லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்
நேற்றுமுன் தினம் சனிக்கிழமை 29-06-13 அன்று ஹரோவில் தமிழீழ அரசியல் கலந்துரையாடலும், சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும் இடம்பெற்றது. மாவீரர் உறவுகளின் பேராதரவுடன் புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH), இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அன்றாட வாழ்வின் நெருக்குதல் கருதி, காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை, இரவு 11மணிமுதல் விடிகாலை 1.00 மணிவரை மூன்று காலநிரலில் இந்நிகழ்வு அமைந்தது.குறிப்பிடத்தக்க மக்கள் இத் தொடர் சுற்று அறை அரங்கத்தில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் வெளிக்கொணர்ந்த கருத்துக்களை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
1) விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் ஈழத்தமிழ் மக்களின் நிலை படுமோசமடைந்துள்ளது.
2) விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவையும், காட்டிக்கொடுத்தவையுமே ஆகும்.
3) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் துரோகத்தனம் கண்டிக்கப்பட்டது. ஆனாலும் சிறீதரன் எம்.பிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.
4) புலிகளின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருந்த, `புலித்தோல் போர்த்த பசுக்கள்` அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் அரசியல் காட்டிக்கொடுப்போராகவும், அற்பத் தன்னலவாதிகளாவும் மாறிவிட்டது வெகுவாகக் கண்டிக்கப்பட்டது.
5) யுத்தக்கைதிகளான போராளிகளுக்கு, குறிப்பாக பெண் தோழர்களின் விடுதலைக்கு எம்முயற்சியும் எடுக்காமல் நட்டாற்றில் விட நயவஞ்சகச் செயல் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.
6) சீனா,ரசியா, ராஜபக்சவின் இனப்படுகொலை யுத்தத்திற்கு அளித்த ஆதரவும், CPI, CPM கட்சிகளின் நிலைப்பாடுகளும், பொதுவாக இலங்கையின் இடதுசாரிகள் எனப்படுவோர் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகமும் விவாதத்துக்கு வந்தன.
7) ஆனந்தபுர விசவாயுத் தாக்குதல் - விடுதலைப் புலித் தலைமையின் அழிவு, ஆகியவை ,அமெரிக்க இந்திய கூட்டுச்சதியே என்ற கருத்து வலுவாக முன் வைக்கப்பட்டது.
8) அன்ரன் பாலசிங்கம், கே.பி, கருணா கும்பலின் துரோகம் நீறு பூத்த நெருப்பாய் இருந்தது.
9) இன்று புலிகள் இல்லாத ஈழத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதும், மாற்றுத்தலைமையின் அவசியமும் உணரப்பட்டது.
10) இந்தப் பின்னணியில் `அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்` நிகழ்வு, வரவேற்புப் பெற்றது.
கலந்து கொண்டோரில் பெரும்பான்மையோர் ஈழவிடுதலை ஆதரவு நிலை நின்று இப்பிரச்சனைகள் குறித்து கருத்துகள் பரிமாறினர், சிறுபான்மையான சிலர் ஈழவிடுதலை எதிர்ப்பு நிலை நின்று கருத்துக்கள் பரிமாறினர். விடுதலைப் புலிகள் மீது வழக்கமான ‘வன்முறைப் பழி சுமத்தினர்’,ஒன்றரை இலட்சம் மக்களை ஈழத்தில் மட்டும் கொன்றவர்கள் மனித உரிமை பேசினர். முன்னணிப்படை சமரன் நிலை நின்று விவாதங்களை நெறிப்படுத்தியது. ஈழவிடுதலை எதிர்ப்பு நிலை நின்ற கருத்துக்கள் முறியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன!
சமரன் வெளியீட்டக நூல்களும், மற்றும் மார்க்சிய நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
விபரம் வருமாறு:
1) ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்,
2) இந்திய அரசே போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்று,
3) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!,
4) அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப்பாதை குறித்து ஜே.வி.ஸ்ராலின்,
5) நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!,
6) இந்திய நிலப்பிரபுத்துவ சாதிய திருமணமுறையை எதிர்ப்போம், சுதந்திர திருமண முறைக்காகப் போராடுவோம்!,
7) அணு ஆற்றலும் சமூகமுன்னேற்றமும்- தோழர் வில்லியம் பால்,
8) அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!,
9) நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல் தந்திரமும்,
10) வேலை நிறுத்தம் பற்றி லெனின் - ஸ்ராலின் ,
11) பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு,
12) முள்ளிவாய்க்கால் வீர காவியம் மே 18 2010
--------------------
பார்வைக்கு வைக்கப்பட்டவை:
மூலதனம் 6 தொகுதிகள் (தமிழில்), மாஒ தேர்ந்தெடுத்த படைப்புகள் 9 தொகுதிகள் ( தமிழில்) , மாபெரும் விவாதம், நவ சீனப் புரட்சியின் வரலாறு,
தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் (லெனின்), பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றிய (சமரன்) தொகுப்பு.
--------------------
நினைவழியா நினைவு!
ஈழத்தாய்மாரின் ஆதரவு, மலையகத் தோழனின் பங்களிப்பு,ஈழத்து உ.கி.(உண்மையான கிளர்ச்சிக்கார) இளைஞன் ஊக்கியாக இருந்து பரவிய நம்பிக்கை, முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தன் தாயாரை இழந்த நண்பரிடம் துயர் பகிர்ந்த போது, ``தனிப்பட்ட முறையில் கவலைதான் ஆனால் ஒன்றைரை இலட்சம் மக்களில் என் தாயும் ஒன்று`` என்று அவர் உரைத்த பதில், என பல அம்சங்களை நினைவாக்கிக் கொள்ளலாம்.ஆனால் நினைவழியா நினைவு இது தான்.
இந்த ஒன்று கூடலில் ஒரு பத்துவயது கிளிக்குழந்தையும் பங்கு கொண்டது.புத்தகப் பரப்பைக் கண்டு அது வியந்து நின்றது.ஆனால் தமிழில் வாசிக்க முடியாத கவலை அதைக் கவ்விக் கொண்டது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!,என்ற நூற் தலைப்பு, 'Defeat foreign investment in retail sector of India' , என விளக்கப்பட்டது. லண்டனில் தமிழ்ச் சிறு வர்த்தகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு காரணம் என்னவென்று ஆங்கிலத்தில் கேட்டபோது, TESCO என்று பதில் சொன்னது கிளி! இது போல் Wal Mart இந்தியா சென்றால் இந்திய சிறுவர்த்தகர்களுக்கு என்ன நேரும் என்று கேட்டதற்கு, Bankrupt ( திவால்!) என்று ஒரே ஒரு சொல்லில் தீர்க்கமாகவும், திடமாகவும் பதில் சொன்னது குழந்தை.Is it right to fight against it? பதில்: Of course its right! (பலத்த கரகோசம்!)தாய்மார் கையால் இராப்போசனம் பரிமாறப்பட்டு விடிகாலை அரங்கம் நிறைவுற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழரின் தேவை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
தகவல்:புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH)