Sunday, 18 May 2025

முள்ளிவாய்க்கால்-2025

 பிக்கு முன்னணி-ஜே.வி.பியின் ஆட்சியில் சுக்கு நூறாவதை தடுக்க,

முள்ளிவாய்க்கால் `விசப் படுகொலைக்கு` தீர்ப்பு வழங்க,

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இன்று மே 18 2025, முள்ளிவாய்க்கால் விசப் படுகொலையின் 16 ஆம் ஆண்டாகும்.

`` முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், நீதி வேண்டியும் மே -18 ஆம் நாளில், முள்ளிவாய்க்கால்த் திடலில் அணி திரண்டு ஒன்று கூட உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம். நாம் அழிக்கப்பட்டோம் என்பதை சர்வதேசம் வரை உரத்து சொல்ல இணைந்து கொள்வோம்”

என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் கோரியுள்ளார்.

மேலும்  அன்றைய தினம் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும், 10.29 க்கு நினைவொளி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சம நேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்படும். இறுதியாக மலர் வணக்கம் செலுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்றிணைவோம்! 

பொது வாக்கெடுப்புக்குப் போராட சபதமேற்போம்!! 

மே 18 2009, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த இறுதி நாளாகும். இந்த நாள் வரைக்குமான யுத்தத்தின் இறுதி நாட்களில், வகை தொகையின்றி கொத்துக் கொத்தாக நிராயுதபாணியான இலட்சம் மக்கள், யுத்த சூனியப் பிரதேசம் என அரசு அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்திய பிரதேசத்துக்குள்ளேயே முற்றுகையிட்டு கொன்றொழிக்கப் பட்டார்கள். இந்தப்பட்டறிவின் பாற்பட்டே இது `தமிழினப் படுகொலை` என உணரப்பட்டு உரைக்கப்பட்டு வருகின்றது. மாறாக சர்வதேச சட்ட விதிகளை மீறிய Genocide என்கிற குற்றச் செயல் என்கிற சட்டவாதத்தின் அடிப்படையில் அல்ல. அதற்கமையை முள்ளிவாய்க்கால்   Genocide ஆகுமா, இல்லையா என்பது சட்டவாளர்களின் பிரச்சனை. 

`` நாம் அழிக்கப்பட்டோம் '` நமக்கு நீதி வேண்டும் இதுவே மக்களின் பிரச்சனை.எமது பிரச்சனை.

ஆனால் முள்ளிவாய்க்கால் மக்கள் அழிக்கப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, மக்களின் தலைமை அழிக்கப்பட்ட பிரச்சனை யுமாகும். மக்கள் அழிந்து -மிகப் பெரிய விலையைக் கொடுத்து- புரட்சிப் படையின் இராணுவத் தலைமை ஆனந்தபுரத்தில் தப்பியிருக்குமானால், ஈழம்-தமிழினம் இன்றிருக்கும் இழி நிலையில் இருந்திருக்காது.ஒவ்வொரு தலைக்கும் சிங்களம் விலை கொடுத்திருக்கும். 

இந்த ஒடுக்குமுறை யுத்தத்தின் நாயகன் சரத்பொன்சேகா `` இந்த யுத்தத்தை இழந்த பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு நாம் நடத்தவில்லை, புலிகளை பூண்டோடு ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டே நடத்தினோம்`` என யுத்தத்தின் குறிக்கோளை விஞ்ஞானத் தெளிவுடன் வரையறை செய்து சொன்னார்.

இந்த யுத்தம் முழுமையிலும் சாகா வரம் பெற்ற இன்னொரு தளபதி இருந்தார். அவர் ஊடகவியலாளர்! அவர் `` ஆனந்தபுர விச வாயுத்தாக்குதல் நிகழாது இருந்திருத்தால் யுத்தம் வேறு திசையில் சென்றிருக்கும்`` என எழுதினார்.

இரண்டும் இருபெரும் உண்மைகள் ஆகும்.

இதனால்தான் முள்ளிவாய்க்கால் `விசப்படுகொலை`.

ஜீவாதாரமான மாபெரும் இந்த உண்மை இந்தப் 16 ஆண்டுகளில் அனைவராலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இந்த விசப் படுகொலையை மூடிமறைப்பதற்கான கருவியாக `` இனப்படுகொலை`` நிறுத்தப்பட்டுவிட்டது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு- விசப் படுகொலைக்கு- நன்றி கூறியவர்கள்தான், இனப்படுகொலை என்றும் கூவினார்கள்.

அது மட்டுமல்ல இனப்படுகொலையின் விளைவாக அடுத்த ஈழ தேசியப் போரியக்கம் உருவாகாதவாறும் பார்த்துக் கொண்டார்கள்.


எவ்வாறெனில்: `` இனப் படுகொலை அரசின் கீழ் இணைந்து வாழ முடியாது, பிரிவினைப் பொது வாக்கெடுப்பு நடத்து `` எனக்கோரி, உள்நாட்டில் ஒரு தேசிய ஜனநாயக மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்காமல், சர்வதேச நீதியென்று கூறி ஐ.நா.வை நோக்கி மக்களைத் திருப்பினார்கள்.

ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்துக்குச் சொல்வது என்பதன் பேரால் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

தாங்கள் `அடித்த இந்த பெட்டிக்குள்` இனப்படுகொலைக்கு உள்ளான மக்களை பூட்டி வைக்க வேண்டுமானால் அவர்களுக்கு ஏதாவது பராக்கு காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இந்த கால்ப்பந்தாட்டம் முதல், கஞ்சிக் கொண்டாட்டம் வரையான நினைவு கூரல்கள் நிகழ்ச்சி நிரல் ஆகின.

இன்றைய இழி நிலை இந்தப் பதினாறு ஆண்டுகளில் இப்படித்தான் படிப்படியாக உருவாக்கப்பட்டது.

இன்று சரியாகப் 16 ஆம் ஆண்டில் இவை அனைத்தும் மீள உரைக்கப்படுவதை, மீள நிகழ்த்தப்படுவதைக் காண்கின்றோம்.

முற்றுப்புள்ளி இடுக.

* முள்ளிவாய்க்கால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கனடாவில் தமிழினப் படுகொலை நினைவாலயம் அமைக்கப்பட்டதற்கு அனுரா ஆட்சி கனேடிய தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த சம்பவம் நிகழ்ந்தது.

எவரும் எதுவும் செய்யவில்லை, கஞ்சிக்குக் கூடிய சந்திகளில் ஒரு கண்டன முழக்கம் கூட எழுப்பவில்லை. அப்படி ஒழுக்கமாக நடந்தும் கூட அனுராவின் சோசலிசப் பொலிஸ் கஞ்சிப் பதாகையைக் கழட்டிக் கொண்டு போய்விட்டது.

* யுத்தத்தின் போது துப்பாக்கி முனையில் கைப்பற்றிய தனியார் காணிகளை கபளீகரம் செய்ய வர்த்தமானி அறிவித்தல் -திருட்டுத் தனமாக சிங்கள ஆங்கில இரு மொழிகளில் மட்டும் இரகசியமாக- வெளியிட்டுள்ளது அனுரா-அக்கா ஆட்சி.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குப் பொறுக்க வீதி வீதியாக திரிந்த பொன்னன் கும்பல், இந்தப் பிரச்சனை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தூதுவர் வீட்டுக்கும் படியளக்கின்றது!

* தமிழீழ வைப்பக தங்கத்தை அநுரா-அக்கா கும்பல் பட்டப்பகலில் கண்ணுக்கு முன்னால் திருடி மத்திய வங்கியிடம் கொடுப்பேன் என்கிறது.

கொழும்பில் இருந்த ஒரு கராட்டிக்காரன், விடத்தல் தீவில் ஒரு விடு பேயன், கிளி நொச்சியில் ஒரு வாத்தியார், லண்டனில் படித்த ஒரு வெறும் மாணவன் இத்தியாதி இத்தியாதி கும்பல்கள் இன்று இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள், மேலை நாடுகளில் சொத்துக்கள் முதலீடுகள் கொண்டவர்கள் ஆகிவிட்டார்கள். மறுபுறம் புலிச் சொத்தைச் சுருட்டிக் கொண்ட புலம்பெயர் பினாமி-புதுப் பணக்கார முதலாளிகள் இவர்கள் எல்லோரிடமும் தனிச் சொத்து கொட்டிக் குவிகிறது.

தமிழீழ வைப்பகத் தங்கம், சாமானிய மக்களுடைய சேமிப்பு, காலம் காலமான தேட்டம், அவர்களது தனிச் சொத்து. எவனுக்கும் கவலையில்லை.

* சிறீதரன் என்கிற பிரகிருதி தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறது, வடகிழக்கு உள்ளூராட்சி தேர்தலில் சிங்களக் கட்சிகளை வெல்லவிடக் கூடாதாம்.அனைத்துச் சபைகளையும் தமிழ்க்கட்சிகளே வெல்ல வேண்டுமாம். இவ்வாறு ஒருமித்த சக்தியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  திரண்டு சர்வதேச சமூகத்துக்கு தமிழர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறவேண்டுமாம். அதனால் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டுமாம்! 

