Sunday, 18 May 2025

முள்ளிவாய்க்கால்-2025

 பிக்கு முன்னணி-ஜே.வி.பியின் ஆட்சியில் சுக்கு நூறாவதை தடுக்க,

முள்ளிவாய்க்கால் `விசப் படுகொலைக்கு` தீர்ப்பு வழங்க,

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இன்று மே 18 2025, முள்ளிவாய்க்கால் விசப் படுகொலையின் 16 ஆம் ஆண்டாகும்.

`` முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், நீதி வேண்டியும் மே -18 ஆம் நாளில், முள்ளிவாய்க்கால்த் திடலில் அணி திரண்டு ஒன்று கூட உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம். நாம் அழிக்கப்பட்டோம் என்பதை சர்வதேசம் வரை உரத்து சொல்ல இணைந்து கொள்வோம்”

என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் கோரியுள்ளார்.

மேலும்  அன்றைய தினம் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும், 10.29 க்கு நினைவொளி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சம நேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்படும். இறுதியாக மலர் வணக்கம் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்றிணைவோம்! 

பொது வாக்கெடுப்புக்குப் போராட சபதமேற்போம்!! 

மே 18 2009, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி நாளாகும். இந்த நாள் வரைக்குமான யுத்தத்தின் இறுதி நாட்களில், வகை தொகையின்றி கொத்துக் கொத்தாக நிராயுதபாணியான இலட்சம் மக்கள், யுத்த சூனியப் பிரதேசம் என அரசு அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்திய பிரதேசத்துக்குள்ளேயே முற்றுகையிட்டு கொன்றொழிக்கப் பட்டார்கள். இந்தப்பட்டறிவின் பாற்பட்டே இது `தமிழினப் படுகொலை` என உணரப்பட்டு உரைக்கப்பட்டு வருகின்றது. மாறாக சர்வதேச சட்ட விதிகளை மீறிய Genocide என்கிற குற்றச் செயல் என்கிற சட்டவாதத்தின் அடிப்படையில் அல்ல. அதற்கமையை முள்ளிவாய்க்கால்   Genocide ஆகுமா, இல்லையா என்பது சட்டவாளர்களின் பிரச்சனை. 

`` நாம் அழிக்கப்பட்டோம் '` நமக்கு நீதி வேண்டும் இதுவே மக்களின் பிரச்சனை.எமது பிரச்சனை.

ஆனால் முள்ளிவாய்க்கால் மக்கள் அழிக்கப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் தலைமை அழிக்கப்பட்ட பிரச்சனை யுமாகும். மக்கள் அழிந்து -மிகப் பெரிய விலையைக் கொடுத்து- புரட்சிப் படையின் இராணுவத் தலைமை ஆனந்தபுரத்தில் தப்பியிருக்குமானால், ஈழம்-தமிழினம் இன்றிருக்கும் இழி நிலையில் இருந்திருக்காது.ஒவ்வொரு தலைக்கும் சிங்களம் விலை கொடுத்திருக்கும். 

இந்த ஒடுக்குமுறை யுத்தத்தின் நாயகன் சரத்பொன்சேகா `` இந்த யுத்தத்தை இழந்த பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு நாம் நடத்தவில்லை, புலிகளை பூண்டோடு ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டே நடத்தினோம்`` என யுத்தத்தின் குறிக்கோளை விஞ்ஞானத் தெளிவுடன் வரையறை செய்து சொன்னார்.

இந்த யுத்தம் முழுமையிலும் சாகா வரம் பெற்ற இன்னொரு தளபதி இருந்தார். அவர் ஊடகவியலாளர்! அவர் `` ஆனந்தபுர விச வாயுத்தாக்குதல் நிகழாது இருந்திருத்தால் யுத்தம் வேறு திசையில் சென்றிருக்கும்`` என எழுதினார்.

இரண்டும் இருபெரும் உண்மைகள் ஆகும்.

இதனால்தான் முள்ளிவாய்க்கால் `விசப்படுகொலை`.

