. மரபுரீதியான விளை பொருட்களைக் கைவிட்டு புதிய பண்டங்களை உபத்தி செய்வது.இதற்காக அந்நிய சார்பு இயந்திர சிறு கைதொழில் துறையை ஊக்குவிப்பது.

ஆ) உள்ளூர் விவசாயத்தை அதன் சிறு உடமை வடிவிலும், பின்தங்கிய நிலையிலும் பேணுவது.

இ) தேசியச் சந்தை சார்ந்து கட்டுமானப் பணிகளை பேணுவதற்குப் பதில், ஏகாதிபத்திய ஏற்றுமதியின் தேவைக்கும், உள்நாட்டில் நிறைவேறும்
உலகமயமாக்கல் திட்டத்துக்கு ஏற்பவும் திட்டமிடுவது.

ஈ) இந்த அபிவிருத்திக்கு அந்நிய வங்கி மூலதனத்தைச் சார்த்திருப்பது.

உ) கிராமியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அற்ப தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது.

7) சிங்களம் நிராகரிக்கும் தேசிய ஜனநாயக விவசாயத்திட்டம்

ஊ) நிலப்பிரச்சனை : பல் தேசியக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்த நிலங்களைக் குறித்து எந்தக்கதையுமே இல்லை. கிறீஸ்தவ மதச் சபைகளுக்கும், பெளத்த மடாலயங்களுக்கும் சொந்தமான(!) நிலங்கள் குறித்து மரண மெளனம்.

எ) கிராமிய விவசாய செயல்பாடுகளுக்கு கிராம அதிகாரி, பயிர்ச் செய்கை உத்தியோகஸ்தர் நியமனம் என அதிகாரித்துவ  ஊழல், மோசடி நிர்வாகத்தை உருவாக்குதல்

ஏ) ஏகாதிபத்திய விவசாயத்தின் பகுதியாக இலங்கை விவசாயத்தை ஆக்கும் வெறியில் தேசிய விவசாயக் கல்வித்திட்டம் ஒன்றுக்கான அவசிய அவசரத்தை வெறுத்தொதுக்குவது.

ஐ) விவாசாயத் துறையில் தேசியப் பெருந்தொழிற்துறை வளர்ச்சி திட்டம் இல்லாதிருப்பது. .

ஒ)விவசாய நீர்வள அபிவிருத்தியைப் புறந்தள்ளுவது.


8) இவ் விதேசிய திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டியதாகும்,
இது அரசியல் துறையில் சமரசவாதிகளைத் தோற்கடிக்கும் போது மட்டுமே முடியும்.

9) செலவில்லாத சமாதானம்

2012 இல் எந்தத் தேர்தலும் நடக்காது என சிங்களம் சூழுரைத்துள்ளது. அதாவது எஞ்சியுள்ள ஒரே ஒரு வடக்கு மாகாண சபைத்தேர்தல் அடுத்த வருடம் நடக்காது என அறிவித்துள்ளது.இன்னும் ஆழமாக நோக்கினால் சமரசவாதிகள் முனகும் ``தீர்வு`` சிங்களத்தின் திட்டத்தில் இல்லை,. செலவும் இல்லை. இதுவரைக்கும் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் பயங்கரவாதமே தடை எனக் கூறி வந்த இன்று அந்தத் `தடை` நீங்கியதும் அமைதியையும் கைவிட்டுவிட்டது! அபிவிருத்தியையும் கைவிட்டுவிட்டது!!
ஏகாதிபத்தியவாதிகளுக்கு நாட்டை விற்றுப் பிழைப்பதிலேயே குறியாகவுள்ளது.
10) ஆக ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012 ஐ ஒன்றுபட்டுத் தோற்கடிக்க எழுவோம்.

நாம் போராட வேண்டிய பாதை

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உலகெங்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் வெகுஜன பாட்டாளி மக்களும் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். கல்வி உரிமை கோரி மாணவர்கள் போராடுகின்றனர். தமது வாழ்விடங்களையும் அதன் கனிம வளங்களையும் பாதுகாக்க வனப்புற, பழங்குடி மக்கள் திரள் வெகுண்டெழுந்து போராடி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய இயக்கம் உலகெங்கும் கொழுந்து விட்டெரிகிறது. அரைக்காலனிய நவீன காலனிய சார்பு நாடுகளின் மக்கள் தம் சொந்த ஆட்சியாளர்களையும் அவர்களது அதிகாரத்தையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் எதிர்த்து ஜனநாயக ஆட்சி முறைக்காக போராடி வருகின்றனர். இதில் பகுதியான வெற்றியும் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு உலகெங்கும் போராடும் கோடானகோடி மக்களை சர்வதேச சமூகமும் அவர்களின் காவல்நாய்களான உள்ளூர் ஆட்சியாளர்களும் அடக்கியும் ஒடுக்கியும் வருகின்றனர். இவ்வாறு இரு முகாம்களாக இரு துருவங்களாக பிளவுண்டு மோதிக்கொண்டிருக்கிறது எம் கண்முன்னால் உள்ள உலகம்.