வாக்குப் பொறுக்குவதில் ஆரம்பித்த இவர்கள் இப்போது தமது வாக்குகளிலேயே பொறுக்கிகள் ஆகிவிட்டார்கள்.

விடுதலைக்குத் தேவை பொறுக்கித் தலைமை அல்ல, புரட்சித் தலைமை. முற்றுப்புள்ளியிடுக.

பிக்கு முன்னணி-நாடு சந்திக்கும் பேரபாயம்!

இலங்கையின் அரசியல் அதிகாரம் இறுதியாக ஜே.வி.பி இடம் சென்றடைந்திருக்கின்றது.

இது நடந்தேறியவிதம் நாடாளமன்ற ஜனநாயகத்தைப் பாவித்து, இறுதியில் மக்களின் மாபெரும் உரிமையான வாக்குரிமையையே, `தனது தெரிவுக்கு வழங்கக் கூடியவாறு` மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றது. 

பக்ச பாசிஸ்டுக்களின் `மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி` இரண்டு தடவை இந்தியாவால் கலைக்கப்பட்டுள்ளது. இறுதியாக  ஜே.வி.பி இடம் சென்றடைந்திருக்கின்றது அரசியல் அதிகாரம்.

1) ஜே.வி.பி இனர் சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்களப் பெருந்தேசிய, பெளத்த பெருமதவாதத்தையும் கடைப் பிடிக்கின்ற சமூக தேசிய வெறிப் பாசிஸ்டுக்கள் ஆவர்.

2) ஜே.வி.பி இனர் அதிகார வெறியர்கள். அவர்களது இரண்டு கிளர்ச்சிகளும் எப்படியேனும் எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற வெறித்தனத்தில் நடத்தப்பட்டவை. நாடாளமன்ற அரசியலில் அதிகாரபூர்வ  எல்லாக் கட்சிகளுடன் கூட்டமைத்த போதும் இந்த அதிகார போதையே கூட்டுக்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

3) ஜே.வி.பி இனரின் அபாயம் எதில் அடங்கி இருக்கின்றது என்றால் இவர்கள், `பெளத்த மத பீட சமூக சக்திகளின்` முன்னணிப் படையினர் ஆவர்.

4) ஜே.வி.பி இனர் தமது இந்திய எதிர்ப்பைக் கைவிட்டது, இந்தியாவுக்கும் பெளத்த மத பீட சமூக சக்திகளுக்கும் இடையிலான உடன்பாட்டின் விளைவாகவே இருக்க முடியும்.

5) ஜே.வி.பி இனரின் ஈழ விரோத, தமிழின விரோத, புலி எதிர்ப்பு, யுத்த ஆதரவு நடவடிக்கைகள் அனைத்தும் பெளத்த மத பீட `சமூக சக்திகளின் திட்டத்தின் (Programme) அடிப்படையில் அமைந்தவை.இப்போது ஆட்சியும் அப்படியே நடக்கின்றது.

6) இந்தப் பிற்போக்குக் கூட்டு

அ) இலங்கையின் மீது ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க ஆதிக்கம் வலுக்கவும்,

ஆ) ஈழ தேசிய முரண்பாடு மென் மேலும் கூர்மை அடையவும் இட்டுச் செல்லும்.

மேலும் சர்வதேசிய நிலைமைகளைப் பொறுத்த மட்டில் மிக முக்கியமாக, உலக மறுபங்கீட்டு துணைப் போர்களுக்கு தற்காலிக ஓய்வுகண்டு, முழு அளவிலான உலகப்போருக்கு தம்மைத் தயாரிக்கும் பணிகளில் ஏகாதிபத்தியவாதிகள் இறங்கிவிட்டனர். அமெரிக்க ஏகாதிபத்திய ரம்ப் நிர்வாகம் இதற்கு தலைமை தாங்குகின்றது.

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இத்தகைய ஒரு சூழ் நிலையை உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கொண்டு எதிர் கொள்ளலாம் என்று சித்த சுவாதீனம் உள்ள ஒருவன் கூட நம்பமாட்டான்.

இந்தப் 16 ஆண்டுகாலப் பின்னடைவு தெளிவான துல்லியமான வர்க்கப் பண்பு கொண்டது.

தரகு முதலாளிய, நிலப்பிரபுத்துவ மற்றும் இவ்விரு உடமை வர்க்கங்களினதும் சிறு உடமையாளர்களின் பிற்போக்குப் பிரிவினர் அடங்கிய ஒரு கூட்டு ஏகாதிபத்திய தாச சமூக வர்க்கமே இதன் வர்க்க அடிப்படை ஆகும்.

சிந்தனைத் துறையில் இது ஈழ தேசியத்தை , இனத்துவமாகக் குறுக்கி தனது இருப்புக்கான சமூக அடித்தளத்தைத் திரட்டி வைத்துள்ளது.

``தமிழ்த் தேசியம்`` என்று அதிகாரப் பகிர்வுக்கும், ``தமிழ்க் கட்சிகள்`` என்று தம் வர்க்கப் பண்புக்கும் மூடு திரை போடுகின்றது.இவ்வாறுதான் புலித் தோல் போர்த்த பசுவாக பேச்சுவார்த்தை மூலம் புலிகளைக் காட்டிக் கொடுத்தது.

இந்த அடித்தளம் தகர்க்கப்படாமல் இவ்வர்க்க சக்திகளின் செல்வாக்கில் இருந்து ஈழ விடுதலைப் புரட்சியை விடுவிப்பது ஒரு போதும் சாத்தியமல்ல. 

எனவே;

பிக்கு முன்னணியின் ஆட்சியில் சுக்கு நூறாவதை தடுக்க,

முள்ளிவாய்க்கால் `விசப் படுகொலைக்கு` தீர்ப்பு வழங்க,

பிரிவினைப் பொது வாக்கெடுப்பு வெகுஜன இயக்கத்தைக் கட்டியமைப்போம்.

அத்தகைய ஒரு தேசிய ஜனநாயக வெகுஜன இயக்கத்தைக் கட்டியமைக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் தயாரிப்புகளை முறியடிப்போம்!

2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!

3) உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒன்றிணைவோம்!

4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை தடுப்போம்! 

5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 

8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 

10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! ஆதரிப்போம்-போர் தொடுப்போம்!!

மேற்கண்ட முழக்கங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, இணையத்தை ஆயுதமாக ஏந்தி இரத்தம் சிந்தா அரசியல் பிரச்சாரப் போர்க்களத்தில் குதிப்போம்.

ஈழப் பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடமாட்டோம்!  

புதிய ஈழப் புரட்சிக்கு தயாராகுவோம்! 

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்  

ඊලම් නව බෝල්ෂෙවික්වරු    

Eelam New Bolsheviks (ENB)

ஈழம் 18-05-2025



Wednesday, 30 April 2025

தொழிலாளர் மே நாள் வாழ்க!

 ENB இணையத்தை அறிமுகம் செய்வது:

தொழிலாளர் மே நாள் வாழ்க!  

தேசிய முள்ளிவாய்க்கால் தினம் வெல்க!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ENB வாசகர்களே, தோழர்களே, பெண்களே, இளையோரே அனைவருக்கும் புரட்சிகர மே முதல் நாள், மே முள்ளிவாய்க்கால் நாள் வாழ்த்துகள்.

மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினம், மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத் தேசிய தினம். ஈழ தேசியப் பிரச்சனை உலக ஜனநாயகப் பிரச்சனையின் பகுதியாகிவிட்ட சகாப்தத்தில் நாம் வாழ்கின்றோம்.

எனவே தான் மே முதல் நாளையும், பதினெட்டாம் நாளையும் எமது செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், சரிபார்த்து முன் செல்லவுமான பொதுத் தருணமாக நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

இவ்வாண்டு மே நாளில்  ENB இணையத்தை மக்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.இது எமது பிரச்சாரத் தளமாகும்.

யார் நாம்?

நாம் புதிய ஈழப் புரட்சியாளர்கள். (Eelam New Bolsheviks-ENB).

ஏன் புதிய ஈழம்?

நாம் இனத்துவ ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதற்கு பிரிவினை கோரவில்லை.'' மன்னராட்சியிலும், காலனியாதிக்கத்திலும் நிலைத்திருந்து, 1948 இல் இழந்த '' தமிழ் இனத்துவ மேல் தட்டு வர்க்கத்தின் ஆளும் அதிகாரத்தை-இறைமையை-மீளப் பெறுவதற்கும்  பிரிவினை கோரவில்லை. மாறாக நமது தாய் நாடான இலங்கையின் அரசுமுறை, ஈழ தேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டு, பாசிசமயப்பட்டிருப்பதால் அதனை ஜனநாயகப் படுத்துவதற்கு, ஈழ தேசிய சுய நிர்ணய -பிரிந்து செல்லும் - உரிமையின் அடிப்படையில், ஈழப் படுகொலை நடந்தேறிய குறிப்பான சூழ் நிலைக்குப் பின் பிரிவினை-ஈழத் தனி நாடு-கோருகின்றோம்.இதனால் நமது ஈழம் புதிய ஈழம்.