ஜீவாதாரமான மாபெரும் இந்த உண்மை இந்தப் 16 ஆண்டுகளில் அனைவராலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த விசப் படுகொலையை மூடிமறைப்பதற்கான கருவியாக `` இனப்படுகொலை`` நிறுத்தப்பட்டுவிட்டது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு- விசப் படுகொலைக்கு- நன்றி கூறியவர்கள்தான், இனப்படுகொலை என்றும் கூவினார்கள்.

அது மட்டுமல்ல இனப்படுகொலையின் விளைவாக அடுத்த ஈழ தேசியப் போரியக்கம் உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டார்கள்.


எவ்வாறெனில்: `` இனப் படுகொலை அரசின் கீழ் இணைந்து வாழ முடியாது, பிரிவினைப் பொது வாக்கெடுப்பு நடத்து `` எனக்கோரி, உள்நாட்டில் ஒரு தேசிய ஜனநாயக மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்காமல், சர்வதேச நீதியென்று கூறி ஐ.நா.வை நோக்கி மக்களைத் திருப்பினார்கள்.

ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்துக்குச் சொல்வது என்பதன் பேரால் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

தாங்கள் `அடித்த இந்த பெட்டிக்குள்` இனப்படுகொலைக்கு உள்ளான மக்களை பூட்டி வைக்க வேண்டுமானால் அவர்களுக்கு ஏதாவது பராக்கு காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இந்த கால்ப்பந்தாட்டம் முதல், கஞ்சிக் கொண்டாட்டம் வரையான நினைவு கூரல்கள் நிகழ்ச்சி நிரல் ஆகின.

இன்றைய இழி நிலை இந்தப் பதினாறு ஆண்டுகளில் இப்படித்தான் படிப்படியாக உருவாக்கப்பட்டது.

இன்று சரியாகப் 16 ஆம் ஆண்டில் இவை அனைத்தும் மீள உரைக்கப்படுவதை, மீள நிகழ்த்தப்படுவதைக் காண்கின்றோம்.

முற்றுப்புள்ளி இடுக.

* முள்ளிவாய்க்கால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கனடாவில் தமிழினப் படுகொலை நினைவாலயம் அமைக்கப்பட்டதற்கு அனுரா ஆட்சி கனேடிய தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது.

எவரும் எதுவும் செய்யவில்லை, கஞ்சிக்குக் கூடிய சந்திகளில் ஒரு கண்டன முழக்கம் கூட எழுப்பவில்லை. அப்படி ஒழுக்கமாக நடந்தும் கூட அனுராவின் சோசலிசப் பொலிஸ் கஞ்சிப் பதாகையைக் கழட்டிக் கொண்டு போய்விட்டது.

* யுத்தத்தின் போது துப்பாக்கி முனையில் கைப்பற்றிய தனியார் காணிகளை கபளீகரம் செய்ய வர்த்தமானி அறிவித்தல் -திருட்டுத் தனமாக சிங்கள ஆங்கில இரு மொழிகளில் மட்டும் இரகசியமாக- வெளியிட்டுள்ளது அனுரா-அக்கா ஆட்சி.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குப் பொறுக்க வீதி வீதியாக திரிந்த பொன்னன் கும்பல், இந்தப் பிரச்சனை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தூதுவர் வீட்டுக்கும் படியளக்கின்றது!

* தமிழீழ வைப்பக தங்கத்தை அநுரா-அக்கா கும்பல் பட்டப்பகலில் கண்ணுக்கு முன்னால் திருடி மத்திய வங்கியிடம் கொடுப்பேன் என்கிறது.

