ENB இணையத்தை அறிமுகம் செய்வது:

தொழிலாளர் மே நாள் வாழ்க!
தேசிய முள்ளிவாய்க்கால் தினம் வெல்க!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ENB வாசகர்களே, தோழர்களே, பெண்களே, இளையோரே அனைவருக்கும் புரட்சிகர மே முதல் நாள், மே முள்ளிவாய்க்கால் நாள் வாழ்த்துகள்.
மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினம், மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத் தேசிய தினம். ஈழ தேசியப் பிரச்சனை உலக ஜனநாயகப் பிரச்சனையின் பகுதியாகிவிட்ட சகாப்தத்தில் நாம் வாழ்கின்றோம்.
எனவே தான் மே முதல் நாளையும், பதினெட்டாம் நாளையும் எமது செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், சரிபார்த்து முன் செல்லவுமான பொதுத் தருணமாக நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
இவ்வாண்டு மே நாளில் ENB இணையத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.இது எமது பிரச்சாரத் தளமாகும்.
யார் நாம்?
நாம் புதிய ஈழப் புரட்சியாளர்கள். (Eelam New Bolsheviks-ENB).
ஏன் புதிய ஈழம்?
நாம் இனத்துவ ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதற்கு பிரிவினை கோரவில்லை.'' மன்னராட்சியிலும், காலனியாதிக்கத்திலும் நிலைத்திருந்து, 1948 இல் இழந்த '' தமிழ் இனத்துவ மேல் தட்டு வர்க்கத்தின் ஆளும் அதிகாரத்தை-இறைமையை-மீளப் பெறுவதற்கும் பிரிவினை கோரவில்லை. மாறாக நமது தாய் நாடான இலங்கையின் அரசுமுறை, ஈழ தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டு, பாசிசமயப்பட்டிருப்பதால் அதனை ஜனநாயகப் படுத்துவதற்கு, ஈழ தேசிய சுய நிர்ணய -பிரிந்து செல்லும் - உரிமையின் அடிப்படையில், ஈழப் படுகொலை நடந்தேறிய குறிப்பான சூழ் நிலைக்குப் பின் பிரிவினை-ஈழத் தனி நாடு-கோருகின்றோம்.இதனால் நமது ஈழம் புதிய ஈழம்.
எப்படிப் புரட்சியாளர்கள்?
நாம் ஏன் புரட்சியாளர்கள் என்றால், இலங்கையில் தேசியப் பிரச்சனை- சிங்கள, தமிழ் மொழி பேசும் சமூகங்கள் இடையேயான -`இனப் பிரச்சனை` அல்ல. அது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. மாறாக அது ஒடுக்கும் சிங்கள-சிறீலங்கா தேசத்துக்கும், ஒடுக்கப்படும் தமிழ்-ஈழ தேசத்துக்கும் இடையேயான விவசாய-நில-ப்பிரச்சனை ஆகும்.`இனம்` என்பது இட்டுச் சொருகப்பட்ட காலனிய தேசிய திருத்தல்வாதம்.இதனால் இனத்துவ- ஏகாதிபத்திய- வாதத்துக்கு முடிவு கட்டாமல், ஈழ தேசிய விடுதலைப் புரட்சி தனது ஜனநாயகக் கடமைகளை ஒரு போதும் நிறைவேற்ற இயலாது.
எமது பணி என்ன?
ஜனநாயக அரசியல் பிரச்சாரமே நமது அடிப்படையான அரசியல் பணி ஆகும்.
இணையம் எதற்கு?
இந்த அரசியல் பிரச்சாரத்துக்கான சாதனமே இணையம். 'ஈழம் செய்திப் பலகை' நமது தினசரிப் பத்திரிகை. 'புதிய ஈழம்' நமது ஸ்தாபனப் பத்திரிகை (Central Organ).இதரவை சர்வதேசியம், மற்றும் மனித சமூக வாழ்வின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் சார்ந்தவை. இவை அனத்தும் ஒருங்கே அமைந்த enbweb.co-தமிழீழச் செய்தியகம், நமது பிரச்சாரத் தளம் ஆகும்.எமது செறிவான செல்லப் பெயர் ENB ஆகும்.
ஈழ தேசிய விடுதலைப் புரட்சி இயக்கம், பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கத்துக்கு எப்போதும் கீழ்ப்பட்டது.
சர்வதேசிய பாட்டாளிவர்க்க சோசலிச ஜனநாயக இயக்கத்தின், ஈழப் படைப்பிரிவு என்கிற வகையில், எமது தேசியக் கடமையின் பாற்பட்டு, ஈழவிடுதலைப் புரட்சிக்கு ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்பவே நாம் விழைகின்றோம்.
இதனால் இயல்பாகவே எமக்கு சர்வதேசப் பணிகளும் உண்டு. உலகத் தொழிலாளர்களினதும், உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசங்களினதும் ஒடுக்குமுறையை எதிர்த்த ஜனநாயகக் கிளர்ச்சிகளை ஆதரிப்பதும், தூண்டுவதும் நமது அத்தியாவசியக் கடமை ஆகும். உலக மறுபங்கீட்டு மூன்றாம் உலகப் போர்ப் போக்கை தடுத்து நிறுத்துவது நமது தலையாய உடனடியான சர்வதேசியக் கடமை ஆகும். ENB இணையம் இப்பணியை தன் தலைமேற் கொண்டுள்ளது.
இது ஒரு அறுபது ஆண்டுகால அரசியல் பயணத்தின் அறுவடை ஆகும்.
``புரட்சிகரப் பத்திரிகை ஒரு பிரச்சாரகனாக மட்டுமல்ல ஒரு அமைப்பாளனாகவும் செயற்படும்``-மாமேதை தோழர் லெனின்.
ENB ஐ வாழ்த்துவீர், வரவேற்பீர், வளர்த்தெடுப்பீர்.
____________________________________________________
எமது மே 2025 முழக்கங்கள்
புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!
புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!
தொழிலாளார் மே நாள் (மே1) வாழ்க!
தேசிய முள்ளிவாய்க்கால் தினம்(மே 18) வெல்க!!
1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!
2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!
3) உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒன்றிணைவோம்!
4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை தடுப்போம்!
5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்!
8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!
9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்!
10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! ஆதரிப்போம்-போர் தொடுப்போம்!!
மேற்கண்ட முழக்கங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, இணையத்தை ஆயுதமாக ஏந்தி இரத்தம் சிந்தா அரசியல் பிரச்சாரப் போர்க்களத்தில் குதிப்போம்.
ஈழப் பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடமாட்டோம்!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!
புதிய ஈழப் புரட்சியாளர்கள் ඊලම් නව බෝල්ෂෙවික්වරු
Eelam New Bolsheviks (ENB)
ஈழம் 29-04-2025