இதில் எந்தத் தரப்புடன் நாம் அணிசேர்வது. ஒடுக்கும் தரப்புடனா அல்லது ஒடுக்கப்படும் தரப்புடனா? புரட்சிகரமாக போராடும் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று ஈழத் தமிழ்மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராட வேண்டும்.

2009 மே 19 இல் விடுதலைப் புலிகள் முள்ளிவாய்கால் பிரளயத்தோடு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்து சிங்களம் உரிமை கோரிக்கொண்டது. இதன் விளைவாக பத்தாயிரத்துக்கும் மேலான போராளிகள் யுத்தக் கைதிகளாக சிங்களத்தின் பிடியில் அகப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோரை சிங்களம் கொன்றொழித்து விட்டது. கணிசமான பெண் போராளிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தது. இசைப்பிரியா போன்ற இலக்கியவாதிகள் கூட இந்த இம்சையில் இருந்து தப்ப இயலவில்லை. சிலரை விடுவித்துள்ளது. பலரை அறிந்ததும் அறியப்படாதவையுமான சிறைகளிலும் சித்திரவதைக் கூடங்களிலும் அடைத்து வைத்துள்ளது. வேறு சிலருக்கு கே.பி.யைக் கொண்டு நன்னடத்தைப் பள்ளி நடத்துவதாகக் கூறுகிறது! வேறு சிலரை உளவு வேலைகளில் ஈடுபடுத்தி சீர்குலைத்து சீரழித்து வருகிறது.

இவ்வாறுதான் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிகளை சிங்களம் நடத்தி வருகிறது. இதற்கு மாறாக விடுதலைப் புலிப் போராளிகளை
இலங்கையின் பொலிஸ் இராணுவ விமான மற்றும் கடற்படைகளில் இனவிகிதாசாரப்படி இணைத்து, சிங்களப்படையில் தமிழருக்கு இடங்கொடுக்க சிங்களம் முயலவில்லை. இன்னமும் தமிழ் தெரியாத பாதுகாப்புத் துறையினரைக் கொண்டே தமிழ் மக்களை ஆண்டு வருகிறது. இலங்கையின் பாதுகாப்புத் துறையை மற்றும் சட்ட ஒழுங்குத் துறையை முற்றும் சிங்கள மயப்படுத்தி வைக்க முனைவதே இதற்குக் காரணமாகும்.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுவழங்க நிர்ப்பந்தம் கொடுப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய விரிவாதிக்க அரசும் கூறி வருவது வெறும் மோசடியே ஆகும். இந்த மோசடியை மூடிமறைக்கும் திரையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். அரசியல் தீர்வுக்கான ஒரு முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை, மாயையை மக்களுக்கு உருவாக்கி தக்க வைத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காத சிங்களம், நாம் முப்படைகளின் வலிமையோடு இருந்தபோது பணியாத சிங்களம், சரத் பொன்சேக்காவோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாத சிங்களம் சொந்தக் கட்சியிலேயே சந்திரிக்காவைப் புறந்தள்ளுகிற பக்ச பாசிச சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்குமென `சம்பந்தன் ஐயா` சொல்லுகிறார். தீர்வே இது பொய்யடா காற்றடைத்த பையடா.

சிங்களத்தின் கண்ணோட்டத்தில் இலங்கை ஒரு தேசம். அங்கு வாழ்பவர்கள் இலங்கை மக்கள். அதாவது சிங்கள மக்கள் என்ற பேரினவாத கோட்பாட்டையும் பெரும் தேசிய வெறியையும் கடைப்பிடித்து வருகிறது. இதை ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு நாளூம் கூறி வருகின்றனர்.

இதற்கு மேல் இலங்கைத் தமிழ்மக்கள் ஒரு தனியான தேசமென்றோ இலங்கையில் இனமதச் சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள் என்றோ ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை.இதனால் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக் கோட்பாட்டை தமிழர்கள் ஏற்பார்களேயானால் இலங்கையில் அவர்கள் ஒரு தேசமாக இல்லாமல் போவது மட்டுமல்ல ஒரு இனமாகக் கூட இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டு விடுவார்கள். இந்த இன அழிப்புக்கும் தேசிய அழிப்புக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஜனநாயக வாதிகளினதும் உலகத் தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட தேசங்களினதும்  கடமையாகும். இந்த கடமையின் பாற்பட்டு ஈழத் தமிழினத்தின் பிரிவினைக் கோரிக்கைக்கான இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்.

அறுபது ஆண்டுகளாக தாம்வாழும் மக்களின் மண்ணில் இருந்து ஒரு துளி நீரும் உறிஞ்ஞாத சில இடது சாரி மரங்கள், இதன் விளைவாக காய்ந்து கருகி விறகுகள் ஆனபோதும், ஆளும்கும்பலுக்கு சூடேற்றவே எரிந்து கொண்டிருக்கின்றன.இப்போதும் பிரிவினை பிரளயம் என்று பிதற்றுகின்றன, தங்கள் இலைகளும் கிளைகளும் தறிக்கப்பட்டுவிடுமென அலறுகின்றன!  எரிந்து போ விறகே! எதிர்காலம் பறவைகளின் சிறகில் உள்ளது!

ஆனால் இவ்வாறு கோருவதற்கு, முதலில் ஈழத்தமிழராகிய நாம் ஜனநாயக உணர்வு கொண்டவர்களாகவும் சர்வதேசியவாத உணர்வு
கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக நாம் குறுமின வாதிகளாகவும், குறுந்தேசிய வாதிகளாகவும் ஏகாதிபத்திய தாசர்களாகவும் இந்திய விரிவாதிக்க பாசர்களாகவும் இருப்போமேயானால் இவ்வாறு கோருவதற்கு எமக்கு எந்த  தகுதியும் இருக்காது,  உரிமையும் இருக்காது.்
யுத்தத்தின் இறுதி நாட்களில் திரு யோகி அவர்கள் பதின்நான்கு நாடுகளை எதிர்த்து நாம் போரிடுவதாக அறிவித்தார். ஏகாதிபத்திய நெருக்கடி
தீவிரமடைய தீவிரமடைய அது தேசிய ஒடுக்குமுறையை மென்மேலும் கூர்மைப்படுத்தி வரும். இன்று யுத்தம் முடிந்தது போல் தோன்றினாலும்
இரத்தம் சிந்தாத போர் தொடர்கின்றது. இப்போதும் நாம் பதின்நான்கு நாடுகளாலும் ஒடுக்கப்பட்டுத்தான் வருகிறோம்.இத்தகைய பலமான எதிரிகளைத் தோற்கடிக்கும் பலத்தை எங்கிருந்து பெறுவது?

உலகெங்கும் ஏகாதிபத்திய தேசிய ஒடுக்குமுறை ஆக்கிரமிப்புப் போர்களை கட்டவிழ்க்கும் வெள்ளை மாளிகையில் இருந்தா?
இப்போர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஐநா சபையில் இருந்தா?
அல்லது இப்போர்களின் பங்காளியும், உள்நாட்டில் அயர்லாந்து மக்களையும், வேல்ஷ் மக்களையும், ஸ்கொட்டிஷ் மக்களையும் நசுக்கி அத்தேசங்களது சுயநிர்ணய உரிமையை மறுத்துவரும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருந்தா?
சித்தசுவாதீனம் அற்றவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இங்கிருந்தெல்லாம் பெறமுடியாது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஏதோ இவர்கள் எல்லாம் மனுநீதி கண்ட சோழர்கள் மாதிரியும் இவர்களின் வாயில் மணியை அடித்து நீதி கேட்போம் வாருங்கள் என்று சமரசவாதிகள் அழைப்பு விடுகின்றனர்.

ஒருதேசிய இனத்தை ஒடுக்குகிற அரசு இன்னெரு தேசிய இனத்துக்குச் சுதந்திரம் வழங்கும், ஒரு தேசிய இனத்துக்கு அநீதி இழைக்கின்ற அரசு
இன்னெரு தேசிய இனத்துக்கு நீதி வழங்கும், ஒரு நாட்டுக்கு எதிராக போர்க்குற்றம் இழைக்கின்ற அரசு மற்றொரு நாட்டின் போர்க்குற்றத்துக்கு
தண்டனை வழங்கும் என்று இந்த அடிமுட்டாள்கள் உண்மையிலே நம்பினால் அடிமுட்டாள்களாக இருப்பது அவர்களது அடிப்படை உரிமை! ஆனால் எம்மை முட்டாள்கள் ஆக்காது இருப்பார்களாக. அவர்கள் எம்மை முட்டாள்கள் ஆக்க அனுமதிக்காது இருப்போமாக.எனவே பலமான எதிரிகளுக்கு எதிராக நாம் பலம் பெறுவதற்கு உள்ள ஒரே வழி உள்நாட்டில் ஒடுக்கப்படும் மக்களதும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் இயக்கங்களுடனும் ஒடுக்கப்படும் தேசங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் ஐக்கியப்படுவதே ஆகும்.