கொழும்பில் இருந்த ஒரு கராட்டிக்காரன், விடத்தல் தீவில் ஒரு விடு பேயன், கிளி நொச்சியில் ஒரு வாத்தியார், லண்டனில் படித்த ஒரு வெறும் மாணவன் இத்தியாதி இத்தியாதி கும்பல்கள் இன்று இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள், மேலை நாடுகளில் சொத்துக்கள் முதலீடுகள் கொண்டவர்கள் ஆகிவிட்டார்கள். மறுபுறம் புலிச் சொத்தைச் சுருட்டிக் கொண்ட புலம்பெயர் பினாமி-புதுப் பணக்கார முதலாளிகள் இவர்கள் எல்லோரிடமும் தனிச் சொத்து கொட்டிக் குவிகிறது.

தமிழீழ வைப்பகத் தங்கம், சாமானிய மக்களுடைய சேமிப்பு, காலம் காலமான தேட்டம், அவர்களது தனிச் சொத்து. எவனுக்கும் கவலையில்லை.

* சிறீதரன் என்கிற பிரகிருதி தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறது, வடகிழக்கு உள்ளூராட்சி தேர்தலில் சிங்களக் கட்சிகளை வெல்லவிடக் கூடாதாம்.அனைத்துச் சபைகளையும் தமிழ்க்கட்சிகளே வெல்ல வேண்டுமாம். இவ்வாறு ஒருமித்த சக்தியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  திரண்டு சர்வதேச சமூகத்துக்கு தமிழர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறவேண்டுமாம். அதனால் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டுமாம்! 

வாக்குப் பொறுக்குவதில் ஆரம்பித்த இவர்கள் இப்போது தமது வாக்குகளிலேயே பொறுக்கிகள் ஆகிவிட்டார்கள்.

விடுதலைக்குத் தேவை பொறுக்கித் தலைமை அல்ல, புரட்சித் தலைமை. முற்றுப்புள்ளியிடுக.

பிக்கு முன்னணி-நாடு சந்திக்கும் பேரபாயம்!

இலங்கையின் அரசியல் அதிகாரம் இறுதியாக ஜே.வி.பி இடம் சென்றடைந்திருக்கின்றது.

இது நடந்தேறியவிதம் நாடாளமன்ற ஜனநாயகத்தைப் பாவித்து, இறுதியில் மக்களின் மாபெரும் உரிமையான வாக்குரிமையையே, `தனது தெரிவுக்கு வழங்கக் கூடியவாறு` மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றது. 

பக்ச பாசிஸ்டுக்களின் `மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி` இரண்டு தடவை இந்தியாவால் கலைக்கப்பட்டுள்ளது. இறுதியாக  ஜே.வி.பி இடம் சென்றடைந்திருக்கின்றது அரசியல் அதிகாரம்.

1) ஜே.வி.பி இனர் சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்களப் பெருந்தேசிய, பெளத்த பெருமதவாதத்தையும் கடைப் பிடிக்கின்ற சமூக தேசிய வெறிப் பாசிஸ்டுக்கள் ஆவர்.

2) ஜே.வி.பி இனர் அதிகார வெறியர்கள். அவர்களது இரண்டு கிளர்ச்சிகளும் எப்படியேனும் எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற வெறித்தனத்தில் நடத்தப்பட்டவை. நாடாளமன்ற அரசியலில் அதிகாரபூர்வ  எல்லாக் கட்சிகளுடன் கூட்டமைத்த போதும் இந்த அதிகார போதையே கூட்டுக்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

3) ஜே.வி.பி இனரின் அபாயம் எதில் அடங்கி இருக்கின்றது என்றால் இவர்கள், `பெளத்த மத பீட சமூக சக்திகளின்` முன்னணிப் படையினர் ஆவர்.

4) ஜே.வி.பி இனர் தமது இந்திய எதிர்ப்பைக் கைவிட்டது, இந்தியாவுக்கும் பெளத்த மத பீட சமூக சக்திகளுக்கும் இடையிலான உடன்பாட்டின் விளைவாகவே இருக்க முடியும்.

5) ஜே.வி.பி இனரின் ஈழ விரோத, தமிழின விரோத, புலி எதிர்ப்பு, யுத்த ஆதரவு நடவடிக்கைகள் அனைத்தும் பெளத்த மத பீட `சமூக சக்திகளின் திட்டத்தின் (Programme) அடிப்படையில் அமைந்தவை.இப்போது ஆட்சியும் அப்படியே நடக்கின்றது.