எப்படிப் புரட்சியாளர்கள்? 

நாம் ஏன் புரட்சியாளர்கள் என்றால், இலங்கையில் தேசியப் பிரச்சனை- சிங்கள, தமிழ் மொழி பேசும் சமூகங்கள் இடையேயான -`இனப் பிரச்சனை` அல்ல. அது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. மாறாக அது ஒடுக்கும் சிங்கள-சிறீலங்கா தேசத்துக்கும், ஒடுக்கப்படும் தமிழ்-ஈழ தேசத்துக்கும் இடையேயான விவசாய-நில-ப்பிரச்சனை ஆகும்.`இனம்` என்பது இட்டுச் சொருகப்பட்ட காலனிய தேசிய திருத்தல்வாதம்.இதனால் இனத்துவ- ஏகாதிபத்திய- வாதத்துக்கு முடிவு கட்டாமல், ஈழ தேசிய விடுதலைப் புரட்சி தனது ஜனநாயகக் கடமைகளை ஒரு போதும் நிறைவேற்ற இயலாது.

எமது பணி என்ன?

ஜனநாயக அரசியல் பிரச்சாரமே நமது அடிப்படையான அரசியல் பணி ஆகும்.

இணையம் எதற்கு?

இந்த அரசியல் பிரச்சாரத்துக்கான சாதனமே இணையம். 'ஈழம் செய்திப் பலகை' நமது தினசரிப் பத்திரிகை. 'புதிய ஈழம்' நமது ஸ்தாபனப் பத்திரிகை (Central Organ).இதரவை சர்வதேசியம், மற்றும் மனித சமூக வாழ்வின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் சார்ந்தவை. இவை அனத்தும் ஒருங்கே அமைந்த enbweb.co-தமிழீழச் செய்தியகம், நமது பிரச்சாரத் தளம் ஆகும்.எமது செறிவான செல்லப் பெயர் ENB ஆகும்.

ஈழ தேசிய விடுதலைப் புரட்சி இயக்கம், பாட்டாளி வர்க்க சர்வதேசிய இயக்கத்துக்கு எப்போதும் கீழ்ப்பட்டது.

சர்வதேசிய பாட்டாளிவர்க்க சோசலிச ஜனநாயக இயக்கத்தின், ஈழப் படைப்பிரிவு என்கிற வகையில், எமது தேசியக் கடமையின் பாற்பட்டு, ஈழவிடுதலைப் புரட்சிக்கு ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்பவே நாம் விழைகின்றோம். 

இதனால் இயல்பாகவே எமக்கு சர்வதேசப் பணிகளும் உண்டு. உலகத் தொழிலாளர்களினதும், உலகெங்கும் ஒடுக்கப்படும் தேசங்களினதும் ஒடுக்குமுறையை எதிர்த்த ஜனநாயகக் கிளர்ச்சிகளை ஆதரிப்பதும், தூண்டுவதும் நமது அத்தியாவசியக் கடமை ஆகும். உலக மறுபங்கீட்டு மூன்றாம் உலகப் போர்ப் போக்கை தடுத்து நிறுத்துவது நமது தலையாய உடனடியான சர்வதேசியக் கடமை ஆகும். ENB இணையம்  இப்பணியை தன் தலைமேற் கொண்டுள்ளது.

இது ஒரு அறுபது ஆண்டுகால அரசியல் பயணத்தின் அறுவடை ஆகும்.

``புரட்சிகரப் பத்திரிகை ஒரு பிரச்சாரகனாக மட்டுமல்ல ஒரு அமைப்பாளனாகவும் செயற்படும்``-மாமேதை தோழர் லெனின்.

ENB ஐ வாழ்த்துவீர், வரவேற்பீர், வளர்த்தெடுப்பீர்.

____________________________________________________

எமது மே 2025 முழக்கங்கள்

புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

தொழிலாளார் மே நாள் (மே1) வாழ்க! 

தேசிய முள்ளிவாய்க்கால் தினம்(மே 18) வெல்க!!

1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!

2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!

3) உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒன்றிணைவோம்!

4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை தடுப்போம்! 

5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 

8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 

10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! ஆதரிப்போம்-போர் தொடுப்போம்!!

மேற்கண்ட முழக்கங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, இணையத்தை ஆயுதமாக ஏந்தி இரத்தம் சிந்தா அரசியல் பிரச்சாரப் போர்க்களத்தில் குதிப்போம்.

ஈழப் பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடமாட்டோம்!  

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்  ඊලම් නව බෝල්ෂෙවික්වරු    

Eelam New Bolsheviks (ENB)

ஈழம் 29-04-2025

Friday, 4 April 2025

ஈழப்படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

 


ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!


சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான,

சமூக பாசிச அனுரா ஆட்சியே இந்திய அரசுக்கு அடிபணியாதே!

இதற்கு முந்திய எல்லா ஆட்சியாளர்களும் இணங்க மறுத்த,

உலக மறுபங்கீட்டு இராணுவ ஒப்பந்தத்திற்கு உடன்படாதே!

தேசிய ஈழப்பிரச்சனையையும், பொருளாதார வங்குரோத்து நிலையையும் பயன்படுத்தி இலங்கையை உலகமறுபங்கீட்டு யுத்தத்தில், இந்திய இராணுவக் காலனியாக்க ஒப்பந்தம் செய்ய வந்திருக்கும்,

பாசிச இந்திய மோடியே, இலங்கையில் கால்பதியாதே, திரும்பிப் போ!

இந்திய  இலங்கை ஆக்கிரமிப்பு அரசியல் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான சிங்களப் புதல்வர்களை  பலிகொடுத்துவிட்டு, இன்று திரை மறைவில் ஆக்கிரமிப்பு இராணுவ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும், 

ஜே.வி.பி கும்பலின், தேசத்துரோகத்தை முறியடிக்க, இலங்கையராய் 

ஒரணி திரள்வோம்!

முள்ளிவாய்க்கால் முடிந்து 15 ஆண்டுகள் `தமிழ்த் தேசியம்` என்கிற பெயரில் ஈழப்புரட்சிக்கு குழி பறித்த,

இனத்துவ இந்தியக் கைக்கூலித் தமிழ்க் கும்பலே, இலங்கை இணைக்கப்படாத இந்திய மாநிலமாக  துணைபோகாதே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Eelam New Bolsheviks (ENB)

04-04-2025

Wednesday, 26 February 2025

ஐ.நா காவடி- புதிய ஈழப் புரட்சியாளர்கள் அறிக்கை

ஏகாதிபத்திய தாச ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

ஜனநாயகத் திட்டத்தில் ஈழப்புரட்சியை முன்னெடுப்போம்!!

டுக்கும் சிங்கள தேசத்தின் ஆளும் கும்பல்கள் 30 ஆண்டுகளாக தொடுத்துவந்த ஈழப்போரை, ஐ.நா வில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடுகளின் ஆதரவோடும், தலைமை நாடுகளின் இராணுவ உதவியோடும், ஐ.நா வின் ராஜதந்திர பக்கபலத்தோடும் முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் மூலம் மே 18 2009 இல், நிறுத்தியது.

எந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களுக்காக இத் தேசியப் படுகொலைக்கு ஐ.நா.துணை போனதோ-குருதி உறையுமுன்னமே, பிணம் தின்ற நாய்களின் கடைவாயில் நிணம் ஒட்டிக்கொண்டிருந்த போதே அந்த மயானத்தைப் பார்வையிட்ட ஐ.நா.தலைவர் பான்கி மூன் அங்கு கொல்லப்பட்டவர்கள் ஆக பத்தாயிரம் பேரே என அறிக்கையிட்டு அதை அதிகார பூர்வ சர்வதேச சமூக வெளியீடாக மாற்றினாரோ, அவரும் அந்த சபையும்- அதே கூட்டு நலன்களின் பாற்பட்டு அத் தேசியப் படுகொலைக்கு -`இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்`- என (பெயர் சூட்டின) வரையறை செய்தன.

அது முதல், இந்த வரையறை உலக நியமம் ஆகி, ஊடகப் பிசாசுகளால் பரப்பப்படுவதான உண்மை  என்றாகிவிட்டது!

இவ்வாறே முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து ஈழ தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்துக்கு வடிகால் அமைத்து, முள்ளிவாய்க்கால்ப் புரட்சிக்கனலை நீர்த்துப் போகச் செய்து, நிர்மூலமாக்குவதற்கான உபாயமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியம் புறந்தள்ளப்பட்டு `மனிதம்` உயர்த்திப் பிடிக்கப்படுவது உலகளாவிய போக்காக மாறிவிட்டது.

அரசியல் அதிகாரம் சார்ந்த அனைத்து வர்க்கப் போராட்டங்களும் மனித உரிமைப் பிரச்சனைகளாக மகுடம் தரித்துக் கொண்டுள்ளன.புரட்சி வெறும் சீர் திருத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இது ஏகாதிபத்திய கோட்பாடும், திட்டமும் ஆகும்.இதைச் செயலாக்கும் வாகனங்களாகவே ஐ.நா.வின் இலட்சோபம் NGO படைகள் இயங்குகின்றன. 

இதனடிப்படையில் இந்த மனித உரிமைத் திருவிழாவுக்கு அரோகராப் போட, தேசியப் புரட்சியின் எதிரிகள், எகாதிபத்திய தாசர்கள் ஓரணி சேர்ந்தது தர்க்க ரீதியானதே.

அது முதல், 2025-2009 = 16 ஆண்டுகள்,வருடா வருடம் ஐ.நா சபைக்கு மனித உரிமை விடாய் எடுக்கும்போது, உள்ளக வெளியக இனத்துவக் கும்பல்கள் காவடி எடுத்துவருகின்றன.

மெழுகு வர்த்திப் போராட்டங்கள் நடத்துகின்றன. சந்து பொந்துகளில் உந்துருளி ஓடுகின்றன!

விசித்திரமாக இந்த வருடமும்; எந்த நியமும் இன்றி எல்லா நியமங்களையும் மீறி இஸ்ரேல் நடத்திக்கொண்டிக்கும் பாலஸ்தீன தேசிய நிர்மூலத்துக்கு எதிரான தீர்மானங்களை, ஒருவர் மாறி ஒருவர் எதிர்த்து வாக்களித்து முறியடித்துக் கொண்டு, மறுபுறம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு அனைவரும் ஏகமனதாக வாக்களித்து, ஐ.நா.வின் ஏகாதிபத்திய சாரத்தை உலக உழைக்கும் மக்களுக்கு அம்பலமாக்கி ஐ.நா நிர்வாணமாக நின்ற - இந்த வருடமும் வெட்கம் மானம் சூடு சொரணை இன்றி  இந்த மனித உரிமைத் திருவிழா அரங்கேறி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடைய முன்னின்று போராடும் ஈழத் தாய்மார்களின் கூட்டிற்குள் புகுந்து அவர்களது கைகளில் அமெரிக்க,ஐரோப்பியன் யூனியன் கொடிகளைத் திணித்த கொழும்புத் தரகன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்னும்-பாலஸ்தீன படுகொலைக்குப் பின்னும் அந்தக் கொடிகளைத் திரும்பப் பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடையும் போராட்டம் ஈழ தேசத்தின் ஆன்மாவை உலுக்கும் தேசியப் பிரச்சனை பற்றியதாகும். யாரை எதிர்த்து யாரை அணி சேர்த்து இப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்கிற ஜீவாதாரமான பிரச்சனையில் சந்தர்ப்பவாத பொன்னன் கட்சியின் தவறான வழி காட்டுதல்தான் மூவாயிரம் நாட்களாகியும் அந்தப் போராட்டம் ஒரு வெகு ஜன இயக்கமாக மாறாததற்கு காரணம் ஆகும். இவ்வாறு தான் இச் சைக்கிள் கட்சி மாணவர்களையும் திசை திருப்பி வருகின்றது.

வழக்கம் போல இந்த ஆண்டும் இத்திருவிழாவின் விவாதப் பொருள் உள்ளகமா? வெளியகமா? என்பது தான்!

ஒரு வேறுபாடு என்னவென்றால் இந்தத் தடவை ஒடுக்கும் போர்க்குற்ற சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மாறியிருக்கின்றார்கள்.

நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கையில் ஏந்தி யுத்தத்தை நடத்தியவர்கள் அல்லாமல், அவர்களுக்கு பக்க பலமாக, மறைமுகமாக, தத்துவார்த்த ரீதியாக போரை ஆதரித்து பிரச்சாரம் செய்து, படைக்கு ஆட் சேர்த்து, பதுங்கு குழிகள் வெட்டிய  துணைக் குற்றவாளிகளான ஜே.வி.கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது.ஆட்சி அமைத்திருக்கின்றது.

இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றிய இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்: 

``எமது குறிக்கோள் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்ட வரம்புக்குள், உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமான மற்றும் வலுவான நிலைக்கு கொண்டுவருவதாகும்". எனக் கூறியுள்ளார்.

இந்த அலுவல் அகங்கள் அனைத்தும் இவை ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டவை. மேலும் இந்த 16 ஆண்டுகளில் அவை எதையும் சாதிக்கவில்லை. இவை அனைத்தும் சிங்களத்தின் (தரகுமுதலாளிய, பெருந் தேசியவாத,பெளத்த மதவாத அரசின்) அழுக்கு முகங்களே ஆகும். இதை வலுப்படுத்துவது அநீதியை வலுப்படுத்தவே உதவும்.

விஜித ஹேரத் ``அரசியலமைப்பு சட்ட வரம்பு'` பற்றிப் பேசுகின்றார்.

இலங்கையின் முதல் ஆங்கிலேய காலனித்துவ சோல்பரி அரசியல்யாப்பு பொன்னம்பல `சேர்-Sir' களும், சேன-நாயக்கர்களும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

1972, 1978 யாப்புகள் ஈழ தேசத்தின் அங்கீகாரம் பெற்றவையல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக 1978 யாப்பின் 6வது திருத்தம் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மறுக்கின்றது. பிரிந்து செல்லும் உரிமையை தடை செய்து சட்டவிரோதமாக்கியுள்ளது.

இதன் விளைவாகவே `ஈழ அரசியல்`  வன்முறை வடிவத்தை எடுத்தது. உள் நாட்டு யுத்தமாக வளர்ந்தது.

இந்த யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, இதே அரசியலமைப்பு எப்படி நீதி வழங்கும்?

ஆக இறுதியாக, அதிகார பீடத்தில் அமர்ந்ததும் ஜே.வி.கும்பல் காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியலில் ` போர்க்குற்ற நீதி` ப்பிரச்சனையும் இணைந்துவிட்டது.

இந்நிலையில் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக் கனலைத்  தணியவைக்கும், ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களை, சக்திகளை எதிர்த்து, தேசிய ஜனநாயகத் திட்டத்தில் ஈழ விடுதலைப் புரட்சித் தீயை அணையவிடாது பிரகாசிக்கச் செய்வதே எமது புரட்சிகர அரசியல் கடமையாகும்.

அதற்காக அணிதிரளுமாறு இளைய தலைமுறையினருக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை எம் தந்தையர் நாடு! ஈழதேசம் எம் தாய் வீடு!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

ஈழம்                                                                         26-02-2025

தொடர்புக்கு: eelamnewsbulletin @gmail.com

Monday, 10 February 2025

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

 

நாடாளமன்றம் சட்டம் இயற்றும்,  போலிச் சுதந்திரம் நாட்டை விற்கும்போதும் போதும் எழுபத்தேழாண்டுகள்!

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

பெப்ரவரி 4, 2025 இல்  77 ஆண்டு போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுக்க அனுராவின் டொலர் ஆட்சி ஆயத்தமாகி வருகின்றது. System Change என்று கூறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது JVP. ஒரு புறம் போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுத்துக் கொண்டு, மறு புறம், அந்த தொடர் காலனிய அடிமைத்தனத்தை, சுரண்டலை, ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசுமுறையை (System) மாற்றப் போவதாக JVP - அனுரா ஆட்சி கூறுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனமா இல்லையா?

அறக(ga)லயவும் சுதந்திரமும்:

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சியின் உணர்ச்சியை அறுவடை செய்து 50% வாக்குகள் பெற்று, நாடாளமன்ற ஜனநாயகத்தின் புண்ணியத்தில் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அமைத்தது அனுரா-சில்வா ஜே.வி.பி கும்பல்.

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சி ( 2022 மார்ச்), அது தானே பிரகடனப்படுத்தியவாறு 75 ஆண்டுகால ஆட்சியின்  தொடர் துன்பங்களின்  தவிர்க்கவியலாத விளைவாகும்.

முதலாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சியின் சுமார் 40 ஆண்டுகள், இருந்த இந்த அமைப்பு முறையில் தேர்தலில் பங்கேற்று வந்த கட்சி ஜே.வி.பி.1979 இல் கொழும்பு மாநகர சபை, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை, 1982 இல் ஜனாதிபதித் தேர்தல், 1983 பொதுத் தேர்தல் பல ஆண்டுக்கு ஜே.ஆர் ஆட்சியால் பின்போடப்பட்டதால் பங்கு கொள்ள  இயலவில்லை.1994 பொது தேர்தலில் பங்கு கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றி பெற தன்னை அர்ப்பணம் செய்தது. 

2002 இலிருந்து இந்த அமைப்பு முறையின் காவலராக இருந்த ஆளும் கும்பலுடன், அந்த ஆட்சியாளர்களோடு அவர்களது ஆட்சிகளோடு,  கூடிக் குலாவி ஆட்சி சுகம் அனுபவித்து வந்த கட்சி ஜே.வி.பி.

இரண்டாவதாக: இலங்கை அரசியல் அதிகாரத்தின் அசைக்க இயலாத சமூகத் தூணான பெளத்த மத பீட சமூக சக்திகளின் அரசியல் குரலாக, போர் வாளாக இருந்த, இருந்துவருகின்ற கட்சி ஜே.வி.பி.