எந்தச் சமரசவாதிகள் ஐநாவோடும், ஒபாமாவோடும், இந்திய அரசோடும் ஐக்கியப்படுவதற்கு நமக்கு அழைப்பு விடுகிறார்களோ இவர்களேதான்
ஒடுக்கப்படும் மக்களுடன் நாம் ஐக்கியப்படுவதற்கு தடையாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள்தான் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து அறுபதுகளில்
சங்கானையில் நடைபெற்ற போராட்டத்தை சங்காய் போராட்டம் என்றவர்கள், இவர்கள்தான் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது மெளனமாக இருந்தவர்கள். இவர்கள்தான் மலையகத் தமிழர்களை வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தேயனை நம்பாதே என வக்கிரம் பொழிந்தவர்கள். தேர்தல் ஒதுக்கீட்டில் தம் கட்சிச் சின்னத்தில் வெற்றி பெற்று பின்னால் ஆளும்கட்சிக்குக் கட்சிதாவிய ஆளும் வர்க்க இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களை மனத்தில் கொண்டு ”தொப்பிபிரட்டிச் சோனகன்” என ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையே வசை பாடியவர்கள். அமிர்தலிங்கம் தமிழும் சைவமும் எனது இரு கண்கள் என பகிரங்கமாக மேடையில் பேசி பின்னால் வாக்கு வேட்டைக்காக வாபஸ் வாங்கிக் கொண்டார்.சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ஆளும் சிங்களக் கட்சிகளுடன் கூட்டமைத்து அரசாங்கம் அமைக்கத் தயங்காதவர்கள். சிங்கள மக்களைப் பார்த்து மஞ்சள் துணிக்கு கழுத்தறுத்த சிங்களவன் என மாசுரைத்தார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி தமிழினத்துக்கு அறுக்காத கழுத்தையா சிங்கள மக்கள் அறுத்து விட்டார்கள். இவ்வாறு எந்த அளவுக்கு ஒடுக்கப்படும் மக்கள் தம்முள் ஐக்கியப்படுவதை தடுக்க முடியுமோ அந்த அளவுக்குத் தடுத்தார்கள்.

சரத் பொன்சேக்கா அறுத்த கழுத்துக்கள் எத்தனை? எந்தத் தேயத்தவன் மன்மோகன் சிங்? என்ன உறவு ஒபாமாவுடன்? எதிரியுடன் என்ன கைகுலுக்கல்? பேச்சுவார்த்தை ஏன் திரை மறைவில்? இவை மக்கள் நலனுக்காக நடத்தப்படுவது உண்மையானால் ஏன் பகிரங்கப் படுத்தாமல் மூடிமறைக்க வேண்டும்?

உண்மையில் ஒருபுறம் ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்படுவதை தடுப்பதற்கும், மறுபுறம் மக்களின் எதிரிகளுடன் தாம் ஐக்கியப்படுவதற்கும்
வசதியாகவே,இந்த ஜனநாயக விரோத மனப்பான்மைகளை இச்சமரசவாதத் துரோகிகள் மக்களிடையே விதைக்கிறார்கள் என்பதே உண்மை.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை ஆக்கிரமித்த போது தமிழ்மக்களும் சிங்கள மக்களும் ஒன்றுபட்டுப் போராடவில்லை. இதற்கு
ஜேவிபி இன் பெருந்தேசிய வெறி பிரதான தடையாக இருந்தது. எனினும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராடாவிட்டாலும்
இந்தியப் படையை வெளியேற்றுவது என்ற கோரிக்கையில் ஒன்றுபட்டு நின்றார்கள். இதனாலேயே இந்தியப் படை விரட்டியடிக்கப்பட்டது. அல்லாமல் ஜேவிபி எழுச்சி உருவாகாமல் சிங்கள மக்கள் இந்திய மேலாதிக்கத்தை அங்கிகரித்து ஏற்றுக் கொண்டிருந்தால் சிங்களப் படையும் இந்தியப்படையும் சேர்ந்து அதன் கூட்டு வலிமையால் விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்க முடியும், சில வேளைகளில் தோற்கடித்திருக்கவும் முடியும்.
மாறாக இந்தியப் பெரும் படையை தோற்கடித்து விரட்டியடித்ததானது சிங்கள தமிழ் மக்களின் ஒரு குறிப்பிட்ட கோரிக்கை மீதானது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சான்றாகும். இது நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இவர்கள் மக்களை ஐக்கியப்பட விடாது தடுத்து கூறுபடுத்தி வருகிறார்கள்.