6) இந்தப் பிற்போக்குக் கூட்டு

அ) இலங்கையின் மீது ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க ஆதிக்கம் வலுக்கவும்,

ஆ) ஈழ தேசிய முரண்பாடு மென் மேலும் கூர்மை அடையவும் இட்டுச் செல்லும்.

மேலும் சர்வதேசிய நிலைமைகளைப் பொறுத்த மட்டில் மிக முக்கியமாக, உலக மறுபங்கீட்டு துணைப் போர்களுக்கு தற்காலிக ஓய்வுகண்டு, முழு அளவிலான உலகப்போருக்கு தம்மைத் தயாரிக்கும் பணிகளில் ஏகாதிபத்தியவாதிகள் இறங்கிவிட்டனர். அமெரிக்க ஏகாதிபத்திய ரம்ப் நிர்வாகம் இதற்கு தலைமை தாங்குகின்றது.

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இத்தகைய ஒரு சூழ் நிலையை உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கொண்டு எதிர் கொள்ளலாம் என்று சித்த சுவாதீனம் உள்ள ஒருவன் கூட நம்பமாட்டான்.

இந்தப் 16 ஆண்டுகாலப் பின்னடைவு தெளிவான துல்லியமான வர்க்கப் பண்பு கொண்டது.

தரகு முதலாளிய, நிலப்பிரபுத்துவ மற்றும் இவ்விரு உடமை வர்க்கங்களினதும் சிறு உடமையாளர்களின் பிற்போக்குப் பிரிவினர் அடங்கிய ஒரு கூட்டு ஏகாதிபத்திய தாச சமூக வர்க்கமே இதன் வர்க்க அடிப்படை ஆகும்.

சிந்தனைத் துறையில் இது ஈழ தேசியத்தை , இனத்துவமாகக் குறுக்கி தனது இருப்புக்கான சமூக அடித்தளத்தைத் திரட்டி வைத்துள்ளது.

``தமிழ்த் தேசியம்`` என்று அதிகாரப் பகிர்வுக்கும், ``தமிழ்க் கட்சிகள்`` என்று தம் வர்க்கப் பண்புக்கும் மூடு திரை போடுகின்றது.இவ்வாறுதான் புலித் தோல் போர்த்த பசுவாக பேச்சுவார்த்தை மூலம் புலிகளைக் காட்டிக் கொடுத்தது.

இந்த அடித்தளம் தகர்க்கப்படாமல் இவ்வர்க்க சக்திகளின் செல்வாக்கில் இருந்து ஈழ விடுதலைப் புரட்சியை விடுவிப்பது ஒரு போதும் சாத்தியமல்ல. 

எனவே;

பிக்கு முன்னணியின் ஆட்சியில் சுக்கு நூறாவதை தடுக்க,

முள்ளிவாய்க்கால் `விசப் படுகொலைக்கு` தீர்ப்பு வழங்க,

பிரிவினைப் பொது வாக்கெடுப்பு வெகுஜன இயக்கத்தைக் கட்டியமைப்போம்.

அத்தகைய ஒரு தேசிய ஜனநாயக வெகுஜன இயக்கத்தைக் கட்டியமைக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் தயாரிப்புகளை முறியடிப்போம்!

2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!

3) உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒன்றிணைவோம்!

4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை தடுப்போம்! 

5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 

8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 

10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! ஆதரிப்போம்-போர் தொடுப்போம்!!

மேற்கண்ட முழக்கங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, இணையத்தை ஆயுதமாக ஏந்தி இரத்தம் சிந்தா அரசியல் பிரச்சாரப் போர்க்களத்தில் குதிப்போம்.

ஈழப் பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடமாட்டோம்!  

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்  

ඊලම් නව බෝල්ෂෙවික්වරු    

Eelam New Bolsheviks (ENB)

ஈழம் 18-05-2025