மூன்றாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சி என்பது ஈழதேசிய ஒடுக்கு முறையில் தங்கியிருந்து, அதன் மீது தேசிய ஒடுக்குமுறை அரசு ஒன்றைக் கட்டியமைத்து, அதனை பாசிச மயப்படுத்திய காலமாகும். இந்தக் கட்டிடத்துக்கு மண் சுமந்த கட்சி ஜே.வி.பி. குறிப்பாக 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை ஈழ தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தைத் தொடர-பேச்சுவார்த்தையை முறியடிக்க- மூர்க்க வெறியோடு முன்னின்று உழைத்த கட்சி ஜே.வி.பி

``ரணில் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்`` என்ற கண்டுபிடிப்பை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து யுத்தத்துக்கு ஆதரவு திரட்டிய இழி செயலை தனது வரலாற்றுப் பெருமையாக இன்றும் கூறி வருகின்ற கட்சி ஜே.வி.பி. 

2022-1965 தனது 57 ஆண்டு வாழ்க்கையில் முதல் 17 ஆண்டுகள் ஜே.வி.பி தன்னை ஒரு அரசியல் கட்சியாக கட்டியமைக்க செலவிட்டது. எஞ்சிய 40 ஆண்டுகளும் இந்த அமைப்பு முறையில் தான் ஜே.வி.பி அரசியல் நடத்தியது.

1972-1987 கிளர்ச்சிகளின் ஊடாக அரசிதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற கனவு முயற்சிகளும் இந்த அமைப்பு முறையை அங்கீகரித்தே அமைந்திருந்தன. 

இரண்டு கேள்விகள்;

1) ஆக 2022 இல் ஜே.வி.பி இந்த `அமைப்பு முறை மாற்றம்- System Change` என்கிற நிலைப்பாட்டிற்கு எப்படி வந்தது?

இது களவாணி ஜே.வி.பி அறக(ga)லய இயக்கத்திடமிருந்து களவாடியது. 

அறக(ga)லய இயக்கம் எதையெல்லாம் எதிர்த்ததோ அவை அனைத்தினதும்  பங்காளிக் கட்சியாக இருந்தது  ஜே.வி.பி.

2) அப்போ எப்படி ஜே.வி.பி அற(ga)லயவுக்கு தலைமை தாங்கியது?

மேலெழுந்தவாரியான பார்வைக்கு அபத்தமாகத் தோன்றக்கூடிய இந்த முரண் உண்மை உலகமெங்கும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது.

இதைத் தொடர்வதற்கு `நாடாளமன்ற ஜனநாயகம்` ஆளும் வர்க்கங்களுக்கு மிகச் சிறந்த சாதனமாக உள்ளது.

இதன் மர்மத்தை விளக்கி லெனின் பின்வருமாறு கூறினார்: 

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித்தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியென்பதால்  அது தானே தனது விடுதலைக்கு , விமோசனத்துக்கு எதிரான வர்க்கத்தின் நலனை சுமந்து கொண்டிருந்தது. ஜே.வி.பி வசதியாக இதற்குள் ஒழிந்து கொண்டது.

இதனால் எந்த வரையறையும் செய்யப்படாத சூக்குமான சூத்திரங்களைக் கொண்டு-``அமைப்பு மாற்றம்``, ``சுத்தமான சிறீ லங்கா`` என்றவாறு- மக்களின் உணர்வுக்கு வடிகால் அமைக்க முடிந்தது. இத்தைகைய ஒரு தலைமையின் கீழான தன்னியல்பான கிளர்ச்சியை அமெரிக்க இந்திய அந்நிய சக்திகள் `கோத்தா ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துக்கு-ஜே.வி.பி உடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தத்துக்கு அமைய- பயன்படுத்திக் கொண்டனர். இராணுவ அடக்குமுறையைச் சந்திக்காமலே அரக்களையவினரால் கோத்தா தடாகத்தில் நீராட முடிந்தது. அவர்கள் நீராடிய அழகை உலகமே பார்த்து வியந்தது!   

இவ்வாறாகத்தானே ஜே.வி.பி அந்நிய ஆதரவுடன் நடத்தி முடித்த  அற(ga)லய  ``புரட்சி``, பொல்லை ரணிலிடம் கொடுத்து, தேர்தல் ஒன்றை நடத்தி அநுராவின் கைக்கு மாற்றிக்கொண்டது.

அநுரா தேர்தலில் வெல்வார் என்று முதன் முதலில் மோடி மாந்திரீகம் கண்டுபிடித்து, அரசமரியாதை விருந்தளித்து `விபரங்களை` சொல்லி அனுப்பி தேர்தலில் வெல்ல வைத்தது.

களத்தில் பலர் குதித்து ஜனநாயகம் களைகட்டி இருந்தபோதும் ஆடுகளம் அநுரா வெற்றிக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது.

அநுரா அரியணை ஏறினார்.

எவ்வளவுதான் அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியாக இருந்த போதும் அது நெடுங்கால வெஞ்சினத்தின் வெளிப்பாடாக இருந்தது.

அதிலிருந்து ( இயல்பாகவே பருண்மையான ஆய்வில், தத்துவ பரிசீலனையில், சர்வாங்க வர்க்கப் போராட்டம் தழுவிய வகையில், வகுக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், முழக்கங்கள் என அரசியல் போர்த்தந்திர வழியில் அமைந்தவையாக இல்லாத போதும்) வெளிப்பட்ட ஒரு பொது உணர்வு புரட்சியின் அடி நாதமாகும்.

அதை அவர்கள் வரையறை செய்யாமல் `அமைப்பு முறை மாற்றம்- System Change' என்று அழைத்தார்கள், கூடவே

1) கோத்தா மட்டுமல்ல `225 Go Home`என்றார்கள்; கைத்தடி ரணிலுக்கு மாறிய போது `Ranil Go Home' என்றும் பரிதாபமாகச் சொன்னார்கள்.ரணில் ஆட்சி சத்தம் சந்தடி இல்லாமல் இயக்கத்தை நசுக்கியது.

2) கோத்தாவின் அரண்மனைக்குள் புகுந்த போது இன்று தான் எமக்கு ``உண்மையான சுதந்திரம் கிடைத்தது `` என்று கூறி தேசியக் கொடியை முத்தமிட்டார்கள்;

3) மக்களுக்கு விசுவாசமானவர்கள், அறிவு மிகுந்தவர்கள், திருடர்கள் அல்லாத நல்லவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்கள்.

4) இலங்கையருக்குள் உருவாக்கப்பட்டிருந்த பாகுபாட்டை புறந்தள்ளி இருந்தார்கள்.

மறுபுறம் சர்வதேசக் காரணிகள் என்ற வகையில்

1) அமெரிக்கா திருமலைத் துறைமுகத்தை  அபகரிக்க இடமளிக்க மறுத்தது, 

2) சீன ஆதரவுப் பாதையை எடுத்தது, 

என்பன அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், `கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புக்கான` பொது அடிப்படையை வழங்கின.

உள்நாட்டுக் கிளர்ச்சியின் அரசியல் பலவீனம், புறவயமாக சாதகமாக அமைந்த கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் இறுதியாக  அநுரா-சில்வா ஆட்சி அமையக் காரணமாய் அமைந்தன.

காலை முரசு 23-01-2025


அனுரா ஜனாதிபதியானார், நாடாளமன்றம் கூடி அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது, அமைச்சுக்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுவிட்டன, கணிசமான அளவுக்கு படைத்தரப்பும், உளவுப்பிரிவும் சுத்தம் செய்யப்பட்டுவிட்டன, முதலாவது வரவு செலவுத் திட்ட முனைவுகள் விவாதத்துக்கு வந்துவிட்டன, இரண்டு முக்கிய வெளிநாட்டு விவகாரம் சார்ந்த அரசு முறைப் பயணங்கள் முடிந்து விட்டன, IMF வலை விரித்தபடி உள்ளது, பங்குச் சந்தை தலை தெறிக்க ஓடுகின்றது;

அந்த உண்மையான சுதந்திரம்?

ஜே.வி.பி மந்திரஜால இயக்கம் அல்ல என்பதால் மக்கள் கால அவகாசம் அளித்து காத்திருக்கின்றனர்.கோரிக்கையைக் கைவிடவில்லை.மறக்கவும் இல்லை, மறக்கப் போவதும் இல்லை. போதுமான காலம் முடிகிற போது சுதந்திரம் கிடைத்திருக்குமா? கிடைக்குமா??

இதற்கு விடைகாண ஏற்கெனவே இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தை அதன் தன்மையை ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.

போலிச் சுதந்திரமும் வரலாற்றுப் பொய்மையும். 

1948 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட  சுதந்திரம் ஒரு தனி நிகழ்வு அல்ல.அது இலங்கை என்கிற தனி ஒரு நாடு மட்டும் சுதந்திரம் பெற்றுக் கொண்ட கதை அல்ல.

அது பிரபுத்துவ மன்னராட்சி சாம்ராஜ்ய காலனித்துவம், முதலாளித்துவ உதய கால காலனித்துவம், ஏகாதிபத்திய காலனித்துவம் என குறைந்தது சுமார் 500 ஆண்டு வரலாறு கொண்ட  காலனித்துவ அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக விளைந்தது ஆகும்.

இந்த அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக அது கட்டியாண்ட அத்தனை காலனி நாடுகளும் ஏறத்தாழ ஏக காலத்தில் நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டன.

எல்லாக் காலனித்துவ நாடுகளும் தமது காலனிகளை  நேரடியாக ஆட்சி செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு காலனிகளை தளர விட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

காலனித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மை, அதை எதிர்த்து காலனி நாடுகள் அனைத்திலும் சினங்கொண்டெழுந்த மக்களின், குறிப்பாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் கலகங்கள், மார்க்சியத்தின் பரவல், ரசிய சீனப் புரட்சிகளின் தாக்கம்,இரண்டு உலகப் போர்கள், பாசிசத்தின் விழ்ச்சி போன்ற வரலாற்று வர்க்கப் போராட்ட நிகழ்வுகள் இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கின.

இதன் விளைவாக, போர்த்துக்கல்,ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்சு, பெரிய பிரித்தானியா (ஆங்கிலேயர்) ஆகிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க காலனிகளில் இருந்து முன்கதவால் வெளியேறினர்.

இந்த வரலாற்று நிகழ்வுதான் `சுதந்திரம்` என நடைமுறையிலும்  காலனித்துவ நீக்கம்` என கோட்பாட்டு வழியிலும் பெயர் சூட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. 

காலனி நாடுகளில் இருந்து அவர்கள் அடைந்த ஆதாயத்தை, அடித்த கொள்ளைகளை, தூர நோக்கில் கட்டியெழுப்பிய கோட்டை கொத்தளங்களை தட்டில் வைத்து தமக்கு வழங்கி விட்டுச் சென்றதாக எமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் கல்வி என்று போதிக்கப்பட்டுவருகின்றது.

இதன் விளைவாக  உருவான ஒரு அடிமை அறிவாளிக் கூட்டம்  இந்த அதிகாரக் கைமாற்றத்தை சுதந்திரம் என்று போற்றித் துதித்து வாதிட்டு வருகின்றது.

மாபெரும் விவாதம், `இவ்வாறு முன்கதவால் சென்றவர்கள் பின்கதவால் மீண்டும் உள் நுழைந்து காலனியாதிக்கத்தை தொடர்கின்றனர்` என வரையறை செய்தது.

இது முதல், ஏகாதிபத்திய தாச `சுதந்திர` முகாமும், ஏகாதிபத்திய விரோத தேசிய முகாமும் ஆக வர்க்கப் போராட்டம் முன்னேறி வருகின்றது.

இவ்வாறு சுதந்திரம் அடைந்த நாடுகளில் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட வர்க்கங்களுடன் இணைந்து தொடர் காலனிய பொருளாதரச் சுரண்டலுக்கு, அரசியல் ஆதிக்கத்துக்கு உறிஞ்சு குழலாக இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அரசுகள் இயல்பாகவே ஜனநாயகமற்றவையாக இருந்து தீர வேண்டியது அவசியமாகும்.

இந்த ஜனநாயகமற்ற அரசுமுறை இந்நாடுகளில் எல்லாம் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்தின.இதனால்தன் தேசியப் பிரச்சனை கொதித்துக் கொந்தளிக்காத, ஒரு போலிச் சுதந்திர நாட்டைக்கூட உலகின் எந்த மூலையிலும் காணமுடியாது.  

ஏகாதிபத்திய தாச `சுதந்திரம்` போலியும், வரலாற்றுப் பொய்மையுமாகும் என்பதை கடந்த நூற்றாண்டும் சமகால வரலாறும் ஐயம் திரிபற நிரூபித்துள்ளன.

போலிச் சுதந்திரமும் இலங்கையின் தேசியப் பிரச்சனையும்:

போலிச் சுதந்திர நாடுகளில் ஜனநாயகமற்ற அரசுகளை நிறுவிய போக்கு மிக நீண்டகாலம் கொண்டதும், நேரடிக் காலனிய ஆட்சியின் தொடர் விளைவாக ஏற்படுத்தப்பட்டதும் (இது ஒன்றே போதும் இது சுதந்திரம் அல்ல என்பதை நிரூபிக்க!),  நாட்டுக்கு நாடு தனித்தன்மை வாய்ந்ததும் ஆகும். 

இலங்கையின் தேசியப் பிரச்சனையின் இரண்டு அம்சங்கள்:

இலங்கையில் காலனித்துவ ஆதிக்கம் தொடர்வதின் விளைவாக முழு நாடும் தொடர் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவேண்டியது ஒரு அம்சம்.

இலங்கையில் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கான ஜனநாயகமற்ற அரசுமுறை ஈழதேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டு இருப்பதனால், ஈழ தேசம் விடுதலை அடைவது-சுய நிர்ணய உரிமை அரசியல் அமைப்பிலும், நடைமுறையிலும் அங்கீகரிக்கப்படுவது  இரண்டாம் அம்சமாகும்.

இதனால் ஈழ தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் ஒரு ஜனநாயகத் தீர்வு மட்டும் தான், நிலவும் அரசுமுறையைத் தகர்க்கும். இதன் மூலம் தான் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட முடியும்.

எனவே இந்த இரண்டு அம்சங்களிலும், தேசிய சமத்துவமே பிரதானமானதாகும்.

இலங்கையில் 'System Change' என்பது தேசிய ஒடுக்குமுறை அரசை, தேசிய சமத்துவ ஜனநாயகக் குடியரசாக மாற்றுவது தவிர வேறெதுவும் இல்லை. அல்லாத எதுவும் வெறும் பிதற்றலும் பித்தலாட்டமுமே ஆகும்.

அநுரா ஆட்சியின் `சுத்தம்` என்கிற அடுத்த முழக்கம், சுத்தமான அசுத்தமாகும்.

அற(ga)லய இயக்கம் `நாட்டைச் சுத்தப்படுத்துவது என்பதன் பேரால்` என்ன கருதியது என்றால், நாடாளமன்ற தொடர் காலனிய நாடு என்ற ஒரே காரணத்துக்காக ஒரு நாடு, 2022 இல் இலங்கை அடந்திருந்த நிலையை எட்டியிருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதற்கு இட்டுச் சென்ற காரணிகளை சுத்தம் செய்யவேண்டுமென்றே கருதினார்கள்.அந்தக் காரணிகள் என்ன என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதைக் கீழே காண்போம்.

JVP என்ன செய்ததென்றால் மீண்டும் அற(ga)லய `சுத்தத்தைக்` கடன் வாங்கி தேர்தல் மேடையில் பேசி வாக்குப் பொறுக்கியது. அதிகாரத்தைக் கைப் பற்றியதும் சுத்திகரிப்பை சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், அரசாங்கம்,மற்றும் அரசதிகாரிகளை ( ஊழலற்ற, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடானவர்களாக) சிறந்த சேவகர்களாக மாற்றுவதிலும் செலவிடுகின்றது. மக்களை ஏமாற்ற தெரிந்தெடுத்த சில சில்லறை அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை என்கிற பாசாங்கு, உல்லாசப் பயணிகளைக் கவர `டெங்கு ஒழிப்பு பாணி` சுற்றுச் சுகாதாரம் என நாடகமாடி வருகின்றது.

 அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் கூட செல்லத் தயாராக இல்லை. வங்குரோத்துக்கு காரணமான குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்கள் மீது கூட அனுரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (டொனால் ரம்ப் பாணியில் கோத்தா மீண்டும் ஜனாதிபதி ஆகவும் கூடும்!) நெல் விவசாய-மற்றும் பல-சட்ட விரோத மாபியாக்களுக்கு அஞ்சி அடிபணிந்து ஆட்சி நடத்தி வருகின்றது. நெல்லுக்கு உத்தரவாத விலை  நிர்ணயிக்காமல் மாபியாக்களின் பிடியில் விவசாயிகளைத் தள்ளியுள்ளது. இவர்கள் தான் அனுராவின் ஒளிரும் ஆட்சிக்கு வாக்களித்த பெரும்பான்மையான சமூகப் பிரிவினர்.அனுரா ஆட்சி நெருப்போடு விளையாடுகின்றது!

யுத்தக் கறை சுத்தம் செய்! 

சுத்தம் பற்றிய பிரச்சனை அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பாரியது, பாரதூரமானது. சுத்தம் செய்வதற்கு முன்னால் அசுத்தத்தை வரையறை செய்யவேண்டும்.அது வளர்ந்த வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். அறியாத ஒரு பொருளை எவராலும் மாற்ற முடியாது, அதிக பட்சம் முட்டி மோதத்தான் முடியும்!

அரசியலில் அசுத்தம் என்பது அதிகார துஸ்பிரயோகம். அதிகார துஸ்பிரயோகம் சாத்தியம் இல்லையென்றால், சட்டமும் சட்டத்தின் ஆட்சியும் எந்தளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவுக்கு நாடும் சுத்தமாக இருக்கும். நாடாள மன்ற ஜனநாயகத்தில், அதுவும் திருப்பி அழைக்கும் உரிமை இல்லாத ஜனநாயகத்தில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, ஆனாலும் 2022 இலங்கை நிலைமையை தடுத்திருக்க முடியும்.