இறுதியாக பக்ச பாசிஸ்டுக்களின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம், ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று,உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மேலும் இராணுவமயமாகும் சிங்களுத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டமாக உள்ளதால் இது ஒட்டு மொத்த இலங்கை மக்கள்மீதும், குறிப்பாகத் தமிழ்மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட ஜனநாய விரோத பாசிசத்தாகுதலாகும்.

இதனைத் தோற்கடிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிசேர்ந்து போராடுவோம்!


எதிரிகள்:

• உலகமயமாக்கலின் நலனுக்காக சிங்களத்தின் இராணுவ மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏகாதிபத்தியவாதிகள் நமது எதிரிகளே!

• நம்மை நிராயுதபாணியாக்கி எதிரியை இராணுவ சர்வாதிகாரியாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய-இந்திய விரிவாதிக்க அரசுகள் நமது எதிரிகளே!

• உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையில் களம் இறங்கியுள்ள IRC (Iran Russia China) அணி நமது எதிராளிகளே!

• இவ்விரு அணிகளாலும் ஊட்டி வளர்த்து பேணிப் பாதுகாக்கப்படும் சிங்களம் நமது பிரதான எதிரியே!

அணிசேர்க்கை:

• IRC அணிக்கெதிராக AmeIn (America India) ஆமேன் அணியுடன் அணிசேரும் தரகுப் பாதையை நிராகரிப்போம்!

• ஏகாதிபத்தியமே நீதிவழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு என முனகும் சமரசவாதத் துரோகிகளைத் தனிமைப்படுத்துவோம்!

• உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம் என உரத்து முழங்குவோம்!

சிங்கள உழைக்கும் விவசாயப் பாட்டாளி மக்களுக்கு:

• சிங்களத் தொழிலாளர்களே விவசாயிகளே தங்களுக்கு பேரினவாத வெறியூட்டி,தமீழீழப் படுகொலைக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டு, தேசிய வீரராக நாடகமாடும் பக்சபாசிஸ்டுக்கள் தங்களை அந்நியருக்கு கூறு போட்டு விற்பதை உணருங்கள்!

• IRC அணியோடோ அல்லது AmeIn அணியோடோ எதனோடு கூட்டமைத்தாலும் கூட்டமைப்பவர்கள் ஏகாதிபத்திய தாசர்களே!

• பக்ச பாசிஸ்டுக்கள் தேசிய புருஸர்கள் அல்ல ஏகாதிபத்தியத் தாசர்களே!

• தங்கள் மீதான அனைத்துத் தளைகளையும் தகர்க்க தாங்கள் ஏந்த வேண்டிய முழக்கம் `ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம்` என்பதே ஆகும்!

தமிழீழ மக்களுக்கு;

• பக்ச பாசிஸ்டுக்கள் சிங்கள நீசர்கள் மட்டுமல்ல ஏகாதிபத்திய தாசர்களும் ஆவர்!

• ஒன்றை மட்டும் உயர்த்தி, மற்றதை ஒளித்து விடுதலைப் பயணத்தில் தாங்கள் வெற்றி பெற முடியாது!

முரணற்ற முழக்கங்கள்:

• ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களுத்துக்கு, தீனி போடுவதே 2012 வரவு செலவுத் திட்டம் ஆகும்!

• இது இலங்கை மக்கள் மீது தொடுக்கப் போகும் அபிவிருத்தி யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராகுவோம்!

• பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!

* பக்ச பாசிஸ்டுக்களின் விதேசிய 2012 வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்!

* மக்கள் ஜனநாயக சுதந்திர தேசியப் பொருளாதாரத் திட்டத்துக்காகப் போரிடுவோம்!

*  என்றும் சிங்கள மக்களுடன் ஒன்றுபடக் குரல் கொடுப்போம்!


• உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

* தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஆதரியுங்கள்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்