அது இலங்கையின் நாடாளமன்ற ஜனநாயகத்தின் கீழ் 77 (ஆம் இன்றுவரை), ஆண்டுகள் இருக்கவில்லை இயலவில்லை.

பல காரணிகள் மத்தியில் அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்ட ஒரு காரணம், அதுவே அதிகாரத்தைக் கைப்பறுவதற்கு காரணமாக அமைந்தது.

ஏகாதிபத்திய தொடர் காலனிய ஆதிக்கமும் சுரண்டலும் நீடித்தாலும், எந்தளவுக்கு அதிகார துஸ்பிரயோகமும், ஊழலும் அடக்குமுறையும், வறுமையும் தலைவிரித்தாடினாலும். ஈழ தேசிய ஒடுக்கு முறையில் அதிகம் தீவிரமானவர் அதிகாரத்தைக் கைப்பற்றி விடமுடியும். வேறு எதற்கும் அந்த ஆட்சி பொறுப்புக் கூற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ஏறத்தாழ முதல் முப்பது ஆண்டுகள் இது பிரதானமாக இரத்தம் சிந்தாமல் நடந்தேறியது, அடுத்த முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தி நடந்தேறியது. யுத்தம் ஓய்ந்த அடுத்த பதினைந்து ஆண்டுகளும் யுத்த வெற்றியே அதிகாரத்தைக் கைப்பற்ற வழி கோலியது.

இவ்வாறு அதிகாரம் கைப்பற்றப்படும் போது அதிகார துஸ்பிரயோகத்தை தடுக்க முடியாது. இப்படித்தான் அடுக்கடுக்காக அசுத்தப் படை நம் நாடு மீது படிந்து யுத்தக் கறையாக வளர்ந்துவிட்டது.

இந்த யுத்தக் கறையை யுத்தத்தின் தீவிர பங்காளியான JVP ஒரு போதும் சுத்தம் செய்யத் தலைப்படாது.

அதிசயமாக ஒருவேளை பகவான் கருணையில் விரும்பினாலும் கூட, அதை இந்த அரசுமுறையின் உள்ளிருந்து, அதனுடைய அரசாங்கத்தில் இருந்து, நாடாளமன்றத்தில் இருந்து செய்ய முடியாது.

``மிளகாய்த் தூள் வீசுகின்ற அளவுக்கு எமது நாடாளமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டார்கள்`` என்று அங்கலாய்க்கிற அநுரா என்கிற மார்க்சிஸ்ற் இதை எண்ணுவார் என்பது சற்று அதிகமான கற்பனைதான்!

ஆட்சியின் இதுவரையான குறுகிய நாட்களிலும் JVP தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராக செயற்படுவது அப்பட்டமான அதிகார துஸ்பிரயோகமே ஆகும்.இதைத் தொடர்ந்து படிப்படியாக அசுத்தம் வருமே ஒழிய சுத்தம் வராது.

பொய் சொல்லத் தொடங்கி விட்டது. மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என ஜனாதிபதி யாழ்-வல்வெட்டித் துறையில் பச்சைப் பொய் கூறியுள்ளார். இந்தியப் பயணத்தில் மீனவர் பிரச்சனையை `` மனிதாபிமான ரீதியாக`` அணுகுவோம் என்று உடன்பாடு செய்துவிட்டு  பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம் தவிர வேறென்ன?

அது என்ன இந்த `` மீனவர் பிரச்சனையை மனிதாபிமான ரீதியாக அணுகுதல்`` என்பது? இந்த வார்த்தைகளை வைத்து இதற்கு ஏதாவது பொருள் காணமுடியுமா? இல்லவே இல்லை. (ஆங்காடிகளில் இருக்கும்; ``உங்கள் பொக்கெற்றுக்களை நிறையுங்கள்``, `` சேமியுங்கள் $$$ `` என்பது போன்றது இது. குறிப்பான அர்த்தம் எதுவுமில்லாத வெற்று ராச தந்திர சொல்லாடல் இது. 

`பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும்` என நாம் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லலாமா?

ஆனால் உடன் பாடு என்னவென்றால் இலங்கைக் கடலில் இந்தியர்-தமிழக திராவிடர்- தொழில் செய்வதை தடுக்கக் கூடாது. அது இந்தியாவின் உரிமை. அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான இந்திய அரசின் பதில் நடவடிக்கை இதனையே நிரூபிக்கின்றது.

ஒரு கட்டத்தில் இந்தப் பொய்களைச் சகிக்காமல் மக்கள் மீண்டும் தெருவில் இறங்குவார்கள். அப்போது மக்களை நசுக்க அடக்குமுறை எந்திரம் தயாராக இருக்க வேண்டும், இதற்குத் தான் கால அவகாசம் கோருகின்றது அனுரா ஆட்சி.

கால அவகாசம் அனுராவின் ஆட்சித் தந்திரம்.

எதை நிறைவேற்றுவதற்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு என்பது எல்லோரும் அறிந்த மிக எளிமையான உண்மையே!

சமஸ்டிக் கட்சி அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வுகாண சிங்கள ஆட்சியாளர்களுக்கு 75 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது;

இந்தியப் பேரரசு 13வது திருத்தத்தை-முழுமையாக!_நிறைவேற்ற 38+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

ஐ.நா.சபை போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற 16+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

இவை எதையும் நிறைவேற்ற கொள்கை அளவில் JVP தயாராக இல்லை.

இது போலத்தான் நாடு தழுவிய பிரச்சனைகளிலும்:

1- IMF பிரச்சனையில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக ரணில் விட்ட இடத்தில் இருந்து அதே திட்டத்தைத் தொடர்கின்றது.

2- புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாதச் சட்டத்தை நீக்க மாட்டோம் என்கின்றது.இதன் பொருள் என்ன? புதிய சட்டம்  பயங்கரவாதச் சட்டம் போலல்லாது சிறந்த சாதாரண சட்டமாக இருக்குமானால் அதுவரை இது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதே போலவே இருக்குமானால் அப்படி ஒரு ``புதிய சட்டம்`` தேவை இல்லை!

அப்போ எதற்கு  திட்டமிடுகின்றது JVP ?, இதை விட மோசமான ஒரு சட்டத்தால் இதைப் பிரதியீடு செய்யப் போகின்றது. இதற்குத் தான் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அல்லாமல் கொள்கை அளவில் தயாரில்லாத ஒரு பிரச்சனைக்கு கால அவகாசம் கோருவது கள்ளத் தந்திரம்.

அதாவது கால அவகாசம் கேட்டு மக்களைச் சாந்திப்படுத்துவது. அதே நேரத்தில் மக்கள் விரோதக் கொள்கைகளை நிறைவேற்றுவதும், அடக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதும்.

சாந்தியின் எல்லை கடந்து மக்கள் அரசைச் சந்திக்கும் போது அரசின் இயல்பை-புத்தியைக் காட்டுவது அடக்குமுறையை ஏவுவது.

இவ்வாறுதான் கால அவகாசம் என்பதை ஒரு நடைமுறைத் தேவை என்கிற வகையில் அல்லாமல்  ஆட்சித் தந்திரமாக கையாளுகின்றது அனுரா ஆட்சி.

அனுரா ஆட்சி எதிர்கொள்ளும் உலகப் புறச் சூழலும் உள் நாட்டு நிலைமையும்.

உலகப் புறச் சூழல்:

நாம் வாழுவது ஏகாதிபத்தியத்தினதும்,பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தினதும் சகாப்தம் ஆகும்.இது தான் எமது அரசியல் முகவரி, இது தான் உலகின் சர்வாங்கமான விதி, இதனால் தான் உலகம் ஆளப்படுகின்றது.

எனினும் இந்தப் பொதுவான வரையறையும் குறிப்பான நிலைமையும் ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்தின் இன்றைய குறிப்பான நிலைமையின் குணாம்சங்கள் வருமாறு;

1) அமெரிக்காவின் முதன்மைப் பாத்திரம் நீடிக்கின்ற அதேவேளையில் பல் துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகி வருகின்றது.

2) ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகளோடு மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் அமெரிக்கா முரண்பாடு கொண்டுள்ளது.

3) முதலாளித்துவம் சந்தித்த நிதி நெருக்கடி, நிதி மூலதன ஏற்றுமதி சந்திக்கும் இடர்கள், நவீன தொழில் நுட்பங்களும் அதன் சர்வவியாபகமான தன்மையும், உலகமயம் உருவாக்கிய ஒரு புல்லுருவி வர்க்கம் இவை அனைத்தினதும் சேர்க்கையான சமூக சக்தி ஒன்று தோன்றியுள்ளது. 

4) நெருக்கடியின் தீவிரம் காரணமாக- ஒழுங்குமுறைகள் தடை என்று கருதுவதன் காரணமாக இச்சக்தி பாசிச சக்தியாக வளர்ந்து வருகின்றது.

5) ரம்ப் எலான் தலைமையிலான அமெரிக்கா இப் போக்குக்கு தலைமையேற்க, ஐரோப்பா எங்கும் நாடாளமன்ற முறைமை ஊடாக பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றது.

6) இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தையும் இது தகர்த்துவருகின்றது.புதிய நிதி மூலதன பாசிச உலக ஆதிக்க சக்திக்கு பழைய மேற்கட்டுமானங்கள் பொருந்தாதவை ஆகியதன் விளைவு இது.

7) நாடாளமன்ற ஜனநாயகமும் நடைமுறையில் காலாவதியாகி பாசிசத்துக்கான படிக்கட்டாக மாறிவிட்டது.

8) இவை அனைத்திற்கும் தீர்வுகாண உலக மறு பங்கீடு மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இணைந்துவிட்டது.

9) உலகமறுபங்கீடு என்பது இறுதியில் உலகப் போரிலேயே -உலக ஜனநாயக, சோசலிச பாட்டாளி வர்க்க சர்வாதிகார, தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து முறியடித்தால் ஒழிய-சென்று முடியும்.

10) ஈராக் போர் முதல் தொடர்ச்சியான போர்களின் இராணுவத் தோல்விகளாலும், பொருளாதாரச் செலவுகளாலும் பலவீனமடைந்துள்ள அமெரிக்கா, தன்னை மீளக் கட்டியெழுப்ப MAGA-Make America Great Again- இயக்கத்தைக் கட்டியமைத்து சமாதான நாடகம் ஆடி வருகின்றது. இக் காலத்தில் உலகப் போருக்கு தன்னை தயார் செய்கின்றது. 

அணிசேர்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்.

ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பில் ஏற்படும் மேற்கண்ட மாறுதல்கள் - புதிய குணாம்சங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவுகளையும் மாற்றிவருகின்றன. அனைத்து நாடுகளையும் இவை பாதிக்கின்றபோதும் குறிப்பாக பிராந்திய ஆதிக்க நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை ஆகும்.

அயலவருக்கு முதன்மை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.இதனால் இயல்பாகவே நமது முதன்மையான கரிசனைக்கு உரிய நாடு இந்தியா!

இந்திய அமெரிக்க உறவு:

1) உலக மறுபங்கீட்டில் இந்தியா அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாக உள்ளது.

2) இதன் நிமித்தம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான, அமெரிக்காவின் நம்பிக்கைத் தளமாக உள்ளது.

3) உலகமய வளர்ச்சிக்கும், கீழை நாடுகளின் தலைமைப் பாத்திரத்துக்கும் அமெரிக்க ஆதரவை பிரதியுபகாரமாக பெற முனைகின்றது.

4) தென்னாசியாசியாவில் இந்தியாவின் விரிவாதிக்க தலைமை நிலை இதற்கு வலுச்சேர்க்கின்றது.(2025-26 வரவு செலவுத்திட்டத்தில் சீத்தா, இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கியுள்ளார்!) 

5) அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழும் ( ரசியா,சீனா தொடர்பான, மற்றும் ) பிரச்சனைகள் பொருளாதார வர்த்தக ரீதியானவை. எல்லா நாடுகளுக்கும் இடையே உள்ளவை போன்று செயல் தந்திர ரீதியானவை. ( ஐரோப்பியன் ஜூனியனில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே கூட NATO தொடர்பில் முரண்பாடுகள் உண்டு).

6) அமெரிக்க இந்திய உறவின் மையம், QUAD அமைப்பில் இந்தியா வகிக்கும் பாத்திரத்தில் அடங்கியுள்ளது (பங்குச் சந்தை மோசடிக்காரன் கையும் களவுமாக அகப்படுவதில் இல்லை!).

இலங்கை எதிர் நோக்கும் பிரச்சனை:

மேற்கண்ட ஏகாதிபத்திய, பிராந்திய விரிவாதிக்க உலக மறுபங்கீட்டுச் சூழல் தான் இலங்கையின் புறச்சூழல் ஆகும். உள்நாட்டு நிலைமைகளே தீமானகரமான சக்தி எனினும் அவை இப் புறச்சூழலுக்கு கட்டுப்பட்டவை.

இலங்கையின் எதிர்காலம் இந்த உலகமறுபங்கீட்டு போர்த் தயாரிப்பில் அமெரிக்க-இந்தியக் கூட்டின் இராணுவத் தளமாக அமையுமா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது.உண்மையான சுதந்திரத்துக்கான சமுதாய அவசியம் இதில் தான் அடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சனை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இது சார்ந்து ( JVP உட்பட) மூன்று ஆட்சி மாற்றங்கள் நடந்துவிட்டன.

இலங்கையின் எதிர்காலம் குறித்த எந்தத் திட்டங்களும் இந்த அபாயத்தை எதிர்கொள்ள, தடுத்த நிறுத்த வல்லமை உள்ள நாடாக இலங்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இலங்கையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இன்று Fashion ஆகிவிட்ட இந்த Geopolitics இல் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும்.

இந்த நாடுகள் இலங்கையை தூண்டில் போட்டுப் பிடிக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர்கள் தான் அந்தத் தீயில் இலங்கையை வீழ்த்தினார்கள்.

இந்தியா 1983 ஜூலைப் படுகொலையை சாட்டாக வைத்து `தமிழரைக் காப்பதாகக் கூறி தலையிட்டு, போராட்ட அமைப்புகளுக்கு எல்லை தாண்டி பயிற்சி அளித்து இலங்கை அரசைப் பணிய வைத்து 1987 ஜூலை ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை செய்தது.அது இன்னும் அமூலில் உள்ளது.

யுத்தத்தை ஒரு தேசியப் படுகொலை மூலம் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்துக்காக சீனாவிடம் பட்ட கடனில் இருந்து தான் சீனத் தலையீடு ஆரம்பித்தது.

இன்று இது இந்தியாவும் சீனாவும் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக வளர்ந்து, உலகமறுபங்கீட்டுப் புறச்சூழலைச் சார்ந்து அமெரிக்க இராணுவத்தளமாகும் நிலைக்கு இட்டுவந்திருக்கின்றது.

இத்தனைக்கும் காரணமாக அமைந்த `ஈழ தேசிய ஒடுக்குமுறையை`, இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்கான போர் என்று சொல்லித் தான் 30 ஆண்டுகள் நடத்தி தேசியப் படுகொலையில் முடித்தார்கள்.

இலங்கையின் இறையாண்மை எப்படிக் காப்பற்றப் பட்டிருக்கின்றது என்பதற்கு, திறை சேரியும், இத்தீவைச் சுற்றியுள்ள கடலும் சான்று!

இதற்குப் பதில் சொல்ல இதய சுத்தியுள்ள ஒரு மனிதர் கூட ஒடுக்கும் தேசத்தில் உண்டா? மகா சங்கங்களுக்கு மனச்சாட்சியாவது உண்டா?

அனுரா ஆட்சி ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்தவண்ணம் `இலங்கையராக` ஒன்றுபட அழைப்புவிடுகின்றது. ``நான் கணவனாக நடக்க மாட்டேன், ஆனால் நீ `சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெத்தியில் பொட்டு வைத்து` வீதி வலம் வந்து  நீதியாக என்னோடு குடும்பம் நடத்த வேண்டும்`` என்று கோருவது போன்றது இது. (சம்பந்தப்பட்டவர்கள் சொந்த வீடுகளில் விசாரித்துப் பார்ப்பது எதற்கும் நல்லது!)

இது மட்டுமல்ல பொருளாதாரத் துறையிலும் ஒரு விவசாய நாடான இலங்கையை, அந்நிய பண்ட உற்பத்திக்கான தொழில் நிலையமாக மாற்றுகின்றது.பங்குச் சந்தை, உல்லாசத்துறை, டிஜிற்றல் தொழில் நுட்பம்,கல்வித் துறை சீர் திருத்தம் என அனைத்தும் அதே சுமார் 50 ஆண்டு கால உலகமயத் திட்டங்களே. காலாவதியான திறந்த பொருளாதாரக் கொள்கைகளே.

இலங்கை எதிர் நோக்கும் அபாயத்தை தடுக்க ஒரே வழி இலங்கை மக்கள் ஜனநாயகத் திட்டத்தில் ஒன்று சேருவது மட்டுமே. இதற்கு ஈழ தேசிய சமத்துவம் முன் நிபந்தனை. அல்லாமல் இந்த `இலங்கையர்` என்பது வெற்றுக் கூச்சலும், ஏமாற்று மோசடியுமே ஆகும்.

இதன் விளைவு என்ன ஆகப் போகின்றது என்றால், எஞ்சி ஏதாவது ஒன்று இருக்குமானல் அதையும் இழந்து இலங்கை நாடு அடிமைப்படும்.

எனவே போலிச் சுதந்திரத்துக்கு திரை போட்டு விழா எடுப்பது  அல்ல, உண்மையான சுதந்திரத்துக்கு அறைகூவல் விடுப்பதுதான் இன்றைய தேவை.

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

போலிச் சுதந்திரம் பொசுங்கட்டும்!

உண்மைச் சுதந்திரம் ஓங்கட்டும்!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

ஈழம்                                                                                                     03-02-2025